03 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 126

எடுத்து ‘ஹலோ’ என்பதற்குள் எதிர் முனையிலிருந்து சரமாரியாக.. என்ன சொல்லலாம்.. ஆங்கிலத்தில் சொல்லலாம் என்றால் ‘spitting fire..’

எதிர்த்து பேசுவதால் எந்த பயனும் இருக்காது என்பதால் எதிர் முனையில் இருந்த என்னுடைய உயர் அதிகாரி அவருடைய கோபத்தை கொட்டி தீர்க்கட்டும் என்று பொறுமையுடன் காத்திருந்தேன்.

இத்தகைய சம்பாஷனைகளை முடிந்த அளவுக்கு 'காது கொடுத்து' கேட்பது என்பார்களே அதுபோல் காதை மட்டுமே கொடுக்க வேண்டும். அதாவது கேட்பது எதையுமே கவனிக்கக் கூடாது.. புரியவில்லையா? எதையும் பொருட்படுத்தக்கூடாது என்று அர்த்தம்.

என்னுடைய உயர் அதிகாரியொருவர் அடிக்கடி கூறுவார்.. ‘As an executive you should also know how to face the brickbats..’ ஆம். புகழுரையை எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதேபோல் கடிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவர் நம்மை புகழும் நேரத்தில் மகிழ்ச்சியின் உச்சிக்கும் சென்றுவிடக்கூடாது.. அதேபோல் ஒருவர் நம்மை கண்டிக்கும்போது துவண்டுவிடவும் கூடாது..

இவ்வுண்மையை நன்றாக அறிந்துவைத்திருந்த நான் என்னுடைய உயர் அதிகாரி பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் காத்திருந்தேன். அவர் அன்று பேசியதில் பலவும் அத்தகைய பதவியில் இருப்பவர் பேசுவதற்குரியவையல்ல..

இருப்பினும் என்ன செய்வது? வேலைக்கு என்று வந்துவிட்டால் இவர்களைப் போன்றவர்களை சகித்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

முடிவில், ‘டிபிஆர். நேற்று உங்கள் மேல் உங்களுடைய வாடிக்கையாளர் புகார் செய்தபோது கூட நான் அவ்வளவாக நம்பவில்லை. ஆனால் இன்று நீங்கள் செய்திருக்கும் காரியத்தைப் பார்த்ததும்தான் புரிகிறது..’ என்றார்.

நான்.. ‘அப்படி நான் என்ன செய்துவிட்டேன் சார்.. நிலுவையில் நின்றிருந்ததை வசூலித்தேனே அது தவறு என்கிறீர்களா?’ என்றேன்.

இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர் சட்டென்று சில நொடிகள் மவுனமாகிப் போனதிலிருந்து விளங்கியது.

‘I am not saying that. But did you inform the customer that you are going to adjust that amount to his dues in the loan account?’

‘அது தேவையில்லை என்று நினைக்கிறேன், சார். அப்படி நான் கூறியிருந்தால் நிச்சயம் அவர் பணத்தை செலுத்தியிருக்க மாட்டார். அத்துடன் இத்தனை நாள் வரவு செலவு செய்யாமல் இருந்தவர் இன்று மட்டும் ஏன் இத்தனைப் பெரிய தொகையை அடைக்க வேண்டும்? நான் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருடைய ஆலைக்குச் சென்று கடனை திருப்பி அடையுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்கியே அவர் இத்தொகையை அடைத்திருக்கிறார் என்று நினைத்ததால்தான் அதை கடன் கணக்கிற்கு மாற்றினேன். ஆகவே என்மேல் எந்தத்தவறும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.’

என்னுடைய பதிலில் இருந்த நியாயமும் உறுதியும் அவரை என்ன நினைக்கச் செய்ததோ தெரியவில்லை மேற்கொண்டு எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

நானும் விட்டது தொல்லை.. எனக்கு சரியென்று தோன்றியதை நான் செய்தாயிற்று இனி என்ன வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுடன் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து இந்த கணக்கைப் பற்றி என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் இந்த நிலுவைத் தொகையைப் பற்றி எழுதியிருக்கிறேனா என்று பார்க்கச் சொன்னேன்.

அவரும் அந்த அறிக்கையின் நகல் இருந்த கோப்பையே என்னிடம் கொண்டு வந்து நான் அதில் எழுதியிருந்தவற்றைக் காண்பித்தார். நல்லவேளையாக நிலுவைத்தொகையை சற்று கூட்டியே காண்பித்திருந்தேன். அத்துடன் கடன் தொகைக்கான தொகையை நேரே விற்பனையாளருக்கு கொடுக்காமல் ராஜேந்திரனுடயை தனிப்பட்ட கணக்கில் வரவு வைத்த விவரத்தை குறிப்பிட்டிருந்ததையும் பார்த்தேன்.

ஆக, யார் என்ன நினைத்தாலும் என் மேல் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் நான் என் பொறுப்பேற்பு அறிக்கையில் எழுதியுள்ளவற்றை கருத்தில் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள் என்று எனக்குப் பட்டது.

இருப்பினும் இனியும் நான் வாளாவிருக்கலாகாது என்று நினைத்து என் மனைவியின் யோசனைப்படி எனக்கு பல வருடங்களாய் பழக்கமாயிருந்த உயர் அதிகாரிகள் இருவரையும் தொலைப்பேசியில் அழைத்து கடந்த இரண்டு தினங்களில் நடந்தவற்றை விளக்கமாக கூறினேன். அவர்களில் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் இந்நிறுவனங்களுக்கு அளித்திருந்த கடன்களைக் குறித்து நான் எழுதியவற்றின் ஒரு நகலையும் அன்று மாலையே தபாலில் அனுப்பி வைத்தேன்.

அவர்களு ஒருவர் தொலைப்பேசி சம்பாஷனையின் முடிவில் தெரிவித்த சங்கதி எனக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது. ‘டி.பி.ஆர். நம்ம சேர்மனோட பதவிகாலம் இன்னும் ஒரு வாரத்துல முடியப் போகுது. அவரோட பதவிய நீட்டிக்க உத்தேசமில்லைங்கற கடிதம் ரிசர்வ் பேங்க்லருந்து வந்து ஒரு வாரம்தான் ஆகுது. அதனால அவர் ரொம்ப அப்செட்டாயிருக்கார். அந்த நேரம் பார்த்து அவர் அறிமுகப்படுத்துன வாடிக்கையாளர்கிட்டருந்து உங்க மேல கம்ப்ளெய்ண்ட் வரவே நீங்க விஷயம் தெரிஞ்சிதான் இப்படி நடந்துக்கறீங்கன்னு நினைச்சிருப்பார்.’

அத்துடன், என்னை முதன்முதலாக வேலைக்கு அமர்த்திய என்னுடைய மேலாளரே வங்கியின் அடுத்த முதல்வராக வரப்போகிறார் என்றும் அவர் தெரிவித்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது..

அவருடனான தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது இந்த இரண்டு வரிகள்..

அவனவன் பதவியில் இருக்கறப்போ ஆடுற ட்டம் என்ன..ஆட்டம் முடிஞ்சதுக்கப்புறம் எடுக்கற ஓட்டம் என்ன..

அப்படித்தான் நடந்தது என்னுடைய அன்றைய முதல்வருக்கும்.. அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததன் பின்னணி இந்த ராஜேந்திரனைப் போன்ற பலரை அவருடைய முந்தைய வங்கியிலிருந்து அழைத்து வந்து கடன் வழங்கியதுதான் என்பது பின்னர்தான் தெரியவந்தது..

அவருடைய பதவிகாலம் முடிந்ததும் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல் ஆனார் ராஜேந்திரனும் அவருடைய கூட்டாளியும். புது முதல்வர் வந்து பதவியேற்றதுமே அவர் செய்த முதல் காரியம் முந்தைய முதல்வர் கொடுத்த கடன்களையெல்லாம் மறு ஆய்வு செய்ததுதான். அந்த மறு ஆய்வில் நான் என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் எழுதியிருந்தவைகளை வைத்து அந்நிறுவனத்திற்கு கடன் முழுவதையும் திருப்பி அடைக்க ஆறு மாத அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே தூ..டியில் இருந்த வேறொரு வங்கி முதல்வரை அந்நிறுவனத்தின் பாகஸ்தர்கள் தங்களுடைய சூழ்ச்சி வலையில் வீழ்த்தவே அவ்வங்கி என்னுடைய வங்கிக்கு வரவேண்டிய முழுத்தொகையையும் அடைத்து கணக்குகளை ஏற்றுக்கொண்டனர்.

என்னுடைய நல்ல நேரம் என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் ராஜேந்திரனின் கணக்குகளைக் குறித்து விலாவாரியாக எழுதியதும் அவர் வேறேதோ நோக்கத்துடன் அடைத்த பணத்தை அவருடைய பாக்கிக்கு வரவு வைத்ததுதான்.

இந்த பணத்தை கடன் பாக்கிக்கு வரவு வைத்த அன்று எனக்கு கிடைத்த ஏச்சும் பேச்சும் சரியாக ஒரு மாதம் கழித்து புது முதல்வரின் செக்கரடேரியட்டிலிருந்து என்னுடைய செயலுக்கு பாராட்டு தெரிவித்து வந்த கடிதமாக மாறியது என்றால் நம்பமாட்டீர்கள்..

அந்த பாராட்டு கடிதத்தில் அப்போதைய முதல்வரின் சார்பாக கையொப்பமிட்டிருந்தவர் யாரென்று நினைக்கிறீர்கள்? முந்தைய  முதல்வருடைய கட்டளைக்கு அடிபணிந்து என்னை தொலைபேசியில் திட்டித் தீர்த்தவர்தான்!

இதுதாங்க காலத்தின் கொடுமை என்பது..

பல நேரங்களில் நமக்கு வந்து சேரும் தொல்லைகள் எல்லாம் நம்முடைய நேரம் சரியில்லை போலிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? இருக்கலாம்..

பொறுமையோடு காத்திருந்தால் காலம் மாறும். நமக்கு தொல்லையாய் இருந்தவர்களே நமக்கு உதவிகரமும் நீட்டுவார்கள்.. இது என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை..

*******

தூத்துக்குடி துறைமுகத்தின் அருமை பெருமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

சுமார் முப்பத்தைந்து அடி ஆழமுள்ள (Draught) இத்துறைமுகத்தில் நான் அங்கு இருந்த சமயத்தில்தான் ஐந்து மற்றும் ஆறாவது பெர்த்களை (Berth) கட்டி முடித்தார்கள். அதாவது ஒரே சமயத்தில் ஐந்தாறு சரக்குக் கப்பல்கள் நின்று சரக்குகளை இறக்கவும் ஏற்றவு வசதிகள் இருந்தன..

தமிழகத்தில் கோவை உட்பட பல தொழில் நகரங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் தரைமார்க்கமாக இத்துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ஏன் கேரளத்தில் கொச்சி நகரில் மிகப்பெரிய துறைமுகம் இருந்தும் தொழிலாளர் பிரச்சினைக் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்துதான் கடல் உணவு பொருட்களான பதப்படுத்தப்பட்ட மீன், இரால், கருவாடு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இத்துறைமுகத்தின் அசுர வளர்ச்சி இதைச் சார்ந்துள்ள பலதரப்பட்ட தொழில் மற்றும் வணிகங்கள் தூத்துக்குடியில் துவங்க ஏதுவாயிருந்தன.  

இதன் விளைவாக தூத்துக்குடி நகரம், முக்கியமாக SPIC, TAC போன்ற பெரு தொழிற்சாலைகள் துவங்கப்பட்ட பின்னர் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு விரிவடைந்தது என்றால் மிகையாகாது..

‘நாம இங்க வந்த நாள்லருந்தே மாப்பிள்ளை கிட்ட சொல்லி இங்கயே ஒரு நிலத்த வாங்கி வீட்ட கட்ட சொல்லும்மா.. இதே வேகத்துல வளர்ந்துக்கிட்டு போனா தூத்துக்குடி உங்க மெட்றாஸ் மாதிரி இன்னும் முப்பது வருஷத்துக்குள்ள ஆயிரும்னு எங்கப்பா சொல்லிக்கிட்டே இருக்காங்க.. நீங்க சரின்னு சொன்னா போறும் நிலத்த வாங்கறது, ப்ளான் போடறது எல்லாம் எங்கப்பாவே பார்த்துப்பாங்க. என்ன சொல்றீங்க?’ என்று திடீரென்று ஒரு நாள் என் மனைவி கேட்டபோது.. ஏன் செய்தாலென்ன என்று எனக்கும் தோன்றியது..

தொடரும்..

9 comments:

sivagnanamji(#16342789) said...

"kalam oru nal marum....
kavalaigal yavum theerum..."
saridhana?

tbr.joseph said...

வாங்க ஜி!

kalam oru nal marum....//

நிச்சயமா. ஆனா அதுவரைக்கும் நாம பொறுமையா இருக்கணும். அதுதான் முக்கியம்.

Krishna said...

இருட்டினில் நீதி மறையட்டுமே....

காலம் ஒரு நாள் மாறும்....

இந்த வரிகள்தான் எனக்குள்ளும் ஓடியது. ஜியும் அதையே எழுதியது ஆச்சரியமாய் இருந்தது...

டிபிஆர் சார், இங்கு ஜப்பானில் இன்றிலிருந்து 5 நாட்களுக்கு எல்லாருக்குமே விடுமுறை. ஆக, அந்த வாரக் கடைசி மனநிலையிலேயே இருந்து, சாருடைய பதிவு இன்னும் இரண்டு நாள் கழித்து வரும் என்றிருந்த போது, உங்கள் பதிவும், அதில் உங்கள் செயலின் வெற்றியையும் படித்தது, மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.

இன்னும் நிறைய எழுதணும் போல இருக்கு... பின்னூட்டம் சின்னதாயிருக்கனுன்னு சொல்லியிருக்கீங்களாமில்ல.. இத்தோட நிறுத்திக்கிறேன்....

துளசி கோபால் said...

அதைத்தாங்க 'எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்'னு செய்யணுமுன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க.
அதுவந்துங்க 'கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே'ன்னு கீதையிலே சொல்லுதே அதே தாங்க.

நாங்களும் ச்சின்னப்ப லேசுப்பட்டவங்க இல்லே. அப்பெல்லாம் ப்ரெஷர் குக்கர் எல்லாம் இல்லாத காலம்.
சோறு அடுப்புலே கூடுதலா வெந்து குழைஞ்சிரும். நான் கிருஷ்ணார்ப்பணம்னு சொல்லிருவேன். கொஞ்சம்
அடுப்பைப் பாருன்னுட்டு சித்தி வேற வேலையா இருக்கறப்ப, சிலோன் ரேடியோலே பாட்டுக்கேக்க
ஹாலுக்குப்போயிருவோம்லெ. அதென்னவோ 'அப்பெல்லாம்' ரேடியோ பக்கத்துலே உக்காந்து பாட்டுக்
கேக்கறதுதான் வழக்கம்.

ஆனா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது சந்தோஷம்தான்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

இன்னும் நிறைய எழுதணும் போல இருக்கு... பின்னூட்டம் சின்னதாயிருக்கனுன்னு சொல்லியிருக்கீங்களாமில்ல//

அப்படியெல்லாம் நான் சொன்னதே இல்லையே.. மனதில் பட்டதை எதுவானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்..

அதுசரி.. ஜப்பான்லகூட அஞ்சி நாள் தொடர்ந்தா மாதிரி லீவு வருமா?

நல்லாருக்கே..

tbr.joseph said...

வாங்க துளசி,

சோறு அடுப்புலே கூடுதலா வெந்து குழைஞ்சிரும். நான் கிருஷ்ணார்ப்பணம்னு சொல்லிருவேன். //

அதாவது சாமிய சமையல்காரனாக்கிட்டு நீங்க ஜாலியா பாட்டு கேட்டுக்கிட்டிருப்பீங்க.. ஹூம்..

சாமி பாவம் இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு..

இருந்தாலும் எனக்குத்தான் எல்லாம் தெரியுமே உன் தயவு தேவையில்லைன்னு சொல்லிட்டு காரியம் முடியாம போயி சாமி, சாமின்னு அடிச்சிக்கறதவிட இது தேவலைங்க..

Krishna said...

இதை கோல்டன் வீக் விடுமுறைன்னு சொல்றாங்க சார்.கம்பெனிங்கல்லாம், வேறு மாதங்களில் வரும் (மாதம் ஒரு விடுமுறைன்னு ஒரு கணக்கு) 2 விடுமுறை நாட்களை இந்த வார திங்கள், செவ்வாய்க்கு மாற்றிவிட்டு, 9 நாள் விடுமுறையா மாத்திடுவாங்க. விமானக் கட்டணம், ஓட்டல் கட்டணமெல்லாம் இரண்டு மடங்காயிடும்!

என்ன ஒன்னு, எங்கதான் போயிருந்தாலும், அடுத்த திங்கள்கிழமை, 99 சதவிகிதமானோர் எட்டரை, ஒன்பது மணிக்கெல்லாம் வந்து தங்கள் வேலைகளை கர்ம சிரத்தையாக செய்ய ஆரம்பித்து விடுவார்கள்...

tbr.joseph said...

விமானக் கட்டணம், ஓட்டல் கட்டணமெல்லாம் இரண்டு மடங்காயிடும்! //

ஆக இதுவும் ஒரு வியாபார தந்திரம்தான். இருந்தாலும் இது தேவைதான்.

99 சதவிகிதமானோர் எட்டரை, ஒன்பது மணிக்கெல்லாம் வந்து தங்கள் வேலைகளை கர்ம சிரத்தையாக செய்ய ஆரம்பித்து விடுவார்கள்...//

அதான பார்த்தேன்.

எங்கள மாதிரி பதவியிலிருக்கறவங்களுக்கும் லீவுன்னு ஒன்னும் கிடையாது. எத்தனை நாள் லீவு எடுத்தாலும் திரும்பி வந்து நம்ம வேலைய நாமளேதான் செஞ்சி முடிக்கணும். நம்ம வேலைய வேற யாருக்கும் டெலிகேட் பண்ணிட்டு போக முடியாத மாதிரி வேலை..

அதனால் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்தாற்போல் நான்கு நாட்கள் கூட லீவு எடுத்ததில்லை.. அப்படியே எடுத்தாலும் ஆஃபீஸ் கோப்புகள் வீட்டுக்கு வந்துவிடும்! அப்புறமென்ன வீட்டிலும் அலுவலக வேலைதான்:-(

sivagnanamji(#16342789) said...

TO KRISHNA,
thodarndhu idugai podrarenu romba
parattaatheenga. apram last week madhiri duck adichuduvar...