08 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 129

உறவுகள் எப்போதுமே மென்மையான சமாச்சாரம்தான். அதுவும் மனைவி வழி உறவுகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

நம்முடைய தாய்வழி அல்லது தந்தைவழி உறவினர்கள் என்றால் பரவாயில்லை. அவர்கள் நம்மை சிறுவயது முதலே அறிந்திருப்பார்கள். நம்முடைய வலிமை எது வீக்னஸ் எது என்று மட்டுமல்லாமல் நம்மிடமிருக்கும் நல்ல குணமும் தெரியும். மோசமான குணமும் தெரியும்.

ஆகவே நாம் எப்போதாவது கோபப்பட்டாலோ அல்லது முறைத்துக்கொண்டு சென்றாலோ இவன் நாம பார்த்து வளர்ந்த பையந்தானே என்று பெரிதாய் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். சிறிது நாட்கள் கழித்து நாமே சென்று மன்னிச்சுக்குங்க மாமா, சித்தி, சித்தப்பா என்றால் பெரிய மனதுடன் சரிடா ஒன்ன எங்களுக்கு தெரியாதா.. என்று சாதாரணமாக மன்னித்து விட்டுவிடுவார்கள்..

ஆனால் மனைவிவழி உறவு அப்படியில்லையே.

அவர்களுக்கும் நம்மைப்பற்றி முழுவதுமாய் தெரியாது. நமக்கும் அவர்களைப்பற்றி முழுவதுமாய் தெரியாது.

அதனால்தானோ என்னவோஆங்கிலத்தில் அவர்கள் relatives-in-law என்கிறார்கள். அதாவது ஒரு திருமணம் என்ற பந்தத்தால் வந்த உறவுகள். இன்னும் குறிப்பாகச் சொல்லபோனால் இயற்கை நியதிக்கு அப்பாற்பட்ட உறவுகள்.

என்னுடைய மனைவியுடனான என்னுடைய உறவின் நிமித்தமாவது நான் நேசிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளான உறவுகள். ஆனால் நடைமுறை உலகில் இப்போதெல்லாம் -– இப்போதென்ன உலகம் தோன்றிய காலத்திலிருந்தேதான் - அந்த உறவுக்குத்தான் தொப்புள் கொடியுடனான உறவைவிடவும் முக்கியத்துவம் அதிகம் இருந்துவருகிறது.

சம்சாரம் அது மின்சாரம் என்று சும்மாவா சொன்னார்கள்?

என்னுடைய வங்கி வாழ்க்கையிலேயே ஒற்றுமையுடன் வணிகம் செய்துவந்த எத்தனையோ குடும்பங்கள் திருமணம் என்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி (விபத்து என்று நான் கூறினால் எத்தனை பேர் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை) நடந்துமுடிந்த அடுத்த சில வருடங்களிலேயே (வாரங்கள் என்றும் சொல்லும் அளவுக்கு சில குடும்பங்களில் பார்த்திருக்கிறேன்) ஒற்றுமையாய் இருந்த தந்தை-மகன் அல்லது சகோதரர்கள்-சகோதரர்கள் அல்லது சகோதரன் - சகோதரி இருவர்கள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றதைப் பார்த்திருக்கிறேன்.

சகோதரர்கள் இருவர், மூவர் இருந்தால் முதல் இருவர்களுடைய மனைவியர் சில வேளைகளில் ஒத்துப்போய் சுமுகமாக இருப்பார்கள். அப்படியே ஏட்டிக்கு போட்டியாய் இருந்தாலும் பிரிந்து போக மாட்டார்கள் . ஆனால் கடைக்குட்டியின் - அது ஆணாக இருந்தால் கேட்கவே வேண்டாம் - திருமணம் முடிந்துவிட்டால் போதும். ஏட்டிக்கு போட்டியாக இருந்த முதல் மூத்த மருமகள்கள் இருவரும் ஓரணியில் சேர்ந்துக்கொள்ள தனித்துவிடப்பட்ட கடைசி மருமகள் தன் குடும்பத்தாரின் துர்போதனையால் குடும்பமே பிளவுபட்டு போகும்..

ஒழுங்காய் நடந்துக்கொண்டிருந்த வணிகமும் துண்டாடப்பட்டு நசிந்துபோய்விடும். தந்தை துவங்கி, வளர்த்து வைத்திருந்த வணிகத்திலும் அவர் அதன் மூலம் ஈட்டி வைத்திருந்த சொத்தில் நானும் பாத்தியஸ்தந்தான் என்று வழக்காடத் துணிந்துவிடும் பிள்ளைகள் வங்கியிலிருந்து கடனாய் பெற்ற தொகைக்குமட்டும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை நோட்டீஸ் அனுப்புவார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

என்னுடைய மனைவியின் மனம் கடந்த சில நாட்களாகவே தன்னுடைய குடும்பத்தை நான் உதாசீனம் செய்கிறேனோ என்று நினைத்து அடித்துக்கொண்டிருந்ததை நான் உணரவேயில்லை. ஆகவே திடீரென்று ஒருநாள்நான் அலுவலகத்திற்கு புறப்படும் நேரத்தில், ‘இந்த ஊருக்கு ஏந்தான் டிரான்ஸ்ஃபர் ஆச்சோன்னு நினைக்கிறேன். தஞ்சாவூர்லருக்கும்போது எவ்வளவு ஜாலியா இருந்தோம்’ என்றதும் நான் திடுக்கிட்டு, ‘எதுக்கு அப்படி சொல்றே? இப்ப என்ன ஆச்சி?’ என்றேன்.

‘நீங்க அந்த காட்டுக்குள்ள போயி நிலத்த வாங்குனதிலருந்தே அப்பா இப்பல்லாம் என்கிட்ட சரியாவே பேசறதில்லே. நீங்க என்னடான்னா அங்கதான் வீடு கட்டப்போறேன்னு நிக்கிறீங்க.’

அப்படிப்பட்ட  சூழ்நிலையில் என்னுடைய மனைவிக்கு இப்போது என்ன மறுமொழி கூறியிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் அப்போது என்னுடைய வயது 32. சுயகவுரவம் என்று நினைத்துகொண்டு யார் சொல்வதையும் கேட்கத்தேவையில்லை என்று நினைத்திருந்த காலம். சிறுவயதிலேயே ஒரு வங்கி கிளைக்கு மேலாளராகியிருந்ததில் இருந்த லேசான கர்வம்.

‘அதுக்கு என்ன பண்ண சொல்றே? அம்மா கூடத்தான் ஏண்டா மெட்றாஸ்ல கட்டாம போயும் போயும் அந்த பட்டிக்காட்டுல கட்டறேன்னு கேட்டாங்க. என்னெ என் போக்குலயே விட்டுருங்கம்மா. எனக்கு எது நல்லதுன்னு தோனுதோ அதுப்படித்தான் செய்வேங்கறது உங்களுக்குத் தெரிஞ்சதுதானேன்னேன். சரின்னுட்டு அதப்பத்தி பேசறதையே விட்டுட்டாங்க. அதையேத்தான் ஒங்கப்பாக்கிட்டயும் சொல்வேன். இந்த விஷயத்துல அவங்க இனியும் தலையிட்டு என் முடிவ மாத்த முயற்சி செய்யாம இருக்கறது நல்லது. அத அவங்கக்கிட்ட எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது உன் பொறுப்பு. அதயும் பாப்பாவுக்கு ஞானஸ்நானம் செய்யறதையும் சேர்த்துப் போட்டு குளப்பாத. அது வேற. இது வேற. நீயும் நானுமா இன்னைக்கி சாயந்திரம் போய் கூப்டுவோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.’ என்றேன்

என் மனைவி என்னைப் பார்த்த பார்வையிலிருந்தே என்னுடைய அணுகுமுறையில் அவருக்கு ஒப்புதல் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் அதைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளாமல் அலுவலகம் கிளம்பிச் சென்றேன்.

அன்று மாலை என்னுடைய மாமனார் வீட்டுக்கு சென்று அழைத்தோம். அவர்களும் எந்தவித மறுப்பும் கூறாமல் என்னுடைய மகளுக்கு ஞான பெற்றோராக இருக்கவும் ஒப்புக்கொண்டனர். அன்று இரவு அங்கேயே உணவருந்திவிட்டு வீடு திரும்பும் வழியில் என்னுடைய மனைவி வியப்புடன், ‘எப்படீங்க.. திடீர்னு ஞான தாய் தகப்பனா இருங்கன்னு ஒரு குண்ட தூக்கி போட்டீங்க? என் அண்ணனையும் மைனிகிட்டதான் சொல்ல போறேன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க?’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே, ‘நானும் கடைசி நிமிஷம் வரை அதப்பத்தி நினைக்காமத்தான் இருந்தேன். ஆனா நாம வீட்டுக்குள்ள நுழைஞ்சப்போ உங்கப்பாவோட முகத்த பார்த்தேன். அவர் நீ சொன்னாமாதிரி கொஞ்சம் அப்செட்டா இருக்காரோன்னு மனசுல பட்டுச்சி. அப்பத்தான் அவங்கள சும்மா கூப்பிடாம நம்ம பாப்பாவுக்கு அவங்க ரெண்டு பேரையுமே ஞானத் தாய் தகப்பனா இருக்கச்சொல்லிட்டா என்ன தோனிச்சி. நான் நெனச்சது சரியா போச்சி. நான் அவங்கள இருக்கச் சொல்லுவேன்னு அவங்களே எதிர்பார்க்கலேங்கறது உங்கப்பா அம்மா முகம் போன போக்குலருந்தே தெரிஞ்சுதே.. என்ன சொல்றே?’ என்றேன்.

‘நல்லா ஆள் போங்க. நா பாட்டுக்கு எங்க அண்ணன்கிட்ட சொல்லியிருந்தா என்ன ஆவறது? இப்படியா திடுதிடுப்புன்னு சொல்லுவீங்க? முன்னாலயே ஒரு வார்த்தை சொல்ல வேணாம்?’

நான் சிரித்தேன். எப்படியோ இப்போதைக்கு இந்த பிரச்சினையை தற்காலிகமாவது முடிக்க முடிந்ததே என்ற திருப்தி எனக்கு.

ஆக என் மனைவியின் உறவினர் எல்லோரும் வந்து என்னுடைய மகளுடைய பெயர் வைக்கும் விழா நல்லபடியாக முடிந்தது.

***

அடுத்த நாள் திங்கட்கிழமை. நான் சில பதிவுகளுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்த Ship Chandling கடன் கணக்கில் பணத்தை அடைக்க என்னுடைய சட்ட ஆலோசகர் கொடுத்திருந்த கெடு முடிவடையும் நாள்.

காலை பதினோரு மணி வரை எந்தவித தகவலும் வரவில்லை. என்னுடைய சட்ட ஆலோசகரையும் தொலைபேசியில் அழைக்க முடியாது. இப்போதுள்ளது போல செல் ஃபோன் வசதி அப்போது இருக்கவில்லை. சாதாரணமாக அவர் நீதிமன்றத்தில் இருக்கும் நேரமானதால் அவர் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு செல்லும் நேரத்திற்காகக் காத்திருந்தேன்.

ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல அன்று முழுவதும் அவரை பிடிக்கவே முடியவில்லை. மாலை ஆறுமணி வரை பொறுத்திருந்த நான் அன்று மாலையே அவரை சென்று சந்திக்க முடிவு செய்து சுமார் ஏழு மணிக்கு அவருடைய அலுவலகம் சென்றேன்.

‘நான் சொல்லியிருந்த ஆள் சொல்லியும் அந்த ஆள் சட்டையே பண்ணலையாம் சார். சட்டபடி நடவடிக்கை எடுக்கறத தவிர வேற வழியில்லைன்னு நினைக்கிறேன். டாக்குமெண்ட்ஸ் டைம் பார் (காலாவதி) வறதுக்கு இன்னும் எத்தன மாசம் இருக்கு?’ என்றார்.

‘மாசமா? இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு சார். அதனாலதான் அவரோட சொத்துக்கள அட்டாச் பண்ணாலாவது முன்வந்து கடன அடைச்சிருவார்னு நான் முயற்சி பண்ணேன். நீங்களே சொன்னதால வெய்ட் பண்ணேன்.’ என்றேன்.

‘உங்க எச்.ஓவிலருந்து சூட் சாங்ஷன் (Suit Sanction) வாங்கிட்டீங்களா?’

‘அனுப்பி ஒரு வாரமாச்சி சார். இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும்னு நினைக்கிறேன். ரெண்டு நாள் வெய்ட் பண்ணுவேன். வரலைன்னாலும் சூட் கொடுக்கறத தவிர வேறு வழியில்லைன்னு நினைக்கிறேன். அதான் கையோட லோன் டாக்குமெண்ட்ஸ் கொண்டு வந்திருக்கேன். அவங்க ஃபர்ம் (Firm) லோன் கணக்கு டீட்டெய்ல்சும் கொண்டு வந்திருக்கேன். நீங்க ப்ளெய்ண்ட் (Plaint) ரெடி பண்ணி வச்சிருங்க. நான் புதன் கிழமை காலைலயே வரேன். சூட் அமவுண்ட்டும் கணக்கு பண்ணி கொண்டுவந்திருக்கேன். நீங்க ஸ்டாம்ப் எவ்வளவுக்கு வாங்கணும்னு கேல்குலேட் பண்ணி அன்னைக்கி சொல்லிட்டீங்கன்னா டிரெஷரியில பணம் கட்டறதுக்கு வசதியா இருக்கும். ஐம்பதாயிரத்துக்கு மேல ஸ்டாம்ப் வாங்கணும்னா ஸ்டேட் பாங்குல பணத்த கட்டிட்டு ரசீது இருபத்தி நாலு மணிக்குள்ள டிரெஷரியில குடுக்கணுமாம். புதன் கிழமை கட்டிட்டு குடுத்தாத்தான் வியாழக்கிழமை காலைல கிடைக்கும். வெள்ளிக்கிழமை காலைல கோர்ட் திறந்ததும் சூட் பைல் பண்ணிரலாம்னு இருக்கேன்.’ என்றேன் மூச்சுவிடாமல்.

அதுதான் என்னுடைய மேலாளர் அனுபவத்தில் நான் தொடுக்கப்போகும் முதல் வழக்கு. ஐந்து லட்சத்துக்கு மேலுள்ள வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் என்னுடைய வங்கி முதல்வரே அனுமதி வழங்க வேண்டும். வங்கி முதல்வரின் பதவிக்காலம் முடிந்து புதிய முதல்வர் இன்னும் பொறுப்பேற்காததால்தான் என்னுடைய பரிந்துரைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. அப்போது பொது மேலாளராக இருந்தவர்தான் முதல்வராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர்தான் என்னுடைய முதல் மேலாளர். ஆகவே என்னுடைய பரிந்துரையை ஏற்று நிச்சயம் அனுமதி வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இருந்தாலும் சுமார் அறுபதாயிரத்துக்கு கோர்ட் முத்திரைத் தாள் (Stam Paper) வாங்க வேண்டியிருந்ததால் லேசான பயமும் தயக்கமும் இருந்தது. வங்கியின் பணத்தை எடுத்து முத்திரைத் தாளை வாங்கிவிட்டு என்னுடைய முதல்வர் அனுமதியளிக்க மறுத்துவிட்டாலோ அல்லது வழக்கு கொடுக்க நினைத்திருந்த வெள்ளிக்கிழமை காலை வாடிக்கையாளர் முழுபணத்தையும் அடைத்து கணக்கை முடித்துவிட்டாலோ என் பாடு திண்டாட்டமாகிவிடும் என்ற பயம் என்னை இரண்டு நாட்களாக உறங்கவிடாமல் பாடாய்படுத்தியது..

தொடரும்..  

17 comments:

Krishna said...

ஓட்டு போட்டுட்டு பதிவப் போட்டீங்களா, பதிவ போட்டுட்டு ஒட்டு போடப் போறீங்களா??!!

டி ராஜ்/ DRaj said...

Sir:
// எப்படியோ இப்போதைக்கு இந்த பிரச்சினையை தற்காலிகமாவது முடிக்க முடிந்ததே என்ற திருப்தி எனக்கு//
Wondering if there is more trouble to come in the future....
Cheers
DRaj

sivagnanamji(#16342789) said...

vote pottacha.?

துளசி கோபால் said...

சிக்கலுக்கு மேலே சிக்கலா ஆகுது போல இருக்கு.

//........முதல் மூத்த மருமகள்கள் இருவரும் ஓரணியில் சேர்ந்துக்கொள்ள தனித்துவிடப்பட்ட கடைசி மருமகள்
தன் குடும்பத்தாரின் துர்போதனையால்.......//

'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'

புரியுதுங்களா?

sivagnanamji(#16342789) said...

kadan-vangura varayildhan vanguravanukku kashtam; appuram koduthavanukku dhan kashtam.....nam nattu satta nadai
muraigal appadi..mm welfare state
illaya...unmayil GUNNAR MYRDHAL sonnapadi,SOFT GVERNMENTs dhan ullana

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

ஓட்டு போட்டுட்டுத்தான் பதிவ போட்டேன். காலையிலயே போய் போட்டாச்சி. ஒரே கன்ஃப்யூஷன். என் வீட்டுக்கு பக்கத்து காம்பவுண்டே மாநகராட்சி பள்ளிக்கூடம்தான். அங்கு என்னுடைய பெயர் இல்லை. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பூத்தில் இருந்தது. தேடிப்பிடித்து போட்டாச்சி. ஆனா அந்த பூத்துக்கு பக்கத்துலருக்கறவங்களுக்கெல்லாம் நம்ம வீட்டு பக்கதுலருக்கற பூத்துல பேர் இருக்கு!

என்ன அரசோ.. என்ன ஏற்பாடோ.. ஒரே குழப்பம்தான். அதுல ஒரு வயசான பெண்மனி.. அடப் போங்கய்யா.. வீட்டுக்கு பக்கத்துலருக்கற பள்ளிக்கூடத்துல போடமுடியாம.. யார் அவ்வளவுதூரம் போய் போடறது.. வேற வேலையில்லன்னு கோச்சிக்கிட்டு போய்ட்டாங்க.. இப்படி எத்தன பேர் ஓட்டு போடாம போனாங்களோ.. கள்ள ஓட்டுக்காரங்களுக்கு வேட்டைதான்.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

Wondering if there is more trouble to come in the future....//

என்ன ராஜ் இப்படி சொல்லிட்டு
Cheersனு சொல்லிட்டீங்க?

சரிதான், ச்சீர்ஃபுல்லா இருந்தாத்தானே பிரச்சினைகள ஃபேஸ் பண்ணமுடியும்?

இடுக்கண் வருங்கால் நகுக பிரின்சிப்பிள்.. என்ன ராஜ்?

tbr.joseph said...

வாங்க ஜி!

போட்டாச்சி.

kadan-vangura varayildhan vanguravanukku kashtam; appuram koduthavanukku dhan kashtam.....
//

கரெக்டா சொன்னீங்க..

tbr.joseph said...

வாங்க துளசி,

சிக்கலுக்கு மேலே சிக்கலா ஆகுது போல இருக்கு./

ஆமாங்க. இந்த மாதிரி நிறைய சிக்கல்ல மாட்டிக்கிட்டு முழிக்க வச்சது தூத்துக்குடி போஸ்ட்டிங்.. அதிலருந்தெல்லாம் இருந்து மீண்டு வந்தது ஆச்சரியம்தான்.

'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'

புரியுதுங்களா? //

புரியுது, புரியுது. ஆனா அத நான் என் வாயால சொல்லக்கூடாது.. சரிதானே?

Krishna said...

//'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'

புரியுதுங்களா? //

சரியாய்ப் புரியாதவர்கள் சொல்வது சார் இது.

"நல்லது" ஆவதும் பெண்ணாலே, "கெட்டது" அழிவதும் பெண்ணாலே என்பதுதான் சரி.

தன்னை மட்டுமே நம்பி, தன் சுற்றத்தை விட்டு விட்டு வந்தவளுக்கு ஆண் தரும் மதிப்பு/கவுரவம்/பதில் மரியாதை, அவள் வீட்டு மனிதரை மதித்தல், அவளை சரிவர நடத்தல். இதைச் செய்யத் தவறும்போது பிரச்சினையை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம் என்றே கருதுகிறேன்.

tbr.joseph said...

"நல்லது" ஆவதும் பெண்ணாலே, "கெட்டது" அழிவதும் பெண்ணாலே என்பதுதான் சரி.//

துளசியும் மனசுல இத நினைச்சிக்கிட்டுத்தான் சொன்னாங்களோ என்னவோ.

நீங்க சொல்றதும் சரிதான் கிருஷ்ணா.

sivagnanamji(#16342789) said...

ennanga sir
thoothukudi sikkalai life poora manage panravangalukku idhulam summa jujubi dhan

tbr.joseph said...

thoothukudi sikkalai life poora//

என்ன ஜி! வேற ஏதோ சொல்ல வரா மாதிரி இருக்கு?

சம்சாரவாழ்க்கையே சிக்கல்தான்னு சொல்றீங்களா?

G.Ragavan said...

ஜோசப் சார். ஞானத் தாய், தந்தைன்னா என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்.

நேத்து எங்கப்பாவும் எங்கம்மாவும் ஓட்டு போடுறதுக்கு முன்னாடி யோசிச்சதும் கொளம்புனதும் எனக்கு நல்லா நினைவிருக்கு. இதுவரைக்கும் அதிமுகவுக்கே ஓட்டுப் போடாத குடும்பம் எங்களோடது. திமுகவுக்குத்தான் இதுவரைக்கும் ஓட்டுப் போட்டிருக்கோம். நானுங் கூட. ஆனா இந்த வாட்டி திமுகவுக்கு ஓட்டுப் போட முடியாம....அதிமுகவுக்குப் போடவான்னும் முடிவுக்கு வர முடியாம...போய் ஓட்டு போட்டுட்டு வந்தாங்க. யாருக்குப் போட்டாங்கன்னு கேக்கல.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஞானத் தாய், தந்தைன்னா என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்.//

அதுக்கு முன்னால ஒரு கேள்வி. நேத்தைக்கு நீங்க கேட்டீங்கன்னு பொன்ஸ் என்னோட ஃபோன் நம்பர் கேட்டு வாங்கினாரே? நீங்க கூப்பிடவே இல்லையே.. என்னாச்சி?

சரி விஷயத்துக்கு வருவோம்..

ஞான பெற்றோர்னா God Parentsனு ஆங்கிலத்தில் சொல்வாங்க. அதாவது பிறந்த குழந்தையோட ஆன்ம காரியங்களை, அதாவது சர்ச் விஷயங்களில், அவன் அல்லது அவள் வளர, வளர, சரிவர செய்கிறானா/ளா, என்பதை கவனித்துவ்ரவேண்டிய பொறுப்பு உள்ளவர்கள். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதற்கு பெற்றோர்கள் இருப்பது போல ஆன்மாவை ஆரோக்கியத்துடன் பார்த்துக்கொள்வதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய கடமைக்குட்பட்டவர்கள் இவர்கள். Baptism தினத்தன்று குழந்தையை இவர்கள்தான் கையிலேந்தி கோவிலுக்குள் நுழைவார்கள். குழந்தையின் சார்பாக சர்ச்சில் பாதிரியார் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார்கள்.

சரி.தேர்தல் விஷயம். தூத்துக்குடி என்றைக்குமே அதிமுகவின் கோட்டையாயிற்றே அதற்கு தூத்துக்குடியின் முன்னாள் நகரசபை சேர்மனுடைய தகிடுதத்தங்கள் காரணமாயிருக்கலாம். சரியா?

G.Ragavan said...

ஜோசப் சார். மன்னிச்சிருங்க....வீட்டுல நெட் வசதி இல்லாததால பொன்ஸ் வழியா நம்பரக் கேட்டேன். வேலை நெறைய இருந்தது. அதுனால கூப்பிட முடியலை. இன்னைக்கு நாளைக்குக் கூப்பிடுறேன். பகல்ல நீங்களும் வேலையா இருப்பீங்க. மாலைல கூப்புடுறதுதான் சரி.

நான் தூத்துக்குடில பொறந்து வளந்தாலும் அப்பாவுக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் ஆகும். அதுனால ஊரூருக்கு போய் கிட்டே இருப்பாங்க. அதுனால தூத்துக்குடீல அவங்க ஒன்னு ரெண்டு வாட்டிதான் ஓட்டுப் போட்டிருக்காங்க. அப்ப அதிமுகவுக்கும் போடலை. திமுகவுக்கும் போடலை. ஒரு நல்லவர், மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒரு வாட்டி போட்டாங்க. அவரு ஜெயிக்கிற மாதிரி இருந்தப்போ...திமுக பெரியசாமி மெரட்டி ஜெயிச்சது தெரியுந்தானே....அதுனால தூத்துக்குடீல பெரியசாமியோ அவர் குடும்பத்துக்காரங்களோ நின்னா திமுகவுக்கு ஓட்டுப் போடுறதில்லைன்னு மாறாத முடிவு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அதுனால தூத்துக்குடீல பெரியசாமியோ அவர் குடும்பத்துக்காரங்களோ நின்னா திமுகவுக்கு ஓட்டுப் போடுறதில்லைன்னு மாறாத முடிவு.//

மிகச்சரியான முடிவு ராகவன்.