27 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 122

சாதாரணமாக உப்பளம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சொந்தமாயிருக்கும் நிலங்களையே உப்பு தயாரிப்பிற்கு உபயோகிப்பார்கள். சரியாக பராமரிக்கப்படாத எல்லா விவசாய நிலங்களுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு விளைச்சலுக்கு தகுதியில்லாததாக ஆகிவிடுவதுண்டு. மேலும் காலங்காலமாக வானம்பார்த்த பூமியில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்த விவசாயிகள் பட்டண வாழ்க்கை என்ற மோகத்திற்கு அடிமைப்பட்டோ அல்லது தொடர்ச்சியாக நாலைந்து வருடங்கள் பருவ மழை பொய்த்துப்போய் விவசாயம் செய்ய முடியாமல் கடன் பாரத்தால் விற்றுவிட்டு சென்றுவிடுவதுண்டு. அவற்றை அப்படியே அடிமாட்டு விலையில் வளைத்துப்போட்டு உப்புத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள் இடைத்தரகர்கள்.

உப்பளங்கள் எல்லா இடங்களிலும் அமைக்கப்படுவதில்லை. சென்ன¨யில் இத்தனை நீளமான கடற்கரை இருந்தும் மணலி போன்ற இடங்களைத்தவிர உப்பளங்கள் நான் பார்த்ததில்லை. தமிழ்நாட்டில் தூத்துக்குடி கடற்கரை உப்பு தயாரிப்பிற்கு மிகவும் பெயர்பெற்றது.

நான் அங்கு மேலாளராக செல்லும்வரை உப்புத்தயாரிப்பைப் பார்த்ததே இல்லை. திருமணம் ஆன புதிதில் தூத்துக்குடி நகரிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒருமுறை சென்றபோது வழிநெடுகிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலியின் இருமருங்கிலும் உப்பளத்தைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய கிளையிலிருந்து உப்பளங்களுக்கு கணிசமான தொகையைக் கடனாக வழங்கியிருந்தோம். நான் கிளை பொறுப்பேற்று முடிந்தவுடன் நான் என்னுடைய வங்கி கடன் வழங்கயிருந்த ஒரு நிறுவனத்தின் உப்பளத்திற்கு நேரில் சென்றபோதுதான் உப்பு தயாரிப்பில் இருந்த சூட்சுமத்தை அறிந்துக்கொண்டேன்.

உப்பளங்களிப் இருக்கும் பாத்திகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் அவற்றில் சிலவற்றை இவை பெண்பாத்திகள் என்றும் வேறு சிலவற்றை ஆண்பாத்திகள் என்றும் எனக்கு விளக்கியபோது வியந்துபோனேன். எல்லா பாத்திகளிலும் ஒரே அளவில் கடல் நீரை பாய்ச்சி இருந்தாலும் உப்பு உற்பத்தியாவதற்கு ஆண்பாத்தியிலிருந்த நீரை பெண்பாத்திகளுடன் கலக்க வேண்டுமாம். அதாவது ஒரு ஆண்பாத்தியை சுற்றிலும் நான்கு அல்லது ஐந்து(!) பெண்பாத்திகளை அமைத்து ஆண்பாத்தியில் சில தினங்கள் சேர்த்து வைத்திருக்கு கடல் நீரை பெண்பாத்திகளுக்கு திறந்துவிடுகிறார்கள். அவை இரண்டும் கலந்ததிலிருந்து சுமார் ஒரு வார காலத்திற்குள் கடல்நீர் ஆவியாகி உப்பு பாத்தியின் அடியில் சேறு போல் படிந்து காணப்படுகிறது.

அவற்றை மரத்தினாலான துடுப்பு போன்ற நீளமான கரண்டியால் பாத்திகளின் நடுவில் குவியலாக சேர்த்து மேலும் சில தினங்கள் சூரிய வெளிச்சத்தில் உலரவிடுகிறார்கள். இங்ஙனம் அறுவடைக்கு தயாராகவிருக்கும் உப்பை கூடைகளில் அள்ளி உப்பளத்தின் ஒரு பகுதியிலிருக்கும் வெற்று நிலத்தில் குவியல் குவியலாக மலைபோல் சேமித்து அவற்றை பனைஓலைகளால் மூடிவைக்கிறார்கள்.

அறுவடை நேரத்திலோ அல்லது அறுவடை முடிந்து லாரிகளில் ஏற்றி அனுப்பும்வரையிலுள்ள இடைபட்ட காலத்திலோ பெருத்த காற்றோ மழையோ வந்துவிட்டால் உப்பு முழுவதும் கரைந்து உப்பள உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடும்.

நான் தூத்துக்குடி கிளைக்கு பொறுப்பேற்பதற்கு முந்தைய வருடம் அப்படித்தான் நேர்ந்திருக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து பெய்த ஒரு வார மழையில் உப்பளங்களில் சேமித்து வைத்திருந்த அனைத்து உப்பும் மழையில் கரைந்து ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாயிருந்தனர்.

பரம்பரை பரம்பரையாக இத்தொழில் ஈடுபட்டிருந்த ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் இத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே எதிர்பார்த்து அத்தகைய பாதிப்புகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்களாலான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்திருப்பார்கள்.

ஆனால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கு இத்தொழிலில் முன்பின் அனுபவம் இல்லை. அது ஒன்று.

மற்றொன்று, சுமார் ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் அவர்கள் அமைத்திருந்த உப்பளம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல. ஏற்கனவே உப்புத்தயாரிப்பில் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகியிருந்த ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான உப்பளத்தை பெருந்தொகைக் கொடுத்து இரண்டு வருட லீசுக்கு எடுத்திருந்தனர்.

சாதாரணமாக தங்களுடைய சொந்த உப்பளங்களை வைத்திருப்பவர்களுக்கு அறுவடைக் காலத்திலோ அல்லது அதற்கு பிந்தைய ஒரு மாதகாலத்திலோ மழையாலோ, பெருங்காற்றாலோ நஷ்டம் ஏற்படுவது அவர்கள் வேலையாட்களுக்கு கொடுத்த கூலியும் மற்றும் இதர தயாரிப்பு சிலவுகள் மட்டுமே.

அதற்குத் தேவையான தொகையைத்தான் வங்கிகள் கடனாக வழங்கியிருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையில் வாங்கிகளில் அளித்திருக்கும் பெரும்பாலான கடன்கள் வசூலாகாமல் நிலுவையில் நின்றுபோகும். அப்போதெல்லாம் வங்கிகள் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வட்டியில் மேலும் கடன் வழங்கி அவர்கள் தொழிலை மீண்டும் துவக்க உதவிசெய்வதுண்டு.

ஆனால் நான் குறிப்பிட்டிருந்த நிறுவனத்தினர் உற்பத்தி நஷ்டத்துடன் அவர்கள் லீஸ் கட்டணமாக கொடுத்திருந்த தொகையும் நஷ்டப்பட்டுப்போயினர்.

இத்தகைய லீஸ் கட்டணத்தை எந்த வங்கியும் கடனாக வழங்க முன்வராது. ஏனெனில் இத்தகைய தொழிலுக்கு கடன் வழங்க முன்வரும் வங்கிகள் எல்லாமே அதற்கு முன்வைக்கும் முதல் நியதியே உப்பளம் அமைக்கப்படும் நிலப்பரப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.

ஆகவே இந்நிறுவனத்தினர் நடத்திவந்த எண்ணெய் ஆலைக்கென எங்களுடைய கிளை வழங்கியிருந்த கடன் தொகையிலிருந்து ஒரு பெரும் பகுதியை தங்களுடைய உப்பளத்தின் லீஸ் கட்டணத்திற்கு உபயோகித்திருக்கிறார்கள். ‘சார் ஆறே மாசத்துல உற்பத்திய முடிச்சி பெருந்தொகையை லாபமாக சம்பாதித்துவிடலாம். எண்ணெய் ஆலையிலிருந்து எடுத்த பணத்தை வங்கிக்கு தெரியாமலேயே திருப்பி அடைத்துவிடலாம்.’ என்று நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த பாகஸ்தரின் வார்த்தையில் மயங்கி மதிகெட்டுப்போய் இந்த தவறான செயலில் என்னுடைய முந்தைய மேலாளருக்குத் தெரியாமல் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன் விளைவு, உப்பளத்தில் முடக்கிய தொகையை மீட்கமுடியாமல் போய் எண்ணெய் ஆலையும் முடங்கிப்போனது.

சாதாரணமாக இத்தகைய பெருந்தொகையை கடனாக வழங்கும் நேரத்தில் கணக்கில் இருந்து ரொக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுக்கலாகாது என்ற நியதியை என்னுடைய வங்கியில் வைப்பது உண்டு. ஆனால் அதை என்னுடைய மேலாளரும் அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்த உதவி மேலாளரும் கடைப்பிடிக்க தவறியது முதல் தவறு. ஏனெனில் எண்ணெய் ஆலைக்குத் தேவையான மூலப்பொருளான கொப்பரைத்தேங்காயை இந்நிறுவனம் கேரளத்திலிருந்துதான் வாங்குவது வழக்கம். அந்நிறுவனங்களுக்கு கொள்முதல் செய்வதற்குத் தேவையான தொகையை வாடிக்கையாளர் தன்னுடைய காசோலை மூலமாகவோ அல்லது டிராஃப்ட் மூலமாகவோ  நேரடியாக செலுத்தவேண்டும் என்பதும் என்னுடயை தலைமையலுவலகத்தினர் வலியுறுத்தியிருந்தனர்.

இரண்டாவது, மாதத்திற்கு ஒருமுறையாவது தங்களுடைய ஆலையில் வைத்திருந்த மொத்த சரக்கின் விவரத்தை வங்கிக்கு தெரிவிக்கவேண்டும் என்பதும் நியதியாகவிருந்தது. அங்ஙனம் கிடைக்கப்பெறும் அறிக்கையிலிருந்த சரக்கு விவரங்களைச் சரிபார்த்து அதன் மதிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்டிருக்கும் மொத்த கடன் மதிப்புக்கு ஈடாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் சரக்கு இருப்பின் மதிப்பு குறைவாய் இருக்கும் பட்சத்தில் வங்கியிலிருந்து அதிகப்படியாக எடுத்திருந்த தொகையை உடனே வசூலிக்கவேண்டும் என்பதும் நியதி.

இவ்விரண்டு நியதிகளையும் என்னுடைய முந்தைய மேலாளர் கடைபிடிக்க தவறியதுடன் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது வாடிக்கையாளரின் வர்த்தக ஸ்தலத்திற்கு சென்று அதன் செயல்பாட்டையும் கையிருப்பில் இருந்த சரக்கின் தரத்தை மேல்வாரியாகவெங்கிலும் சரிபார்க்க வேண்டும் என்ற நியதியையும் கடைபிடிக்க தவறியிருந்தார்.

அதன் விளைவுதான் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட தொகை ஒரு வருடத்திற்கு மேலாகியும் வசூலிக்கப்படாமல் இருந்தது. இத்தகைய கணக்குகளை ஒவ்வொரு வருடமும் மேலதிகாரிகளுடன் அனுமதியுடன் மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என்ற நியதியும் இருந்ததால் நான் சென்று பொறுப்பேற்றதும் முதல் வேலையாக அந்நிறுவனத்தின் எண்ணெய் ஆலையை பார்வையிட வேண்டும் தீர்மானித்தேன்.

சாதாரணமாக வாடிக்கையாளர்களின் வர்த்தக ஸ்தலங்களைப் பார்வையிட விரும்பும் நேரங்களில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முன்னர் அவர்களிடம் அறிவிப்பதுண்டு. ஆனால் இந்த நிறுவனத்தைப் பார்வையிட எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் துணைக்கு என்னுடைய உதவி மேலாளாரை அழைத்துக்கொண்டு சென்றேன்.

நான் சென்ற நேரம் மாலை சுமார் நான்கு மணி. ஆலையின் நுழைவு வாசல் ஒரு பழைய காலத்து கோவில் வாசலைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. கதவும் சிறந்த வேலைப்பாடுகளுடன் பழைய கால மரத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் சரியான பராமரிப்பில்லாமல் பெரிய கீறல்களுடன் காணப்பட்டது.

கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்ததும் சுமார் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் கடப்பா கல் என்பார்களே அதால் வேயப்பட்டு ஒரு பெரிய வானம் பார்த்த முற்றம். ஒரு மூலையில் சுமார் ஒரு லாரி லோடு அளவிற்கான உடைக்கப்பட்ட கொப்பரைத் தேங்காய் சூரிய வெளிச்சத்தில் உலரவைக்கப்பட்டிருந்தது. இரண்டே இரண்டு பணிப்பெண்கள் அருகில் அமர்ந்து கொப்பரைத் தேங்காய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தனர்.

அதைக் கடந்து முற்றத்தின் மறுகோடியில் இருந்த அலுவலக அறையை நெருங்கினேன். கண்ணாடி  தடுப்பிற்கப்பால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த -------கார் குடும்பத்தின் மருமகன் அமர்ந்திருந்தது தெரிந்தது. கதவைத் தட்ட திரும்பிப் பார்த்தவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. நான் பொறுப்பேற்ற வாரத்தில் என்னை வங்கியில் வந்து சந்தித்திருந்ததால் என்னை அடையாளம் தெரிந்தது.

பதற்றத்துடன் எழுந்து ஓடிவந்து கதவைத் திறந்தார். ‘என்ன சார் சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?’ என்றார் சற்று எரிச்சலுடன்.

தொடரும்.

11 comments:

துளசி கோபால் said...

என்னங்க டிபிஆர் ஜோ,
உப்பு இவ்வளோ இண்ட்டர்ஸ்ட்டிங்கா இருக்கு! அதுக்கும் ஆணாதிக்கமா? இல்லே அந்தப்புரமா?
ஆண்பாத்தியைச் சுத்திப் பெண்பாத்திகள் :-)))))

ஆமாம், இந்தப் பாத்திகளுக்குக் கடல் தண்ணீரை எப்படி நிறைப்பாங்க? பம்ப் செய்தா? சாலைக்கு
ரெண்டு பக்கமும் இருக்குன்னு சொல்றீங்களே, அதான் சந்தேகம்.

tbr.joseph said...

வாங்க துளசி,

நாலு நாளா பேங்கிங், பேங்கிங்னு பேசி சேர்மன்லருந்து எல்லாரும் போர் அடிச்சிட்டாங்க.

இன்னைக்கி சென்னை வந்து முதல் வேலையா இந்த பதிவ போஸ்ட் பண்ணிட்டு உங்க பின்னூட்டத்தையும் படிச்சதும் மறுபடியும் உற்சாகம் வந்திருக்கு.

இந்தப் பாத்திகளுக்குக் கடல் தண்ணீரை எப்படி நிறைப்பாங்க? பம்ப் செய்தா?//

ஆமாங்க. உப்பளங்கள் பெரும்பாலும் கடற்கரையை ஒட்டியே இருப்பதால் நிலத்தடி நீரும் கடல் நீராகவே இருப்பதுண்டு. எல்லா உப்பளங்களிலும் இரண்டிலிருந்து மூன்று பம்ப் செட்டுகள் நிறுவப்பட்டிருக்கும்.

துளசி கோபால் said...

என்னங்க இப்படிச் சொல்றிங்க? நிலத்தடி நீர் கடல் நீரா இருக்குமா? அப்ப ராமேஸ்வரத்துலே குடிசைக்குள்ளே
கொஞ்சம் மண்ணைத் தோண்டுனதும் குடிக்கற நல்ல தண்ணீர் வருதே. மெட்ராஸ்லேயும் பீச்லே மணலைத் தோண்டி
தண்ணீர் விற்பனை ஒரு டம்ப்ளர் 25 காசுன்னு வித்ததை பலவருசங்களுக்கு முன்னாலே 1970ஸ்லே பார்த்திருக்கேனே.
அப்பெல்லாம் தண்ணி பாட்டில் பிசினெஸ் கிடையாது:-) இது எப்படி?

tbr.joseph said...

அதுதாங்க தூத்துக்குடியோட கடலோட ஸ்பெஷல். கடல்லருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம்வரை கடல் நீரையொத்த நீரை பம்ப் செய்து எடுக்க முடியும். என்னுடைய மாமனாருக்கு ஒரு ஃபார்ம் ஹவுஸ் இருந்தது. கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்த கிணற்று நீரை வாயில் வைக்க முடியாது. அந்த அளவுக்கு உப்பு. மேலும் இந்த உப்பளங்கள் இருந்த கடற்புறத்தில் கடற்கரை என்று பெரிதாக ஒன்றும் இருக்காது. இரவு நேரங்களில் High Tide என்பார்களே அந்த நேரத்தில் கடல் நீர் சுமார் 500 அடி தூரம் வரை பொங்கி கடலை ஒட்டியிருந்த உப்பளங்களை மூழ்கடித்துவிடுவதும் உண்டு.

டி ராஜ்/ DRaj said...

ஒரு வாரம் எங்களையெல்லாம் தவிக்கவிட்டுட்டீங்க சார். உப்பளங்களை முன்னால பாத்திருக்கேனே தவிர போனதோ, எப்படி உப்பு அறுவடை பண்ணறாங்கன்னோ தெரியாது. உபயோகமான தகவல்களுக்கு நன்றி :)

tbr.joseph said...

என்ன பண்றது ராஜ்? வருஷக் கடைசியில (அதாவது மார்ச் மாதத்துடன் முடியும் வருடம்) இந்த மாதிரி மீட்டிங்குகள் நடப்பது வழக்கம்தான்.

அடுத்த வாரமும் இரண்டு நாட்கள் செல்ல வேண்டும்..

G.Ragavan said...

உப்பளம்...தூத்துக்குடிக்காரங்க யாருக்கும் தெரியாம இருக்காது...குறிப்பா திருச்செந்தூரு பஸ்சுல போனவங்களுக்கு.....வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியா அழகா இருக்கும். பிஷ்ஷிங் ஹார்பருக்கு முன்னாடி நாங்க இருந்தப்போ வீட்டு மாடீல ஏறிப் பாத்தா வெளீருன்னு கண்ணப் பறிக்கும். அதுவும் ஒரு அழகு. எத்தனை பேருக்குச் சாப்பாடு போடும் தொழில். எத்தனை பேருக்குச் சாப்பாட்டில் போடும் தொழில். எனக்குத் தெரிஞ்சி இந்தியாவுல தூத்துக்குடி உப்பத் திங்காதவங்கன்னு கண்டு பிடிக்கிறது ரொம்பக் கஷ்டந்தான்.

அதே போல தேங்காண்ணை மில் பக்கம் போனாலே கமகமன்னு கொப்பரை வாட...அடடா! ஆளத்தூக்குமே....பழைய பஸ்டாண்டுல இருந்து புது பஸ்டாண்டுக்குப் பஸ் போற வழியில கூட ஒரு மில் உண்டு. பஸ்சுல இருந்து பாத்தாலே கொப்பரைக காயுறது. அதப் பெண்கள் நறுக்குறதும் நல்லாத் தெரியும்.

tbr.joseph said...

அடடா ராகவன் என்னோட பதிவ விட உங்க பின்னூட்டந்தான் படிக்கறதுக்கு நல்லாருக்கு.

நீங்க ஏன் உங்க ஊர பத்தி ஒரு தொடர் போடக்கூடாது..?

சீரியசாத்தான் சொல்றேன்.

Sivaprakasam said...

<----ஆண்பாத்தியை சுற்றிலும் நான்கு அல்லது ஐந்து--->
-)-)-)
அப்படியே,அயோடின் சேர்த்த உப்பைத்தான் விற்க வேண்டும் என்ற (மத்திய) அரசாங்கத்தின் விதியினால் ஏற்ப்பட்ட தாக்கம் பற்றியும் எழுதவும்

G.Ragavan said...

நீங்க வேற சார்.........ஊரை விட்டு வந்து ரொம்ப நாளாச்சு.....நெறைய விஷயங்கள் மறந்தும் மாறியும் போச்சு......

tbr.joseph said...

வாங்க சிவா,

அப்படியே,அயோடின் சேர்த்த உப்பைத்தான் விற்க வேண்டும் என்ற (மத்திய) அரசாங்கத்தின் விதியினால் ஏற்ப்பட்ட தாக்கம் பற்றியும் எழுதவும்//

உண்மைதான் சிவா. இந்த விதி நான் அங்கு உள்ளபோதுதான் நடைமுறைக்கு வந்தது. அதனால் பாதிக்கப்பட்டுப்போன பல சிறு உற்பத்தியாளர்கள் வங்கி கடனை திருப்பி அடைக்கமுடியாமல் தவித்துப்போனதை பார்த்திருக்கிறேன்.