21 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 121

ஒவ்வொரு வங்கி மேலாளருக்கும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்கள் வந்தாலே வேலை நெட்டி முறித்துவிடும்.

இப்போது மார்ச், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் ஆண்டு மற்றும் அரையாண்டு கணக்கு முடிக்கும் வேலை அப்போது ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில்.

கணினி என்ற நாமமே இல்லாத அன்றையசூழ்நிலையில் எல்லா கணக்குகளுக்கும் வட்டியை கணக்காக்கி வரவும் பற்றும் வைத்து கிளையின் பேலன்ஸ் ஷீட்டை தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவதற்குள் போதும், போறதும் என்றாகிவிடும்.

டிசம்பர் மாதத்தில் வரும் கிறிஸ்துமஸ், ஜனவரி ஒன்றாம் தேதி வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களில்கூட மனத்தை செலுத்த முடியாமல் வேலை, வேலை என்று சில நாட்களில் கிளையிலேயே இரவு முழுவதும் கண் விழித்து பணிபுரிந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது நிலைமையே வேறு. அன்று மண்டையை உடைத்துக்கொண்டு நாம் செய்த வேலைகளையெல்லாம் இப்போது அனாயசமாக கணினியும் அதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் மென்பொருளும் க்ஷண நேரத்தில் கனகச்சிதமாக செய்து முடித்துவிடுகிறது. இன்றைய தலைமுறை நிச்சயம் கொடுத்து வைத்ததுதான். சந்தேகமேயில்லை.

ஆனாலும் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்கள் என்னைப் பொறுத்தவரை மிகவும் விசேஷமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மாதங்கள்.

ஏன்?

என்னுடைய மூத்த மகள் பிறந்தது டிசம்பர் மாதம். இப்போதிருக்கும் இளைய மகள் பிறந்தது ஜூன் மாதம்.

ஒரு வங்கி மேலாளருக்கு மிகவும் தொடர்புடைய மாதங்களில் பிறந்தவர்கள் என்னுடைய இரு மகள்களும்!

********

'அழுதுகிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிருக்கணும்லே' என்று தன்னுடைய கடைசி மகனைப் பார்த்து என்னுடைய மாமனார் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

அதுபோல்தான் இருந்தது என்னுடைய அப்போதைய நிலையும். சரியாக நேரம் பார்த்து வங்கி அரையாண்டு வேலையில் மும்முரமாக ஈடுபட வேண்டிய நேரத்தில் வந்து பிறந்தாள் என்னுடைய மகள்.

நல்ல வேளை, வங்கி அலுவலகமும் வீடு ஒன்றாக இருந்த்து. அது மட்டுமா? என்னுடைய மனைவியை சேர்த்திருந்த மகப்பேறு மருத்துவ மனையுமல்லவா எதிரிலேயே இருந்தது?

என்னுடைய மாமனார் வீடும் அருகிலேயே இருந்ததால் நான் என் மனைவியின் அருகில் அமர்ந்திருக்க தேவையில்லாமல் என்னுடைய அலுவல்களில் கவனத்தை செலுத்த முடிந்தது.

என்னுடைய சட்ட ஆலோசகர் கூறியிருந்தது போலவே அடுத்த இரண்டு, மூன்று தினங்களுக்குப் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

‘சார். நான் சொன்ன ஆள்கிட்ட பேசியிருக்கேன். அவரும் சம்பந்தப்பட்ட ஆள்கிட்ட பேசிட்டு வேண்டியத செய்யறேன்னு சொல்லியிருக்கார். நீங்க முனிசிபல் ஆஃபீசுக்கு போயிருந்த விஷயத்த அவர்கிட்ட சொல்லலே. நீங்களும் அவசரப்படாம ஒரு வாரம் பத்து நாள் பாருங்க. அப்புறமும் ஒன்னும் நடக்கலைன்னா நாம பார்ட்னர்ஸ் ரெண்டு பேருக்குமே வக்கீல் நோட்டிஸ் விடலாம். பெறகு ஆக வேண்டியத பார்த்துக்கலாம். நீங்க நினைச்சா மாதிரி ப்ராப்பர்டீச அட்டாச் பண்ணணும்னா முதல்ல லோன் ரிக்கவரிக்கு சூட் ஃபைல் பண்ணணும். அதுக்கு உங்க எச்.ஓ. பர்மிஷன் வாங்கணுமில்லையா? அத வேணும்னா வாங்கி வச்சிருங்க. நார்மல் கோர்ஸ்ல ரிக்கவரி ஆவலன்னா கேஸ் போட்டுட்டு ஆக வேண்டியத பார்க்கலாம். என்ன சொல்றீங்க?’ என்றார்.

எனக்கும் அதைவிட்டால் வேறு வழி தெரியாததால், ‘சரி சார். அப்படியே செஞ்சிரலாம்.’ என்றேன்.

பிறகு வேறு சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்து விட்டு அவர் கிளம்பிச் சென்றார்.

*******

நான் நேற்று கூறிய கடன் கணக்கைப் போலவே வேறொரு வில்லங்கம் பிடித்த கணக்கும் இருந்தது.

ஆனால் இக்கணக்கில் நிலுவையில் நின்ற தொகை மிகவும் பெரியது. அத்துடன் அது தூத்துக்குடியில் சற்று பிரபலமாயிருந்த உயர் குலத்தைச் (---கார்) சார்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அக்குடும்பத்திற்கு ஒரு தேங்காய் எண்ணெய் ஆலையும் தூத்துக்குடி மத்திய பேருந்து நிலைய சாலையில் ஒரு பெட்ரோல் பங்க்கும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக இவ்விரு வணிகத்திலும் ஈடுபட்டிருந்த குடும்பம் அது.

நான் சென்னைக் கிளையில் மேலாளராக இருந்த சமயத்தில் என்னுடைய வங்கியின் முதல்வராக இருந்தவர் அவருடைய முந்தைய வங்கியில் பொது மேலாளராக இருந்த சமயத்தில் அவ்வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்கள். அவருடைய தூண்டுதலால் அவ்வங்கியிலிருந்து புலம்பெயர்ந்த பல வணிகர்களைப் போலவேதான் இவர்களும்.

நான் சென்னைக் கிளையில் இருந்த காலத்தில் அதே முதல்வர் பரிந்துரைத்த ஒரு வாடிக்கையாளரிடம்.
சிக்கிக்கொண்டு நான் பட்ட அவஸ்தையை ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

ஆனால் அந்த வாடிக்கையாளரை புத்திசாலித்தனமாக(!) இல்லை, அதிர்ஷ்டவசமாக என்னால் முளையிலேயே அதாவது கடன் கொடுக்காமலேயே, கிள்ளியெறிந்துவிட முடிந்தது.

ஆனால் என்னுடைய முந்தைய மேலாளருக்கு அந்த சாமர்த்தியம் போறாது போலிருக்கிறது. அல்லது அவருடைய துரதிர்ஷ்டம் என்றும் கூறலாம்.

நான் மேலே குறிப்பிட்ட தூத்துக்குடி வாடிக்கையாளரின் கணக்கு அந்த முந்தைய வங்கியிலிருந்தபோதே வில்லங்கம் பிடித்த கணக்காய்த்தான் இருந்திருக்கிறது என்றும் அந்த விஷயம் தெரிந்தும் எங்களுடைய வங்கியின் அப்போதைய முதல்வரின் நிர்பந்தத்தால் அக்கணக்கை அவ்வங்கியிலிருந்து தத்தெடுக்க வேண்டி வந்தது என்பதையும் என்னுடைய காசாளர் வழியாக தெரிந்துக்கொண்டேன்.

இத்தகைய கணக்குகளைத் தான் என்னுடைய அப்போதைய மேலதிகாரிகளுள் ஒருவர் கிண்டலாக, ‘these limits were not sanctioned TBR, they were sold!’ என்பார். அதாவது for extraneous ‘considerations’. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அது எப்படியோ போகட்டும். இப்போது நமக்கு அதுவல்ல முக்கியம்.

அந்த அடிப்படையில் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர் நிறுவனம் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாகும். அதில் இருந்த பாகஸ்தர்களுல் ஒரேயொருவரைத் தவிர எல்லோரும் நான் மேலே கூறிய ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அந்த ஒரேயொருவரை எப்படித்தான் தங்களுடைய குடும்ப நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார்களோ தெரியவில்லை. அந்த ஒருவரின் விபரீத யுக்திகளால்தான் பாரம்பரியமாக அவர்கள் நடத்திவந்த தொழில் நலிந்து போனது என்றால் மிகையாகாது.

சரி அப்படியென்ன விபரீத யுக்தி அது!

சொல்கிறேன்.

நான் குறிப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்த சமூகத்தினருக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத தொழில் உப்பு தயாரிப்பது. மீன்பிடி தொழிலுக்கு எப்படி ஒரு சமூகத்தினர் இருந்தனரோ அதே போல உப்பு தயாரிப்பிலும் தூத்துக்குடியைப் பொருத்தவரை அது ஒரு சமூகத்தைச் சார்ந்தவருடைய பாரம்பரிய தொழிலாகும். அதில் அப்போது எனக்குத் தெரிந்தவரை வேற்று சமூகத்தினரைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை.

ஆனால் அத்தொழிலில் குறைந்த முதலீட்டில் பெருத்த லாபம் அடையலாம் என்று நான் குறிப்பிட்ட அந்த ஒருவர் அக்குடும்பத்தைச் சார்ந்த மூத்த மருமகனை தன் ஜால வார்த்தகைளால் வசியப்படுத்தியிருக்கிறார்.

நான் இக்கடனை வசூலிக்க இனி வரும் பதிவுகளில் கூறப்போகும் அதிரடியாக எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக என்னைச் சந்திக்க வந்த அம்மனிதரை முதன் முறையாக பார்த்தவுடனே இவரை எப்படி நம்பி அக்குடும்பத்தினர் தங்களுடைய நிறுவனத்தில் பாகஸ்தராக சேர்த்தனர் என்று வியந்து போனேன்.

நடிகர் மற்றும் இயக்குனர் விசு அவர்கள் ஒரு படத்தில் ஓயாமல் வெட்டியாக வாயடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருவார். சம்சாரம் அது மின்சாரம் என்று நினைக்கிறேன். சவரம் செய்யாத நரைத்த தாடியுடன், காவி வேட்டியுடன் வீட்டு திண்ணையில் அமர்ந்துக்கொண்டு போவோர் வருவோரையெல்லாம் வம்புக்கு இழுப்பார்.

அதே கோலத்தில் பல வாரங்கள் சவரம் செய்யாத முகத்துடன், அழுக்குப் பிடித்த வேட்டி சட்டையுடன் வந்தவரைப் பார்த்ததும் என்னுடைய அறைக்குள் வரவிடுவதா வேண்டாமா என்று யோசித்தேன்.நான் சாதாரணமாக ஒருவரின் உடையையும், உருவத்தையும் மட்டும் பார்த்துவிட்டு அவருடைய குணத்தையும் தகுதியையும் எடை போடுபவன் அல்ல. ஆனால் ஏனோ எனக்கு அவரைக் கண்ட முதல் பார்வையிலேயே இவர் நம்பத்தகுந்தவர் அல்ல என்று தோன்றியது.

சொல்லப் போனால் அவராக வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வரை எனக்கோ அல்லது என்னுடைய கிளையில் இருந்தவர்களுக்கோ அவர் யாரென்றே தெரிந்திருக்கவில்லை.. என்னுடைய காசாளரையும் சேர்த்து.

‘சார் நாந்தான் பாலாஜி (கற்பனைப் பெயர்) ----------ங்கார் மில்ஸ்ல பார்ட்னர்’ என்று அவர் கூறியதும் என்னையுமறியாமல் இவருடைய பேச்சில் மயங்கி நல்லதொரு நிறுவனத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த அக்குடும்பத்து மருமகன்மேல்தான் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.


தொடரும்..

10 comments:

sivagnanamji(#16342789) said...

aadik karakka vendiya mattai aadik karakka aarambichutteenga!
aduthadhu padik karakka vendiya madugalin kadhai thodaruma...........?

G.Ragavan said...

நீங்க சொல்ற பெட்ரோல் பங்க்....குரூஸ் பெர்ணாண்டஸ் சிலையில இருந்து பஸ்டாண்டுக்குப் போற வழியில வலப்பக்கம் இருக்குறதா? (இப்ப அந்த ரோடு ஒன்வே) அது ரொம்பப் பழைய பெட்ரோல் பங்க். ரொம்ப காலமா இருக்கு.

நீங்க சொல்ற விசு படம் குடும்பம் ஒரு கதம்பம்.

tbr.joseph said...

வாங்க ஜி!

aduthadhu padik karakka vendiya madugalin //

ஆமாங்க.. எல்லாரையும் ஒரே மாதிரியா டீல் பண்ண முடியாதே. எப்ப மோதணும் எப்ப பின்வாங்கணும்னு தெரிஞ்சி வச்சிக்கலைன்னா நமக்குத்தான் ஆபத்து.

tbr.joseph said...

வாங்க ராகவன்.
நீங்க சொல்ற பெட்ரோல் பங்க்....குரூஸ் பெர்ணாண்டஸ் சிலையில இருந்து பஸ்டாண்டுக்குப் போற வழியில வலப்பக்கம் இருக்குறதா? //

No comments:-(

நீங்க சொல்ற விசு படம் குடும்பம் ஒரு கதம்பம். //

இருக்கும்.. தாங்ஸ்..

sivagnanamji(#16342789) said...

// no comments //
ho ho ho

துளசி கோபால் said...

ஆமாம். அந்தக் காலக்கட்டங்களில் ராத்திரி நிம்மதியான தூக்கம் இருந்துச்சா?

tbr.joseph said...

வாங்க துளசி,

ராத்திரி நிம்மதியான தூக்கம் இருந்துச்சா? //

எங்க? தூக்கத்துலக் கூட ஃபிகர்ஸ் (நம்பர்ஸ சொன்னேங்க!)வந்து பயமுறுத்தும்..

டி ராஜ்/ DRaj said...

Sir:

//அழுதுகிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிருக்கணும்லே' //

Wonderful....

//எங்க? தூக்கத்துலக் கூட ஃபிகர்ஸ் (நம்பர்ஸ சொன்னேங்க!)வந்து பயமுறுத்தும்.. //

hahahahaha.
Sorry that am posting this comment in English. This PC doesnt have E-kalappai :(
Cheers
DRaj

tbr.joseph said...

வாங்க ராஜ்,

This PC doesnt have E-kalappai :(//

டூர்ல இருக்கீங்களா? பரவாயில்லை..

எந்த மொழியானா என்ன? அதுக்குப் பின்னால அன்புதான் முக்கியம் :-)

அமல் said...

ராஜ்,
E-kalappai இல்லைனா
http://www.geocities.com/techsharing/TamilType.htm
பயன்படுத்தி பார்க்கவும்.