09 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 130

...திண்டாட்டமாகிவிடும் என்ற பயம் என்னை இரண்டு நாட்களாக உறங்கவிடாமல் பாடாய்படுத்தியது..

வழக்கு பதிவு செய்யும் தினத்தன்றும் அனுமதி வரவில்லை. ஆனால் என்னுடைய வாடிக்கையாளரும் கடனை அடைக்கவில்லை என்பதால் ஒரு நிம்மதி.

எப்படி இருக்கு பாருங்கள்! இந்த கடனை எப்படியாவது வசூலித்துவிடவேண்டும் என்று நான் எடுக்காத முயற்சிகள் இல்லை. ஆனால் கடைசி நேரத்தில் எங்கே அவர் கடனை அடைத்துவிடுவாரோ என்று பயந்து நடுங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதை நினைக்கும்போது காலத்தின் கோலத்தை நினைத்து வேதனைப்படத்தான் வேண்டியிருந்தது.  அவர் நான் வழக்கு தொடுக்கப்படவிருந்த நாளில் கடனை அடைத்திருந்தால் வழக்கு பதிவு செய்ய நான் வாங்கியிருந்த முத்திரைத்தாளின் பணத்தை நான் என்னுடைய கையிலிருந்து அடைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆகவே அந்த இக்கட்டிலிருந்து விடுபட்டது எனக்கு நிம்மதியை அளித்தது!

‘நான் பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணி கோர்ட்டுக்கு கொண்டு போயிடறேன். நீங்க காலைல பதினோரு மணிக்கு  கோர்ட்டுக்கு வந்துட்டீங்கன்னா எல்லாத்திலும் கையெழுத்து போட்டு ஃபைல் பண்ணிரலாம்.’ என்று என்னுடைய வழக்கறிஞர் முந்தைய நாள் கேட்டுக்கொண்டிருந்ததால் நானும் என்னுடைய அலுவலக முத்திரை (Stamp) மற்றும் என்னுடைய பவர் ஆஃப் அட்டார்னி நகலையும் எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று அன்றைய தின அலுவல்கள் முடிவதற்குள் வழக்கைப் பதிவு செய்து முடித்தபோதுதான் நிம்மதி.

‘சார் இன்னைக்கே ஒரு காவியட்டும் (caveat) ஃபைல் பண்ணிரணும். நாம அட்டாச்மெண்ட் கேட்டிருக்கற ப்ராப்பர்டீஸ்க்கு மேல ஸ்டே பெட்டிஷன் ஏதும் வந்தா நம்மள கேக்காம ஆர்டர்ஸ் ஏதும் இஷ்யூ பண்ணக்கூடாது சார்.’ என்றேன்.

என்னுடைய சட்ட ஆலோசகர் புன்னகையுடன், ‘செஞ்சிரலாம் சார்.’ என்றார்.

அத்துடன் சமாதானமடைந்து அலுவலகம் திரும்பி என்னுடைய வட்டார மேலாளருக்கும் தலைமை அலுவலகத்திற்கும் தனித்தனியே தந்திகளை அனுப்பிவிட்டு கடந்த இரு வாரங்களாக தடைபட்டு போயிருந்த என்னுடைய வீடு கட்ட கடன் பெறும் பணிகளைப் பார்க்கத்துவங்கினேன்.

முதலில் வீடுகட்டுவதற்கான வரைபடம் (Plan), செலவுத்திட்டம் (Estimate) ஆகியவற்றை ஒரு அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரைக்கொண்டு  தயாரித்து முனிசிபல் அனுமதிக்கு அனுப்ப வேண்டும். முனிசிபல் அனுமதி கிடைத்ததும் எல்லாவற்றையும் சேர்த்து வின்ணப்பப் படிவங்களுடம் என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

முதல் வேலை வரைபடம் தயாரிப்பது.

என்னுடைய வீட்டின் உள்ளமைப்பைப் பற்றி ஏற்கனவே என் மனதில் இருந்ததை தோராயமாக வரைந்து வைத்திருந்தேன். அதை அப்படியே ஒரு காகிதத்தில் வடித்தெடுத்துக்கொண்டு என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவராகவிருந்த, தூத்துக்குடியில் பிரபலமாயிருந்த, ஒரு பொறியாளரை அணுகினேன்.

அவர் நான் வரைந்திருந்த வரைபடத்தையும் என்னுடைய நிலத்தின் அளவையும் பார்த்துவிட்டு, ‘சார் தப்பா நினைச்சிக்காதீங்க. உங்க ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா நீங்க நெனைக்கிறா மாதிரி ரூம்ஸ் இவ்வளவு விலாசமா, சதுர வடிவில அமைக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்.’ என்றார்.

என்னுடைய மனதிலிருந்த வரைபடத்தைத் தயாரித்தபோது எனக்கும் அந்த ஐயம் தோன்றியது.

என்னுடைய நிலத்தின் வடிவம் அப்படியிருந்தது. நீளம் 66 அடி, அகலம் 33 அடி. அதாவது நீள்சதுர வடிவம். அதில் முனிசிபல் நியதிப்படி பின்புறம் 15 அடி, முன்புறம் 10 அடி, இரண்டு புறமும் 5 அடி காலி நிலமாக விடவேண்டும்.

அதன் பிறகு வீடுகட்டுவதற்கு மீதமுள்ள இடம் 41 அடிக்கு 23 அடி என 940 சதுர அடி சொச்சம். அதுவும் நீள்சதுர வடிவில்.. ‘ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால It’s an odd shape..’ என்றார் பொறியாளர். ‘அதற்குள்தான் உங்களுடைய வீடு அமைய வேண்டும். அதற்கு நீங்கள் வரைந்திருக்கும் வரைபடம் சரிவராது.’

அவர் கூறியதை ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ‘ஆனா எனக்கு ரெண்டு பெட் ரூம்கள் வேணும். அப்புறம் ஒரு டைனிங் கம் விசிட்டிங் ரூம், சமையலறை, ஒரு சின்ன சிட் அவுட்..’ என்று அடுக்கிக்கொண்டே போக பொறியாளர் மெலிதான புன்னகையுடன், ‘முடிஞ்சவரைக்கும் அக்காமடேட் பண்றேன் சார். எனக்கு ஒரு நாலு நாள் டைம் குடுங்க. முடிச்சிட்டு கூப்டறேன்.’ என்றார்.

சென்னையை எடுத்துக்கொண்டால் ஒரு க்ரவுண்ட் என்பது 2400 சதுர அடி. பெரும்பாலான வீட்டு மனைகள் 60 அடி நீளம் 40 அடி அகலம் என்ற வடிவத்தில் இருக்கும். நகராட்சி விதிப்படி காலி இடத்தை விட்டாலும் 35க்கு 30 என்\ரு 1050 ச.அடி அளவில் ஒரு சதுர வடிவ மனை கிடைக்கும். இதில் ஒரு சிறிய குடும்பத்திற்கு தேவையான கச்சிதமான வீட்டைக் கட்டிவிட முடியும்.

தூத்துக்குடி புறநகரில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான நகர்களில் சென்னையில் உள்ளதைப் போல வீட்டுமனைகள் அமைக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டம்தான். ‘சதுர வடிவில் மனை வேண்டுவோர் அடுத்தடுத்து அமைந்திருந்த இரு வீட்டு மனைகள் வாங்க வேண்டியிருக்கிறது. அப்போது 66அடிக்கு 66 அடி என்ற அளவில் கிடைக்கும்.’ என்று என்னுடைய பொறியாளர் கூறியபோது இது முதலிலேயே தெரியாமல் போய்விட்டதே என்று தோன்றியது.

நிலத்தை வாங்குவதற்கு முன்பே ஒரு பொறியாளரிடம் என் மனதில் வரைந்திருந்த வரைபடத்தைக் காட்டி இத்தகைய வீட்டை அமைக்க எம்மாதிரி நிலத்தை வாங்க வேண்டும் என்று கேட்டிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு நிராசையுடன் புறப்பட்டேன்.

***

தூத்துக்குடியில் தடுக்கி விழுந்தால் தேவாலயம் என்று கூறியிருந்தேன். ஒவ்வொரு தேவாலயத்தில் வருடத்தில் ஒருநாள் திருநாள் கோலாகலத்துடன் கொண்டாடப்படுவது வழக்கமாயிருந்தது.

என்னுடைய வங்கி கிளை அமைந்திருந்த இடம் சின்ன கோயில் என்றும் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆனால் எனக்கு மிக அருகாமையில் இருந்தது வேறொரு தேவாலயம் (நான் எழுதப்போகும் விஷயம் சற்று சர்ச்சைக்குரியதானதால் பெயரை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்). அங்குதான் ஞாயிற்றுக்கிழமை வழிபாடுக்கு செல்வது வழக்கம்.

நாளடைவில் அந்த தேவாலயத்தின் பாதிரியாருடன் பழகி நண்பனாகிப்போனேன். பாதிரியார் என்னுடைய சமூகத்தைச் சார்ந்தவர் என்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம். பழகுவதற்கு மிகவும் மென்மையானவராகவும் இருந்ததால் சில வாரங்களுக்குள்ளாகவே எங்களுடைய நட்பில் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.

வாரத்தில் ஒருநாளாவது மாலையில் என்னுடைய அலுவலக வேலைகள் முடிந்தவுடன் காலாற நடக்கும் வேளையில் தேவாலயத்தையொட்டி இருந்த அவருடைய குடியிருப்பிற்கு செல்வது வழக்கமாயிருந்தது.

அப்படி ஒருநாள் அவரை சந்தித்தபோது என்னிடம், ‘ஜோசப் நம்ம சர்ச்சில இருக்கற ---- சபையினர் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள். அதற்கு முன் ஏற்பாடாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்களும் வரவேண்டும்’ என்றார். நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘நான் இந்த பங்கு உறுப்பினரே இல்லையே ஃபாதர்!’ என்றேன்.

‘உண்மைதான் ஜோசப். ஆனா இதப்பத்தி ஏற்கனவே சபை உறுப்பினர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டேன். நீங்க ஒரு பேங்க் மேனஜரா இருக்கறதுனால இந்த திட்டத்துக்கு ஒரு அட்வைசரா சேர்த்துக்கறதுக்கு அவங்க ஒத்துக்கிட்டாங்க. அதுவுமில்லாம இந்த திட்டத்திற்கு தேவையான பணத்தை செக் அல்லது டிராஃப்ட் மூலமா கலெக்ட் பண்ற ஐடியா இருக்கறதுனால நீங்க இந்த குழுவிலருந்தா வசதியாவும் இருக்கும் இல்லையா? அத்துடன் உங்களை இத்திட்டத்திற்கு பொருளாளராக நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடந்தான் இத்திட்டத்திற்கே நான் சம்மதித்தேன்’ என்றார்.

எனக்கு அவருடைய எண்ணம் புரிந்தது. சரி..இதனால் நமக்கும் தற்காலிக டெப்பாசிட் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதே என்று ஒத்துக்கொண்டேன்.

அவர்களுடைய திட்டம் இதுதான். தேவாலய வருடாந்தர திருவிழாவுக்கு இன்னும் இரண்டு மாத காலம் இருந்தது. திருவிழா தினத்தன்று குறைந்தது ஐம்பது ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்துவைப்பது என்ற திட்டம். நன்கொடை வசூலாவதை வைத்து ஜோடிகளின் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ செய்வது என்று தீர்மானித்திருந்தார்கள்.

தூத்துக்குடியில், முக்கியமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த சமூகத்தினரிடையே வரதட்சனைக் கொடுமை அதிகமாகவே இருந்தது. அச்சமூகத்தில் அப்போது இருந்த பெண்கள்-ஆண்கள் சதவிகிதமும் இதற்கு காரணமாக இருந்தது எனலாம். அப்போதைய தூத்துக்குடி ஆயர் இல்லம் எடுத்த கணக்கெடுப்பின்படி நான்கு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதத்தில் இருந்தது.

ஆகவே இத்தகைய திட்டத்தில் பங்குகொள்ள எனக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு பொன்னான வாய்ப்பாகவே கருதினேன்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்திலும் பங்குகொண்டேன். இத்திட்டத்திற்கு பொருளாளராக இருக்கவேண்டும் என்று தலைவர் முன்மொழிய பல உறுப்பினர்களும் வியப்புடன் என்னை பார்த்தனர். அவர்கள் பார்வையில் இந்த பங்கையே சேராத இவருக்கு என்ன அத்தனை முக்கியம் என்ற ஒரு கேள்வி தொக்கி நின்றதை என்னால் உணர முடிந்தது. இருப்பினும் தலைவர் முன்மொழிய உபதலைவர் வழிமொழிந்ததும் எல்லோரும் சம்மதிக்க ஒருமித்த கருத்துடன் என்ன¨ பொருளாளராக ஏற்றுக்கொண்டனர்.

அதன் காரணம் இத்திட்டம் முடிவுக்கு வந்தபோதுதான் எனக்கு புரிந்தது. ஆனால் அதுவே ஒரு தலைவலியாய் மாற ஏன்டா இதில் வந்து சிக்கிக்கொண்டோம் என்று நினைத்தேன்.

தொடரும்..10 comments:

துளசி கோபால் said...

அப்ப உங்களுக்கு நேரம் அவ்வளவு சரியில்லை போல இருக்கே.ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு
இப்படி தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு. நீங்களும் விடாகண்டனாட்டம் ஒவ்வொண்ணா ஜெயிச்சுத்
தாண்டி வந்துக்கிட்டு இருக்கீங்க.

tbr.joseph said...

வாங்க துளசி,

நேரம் என்ன நேரம். எல்லா நேரமும் ஒன்னுதான். சில நேரங்கள்ல பிரச்சினையா வரும்.. சில சமயத்துல நாம் எத தொட்டாலும் பொண்ணாருக்கும்.சுக்ரதசைம்பாங்களே அது மாதிரி.

ஆனா என்னுடைய மேலாளர் வாழ்க்கையில் தூத்துக்குடியிலதான் கொஞ்சம் ஓவரா பிரச்சினைய அனுபவிச்சேங்கறது என்னவோ உண்மைதான். அத வச்சிப்பார்த்தா என்னோட நேரத்துலதான் ஏதோ பிரச்சினை இருந்திருக்கு.

டி ராஜ்/ DRaj said...

சார்: தூத்துகுடியில பிரச்சனைகள் பெரும்பாலும் முந்தைய மானேஜரின் கைங்கரியத்தாலா? இல்லை உண்மையிலேயே வில்லங்கம் பிடிச்ச ஊரு தானா? (தூத்துகுடி மக்களெல்லாம் கும்மிடாதீங்கப்பா, சும்மா ஒரு கருத்து கேட்டேன்)

tbr.joseph said...

வாங்க ராஜ்,

பிரச்சனைகள் பெரும்பாலும் முந்தைய மானேஜரின் கைங்கரியத்தாலா? இல்லை உண்மையிலேயே வில்லங்கம் பிடிச்ச ஊரு தானா?//

ரெண்டும்தான். தூத்துக்குடி எந்த அளவுக்கு வில்லங்கம் பிடித்த ஊர் என்பது தேவாலய பாதிரியார்களையே விமர்சித்து கிறிஸ்துவர்கள் முச்சந்தியில் போஸ்டர் வைப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒருமுறை ஒரு மீன்பிடி கடனை வசூலிக்க சென்றிருந்த இடத்தில் ஒருவர் இன்னொருவரிடம் என்னப் பற்றி கூறினார்.' எலேய் இந்த ஆளை ஓடிப்போச் சொல்லு. இல்லன்னா இந்த கடல்ல தூக்கிப் போட்டு முக்கிருவேன்னு சொல்லு..' என்றார். என்னத்த சொல்ல.. முறட்டு ஆளுங்க.. ஆனா கெட்டவங்கன்னு சொல்ல முடியாது..

மணியன் said...

தூத்துக்குடி மக்களின் உணர்ச்சிகரமான எதிர்வினைகளும், உங்கள் உறவுகளும் மற்றும் வயதும் ஒன்று சேர்ந்ததே காரணம் எனலாம்.

இதே பாத்திரங்கள் பிறிதொரு சமயத்தில் சேர்ந்தாலும் கால ஓட்டத்தின் காரணமாக வேறு வித வினைகள்் ஏற்பட்டிருக்கும். இதைத்தான் நேரம் ..that point of time என்கிறோம்.

சுக்ரதசையாவது, சந்திராஷ்டமாவது-- அந்த விதயத்தில் நான் தருமி பக்கம்:)

sivagnanamji(#16342789) said...

veedu kattradhu, oru 50 perukku ilavasa kalyanam--ippadi 32 vayasukkulle thookki pottukitta,
villangangal voodu katti adikkumdhan...adhai namum voodu katti adikka vendiyadhudhan

tbr.joseph said...

வாங்க ஜி!

adhai namum voodu katti adikka vendiyadhudhan//

அப்படித்தான்னு நினைக்கிறேன்..

வீடு கட்டுனதுதான் நானா எடுத்துக்கிட்டது.. கல்யாணம்.. அது தானால்லே வந்திச்சி..

tbr.joseph said...

வாங்க மணியன்,

இதைத்தான் நேரம் ..that point of time என்கிறோம்.//

சரிதான்.

எனக்கும் நேரம், நாள் என்பதில் எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லை..

G.Ragavan said...

// டி ராஜ்/ DRaj said...
சார்: தூத்துகுடியில பிரச்சனைகள் பெரும்பாலும் முந்தைய மானேஜரின் கைங்கரியத்தாலா? இல்லை உண்மையிலேயே வில்லங்கம் பிடிச்ச ஊரு தானா? (தூத்துகுடி மக்களெல்லாம் கும்மிடாதீங்கப்பா, சும்மா ஒரு கருத்து கேட்டேன்) //

ராஜ் தூத்துக்குடியில் முரட்டுத்தனம் நிறைய. குறிப்பாக மீனவர் சமூகத்தில் முரட்டுத்தனம் நிறைய. கடலையே எதுத்துப் போய் மீன் பிடிக்கிறவங்களுக்கு உடம்புல இருக்குற உறுதி உள்ளத்துலயும் வந்துரும். அதான் அப்படி.

அதுவுமில்லாம, ஜோசப் சார் சொல்ற மாதிரி, நம்ம எப்படி சில சாமியார்களப் பத்தித் தப்பாவும் கிண்டலாவும் சொல்றமோ...அதே மாதிரி அவங்க பாதிரியார்களச் சொல்வாங்க. மார்க்கெட்டுக்குப் பக்கத்துல இருக்குற சர்ச்சுல இருக்குற ஒரு சாமியார் யாரோ ஒரு பொண்ணோட அது இதுன்னு அந்தச் சர்ச்சுலயே போஸ்டர் ஒட்டீருந்தாங்க. வீட்டுக்கு வீடு வாசப்படி.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ராஜ் தூத்துக்குடியில் முரட்டுத்தனம் நிறைய. குறிப்பாக மீனவர் சமூகத்தில் முரட்டுத்தனம் நிறைய//

முன்னமே ஒரு பதிவில ஜோ போட்ட பின்னூட்டத்துக்கு நானும் வேடிக்கையா தட்டி கேக்கமாட்டாங்க.. தட்டிட்டுத்தான் கேப்பாங்கன்னு சொல்லியிருந்தேன். அது ஒருவகையில் நிஜம்..

அப்புறம் இந்த போஸ்டர் விஷயம்.. பெண் விஷயத்திற்கு மட்டுமல்ல.. ஒரு சமயம் ஒரு பாதிரியார் கோவிலுக்கு சந்தா வசூலிக்கும் விஷயமாக சரியான கணக்கு காட்டவில்லை என்றும் கூட ஒரு போஸ்டர் வைத்திருந்தார்கள்.. எலே இன்னைக்கி தட்டியில என்னம்லே எளுதியிருக்காய்ங்க.. என்பது ஒரு வழக்கமான பல்லவி..