05 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 128

நான் விலைக்கு வாங்கிய நிலம் தூத்துக்குடி மத்திய நகரிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.

காலங்காலமாக மணல் தெரு மற்றும் அதனை சூழ்ந்திருக்கும் இடம்தான் தூத்துக்குடி என்று நினைத்துக்கொண்டிருந்த என் மாமனாருக்கு இந்த தூரம் ஒரு பெருந்தூரமாக இருந்தது.

‘என்ன இது? மாப்பிள்ள எவ்வளவு எடுத்து சொல்லியும் கேக்காம வாடிக்கு பக்கதுலபோயி எடம் வாங்கி கட்டுவேன்னு நிக்காரு.. நீயாவது சொல்லக்கூடாதாம்மா?’ என்று என் மனைவியிடம் அங்கலாய்த்திருக்கிறார்.

அவர் கூறிய தூத்துக்குடி நகரின் மத்திய கல்லறை (மைய வாடி) துத்துக்குடி-திருநெல்வேலி சாலையையொட்டி மில்லர்புரம் என்னும் தூத்துக்குடி ஸ்பின்னிங் ஆலை தொழிலாளர்களுக்கென நிர்மானிக்கப்பட்டிருந்த நகரையொட்டி இருந்தது.

நான் வாங்கியிருந்த நிலம் அங்கிருந்து வடக்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அதைத்தான் வாடிக்கு பக்கத்தில் என்று கூறியிருக்கிறார்.

அது ஒரு குறை. அதாவது பரவாயில்லை. எடுத்துக் கூறி சமானாதப்படுத்தலாம் என்று நினைத்தேன்.

என்னுடைய நிலத்தை பதிவு செய்வதற்கு முன்னர் ஒரு வழக்கறிஞரிடம் அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று என்னுடைய மாமனாருக்கு மிகவும் நெருங்கிய ஒரு வழக்கறிஞரிடம் என் மனைவியையும் அழைத்துக்கொண்டு சென்றார். நான் ஏற்கனவே என்னுடைய வங்கி சட்ட ஆலோசகரிடம் காட்டி ஒப்புதல் பெற்றுவிட்டிருந்ததால் நான் அவர்களுடன் செல்லவில்லை.

அந்த வழக்கறிஞர் என்னுடைய மாமனாரின் நெருங்கிய நண்பரல்லவா? அவருடைய மருமகனான எனக்கு நல்லது செய்வதாக நினைத்து நிலப்பத்திரத்தில் இல்லாததொரு வில்லங்கத்தை இழுத்துவிட்டிருந்தார்.

சொத்தின் நாற்புறமும் எல்லைகளாகவிருந்த சொத்துக்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும் அல்லவா? அதில் என்னுடைய நிலத்தின் கிழக்கே (வலப்புறம்) இருந்த சொத்தின் உரிமையாளர் பெயரை படித்த மாத்திரத்திலேயே.. ‘என்னய்யா இது.. உங்க மாப்பிள்ள கண்ண மூடிக்கிட்டு வாங்கறாரு..? இது யாரு தெரியுமாய்யா? எஸ்.டி கேஸ்ட் ஆச்சே.. இவிய வீட்டுக்கு பக்கத்திலயாய்யா உங்க மாப்ளை போயி வீடு கட்டி குடியிருக்கப் போறாரு?’ என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார்.

அதைக் கேட்டு அதிர்ந்துபோன என்னுடைய மாமனார் என் மனைவியிடம், ‘பாத்தியா நா அப்பவே சொன்னேன்லெ.. அந்த காட்டுக்குள்ளாற போயி வாங்கனப்பவே நெனச்சேன். இந்த மாதிரி ஆளுங்கதான அங்கிட்டு போயி வாங்குவான்க..’ என்றிருக்கிறார்.

என் மனைவிக்கு என்னுடைய குணத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆகவே, ‘இங்க பாருங்கப்பா. அவங்க ஏற்கனவே அவங்க பேங்க் வக்கீல்கிட்ட காட்டிட்டேன், மறுபடியும் எதுக்கு வக்கீல்கிட்டன்னு அப்பவே சொன்னாங்க. நீங்க சொத்துல வில்லங்கம் இருக்கான்னு மட்டும் பாருங்க. அவங்களுக்கு அந்த இடம் பிடிச்சிபோச்சி. இனி நீங்களோ, நானோ சொன்னா கேக்கமாட்டாங்க. அதுவுமில்லாம இந்த சாதி, குலம், கோத்திரம்னு நான் போய் சொன்னா அவ்வளவுதான் கேக்கவே வேணாம்.. இந்த நிலத்துக்கு முன்பணமா --------- ரூபா பணத்த வேற கொடுத்திட்டேன்னு சொன்னாங்க. அதனால இந்த விஷயத்த நீங்க பெரிசு பண்ணி பிரச்சினைய பண்ணிராதீங்க.’ என்று கூறியிருக்கிறார்.

என் மனைவி கூறிய விதம் சரியில்லையோ அல்லது என் மாமனாருடைய நண்பரின் முன்னிலையில் வைத்து கூறியதாலோ என்னவோ தெரியவில்லை என் மாமனாரின் மனம் புண்பட்டுபோக அவர் உடனே எழுந்து புறப்பட்டு போயிருக்கிறார். அப்போது இருந்த சூழ்நிலையில் என்னுடைய மனைவியும் தன்னுடைய தந்தையின் நடத்தையால் வருத்தமுற்று நேரே வீடு வந்துவிட்டார்.

நானும் அன்று இருந்த மனநிலையில் சமாதானப்படுத்த முயலாமல், ‘சரி இன்னும் எத்தனையோ வேலை இருக்கிறது. அஸ்திவாரம் தோண்டும்போது கூப்பிட வேண்டாமா? அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்..’

என்னுடைய வங்கியில் ஊழியர்களுக்கென்று வீட்டு கடன் திட்டம் இருந்தது (இப்போதும் இருக்கிறது). அதற்கு நிறைய விதிமுறைகள் இருந்ததால் அடுத்த வந்த சில வாரங்களுக்கு என் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது.

இதற்கிடையில் என்னுடைய இரண்டாவது மகளுக்கு கோவிலில் ஞானஸ்நானம் வைத்து பெயர் சூட்ட வேண்டிய நாள் நெருங்கியது. சாதாரணமாக குழந்தைப் பிறந்து ஒரு மாத காலத்திற்குள் கொடுப்பது வழக்கம். சென்னையென்றால் அந்த நியதியை எல்லாம் யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். எப்போது வசதிப்படுகிறதோ அப்போது வைத்துக்கொள்வது வழக்கம்.

தூத்துக்குடி போன்ற நகரத்தில் அதுவும் சொந்தமும் பந்தமும் சூழ்ந்திருந்த இடத்தில் இத்தகைய சடங்குகளுக்கெல்லாம் பலத்த முக்கியம் இருந்தது. ஒரு மாதத்திற்குள் நடத்தாவிட்டால், ‘என்னயே குழந்தை பிறந்து ஒரு மாசம் ஆயிருச்சி? இன்னமும் ஞானஸ்தானம் கொடுக்காம இருக்கே..? விருந்துச்சோறு போட  காசில்லையாக்கும்?’ என்று பார்ப்பவர்களெல்லாம் நொடித்துக்கொள்வார்கள்.

என் மனைவி இதைச் சுட்டிக்காட்டியபோது, ‘ஒங்க ஊர்ல எதுக்குத்தான் சாங்கியம் பாக்காம இருக்கீங்க, இதுக்கு பாக்காம இருக்கறதுக்கு? என்ன செய்யணுமோ எனக்குத் தெரியாது.. எங்க வீட்டாளுங்கள கூப்டாலும் மெட்றாஸ்லருந்து இதுக்குன்னு வேல மெனக்கெட்டு லீவையும் போட்டுக்கிட்டு வரமாட்டாங்க. அம்மாவுக்கும் லீவெல்லாம் கிடைக்காது. அதனால ஒங்க வீட்டாளுங்களுக்கு எப்ப சவுகரியமோ அப்போ வச்சிக்கலாம். கேட்டுச் சொல்லு’ என்று கூறி ஒதுங்கிக்கொண்டேன்.

என் மனைவி நான் கூறியதை அவருடைய வீட்டில் போய் சொன்ன போது என் மாமியாரும் மாமனாரும் ஒருசேர, ‘ஏக்கி ஒம் மாப்பிள்ளைக்கு என்ன தோணுதோ அப்படியே செய்யச் சொல்லு.. நாங்க மத்த விருந்தாளிங்க மாதிரிதான் வந்துட்டு போகப்போறோம்.’ என்று விட்டேத்தியாகக் கூறிவிட என் மனைவி பதறிக்கொண்டு என்னிடம் ஓடிவந்தார்.

நான் அப்போதுதான் என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்த அதிகாரி ஒருவரிடம் சரியாக டோஸ் வாங்கிவிட்டு பொருமிக்கொண்டிருந்தேன். நேரம் காலம் தெரியாமல் என் மனைவி இவ்விஷயத்தை வந்து கூற நான் கோபத்துடன், ‘சரி.. அப்படியே வந்துவிட்டு போகட்டும்.’ என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு கவேண்டிய காரியங்களை தனி ஆளாய் நின்று செய்து முடித்தேன்.

தூத்துக்குடி போன்ற ஊர்களில் வசிப்பதன் சவுகரியத்தை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இத்தகைய வைபவங்களுக்கு ஏற்பாடு செய்ய சாமான்களை வாங்க வேண்டுமென்றால் சென்னை நகரையே ஒருமுறை வலம் வரவேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் இருக்கும்.

ஆனால் தூத்துக்குடியில் காசு கடை பஜார், துணிக்கடை பஜார், காய்கறி மார்க்கெட் எல்லாமே ஒரேயொரு தெருவில்தான்.. க்ரேட் காட்டன் சாலை.. இரண்டு மணி நேரத்தில் குழந்தைக்கு தங்கத்தில் செயின், காலுக்கு கொலுசு, கைக்கு வளையல், வைபவ தினத்தன்று அணிய லேஸ் வைத்து தைக்கப்பட்ட வெள்ளை பட்டு ஃப்ராக், தலைக்கு குல்லா, கையுறைகள், காலுறைகள் தேவாலயத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய காணிக்கைப் பொருட்கள்.. இத்யாதிகள் எல்லாவற்றையும் வாங்கி முடித்துவிட்டேன்.

வைபவத்தன்று காலை மற்றும் பகல் உணவுக்கு ஆள் வேண்டுமா? கவலையே இல்லை. என் கிளை அலுவலகத்திற்கு நேரெதிரிலேயே இருந்த பெரிய மார்க்கெட் வளாகத்திலேயே சமையல் ஆட்கள் சமையல் பாத்திரங்கள், சேர், டேபிள், தார்பாய், ஷமியானா வாடகைக்கு விடும் கடைகள் இருந்தன..

‘WGC Roadலருக்கற பேங்க் மேனேஜர்..’ என்று சொன்னவுடனே ‘அட்வான்ஸ்லாம் வேணாம்யா.. என்னைக்கின்னு சொல்லுங்க.. ஏத்தியனுப்பிடறோம்.. இங்கன நம்ம மரைக்காயர் மஹால்தானே.. சனிக்கிழமை காலையில வந்து சொன்னா போறும்யா..’ என்று ஏதோ சொந்த பந்துக்களை நடத்துவதைப் போன்று நடத்த நான் என்னுடன் வந்திருந்த மனைவியைப் பார்த்தேன், ‘பார்த்தியாடி’ என்பது போல.

அவர், ‘ஆமா.. இவுகளையே வந்திருந்து சாப்டுட்டு போங்கன்னு சொல்ல வேண்டியதுதானே..’ என்று முனுமுனுக்க.. நான் ‘வேறென்ன செய்ய சொல்றே.. உங்க ஊர்ல இத்தன பேர் இருந்து என்ன பிரயோசனம்? ஒத்த ஆளா நாந்தானே எல்லாத்தையும் செய்ய வேண்டியதா போச்சி.. இதுல வீடு கட்டறேன்னு வேற இழுத்து விட்டுக்கிட்டாச்சி.. முடிய பிச்சிக்கிட்டு அலையப் போறேன்.’ என்றேன் கடுப்புடன்.

நான் வசித்துவந்தது பகுதி தூத்துக்குடி ஆயருடைய இல்லம் அமைந்திருந்த சின்ன கோயில் பகுதி. நான் ஏற்கனவே கூறியிருந்தேன், தூத்துக்குடியில் தடுக்கி விழுந்தால் தேவாலயங்கள்தான் என்று..

அவற்றுள் சின்ன கோயில் என்ற மேற்றிராசனக் கோவில் குருக்களை எனக்கு நன்றாக அறிமுகமிருந்ததால் ஞானஸ்நானத்துக்கு நாள் குறிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை. அடுத்த ஞாயிறே காலை இரண்டாவது திருப்பலிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

நானும் சரி என்று சம்மதித்துவிட்டு உறவினர்களை (எல்லோருமே என் மனைவியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான்) அழைக்க பட்டியலிட்டு முடித்தேன். ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு சென்றால் அதிகப்பட்சம் இரண்டு மணி நேர வேலை..

வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை சென்று அழைத்தால் போதும் என்ற நினைப்பில் என் அலுவலக வேலைகளில் மூழ்கிப்போனேன். ஆனால் என் மனைவியோ தன்னுடைய பெற்றோர்களின் நடத்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார் போலிருக்கிறது. நான் கவனிக்கவே இல்லை..தொடரும்..


10 comments:

துளசி கோபால் said...

என்னங்க இது, நல்ல நாள் விசேஷத்துக்கு நேர்லே போய்க் கூப்புட்டாலும், ரெண்டு நாளைக்கு முன்னாலேதான்
கூப்புடப் போவேன்னு சொன்னா நல்லவா இருக்கு?
எத்தனைபேர் வர்றாங்கன்னு ஒரு கணக்கு இருந்தாத்தானே சமைக்கிறவங்களுக்கும் தோதா இருக்கும்.
என்னமோ போங்க. மாமனாரைக் கோவிச்சக்கறது அவ்வளவா நல்லா இல்லே... ஆமாம்.

tbr.joseph said...

வாங்க துளசி,

மாமனாரைக் கோவிச்சக்கறது அவ்வளவா நல்லா இல்லே... ஆமாம். //


இப்ப தெரியுது.. அப்ப தெரியலையே.. இள ரத்தம்.. சூடா இருந்தது.. பட்டாத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?

டி ராஜ்/ DRaj said...

சார்:
மாமனார், மாமியார் குடும்பத்தை மிகவும் ஜாக்கிரதைய handle பண்ணனும்ங்கறது என் அப்பா எனக்கு, என் அக்காவுக்கு, என் தம்பிக்கு சொன்னது. அதையும் மீறி எனக்கு சில பிரச்சனைகள் வந்திருக்கு. ஏன்டா கல்யாணம் பண்ணினோமுன்னும் தோணியிருக்கு :(

Krishna said...

ஆஹா, இதுவரை அலுவலக/அலுவலக பணியாளர்கள் நிர்வாக பாடம், இனிமே கொஞ்ச நாளுக்கு வீடு கட்டுதல் மற்றும் மாமனார் வீட்டு உறவினர்களை கையாள வேண்டிய வழிமுறைகளப் பற்றியப் பாடமோ?!

tbr.joseph said...

வாங்க ராஜ்,

அதையும் மீறி எனக்கு சில பிரச்சனைகள் வந்திருக்கு. //

யாருக்குத்தான் வரலே?

ஏன்டா கல்யாணம் பண்ணினோமுன்னும் தோணியிருக்கு //

யாருக்குத்தான் தோணலே?

வீட்டுக்கு வீடு வாசப்படி..

அத சிலபோர் தாண்டி போயிடறாங்க.. சில பேர் தடுக்கி விழுந்து அடிப்பட்டு திருந்தறாங்க. அதுல நா ரெண்டாவது ரகம்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா..

ஜாலியா லீவ அனுபவிச்சிக்கிட்டு இருக்கீங்க? ஹூம்..

வழிமுறைகளப் பற்றியப் பாடமோ?!//

நான் என்ன வாத்தியாரா என்ன? ஏதோ எனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கிறேன்.. அதனாலதானே என்னோட தோல்விகளையும், நான் செய்த மடத்தனங்களையும் சேர்த்து எழுதுகிறேன்..:-)

Krishna said...

இணைவியையும், மகனையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, செய்ய வேண்டிய ஆய்வகப் பணிகளை ஒரு சேர முடித்து விடலாமென்றிருந்தேன். ஆய்வுக் கருவிகளின் கோளாறு காரணமாய் எதையும் செய்ய இயலாத நிலை. வீடு சுத்தப் படுத்தலும், தமிழ்மணம் தரும் இளைப்பாறலுமாய் இந்த விடுமுறையப் போக்கிக் கொண்டிருக்கிறேன். எப்படா திங்கள் வருமென்றிருக்கிறது (கிழமை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, இணைவி முகமென்று எடுத்துக் கொண்டாலும் சரி...)

நீங்கள் நிச்சயம் வாத்தியார்தான்.

தோல்விகளையும், மடத்தனங்களையும் கூட மறைக்காமல்/மறக்காமல் எழுதுவதாலேயேதான் உங்கள் பதிவுகள் எமக்கு பாடமாகின்றன.

அனுபவம் பாடமாகும். ஒவ்வொரு அனுபவமும் நீயே பெற்று பாடம் கற்க வேண்டுமென்றால் உன் ஆயுள் போதாது. மற்றவர் அனுபவத்திலும் பாடம் பெறு என்பது பல ஞானிகள்/அறிஞர்கள் கூற்று ஆயிற்றே. உங்களது சுயதம்பட்டமற்ற, யதார்த்தமான அனுபவ பகிர்வு, எமக்கு சிறந்த பாடங்களே.

tbr.joseph said...

கிழமை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, இணைவி முகமென்று எடுத்துக் கொண்டாலும் சரி...

உண்மையைத்தானே சொல்கிறீர்கள்..

அத்துடன் இணைவி என்று நீங்கள் உங்கள் மனைவியை குறிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கிருஷ்ணா..

sivagnanamji(#16342789) said...

//nan enna vathiyara...//
vathiyarnu yarai meen panreenga?
sincere teachers kku endhavidha pirachnaiyum erpadaradhu ille....
'thillalangadi' teachers kkudhan vidha vidhamana anubhavam kittum... aana instituions alladha pira elaa offiehalleyum idharkku edhirmarayana nilai dhane?

tbr.joseph said...

வாங்க ஜி!

என்னெ சொல்லிட்டு நீங்க எங்க போய்ட்டீங்க. ரெண்டு நாளா காணோம்?

'thillalangadi' teachers kkudhan vidha vidhamana anubhavam kittum... //

அப்படியா? தர்மஅடி கூட கிடைக்கும்:)