11 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 116

அன்று இரவே என்னுடைய அறையில் அமர்ந்து அந்த டிரஸ்ட் மேலாளருக்கு எதிர்வரும் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவிருந்த பட்டுவாடா திட்டத்தை விவரித்து கடிதம் எழுதியனுப்பினேன்.

இதற்கிடையில் நான் முன்பே கூறியிருந்தபடி என்னுடைய உதவி மேலாளரும் காசாளரும் சேர்ந்து நான் பட்டியலிட்டு கொடுத்திருந்த குளறுபடிகளைத் தங்களால் இயன்றமட்டும் நிவர்த்தி செய்திருந்தார்களா இல்லையா என்பதை அவர்கள் இருவருடயை அன்றைய பணிகள் முடிந்தவுடன் விவாதிக்கலாம் என்று அடுத்த நாள் காலையிலேயே அவர்களிடம் தெரிவித்தேன்.

அதன்படி அன்று மாலை அவர்கள் இருவரும் அதுவரை எடுத்த முயற்சிகளையும் அதன் பலன்களையும் என்னுடைய அறையில் அமர்ந்து ஆய்வு செய்தோம்.

முதலில் என்னுடைய முன்னாள் மேலாளர்கள் எத்தகைய குளறுபடிகளைச் செய்திருந்தார்கள் என்பதை சுருக்கமாகக் கூறுகிறேன்.

ஒவ்வொரு வங்கியிலும் கடன் தொகைகளை வழங்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இருக்கும். அவற்றில் முக்கியமானது கடன் பத்திரங்களை தயாரித்தல், அவற்றை பூர்த்தி செய்தல்  மற்றும் அவற்றில் வாடிக்கையாளர்களின் கையொப்பங்களை பெறுதல்.

இவற்றுள் ஒன்றில் குளறுபடி நடந்தாலும் அந்த பத்திரங்கள் செல்லாதவையாகிவிட வாய்ப்பிருக்கிறது. கடன் கணக்குகள் வாராக் கடன்களாகி வழக்கு தொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது வழக்கின் ஆரம்ப நிலையிலேயே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நீதிபதியின் முன்னர் எடுத்து வைக்கும் வாதம், ‘கடன் பத்திரங்களில் நாங்கள் கையொப்பமிட்ட போது ஒன்றும் நிரப்பப்படாமல் இருந்தன’ என்பதுதான்.

இத்தகைய வாதம் வைக்கப்படும்போது பெரும்பாலான நீதிபதிகள் அதை பெரிதாகப் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் மாஜிஸ்திரேட் வழக்காடு மன்றங்களில் சில சமயங்களில் சில மாஜிஸ்திரேட்டுகள் இதை காரணம் காட்டியே வழக்கைத் தள்ளுபடி செய்துவிட வாய்ப்புண்டு. அதற்கு சட்ட நியதிகளுக்கு முரணான பல காரணங்கள் இருக்கலாம். அதை நான் இங்கு எழுதுவது உசிதமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

ஆக, பத்திரங்களை தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சரிவர பூர்த்தி செய்வதும் மிக முக்கியம்.

முக்கியமாக, ஒரு வங்கி கிளை மேலாளரின் அதிகாரத்திற்குட்பட்ட கடன்களை வழங்கும் நேரத்தில் பெரும்பாலான மேலாளர்கள் இதை சரிவர கவனிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்கலாம். இத்தகைய கடன்களை வாடிக்கையாளர்கள் கடைசி நேரத்தில் வந்து, ‘சார் நீங்க மட்டும் இந்த சமயத்துல உதவி பண்ணலைன்னா நா அவ்வளவுதான் சார். மார்க்கெட்ல அப்புறம் நிக்கவே முடியாது சார்.’ என்று என்னவோ அன்று மட்டும் அந்த கடன் கிடைக்கவில்லையென்றால் தங்களுடைய குடியே முழுகிப் போகும் என்பதுபோல் வந்து நிற்பார்கள்.

இந்த நேரத்தில் மேலாளரும் சற்று உணர்ச்சிவசப்படுபவராக இருந்துவிட்டால், ‘சரி உக்காருங்க. ஒரு அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணிரலாம்.’ என்று அவர்களை உட்காரவைத்துவிட்டு கையிலிருக்கும் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கையில் இருக்கும் முத்திரைத் தாளை (ஒருவேளை அது வேறு யாராவது வாடிக்கையாளர் அவருடைய கடனுக்காக வாங்கி கொடுத்திருந்ததாகக் கூட இருக்கலாம்) எடுத்து சரிவர பூர்த்தி செய்யாமல்
வெற்று பத்திரமாகவே வாடிக்கையாளரிடம் நீட்டுவார்கள்.

அவர்களும் அப்போதைய அவசரத் தேவைக்கு மேலாளர் நீட்டும் எந்த பத்திரத்திலும் கையொப்பமிட தயாராக இருப்பார்கள். ஆக, இரண்டு அவசரக்குடுக்கைகளும் சேர்ந்து எல்லா வங்கி நியதிகளையும், சட்ட தேவைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள். வாடிக்கையாளரும் ‘அவசரத்துக்கு வந்து நின்னப்போ இல்லேன்னு சொல்லாம பணம் குடுத்தீங்களே. நீங்க தெய்வம் சார்’ என்று பெரிதாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு சந்தோஷத்துடன் சென்றுவிடுவார்கள்.

சரி, அன்று மாலையாவது இருந்து அந்த கடன் பத்திரங்களை ஒன்று மேலாளரோ அல்லது அவருடைய மேற்பார்வையில் உதவி மேலாளரைக் கொண்டோ அவற்றைப் பூர்த்தி செய்து வைப்பார்களா என்றால் அதுவும் இருக்காது. 'இதோ, இன்னைக்கி செய்யலாம் நாளைக்கி செஞ்சிரலாம்' என்று ஒரு வாரம் பத்துநாள் என்று அவர்களுடைய இழுப்பிலேயே போட்டு வைத்துவிடுவார்கள்.

கடன் பத்திரங்களை சரிவர பூர்த்தி செய்யாமல் கடன் வழங்குவதைவிட பயங்கரம் இப்படி மேலாளரின் இழுவையிலேயே அவற்றைப் போட்டு வைப்பதுதான். வங்கியின் நியதிப்படி கடன்களுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கடன் பத்திரங்களை அன்று மாலைக்குள்ளாகவே அதற்குரிய புத்தகத்தில் சேர்த்து பாதுகாப்பு அறையில் வைத்துவிட வேண்டும். அது பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோ இல்லையோ அது வேறு விஷயம். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அது மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் வைத்திருக்கப்படலாகாது.

ஏதோ ஒரு காரணத்திற்காக அதை மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் ஓரிரவு வைத்திருந்து அடுத்த நாள் காலையில் தலைமையலுவலகத்திலிருந்து ஆய்வாளர்கள் குழு வந்து அதைக் காண நேர்ந்தால் விஷயம் விபரீதமாகிப்போய்விட வாய்ப்புண்டு.

இது ஒரு பக்கம். மேலாளருடைய கெட்ட நேரம் அவருடைய இழுப்பில் வைக்கப்பட்டிருந்த கடன் பத்திரம் காணாமற் போய்விட்டாலோ அல்லது அது சேதமடைந்து குறிப்பாக வாடிக்கையாளர் கையொப்பமிட்டிருந்த பகுதி கிழிந்து போய்விட்டாலோ அவ்வளவுதான். அந்த மேலாளர் தொலைந்தார்.

இதில் வேறொரு பிரச்சினையும் இருக்கிறது. கடன் கொடுத்த அன்றே பத்திரங்களைப் பூர்த்தி செய்தால் கடனுக்குண்டான வட்டி விகிதம், அவர் அடைக்க வேண்டிய தவணை எண் மற்றும் தொகை எல்லாம் நினைவிலிருக்கும். அதுவே ஒருவாரம் பத்து நாட்கள் ஆகிவிட்டால் கேட்கவே வேண்டாம். ஏனென்றால் அதற்கிடையில் அதே மேலாளர் இன்னும் ஐந்தாறு கடன்களை வழங்கியிருப்பார்.

அதற்குண்டான எல்லா கடன் பத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு 'இதுல எந்த கையெழுத்து யாருதுன்னே தெரியலையே' என்று முழித்துக்கொண்டு நிற்கவும் வாய்ப்பிருக்கிறது. சரி. அதுவும் பரவாயில்லை. எல்லாப் பத்திரங்களையும் ஒரே நாளில் மேசையின் மேல் பரப்பிவைத்துக்கொண்டு (பெரும்பாலும் வருடாந்தர ஆய்வு நெருங்கிவிட்டது என்பதை மேலாளர் உணரும்போதுதான் இந்த சர்க்கஸ் நடக்கும்) பூர்த்தி செய்ய முனைந்தால் நிச்சயம் தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பத்திரத்தை பூர்த்தி செய்யும் நேரத்தில் ஏற்படும் ஒவ்வொரு தவறையும் வாடிக்கையாளர் தன்னுடைய முழு கையொப்பமிட்டு அங்கீகரிக்க வேண்டும். ‘சார் உங்க பத்திரத்துல ஒரு சின்ன தப்பு வந்திருச்சி. வந்து கொஞ்சம் கையெழுத்து போடுங்க சார்.’ என்று வாடிக்கையாளரிடம் சென்று தங்களுடைய தவறை ஒத்துக்கொள்ள மேலாளரின் ஈகோ இடம் தராது என்பது ஒருபுறம், இவர் கேட்டதும், ‘கேட்ட உடனே கடன் கொடுத்த மகராசா சார் நீங்க’  என்று வாழ்த்திவிட்டுப் போன அதே வாடிக்கையாளர் ‘இன்னைக்கி வரேன் நாளைக்கு வரேன்’ என்று நாள்கணக்காக, சில நேரங்களில் மாதக்கணக்காக இழுத்தடிப்பதும் சர்வ சாதாரணம்.  

ஆனாலும் என்னுடைய மேலாளர் நண்பர்கள் பலரும் இதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் வணிகத்தை வளர்ப்பதிலேயே குறியாயிருப்பார்கள். ‘உங்களுக்கு வேற வேலையில்லை ஜோசஃப். உங்கள மாதிரி இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்தா பிசினஸ் பண்ணாப்பலதான்.’ என்று பலரும் என்னை கிண்டலடித்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தகைய ஒழுங்கீனங்கள் எதுவும் இல்லாமலே வங்கி வணிகத்தை ஸ்டெடியாக வளர்க்க முடியும் என்று நிரூபித்துக்காட்டிய மேலாளர்கள் பலர் இன்று பெரிய பதவியில் இருக்கின்றனர். ஆனால் வணிகத்தை எப்படியாவது வளர்க்க வேண்டும் என்று நினைத்து ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டவர்களுள் பெரும்பாலோனோர் வழியிலேயே தடம்புரண்டு பதவி இழப்பை, சில வேளகளில் வேலை இழப்பையே சந்திக்க நேர்ந்ததை நான் என்னுடைய் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

இதில் வேறொரு கோணமும் இருக்கிறது. எந்த ஒரு தரமான வாடிக்கையாளரும் கடைசி நேரத்தில் வந்து, ‘சார் கடன்’ என்று நிற்கமாட்டார் என்பதும் நான் அனுபவத்தில் கண்ட உண்மை. அத்துடன் வந்து நின்றவுடன் கடன் கொடுக்கும் மேலாளரையும் தரமான வாடிக்கையாளர்கள் மதிக்கமாட்டார்கள் என்பதும் உண்மை.

அதற்காக கடன் என்று வந்து நிற்பவரை வாரக் கணக்கில், மாதக் கணக்கில் இழுத்தடிக்க வேண்டும் என்பதல்ல.

வாடிக்கையாளரின் நியாயமான தேவையை சரியாக கணித்து, அவர்களுடைய கடனுக்கு தேவைப்படும் அனுமதியை மேலதிகாரிகளிடத்திலிருந்து முறையாகப் பெற்று, அவர்களிடமிருந்து பெறப்படவேண்டிய பத்திரங்களை சரிவர தயாரித்து, அவற்றை முழுமையாக பூர்த்தி செய்து அவர்களிடம் வங்கியிலிருக்கும் வேறொரு அதிகாரியையோ அல்லது பணியாளரையோ வைத்து கையொப்பம் வாங்கச் செய்து அவற்றை நானும் ஒருமுறை சரிபார்த்தபின் கடன் வழங்குவதுதான் என்னுடைய வழக்கம். அதற்காக இரு வாரங்களிலிருந்து இருபது நாட்கள் வரை ஆகலாம், அதாவது என்னுடைய மேலதிகாரிகளுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட கடனாயிருந்தால்.

அதுவே என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதாயிருந்தால் என்னுடைய வங்கியின் நியதிப்படி அவர்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்றதிலிருந்து அவர்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய தஸ்தாவேஜுகளையெல்லாம் அளித்த நாளிலிருந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது எடுத்துக்கொள்வேன். காலையில் விண்ணப்பத்தைக் கொடுத்து பகலிலோ அல்லது அன்று மாலையோ கடன் வேண்டும் என்று வந்து நிற்பவர்களிடம் ஏன் முடியாது என்று பொறுமையாக விளக்கமளித்து அவர்களும் ஒத்துக்கொண்டால் கடன். இல்லையென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற புன்னகையுடன் வழியனுப்பிவிடுவேன். இம்மாதிரி நேரங்களில் சிலருடைய கோபத்தையும் அவதூறு பேச்சையும் மற்ற வாடிக்கையாளர்கள் முன்னிலையிலும், என்னுடைய மற்ற பணியாட்கள் முன்னிலையிலும் கேட்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.

அவதூறு பேசிவிட்டுச் செல்லும் வாடிக்கையாளர் அடுத்த நாளே அவருடைய தேவையை நினைத்து வந்து மன்னிப்பு கேட்டுவிடுவார். ஆனால் அவருடைய ஏச்சுக்கும், பேச்சுக்கும் அஞ்சி அவர் வந்து நின்றவுடனே பத்திரங்களை சரிவர பூர்த்தி செய்யாமல் கடன் வழங்கி நம்முடைய கெட்ட நேரம் அது வாராக் கடனாகப் போய் வழக்காடு மன்றத்தில் போய் நீதிபதியின் முன் சென்று, ‘எல்லாம் தெரிஞ்ச நீங்களே இந்த மாதிரி incomplete documents கோர்ட்ல சப்மிட் பண்ணா எப்படி சார்? I can’t tolerate this.’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டால் என்க்வயரி, increment cut, பதவி இறக்கம் அல்லது பதவி உயர்வு கைவிட்டு போதல் என்ற அவமானங்களை சந்திக்க வேண்டியதுதான்.

தொடரும்..


8 comments:

dondu(#4800161) said...

இதே பிரச்சினைதான் மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களிடமும் சந்திக்கிறேன். 100 பக்க ஆவணத்தைக் கொடுத்து (20,000 வார்த்தைகளுக்கு மேல் இருக்கும்) இரண்டே நாட்களில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். இதற்கு பத்து நாட்களுக்குக் குறையாமல் தேவைப்படும். அதுவும் இந்த வாடிக்கையாளரின் வேலையை மட்டும் செய்தால்தான் சாத்தியம். மற்ற வாடிக்கையாளர்களின் வேலை வேறு இருக்குமே. ஆகவே நான் 20 நாள் கேட்பேன். சீக்கிரம் செய்யுங்கள் என்று அவர் கேட்டால் 15 நாளில் தருகிறேன் ஆனால் விலை 50% அதிகரிக்கும் என்று கூறினால் உடனே அவசரம் என்பது மறைந்து விடும்.

அப்படியே அரக்கப் பரக்கச் செய்தாலும் மொழிபெயர்ப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் நானே பொறுப்பேற்க வேண்டும்.

நீங்கள் விதிமுறைப்படி வேலை செய்வதே சிறந்த வழி. அதிலும் ஜனார்த்தன் பூஜாரி ஆப்பு வைத்தார் போலிருக்கிறதே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

நீதி: அன்னன்னிக்கு இருக்குற வேலையை அன்னன்னிக்கே முடிச்சுரணும்.

இப்ப அன்னன்னிக்கு உள்ள பதிவுக்கு எப்படி ரெடியா எழுதி வைக்கறமோ அப்படி:-)))

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

ஆனால் விலை 50% அதிகரிக்கும் என்று கூறினால் உடனே அவசரம் என்பது மறைந்து விடும்.//

இயற்கைதானே.. ஓசின்னா அர்ஜண்ட் காசுன்னா ஆர்டினரி!

அதிலும் ஜனார்த்தன் பூஜாரி ஆப்பு வைத்தார் போலிருக்கிறதே?//

ஆமாம் சார். ஆனால் அது இந்த ஊரில் இல்லை. மதுரையில்!

அருண்மொழி said...

Mr. Joseph,

I am amazed by your blogging speed. Somedays you post 3 blogs.

I think you should create a special posting on time management & remembering the events.

I believe it will help lot of people who read your blogs.

tbr.joseph said...

வாங்க துளசி,

நீதி: அன்னன்னிக்கு இருக்குற வேலையை அன்னன்னிக்கே முடிச்சுரணும். //

ரொம்ப கரெக்ட். உங்களுக்கு தெரியாததா? முன்னூறு பதிவில்ல போட்டிருக்கீங்க:-)

tbr.joseph said...

Hi Arunmoli,

I think you should create a special posting on time management & remembering the events.//

Time management is in our mind. If we think we have time, we have. If we don't any amount of time will not be enough.

Ability to remember is with all of us. Most of us, including myself, do not know how to recollect and put it across. That would come only over a period of time.

arunagiri said...

மேலாளர்களின் குறுக்கு வழி மற்றும்
பூஜாரியின் லோன் மேளா என்றதும் நினைவுக்கு வருகிறது. 80-இன் இறுதிகளில் பிசிசிஐ என்ற பேங்க் உலக பேங்கிங் ஸிஸ்டத்தையே பயங்கரவாதம் மற்றும் money laundering-க்காக misuse செய்து, அதன் விளைவாக உலகளாவிய ஒரு recession உண்டானது; RBI-யின் திறமையான செயல்பாட்டினால் இந்திய பேங்கிங் ஸிஸ்டம் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது. இது குறித்தும் அதன்பின் பேங்கிங் ஸிஸ்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.

tbr.joseph said...

வாங்க Arunagiri,

இது குறித்தும் அதன்பின் பேங்கிங் ஸிஸ்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன். //

வரும் பதிவுகள் ஒன்றில் நிச்சயம் எழுதுகிறேன்.