12 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 133

நாங்கள் நிலத்தை அடைந்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது எங்களுடைய நிலம்தானா என்று நினைக்கும் வகையில் நிலத்தைச் சுற்றி வேறு யாரோ தட்டியடித்து ஒரு பெரிய் பூட்டையும் போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள்!

தட்டியாலான கேட்டுக்கு நடுவே ஒரு சிறிய நோட்டீஸ் வேறு. அருகில் சென்று படித்தோம்.

‘இந்நிலம் --------------- தியேட்டர் குடும்பத்தாருக்கு சொந்தமானது. அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’

என்னுடைய மாமனார் அதை எட்டிப் பறித்து கிழிக்கச் சென்றார். நான் பதறிப்போய் அவருடைய கரங்களைப் பற்றி, ‘சிறிது நேரம் அமைதியாக இருங்கள். என்ன நடந்தது என்று பக்கத்து வீட்டில் விசாரிப்போம். நேற்று பகல் நானும் மேஸ்திரியும் வந்து நிலத்தை அளந்தபோதுகூட யாரும் தடுக்கவில்லையே.’ என்று நிலத்தில் அஸ்திவாரத்திற்காக சுண்ணாம்பு துகள்களால் வரைந்திருந்ததை அவருக்கு காட்டினேன்.

நான் அடுத்த வீட்டிலும் என்னுடைய மனைவி எதிர் வீட்டிலும் சென்று விசாரித்தோம். அடுத்த வீட்டில் இருந்தது ஒரு வயசான தம்பதிகள். சாதாரணமாக இரவு எட்டு மணிக்கெல்லாம் வாசற்கதவைப் பூட்டிவிட்டு உறங்க சென்றுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் இருவருமே இரவு யாரோ ஒரு லாரியில் வந்து இறங்கும் சப்தம் மட்டும் கேட்டிருக்கிறார்கள். அது நாங்களாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் இருந்திருக்கிறார்கள்.

எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்த என்னுடைய மனைவி பதற்றத்துடன் காணப்பட்டார். நானும் என்னுடைய மாமனாரும், ‘ஏய் என்ன.. என்னாச்சி.. ஏன் இப்படி பதட்டமா இருக்கே..’ என்றோம் கோரசாக.

‘அப்பா, எதுத்த வீட்டுலருக்கற ஆளுங்க அந்த தியேட்டர்காரரோட அக்கா பையனாம். அந்த அக்கா பண்ண வேலைதான் இது. நேத்து மேஸ்திரியோட வந்து அளந்தாங்க இல்லே.. அப்பத்தான் அதுக்கு தெரிஞ்சிதாம்.. அதான் ஒடனே தம்பிக்கு ஃபோன் பண்ணி அந்தாளு ராத்திரியோட ராத்திரியா தோணி பயல்கள கூட்டிக்கிட்டு வந்து தட்டிய அடிச்சிட்டு போயிருக்காரு..’ என்றார் என் மனைவி.

என் மாமனாருக்கோ ஒரே கோபம். அதை என் மீது அர்த்தமில்லாமல் காட்டினார். ‘என்ன மாப்பிள்ள நீங்க. சரியா விசாரிச்சி வாங்காம.. உங்க வக்கீல் பார்த்துட்டாருன்னு சொன்னீங்களேன்னு பார்த்தேன். இல்லன்னா என் வக்கீல்கிட்ட காட்டியிருப்பேன்லே.. இப்ப என்ன பண்ண போறீங்க?’ \

நல்ல வேளை எங்களுக்கருகில் நின்றுக்கொண்டிருந்த என்னுடைய மைத்துனர் (அவர் பெயரில்தான் நிலத்தை வாங்கியிருந்தேன்) பதட்டப்படாமல் இருந்தார். அவர் எனக்காக பரிந்துகொண்டு வந்தார். ‘என்னப்பா நீங்க? வக்கீல் பத்திரத்த மட்டுந்தான பாப்பார்? நாம ரெண்டு பேருந்தானே பத்திரத்த மாஞ்சி, மாஞ்சி படிச்சோம்.. அதுல ஏதாச்சும் வில்லங்கம் தெரிஞ்சிதா? வேணும்னா உங்க ஃப்ரெண்ட் கிட்ட கொண்டு போய் காமிங்க.. அவரும் ஒன்னும் சொல்ல மாட்டார். சும்மா எதையாவது சொல்லிக்கிட்டிருக்காம அந்த தியேட்டர்காரன் வீட்டுக்கு போவோம் வாங்க.’ என்றார்.

என்னுடைய மாமனார் பேசியது எனக்கு வருத்தமாக இருந்தாலும் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். ‘இருங்க. அவசரப்படாதீங்க. நாம ரெண்டு பேரும் என்னோட ஆபீஸ்க்கு போயி பத்திரத்த எடுத்துக்கிட்டு மாமா ஃப்ரெண்ட் கிட்ட போய் அவரோட ஒப்பீனியன கேப்போம். இவங்கெல்லாம் வீட்டுக்கு போட்டும். மத்தியானத்துக்கு மேல என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.’ என்று கூறிவிட்டு மேஸ்திரிக்கும் அவருடன் வந்திருந்த இரண்டு சித்தாள்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு நானும் என்னுடைய மைத்துனரும் ஒரு வாகனத்திலும் மற்றவர்கள் இரண்டாவது வாகனத்திலும் திரும்பினோம்.

என்னுடைய அலுவலகத்திற்கு சென்று பத்திரத்தை எடுத்துக்கொண்டு என் மாமனாரின் நண்பர் வீட்டுக்கு சென்றோம். அவரை காலை ஒன்பது மணிக்கு மேல் போனால் பிடிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நாங்கள் சென்ற நேரத்தில் அவருடைய வீட்டிலிருந்த அலுவலகத்தில் அமர்ந்து வேறொரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

எங்களைக் கண்டதும், ‘வாங்க சார்.. வாங்க தம்பி. என்ன விஷயம் காலங்கார்த்தால வந்திருக்கீங்க?’ என்றார்.

நாங்கள் வந்த விஷயத்தை சுருக்கமாகக் கூறிவிட்டு கொண்டு சென்றிருந்த பத்திரங்கள் அடங்கிய கட்டை அவரிடம் கொடுத்தோம். அந்த கட்டில் ஏறக்குறைய ஏழு பத்திரங்கள் இருந்தன.

அவர் அந்த கட்டை வாங்கியதுமே.. இந்த மாதிரி ஆறேழு கை மாறியிருந்தாலே அந்த சொத்துல எந்த வில்லங்கமும் இருக்காதுன்னு அர்த்தம் என்று எங்கள் இருவரையும் அவருடன் அமர்ந்திருந்த வாடிக்கையாளரையும் பார்த்து சிரித்தார். ‘இருந்தாலும் நான் பார்த்து வைக்கிறேன். நீங்க சாயந்திரமா ஃபோன் பண்ணுங்க. வில்லங்கம் ஏதாச்சும் இருந்தா மட்டும் நீங்க வந்தா போதும். ஒன்னும் இல்லேன்னா நானே ஒரு பையன் கிட்ட உங்க ஆஃபீஸ்க்கு குடுத்து விடறேன்.’ என்றார்.

சரியென்று நாங்கள் புறப்பட்டு வெளியே வந்தோம். ‘மச்சான் நீங்க ஆஃபீஸ்க்கு போங்க. நான் எனக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசி பாக்கறேன். அந்த தியேட்டர்காரரும் நம்ம ஆளுங்கதான். ஏன் இப்படி செஞ்சாருன்னு தெரிஞ்சிக்கிட்டாத்தான் எனக்கு மனசு ஆறும். முத முதல்லா ஒரு நிலத்த வாங்கி வீட்ட கட்டலாம்னு நினைக்கறப்பவே தடங்கலாயிருச்சேன்னுதான் எனக்கு கவலையா இருக்கு.. அதனாலதான் அப்பாவும் அவசரப்பட்டு ஒங்க மேல கோபப்பட்டுட்டாங்க. தப்பா நினைச்சிக்காதீங்க.’ என்ற என்னுடைய மைத்துனரைப் பார்த்து புன்னகையுடன், ‘It is OK. அவங்க எடத்துல நானா இருந்தாலும் கோபப்பட்டிருப்பேன். ஆனா ஒன்னு.. இது நிச்சயமா பத்திரத்துலருக்கற வில்லங்கமா எனக்கு தெரியலே.. ஏதோ பொறாமையில செஞ்ச காரியமாத்தான் எனக்கு தெரியுது.. எதுக்கும் சாயந்திரம் பேசிக்கலாம்.’ என்று கூறிவிட்டு அவரும் நானும் வாகனத்தில் ஏறி என்னுடைய அலுவலகத்திற்கு திரும்பினோம். என்னுடைய மைத்துனர் என்னை இறக்கிவிட்டு சென்றார்.

ஆபீஸ்லருக்கற தொல்லை போறாதுன்னு இது என்னடா புது தொல்லை என்ற நினைத்தேன். என்னுடைய அறைக்குள் நுழைந்தவுடனே எனக்கு நிலத்தை விற்றவரை தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பெட்டிக்கடையில் இருந்த தொலைப்பேசி எண்ணைத்தான் எனக்கு கொடுத்திருந்தார். இ தற்கு முன்னர் இருமுறை அழைத்திருந்ததால் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொண்டவுடனே, ‘கொஞ்சம் இருங்க அண்ணாச்சி.. தோ  கூப்பிட்டு விடறேன்.’ என்றார் கடைக்காரர்.

அவர் லைனில் வந்ததும் அன்று காலையில் நடந்ததை சுருக்கமாகக் கூறினேன். அவர் உடனே ‘ஆமா சார். நீங்க இன்னைக்கி பூஜை பண்ணப்போறேன்னு எங்கிட்ட சொல்லியிருந்தீங்க இல்ல. அத நா அப்படியே மறந்துபோனேன். பத்துமணிக்கித்தான் நினைச்சிக்கிட்டு ஒங்க மச்சான் நிலத்துக்கு போனேன். யாரும் இல்லாததால சைக்கிள் இருந்தாக்கலயே தட்டியடிச்சிருந்தத பார்த்தேன். ஆனா நீங்க சொன்ன நோட்டீச பாக்கல.. சரி நீங்கதான் பூஜைய முடிச்சிட்டு போய்ட்டீங்க போலன்னு திரும்பி வந்துட்டேன்.’ என்றார்.

நான் கோபத்துடன், ‘என்னங்க நீங்க. சாவகாசமா பேசறீங்க? வில்லங்கம் பிடிச்ச நிலத்த வாங்கிட்டீங்களேன்னு என்னெ என் மாமனார் வீட்ல பேசறாங்க.’ என்றேன்.

அவர் பதட்டத்துடன், ‘என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? எங்கப்பா அந்த நிலத்த வாங்கியே இருபது வருஷத்துக்கு மேல ஆவுது.. அதுக்கு முன்னால அஞ்சி பேர் கை மாறுன சொத்து அது.. அப்படி வில்லங்க இருந்திருந்தா எனக்கு தெரியாம போவுமா சார்? வேணும்னா நா நிலத்த வேற ஆளுக்கு முடிச்சி தந்துடறேன் சார்.. உங்க மாமனார்கிட்ட கேட்டு சொல்லுங்க. இல்லே நா வந்து பேசணும்னாலும் பேசறேன்.’ என்றார்.

‘சரிங்க.. நா கேட்டுட்டு சொல்றேன்.’ என்று இணைப்பைத் துண்டித்தேன். ஆனால் அன்று முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு என்னுடைய அலுவலையும் கவனிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.

***

சில நாட்களில் காலையிலிருந்து மாலைவரை பிரச்சினையாகவே இருக்கும். கேட்டால் இன்னைக்கி முளிச்ச மூஞ்சே சரியில்லை போலருக்குங்க என்போம். விழித்ததும் நம்ம மூஞ்சதானே கண்ணாடியில் பார்த்தோம் என்பது நினைவுக்கு வராமல், ‘ஏண்டி.. எத்தன தரம் சொல்லியிருக்கேன் முளிச்சதும் என் மூஞ்சிக்கு முன்னால வந்து நிக்காதேன்னு..’ என்று மனைவியிடம் எகிறுவோம்..

ஆனால் எனக்கே அன்றைக்கு அப்படித்தான் தோன்றியது..

நான் என்னுடைய அறைக்குள் வந்தமர்ந்து அரை மணி நேரம்கூட கழியவில்லை.. நான் முன்பின் பார்த்திராத ஒரு வாடிக்கையாளர் கோபத்துடன் என் முன் வந்து, ‘சார் அந்த தெலுங்கன உடனே விரட்டியடிங்க. இல்லே அடிபட்டே செத்துருவான். அவ என்ன நினைச்சிக்கிட்டிருக்கான்..?’ என்று என்னுடைய உதவி மேலாளரை கைகாட்டினார்.

நான் அவரை சமாதானப்படுத்தி அமரச்சொல்லிவிட்டு அறையிலிருந்தவாறே என்னுடைய உதவி மேலாளரை அழைத்தேன். அவரோ என்னுடைய வாடிக்கையாளர் செய்த கலாட்டாவில் முழுவதுமாக கலங்கிப் போயிருந்தார்.

அவர் வந்ததும் ஒன்றும் பேச முடியாமல் உதடுகள் துடிக்க நின்றதைப் பார்த்ததும் என்னுடைய வாடிக்கையாளரைப் பார்த்து, ‘என்னங்க விஷயம்? என்ன பண்ணீங்க? பாருங்க இவர் எவ்வளவு அப்செட்டாயிருக்கார். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா நேரா எங்கிட்ட வரவேண்டியதுதான? கவுண்டர்லருந்து கலாட்டா பண்றது நல்லாவா இருக்கு?’ என்றேன் கோபத்துடன்.

அவர் அதீத கோபத்துடன் இருக்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து, ‘ஏன் சார் சொல்ல மாட்டீங்க? நஷ்டப்பட்டது நீங்க இல்லேல்லே? முதல்ல இந்த பய என்ன செஞ்சான்னு கேளுங்க. அப்புறம் எம்மேல கோபப்படுங்க.’ என்றார்.

அவர் கொஞ்சமும் மரியாதையில்லாமல் அவன், இவனென்று என்னுடைய உதவி மேலாளரை அழைத்ததில் எனக்கு கோபம் வந்தாலும் கோபபட்டால் காரியம் கெட்டுவிடும் என்ற நினைப்பில் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்தேன். ‘என்ன சார்? என்ன ப்ராப்ளம். பதட்டப்படாம அமைதியா சொல்லுங்க.’ என்றேன்.

என்னுடைய அறையில் நடந்தவற்றை வெளியில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த என்னுடைய தலைமைக் குமாஸ்தா வெளியிலிருந்தவாறே நான் உள்ளே வரலாமா என்பதுபோல் சைகை செய்தார். நான் ‘சரி, வாங்க’ என்றேன்.

அவர் உள்ளே வந்து விளக்கியதும்தான் புரிந்தது விபரீதம்.

நான் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்தேன். நான் ஏதாவது பேசினால் மனிதர் அங்கேயே அழுதுவிடுவார் போலிருந்தது..

தொடரும்..

12 comments:

துளசி கோபால் said...

ஏங்க, உங்க ப்ராப்ளம் பத்தாதுன்னு இப்ப உங்க உதவி மேலாளருக்கும் வந்துருச்சா? போச்சுரா?

ஆரம்பமே சரியில்லை போங்க:-))))

Krishna said...

தேர்தல் முடிவுகளப் பத்திய பதிவுகளால எங்க உங்க பதிவு கவனிக்கப்படாமப் போயிடுமோன்னு நினைத்துவிட்டீர்களா...

ஒரு நாளைக்கு ஒரு பிரச்சினையில தொடரும் போடுவீங்க, இன்னிக்கென்னடான்னா, வீட்டில ஒண்ணு, ஆபீஸுல ஒண்ணுன்னு டபுள் அட்டாக் குடுக்கறீங்க...

பேசாம, கொஞ்ச நாள் விடுப்பு வாங்கிக்கிட்டு, சீரியலுக்கு கதை வசனம் எழுதப் போங்க சார்.

tbr.joseph said...

வாங்க துளசி,

ஆரம்பமே சரியில்லை //

ஆரம்பமா.. தூ..டியில எதுவுமே சரியில்லைங்க..

தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம் மாதிரிதான்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

பேசாம, கொஞ்ச நாள் விடுப்பு வாங்கிக்கிட்டு, சீரியலுக்கு கதை வசனம் எழுதப் போங்க//

போலாம்தான். ஆனா திரும்பி வரும்போது என்னோட சீட் இருக்குமான்னு தெரியலையே..:)

அப்புறம் கிருஷ்ணா.. சிலநேரங்கள்ல சோதனை ஒன்னுக்கு பின்னால ஒன்னா வரும்.. அதுமாதிரிதான் இருந்தது என்னுடைய தூத்துக்குடி போஸ்ட்டிங்.. அதுக்கப்புறம் கூடுதல் சோதனைகளை சந்திச்சது மும்பையில்தான்.. அதைப் படிக்கும்போது நீங்களே புரிந்துக்கொள்வீர்கள் ஒரு வங்கி மேலாளராக இருப்பது எத்தனை ரிஸ்க்கான விஷயம் என்று..

sivagnanamji(#16342789) said...

kodumai kodumai nu site le irundhu
office pona, ange rendu kodumai
jing jingu nu aadutha?

tbr.joseph said...

வாங்க ஜி!

kodumai kodumai nu site le irundhu
office pona, ange rendu kodumai//

சீட்லருந்தில்லே வீட்லருந்து:)

கொடுமைக்கு வீடுன்னு தெரியுமா ஆஃபீஸ்னு தெரியுமா?

G.Ragavan said...

அந்த எடத்துல எந்தத் தியேட்டர்காரன் அக்கா இருந்தது.....ஆகா அவங்களாத்தான் இருக்கனும். தோணிக்காரங்களக் கூப்பிட்டு வரக்கூடிய ஆளுங்க....அதுவும் அத்தன வருசத்துக்கு முன்னாடி இருந்த தியேட்டர்காரங்க.....எங்க வீடு இருந்த தெருவுல இருந்தவங்களாத்தான் இருக்கனும். அங்கயே கொஞ்ச நெலத்த அமுக்குனாங்கன்னு சொல்வாங்க.

இந்தத் தெலுங்கன், மலையாளத்தான், மாதிரி பேச்சுகள் கேக்கக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. பாவம் வந்தவருக்கு என்ன கஷ்ட்டமோ!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இந்தத் தெலுங்கன், மலையாளத்தான், மாதிரி பேச்சுகள் கேக்கக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.//

என்ன பண்றது? அந்த மாதிரி நேரத்துல ஆத்திரம் ஆத்திரமாத்தான் வரும் ஆனாலும் பல்ல கடிச்சிக்கிட்டு இருந்துருவேன். கஸ்டமர் ஈஸ் தி கிங்னு சொல்லியிருக்காங்களே..

Murthi said...

ஜோசப் சாரின் கதை மெட்டி ஒலி சீரியல் கதையை விட ஏகப்பட்ட திருப்பங்களுடனும் பிரச்சினைகளுடனும் சஸ்பென்சுடன் போகிறது.

சார் அவ்வப்பொது னீங்கள் சந்தித்த அரசியல்வாதிகள் பற்றியும் எழுதுங்கள்.

tbr.joseph said...

வாங்க மூர்த்தி,

வாழ்க்கைகளில் நடப்பவைகளைத்தானே சீரியல்கிளில் காட்டுகிறார்கள்?

sivagnanamji(#16342789) said...

அட போங்க சார்
13 14 15 மூன்று நாள் இடுகை இல்லை
இன்று புது இடுகைனு அவசரமாப் போய் பார்த்தா 12 ந்தேதி இடுகை சிரிக்குது
தேவுடா...தேவுடா

tbr.joseph said...

வாங்க ஜி!

இப்ப போய் பாருங்க. அப்போ Page Refreshல என்னவோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன்.

இப்ப சரியாயிருச்சி.