02 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 125

என்னுடைய வாடிக்கையாளர் ராஜேந்திரனை விட அவரை உப்புத்தொழிலுக்கு அழைத்துச் சென்று நஷ்டத்தை ஏற்படுத்தியவர்தான் என்னுடைய அன்றைய வங்கி முதல்வருக்கு நெருங்கியவர் என்பதை நான் பிறகு தெரிந்துக்கொண்டேன்.

அவருடைய தூண்டுதலின்பேரில்தான் எனக்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் என்னுடைய முதல்வரும் அவருடைய நேரடி பார்வையில் இயங்கி வந்த என்னுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்கா தலைவரும் ஈடுபட்டிருந்தார்கள் என்பதையும் நான் உணர்ந்தேன்.

ஆனாலும் இதை அமைதியாய் இருந்து ஏற்றுக்கொள்ளலாகாது என்று தீர்மானித்தேன். அதே சமயம் இத்தகைய போக்கால் எனக்கு மேலும் இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதென்பதால் மேற்கொண்டு எதையும் செய்வதற்கு முன்னர் என்னுடைய மனைவியுடன் இதுவரை நடந்ததைக் குறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்தேன்.

என்னுடைய மனைவி பிரசவம் முடிந்து அப்போதுதான் சற்று உடல் தேறியிருந்தார். என்னுடைய மூத்த மகள் என்னுடைய மாமானார் வீட்டிலிருந்தவாறே பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருந்தாள்.

என்னுடைய மனைவியிடம் நடந்த முழுவதையும் கூறவதில் எந்த பயனும் இருக்காது என்பதால் முந்தைய இரண்டு தினங்களில் நடந்தவற்றையும் அதற்கு நான் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறேன் என்பதையும் சுருக்கமாகக் கூறி என்னுடைய செய்கையால் அதிகப் பட்சம் இடைக்கால பணி நீக்கம் மட்டுமே ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் விளக்கினேன்.

‘என்னங்க நீங்க, ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க? நாம தூத்துக்குடியில இல்லாம வேற ஊர்ல இருந்தா பரவாயில்லீங்க. உங்கள சஸ்பெண்ட் பண்ண விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா நாம என்ன சமாதானம் சொன்னாலும் அவங்க ஒத்துக்கமாட்டாங்க. மாப்பிள்ளை எதையோ செய்யக்கூடாதத செஞ்சிட்டார் போலருக்கு. அதனால வேல போயிருச்சிங்கறா மாதிரி பேசுவாங்கங்க.. அதனாலதான் சொல்றேன்.. மேற்கொண்டு எதையும் செய்யறதுக்கு முன்னால நிதானமா யோசிங்க. ஒங்களுக்கு தெரிஞ்ச ரெண்டு பேர் ஒங்க எச்.ஓ.லதான் டி.ஜி.எம் லெவல்ல இருக்காங்க இல்ல? அவங்கக்கிட்ட யோசனை கேட்டு பாருங்களேன்.’

அதானே.. எனக்கு ஏன் இது தோன்றாமல் போனது என்று யோசித்தேன். நான் என் மனைவியிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நினைத்தது எத்தனை சரியான முடிவு என்றும் நினைத்தேன். நாம் குழப்பத்தில் இருக்கும்போது நம்முடைய நலனில் அக்கறையுள்ளவர்களிடம் குறிப்பாக நம்முடைய நண்பர்கள், குடும்ப அங்கத்தினர்களிடம் விவாதிப்பது எவ்வளவு நல்லது என்று பாருங்கள்!

அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்றதும் அவர்களை தொலைப்பேசியில் அழைத்து இதைக்குறித்து அறிவுரை கேட்பது என்று தீர்மானித்து உடனே அமர்ந்து அவர்களிடம் என்ன கூறவேண்டும் என்பதை குறித்துக்கொண்டு மனதில் இருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது என்ற நிம்மதியில் படுக்கைக்குச் சென்றேன். அமைதியாய் உறங்கிப்போனேன் என்பதை கூறவும் வேண்டுமா என்ன?

****

ஆனால் நான் எடுத்த முடிவை செயல்படுத்த முடியாமல் நடந்தன அடுத்தநாள் நிகழ்ச்சிகள்.

அடுத்த நாள் காலையில் நான் வங்கிக்கு சென்றதும் நான் அலுவலகத்தில் கண்ட முதல் ஆள் ராஜேந்திரன்!

காசாளர் கவுண்டருக்கு முன் நின்று அவருடன் உரையாடிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் எனக்கு அடிவயிற்றில் இருந்து கோபம் பொங்கி வந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு என் அறைக்குள் சென்று அமர்ந்து இண்டர்காம் வழியாக என்னுடைய உதவி மேலாளரை என்னுடைய அறைக்கு அழைத்தேன்.

அவர் பரபரப்புடன் எழுந்து வந்தார். ‘சார் நீங்க வர்றதுக்குத்தான் காத்திருந்தேன். ராஜேந்திரன் என்னைக்கும் இல்லாம ---------- லட்சம் கேஷா அவரோட ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட்ல கட்ட வந்த்தருக்கார் சார். எனக்கென்னவோ இதுக்குப் பின்னால ஏதோ சூழ்ச்சி இருக்குன்னு தோனுது..’

‘ஏன் அப்படி சொல்றீங்க? ஒரு வேளை முந்தா நாள் நாம போய் பார்த்தப்போ சொன்னா மாதிரி கணக்க சரி பண்ண வந்திருக்காரோ என்னவோ?’ என்றேன்.

அவர் நான் கூறியதை ஒத்துக்கொள்ளாதவர்போல் பார்த்தார். ‘இல்ல சார்.. இவ்வளவுநாள் கணக்குல எந்தவித வரவு செலவும் செய்யாம இருந்தவரு இப்ப எதுக்கு திடீர்னு.. அப்படியே நீங்க சொல்றா மாதிரி இருந்தா அவர் நாம ட்ரையருக்கு குடுத்த லோன்லயும் ஏதாச்சும் கட்டியிருக்கணும் இல்லே..’

அவர் கூறியதில் இருந்த நியாயத்தை உணர்ந்த நான், ‘நீங்க அவர்கிட்ட இத சொன்னீங்களா?’ என்றேன்.

‘சொன்னேன் சார். ஆனா அத அப்புறம் பார்த்துக்கலாம் அப்படீன்னு அலட்சியமா சொல்லிட்டார் சார்.’

நான் என் அறையிலிருந்தே காசாளர் அறையின் முன் நின்றவரைப் பார்த்தேன். நான் பார்த்த அதே நேரத்தில் என் அறையை நோக்கித் திரும்பிய அவர் கேலிப் புன்னகையுடன் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டதைப் பார்த்த நான் சட்டென்று தோன்றிய முடிவுடன் (impulsively) என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்தேன்.

‘நீங்க ஒன்னு பண்ணுங்க. அவர் அடைச்சிட்டு போறவரைக்கும் அவர்கிட்ட எந்த பேச்சும் வச்சிக்காதீங்க. அவர் போனதும் முதல் வேலையா அவர் ஓவர்டிராஃப்ட் கணக்குல அடைச்ச முழுசையும் அவரோட லோன்ல போன மாசம் வரைக்கும் வர வேண்டிய தொகைக்கு மாத்திருங்க.’ என்றேன்.

அவர் திகைத்துப்போய் என்னையே பார்த்தார். ‘சார் அது நல்லாருக்காது. அவர் இந்த பணத்த எங்கருந்து புரட்டி எதுக்காக கட்டுனாரோ.. ஒருவேளை வெளியில யாருக்காச்சும் செக் குடுத்திருந்தா வம்பா போயிரும் சார். எதுக்கும் அவர்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு செய்யலாமே..’

அவர் கூறியதில் இருந்த நியாயம் எனக்கு விளங்காமல் இல்லை. இருப்பினும் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் உறுதியுடன், ‘நான் நல்லா யோசிச்சித்தான் சொல்றேன். உங்களுக்கு நான் சொல்றா மாதிரி செய்யறதுக்கு தைரியம் இல்லேன்னா வவுச்சர பிரிப்பேர் பண்ணி எனக்கு அனுப்புங்க. நான் இனிஷியல் பண்ணித் தரேன். அத்தோட நா பண்ண விஷயத்த எச்.ஓ.வுக்கு இப்பவே தந்தி மூலமா ரிப்போர்ட்டும் பண்ணப்போறேன். நீங்க போய் நான் சொன்னபடி செய்ங்க.’ என்றேன்.

அவர் சென்றதும் என்னுடைய தலைமையலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய தந்தியை தயாரித்தேன்.

அதன் சாராம்சம்:

‘இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் சென்று கேட்டுக்கொண்டதற்கினங்க இன்று காலை --------கார் நிறுவனத்தின் முக்கிய பாகஸ்தரான ராஜேந்திரன் அவர்கள் வங்கிக்கு வந்திருந்து தன்னுடைய கடன் கணக்குகளில் ஒன்றில் ------------ மாதங்களாக நிலுவையில் இருந்த தொகையில் பெரும்பகுதியை அடைத்துவிட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுடைய உத்தரவுக்கிணங்கி அவருடயை வணிகக் கணக்கிலும் வரவு செலவு வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’

நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு என்னுடைய பணியாட்களுள் ஒருவரை அழைத்து அதை உதவி மேலாளரிடம் காண்பித்துவிட்டு சென்று தந்தியை உடனே அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன்.

ஆனால் என்னுடைய தந்தியை படித்துவிட்டு உடனே என்னுடைய அறைக்கு ஓடி வந்தார் என்னுடய உதவி மேலாளர்.

‘சார் எதுக்கு சார் வீனா பிரச்சினைய பெரிசாக்குறீங்க? ராஜேந்திரன் ஏற்கனவே நம்ம சேர்மன்கிட்ட ஒங்களப்பத்தி நடக்காத ஒரு விஷயத்த நடந்ததா சொல்லி ஒங்கள சஸ்பெண்ட் பண்ற வரைக்கும் கொண்டு விட்டுட்டார். இப்ப இது தேவையா? கொஞ்சம் நிதானமா யோசிச்சி செய்யலாமே சார்.’ என்றார்.

நான் என்னுடைய முடிவில் உறுதியாய் இருந்ததால் அவர் வேறு வழியில்லாமல் தந்தி படிவத்தை பூர்த்தி செய்து பணியாளரை தந்தியலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு அவருடைய இருக்கைக்குச் சென்றமர்ந்தார்.

நான் வருவது வரட்டும் என்று அத்துடன் அப்பிரச்சினையை மனதில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடைய அறைக்கு வெளியே தங்க நகைகளின் மேல் கடன் பெற காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்தேன்.

சென்னை தஞ்சையிலிருந்த சமயத்தை விட தூத்துக்குடியில் இத்தகைய கடன் வழங்க நிறைய வாய்ப்பிருந்தது..

என்னுடைய முந்தைய மேலாளர் கேலியுடன் குறிப்பிட்டிருந்தாலும் அவர் கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்தது. தூத்துக்குடியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களுடைய தொழிலில் இருந்த கிடைத்த வருமானத்தை உண்ணவும் உடுத்தவுமே செலவழிப்பதில் குறியாயிருந்தனர் என்பதை அங்கு சென்ற சில மாதங்களிலேயே தெரிந்துக்கொண்டேன்.

மீன்பிடித் தொழில் என்பது வருடம் முழுவதும் நடந்த தொழில்தான் என்றாலும் காற்றுக்காலம் எனப்படும் ஆடி மாதம் முதல் ஐப்பசி வரையிலான காலம்தான் மீன்பிடித்தொழிலுக்கு ஏற்ற காலம் என்பார்கள். ஜூலை மாதம் பதினைந்து தேதியில் துவங்கி அக்டோபர் மாதம் வரையிலான சுமார் மூன்று மாதக்காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் உபரி வருமானத்தை அவர்கள் கருத்துடன் சேமித்து வைத்தாலே அடுத்த ஒரு வருட காலத்திற்கு எந்த கடன் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும்.

ஆனால் கஸ்ட் நான்காம் தேதி வரும் ஊர்த் திருவிழாவில் (இதைக்குறித்து தனியாக ஒரு பதிவு இடவேண்டும் அந்த அளவுக்கு சிறப்பானது, ஜாதி, மத பேதத்தைக் கடந்து ஊரிலிருந்த எல்லோராலும் கொண்டாடப்படுவது) தொடங்கி கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரையிலான பண்டிகைக்காலத்தில் தாம், தூம் என்று செலவழித்துவிட்டு அடுத்த சில மாதங்களிலேயே நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிகளை நோக்கி படையெடுப்பார்கள்.

அவ்வருடத்திய காற்றுக்காலம் துவங்க இன்னும் இரு வார காலமே இருந்ததால் வலை பராமரிப்பு, படகு பராமரிப்பு போன்ற தேவைகளுக்காக கடன் பெறும் வாடிக்கையாளர்களின் கூட்டம் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துக்கொண்டே சென்றதைப் பார்த்தேன்.

அவர்களை ஒவ்வொருவராக என் அறைக்கு அழைத்து அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் கடன் வழங்குவதில் முனைப்பாயிருந்த நான் அன்றைய வர்த்தக நேரத்தையும் கடந்து பிற்பகல் சுமார் மூன்று மணி வரை பகல் உணவுக்கு செல்வதையே மறந்துப்போனேன்.

ஒரு வழியாக கடைசி வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு எழுந்து என்னுடைய குடியிருப்பிற்குச் சென்று உணவருந்திவிட்டு வந்தேன்.

நான் என் அறைக்குள் நுழையவும் என்னுடைய அறையிலிருந்த என்னுடைய பிரத்தியேக தொலைப்பேசி அலறவும் சரியாயிருந்தது..

எடுத்து ‘ஹலோ’ என்பதற்குள் எதிர் முனையிலிருந்து சரமாரியாக.. என்ன சொல்லலாம்..? ஆங்கிலத்தில் சொல்லலாம் என்றால் ‘spitting fire..’

தொடரும்..

12 comments:

Krishna said...

சரியானவனாய் இருப்பது மட்டுமல்ல, சாதுர்யமானவனுமாயும் இருக்கணும்னு கிருஷ்ணன் சொன்னதுக்கு செய்முறை விளக்கமோன்னு நினைக்க வைக்குது சார் உங்கள் பதிவுகள்/அனுபவங்கள்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

விவேகமுள்ளவர்களாய் இருங்கள் என்று யேசுவும் கூறியிருக்கிறார்.

ஆனால் அதன் விளைவு சில நேரங்களில் கசப்பானதாக இருந்துவிட வாய்ப்புண்டு..

விவேகத்துடன் சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பதை என்னுடைய அனுபவத்தில் படித்துணர்ந்திருக்கிறேன்.

மா சிவகுமார் said...

நான் சில பரபரப்பான கதைகளைப் படிக்கும்போது, கடைசிப் பக்கங்களை முதலில் படித்து விட்டு,
என்னதான் நடந்தாலும், நல்லது வெல்லப் போகிறது என்ற திருப்தியோடு முந்தைய சம்பவங்களைப் படிப்பேன்.
இங்கும் அப்படி ஏதாவது கடைசிப் பக்கங்களில் என்ன முடிவு வந்தது என்று காண்பிக்கும் உத்தேசம்
உள்ளதா ஜோசப் சார் ? :-)

tbr.joseph said...

வாங்க சிவகுமார,

கடைசிப் பக்கங்களை முதலில் படித்து விட்டு,
//

நீங்க மட்டுமில்லே நம்மில் பலரும் அப்படித்தான் நான் உட்பட..

இப்போது நான் இருக்கும் நிலையே அந்த சங்கடங்களையெல்லாம் தாண்டி வெற்றியுடன் வந்துவிட்டேன் என்பதை காட்டவில்லையா?

மா சிவகுமார் said...

அப்பாடா!

ஒரு கதையில் உலகையே அழிக்கப் போகும் சதியை முறியடிக்கப் போராடும் ஹீரோக்களின் போராட்டங்கள்
மும்முரமாக இருக்கும்போது முற்றும் போட்டிருப்பார் ராஜேந்திரகுமார். பின்குறிப்பில், அதான் இப்போ இந்தக்
கதையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் (வாசகர்) இருப்பதில் சதி முறியடிக்கப்பட்டு விட்டது என்று தெரிகிறதே என்று
எழுதியிருப்பார்.

நன்றி உங்கள் அனுபவங்களையும் அதன் படிப்பினைகளையும் சுவையாகப் பகிர்ந்து கொள்வதற்கு.

tbr.joseph said...

நீங்கள் (வாசகர்) இருப்பதில் சதி முறியடிக்கப்பட்டு விட்டது என்று தெரிகிறதே என்று
எழுதியிருப்பார்.//

உண்மைதான்.

பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை நான். ஆனால் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது ஏதோ கொஞ்சமாவது சாதித்திருக்கிறோம் என்ற மன நிறைவு கிடைக்கும் அளவுக்கு சாதித்திருக்கிறேன்.

G.Ragavan said...

ம்ம்ம்ம்...முள்ளை முள்ளால எடுக்குறது....அதோட பலன் எப்படீன்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிரும். காத்திருக்கிறேன்.

அப்புறம் அந்தத் திருவிழா பதிவும் போடுங்க...காத்திருக்கிறேன். எனக்குச் சவ்வு மிட்டாய் நெனப்பு வந்துருச்சு...........

துளசி கோபால் said...

மனுஷனுக்கு வீராப்புன்றது எவ்வளோ இருக்கு பாருங்க.
நீயா நான்னு போட்டியாப் போயிருச்சு.

தங்கம் வாங்கறதுன்றது ஒரு சேவிங்ஸ்தாங்க. இல்லேன்னா எதைக் காமிச்சுக் கடன் வாங்க முடியும்?

பி.கு: அக்ஷ்ய திருதியை நகையைச் சொல்லவில்லை:-))

tbr.joseph said...

வாங்க துளசி,

தங்கம் வாங்கறதுன்றது ஒரு சேவிங்ஸ்தாங்க. //

அதென்னவோ உண்மைதான். ஆனா எல்லாரும் அதை ஒரு இன்வெஸ்ட்மெண்டா பாக்க ஆரம்பிச்சதுனாலதானோ என்னவோ இப்படி மிரண்டுபோய் உச்சியில ஏறி நிக்குது..

என்னெ மாதிரி பொண்ண பெத்தவங்க கதிகலங்கி போயி நிக்கறோம்..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

எனக்குச் சவ்வு மிட்டாய் நெனப்பு வந்துருச்சு...........

???????????:-(

sivagnanamji(#16342789) said...

thadukkile paincha kidukkile poora vendiyadhudhan

tbr.joseph said...

வாங்க ஜி!

நீங்க சொல்றது சரிதான். ஆனா அதெல்லாம் சின்ன வயசில ரத்தம் சூடா இருந்தப்போ செஞ்ச விஷயங்கள்..

இப்ப அந்த அளவுக்கு தைரியம் இருக்குமான்னு தெரியலை.