11 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 132

என்னுடைய வழக்கறிஞர் வந்து சென்று ஒரு வாரம் வரையிலும் எதுவும் நடக்கவில்லை. நானும் அவரை கூப்பிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

சாதாரணமாக நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்ட சம்மனுக்கு பிரதிவாதிகள் பதினைந்து நாளைக்குள் பதிலளிக்க வேண்டும். எங்களுடைய வங்கியின் அட்டாச்மெண்ட் கோரிக்கையில் பிரதிவாதிக்கு எந்த ஆட்சேபனையுமில்லாத பட்சத்தில் நீதிமன்றம் எங்களுடைய கோரிக்கையை பரிசீலித்து உத்தரவு வழங்க வேண்டும் என்பது நியதி.

ஆகவே இனி இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை, டென்ஷனுடன் காத்திருப்பதைத் தவிர.

மேலும் இரண்டு நாட்கள் சென்றது. மூன்றாம் நாள் என்னுடைய வழக்கறிஞர் தொலைப்பேசி செய்து, ‘நாளைக்கு நம்ம கேஸ்ல முதல் ஹியரிங் சார். அப்பவே நம்ம அட்டாச்மெண்ட் பெட்டிஷனும் விசாரனக்கு வரும்.. நீங்க வரீங்களா?’ என்றார்.

சாதாரணமாக ஒரு வழக்கில் வங்கி மேலாளரை கடைசியில் டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் சமயத்தில்தான் அழைப்பார்கள். பிரதிவாதி கடன் பத்திரத்தை எதிர்த்து வாதங்களை வைத்தால் மட்டுமே கடனளித்த வங்கி மேலாளரை விசாரிப்பார்கள். ஆகவே என்னுடைய வழக்கறிஞர் ஏன் என்னை முதல் விசாரனை தினத்தன்றே அழைக்கிறார் என யோசித்தேன்.

‘நான் எதுக்கு சார்? நம்ம அட்டாச்மெண்ட் பெட்டிஷன கோர்ட்  டிஸ்மிஸ் பண்ணா பார்த்துக்கலாம். நான் இன்னைக்கு ராத்திரி ஏழு மணிக்கு மேல கூப்டறேன்.’ என்று தட்டிக்கழித்தேன்.

அன்று இரவு நான் அழைத்தபோது, ‘சார், நாம கேட்டா மாதிரி அட்டாச்மெண்ட் அலவ் பண்ணிட்டாங்க.  ஏற்கனவே மார்ட்கேஜ் பண்ணியிருக்கற ப்ராப்பர்ட்டி இருக்கறப்போ எதுக்கு இன்னும் ரெண்டு ப்ராப்பர்ட்டீஸ்னு அவங்க வக்கீல் வாதாடினார். ஆனா கோர்ட் ஒத்துக்கலே.நீங்க காம்ப்ரமைஸ் பண்ண முடியாதுன்னு உறுதியா நிப்பீங்கன்னு அவங்க எதிர்பார்க்கல போலிருக்கு. அநேகமா அவங்க இறங்கி வந்து பணத்த கட்டிருங்கன்னு நினைக்கிறேன் சார். ரெண்டு நாளைல கேஸ் மறுபடியும் ஹியரிங்குக்கு வரும்னு நினைக்கிறேன். அன்னைக்கிதான் அவங்க என்ன ஐடியாவில இருக்காங்கன்னு தெரியும்.’

என்னுடைய வக்கீல் நினைத்ததுபோல்தான் நடந்தது. ஆனால் அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருந்தது பிறகுதான் தெரிந்தது. நான் குறிப்பிட்ட பாகஸ்தருடைய மகளுடைய திருமணம் நிச்சயமாகியிருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவருடைய சொத்துக்கள் நீதிமன்றத்தால் அட்டாச் செய்யப்பட்டுவிட்டது என்று தெரியவந்தால் சொந்த பந்தங்களுக்கு மத்தியில் அவருக்கு பெருத்த அவமானமாகிவிடுமே..

ஆகவே வேறு வழியில்லாமல் பணத்தை வேறொரு வங்கியிலிருந்து கடன் பெற்று எங்களுடைய வங்கிக்கு அடைக்க தீர்மானித்திருக்கிறார் என்று தெரியவந்தது..

ஆயினும் அவர் அலம்பல் பண்ணாமல் அடைக்கவில்லை. இறுதி நேரம் வரை கடன் கணக்கில் பற்றுவைத்திருந்த வட்டித்தொகை மிகவும் கூடுதலானது என்றும் இப்போதிருக்கும் மேலாளர் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே கூடுதலான வட்டி விகிதத்தில் கணக்கில் பற்று வைத்திருக்கிறார் என்றெல்லாம் அடுத்த இரு ஹியரிங்கிலும் வாதாடிப் பார்த்தார்.

ஆனால் என்னுடைய வங்கி சமர்பித்த தஸ்தாவேஜுகளை சரிபார்த்த நீதிமன்றம் அவருடைய வாதத்தை ஏற்க மறுத்து வழக்கை மேலும் வளர்க்காமல் முழு தொகையையும் அடைக்க முன்வந்தால் வங்கி அடைத்திருந்த கோர்ட் கட்டணத்தில் பாதியை திருப்பி பெற்றுக்கொள்ளலாம் என்றது. முழுதொகையையும் அடைக்க ஒரு மாதகாலம் அளித்து உத்தரவும் பிறப்பிக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்து இந்த ஏற்பாட்டிற்கு வங்கிக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் இரண்டு நாட்களுக்குள் தங்களுடைய வாதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றது. எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கச் சொல்லி அடுத்த நாளே என்னுடைய வட்டார மேலாளர் அலுவலகம் அனுமதியளித்தது.

இதை முற்றிலும் எதிர்பார்க்காத என்னுடைய வாடிக்கையாளர் வேறு வழியின்றி நீதிமன்றம் அளித்திருந்த ஒரு மாதத் தவணை முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முழுத்தொகையையும் அடைத்து கணக்கை முடித்தார். ஆக, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பார்களே அதுபோல இரண்டு மாத காலமாக தலைவலியாயிருந்த ஒரு கணக்கு வசூலானது.

ஆயினும் இறுதி நாளன்று கடனை அடைத்துவிட்டு அடகு வைத்திருந்த சொத்தின் பத்திரத்தை மீட்க வந்திருந்த வாடிக்கையாளர் என்னுடைய பிற வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் முன்னிலையில் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் தன்னுடைய ஆத்திரம் தீர திட்டித் தீர்த்துவிட்டுத்தான் சென்றார். அடிக்காமல் விட்டது ஆச்சரியம்தான். அவர் போட்ட சப்தத்தில் அலுவலகத்தின் பின்னாலிருந்த குடியிருப்பிலிருந்த என் மனைவியும் ஓடிவந்துவிட்டார்.

அன்றும் அதற்கடுத்த நாளும் என்னை வெளியே செல்லவிடாமல் என் மனைவி வீட்டிற்குள்ளேயே பிடித்து வைத்துக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவர் எந்த அளவுக்கு பயந்து போயிருந்தார் என்று. ‘போறுங்க இந்த ஊர்லருந்து குப்பைய கொட்டுனது. பேசாம டிரான்ஸ்ஃபர் தரச்சொல்லி எழுதிப் போடுங்க. சொந்த ஊர்ல வாழ்ந்து அனுபவிச்சதெல்லாம் போறும். இது மட்டும் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா வேற வெனையே வேணாம்.’ என்று அடுத்த சில நாட்களுக்கும் புலம்பி தள்ளிவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.

***

என்னுடைய வீடுகட்டுவதற்கான வரைபடம் மற்றும் செலவு திட்டம் பொறியாளரிடமிருந்து கிடைத்தவுடன் முனிசிபல் அலுவலகத்தில் எனக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த பில் கலெக்டரைப் பிடித்து அடுத்த இரண்டு நாட்களில் அனுமதியும் பெற்றுவிட்டேன்.

பிறகு வரைபடம் மற்றும் செலவு திட்டத்தின் நகல்களை என்னுடைய கடன் படிவத்துடன் இணைத்து என்னுடைய தலைமையலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். கடன் அனுமதி உத்தரவு வருவதற்கு எப்படியும் இரண்டு வாரங்கள் கிவிடும்.

அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதற்கிடையில் நான் நிலம் வாங்கிய அதே தெருவில் வேறொரு நிலம் இருப்பதாகவும் எனக்கு விற்ற அதே விலையில் அதையும் விற்க தயாராக இருப்பதாக எனக்கு நிலம் விற்றவர் கூறவே அதை சென்று பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது.

எனக்கு நிலம் விற்றவருடைய தந்தை தன்னுடைய பத்து ஆண்மக்களின் பெயரிலும் ஆளுக்கு ஒரு தாக்கு நிலத்தை (தாக்கு என்றால் ஐந்து செண்ட்) வாங்கி வைத்துவிட்டு இறந்துபோயிருந்தார்! பிள்ளைகள் அவற்றை ஒவ்வொன்றாக விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தனர். சொத்தை சேர்த்துவைத்த மனிதர் ஒரு பிள்ளையையும் படிக்க வைக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார் போலிருக்கிறது. ஆரம்பக்கல்வியை தாண்டாத எல்லா பிள்ளைகளும் கூலி வேலை பார்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தனர்.

நிலத்தைப் பார்த்து பிடித்துப்போக வாங்குவது என்று தீர்மானித்தேன். ஆனால் அதை நான் வாங்குவதில் எனக்கு பெரிய பலன் இல்லை என்பதால் என்னுடைய மனைவியிடம் கூறி என்னுடைய மாமனாரிடம் கூறச் சொன்னேன். நான் அந்த இடத்தில் நிலம் வாங்கியதை குறை கூறிய என்னுடைய மாமனார் வந்து நிலத்தையும் சுற்றுப்புறத்தையும் பார்த்துவிட்டு திருப்தியடைந்து தன்னுடைய மூத்த மகன் பெயரில் வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். ‘மாப்பிள்ளை, நீங்க இங்க வாங்கப்போறேன்னு சொன்னப்ப நா இந்த எடமெல்லாம் முள் புதரா இருக்கும். ஒரு கல்லு வீடு கூட இருக்காதுன்னு நினைச்சேன். இங்க வந்து பார்த்ததும்தான் தெரியுது.. பேசாம ஊருக்குள்ள காத்து வராம புழுக்கத்துல கெடந்து அவியறத விட இங்க காத்தாட இருக்கலாம் போலருக்கு.’ என்றார். எப்படியிருக்கு? நான் பதில் ஒன்றும் பேசாமல் ஒரு நமட்டு சிரிப்புடன் ஆமாம் என்றேன்.

என்னுடைய நிலத்தை வாங்கியபோது செய்தது போலவே இந்த நிலத்தின் பத்திரத்தையும் என்னுடைய வங்கியின் சட்ட லோசகரிடத்தில் காண்பித்து அவர் வாங்கலாம் என்று கூறியபிறகுதான் வாங்கினோம். நிலத்தை வாங்கிய சமயத்தில் என்னுடைய மைத்துனர் ஊரில் இல்லாததால் நான்தான் முன் நின்று பத்திரத்தை ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்தேன்.

என்னுடைய வீட்டைக் கட்டும்போதே என்னுடைய மைத்துனருடைய வீட்டையும் அதே பொறியாளர், மேஸ்திரி குழுவை வைத்து கட்டிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.

என்னுடைய வீட்டின் வரைபடத்தைப் பார்த்த என்னுடைய மாமனார் அதில் திருப்தியடையாமல் அவருக்கு தெரிந்த வேறொரு பொறியாளரிடன் சென்று என்னுடைய வரைபடத்தைக் காட்டியிருக்கிறார். அவரும் ‘இந்த ப்ளான்லருக்கறத விட பெரிசா ஒன்னும் செஞ்சிர முடியாது. வேணும்னா பாம்பேலருக்கறாமாதிரி ட்யூப்ளெக்ஸ் பாட்டர்ன்ல கீழ விசிட்டிங் ஹால், டைனிங், கிச்சன மட்டும் வச்சிட்டு பெட் ரூம்ஸ மாடியில வச்சிக்கலாம். விசிட்டிங் ஹால்லருந்து படி வச்சி.. சீலிங்க இருபதடி வச்சிக்கலாம்.. பாக்கறதுக்கு மாடர்னா இருக்கும். அஞ்சாறு லட்சத்துல முடிச்சிரலாம்.’ என்றாராம்.

சரியென்று சம்மதித்து அவரை வைத்தே வரைபடத்தையும், செலவு திட்டத்தையும் தயாரித்து முனிசிபல் அனுமதிக்கு அனுப்பி வைத்திருப்பதாக என்னுடைய மனைவி என்னிடம் தெரிவிக்க, ‘இங்க பார். அவங்க இஷ்டப்பிரகாரமே செய்துக்கட்டும். ஆனா ஒன்னு. நாம கடன் வாங்கி கட்டறோம். நம்ம வீட்ட கட்டி முடிச்சதுக்கப்புறம்தான் உங்க அண்ணன் வீட்ட கட்டணும்னு இப்பவே சொல்லிரு. இல்லன்னா மேஸ்திரி இழுத்தடிச்சி நம்ம செலவுதான் கூடிப்போயிரும்.’ என்றேன் கண்டிப்புடன்.

என் மனைவி, ‘நீங்க சொன்னத போய் நான் எங்கப்பாக்கிட்ட எப்படிங்க சொல்ல முடியும்? எங்க அண்ணன் ஏறவேண்டிய கப்பல்லருந்து வாங்கன்னு சொல்லி தந்தி வராததுனால அவங்க இன்னும் பம்பாய்லதான் இருக்காங்களாம்.. அவங்கள வரச்சொல்லி தந்தி குடுப்போம். அவங்க வந்து என்ன சொல்றாங்களோ அதும்படி செஞ்சிருவோம்.’ என்றார்.

அதன்படி அடுத்த வாரத்தில் அவரும் வந்து சேர எல்லோரும் அமர்ந்து என்னுடைய கடன் அனுமதி வருவதற்குள் அவருடைய வீட்டிற்கு வேண்டிய அஸ்திவாரத்தை இடுவது.. பிறகு என்னுடைய வீட்டு வேலையை துவக்குவதென தீர்மானித்து இரு பொறியாளர்களிடமும் நான் ஏற்பாடு செய்துவைத்திருந்த மேஸ்திரியிடமும் பேசி முடிவு செய்தோம்.

ஆக, நல்ல நாள் ஒன்றை பார்த்து அன்று காலையில் போய் வேலையத் துவக்குவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்து சம்பந்தப்பட்ட நாள் இரண்டு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றோம்.

நாங்கள் நிலத்தை அடைந்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது எங்களுடைய நிலம்தானா என்று நினைக்கும் வகையில் நிலத்தைச் சுற்றி வேறு யாரோ தட்டியடித்து ஒரு பெரிய் பூட்டையும் போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள்!

தொடரும்..


16 comments:

முத்து(தமிழினி) said...

சார்,

உங்கள் வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது....

புரொபைல் போட்டோ மாறி யாரோ ஒரு அழகான இளைஞனின் படம் வைக்கப்பட்டுள்ளது...

துளசி கோபால் said...

இது என்னங்க? உங்களுக்குன்னே அடுக்கடுக்கா........

ஹூம்......... எப்படிச் சமாளிச்சீங்க?

டி ராஜ்/ DRaj said...

//நாங்கள் நிலத்தை அடைந்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது எங்களுடைய நிலம்தானா என்று நினைக்கும் வகையில் நிலத்தைச் சுற்றி வேறு யாரோ தட்டியடித்து ஒரு பெரிய் பூட்டையும் போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள்!//

இந்த அநியாயம் தென்மாவட்டங்களில சகஜம் தான சார். எனக்கு தெரிஞ்சு பலர் இத்தகைய செயல்களால் பாதிக்க பட்டிருக்காங்க. :(

டி ராஜ்/ DRaj said...

சொல்ல மறந்துட்டேன் சார். புது போட்டோ பிரமாதமா இருக்கு :)

மணியன் said...

நான் கதைகளில் கூட இத்தனை திருப்பங்களையும் திடுக்கிடுதலைகளும் படித்ததில்லை. நடந்ததை கோர்வையாகவும் பின்னணியுடனும் அழகாக சொல்கிறீர்கள்.

அப்புறம் என்னாச்சு?

tbr.joseph said...

வாங்க முத்து,

அழகான இளைஞனின் ../

அவ்வளவு அழகாவா இருந்திருக்கேன்?

அப்ப இருபத்தியஞ்சி வருஷத்துல சரியான கிழமாய்ட்டேன் போலருக்கு.. என்ன செய்யறது? காலத்தில் கோலம்:-(

tbr.joseph said...

வாங்க துளசி,

என்ன பண்றதுங்க.. அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனுபவிச்சித்தான ஆகணும்..

ஆனா இந்த பிரச்சினை வீட்டுப் பிரச்சினை.. கொஞ்சம் சிக்கலாத்தான் ஆய்போச்சி..

tbr.joseph said...

வாங்க ராஜ்,

இந்த அநியாயம் தென்மாவட்டங்களில சகஜம் தான சார். எனக்கு தெரிஞ்சு பலர் இத்தகைய செயல்களால் பாதிக்க பட்டிருக்காங்க//

உண்மைதான் ராஜ். நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அது நம்ம குடும்பத்திலேயே நடந்தப்போ என்ன பண்றதுன்னு தெரியாம திண்டாடிப்போய்ட்டோம்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

நான் கதைகளில் கூட இத்தனை திருப்பங்களையும் திடுக்கிடுதலைகளும் படித்ததில்லை//

வாழ்க்கையில நடக்கறததான கதையா எழுதறாங்க..

tbr.joseph said...

புது போட்டோ பிரமாதமா இருக்கு//

ஃபோட்டோ பழசுதான்.. Fade ஆயிருச்சி..

ஃபோட்டோ பிரமாதமா இல்ல அதுல இருக்கற ஆள் பிரமாதமா:-)

டி ராஜ்/ DRaj said...

//ஃபோட்டோ பிரமாதமா இல்ல அதுல இருக்கற ஆள் பிரமாதமா:-)//

இதிலென்ன சந்தேகம், போட்டோவும் ஆளும் பிரமாதம் சார்.

tbr.joseph said...

இதிலென்ன சந்தேகம், போட்டோவும் ஆளும் பிரமாதம் //

அதான பார்த்தேன்:-))

sivagnanamji(#16342789) said...

pkotographer than pramadhamana
photographer........

sivagnanamji(#16342789) said...

"SOORIYAN" uthichu romba neramachu
oorellam kondattam parkkaleeya?

tbr.joseph said...

வாங்க ஜி!

pkotographer than pramadhamana
photographer........ //

ஏன் அசிங்கமான ஆள அழகான ஆளா ஆக்கியிருக்காரோ.. இந்த குசும்புதான வேணாங்கறது:(

tbr.joseph said...

"SOORIYAN" uthichu romba neramachu
oorellam kondattam parkkaleeya? //

அடடடா... ஜி! (பல்லைக் கடிக்கிறேன்)