31 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 144

நான் சந்திக்க விரும்பியவரின் வீடு என்னுடைய வீட்டுக்கு செல்லும் பாதையிலேயே இருந்தது..

செல்லும் வழியெல்லாம் இதைப்பற்றியே   என்னுடைய மனைவி பேசிக்கொண்டிருந்தார்.

நானும் அவர் கூறியவற்றையெல்லாம் மவுனமாக கேட்டுக்கொண்டே வாகனத்தை செலுத்துவதில் கவனமாக இருந்தேன்.

தூத்துக்குடி சாலைகள் மேடு பள்ளங்களுக்கு பேர்போனவை. அத்துடன் கடற்கரை மணல் வேறு நகரத்தின் சாலைகளின் இரு மருங்கிலும் குவிந்து காற்றில் போவோர் வருவோரின் கண்களைக் குறிவைத்து தாக்குவதில் படு சமர்த்து.

என்னுடைய வாகனத்தின் முன்பகுதியில் என் கால்களுக்கிடையில் நின்றுக்கொண்டிருந்த மகள் வேறு கண்களில் விழுந்த மணலின் உறுத்தலால் அழத்துவங்க அவளையும் சமாதானப்படுத்திக்கொண்டே ஆளை விழுங்கும் குழிகளில் வாகனம் விழுந்துவிடாமல் ஒரு கைதேர்ந்த வித்தகனைப்போல வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.

அவருடைய வீட்டை நெருங்கியபோது வீட்டு வாசலில் ஒரு அம்பாசிடர் கார் நின்றிருக்கவே என்னுடைய வாகனத்தை அதன் பின்னால் நிறுத்திவிட்டு தூக்கக் கலக்கத்திலிருந்த என் மூத்த மகளை உசுப்பி எழுப்பி கையில் பிடித்தவாறே வாகனத்திலிருந்து இறங்கி நானும் என் மனைவியும் வீட்டிற்குள் நுழைந்தோம்.

நாங்கள் வாசற்படியில் கால் வைக்கவும் வீட்டினுள் இருந்து நான் காண வந்தவர் வேறொரு பெண்ணுடன் வாசலை நோக்கி வரவும் சரியாயிருந்தது. அந்த பெண் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்கவராக தோற்றமளித்தார். அவருடய தோற்றமே நல்ல வசதிபடைத்தவர் என்பதைக் காட்டியது.

அவர்கள் இருவருமே எங்களைப் பார்த்ததும் நின்றனர். என்னுடைய வாடிக்கையாளர் முகத்தில் வியப்பின் ரேகை தெரிந்தாலும் புன்னகையுடன், ‘வாங்க சார்.. வாம்மா..’ என்று இருவரையும் அழைத்ததுடன்.. ‘உங்க ரெண்டு பேருக்குமே ஆயுசு நூறுதான்.. இவ்வளவு நேரம் ஒங்கள பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்..’ என்றவாறு அவருடனிருந்தவரிடம் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

உடனிருந்தவரின் முகத்தில் தோன்றியது அதிர்ச்சியா அல்லது வியப்பா என்று நான் ராய்ந்துக்கொண்டிருக்கும்போதே அவர் என்னுடைய மனைவியைப் பார்த்து, ‘ஏம்மா நீ -------- அண்ணன் மக இல்லே..’ என்றார்.

என் மனைவி ஆமாம் என்று தலையை அசைக்க, ‘அப்போ இவர் ஒங்க வீட்டு மாப்பிள்ளையா?’ என்றார் வியப்புடன் என்னை சுட்டிக்காட்டி.

நான் அவருடைய கேள்வியின் நோக்கம் விளங்காமல் என்னுடைய வாடிக்கையாளரைப் பார்க்க.. அவருடன் இருந்தவர், ‘பாத்தியாடி.. இந்த கூத்த.. இந்த மனுஷன் அவர் அக்கா பேச்ச கேட்டு குடும்பத்துக்குள்ளவே குளப்பம் பண்றத.. எங்க போய் சொல்றது? சரி நா வாரேன்.. வரேம்மா.. நீ என்னத்துக்கு இங்கன வந்தியோ.. அந்த நெல விஷயமாருந்தா ஆற அமர பேசி ஒரு முடிவு பண்ணுங்க..’ என்று சலிப்புடன் கூறியவாறே.. ‘நா வாரேண்டியம்மா.. நீ வேற எதையாவது சொல்லி குட்டைய குளப்பிறாத..’ என்னுடைய வாடிக்கையாளரிடம் கூறிவிட்டு வாசலை நோக்கி செல்ல, ‘ஒரு நிமிஷம் சார்.. வழியனுப்பிட்டு வந்திடறேன்..’ என்றவாறு அவர் பிறகு சென்ற என் வாடிக்கையாளரையே பார்த்துக்கொண்டு நின்றோம் நானும் என் மனைவியும்..

அடுத்த சிலநிமிடங்களில் அவர் மீண்டும் உள்ளே வர அவரைத் தொடர்ந்து நாங்களிருவரும் வீட்டுக்குள் நுழைந்து ஹாலிலிருந்த பணக்காரத்தனமான சோஃபாவில் அமர்ந்தோம். என்னுடைய மூத்த மகள் தூக்கக்கலக்கத்தில் சாமியாடிக்கொண்டிருக்கவே அவளை அப்படியே நான் அமர்ந்திருந்த சோபாவில் கிடத்தினேன்.

எங்களை அமர்த்திவிட்டு உள்ளே சென்ற என்னுடைய வாடிக்கையாளர் சில நிமிடங்களில் புன்முறுவலுடன் எங்கள் முன் வந்தமர்ந்தார்.

நான் எப்படி பேச்சை துவக்குவதென தெரியாமல் சில நொடிகள் தாமதிக்க அவர், ‘நீங்க ரெண்டு பேரும் முதல் தடவையா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க.. ஆனா வந்த விஷயம்தான் ஏடாகூடமா இருக்கும்போல.. எல்லாம் அந்த நிலம் விஷயமாத்தான?’ என்றார்.

நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.. என் மனைவி, ‘இப்ப வந்து போனது...’ என்று இழுத்தார்.

அவர் வியப்புடன், ‘ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னுல்லே நெனச்சேன்.. எங்க வீட்டுக்காரவுகளுக்கு சொந்தம். எனக்கு அக்கா மொற வேணும்.. ------------------ தியேட்டர் ஓனர் இவங்க மாப்பிள்ள தான்.. ஒங்க அப்பாவுக்கும் தூரத்து சொந்தமாச்சே.. அதான் அக்கா போவும்போது குடும்பத்துக்குள்ளவே குளப்பம்னு சொன்னாங்க..’ என்றதும் நான் வியப்புடன் என் மனைவியைப் பார்த்தேன், 'ஏன் நீ இத எங்கிட்ட சொல்லலே' என்பதுபோளல். அவரோ 'எனக்கே இப்பத்தான் தெரியுது' என்பதுபோல் என்னை திருப்பி பார்த்தார்.

எங்கள் இருவருடைய பார்வையின் அர்த்தம் அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். சிரித்தார்.

நான் சற்று சீரியசாக, ‘நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க..’ என்று ஆரம்பித்தேன்.

அவர் சிரித்தவாறு, ‘அதுக்காவத்தான சார் வந்திருக்கீங்க. சும்மா சொல்லுங்க.. நானும் என் மனசுலருக்கறத வெளிப்படையா பேசலாம்னுதான் இருக்கேன்.. நீங்க சொல்லுங்க..’ என்றார்.

நான் என் மனைவியைப் பார்த்தேன்.. அவரும் சொல்லுங்க என்பதுபோல் சைகை செய்ய நான் முந்தைய இரு நாட்களில் நடந்து விஷயங்களை சுருக்கமாகக் கூறினேன். இறுதியில், ‘நீங்க என்னெ இந்த ரெண்டு விஷயமா பேங்க்ல சந்திச்சிருக்கீங்க. நான் என்னோட ஆஃபீஸ் விஷயத்துல கொஞ்சம் கண்டிப்பானவன்னு நீங்களே ரெண்டு மூனு தரம் சொல்லியிருக்கீங்க. அந்த அளவு மெட்டிகுலசா பாக்கறவன் நான்.. அப்படியிருக்கறப்ப என்னோட சொந்த விஷயத்துல.. அதுவும் இவ அண்ணனோட விஷயத்துல கவனக்குறைவா செஞ்சிருப்பேன்னு நினைக்கிறீங்களா?’

அவர் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார். ‘இருக்காதுன்னு எனக்கு தெரியும் சார். ஆனா வில்லங்கம் ஒங்க பத்திரத்துல இல்ல சார்..  நான் விவரமா சொல்றேன்.. ஆனா இந்த விஷயத்த நா சொன்னதா எந்த ஒரு நேரத்துலயும் நீங்க சொல்லிறக்கூடாது..’ என்றவர் என் மனைவியைப் பார்த்தார். ‘ஒங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்.. இல்லன்னா குடும்பத்துக்குள்ள பிரச்சினையாயிரும்..’ என்றார்.

நாங்கள் இருவருமே இல்லை என்பதுபோல் தலையை அசைக்க அவர் தொடர்ந்தார்.

‘இதெல்லாம் ஒங்க மச்சான் வீட்டுக்கு எதுத்தாப்பலருக்கற பையனோட அப்பா செஞ்ச வேலை.. அவர் மகனுக்குத்தான் தியேட்டர் ஓனரோட அக்கா மகள குடுத்துருக்கு. நீங்க ரெண்டு நாளைக்கு முன்னால ராத்திரி நிலத்த அளவெடுத்துக்க போயிருந்தீங்களாக்கும்?’

நான் ஆமாம் என்று தலையை அசைத்தேன்.

‘அந்த நேரம் பார்த்து அந்த மனுஷன் மகன பாக்கறதுக்கு வந்திருக்கார் போலருக்கு. அவர் ஏற்கனவே ஒங்கள பேங்க்ல பாத்துருக்காராம்.. ஒங்கள பாத்ததுமே.. இவர் இங்க என்ன பண்றார்னு மகன்கிட்ட கேட்டிருக்கார். அவர் நீங்க ஒங்க மச்சானுக்காக நிலம் வாங்குன விஷயம் அந்த புரோக்கர் வழியா கேள்விப்பட்டிருக்கார் போல..  நீங்க அஸ்திவாரம் தோண்டறதுக்கு அளக்கறீங்கன்னு சொல்லியிருக்கார். அவர் அப்படியான்னு கேட்டுட்டு நீங்க வாங்குன புரோக்கர் வீட்டுக்கு போயி எவ்வளவுக்குய்யா வித்தேன்னு கேட்டிருக்கார். அவர் விலைய சொன்னதும் சரின்னுட்டு போய்ட்டாராம்.. அவரோட சம்பந்தியம்மாதான் எங்க அக்காவோட மைனி (திரையரங்கு உரிமையாளரின் மூத்த சகோதரி) போன மனுஷன் சும்மாருக்காம நேரா சம்பந்தியம்மா வீட்டுக்கு போயி ஒங்களுக்கு பிரையண்ட் நகர்ல ஒரு எடம் இருக்குன்னு சொன்னீங்களே அது இப்ப நல்ல விலைக்கு போவுது போலருக்கு.. நீங்க எங்க அங்கன போயி வீடு கட்டப்போறீங்க.. பத்திரத்த எடுங்க.. நான் வித்துக்குடுக்கேன்னு சொல்லியிருக்கார். அவுக.. அது எங்க கிடக்கோ எம்பையன் வந்ததும் பாக்கேன்னு.. சொல்லியிருக்காக.'

நானும் என் மனைவியும் கதை கேட்கும் குழந்தைகள்போல் அமர்ந்திருந்தாலும் இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நான் குழம்பினேன்.

'அவங்க மகன் திருச்செந்தூர் ஸ்டேட் பாங்க்ல ஆஃபீசரா இருக்கார். ஒங்க மச்சான் நிலத்துக்கு எதிர்த்தாப்பலருக்கற பொண்ணோட அண்ணன். அவர் ராத்திரி வந்ததும் அவங்கம்மா சம்பந்தி வந்து போன விஷயத்த சொல்ல.. பையனும் பீரோவ கொடஞ்சி பத்திரத்த எடுத்து குடுத்துட்டு இப்ப ஒன்னும் விக்க வேணாம்.. நாமளே சின்னதா ஒரு வீட்ட கட்டி வாடகைக்கு விடலாம்மான்னு சொல்லியிருக்கார். அவங்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ குளிச்சிட்டு இந்த பத்திரத்த எடுத்துக்கிட்டு போயி சம்பந்தி வீட்ல குடுத்துட்டு வாடான்னுருக்காங்க. அவரும் அம்மா சொல்ல தட்ட முடியாம அத எடுத்துக்கிட்டு போய் குடுத்துட்டு நீங்க அம்மா சொன்னா மாதிரியே செஞ்சிருங்கன்னு சொல்லியிருக்கார்.

அந்த மனுஷன் பத்திரத்த பார்த்துட்டு என்ன தம்பி இது வெறும் காப்பியில்லே ஒரிஜினல் பத்திரம் எங்கன்னு கேட்டிருக்கார். அப்பத்தான் மகனே அத ஒழுங்கா பாத்திருக்கார். இதுதான் அங்கிள் இருந்தது.. மறுபடியும் வேனா பாக்கறேன்னு சொல்லிட்டு கிளம்பி போய்ட்டாராம். ஆனா அதுவரைக்கும் காத்திக்கிட்டிருக்க பொறுமையில்லாம அந்த மனுஷன் அந்த பத்திரத்த போட்டு குடைஞ்சி அந்த நிலமும் நீங்க வாங்குனதா சொன்ன நிலமும் ஒன்னுதாங்கறத கண்டுபிடிச்சிட்டு அத தூக்கிக்கிட்டு ராத்திரியே சம்பந்தி வீட்டுக்கு ஓடியிருக்கார். அவரும் அந்த பையனுமா சேர்ந்து ராத்திர பதினோரு மணி வரைக்கும் ஒரிஜினல் பத்திரத்த தேடியிருக்காங்க. இருந்தாதான கிடைக்கும்..? ஆனாலும் ஆசை யார விட்டது? ஒடனே ஏதாவது செய்யணும்னு எங்க -----------மச்சான் (திரையரங்கு ஓனரின் பெயர்) வீட்டுக்கு ஓடியிருக்காங்க.. அவர் என்ன ஏதுன்னு முழுசா கேக்காம ராத்திரியோட ராத்திரியா அவரோட ஆளுங்கள வச்சி தட்டிய அடிச்சிருக்கார்.. அதுக்கப்புறம் நடந்ததுதான் ஒங்களுக்கே தெரியுமே..’

மூச்சுவிடாமல் பேசி முடித்த என்னுடைய வாடிக்கையாளர் சற்று நிறுத்திவிட்டு மணியைப் பார்த்தார்.. இரவு பத்துமணியைக் கடந்திருந்தது..

அவர் கூறியதிலிருந்து எனக்கு ஒரு விவரம் மட்டும் புரிந்தது. இந்த நிலம் திரையரங்கு உரிமையாளருடைய சகோதரிக்கு எப்போதோ சொந்தமாயிருந்திருக்க வேண்டும். அதை பிறகு விற்றுவிட்டு அதை அடியோடு மறந்துபோயிருக்க வேண்டும்.. அதனால்தான் அவர்களிடம் ஒரிஜினல் பத்திரம் இருக்கவில்லை.. ஆனால் அதை ஊர்ஜிதப்படுத்த வேண்டுமென்றால் உடனே என் மாமியார் வீட்டிலிருந்த பத்திரக்கட்டில் இருந்த எல்லா பத்திரங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்..

‘அவங்க பேர் என்னன்னு சொல்லுங்க.. நா பத்திரத்த பார்த்துட்டு சொல்றேன்.’ என்றேன்.

அவர் பெயரைச் சொல்ல மறந்துவிடாமலிருக்க நான் என்னுடைய தொலைப்பேசி புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு எழுந்து நின்றோம். ‘நான் காலைல பத்திரத்த பார்த்துட்டு சொல்றேன்.. அந்த நிலத்த அவங்க ஒருவேளை வித்துட்டு மறந்துபோயிருக்கலாம் இல்லையா?’

அவர் சிரித்தார். ‘பிறகென்ன சார்? அதான் எங்க அக்காவே சொல்றாங்களே.. அவங்க பசங்க ரெண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கற நேரத்துல வித்திருப்பாங்க.. அவங்க வீட்ல இறந்துபோனப்போ பசங்க ரெண்டு பேரும் சிறிசுங்க.. ஒத்தையா நின்னு வளர்த்திருக்காங்க.. அப்ப சல்லிசா வித்திருப்பாங்க.. இப்ப நல்ல விலைக்கு போவுதுன்னு தெரிஞ்சதும்.. மனசு கிடந்து அடிச்சிருக்கும்... ஆசை யார விட்டுது..’ என்றவர் மீண்டும்.. ‘சார்.. தயவுசெஞ்சி நான் சொன்னேன்னு யாருக்கும் தெரிஞ்சிரப்போவுது.. ஒங்க மாமனார் வீட்டாளுங்களுக்குக் கூட தெரியாமப் பாத்துக்குங்க..’ என்றார் உண்மையான அச்சத்துடன்.. ‘எங்க அக்காவுக்கு நல்ல மனசுன்னாலும் எங்க மச்சான் ஒரு மாதிரிதான்.. அதனால சொல்றேன்.. நான் சொன்னேன்னு தெரிஞ்சா அனாவசியமா பிரசினையாயிரும்..’

எனக்கு அவருடைய தர்மசங்கடமான நிலைமை புரிந்தது.. அத்துடன் என்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுள் ஒருவர் வேறு.. ‘பயப்படாதீங்க.. நானோ என் மனைவியோ நிச்சயமா வெளிய சொல்ல மாட்டோம். நீங்க நம்பலாம்..’ என்று உறுதியளித்துவிட்டு புறப்பட்டோம்..

வரும் வழியில்.. ‘என்ன அக்கிரம் பாருங்க.. இப்ப என்ன பண்ண போறீங்க?’ என்றார் என் மனைவி..

‘அந்த பத்திரத்த பார்த்துட்டுத்தான் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிக்கணும்.. ஆனா அதுக்கு முன்னால.. அந்த தியேட்டர் ஓனர்தான் ஒங்கப்பாவுக்கு சொந்தமாச்சே. ஏன் அவர் போய் கேக்காம இருக்காரு?’ என்றேன்..

‘ஏதாச்சும் பிரச்சினையாருக்கும்.. அத வேற தெரிஞ்சிக்கிட்டு நீங்க டென்ஷனாகனுமாக்கும்.. நமக்கு இருக்கற பிரச்சினை போதாம இது வேறயா.. இந்த நில விஷயம் மட்டும் முடிஞ்சா போறும்டான்னுருக்கு.. வீட்டுக்கு போனதும் ஃபோன் பண்ணி பத்திரக்கட்ட தம்பிக்கிட்ட குடுத்துவிடச் சொல்றேன். இப்பவே சைக்கிள எடுத்துக்கிட்டு வாடான்னா வந்துருவான்.. அதப்பாத்தாத்தான் எனக்கு இன்னைக்கி தூக்கம் வரும்போலருக்கு..’
என் மனைவிக்கென்ன எனக்கே அப்படித்தான் தோன்றியது..

அடுத்த அரைமணியில் பத்திரம் வந்தது...

அதை பிரித்து சம்பந்தப்பட்ட பத்திரத்தை எடுத்து படித்ததும் சிரிப்புத்தான் வந்தது..

என்னத்த சொல்ல..?

தொடரும்..30 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 143

அன்றும் என்னுடைய வட்டார மேலாளர் என்னுடனே இருந்ததால் அன்றும் அவர் புறப்பட்டுச் செல்லும்வரை வேறு வழியில்லாமல் என்னுடைய பெர்சனல் விஷயங்களைப் பற்றி சிந்திக்கவும் நேரமில்லாமற்போனது.

அத்துடன் தன்னுடைய முந்தைய தின நடத்தைக்கு உண்மையிலேயே அவர் வருத்தப்பட்டிருப்பார் போலிருக்கிறது. ‘டிபிஆர். உங்களுடைய அறிக்கையில கொஞ்சம் ஸ்ட்ராங்கான லாங்வேஜ் யூஸ் பண்ணியிருந்தாலும் கொஞ்சமும் மிகைப்படுத்தாம உள்ளத மட்டும் எழுதியிருந்ததுனால அத அப்படியே அக்செப்ட் பண்ணிக்கணும்னு ஜி.எம்முக்கு எழுதலாம்னு இருக்கேன்.’ என்றார்.

நான் என்னுடைய நேற்றைய பதிவில் குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சி என்பதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்கின்ற அளவுக்கு அவர் எனக்கு அறிவுரைகளுக்கு மேல் அறிவுரையாக அள்ளி வீசிவிட்டுத்தான் அன்று பிற்பகல் என்னிடமிருந்து விடைபெற்று சென்றார். என்மேல் அவர் வைத்திருந்த அக்கறைதான் அவரை அப்படி பேசவைத்தது என்று நினைத்து நானும் அவர் கூறியதை மறுத்துப் பேசாமல் கேட்டுக்கொண்டேன்.

என்னுடைய பொறுப்பேற்கும் அறிக்கையில் குறிப்பிட்ட குளறுபடிகளை முதன்முதலில் கண்ட நேரத்தில் என்னுள் ஏற்பட்ட கோபம் என்னுடைய அறிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது என்பதை அவர் எடுத்துக்காட்டியபோதுதான் எனக்கு விளங்கியது. அலுவலக பொறுப்பை நிறைவேற்றும் வேளையில், முக்கியமாக எழுத்துவடிவத்தில்  ஒரு அறிக்கையை மேலதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் சமயங்களில், எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்முடைய தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தலாகாது என்ற அவருடைய அறிவுரையை இன்றுவரை நான் கடைபிடித்து வருகிறேன்.

***

அவர் விடைபெற்று சென்ற உடனே என்னுடைய குடியிருப்பிற்கு விரைந்தேன்.

அன்று காலையில் நான் அலுவலகத்திற்கு புறப்படும் நேரத்தில் என்னுடைய மாமியார் தனியாக வந்திருந்தார். என்னுடைய வட்டார மேலாளரை அவருடைய அறையிலிருந்து அழைத்துக்கொண்டு ஒரு வாடிக்கையாளரை காண செல்லவேண்டியிருந்ததால் அவரிடம் நின்று பேச எனக்கு நேரம் இருக்கவில்லை.

அவர் எதற்காக வந்திருந்தார், என்ன கூறினார் என்பதை தெரிந்துக்கொள்ள முடியாமல் காலையிலிருந்து தவித்த தவிப்பு எனக்குத்தான் தெரியும். இருப்பினும் என்ன செய்ய? என்னுடைய வட்டார மேலாளர் விடைபெற்று செல்லும்வரை பல்லைக்கடித்துக்கொண்டு காத்திருப்பதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.

என்னுடைய குடியிருப்பை நோக்கிச் செல்வதைக் கண்ட என்னுடைய தலைமைக் குமாஸ்தா, ‘சார், மேடம் ஒங்க மதர் இன் லா கூடவே பொறப்பட்டு போயிட்டாங்க. நம்ம ஜோனல் மேனேஜர் போனதும் ஒங்கள அங்க வரச் சொல்லிட்டு போனாங்க.’ என்றார்.

நான் உடனே என்னுடைய உதவி மேலாளரிடம் சொல்லிகொண்டு புறப்பட்டுச் சென்றேன்.

செல்லும் வழியெல்லாம் ஏதேனும் புதிய பிரச்சினையாயிருக்குமோ என்று நினைத்துக்கொண்டே சென்றேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் வைத்து என்னிடம் கோபித்துக்கொண்டு என்னுடைய மைத்துனர் கிளம்பிச் சென்றதிலிருந்தே ஏதோ ஒன்று சீரியசாக நடக்கப்போகிறது என்று எண்ணியிருந்தேன். அத்துடன் அதற்கு மறுநாள் வீட்டிற்கு சென்ற என்னுடைய மனைவியிடம் அவருடைய பெற்றோர் இருவருமே கோபித்துக்கொண்டது வேறு எனக்கு அந்த எண்ணத்தை உறுதிபடுத்தியிருந்தது.

என்னுடைய மைத்துனரின் மாமனாரும் தூத்துக்குடியில் செல்வாக்கு நிறைந்தவர் எனக்கு தெரியும். முந்தைய  திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவிருந்த பரவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருடைய நெருங்கிய உறவினர் அவர். ஆகவே அவருடைய மருமகன் விஷயத்தில் அவ்வளவு எளிதாக யாரும், அவர் எத்தனை வசதிபடைத்தவராகவோ, அல்லது செல்வாக்குள்ளவராகவோ இருந்தாலும் தலையிட்டு பாதகம் விளைவித்துவிடமுடியாது என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.

ஆனால் கேவலம், ஒரு சாதாரண வீட்டு மனை விஷயத்தில் ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர் நேரடியாக தலையிடுவாரா என்று எண்ணமும் இருந்தது. அது எப்படியிருந்தாலும் நான் தேவையில்லாமல் என்னுடைய மைத்துனர் விஷயத்தில் தலையிட்டிருக்க வேண்டாமோ என்ற எண்ணமும் கடந்த இரு தினங்களாக எனக்கு இருந்ததும் உண்மைதான்.

ஒரு வங்கி மேலாளர் என்ற பதவியிலிருக்கும் ஒருவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் அரசு அதிகாரிகளிடம் மோதுவதை தவிர்க்கவேண்டும் என்பதும் என்னுடைய அலுவலக ஷரத்துகளில் ஒன்று என்பதும் எனக்கு தெரியாமல் இல்லை. என்னுடைய பதவியை என்னுடைய தனிப்பட்ட விஷயத்திற்கு தவறாக பயன்படுத்தினேன் என்ற விஷயம் என்னுடைய தலைமையகத்திற்கு தெரியவரும் சூழ்நிலையில்  என் மீதே நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்பதும் எனக்கு தெரிந்திருந்தது.

ஆகவே இனியாவது இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் என்னுடைய மாமனார் வீட்டை சென்றடைந்தேன்.

வீட்டில் என்னுடைய மனைவியும், மாமியார் மட்டுமே இருந்தனர். என்னுடைய மூத்த மகளையும் என்னுடைய இளைய மைத்துனர்களில் ஒருவர் பள்ளிக்கே சென்று அழைத்து வந்திருந்தார்.

நான் என்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியதுமே என்னுடயை மனைவி பதட்டத்துடன் என்னை நோக்கி வந்தார். ‘என்னங்க இவ்வளவு நேரம் சென்னு வர்றீங்க?’ என்றார் படபடப்புடன்.

நான் ‘ஏன் என்ன விஷயம்?’ என்றேன்.

‘இன்னைக்கி காலைல நாலஞ்சி தோணிப்பயல்க அண்ணன் வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போயிருக்கான்க. அண்ணனும் மைனியும் பயந்துபோயி வீட்ட பூட்டிக்கிட்டு மைனி வீட்டுக்கு போய்ட்டாங்களாம். அதுக்கப்புறம் மைனியோட அப்பா அந்த தியேட்டர் முதலாளி வீட்டுக்கு போயிருக்காங்க. அவர் இவர யாருன்னு தெரிஞ்சும் மரியாதையில்லாம பேசிட்டாராம். அந்த சமயத்துல அந்த இன்ஸ்பெக்டரும் அங்க இருந்திருக்காரு. ஒங்க மருமகன ------------- ரூபாய வாங்கிட்டு நிலத்த எழுதிக்குடுத்துர சொல்லுங்க. இல்லனா விசயம் பிரச்சினையாயிரும்னு மிரட்டியிருக்காரு. அத்தோட நீங்க இந்த விஷயத்துல இனியும் தலையிட்டா ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு ஒங்க மேல ரிப்போர்ட் பண்ணுவேன்னும் சொன்னாங்களாம்.’

என் மனைவி கூறிக்கொண்டிருக்கும்போதே நான் வீட்டுக்குள் சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். என்னுடனேயே படபடப்புடன் பேசிக்கொண்டு வந்த என் மனைவி நான் பதிலேதும் கூறாமல் யோசித்தவாறே அமர்ந்திருந்ததைப் பார்த்ததும், ‘என்னங்க நீங்க, நான் பேசிக்கிட்டேயிருக்கேன். நீங்க பாட்டுக்கு என்னத்த யோசிச்சிக்கிட்டிருக்கீங்க?’ என்றார்.

நான் வரும்போதெல்லாம் புன்னகையுடன் வாசல்வரை வந்து வரவேற்கும் என்னுடைய மாமியார் நான் வந்தது தெரிந்தும் சமையலறையிலேயே இருந்ததைக் கண்டதும் எனக்கு லேசான அதிர்ச்சியாயிருந்தும் அதைப்பற்றி வருந்தும் மனநிலையில் நான் இல்லை.

என் மனைவி கூறிய, ‘இனியும் தலையிட்டா ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு ஒங்க மேல ரிப்போர்ட் பண்ணுவேன்னும் சொன்னாங்களாம்’ என்ற வார்த்தைகளே என்னைச் சுற்றி, சுற்றி வந்தன. அப்படியொரு சூழலை நினைத்துத்தான் நானும் வரும் வழி முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

இருப்பினும் இத்தனக்கும் பிறகு நான் என்னுடைய நிலைமைக்கு அஞ்சி ஒதுங்கிச் சென்றால் என்னுடைய மனைவியின் குடும்பத்தினருடனான என்னுடைய உறவில் நிச்சயம் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தோன்றவே இதில் நிச்சயம் இறுதியாக ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய மவுனத்தின் பின்னணி புரியாமல் என்னுடைய மனைவி மீண்டும், ‘என்ன நா கேட்டுக்கிட்டேயிருக்கேன்.. நீங்க..’ என்று துவங்கவே நான், ‘என்னெ கொஞ்சம் யோசிக்கவிடு..’ என்று எரிந்து விழுந்தேன்.  

‘ஆமா.. முன்னே பின்னே யோசிக்காம செஞ்சிர வேண்டியது.. இப்போ யோசிச்சி என்னெ பிரயோசனம்? இது நேத்து போலீஸ் ஸ்டேஷன்ல வீராப்பா பேசும்போது யோசிச்சிருக்கலாமில்லே..’ என்று முனுமுனுத்தவாறு என் மனைவி உள்ளே செல்ல நான் என்னுடைய கைப்பையில் எப்போதும் வைத்திருக்கும் சிறிய தொலைப் பேசி இண்டெக்ஸ் புத்தகத்தை (இப்போதிருப்பது போல் செல் ஃபோன் வசதிகள் இல்லாத காலமாயிற்றே. ஆகவே முக்கியமான சிலருடைய தொலைப் பேசி எண்களை ஒரு சிறு பாக்கெட் இண்டெக்ஸ் புத்தகத்தில் குறித்து அதை எப்போதும் கைவசம் வைத்திருப்பது என்னுடைய வழக்கம். என்னுடைய சக மேலாளர்கள் பலருக்கும் இப்பழக்கம் இருந்தது என்பது எனக்கு தெரியும்.) எடுத்து யாரையாவது தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்க வேண்டுமே என்று எண்ணத்தில் ஒவ்வொரு பெயராக வாசித்தேன்.

சட்டென்று ஒரு பெயரில் என்னுடைய கவனம் சென்றது. அவரைக் குறித்து ஏற்கனவே முன்னொரு பதிவில் கூறியிருக்கிறேன். அவர் ஒரு ஷிப் ச்சாண்ட்லிங் நிறுவனத்தை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் பெண். பரவர் சமுதாயத்தைச் சார்ந்தவராயினும் தான் ஃபெர்னாண்டஸ் என்றும், பரம்பரை, பரம்பரையாகவே படித்தவர்கள்.. ரயில் பாதைக்கு தெற்கே உள்ளவர்கள் என்றெல்லாம் தன்னைப் பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டவர் என்று அவரைப்பற்றி விவரித்திருக்கிறேன். அவருடைய கணவர் பிரையண்ட் நகரில் என்னுடைய நிலத்திற்கெதிராக வீடு கட்டிக்கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அவரை அழைத்து இந்த திரையரங்கு உரிமையாளரைப் பற்றி விசாரித்தாலென்ன என்று தோன்றியது. உடனே என்னுடைய மனைவியை அழைத்து என்னுடைய யோசனையைக் கூறினேன். அவருடைய பெயரைக் கேட்டதுமே அதுவரை பேசாமலிருந்த என்னுடைய மாமியார், ‘யார் அவளா? வேற வெனையே வேணாம். நீங்க எதையாச்சும் ஒன்னெ சொல்லப்போக, அவ அத ரெண்டா, மூனா திரிச்சி அங்க போயி சொன்னாலும் சொல்லிருவா. அவளும் அந்த குடும்பத்த சேர்ந்தவதான். அத மறந்துராதீங்க.. நம்ம பரவ சாதியில பொறந்துட்டு ஏதோ கொஞ்சம் படிச்சிட்டோம்கற திமிர்ல நம்ம சாதியவே குறச்சி சொல்லி அலைஞ்சிக்கிட்டிருக்கறவளாச்சே அவ..’ என்று கூற நான் என்ன செய்வதென தெரியாமல் விழித்தேன்.

என்னுடைய மனைவியோ என்னருகில் வந்து, ‘இங்க பாருங்க நீங்க சொன்ன ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா அம்மாவுக்கும் அவுகளுக்கும் அவ்வளவா ஒத்துக்காது. நாம ஒன்னு செய்யலாம். வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்டு கிளம்பி போற வழியில அவுக வீட்டுக்கு போய்ட்டு போலாம். ஃபோன்ல சொல்றதவிட நேரா பாத்து கொஞ்சம் விளக்கமா பேசலாமில்லே.. என்ன சொல்றீங்க?’ என்றார் ரகசியமாக.

எனக்கும் அது நல்ல யுக்தியாக தோன்றவே சரியென்று கிளம்பினேன். நாங்களிருவரும் சட்டென்று கிளம்பினால் என்னுடைய மாமியாருக்கு சந்தேகம் ஏற்படுமே என்று நான் நினைத்தாலும் அவர் அன்று இருந்த மனநிலையில் அதை பெரிதுபடுத்தமாட்டார் என்று நினைத்தேன்.

நான் நினைத்ததுபோலவே நாங்கள் கிளம்புவதையே அவர் பொருட்படுத்தியதாக தோன்றவில்லை. என் மனைவி அவரிடம் சொல்லிவிட்டு இளைய மகளை எடுத்துக்கொண்டு புறப்பட நான் விளையாடிக்கொண்டிருந்த என் மூத்த மகளை வலுக்கட்டாயமாக கிளப்பிக்கொண்டு புறப்பட்டேன்.

ஆனால் புறப்படும் நேரத்தில் நான் சந்திருக்க எண்ணியிருந்தவருடைய வீட்டுக்கு தொலைப்பேசி செய்திருக்கலாம் என்ற எண்ணம் எழாமற்போனது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்று கூறவியலாத அளவுக்கு இருந்தது அவர்களுடனான என்னுடைய அன்றைய சந்திப்பு..தொடரும்..29 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 142

என்னுடைய வட்டார மேலாளர் சந்திக்க விரும்பிய வாடிக்கையாளரை சந்தித்துவிட்டு என்னுடைய காசாளர் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பியபோது இரவு பத்து மணி.

அவரை அறையில் விட்டுவிட்டு உடனே வீடு திரும்பலாம் என்று நினைத்திருந்த என்னை அவர் வலுக்கட்டாயமாகப் பிடித்து அமர்த்தினார்.

நாங்கள் சந்தித்திருந்த வாடிக்கையாளர் தூத்துக்குடியில் மிகவும் பெரும்புள்ளி. செல்வந்தர். தூத்துக்குடியில் இருந்த மிகப்பெரிய பங்களாக்களுள் ஒன்று அவருடையது. காலங் காலமாக தொழில் மற்றும் வணிகம் நடத்தி வந்தவர். என்னுடைய கிளை திறக்கப்பட்ட 1979ம் ஆண்டிலிருந்தே கணக்கு வைத்திருந்தவர்.

என்னுடைய வட்டார மேலாளாருக்கு அவரை நன்கு பரிச்சயமிருந்ததால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பியவர் படு உற்சாகத்தில் இருந்தார். அவரும் என்னுடைய வாடிக்கையாளரும் குடிப்பழக்கமும் உள்ளவர்கள் என்பதால் அவருள் இறங்கியிருந்த மேலை நாட்டு சரக்கு அவரை மேலும் உற்சாகப்படுத்தியிருந்ததை உணர்ந்தேன். நான் சென்னையிலிருந்த சமயங்களில் இத்தகைய பார்ட்டிகளில் ‘கலந்து’கொள்வதுண்டு..

ஆனால் தூத்துக்குடியில் என் மனைவி குடும்பத்தினர் முன்பு ‘நல்ல பிள்ளையாக’ காண்பித்துக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பில் ‘அதை’ விட்டு சற்று தள்ளியே இருந்தேன்.

உற்சாகத்திலிருந்த என்னுடைய வட்டார மேலாளர் நேரம் போவது தெரியாமல் என்னுடைய வங்கியில் நடந்த மேல் மட்ட விவகாரங்களை விலாவாரியாக விவரிக்க எனக்கோ முள்மேல் நிற்பது போலிருந்தது..

ஆனாலும் சட்டென்று எழுந்து சென்றால் என்ன நினைத்துக்கொள்வாரோ என்ற நினைப்பில் வேறு வழியில்லாமல் மனதுக்குள் சபித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். நான் அன்று மனதுக்குள் கூறியது வெளியே கேட்டிருந்தால் அன்றே என்னுடைய பதவி பறிபோயிருக்கும்!

மதுவின் பாதிப்பில் கேலியும் கிண்டலுமாக (இருவர் சேர்ந்துவிட்டால் அந்த இருவரைத்தவிர மற்றவர்களைப் பற்றி பேசுவதில்தான் எத்தனை ஆனந்தம்!) பேசிக்கொண்டிருந்தவர் சட்டென்று சீரியசாகி, ‘டிபிஆர் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்’ என்றார்.

நான் சலிப்புடன், ‘சொல்லுங்க சார்.’ என்றேன். மணி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

‘ஒங்க ரிப்போர்ட்ட பத்தி எச்.ஓல என்ன பேசிக்கிட்டாங்கன்னு ஒங்களுக்கு தெரியுமா?’

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். இத சொல்றதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?

‘நீங்க எழுதுன விஷயம் சீரியசானதுதான் இல்லேங்கலே.. ஆனா  நீங்க யூஸ் பண்ண லாங்வேஜ் கொஞ்சம் ரஃபா இருந்துதுன்னு நம்ம ஜி.எம்மே ஃபீல் பண்ணார் டிபிஆர். ஒங்க நன்மைக்குத்தான் சொல்றேன்.. இந்த மாதிரி ரிப்போர்ட்ஸ் எழுதும்போது கோபப்படாம, நிதானமா யோசிச்சி எழுதணும்னு சொல்றதுக்குத்தான் ஒங்கள கொஞ்ச நேரம் இருங்கன்னு சொன்னேன்.’

நான் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

‘நீங்க மேனேஜராயி ரெண்டு மூனு வருஷந்தான் ஆகுது. இதான் நீங்க சார்ஜ் எடுக்கற முதல் ப்ராஞ்ச். நீங்க முன்னாலருந்த ரெண்டு ப்ராஞ்சுமே நீங்களே ஓப்பன் பண்ணது. நீங்க சார்ஜ் எடுத்த ப்ராஞ்ச பத்தியும் முன்னாலருந்த மேனேசர்ங்கள பத்தியும் நீங்க எழுதனா மாதிரி ஒங்களப்பத்தி ஒங்களுக்கு பின்னால வந்த மேனேஜர்ங்க எழுதியிருந்தா ஒங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அத யோசிச்சி பாத்தீங்களா?’

என்னையுமறியாமல் சட்டென்று எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதாவது நான் ஏதோ செய்யக்கூடாதவைகளை என்னுடைய முந்தைய இரு கிளைகளிலும் செய்திருந்ததுபோலவும் எனக்கு பின்னால் வந்து பொறுப்பேற்ற மேலாளர்கள் பெருந்தன்மையுடன் அதை பொருட்படுத்தாமல் இருந்துவிட்டது போலவுமல்லவா இருக்கிறது இவர் கூறுவது என்று நினைத்தேன். இருப்பினும் குடிகாரன் பேச்சு பொழுதுவிடிஞ்சா போச்சு என்ற நினைப்பில் அவர் மதுவின் தாக்கத்திலிருந்த சமயத்தில் கூறியதை பெரிதுபடுத்தாமல் எழுந்து நின்றேன்.

‘சார் உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி சார். நான் இப்ப கிளம்பலேன்னா நம்ம பில்டிங்குக்கு கீழ இருக்கறவர் கேட்ட பூட்டிருவார். அப்புறம் என்ன சப்தம்போட்டாலும் வீட்டுக்குள்ளருக்கறவருக்கு கேக்காது.. அதனால நான் கிளம்பறேன் சார். நாளைக்கு பாக்கலாம்.’ என்று கூறிவிட்டு கிளம்பினேன்.

என்னுடைய ஸ்கூட்டரையும் கொண்டுவராததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த என் குடியிருப்பை நடந்தே அடையவேண்டியிருந்தது. தூத்துக்குடியில் அப்போதெல்லாம் ஆட்டோக்களைப் பார்ப்பதே அரிது.. அதுவும் நள்ளிரவில் என்றால் கேட்கவே வேண்டாம். ஆள் அரவமில்லாத WGC சாலையில் தெருநாய்களின் பற்களில் சிக்கிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்ததே பாக்கியம் என்று நினைத்தேன்.

நான் வட்டார மேலாளரிடம் கூறியதில் இந்த கேட் விஷயம் உண்மையானதுதான்.

என்னுடைய அலுவலக வளாகத்தின் முகப்பில் அமைந்திருந்த ஹைதர் காலத்து இரும்பு கேட் சுமார் பதினைந்தடி உயரம் இருக்கும். அதை முழுவதுமாக திறந்து நான் பார்த்ததே இல்லை. பகல் வேளைகளில் ஒரு ஐந்தடி அகலத்துக்கு திறந்து வைத்திருப்பார்கள். கீழ் வீட்டில் இருப்பவர்களின் மீன்பிடி வாகனங்கள் வந்து செல்லும் நேரங்களில் அவை உள்ளே வந்து செல்வதற்கு தேவையான அளவு திறந்து மூடிவிடுவார்கள்.

தினமும் நள்ளிரவுவரை கேட் திறந்தே இருக்கும். மீன்பிடித்துறையிலிருந்து படகில் வேலைபார்க்கும் அட்கள் வந்து சேர்ந்ததும் கேட்டை மூடினால் அடுத்த நாள் காலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். வளாகத்தின் முகப்பிலிருந்து் பிரதான கட்டிடம் முப்பதடி தொலைவில் இருந்ததால் மூடிய கேட்டிலிருந்து தொண்டைக் கிழிய சப்தமிட்டாலும் வீட்டினுள் இருப்பவர்களுக்கே கேட்க வாய்ப்பே இல்லை.

ஆகவே தான் நானும் அவரும் ஆளுக்கொரு சாவியை வைத்திருப்போம். ஆனால் அன்று அவசரத்தில் அதை எடுக்க மறந்துப்போனேன். ஆகவேதான் ஓட்டமும் நடையுமாக என்னுடைய குடியிருப்பை அடையவேண்டியிருந்தது. நல்ல வேளை, நள்ளிரவைக் கடந்திருந்தும் அன்று அவர்களுடைய பணியாட்கள் வந்திருக்கவில்லை. திறந்திருந்த கேட் வழியாக உள்ளே நுழைந்து மாடியை அடைந்தேன்.

என் குடியிருப்பு அமைந்திருந்த கட்டிடம் பழங்காலத்து கட்டிடம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். என்னுடைய முதல் மாடியைப் பற்றி ஏற்கனவே ஒரு பயங்கரமான கதை அக்கம்பக்கத்தில் பரவியிருந்தது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய அலுவலகம் அமைந்திருந்த பகுதியில்தான் அதனுடைய உரிமையாளர் வசித்து வந்திருக்கிறார். அதாவது கீழ்வீட்டில் வசித்து வந்தவருடைய ஒன்னுவிட்ட மூத்த சகோதரர். அவரை ஏதோ ஒரு மோசடிக்கும்பல் ஒரு கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் வெறும் காகிதங்களை நோட்டுக் கற்றையைப் போல் கொடுத்து கணிசமான ஏமாற்றிவிட்டார்களாம். அதாவது கற்றைகளில் முன்னும் பின்னும் மட்டும் நிஜ கரன்சி நோட்டுளும் இடையில் அதே அளவிலால வெற்று காகிதங்களையும் வைத்து திரைப்படங்களில் வருவதுபோல ஏமாற்றியிருக்கிறார்கள்..

மனுஷன் அதை கவனியாமல் தன்னிடமிருந்த கடன் பத்திரத்தில் வரவு வைத்து திருப்பி கொடுத்துவிட்டாராம். கடன் பெற்றவர்கள் திரும்பி சென்றதும்தான் விஷயம் இவருக்கு தெரிந்திருக்கிறது. அதன்பிறகு இவர் போய் விவகாரம் செய்ய மோசடிக்கும்பல் இவரை நையப்புடைத்து வயல்வெளியில் வீசிவிட்டு சென்றுவிட ஒரு நாள் முழுவதும் வயல்வெளியில் குற்றுயிராய் கிடந்திருக்கிறார். பிறகு வழியில் சென்றவர்கள் அவரை இனங்கண்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நாளிலிருந்தே அவருடைய போக்கில் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கையில் கிடைத்த காகிதங்களையெல்லாம் அடுக்கி ஒன்று, இரண்டு என்று எண்ண ஆரம்பித்துவிடுவாராம். நாளடைவில் புத்தி பேதலித்து வெளியுலகத்துக்கு அஞ்சிய செல்வந்தர் குடும்பம் அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவைக்க நள்ளிரவில் அவர் எழுப்பும் அவலக்குரல் அக்கம்பக்கம் எங்கும் கேட்குமாம்.

இது நானும் என் மனைவியும் அங்கு வசிக்க ஆரம்பித்த சில வாரங்களில் வீட்டு வேலைக்கு வரும் வாயாடி பெண் வழியாக என் மனைவி கேட்டறிந்தது.

அன்றிலிருந்து என் மனைவிக்கு அந்த வீட்டில் இரவு நேரங்களில் தனித்து இருப்பது என்றால் ஒருவித பயம் இருந்தது. நான் எத்தனை தைரியம் அளித்தும் பயனிருக்கவில்லை. ஆகவே நான் வெளியூர் செல்லும் சமயங்களில் எல்லாம் அவரை என்னுடைய மாமியார் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம்.

நான் ஊரில் இருக்கும் நேரங்களில் அலுவல் விஷயமாக வெளியே எங்கு சென்றாலும் இரவு பத்து மணிக்குள் வீடு திரும்பிவிடுவேன். என்னுடைய குடியிருப்பு இடம் என்னுடைய அலுவலகத்திற்கு பின்புறத்தில் இருந்ததால் நான் வெளியே செல்லும்போதே அலுவலகப் பகுதியில் இருக்கும் விளக்குகளை எரியவைத்துவிட்டுத்தான் செல்வேன். அத்துடன் என் அலுவலக வாசலின் முன்புற கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு செல்வதும் வழக்கம்.

இல்லையென்றால் முகப்பு வாசலிலிருந்து மணியடித்ததும் சுமார் நூறடி தொலைவில் இருந்த குடியிருப்பில் இருந்து ஒருவர் வந்து வாசற்கதவை திறப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் இரவு நேரங்களில் மின்சப்ளை நின்றுவிட்டால் கேட்கவே வேண்டாம் கதவை எத்தனை பலமாகத் தட்டினாலும் குடியிருப்பில் கேட்கவே கேட்காது.

ஆகவே நான் மறந்தாலும் ‘வாசக் கதவை பூட்டிட்டு போயிருங்க. அப்புறம் இருட்டுனதுக்கப்புறம் வந்து பெல்லடிச்சாலும் நா வந்து திறக்க மாட்டேன். சொல்லிட்டேன்.’ என்பார் என் மனைவி.

இதற்குப் பின்னால் வேறொரு காரணமும் இருந்ததை நான் பிறகுதான் தெரிந்துக்கொண்டேன். ‘எக்கா.. நீங்க கிறிஸ்துவங்க. ஆவின்னு சொன்னாலும் நம்ப மாட்டீங்க. ஆனா அந்த ஐயா இருந்த ரூமுக்குள்ள இப்பவும் அவர் ஆவி நடமாடுதாங்க்கா..’ என்று என் பணிப்பெண் என் மனைவியை பயமுறுத்தி வைத்திருக்கிறாள்!

தொடரும்..

25 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 141

சாதாரணமாக வட்டார மேலாளர்கள் ஒரு கிளையை ஆய்வு செய்யும் நோக்கத்துடன்  விஜயம்
செய்வதில்லை. ஆய்வு செய்வதற்கென பிரத்தியேக அதிகாரிகளைக்கொண்ட பல குழுக்கள் தலைமையலுவலகத்தில் இருக்கும். அவர்களுடைய அன்றாட அலுவலே இத்தகைய ஆய்வுகளை நடத்தி குற்றங்குறைகளைக் கண்டுபிடிப்பதுதான்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அதுபோல் பலதரப்பட்ட கிளைகளிலும் கிளை மேலாளராகவோ (Branch Manager) அல்லது கூடுதல் மேலாளர்களாகவோ (Additional BM) பல ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்களையே இக்குழுவில் சேர்ப்பார்கள். அத்துடன் ஒருவர் ஏதேனும் கிளையில் பணிபுரிந்து செய்யத்தகாதவைகளைச் செய்து பிடிபட்டவராக இருந்தால் அவர்தான் இவ்வலுவலுக்கு மிகவும் லாயக்கானவர் என்று கிண்டலாக மற்ற மேலாளர்கள் கூறுவதுண்டு. 'ஏன்னா திருடனுக்குத்தான வேறொரு திருடன இனங்கண்டுக்கொள்ள முடியும்?' என்பார்கள்.

வட்டார மேலாளர்கள் பெரும்பாலும் ஒரு கிளையின் வணிகத்தை மேலும் வளர்ப்பது எப்படி என்பதை கிளை மேலாளருடனும் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது, தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட கடன் விண்ணப்பங்கள் கிளையில் இருந்தால் அதை சாங்ஷன் செய்வது, கிளையின் முக்கிய வாடிக்கையாளர்களை அவர்களுடைய இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ சென்று சந்திப்பது, வாடிக்கையாளர்களின் கூட்டத்திற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்து அவர்களுடைய குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வது போன்ற விஷயங்களில்தான் அக்கிளைக்கு விஜயம் செய்யும் தினங்களில் கவனம் செலுத்துவார்கள்.

அந்த நோக்கத்துடன்தான் என்னுடைய வட்டார மேலாளரும் வருகிறார் என்று நினைத்திருக்க அவரோ என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் நான் கூறியிருந்தவை சரியானதுதானா என்பதை ஆராய்வதிலேயே குறியாயிருந்தார். ஒருவேளை மேலிடத்திலிருந்து அத்தகைய உத்தரவு அவருக்கு இருந்ததோ என்னவோ.

இருப்பினும் நான் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்படாமல் அவருக்கு தேவையானவற்றையெல்லாம் செய்துகொடுப்பதில் முனைப்பாயிருந்தேன்.

இந்த பரபரப்பினூடே என்னுடைய மனைவி நண்பகல் நேரத்தில் என்னுடைய குடியிருப்பை நோக்கி செல்வது தெரிந்தது. ஆனால் என்னுடைய அறையில் வட்டார மேலாளர் இருந்ததால் என்ன விஷயம் என்று என்னால் கேட்கமுடியாமற்போனது. அதன் பிறகு வேலை மும்முரத்தில் அந்த விஷயத்தை மறந்தே போனேன்.

என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து படித்து அதில் என்னுடைய முந்தைய மேலாளர்களைக் குறித்து நான் எழுதியிருந்த கடன் கணக்குகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் என்னுடைய வட்டார மேலாளரே நேரடியாக என்னுடைய தலைமைக் குமாஸ்தா உதவியுடன் ஆராய்ந்தார்.

அதற்கே அன்றைய நாள் முழுவதும் சென்றுவிடவே மாலை சுமார் ஆறுமணியானதும், ‘டிபிஆர். இன்னைக்கி திரும்பி போமுடியாது போலருக்கு. ஏதாச்சும் ரூம் புக் பண்ணுங்களேன்.’ என்றார் என்னைப் பார்த்து. நான் தூத்துக்குடிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகியிருந்ததால் நான் தயக்கத்துடன் என் காசாளரை அழைத்து ‘ஒங்களுக்கு தெரிஞ்ச இடத்துல பாருங்களேன். ஏ.சி ரூமா இருக்கணும்.’ என்றேன்.

ஆனால் என்னுடைய முந்தைய மேலாளர்களுள் ஒருவர் முந்திக்கொண்டு, ‘சார் ரூம்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு தெரிஞ்ச ஃப்ரெண்டோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நான் அவர கேட்டு சொல்றேன்.’ என்றார்.

என்னுடைய வட்டார மேலாளர், ‘அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீங்க இந்த மாதிரி நண்பர்களையெல்லாம் வச்சிக்கிட்டிருக்கறதுனாலதான தேவையில்லாம காரியங்களையெல்லாம் செஞ்சி வச்சிருக்கீங்க. இதுல இவர் ஏதோ ஒங்களப் பத்தி இல்லாத பொல்லாததையெல்லாம் எழுதிட்டாப்பல எச்.ஓல போயி சொல்லி வேலமெனக்கெட்டு என்னெ போய் பாருங்கன்னு ஜி.எம் கூப்ட்டு சொல்றார். நீங்க ரெண்டு பேரும் ஒன்னு பண்ணுங்க. இன்னைக்கே பஸ்சோ, ட்ரெய்னோ புடிச்சி உங்க பிராஞ்சுக்கு போற வேலைய பாருங்க. நான் இவர் வந்தப்புறம் இப்பத்தான் முதல்தடவையா வரேன்.. ஒங்களுக்காக நா வந்த வேலை முடிஞ்சிருச்சி. இனி ஒரு ஜோனல் மேனேஜரா என்ன செய்யணுமோ அத செஞ்சிட்டு நாளைக்கு போறேன்.’ என்று எரிந்து விழுந்தார்.

இதை முற்றிலும் எதிர்பார்க்காத அவர்கள் இருவரும் அதிர்ந்துபோய் அவரையும் என்னையும் மாறி, மாறி பார்த்தார்கள். பிறகு சுருதியிறங்கி, ‘சரி சார்.’ என்றனர். அதற்குப்பிறகு அவர்கள் என்னுடைய அறையிலிருந்ததை பொருட்படுத்தாமல், ‘ஏ.சி ரூம் இல்லன்னா கூட பரவாயில்லை டிபிஆர். சும்மா ஒரு ராத்திரிக்குத்தான. கொஞ்சம் க்ளீனா இருந்தா போறும். புக் பண்ணிர சொல்லுங்க. நாம யாராவது கஸ்டமர போய் சந்திச்சிட்டு வரலாம். ஏற்பாடு பண்ணுங்க.’ என்றார்.

எனக்கோ என் குடியிருப்பிற்குச் சென்று என் மனைவியிடம் என் மாமனார் வீட்டில் என்ன நடந்தது என்று விசாரிக்காவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் என்னுடைய வாடிக்கையாளர்களுள் ஒருவரை அழைத்து என்னுடைய வட்டார மேலாளருடைய வருகையை அறிவித்தேன்.

என்னுடைய முந்தைய மேலாளர்கள் இருவரும் அப்போதும் என்னுடைய அறையிலேயே நிற்பதைக் கவனித்த வட்டார மேலாளர் அவர்களை என்ன என்பதுபோல் பார்த்தார்.

‘சார் இவர் சொன்ன டாக்குமெண்ட்ஸ் மிஸ்டேக்ஸ் கரெக்ட் பண்ணணும்னா நாங்க இன்னும் ரெண்டு, மூனு நாள் இருந்தாத்தான் சார் நல்லது. அதனால..’

வட்டார மேலாளருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கோபத்துடன், ‘அத நீங்க இவர் ரிப்போர்ட் பண்ணவுடனே செஞ்சிருக்கணும். அத விட்டுட்டு இவர் பொய் சொல்றார்னு சொல்லி எச்.ஓல போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டு இப்ப என்னெ வெரிஃபை பண்ணச் சொல்லி அனுப்புனதுக்கப்புறம் சொன்னா எப்படி? என்னோட ரிப்போர்ட்டை ஜி.எம் முக்கு அனுப்பறேன். அவர் என்ன சொல்றாரோ அப்படியே செய்ங்க. அதுவுமில்லாம நீங்க இப்ப என் ஜோனல் ஆஃபீஸ்க்கு கீழ வொர்க் பண்ணலையே.. ஒங்கள இங்க இருக்க அனுமதிக்கற பவர் எனக்கு இல்லை.. அதனாலதான் ஒங்கள போங்கன்னு சொன்னேன்.’ என்றார்.

அவருடைய இந்த திடீர் மனமாற்றத்தில் என்னுடைய பங்கு ஏதேனும் இருந்ததோ என்ற எண்ணம் அவர்கள் இருவர் முகத்திலும் தெரிந்தது. ஆனாலும் வேறுவழியில்லாமல், ‘ஓக்கே சார். As you wish’ என்று கூறிவிட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும், ‘டிபிஆர். நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. அவங்க ரெண்டு பேரும் செஞ்சிருக்கற மிஸ்டேக்ச ஒங்களால உண்மையிலேயே சரி செய்ய முடியாதா?’ என்றார்.

நான் எதற்கு இந்த கேள்வி என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

‘இல்ல எதுக்கு கேக்கறேன்னா.. நீங்க ஊருக்கு புதுசுன்னாலும் ஒங்க அசிஸ்டெண்ட் மேனேஜரும், ஹெட் க்ளார்க்கும் இந்த ஊர்ல ஒரு வருஷத்துக்கு மேல இருக்காங்கதானே.. அவங்களுக்கு இந்த பாரோயர்ச அடையாளம் தெரியுமில்லையா?’

நான் என்னுடைய உதவி மேலாளரையும் தலைமைக் குமாஸ்தாவையும் என்னுடைய அறைக்கு அழைத்து வட்டார மேலாளர் என்னிடம் கேட்ட கேள்வியை அவர்களிடம் கூறினேன். அவர்கள் இருவருமே தங்களுக்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படவில்லையென்று தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் நிறுத்தியிருக்கலாம். என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒருபடி மேலே சென்று, ‘சார் இந்த பாரோயர்ஸ் யாருமே பேங்குக்கு வந்த ஞாபகம் எனக்கு இல்லை. அதனாலதான் நானும்  நம்ம கேஷியரும் இவங்க விலாசத்த தேடிப்போய் பார்த்தும் அங்க இருக்கறவங்க இவங்க வெளியூர் போயிருக்காங்கன்னு சொன்னதும் அது உண்மையா, பொய்யான்னுகூட கண்டுபிடிக்க முடியலை. ஒருவேளை சம்பந்தப்பட்ட ஆளுங்களே இருந்துக்கிட்டு இல்லேன்னு சொன்னா ஆள தெரியாத எங்களால எப்படி சார் கண்டுபிடிக்க முடியும்? அதனாலதான் இவர் சொல்லி நான் பழைய மேனேஜர்ங்க ரெண்டு பேரையும் ஃபோன்ல கூப்ட்டு லீவு போட்டு வந்து பார்ட்டீச மட்டும் காட்டிட்டு போயிருங்க. மத்தத நாங்க பாத்துக்கறோம்னு சொன்னேன். ஆனா அவங்க கேக்கலை. அதுக்கப்புறம்தான் சார் வேற வழியில்லாம அவரோட ஜாய்னிங் ரிப்போர்ட்ட அனுப்பினார்.’ என்றார்.

அவர் சொல்லி முடித்தபோது வட்டார மேலாளரின் முகம் கோபத்தால் கருத்துப்போனது. என்னுடைய தலைமைக் குமாஸ்தாவை அனுப்பிவிட்டு, ‘சரி, டிபிஆர். இந்த விஷயத்த அப்புறமா பேசிக்கலாம். நீங்க வேணும்னா போய் ஒங்க வொய்ஃப் கிட்ட சொல்லிட்டு வந்துருங்க. நாம அந்த பார்ட்டிய போய் பாக்கலாம். அப்புறம் ரூமுக்கு போலாம்.’ என்றார்.

நான் உடனே எழுந்து என்னுடைய குடியிருப்புக்கு விரைந்தேன். நான் வரும்வரை உடுத்தியிருந்த ஆடையையும் மாற்றாமல் காத்திருந்த என் மனைவியின் முகத்தைப் பார்த்ததுமே அவர் சென்ற விஷயம் ஏடாகூடமாகிவிட்டது என்பதைப் புரிந்துக்கொண்டேன்.

‘என்ன ஆச்சி, ஏதாச்சும் பிரச்சினையா?’ என்றேன்.

‘ஒங்க ஜோனல் மேனேஜர் போய்ட்டாரா?’

‘ஏன்? நாளைக்குத்தான் போறாராம். இப்ப அவர்கூட வெளிய போறேன். அனேகமா சாப்பாட்ட முடிச்சிக்கிட்டுத்தான் வருவேன். அத சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.’

‘அப்ப நீங்க போய்ட்டு வாங்க. வந்ததுக்கப்புறம் பேசிக்கலாம்.’ என்றவரைப் பார்த்தேன்.

‘ஒரு அஞ்சி, பத்து நிமிஷம் கழிச்சி போனா ஒன்னும் சொல்லமாட்டார். நீ சொல்லு. ஏதாவது மோசமா சொல்லிட்டாங்களா? ஒன் மொகத்த பார்த்தா ரொம்ப சீரியசாருக்கும்னு தோனுது?’

அவர் சலிப்புடன் எழுந்து நின்றார். ‘ஆமாங்க. நீங்க ஒங்களுக்கு மட்டும் நல்ல நிலமா பாத்து வாங்கிட்டு அவங்களுக்கு வில்லங்கம் புடிச்ச நிலமா பாத்து வாங்கிட்டீங்களாம். மைனி வீட்ல அவங்கப்பா ஆச்சி, போச்சின்னு குதிக்கிறாராம். ஒம் புருஷனால சம்மந்தி வீட்டுக்காரங்கக் கிட்டல்லாம் மானம் போவுதுடிங்கறாங்க அம்மா. அப்பாவ கேக்கவே வேணாம். மருமவனா போய்ட்டாரேன்னு பாக்கறேன்னு சொல்லிட்டாங்கங்க. போறுங்க.. பேசாம ஒங்க ஜோனல் மேனேஜர்கிட்ட சொல்லி இங்கருந்து இப்பவே போய்ட்டா கூட சரிதான்.’

நான் இதைவிட மோசமான விளைவை எதிர்பார்த்திருந்ததால் சிரித்துக்கொண்டே, ‘சேச்சே.. அப்படியெல்லாம் யோசிக்காத.. நம்ம வீட்ட கட்டி முடிக்கறவரைக்குமாவது இங்க இருக்கணும். அப்புறம் பாப்பாவ ஸ்கூல்ல சேர்த்து ரெண்டு மாசங்கூட வலை.. அதுக்குள்ள டிரான்ஸ்ஃபர்னு கேட்டா சிரிக்கப் போறாங்க. இங்க பார், ஒங்கப்பா, அம்மா கோவம்லாம் எத்தனை நாளைக்கு இருக்கப் போவுது? இந்த நிலம் சமாச்சாரத்த எப்படி டீல் பண்றதுன்னு ஒக்காந்து யோசிச்சா எப்படியும் தீர்வு கிடைச்சிரும். நீ மனச போட்டு அலட்டிக்காம ஒன் வேலைய பார். நான் போய்ட்டு வந்திடறேன்.’ என்று ஆறுதலாக கூறிவிட்டு கை கால் கழுவிக்கொண்டு புறப்பட்டு சென்றேன்.

தொடரும்..
24 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 140

‘என்னய்யா பேயறைஞ்சா மாதிரி போயிருச்சி ஒங்க மூஞ்சி?’ என்று மீண்டும் ஏளனத்துடன் என்னைப் பார்த்த பெரியவரை அப்படியே கழுத்தை நெரித்தாலென்ன என்று எனக்கு தோன்றியது.

சமாளித்துக்கொண்டு, ‘சார் தேவையில்லாம பேசாதீங்க. நீங்க சொன்னீங்களே வக்கீல், அவர் எங்க பேங்கோட லீகல் அட்வைசர். அவர்தான் இந்த நில பத்திரங்கள ஆதியிலருந்து அந்தம் வரைக்கும் பார்த்து ஒரு வில்லங்கமும் இல்லை தாராளமா வாங்கலாம்னு சொன்னவர். அவர் பெயர நீங்க சொன்னதும் நான் கொஞ்சம் அசந்துபோனது உண்மைதான். ஆனா இப்ப நினைச்சிப் பார்த்தா இதுதான் கடவுள் சித்தம்னு தோணுது.. தாராளமா ஒங்க பத்திரத்த கொண்டு வாங்க. அவர் முன்னாலேயே பேசி தீர்த்துக்கலாம். இங்க வேணாம்.’ என்றேன்.

பிறகு ஆய்வாளரைப் பார்த்து, ‘என்ன சார் இப்ப போலாங்களா?’ என்றேன்.

என்னுடைய குரலில் இருந்த அதீத மரியாதை அவருக்கு பயங்கர எரிச்சலை ஏற்படுத்தினாலும் அவரால் வேறொன்றும் பேச முடியாத சூழ்நிலையில் அவருக்கருகில் அமர்ந்திருந்த பெரியவரை எரிச்சலுடன் பார்த்தார். ‘ஏன்யா நீங்க வக்கில் முன்னால பேசி தீர்த்துக்கறதாருந்தா எங்க உயிர ஏன் சார் வாங்கறீங்க? ஒங்களால இன்னைக்கி என் வேலை கெட்டதுதான் மிச்சம். என்னமும் பண்ணிக்குங்க. போங்க. ஒங்க முதலாளி கூப்டு கேட்டா நீங்கதான் தலையிட்டு இந்த யோசனைய சொன்னீங்கன்னு சொல்லிக்கறேன்.’

பிறகு என்னை திரும்பிப் பார்த்து, ‘தாராளமா போங்க சார். ஆனா ஒன்னு.. மறுபடியும் எங்கிட்ட வந்து புகார்னு நிக்காதீங்க. நீங்க இப்ப எடுத்த முடிவிலேயே நிக்க முடிஞ்சா சந்தோஷம்தான். போய்ட்டு வாங்க.’ என்றார்.

ஆனால் அப்போதும் என்னுடைய மைத்துனர் எழாமல் பரிதாபமாக என்னை பார்த்தார். எனக்கோ அவர்மீது படு எரிச்சலாக வந்தது. என்ன மனுஷன் இவர் என்று நினைத்தேன். ஆய்வாளரோ எரிச்சலுடன் அவரைப் பார்த்தார். ‘எழுந்து போங்க சார். ஒங்க மச்சான் பேச்ச கேட்டீங்க உருப்பட்டாப்பலத்தான்.’

அவருடைய மறைமுகக் குற்றச்சாட்டை முற்றிலும் எதிர்பாராத நான் பொங்கி வந்த கோபத்துடன் பதில்பேச முயல சட்டென்று எழுந்த என் மைத்துனர் எழுந்து என்னை லட்சியம் செய்யாமல் வெளியேற நான் அதிர்ச்சியுடன் அவரை பின்தொடர்ந்தேன்.

காவல்நிலையத்திலிருந்து வெளியேறிய என் மைத்துனர்  நான் வருகிறேனா என்றுகூட பார்க்காமல் வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுவிட நான் அதிர்ச்சியில் உறைந்துபோய் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தேன்.

பிறகு சுதாரித்துக்கொண்டு என்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

****

‘என்னங்க இது அநியாயமாருக்கு? நீங்க அண்ணனுக்கு சாதகமாத்தான பேசியிருக்கீங்க? அவங்க எதுக்கு கோச்சிக்கிட்டு போய்ட்டாங்க?’

நான் காவல்நிலையத்திற்கு சென்று வந்த விவரத்தை ஒன்றுவிடாமல் என் மனைவியிடம் கூற என் மனைவி கேட்ட கேள்விகள் இவை..

அதுதான் எனக்கும் விளங்கவில்லை. மணியைப் பார்த்தேன். இரவு ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. இனியும் இதையே பேசிக்கொண்டிருந்தால் இரவு முழுவதும் போய்விடும் என்று நினைத்தேன்.

அடுத்த நாள் காலையில் என்னுடைய வட்டார மேலாளர் வருடாந்தர விசிட்டுக்காக வருவதாக அன்று காலைதான் தொலைப்பேசி வந்திருந்தது. நான் கிளைக்கு பொறுப்பேற்ற பிறகு அவர் வரும் முதல் விசிட்.

என்னுடைய கிளை திருவனந்தபுரம் வட்டாரத்தில் வருவதால் என்னுடைய வட்டார மேலாளர் தன்னுடைய நாற்சக்கர வாகனத்திலேயே வந்துவிட்டு அன்று மாலையே திரும்பிச் செல்வது வழக்கம் என்று என்னுடைய உதவி மேலாளர் வழியாக அறிந்திருந்தேன்.

எனவே, ‘பேசினது போறும்ப்பா. பேசினா இன்னைக்கெல்லா பேசிக்கிட்டே இருக்கலாம். இனிமே இதுல நா மறுபடியும் தலையிடறதுக்கு முன்னால ஒங்க அண்ணன் என்ன நினைக்கிறார்னு தெரியணும். நாளைக்கு எங்க ஜோனல் மேனேஜர் வராறு.. அதனால நா காலையில ஆஃபீஸ் போனதும் நீ பொறப்பட்டு ஒங்க வீட்டுக்கு போ... அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம். இப்ப சாப்ட்டு படுக்கலாம்.’ என்று கூறிவிட்டு உணவருந்திவிட்டு உறங்கச் சென்றோம்.

என் மனைவி எப்போதுமே படுத்த அடுத்த நொடியே உறங்கிப் போகும் பேறு பெற்றவர். நான் எப்போதுமே அன்று நாள் முழுவதும் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பேட்டில் சுருக்கமாக எழுதிவைத்துவிட்டுத்தான் உறங்கச் செல்வது வழக்கம்.

அன்று நிறையவே எழுத வேண்டியிருந்தது. எழுதி முடித்துவிட்டு உறங்கச் சென்றபோது மணி நள்ளிரவைக் கடந்திருந்தது..

***

அடுத்த நாள் காலை என் மகளை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு வந்து நிலப் பத்திரத்தை  என் மனைவியிடம் கொடுத்து, ‘உங்கப்பாவோ உங்க அண்ணனோ ஏதாச்சும் கோபப்பட்டா நீயும் கோபப்பட்டு ஏதாவது பேசிறாத. அப்படி ஏதாவது பிரச்சினையாச்சினா நீ பேசாம இத குடுத்திட்டு பொறப்பட்டு வந்துரு. அநேகமா இன்னைக்கி சாயந்திரம் ஆறு இல்லன்னா ஏழு மணிவரைக்கும் எங்க ஜோனல் மானேஜர்கூட வெளிய போவேண்டியிருக்கும். அதனால என்னால அங்க வரமுடியாது.’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.

‘இது ஒங்களுக்கு தேவையில்லாத வேலை. பேசாம நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருந்திருக்கலாம். இப்ப இதுல ஏதும் பிரச்சினையாயிருமோன்னு பயமா இருக்குங்க. அதுவும் எங்க மைனியப்பத்தி ஒங்களுக்கு தெரியுமில்லே. எங்கம்மா கூட நீங்க நிலத்தப்பத்தி சொன்னதுமே எதுக்குடி உம்புருஷனுக்கு வேண்டாத வேலைன்னு சொன்னாங்க. நான் சொன்னா நீங்க கேட்டிருக்கவா போறீங்க? இப்ப பாருங்க..’ என்று பேசியவரை, ‘சரிப்பா.. நடந்தது நடந்துபோச்சி இனி அதப்பத்தி பேசி என்ன பண்றது? உங்கப்பாவோ ஒங்க அண்ணனோ ஏறுக்கு மாறா பேசினார்னா, அந்த நிலத்த நாங்களே வாங்கிக்கிறோம்ப்பான்னு சொல்லிட்டு வந்துரு. நகைய அடகு வச்சி வாங்கிரலாம். அப்புறம் எந்த பிரச்சினையானாலும் நாம பாத்துக்கலாம்.’ என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.

‘எதையாவது சொல்லி என் வாய அடைக்கறதே ஒங்களுக்கு பொழப்பா போச்சி’ என்று முனகிக்கொண்டே சென்ற என் மனைவியைப் பார்க்கவும் பாவமாகத்தான் தோன்றியது. சொந்த ஊருக்கு வந்து சந்தோஷமாக மூன்று வருடம் இருந்துவிட்டு செல்லலாம் என்றிருந்தவருக்கு தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தியது என்னுடைய அவசரபுத்திதான். அதற்குத்தான் மனைவி சொல்லே மந்திரம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது.

பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லிவைத்தவர் பின்னால் வருவதை முன்கூட்டியே உணர்ந்து சொல்பவர்கள் பெண்கள் என்பதை மனதில் வைத்து சொல்லியிருப்பார் போலிருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இவ்வுலகம் அதை திரித்து நேர் எதிரான பொருளை தந்திருக்கிறது. தஞ்சையிலிருந்து காரில் வரும் நேரத்தில் என் மனைவி என்னிடம் கூறியதை அப்போது நினைத்துப் பார்த்தேன்.

‘இங்க பாருங்க. தூத்துக்குடி போகணும்னு நா கேட்டதுக்காகத்தான் நீங்க கெஞ்சி கூத்தாடி இந்த டிரான்ஸ்ஃபர வாங்கியிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அதுக்காக ஒரேயடியா எங்க வீட்டாளுங்க கூட உறவாடணும்னு இல்லே. போனோம் வந்தோம்னு இப்ப இருக்கற மாதிரித்தான் இருக்கணும். முக்கியமா எங்கண்ணன் விஷயத்துல முன்னே மாதிரி ஜாஸ்தியா உரிமை எடுத்துக்காதீங்க. எங்க மைனி குடும்பமும் தூத்துக்குடிதாங்கறத மறந்துராதீங்க. எங்கண்ணனுக்கு வேண்டியத அவங்களே பார்த்துப்பாங்க.’

அவர் அன்று கூறியது இப்போது அசரீரிபோல் ஒலித்தது. ஆனாலும் அதை குத்திக்காட்டி என்மேல் குற்றம் காண்பவரல்ல என் மனைவி. நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்து என்னை என்வழியிலேயே போகவைத்தவர் அவர்.

அவர் கிளைம்பிச் சென்றதும் நான் குளித்து முடித்து அலுவலகம் சென்றேன்.

இன்று என் வட்டார மேலாளர் வருவது என்னுடைய சக பணியாளர்களுக்கும் தெரியுமாதலால் எல்லோரும் ஒன்பதரை மணிக்கே ஆஜராகியிருந்தனர்.

என்னுடைய வட்டார மேலாளரை எனக்கு முன்பின் அறிமுகமிருக்கவில்லை. அவர் பெரும்பாலும் அவருடைய சொந்த மாநிலமான கேரளத்திலேயே பணிபுரிந்திருந்ததால் அவருடைய பெயரை நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதுவரை அவரை சந்தித்திருக்கவில்லை.

ஆகவே அவரைப்பற்றி என்னுடைய தலைமைக்குமாஸ்தா கூறியதை வைத்துத்தான் அவரை எடைபோட்டிருந்தேன். ‘சார் கொஞ்சம் பந்தா பண்ணுவார் சார். ஆனா ரொம்ப நல்ல மனுஷன். அவர் வந்தா பிராஞ்சுக்குள்ள பெரிசா ஒன்னும் பாக்க மாட்டார். பார்ட்டீசுங்கள பாக்கணும்னுதான் நிப்பார். அதனால நீங்க ஒரு நாலு பார்ட்டீசுங்கக்கிட்ட சொல்லி அவர் வந்ததும் எங்க ஆஃபீசுக்கு, ஃபேக்டரிக்கு நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்ல வச்சிட்டீங்கன்னா போறும் சார்.’

நானும் அவர் விசிட்டுக்கு வருகிறேன் என்று கூறியதுமே ஏற்கனவே கடன் பெற்றிருந்த மூன்று தொழிலதிபர்களிடம் கூறி வைத்திருந்தேன். அவர்களுக்கும் என்னுடைய வட்டார மேலாளரை நன்றாக தெரிந்திருந்தது. அவர் வருகிறார் என்று கூறியதுமே, ‘வரட்டும் சார். நாங்க பாத்துக்கறோம். சார் வந்ததும் நீங்க ஃபோன் பண்ணுங்க போறும். நானே வந்து கூட்டிக்கிட்டு வந்துடறேன் என்று சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் கூறவே என்னுடைய பணி எளிதாகிப் போனது என்று நினைத்தேன்.

ஆனால் நான் நினைத்ததற்கு எதிர்மறையாக என்னுடைய வட்டார மேலாளர் என்னுடைய கிளையின் முந்தைய இரு மேலாளர்களுடன் வந்திறங்கியபோது நான் மலைத்துப்போனேன்.

‘டிபிஆர். என்னோட இந்த விசிட் சாதாரண விசிட் மட்டுமில்லாம ஒங்க ஜாய்னிங் ரிப்போர்ட்ல இவங்க ரெண்டு பேரையும் பத்தி நீங்க ரிப்போர்ட் பண்ணத நேர்ல வெரிஃபை பண்ற விசிட்டாவும் ஆக்கிரலாம்னு நினைச்சி இவங்களையும் திருவனந்தபுரத்துக்கே வரச்சொல்லி என்கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். என்னடா இவன் முன்ன பின்ன சொல்லாம கூட்டிக்கிட்டு வந்திருக்கானேன்னு நினைக்காதீங்க. நான் இதுக்காகத்தான் வரேன்னு சொன்னா நீங்க எங்க டாக்குமெண்ட்ச டாக்டர் பண்ணிருவீங்களோன்னு இவங்க ஃபீல் பண்ணாங்க.. அதான் சொல்லலே. தப்பா நினைச்சிக்காதீங்க. இப்ப பாருங்க. இனி இவங்க குத்தம் சொல்றதுக்கு வழியே இருக்காதில்லே.’

அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தவறு செய்தவர்கள் கூறியதைக் கேட்டு என்னை சந்தேகப்பட்டவரை என்னவென்று சொல்வது?

‘அதனாலென்ன சார். நீங்க தாராளமா பார்க்கலாம். எனக்கு எந்த பிரச்சினையுமில்லே.’ என்றேன்  அசடு வழிந்தவாறு.

என்னுடைய முந்தைய இரு மேலாளர்களும் என்னை ஏதோ எதிரியைப் பார்ப்பதுபோல பார்த்தனர்..

தொடரும்..

23 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 139

என்னுடைய குரலில் இருந்த நிதானம் ஆய்வாளருடைய முகத்தில் அபிரிதமான கோபத்தை காட்டியது.

ஒரு வினாடி என்ன பேசுவதென தெரியாமல் அவர் எதிரே அமர்ந்திருந்த எங்கள் மூவரையும் மாறி, மாறி பார்த்தார். என்னருகில் அமர்ந்திருந்த என்னுடைய மைத்துனர் மேசைக்கடியில் என் கரங்களைப் பற்றி அழுத்தியதிலிருந்து அவருக்கும் நான் பேசியதில் அவ்வளவாக விருப்பமில்லை என்று தெரிந்தது. அவர் என்னைப் பார்த்த பார்வை ‘இது தேவையா மச்சான்?’ என்பதுபோலிருந்தது.

‘என்ன சார் வெளையாடறீங்களா? நீங்க யார்கிட்ட மோதுறீங்கன்னு ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா? நீங்க பாட்டுக்கு மூனுவருசம் கழிச்சி இந்த ஊரவிட்டு இன்னொரு ஊருக்கு போயிருவீங்க. ஆனா ஒங்க மச்சான்? இதே ஊர்ல இன்னும் இருக்கணுமே சார். அத யோசிச்சி பாருங்க. நீங்க பேசாம சமாதானமா போறதுதான் நல்லது சொல்லிட்டேன்.’

‘ஆமா -------------- பெர்னாண்டோ..அதான் ஒனக்கு நல்லது. ஒன் மச்சான் பேச்ச கேட்டுட்டு முட்டாத்தனமா ஏதாச்சும் செஞ்சிட்டு பெறகு அவஸ்த படாதா.’ என்று என்னுடைய மைத்துனரைப் பார்த்து ஏக வசனத்தில் பேசிய அந்த வயதானவரைப் பார்த்து முறைத்தேன்.

‘இவர் யார் சார் இதுல தலையிடறதுக்கு?’ என்றேன் என்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல். ‘இந்த நிலத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்னு நா தெரிஞ்சிக்கலாமா?’

ஆய்வாளர் பேச முயல்வதற்குள் அந்த பெரியவர் இடைமறித்து, ‘தம்பி.. மேனேஜர் தம்பி.. வயசு வித்தியாசம் பாக்காமா பேசாதீங்க. நாந்தான் அவருக்கு எல்லாமே.. நீங்க ஒங்க நிலம்னு சொல்லிக்கிட்டு நிக்கறீங்களே அந்த மாதிரி நூறு எடம் எம் மொதலாளிக்கு இருக்குய்யா.. அதெல்லாமே எம் மேற்பார்வையிலதான் இருக்கு. நீங்க வச்சிக்கிட்டிருக்கற பத்திரம் எல்லாமே போலிய்யா.. அது தெரியாம வாங்கிட்டு.. வக்கீல பார்த்தேன்.. வில்லங்கம் பார்த்தேன்னுக்கிட்டு.. சரியான விவரம் தெரியாத ஆளாருக்கீங்களே.. நீங்கல்லாம் என்னத்தத்தான் மேனேஜரா இருந்து குப்பைய கொட்டறீங்களோ..’ என்றார் ஏளனத்துடன்.

என்னுடைய வழக்கறிஞர் கூறிய அறிவுரையை அந்த நொடி சுத்தமாக மறந்துபோனேன். அந்த பெரியவர் என்னை மட்டுமல்ல என்னுடைய மேலாளர் பதவியையுமே அவமானப்படுத்திவிட்டதாக தோன்றிய அந்த வார்த்தைகள்தான் என்னை உசுப்பிவிட்டிருக்க வேண்டும். என்னைக் கட்டுப்படுத்த முயன்ற என்னுடைய மைத்துனரையும் மீறி ஆவேசத்துடன், ‘சார்.. இது ரொம்ப ஓவர். ஒன்னு இந்த ஆள் இருக்கணும். இல்ல நாங்க இருக்கணும். நீங்க விசாரிக்கணும்னு கூப்ட்டீங்க. எங்க வக்கீல் போகவேணாம்னு சொல்லியும் வந்திருக்கேன். நீங்க இந்த நிலம் விஷயமா ஏதாச்சும் கேக்கணும்னா கேளுங்க. பதில் சொல்றேன். இடையில இவர் யார் சார்? இந்த நிலத்துக்கு பாத்தியஸ்தரா? இல்லே இவர் ஏதாச்சும் என் மச்சான் மேல புகார் குடுத்திருக்காரா? இல்லேல்லே.. அப்புறம் எதுக்கு இங்க ஒக்காந்துக்கிட்டு கிண்டலா பேசறார்? இவர வெளிய அனுப்பிட்டு கேக்கறாதாருந்தா கேளுங்க. இல்லேன்னா எனக்கு வேற வேலையிருக்கு. அப்புறமா சொல்லியனுப்புங்க, வந்து பதில் சொல்றோம்.’ என்று எழுந்து நின்ற நான் அப்போதும் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்த என் மைத்துனரைப் பார்த்து, ‘வாங்க.. போலாம்.’ என்றேன்.

என்னுடைய ஆவேசத்தை ய்வாளரே எதிர்பார்க்கவில்லையென்பது அவர் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்ததிலிருந்தே தெரிந்தது. என்னுடைய குரலைக் கேட்டு அவருடைய அறைக்கு வெளியே வராந்தாவில் அமர்ந்திருந்த பலரும் வாசல்வழியே எட்டிப்பார்க்கவே ஆய்வாளர் எழுந்து, ‘சார் கோபப்படாதீங்க. ஒக்காருங்க.’ என்றார்.

நான் அமராமல் நின்றுக்கொண்டு அந்த பெரியவரைப் பார்த்தேன். அவர் என்னுடைய கோபத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரு ஏளனப்புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

‘சார் நான் ஒக்காரணும்னா அவர் வெளிய போகணும்.’ என்றேன் பிடிவாதத்துடன்.

ஆய்வாளரின் முகத்தில் கோபத்தைவிட சலிப்பே தெரிந்தது. அந்த பெரியவரைப் பார்த்து, ‘சார் ஒன்னு வெளிய போய் இருங்க. இல்லன்னா பேசாம இருங்க. அதான் நா விசாரிச்சிக்கிட்டிருக்கேன் இல்லே..’ என்றார். பிறகு என்னைப் பார்த்து ‘நீங்க ஒக்காருங்க சார். அவர் இனி வாய் திறக்க மாட்டார். அதற்கு நான் பொறுப்பு.’ என்றார்.

என் மைத்துனரும் என்னைப் பார்த்து ‘ஒக்காருங்க மச்சான்.’ என்று சாடை காட்டவே நான் அமர்ந்து, ‘சார்.. இவங்க நேத்து ராத்திரி வந்து எங்க நிலத்துல வேலியடிச்சது சட்டவிரோதமான செயல். நீங்க ஒத்துக்கறீங்களா இல்லையா?’ என்றேன்.

அவர் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். ‘ஒத்துக்கறேன் சார். ஆனா நீங்க என்ன செஞ்சிருக்கணும்? ஒடனே இங்க வந்து புகார் கொடுத்திருக்கணுமா இல்லையா? அதவிட்டுட்டு நீங்க ஒங்க அடியாளுங்கள கூட்டிக்கிட்டு போயி பிரிச்சி போட்டா என்ன அர்த்தம்? அத கேட்டதும் அவரும் அவரோட ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து.. இப்ப என்னாச்சி..? சரிய்யா.. அந்த கைகலப்புல நீங்க அவரோட ஆளுங்கள அடிச்சி காயப்படுத்திட்டாங்கன்னு ஒங்க மேல புகார் கொடுத்திருக்கலாமில்லே.. அப்படி குடுத்திருந்தா ஒங்க மேல ஆக்ஷன் எடுக்க வேண்டி வந்திருக்குமா இல்லையா?’

அவரே மறைமுகமாக எதிரணிக்கு யோசனை கூறுவதுபோலிருந்தது.நாடகப் பாணியில்  வாயை வலக்கரத்தால் மூடிக்கொண்டு அமர்ந்திருந்த பெரியவரும் மூடியிருந்த கைக்குப் பின்னால் புன்னகைப்பது தெரிந்தது.  ஆய்வாளர் கூறியது அடாவடித்தனமாக தோன்றினாலும் அதன் பின்னாலிருந்த நியாயத்தைப் புரிந்துக்கொண்டு வாளாவிருக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்தேன்.

எல்லாம் என்னுடைய மைத்துனரின் புத்திக்கெட்டதனத்தால் வந்த வினை. இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று காலையிலேயே என்னிடம் கூறியிருந்தால் அப்போதே தடுத்து நிறுத்தியிருப்பேன். ஒருவேளை அது என்னுடைய மாமானரின் யோசனையாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் அதே சமயம் பதில் கூறாமல் இருந்தால் அது ஆய்வாளருக்கும் எதிரணிக்கும் சாதகமாகப் போய்விடும் என்று நினைத்தேன். ‘சார் அது எங்க நிலம். அதுல நேத்து ராத்திரி நானும் மேஸ்திரியும் போய் அளந்து அஸ்திவாரம் போடறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் செஞ்சிட்டு வந்திருக்கோம். இன்னைக்கி காலைல எழுந்து பூஜை பண்றதுக்கு போய் நிக்கறோம். எங்க நிலத்துல வேற யாரோ முட்டாப் பய வந்து வேலியடிச்சிட்டு போயிருக்கான். நாங்க அத பார்த்தவுடனே பிச்சியெறிஞ்சிட்டு எங்க பூஜைய நடத்திட்டு போயிருக்கணும். அதச் செய்யாம விட்டதுதான் தப்புன்னு இப்ப நா நினைக்கிறேன். இப்பவும் சொல்றேன்.. எங்க நிலத்துல அத்துமீறி நுழைஞ்சி வேலியடிச்ச இவங்க பேர்ல இன்னைக்கே கேஸ் போடப்போறோம். இது சிவில் மேட்டர். இதுல ஒங்கக் கிட்ட வந்து புகார் கொடுத்து க்ரிமினல் கேசா மாத்துற ஐடியா எங்களுக்கு இல்லை.. இவங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தா கோர்ட்ல வந்து பேசிக்கட்டும். இதுல ஒங்களுக்கு எந்தவிதமான ரோலும் இல்லை¨.. அவ்வளவுதான்.. அதனால எங்கள இனியும் தொந்தரவு பண்ணாதீங்க.. நாங்க வரோம்.’ என்று கிளம்பினேன்..

ஆனால் என்னுடைய மைத்துனரோ இருந்த இடத்திலிருந்து எழுவதாக தோன்றவில்லை.. ‘எதுக்கு ஒக்காந்திருக்கீங்க? வாங்க போலாம்.’ என்றேன்.

அவருடைய அந்த செயல் ஆய்வாளருக்கு சாதகமாக போய்விட்டது. அவர் உடனே.. ‘சார்.. ஒரு நிமிஷம் இருங்க. இந்த பெரியவரப் பத்தி இவ்வளவு நேரம் பேசினீங்களே.. இப்ப நா கேக்கறேன். நீங்க யார் சார் இந்த விஷயத்துல தலையிட்டு நியாயம் பேசறதுக்கு? நிலத்த வாங்கனவர் இங்க இருக்கார். இவருக்கே நீங்க பேசறது பிடிக்கலைன்னு தெரியுது. நீங்க சரியா பார்த்து வாங்காம போனது முட்டாள்தனம். அதுக்கு இவர் மாட்டிக்கிட்டு முளிக்கார். நீங்க தப்ப பண்ண தப்பெ மறைக்கறதுக்காக வீம்பா வம்பு பண்றீங்க.’ என்றார் கோபத்துடன்.

அவரருகில் அமர்ந்த பெரியவர் இப்போது வெளிப்படையாகவே சிரிக்க ஆரம்பித்தார்.
ஆய்வாளருக்கு அவருடைய சிரிப்பு எரிச்சலை மூட்டியது. ‘சார் நீங்க வேற.. சும்மா இருங்க சார். நானே இத எப்படியாவது சுமுகமா முடிச்சிரலாம்னு பாக்கேன். நீங்க வேற..’

அவர் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.

நான் என்னுடைய மைத்துனருடைய எண்ணத்தைப் புரிந்துக்கொள்ள முடியாமல் ஒரு நொடி தடுமாறினேன். இருப்பினும், ‘சார் நீங்க பேசறது கொஞ்சம்கூட நல்லால்லை.. நீங்களா கூப்டுத்தான் நா வந்தேன். நீங்க சொல்றா மாதிரி எனக்கும் இந்த நிலத்துக்கு சம்மந்தம் இல்லைதான். ஆனா நா ஏதோ விசாரிக்காம வாங்குனா மாதிரி பேசி எனக்கும் என் மச்சானுக்கும் இடையில பிரச்சினைய உண்டாக்கிறாதீங்க. நீங்க சமாதானமா போங்கன்னு சொல்றதோட அர்த்தம் எனக்கு விளங்கலை.. ஒன்னு வேணா பண்ணலாம்.. நாங்க வாங்கன தொகைய, பத்திர செலவு, புரோக்கர் செலவு எல்லாத்தையும் கொடுத்திரச் சொல்லுங்க. இவங்க பேருக்கே நிலத்த எழுதிக்குடுத்திடறோம். என்ன சொல்றீங்க?’

என்னுடைய மைத்துனர் திடீரென்று நிமிர்ந்து என்னைப் பார்த்த பார்வையில் என்னுடைய யோசனையை அவரும் ஆதரிப்பதாகவே தோன்றியது. எப்படியாவது இந்த தொல்லையிலிருந்து விடுபட்டால் போதும் என்று நினைத்தார் போலிருக்கிறது. அவரையும் குறை கூறி பயன் இல்லை. அவரோ எந்த நேரத்திலும் வரவிருந்த கப்பல் ஆர்டரை காத்திருப்பவர். இந்த நேரத்தில் வழக்கு என்று தொடுத்தால் எங்கே தூத்துக்குடியிலேயே இருக்க வேண்டி நேருமோ என்று நினைத்திருப்பார்.

என்னுடைய யோசனையை அந்த பெரியவர் ஏற்றுக்கொளிகிறாரா என்ற தோரணையில் அவரைப் பார்த்தார் ஆய்வாளர். ஆனால் அவரோ ஏளனத்துடன், ‘என்ன சார் நீங்க? அந்த நிலத்த நாங்க விக்கவே இல்லை.. எங்க நிலம்னு சொல்லிக்கிட்டிருக்கோம். எவனோ ஒரு களவாணிப்பய அத தன் நிலம்னு இவர ஏமாத்தி வித்திருக்கான். எங்க நிலத்த நாங்க எதுக்கு மறுபடியும் காசு குடுத்து வாங்கறது? இதென்ன கிறுக்குத்தனமா இருக்கு?’ என்றார் ஆய்வாளரைப் பார்த்து.

அவர் பேசிய தோரணை ஆய்வாளருக்கே பிடிக்கவில்லை என்று அவருடைய அடுத்த கேள்வியிலிருந்தே விளங்கியது. ‘சார்.. அது ஒங்க நிலம்னு ஏதாச்சும் அத்தாட்சி இருக்கா? இருந்தா அத காமிங்க?’ என்றார் அவரைப் பார்த்து.

அவர் இதற்காகவே காத்திருந்ததுபோல், ‘சார், முதல்ல இவங்கக் கிட்டருக்கற பத்திரத்த காட்டச் சொல்லுங்க. அப்புறமா எங்கள கேளுங்க. இத மாதிரி நூறு நிலம் எங்க மொதலாளிக்கிட்ட இருக்குன்னு ஒங்களுக்கு தெரியும்தானே..?’ என்றார்.

என்னுடைய மைத்துனரோ ஒரு அப்பாவி. ‘மச்சான் அந்த பத்திரத்த கொண்டு வந்திருக்கீங்களா?’ என்றார் உடனே.

நான் என்னுடைய வழக்கறிஞருடைய சமயோசித யோசனையை நினைத்துப் பார்த்தேன். இல்லை என்று தலையை அசைத்தேன்.

பிறகு ஆய்வாளரைப் பார்த்து, ‘சரி சார். இவர பத்திரங்கள எடுத்துக்கிட்டு எங்க வக்கீல் ஆஃபீசுக்கு வரச்சொல்லுங்க. நாங்களும் எங்க பத்திரத்த எடுத்துக்கிட்டு வரோம். ரெண்டையும் அவரே பார்த்துட்டு சொல்லட்டும்.’ என்றேன்.

பெரியவரோ ஏளனத்துடன் என்னைப் பார்த்தார். ‘அய்யா மேனேசர் அய்யா.. எங்களுக்கும் வக்கீல் இருக்காருய்யா.. அதுவும் எங்க தியேட்டர் முன்னலயே.. நீங்க வேணும்னா அங்க வாங்க.. பேசிக்கிருவோம்.’ என்று அவருடைய வழக்கறிஞருடைய பெயரைச் சொன்னார். நான் அதிர்ந்து போனேன்.

தொடரும்...

22 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 138

‘ஆமா சார், அவர் என் மைத்துனர்தான். அவர் உங்க ஸ்டேஷன்லதான் இருக்காரா?’ என்றேன்.

ஆய்வாளர் எரிச்சலுடன், ‘ஆமா சார். அவர் உங்க பேர சொன்னதாலதான் நா ஒங்கள கூப்ட வேண்டியதா போச்சி. வர்றீங்களா இல்லையா?’ என நான் உடனே, ‘இதோ இன்னும் அரை மணியில வரேன் சார்.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு என் மனைவியைப் பார்த்தேன்.

‘என்னங்க வரேன்னுட்டு பேசாம ஒக்காந்திருக்கீங்க? புறப்படுங்க. நானும் வரேன். வீட்டுக்கு போயி அப்பாவையும் கூட்டிக்கிட்டு போவோம்.’ என்ற மனைவியைப் பார்த்து புன்னகை செய்தேன்.

சற்று நேரம் முன்னால்தான் இந்த விஷயத்துல நாம இனி தலையிட வேண்டாங்க. எங்கப்பா பேசினது எனக்கே பிடிக்கலை.. அவங்களாச்சி அந்த நிலம் ஆச்சி என்று சொன்னவர் இப்போது அண்ணனுக்கு ஆபத்து என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்கே வருகிறேன் என்று நிற்கிறார்.

‘அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ போய் ஒங்கப்பாக்கிட்ட ஒன்னுக்கு ரெண்டா சொல்லி.. அவர் ஏற்கனவே ஒரு ஹார்ட் பேஷண்ட்.. ஒன்னு கெடக்க ஒன்னு யிரும். நான் போய் ஒங்கப்பா ஃப்ரெண்ட், வக்கீல பார்த்து பேசிட்டு.. வேணும்னா அவர கூப்டுக்கிட்டு போரேன். எங்க வக்கீல் சரிவர மாட்டார்.’ என்று எதற்கும் இருக்கட்டும் என்று பத்திரங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

வழக்கறிஞரின் வீட்டையடைந்தபோது என்றைக்கும் இல்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாசலையொட்டியிருந்த அவருடைய அலுவலக அறையிலிருந்த ஒரு சிப்பந்தியிடம் என்னுடைய அடையாள அட்டையை கொடுத்தனுப்பி அவசரம் என்று கூறும்படி கேட்டேன். அவரும் அடுத்த நிமிடமே வந்து, ‘ஒங்கள ஐயா வரச்சொன்னார் சார்.’ என்றார்.

நான் வழக்கறிஞருடைய அறைக்குள் நுழைந்து நான் வந்த விஷயத்தை சுருக்கமாகக் கூறினேன். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரம் என்ன கூறுவதென தெரியாமல் யோசித்தார். பிறகு அதே காவல்நிலையத்திலிருந்த சட்டம் ஒழுங்கு பிரிவின் துணை ஆய்வாளரை அழைத்து விசாரித்தார்.

சிறிது நேரம் தொலைப்பேசியில் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு என்னை பார்த்த பார்வையிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறதென்பது எனக்கு விளங்கியது.

நான் பதற்றத்துடன் ‘என்ன சார். ஏதாவது பிரச்சினையா?’ என்றேன்.

‘ஆமாம் சார். நம்ம ------------- (என் மைத்துனர்) தேவையில்லாம நேரடியா போய் பிரச்சினையில மாட்டிக்கிட்டார்.’

‘என்னன்னு சொல்லுங்க சார். காலையில நான் போய் என் Qப்ரெண்ட்ஸ பார்த்துட்டு வரேன்னுதான போனார்?’

‘ஆமாM சார். அவர் ஃப்ரெண்ட்சோட போயி நிலத்துல போட்டிருந்த வேலிய பிச்சி எறிஞ்சிருக்கார். எதிர்த்த வீட்லருக்கற ஆள் ஒடனே அந்த தியேட்டர் ஓனருக்கு ஃபோன் பண்ண அந்த ஆள் தோனிக்கார பயல்களோட போயி ஒங்க மச்சானையும் அவர் கூட வந்த ஆளுங்களயும் அடிச்சதுமில்லாம அவருக்கு தெரிஞ்ச இந்த எஸ்.ஐ. வச்சி ஸ்டேஷனுக்கு பிடிச்சிக்கிட்டு போயிருக்காண்ங்க. ஒங்க மச்சான் ஒங்க பேரையும் போஸ்ட்டையும் சொன்னதும் எஸ்.ஐ. யோசிச்சிருக்கார்.  இன்னும் கேஸ் புக் பண்ணலையாம். அதான் ஒங்கள கூப்ட்டு அனுப்பியிருக்கார்.’

நான் சற்று நேரம் யோசித்தேன். ‘ சார். நம்ம நிலத்துல அந்த ஆள் அத்துமீறி வேலியடிச்சது குத்தமில்லையாமா? அத இவர் பிரிச்சியெறிஞ்சதுதான் குத்தமாம்மா? என்ன சார் அக்கிரம்?’ என்றேன். கோபத்தில் என்னுடைய குரல் தடுமாற வழக்கறிஞர், ‘சார் கோபப்படாதீங்க. கோபத்துல நீங்களும் போய் ஏதாவது ஏடாகூடமா பேசிறாதீங்க. நிதானமா யோசிங்க. அந்த தியேட்டர்காரனுக்கு ரொம்ப செல்வாக்கு இருக்கு இந்த ஊர்ல.. போலீஸ் எல்லாம் அந்த ஆள் கையிலதான்..’ என்றார்.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன சார் சொல்ல வரீங்க? அப்ப இதுக்கு என்னதான் வழி?’

அவர் அவருடைய அறையிலிருந்த வேறு சில வாடிக்கையாளர்களை சிறிது நேரம் வெளியே காத்திருங்கள் என்று அனுப்பிவிட்டு, ‘மிஸ்டர் ஜோசப். நான் ஒங்க கூட வரணும்னா வரேன். ஆனா இப்பத்தைக்கு அது தேவையில்லைன்னு நினைக்கிறேன். நீங்க ஒரு பேங்க் மேனேஜர். ஒங்கக் கிட்ட ஜாக்கிரதையாத்தான் நடந்துப்பார். அந்த எஸ்.ஐ. படு உஷாரான ஆளுதான். என்ன கொஞ்சம் அடாவடியா பேசுவார். சரியா விசாரிக்காம எதையும் செய்ய மாட்டார். அதனாலதான் இன்னும் கேஸ் புக் பண்ணாம இருக்கார்.  நீங்களும் நிதானமா என்ன ஏதுன்னு விசாரிங்க. அவர் ஏதாச்சும் காம்ப்ரமைசா போங்கன்னு சொன்னா யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டு வந்துருங்க. நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். என்ன சொல்றீங்க?’ என்றார்.

எனக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. என்னதான் சட்டம் பேசினாலும் வழக்கறிஞர்கள் அனாவசியமாக நகரிலிருந்த பணமுதலைகளையும், அரசியல்வாதிகளையும் காவல்துறையில் உள்ளவர்களையும் விரோதித்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்பதை இரண்டு வழக்கறிஞர்களுடன் பழகியதிலிருந்தே தெரிந்து வைத்திருந்தேன். இவரை அழைத்துக்கொண்டு சென்று இவர் அவர் முன்னிலையில் வைத்தே எதுக்கு சார் வம்பு, காம்ப்ரமைஸ் பண்ணிக்குங்களேன் என்று கூறிவிட்டால் நம்மால் ஒன்றும் பேச முடியாமல் போய்விடுமே என்றும் நினைத்தேன்.

‘சரி சார்.’ என்று கூறிவிட்டு பத்திரங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

‘அந்த பத்திரக்கட்ட ஸ்கூட்டர்லயே வச்சிட்டு போங்க சார். ஸ்டேஷனுக்குள் கொண்டு போயிராதீங்க. அதுதான் இப்ப ஒங்க கிட்டருக்கற ஒரே ஆதாரம். போலீஸ்காரங்கள நம்ப முடியாது. எதையாச்சும் சொல்லி ஒங்கக்கிட்டருந்து அத பறிக்க பாப்பாய்ங்க.. அது வக்கீல்கிட்ட இருக்கு. வேணும்னா அவர் ஆஃபீஸ்ல வச்சி யார் வேணும்னாலும் பார்த்துக்கலாம்னு சொல்லிருங்க. வேணும்னா எம் பேரை யூஸ் பண்ணிக்குங்க.’ என்றார் என்னுடைய வழக்கறிஞர்.

‘சரி சார். அப்படியே செய்யறேன். ஒங்க அட்வைசுக்கு நன்றி’ என்று கூறிவிட்டு என்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு அடுத்த பத்து நிமிடத்தில் காவல் நிலையத்தை அடைந்தேன்.

எப்போதும் போலவே காவல்நிலையம் பரபரப்பாக இருந்தது. தூத்துக்குடி நகரில் அந்த நிலையம்தான் மைய நிலையம் என்று அதை பார்த்தாலே தெரிந்தது.

நிலையத்திற்கு முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான வாகனங்கள். வழக்கில் பிடிபட்டு கேட்பாரற்று கிடந்தன. பல வாகனங்களில் சக்கரங்களைத்தவிர உருப்படியாய் ஒன்றும் காணவில்லை. எல்லாம் நம்முடைய காவல்துறையினரின் கைங்கரியம் என்று நினைக்கிறேன். வழக்கு முடிந்து வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நேரத்தில் பழைய இரும்புக்கு போடக்கூடிய நிலையில்தான் வாகனம் ஒப்படைக்கப்படும்போலிருக்கிறது.

நான் என்னுடைய வாகனத்தை நிலையத்திலிருந்து சற்று தள்ளியே நிறுத்தினேன். நான் கொண்டுவந்திருந்த பத்திரத்தை வாகனத்தின் முன்னாலிருந்த பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு நிலையத்திற்குள் நுழைந்து என்னை அழைத்திருந்த துணை ஆய்வாளருடைய பெயரைக் கூறினேன். அதற்குள் அவருடைய அறைவாசலில் கிடந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்த என்னுடைய மைத்துனர் என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தார்.

‘மச்சான் நீங்க அவர் கூப்டதும் வரலைன்னும் ரொம்பவும் எரிச்சலோட இருக்கார். ஒங்க மச்சான் என்னவே பெரிய கலெக்டர் மாதிரி பிஹேவ் பண்றாருன்னு கேட்டுக்கிட்டே இருக்கார்.’ என்றார்.

நான் அவருக்கு மறுமொழி கூறுவதற்கு முன் அறையினுள் இருந்து வெளியே வந்த  ஆய்வாளர் என்னையும் என்னுடைய மைத்துனரையும் பார்த்துவிட்டு, ‘என்னங்க இவர்தான் ஒங்க மச்சானா? கூட்டிக்கிட்டு வாங்க.’ என்றாவறு அவருடைய அறைக்குள் திரும்பிச் சென்றார்.

அவருடைய மேசைக்கு அருகிலிருந்த வேறொரு இருக்கையில் வயதான ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததுமே பழைய கறுப்பு வெள்ளை படங்களில் வருவாரே ஒரு கணக்குப் பிள்ளை அவருடைய நினைவு வந்தது. அந்த திரையரங்கு உரிமையாளரின் கணக்குப் பிள்ளை அல்லது குமாஸ்தாவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இருக்கையில் அமர்ந்த காவல்துறை ஆய்வாளர் என்னைப் பார்த்து, ‘என்ன சார் சாவகாசமா வர்றீங்க? என்ன சொன்னார் ஒங்க வக்கீல்? போகாதீங்கன்னு சொன்னாரா?’ என்றார் ஏளனத்துடன்.

‘கொஞ்சம் அடாவடியா பேசுவார். நீங்களும் கோபப்பட்டு ஏடாகூடமா ஏதும் பேசிறாதீங்க சார்’ என்ற என்னுடைய வழக்கறிஞரின் அறிவுரை நினைவுக்கு வரவே நான் பொறுமையுடன், ‘என்னெ வேறென்ன பண்ண சொல்றீங்க சார்? நீங்க திடீர்னு கூப்டு வாங்கன்னா நா என்னேன்னு நினைக்கிறது? அதான் வந்திட்டேன்லே, என்ன கேக்கணுமோ கேளுங்க.’ என்றேன்.

‘ஒங்க மச்சான் என்ன பண்ணாருன்னு தெரிஞ்சிருக்குமே. அவர் பண்ண அடாவடித்தனத்துக்கு புடிச்சி உள்ள போட்டிருக்கணும். நம்ம --------- மச்சாது அய்யாத்தான் (தியேட்டர் உரிமையாளரின் பெயர்) கேஸ் புக்க பண்ண வேணாம் காம்ப்ரமைஸ் பண்ணி விட்டுருங்க சார் போறும்னார். அதனாலதான் பொறுமையா ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கேன்.’ என்றார்.

அவருடைய வலப்புறத்தில் அமர்ந்திருந்த பெரியவரும் பெருந்தன்மையுடன் ஆமாம் என்று தலையை ஆட்டினார். நான் என் மைத்துனரைப் பார்த்தேன். பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் காவல்நிலையத்திலேயே அமர்ந்திருந்த களைப்பு நன்றாகத் தெரிந்தது. அவர் முகத்திலும் இதிலிருந்து விடுபட்டால் போறும் என்பது தெரிந்தது.

ஆனாலும் நான் அதற்கு நேர்மாறான மனநிலையில் இருந்தேன். இது நான் பார்த்து வாங்கிய நிலம். பத்திரத்தைப் பொறுத்தவரையில் எந்த வில்லங்கமும் இல்லை என்று நகரத்தின் இரு மூத்த வழக்கறிஞர்களால் சான்று பகரப்பட்ட நிலம். முழுவிலையும் கொடுத்து சட்டபூர்வமாக பத்திரம் தயாரித்து பதிவு செய்யப்பட்டிருந்த நிலம். இதில் அத்துமீறி நுழைந்து வேலியடித்தவருடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தீர்மானத்துடன் அவருடைய மேசைக்கு முன்னாலிருந்த இருக்கைகளில் ஒன்றில் நான் அமர்ந்துக்கொண்டு அதுவரை நின்றுக்கொண்டிருந்த என்னுடைய மைத்துனரையும் என்னருகில் அமரச் செய்தேன்.

பிறகு ஆய்வாளரைப் பார்த்து, ‘நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு விளங்கல சார். இந்த நிலம் நான் முன்னால நின்னு எங்க பேங்கோட அட்வகேட்ட கன்சல்ட் பண்ணி முழு பர்சேஸ் ப்ரைசுக்கும் பத்திரம் போட்டு ரெஜிஸ்டர் பண்ண நிலம். இதுல ஒருத்தர் அத்துமீறி ராத்திரியோட ராத்திரியா வந்து வேலிய அடிச்சிட்டு போயிருக்கார். அது நீங்க சொன்னீங்களே --------- மச்சாது அய்யா.. அவராத்தா இருக்கும்னு இப்ப கன்ஃப்ரம்டா தெரியுது.. இப்ப உங்கக்கிட்ட அவர் மேல என் மச்சான்  ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுப்பார். வாங்கிக்கறீங்களா?’ என்றேன் நிதானமான குரலில்..

தொடரும்..

19 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 137

‘நீங்க போங்க சார். நான் ஒங்க பின்னாலேயே வரேன்.’ என்றேன் காவலரைப் பார்த்து.

அவர் சற்று தயங்கி, ‘சரி சார். நான் சைக்கிள்லதான் வந்திருக்கேன். நீங்க நம்ம கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு பக்கத்துலருக்கற ஸ்டேஷனுக்கு வந்துருங்க.’ என்று கூறிவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறி கிளம்பினார்.

நானும் என் மனைவியும் வீட்டினுள் செல்ல இருந்த நேரத்தில் கீழ் போர்ஷனில் வசித்தவர் வெளியே வந்தார்.

‘ஏறக்குறைய ஒரு மணி நேரமா காத்துக்கிட்டிருந்தார் சார். நானும் நீங்க போங்க சார் அவர் வந்ததும் சொல்றேன்னு சொன்னேன், கேக்கல. சரி வீட்டுக்குள்ளாற வந்து ஒக்காருங்கன்னு சொனேன். அதயும் கேக்காம இங்கனயே நின்னுக்கிட்டிருந்தார். என்ன சார் ஏதாவது பார்ட்டிங்க விஷயமா?’

எனக்கே தெரியாதிருக்கும் விஷயத்தைப் பற்றி இவரிடம் என்ன சொல்ல என்று நினைத்துக்கொண்டு நின்றேன் சிறிது நேரம். பிறகு, ‘எனக்கே தெரியலை சார். போய்த்தான் பாக்கணும். இன்னைக்கி காலைலருந்து ஒரு கோல்ட் பார்ட்டி பிரச்சினை பண்ணிக்கிட்டே இருந்தார். அவர்தான் ஏதாச்சும் போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டாரோன்னு தெரியலை.’ என்றேன்.

என்னுடைய பதிலில் அவர் திருப்தியடையவில்லையென்பது அவருடயை முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ஒருவேளை நானே ஏதாவது தவறு செய்துவிட்டு அகப்பட்டுக்கொண்டிருப்பேன் என்று நினைத்திருந்தாரோ என்னவோ. வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்திருந்த சொத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவருக்கு பொழுது போக வேண்டாமா? நாள் முழுவதும் ஈசிச்சேரில் காலை நீட்டி அமர்ந்துக்கொண்டு வங்கிக்கு வருவோரையும் போவோரையும் பார்த்து போரடித்துவிட்டதோ என்னவோ..

‘என்னங்க நீங்க வரீங்களா இல்ல நா மேல போட்டுமா?’ என்ற என் மனைவியின் குரல் கேட்டதும், ‘இரு நானும் வரேன்.’ என்றவாறு படியேறி மேலே சென்றேன்.

தன்னுடைய அலுவல்களை முடித்துக்கொண்டு வெளிவாசற் கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பவிருந்த என்னுடைய உதவி மேலாளரும் தலைமைக் குமாஸ்தாவும் எங்களைப் பார்த்ததும் கோரசாக, ‘சார் ஒரு கான்ஸ்டபிள் வந்து ரொம்ப நேரம் காத்துக்கிட்டிருந்தாரே.. பாத்தீங்களா?’ என்றனர்.

நான் ஆமாம் என்று தலையை அசைக்க தலைமைக் குமாஸ்தா, ‘சார் நா வேணும்னா உங்கக் கூட வரட்டுமா? அந்த கோல்ட் பார்ட்டிதான் வேணும்னே ஏதாச்சும் செஞ்சிருப்பார்னு நினைக்கிறேன். நீங்க தனியா போவாதீங்க சார்.’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே, ‘சேச்சே.. அதெல்லாம் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரு பேங்க் மானேஜர்மேல இவங்களால அவ்வளவு ஈசியா ஆக்ஷன் எடுத்துர முடியுமா என்ன? நா போறதுக்கு முன்னால நம்ம லீகல் அட்வைசர கேட்டுட்டுத்தான் போவேன். நீங்க கவலப்படாம போங்க. தேவைப்பட்டா ஃபோன்ல கூப்டறேன்.’ என்று பதிலளித்துவிட்டு குழப்பத்துடன் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவியை அழைத்துக்கொண்டு பின்னாலிருந்த என்னுடைய குடியிருப்பை நோக்கிச் சென்றேன்.

வீட்டு வாசலில் களைப்புடன் அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னுடைய மூத்த மகள் எங்கள் காலடி சப்தம் கேட்டதும் எழுந்து கோபத்துடன், ‘என்ன டாடி இது? எவ்வளவு நேரம் இங்கயே ஒக்காந்திருக்கிறது? பசி வேற வயித்த கிள்ளுது. கதவ திறந்து ஏதாச்சும் தாங்க.’ என நான் பரபரப்புடன் கதவைத் திறந்து அலமாரியில் எப்போதும் தயாராக இருக்கும் தின்பண்டத்தை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு என் மனைவியின் கையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னுடைய இளைய மகளை அள்ளி தூளியில் கிடத்தினேன்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் குளித்து முடித்து கிளம்பினேன். ‘என்னங்க, எதுக்கும் வீட்டுக்கு போய் அப்பாவையும் கூட்டிக்கிட்டு போங்களேன். இல்லன்னா அண்ணனையாச்சும் கூட்டிக்கிட்டு போங்க. தனியா போனீங்கன்னா நீங்க எதையாச்சும் சொல்லிட்டு மாட்டிக்கிருவீங்க.’ என்ற மனைவியைப் பார்த்தேன்.

‘என்ன நீ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் ஒங்கப்பா பேசினத சொல்லி வருத்தப்பட்டே. இப்ப போய் அவங்கள கூட்டிக்கிட்டு போங்கங்கறே? அதெல்லாம் ஒன்னும் வேணாம். சும்மா ஏதாச்சும் என்க்வயரியா இருக்கும். நான் நம்ம வக்கீல்கிட்ட் போன்ல கேட்டுட்டுத்தான் போவேன். நீ பயப்படாம கதவ பூட்டிக்கிட்டு இரு. நான் வெளிவாசல் கதவ பூட்டிக்கிட்டு போறேன். வர லேட்டாவும்னா ஃபோன் பண்றேன்.’ என்று சமாதானப்படுத்திவிட்டு கிளம்பினேன்.

என்னுடைய அலுவலக அறையிலிருந்து எங்கள் வங்கி சட்ட லோசகர் அலுவலகத்திற்கு டயல் செய்து அவர் எடுத்ததும் விஷயத்தைக் கூறினேன்.

அவர் உடனே, ‘சார் நீங்க ஒன்னும் போகத்தேவையில்லை. இந்த மாதிரி சாதாரண என்க்வயரிக்கெல்லாம் ஒரு அரசு அதிகாரிக்கு இணையான போஸ்ட்லருக்கற பேங்க் மேனேஜர போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்டற உரிமை ஒரு சாதாரன எஸ்.ஐக்கு கிடையாது. நா அவர்கிட்ட பேசிட்டு ஒங்கக் கிட்ட சொல்றேன். அப்புறமா போனா போறும்.’ என்றார்.

இதேதடா வம்பு என்று சிறிது நேரம் யோசித்தேன். என்னுடைய வழக்கறிஞரைப் பற்றி ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். அவர் தூத்துக்குடி நகராட்சிக்கும் சட்ட ஆலோசகராக இருந்தவர். நகரின் பிரபல வழக்கறிஞர்களு ஒருவர். என்னுடைய வங்கிக்கு வாடிக்கையாளர்களாகவிருந்த பலர் அவருக்கும் வாடிக்கையாளர்களாகவிருந்தனர். அதன் அடிப்படையில் சில சமயங்களில் எங்களுடைய வங்கியை விட எங்களுடைய வாடிக்கையாளர்கள் சார்பாகவே அவர் வாதிடுவதை பார்த்திருக்கிறேன். ஆகவே ஒரு சில சந்தர்ப்பங்களில் எனக்கும் அவருக்கும் தீவிர கருத்து வேறுபாடுகளும் நான் தூத்துக்குடிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்டிருந்தது. அத்துடன் நேரத்திற்கு ஒன்றாக, சில சமயங்களில் அவருடைய முந்தைய கருத்துக்கு நேர் எதிரான கருத்தையும் சிறிது இடைவெளிக்குப் பிறகு அளிக்கக் கூடிய அளவுக்கு முரணானவர் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன்.

இத்தகைய மனிதருடயை அறிவுரையை நம்பி  காவல்நிலையத்திற்கு செல்லாமல் இருந்து பிறகு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்து நான் அன்று காலையில் சந்தித்திருந்த என்னுடைய மாமானாருடைய நண்பரான வழக்கறிஞரையும் தொடர்புகொண்டு விஷயத்தை விளக்கினேன்.

அவரும், ‘ஒங்க வக்கீல் சொல்றது சரிதான் சார். அப்படியே ஏதாச்சும் என்க்வயரின்னா என்ன என்க்வயரி, அதுல உங்க பங்கு என்னன்னெல்லாம் சொல்லிட்டுத்தான் கூப்டணுமே தவிர பொத்தாம் பொதுவா ஒருத்தர, அதுவும் ஒரு பேங்க் மேனேஜர ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனுப்பற அதிகாரம் ஒரு எஸ்.ஐக்கு இல்ல சார். எதுக்கும் ஒங்க வக்கீல் அவர்கிட்ட பேசிட்டு சொல்ற வரைக்கும் போவேணாம். அதனால ஏதாச்சும் பிரச்சினை வந்தா சொல்லுங்க. நாங்க எதுக்கு இருக்கோம், பாத்துக்கறோம். தைரியமா ஒங்க வேலைய பாருங்க.’ என்று அறிவுறுத்தவே நான் என்னுடைய குடியிருப்புக்கு திரும்பிச் சென்று சிறிது நேரம் என் மகளுடன் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன்.

‘என்னங்க நீங்க போலையா?’ என்ற மனைவியிடம் என் வழக்கறிஞர் கூறியதை சொன்னேன்.

‘அதானே.. என்ன ஏதுன்னு கேக்காம சொன்ன ஒடனே ஓடணுமா என்ன? நா சொன்னா நீங்க கேக்கவா போறீங்கன்னுதான் நானும் சும்மா இருந்தேன்.’ என்று சாதுரியமாக பேசிய என் மனைவியைப் பார்த்து புன்னகைத்தேன்.

சமயத்துக்கு ஏத்தாமாதிரி பேசறதுல ஆண்களைவிட பெண்கள் பயங்கரமான ஆளுங்க.. என்ன சொல்றீங்க?

அரைமணி நேரமாகியும் காவல்நிலைய ஆய்வாளரிடம் பேசிவிட்டு அழைக்கிறேன் என்று கூறிய என்னுடைய சட்ட ஆலோசகரிடமிருந்து  அழைப்பேதும் வராமல் போகவே நான் பதற்றத்துடன் வீட்டிலிருந்த தொலைப்பேசியில் அவரை மீண்டும் அழைத்தேன்.

அவரோ கூலாக, ‘டென்ஷாகாம இருங்க சார். அவர் லைன் பயங்கர பிசியா இருக்கு. ஒருவேளை இப்படி யாராச்சும் கூப்டுவாங்கன்னு தெரிஞ்சி ரிசீவர எடுத்துக் கீழ வச்சிட்டாரோ என்னவோ. இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ட்ரை பண்ணி பேசிட்டு சொல்றேன். அவசரப்பட்டு நாமளா போயி வம்புல மாட்டிக்க வேணாமேன்னுதான் சொல்றேன். இந்தாளுங்கள நம்பவே முடியாது.. நாமதான் முன்னெச்சரிக்கையா இருக்கணும்.’ என்று ஒரு லெக்சர் அடித்தார்.

சரி.. என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லாததால் இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க தயாரானேன்.

அதற்கு தேவையில்லாமல் அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே என் தொலைபேசி அலறியது.

எடுத்ததும் எதிர்முனையிலிருந்து, ‘ஏன் சார். நாங்கல்லாம் கூப்டா வரமாட்டீங்களோ? அதுக்கும் ஒங்க வக்கீல்கிட்ட கேட்டுட்டுத்தான் வருவீங்களோ?’ என்று வந்த குரலில் இருந்த கேலிக்கு பின்னால் ஒலித்த மிரட்டலையும் உணர்ந்த நான், ‘சேச்சே அப்படியெல்லாம் இல்ல சார்.’ என்றேன்.

‘பின்ன என்ன சார்.. கூப்ட்டா வரவேண்டியதுதானே? பேங்க் மேனேஜர்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? நா கூப்டது ஒங்க பேங்க் விஷயமா இல்லே.. அத முதல்ல புரிஞ்சிக்குங்க.’

அவர் எதிர்முனையிலிருந்து பேசியது ஒலிவாங்கிக்கு வெளியே ஒலித்ததால் அதைக் கேட்ட என் மனைவியும் மிரண்டுபோய் அடுக்களையிலிருந்து, ‘என்னங்க.. ஏன் இப்படி கத்தறாரு?’ என்றவாறு ஓடிவந்தார். நான் ஒன்னுமில்லை பேசாம கேள் என்று வாயசைத்துவிட்டு..

‘ஆஃபீஸ் விஷயம் இல்லேன்னா, வேறென்ன விஷயமா கூப்ட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?’ என்றேன்.

‘ஏன் சொல்லாட்டா வரமாட்டீங்களோ?’ அவருடைய குரலில் இருந்த மிரட்டல் தொணி என் மனைவியை சற்று அதிகமாகவே மிரள வைத்தது.

‘அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. சொன்னீங்கன்னா நல்லாருக்கும், அதுக்குத்தான்.’ என்றேன் பணிவுடன்.

‘------------- ஃபெர்னாண்டோங்கறது யார் சார்? இவர கேட்டா ஒங்க பிரதர் இன் லாங்கறார்.’

மறுமுனையிலிருந்து ஒலித்த என்னுடைய மைத்துனரின் பெயரைக் கேட்டதுமே எனக்கு பகீர் என்றது. என் மனைவியும் பதறிப் போய், ‘என்னங்க அண்ணனப் பத்தி கேக்கறாரு? அப்ப அந்த நில விஷயமாத்தான் போலருக்கு.. இதென்னங்க சோதனை..’ என்றார். அதற்குள் அவருடைய கண்கள் இரண்டும் கண்ணீரால் நிறைய இதைப் பார்த்த என் மகளும் எழுந்து, ‘என்னம்மா மாமாவுக்கு என்ன?’ என்றவாறு என் மனைவியின் கால்களைக் கட்டிக்கொண்டு கேட்க நான் என்ன செய்வதென தெரியாமல் ஒரு நிமிடம் திணறிப்போனேன்.

தொடரும்..
18 May 2006

திரும்பிப் பார்க்கிறேன் 136

சில சமயங்களில் வங்கிக்கு வரும் அடாவடி வாடிக்கையாளர்களை மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டுத்தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

நான் நேற்று விவரித்த சம்பவத்திற்கு என்னுடைய உதவி மேலாளருடைய கவனக் குறைவும் வங்கி நியதிகளை மீறி நடந்துக்கொண்ட விதமும்தான் காரணம். ஒத்துக்கொள்கிறேன். நியாயமாகப் பார்த்தால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நாங்கள் ஈடு செய்திருக்க வேண்டும். அதுதான் சரி.

ஆனால் அதே சமயம் இச்சம்பவத்தின் மூல காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் வாடிக்கையாளரின் நாணயமற்ற செயலும்தான் என்று எண்ணத்தோன்றுகிறது.

ஆகவேதான் என்னுடைய மனசாட்சி இடித்துரைத்ததையும் மீறி அவரை மிரட்டி பணியவைக்க வேண்டியிருந்தது. எங்களுடைய இச்செயலால் அவருடைய குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நானோ அல்லது எனக்கு உதவி செய்ய வந்த பொற்கொல்லரோ உணராமல் இல்லை.

அவர் தன்னுடைய இயலாமையை உணர்ந்து  உடைந்துபோயிருந்த ஆபரணத்தை அப்படியே பெற்றுக்கொண்டு வெளியேறிச் சென்றபோது அவருக்காக ஒரு நொடி நான் வருத்தப்பட்டது உண்மைதான் என்றாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றே என்று நினைத்து சமாதானமடைந்தேன்.

ஆயினும் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து இனியும் இத்தகைய புகார்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரித்து அனுப்பினேன்.

ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்தவுடனே மனம் தீர்க்கப்படாமல் இருக்கும் வேறொரு பிரச்சினைக்கு தாவும் என்பது உண்மைதான்.

என்னுடைய உதவி மேலாளருக்கு நான் எச்சரித்ததில் அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும் வேறு வழியின்றி எதிர்த்து பேசாமல் அவருடைய இருக்கைக்கு சென்றதும் நான் காலையில் சந்தித்த வழக்கறிஞர் பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லையென்றால் கொடுத்தனுப்புகிறேன் என்றாரே மணி நான்காகிறதே இன்னும் காணவில்லையே அப்படியென்றால் பத்திரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்து குழம்ப ஆரம்பித்தேன்.

சில சமயங்களில் நாம் யாரைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோமோ அவரே நம் முன்னே வந்து நிற்பார். ‘அடப்பாவி, இப்பத்தான் ஒன்னப் பத்தி நினைச்சேன். உடனே வந்து நிக்கறயே.. ஒனக்கு சாவே இல்லடா’ என்போம் மகிழ்ச்சியுடன்.

நான் வழக்கறிஞர் அலுவலக சிப்பந்தியைக் காணோமே என்று நினைத்து முடித்த மறு நொடியே நான் காலையில் கொடுத்த பத்திர கட்டுடன் வந்து நின்ற சிப்பந்தியைப் பார்த்ததும் எனக்கும் அன்று அப்படித்தான் தோன்றியது.

‘சார், பத்திரத்துல ஒரு பிரச்சினையும் இல்லையாம். சார் இத ஒங்கக் கிட்ட குடுத்துட்டு வரச் சொன்னாங்க. வேற ஏதாச்சும் தெரியணும்னா சாயந்திரமா கூப்டுவீங்களாம்.’

நான் கட்டை பெற்றுக்கொண்டு, ‘சரி தம்பி. நீங்க போங்க. நான் சார கூப்டுக்கறேன்.’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

பத்திரத்தில் பிரச்சினை இல்லை என்பதில் எனக்கு ஓரளவு மகிழ்ச்சிதான் என்றாலும் இந்த சிக்கலில் தேவையில்லாமல் சிக்கிக்கொண்டோமே என்றும் தோன்றியது.

என்னுடைய அலுவலகப் பிரச்சினையானால் என்னுடைய அனுபவத்தை வைத்து சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் இதுவோ குடும்பத்தில் அதுவும் என்னுடைய மனைவியின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையாயிற்றே. நான் வாங்கிய சொத்து பத்திரத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று வக்கீலே சொல்லிவிட்டார் ஆளை விடுங்கள் என்று ஒதுங்கிக்கொள்ள முடியாதே, என்றெல்லாம் என்னுடைய மனம் கிடந்து அடித்துக்கொண்டது.

சரி, காலையில் என்னுடன் வந்த என்னுடைய மைத்துனர் தன்னுடைய நண்பர்களுடன் இவ்விஷயம்பற்றி கலந்தாலோசிக்கச் சென்றாரே என்ன நடந்தது என்று ஒரு விவரமும் இல்லையே என்று நினைத்த நான் அலுவலகத்தில் இருக்க முடியாமல் என்னுடைய உதவி மேலாளருடன் கூறிவிட்டு என்னுடைய மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

வீட்டிற்குள் நுழையும்போதே அங்கிருந்தவர்களின் மனநிலை எனக்கு ஓரளவு புரிந்தது. என்னுடைய மனைவி என்னைக் கண்டதும் எழுந்து வந்தார். ‘என்னங்க, வக்கீல் ஏதும் சொன்னாரா? அப்பா அரைமணி நேரத்துக்கொருதரம் அவர் வீட்டுக்கு ஃபோன் போட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனா ரிங் போய்ட்டே இருக்கே தவிர யாரும் எடுக்கறா மாதிரி காணோம். ஒங்க கிட்ட ஏதும் சொன்னாரா?’

நான் என் கையிலிருந்த பத்திரங்கள் அடங்கிய உறையை என் மனைவியிடம் கொடுத்து, ‘ஒரு வில்லங்கமும் இல்லையாம். பத்திரத்த திருப்பி கொடுத்து அனுப்பிட்டார். ஆஃபீஸ் பையன் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாலதான் கொண்டு வந்து குடுத்தான். நான் உங்க வீட்டுக்கு ரெண்டு மூனு தடவ ஃபோன் பண்ணேன். எங்கேஜ்டாவே இருந்துது. அதான் நேரா புறப்பட்டு வந்தேன்.’

பத்திரத்தில் வில்லங்கம் இல்லையென்பது என் மனைவிக்கு உண்மையிலேயே நிம்மதியை அளித்திருக்க வேண்டும். ‘அப்பாடா, இனி உங்க தல உருளாது. காலையிலருந்து இதப்பத்தித்தான் அப்பா புலம்பிக்கிட்டே இருக்காங்க. ஏதோ நீங்கதான் சரியா பாக்காம, சரியா விசாரிக்காம வாங்கிட்டா மாதிரி. எனக்கும் கோபம், கோபமாத்தான் வந்துது. அம்மாவுக்காக பொறுத்துக்கிட்டு இத்தன நேரம் இருந்தேன். அந்த பத்திரத்த குடுங்க, எங்கம்மாக் கிட்ட குடுத்துட்டு நாம வீட்டுக்கு போவோம். இனி அவங்க பாடு. நமக்கு வேண்டாம் இந்த தொல்லை.’ என்றார்.

இதை எதிர்பாராத நான், ‘நாம எப்படி அப்படி பட்டும்படாம இருக்க முடியும்னு நினைக்கிறே? அவசரப்படாத. ஒங்க அண்ணன் காலைல போனவரு இதுவரைக்கு வரவே இல்லையா?’ என்றேன்.

நான் கேட்ட கேள்வியில் என்னுடைய மனைவிக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை அவர் உடனே பதிலளிக்காமல் பத்திரத்தை என் கையிலிருந்து பறித்துக்கொண்டு சென்றதிலிருந்தே தெரிந்தது. நானும் பதில் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்து ஹாலில் இருந்த சோபா ஒன்றில் அமர்ந்தேன்.

என்னுடைய மாமனாரைக் காணோம். மாடியில் இருந்திருப்பார் போலிருந்தது. என்னுடைய மனைவி அடுக்களையிலிருந்த என்னுடைய மாமியாரிடம் பத்திரத்தைக் கொடுத்துவிட்டு உடனே வெளியே வந்தார். ஹாலிலிருந்த என்னிடம், ‘என்ன ஒக்காந்துட்டீங்க? அங்க பாப்பா ஸ்கூல்லருந்து வந்திருப்பா. வாங்க போலாம்.’ என்று படபடக்க நானும் வேறு வழியின்றி அவருடன் புறப்பட்டேன்.

என்னுடைய இரண்டாவது மகளை துவாலையில் பொதிந்து கையில் எடுத்துக்கொண்டு என் முன்னே விடுவிடுவென நடந்த என் மனைவியிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் என்னுடைய வாகனத்தை முடுக்கி விக்டோரியா சாலையை அடைந்தோம்.

திடீரென்று பின் இருக்கையில் அமர்ந்திருந்த என்னுடைய மனைவி, ‘இங்க பாருங்க.. இனி நீங்க உண்டு உங்க வேலையுண்டுன்னு இருங்க. தேவையில்லாம ஊருக்கு உதவி பண்றேன்னு எதையாவது செஞ்சிட்டு வம்புல மாட்டிக்காதீங்க. அது யாரா இருந்தாலும் சரி. போறும். நல்லது செய்யப் போயி.. இன்னைக்கி எங்கப்பா பேசினத நினைச்சா பத்திக்கிட்டு வருது. இனி  இந்த நிலத்து விஷயத்துல நீங்க தலையிடக் கூடாது. அவங்களே டீல் பண்ணிக்கட்டும். சொல்லிட்டேன்.’ என்றார்.

அவர் குரலில் எப்போதும் இல்லாமல் ஒரு வெறுப்பும், விரக்தியும் இருந்ததை கவனித்த நான் அவர் அப்போதிருந்த சூழ்நிலையில் நான் ஏதாவது பேசினால் அவருடைய கோபம்தான் அதிகமாகும் என்று நினைத்து வீடு வந்து சேரும்வரை மவுனமாய் இருந்தேன்.

மாலை நேரங்களில் என் வீடு அமைந்திருந்த வெஸ் க்ரேட் காட்டன் எனப்படும் WGC சாலையை அப்போதுதான் பரிசோதனை முறையில் ஒரு வழிப்பாதையாக மாற்றியிருந்தனர். ஆகவே தலையை சுற்றி மூக்கைத் தொடும் விதமாக என்னுடைய மாமனார் வீட்டிலிருந்து ஐந்தே நிமிடத்தில் அடையக்கூடிய என்னுடைய வீட்டை அடைய அரைமணி நேரம் எடுத்தது.

பரீட்சார்த்த முறையில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தில் ஏறக்குறைய தூத்துக்குடி நகரத்திலிருந்த எல்லோருமே எதிர்த்தனர். இருப்பினும் காவல்துறையினருக்கு அஞ்சி வேறு வழியில்லாமல் எல்லோரும் கண்ணில் படுவோரிடமெல்லாம் பரஸ்பர வயிற்றெரிச்சலைக் கொட்டி தீர்த்தவாறே சென்றுக்கொண்டிருந்தனர்.

‘என்ன அக்கிரம்யா.. பெட்ரோல் விக்கற வெலையில இது தேவைதானா?. வீட்லருந்து பிள்ளைங்கள ஸ்கூல்ல விடறதுக்கு அஞ்சே நிமிஷத்துல போய்ட்டு வந்துருவேன். இப்ப பாருங்க. ஹோலி க்ராஸ்லருந்து மேக்கே பஸ்டாண்டு வரைக்கும் போய்ட்டுல்லே மறுவடியும் கிளக்கே வரமுடியுது? என்ன ரூலோ என்ன எளவோ.. போங்க.. நம்ம நேரமும் பெட்ரோலும்தான் ச்செலாவாவுது.’ என்றார் என்னுடைய வாகனத்துக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த ஒருவர்.

'ஆமா இங்க கெடக்குற கெடப்புல இதப்பத்திதான் நினைக்கணும். சோலிய பாத்துக்கிட்டு போவீரா..’ என்று அவர் கடந்து சென்றதும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னுடைய மனைவி முனுமுனுக்க நான் அப்போதிருந்த கவலையையும் மறந்து உரக்க சிரித்தேன்.

என்னுடைய மனைவியோ மேலும் கோபமடைந்து, ‘எதுக்கு இப்ப சிரிக்கீக? மனுஷி படற பாட்டுல ஒங்களுக்கு சிரிப்பாருக்காக்கும். பேசாம வெரசா போங்க. அங்க பாப்பா நின்னுக்கிட்டிருக்கும்.’ என்று சீற வாகனம் என்னையும் மீறி வேகமெடுத்தது.

என்னுடைய அலுவலக வாசலில் இடதுபுறம் ஒரு பெரிய பிரபலமான துணிக்கடையும் வலதுபுறம் அதைவிட பிரபலமான நைட்க்ளப்பும்! (இதற்கென தனியாகவே ஒரு பதிவு போடவேண்டும்) இருக்கவே என்னுடைய வளாகத்திற்குள் நுழைய முடியாதபடி எப்போதுமே கூட்டம் அலைமோதும்.

நான் வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என்று என்னுடைய வாகனத்தின் சிக்னலை எரியவிட்டால் கூட யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நைட்க்ளப் கல்லாப் பெட்டியில் இருப்பவர் என்னுடைய வாகனத்தின் சப்தத்தை வைத்தே அது நாந்தான் என்பதைக் கண்டுக்கொள்வார். ‘அண்ணே வழிவிடுங்க. மானேஜர் சார் உள்ளார போயிரட்டும்.’ என்பார்.

அன்றும் அவருடைய எச்சரிக்கைக்குப் பிறகே ஆட்கள் வழிவிட வளாக வாசலில் இருந்த பெரிய இரும்பு கேட் வழியாக உள்ளே நுழைந்தேன். நான் தினமும் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் நின்றுக்கொண்டிருந்தார்.

நான் வாகனத்தை நிறுத்தியதும் என்னுடைய மனைவி இறங்கி நின்று காவலரையே பார்த்தார். ‘என்னங்க எதுக்கு இவரு வந்திருக்காருன்னு கேளுங்க.’ என்று கிசுகிசுக்க நான் என்ன சார் யார் வேணும் என்பதுபோல் அவரைப் பார்த்தவாறே வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.

‘நீங்கதான் இந்த பேங்க் மேனசரா?’ என்றவரைப் பார்த்து ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன்.

‘சார், ஐயா ஒங்கள ஒடனே கையோட ஸ்டேஷனுக்கு கூப்டுக்கிட்டு வரச்சொன்னார்.’

நானும் என் மனைவியும் திடுக்கிட்டு ஒருவரையொருவரைப் பார்த்துக்கொண்டோம்.

தொடரும்..