28 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 123

பதற்றத்துடன் எழுந்து ஓடிவந்து கதவைத் திறந்தார். ‘என்ன சார் சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?’ என்றார் சற்று எரிச்சலுடன்.

அவர் (ராஜேந்திரன் என்று குறிப்பிடுகிறேன். புனைப்பெயர்தான்) என்னை கேள்வி கேட்ட விதம் என்னுடைய கோபத்தைத் தூண்டினாலும் என்னுடைய கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘தப்பா நினைச்சிக்காதீங்க ராஜேந்திரன். இந்த பக்கமா வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாமேன்னு நினைச்சேன். இங்க வந்ததுக்கப்புறம்தான் தெரியுது உங்க அக்கவுண்ட் ஏன் கொஞ்ச நாளா ஆப்பரேஷன் இல்லாம இருக்குன்னு.’ என்றேன்.

என்னுடைய வார்த்தைகள் அவரை சட்டென்று நிதானத்திற்குக் கொண்டுவந்தது. இருந்தாலும் முறைப்புடன், ‘முன்னாலருந்த மேனேஜர் இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம வந்து நிக்க மாட்டார் சார். அதுவும் சாட்சிக்கு கூட்டிக்கிட்டு வரா மாதிரி அசிஸ்டெண்ட் மேனேஜரோடயெல்லாம் வரவே மாட்டார். நீங்க ஏதோ எங்கள கையும் களவுமா பிடிக்கறா மாதிரி வந்திருக்கீங்களே சார்.’ என்றார்.

அவருடைய வார்த்தைகள் என்னுடயை உதவி மேலாளருக்கு முழுவதுமாக புரியாவிட்டாலும் அவருடைய பதவியை ராஜேந்திரன் குறிப்பிட்டதைக் கேட்டதும் அவரைத்தான் ஏதோ குறை சொல்கிறார் என்பதுமட்டும் புரிந்திருக்க வேண்டும். சட்டென்று அவர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில், ‘என்னைப் பத்தி ஏதாச்சும் குத்தமா சொல்றாரா சார்.’ என்றார் ராஜேந்திரனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற நினைப்பில்.

ஆனால் ராஜேந்திரன் சகலகலாவல்லன் (வில்லன் என்றும் கூறலாம்) என்பதை என்னுடைய உதவி மேலாளர் தெரிந்து வைத்திருக்கவில்லை. ராஜேந்திரனுக்கு தமிழுடன், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி என எல்லாவற்றிலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதை அன்றுதான் நானே தெரிந்துக்கொண்டேன். தனக்கு தெலுங்கும் பேச வரும் என்பதைக் காட்ட வேண்டி, ‘ஏமி சார். இங்லீஷ்லோ சூஸ்தாரு? நாக்கு மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என்னி எல்லா பாஷாலும் தெலிசு சார்.’ என்றாரே பார்க்கவேண்டும்! என்னுடைய உதவி மேலாளர் அதிர்ந்துபோய் வாயை மூடிக்கொண்டார்.

நான் அவருடைய அறையை சுற்றிலும் குவிந்துக்கிடந்த கணக்குப் புத்தகங்கள், பில் பேடுகள் ஆகியவற்றைப் பார்த்தேன். ஒரு நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை அதன் பொறுப்பாளர் அறையைப் பார்த்தாலே தெரிந்துவிடும் என்பார்கள். தன்னுடைய சிறியதொரு அறையையே ஒழுங்குடன் வைத்துக்கொள்ள தெரியாத ஒருவர் நிச்சயம் அந்த நிறுவனத்தை திறம்பட நடத்த முடியாது என்பதும் என்னுடைய அனுபவத்தில் நான் கண்டிருந்த உண்மை.

‘எனக்கு ஒங்க மில்ல கொஞ்சம் சுத்தி காமிங்களேன். வந்ததுதான் வந்தேன் பார்த்துட்டு போயிடறேன்.’ என்ற என்னுடைய வேண்டுகோளை கேட்காததுபோல், ‘எப்படி சார் ஊர் புடிச்சிருக்கா? ஒரு மூனு வருஷம் இருப்பீங்களா இல்ல போன மேனேஜரப் போல ரெண்டே வருசத்துல உங்களையும் உங்க பெர்ஃபார்மன்ஸ் சரியில்லேன்னு தூக்கிருவாங்களா?’ என்றார் கிண்டலாக.

ஒம்ம மாதிரி ஆளுங்க நாலு பேர் இருந்தா போறும்யா. நாங்க பெர்ஃபார்மன்ஸ் பண்ணி கிளிச்சாப்பலத்தான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ‘நான் கேட்டதுக்கு நீங்க ஒன்னும் பதில் சொல்லலையே.’ என்றேன்.

அவர் வேண்டுமென்றே, ‘என்ன சார் கேட்டீங்க?’ என நான் எழுந்து நின்று, ‘வாங்க வந்து உங்க ஆயில் மில்லை சுத்தி காமிங்க.’ என்றேன் பிடிவாதத்துடன். தொடர்ந்து என்னுடைய உதவி மேலாளரிடம், ‘சார் நீங்க ஸ்டோர் ரூம் போய் ஸ்டாக்க ரேண்டமா செக் பண்ணிட்டு வாங்க.’ என்றேன் வேண்டுமென்றே.

ராஜேந்திரன் அப்போதும் இருக்கையிலிருந்து எழாமல் அமர்ந்துக்கொண்டு, ‘சார் இன்னைக்கி மில்லுக்கு வீக்லி ஆஃப். அதனால் யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க ஒரு ரெண்டு நாளைக்கப்புறம் வாங்க, ஸ்டாக்க பார்க்கலாம்.’ என்றார்.

‘சரி ராஜேந்திரன். ஸ்டாக்க வேணும்னா அப்புறமா பார்த்துக்கலாம், You just show me the mill.’

என்னடா இவன் விடாக்கண்டன் கொடாக்கண்டனா இருப்பான் போலருக்கே என்று நினைத்தாரோ என்னவோ வேண்டா வெறுப்புடன் எழுந்து எனக்கு முன்னால் நடக்க நானும் என்னுடைய உதவி மேலாளரும் அவரைப் பிந்தொடர்ந்தோம்.

அடுத்த கால்மணி நேரம் சுமார் இருபதாயிரம் சதுர அடி பரப்பில் பரந்து விரிந்து கிடந்த ஆலையை பார்வையிட்டோம். வெற்றிகரமாக நடத்திச் செல்லக்கூடியதொரு ஆலையைப் போல் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் ஓடக்கூடிய மிகப்பிரம்மாண்டமான மூன்று எண்ணெய் செக்குகள் (ஒரு காலத்தில் மாடுகள் ஒரு வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து எண்ணெய் எடுக்க இப்போது முற்றிலும் மின்விசையால் இயக்கப்படக்கூடியவை) கம்பீரமாக கூரையைத் தொட்டுக்கொண்டிருந்தன.

‘ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் டப்பா எண்ணெய் தயாரிக்கக் கூடியது சார் நம்ம ஆலை. தூத்துக்குடியில இது மாதிரி இன்னும் ரெண்டே ஆலைகள்தான் இருக்கு. ஒன்னு விவிடி. மத்தது ஏவிஎம். மூனாவது நம்முடையதுதான்.’ என்று பெருமையுடன் கூறிய ராஜேந்திரனைப் பார்த்தேன்.

ஆனால் நான் சென்றபோதிருந்த நிலையை வைத்துப் பார்த்தால் இந்த ஆலை கடந்த ஆறுமாத காலமாகவெங்கிலும் ஓடியிருக்காது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு ‘சரிங்க. இந்த தேங்காயை எல்லாம் வெயில்லதான் வச்சி காய வைப்பீங்களா இல்ல அதுக்கும் ட்ரையர் மாதிரி ஏதாச்சும் இருக்கா?’  என்றேன்.  

ஏனென்றால் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ட்ரையர் வாங்குவதற்கென ---------- லட்சம் ரூபாய் தனியாக கடன் பெற்றிருந்தார். அதிலும் கடந்த ஆறுமாத காலமாக ஒன்றும் அடைக்கப்பட்டிருக்கவில்லை.

அவருடைய முகம் சட்டென்று களையிழந்துபோய்விட்டது. ‘அது வாங்கி முழுசா மூனுமாசம் கூட வேலை செய்யலை சார். அத வித்தவன் சரியான ஃப்ராடு பார்ட்டி. ரிப்பேர் பண்ணி கொண்டு வரேன்னு சொல்லி எடுத்துக்கிட்டு போனவன், போனவந்தான். ஆளையே காணோம். அதான் பழையபடி முத்தத்துல போட்டு காய வைக்கிறோம். நீங்க வரும்போது பார்த்திருப்பீங்களே.’

நான் உடனே திரும்பி அவருடைய முகத்தையே கூர்ந்து பார்த்தேன். அவர் என்னுடைய பார்வையைச் சந்திக்க முடியாமல் வேறு திசையில் திரும்பிக்கொண்டார். நான் வங்கியில் இதை வாங்கியதற்கான இன்வாய்ஸ் இல்லாமல் இருந்தபோதே சந்தேகித்தேன். ட்ரையர் வாங்குவதற்கான தொகையை அதை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நேரடியாக வழங்காமல் ராஜேந்திரனுடைய சொந்த சேமிப்பு கணக்கில் வரவு வைத்திருந்ததைக் கண்டபோதே எனக்கிருந்த சந்தேகம் இப்போது ருசுவானது.

ஆகவே, ‘ட்ரையரோட பில் உங்கக்கிட்ட இருக்கா ராஜேந்திரன்? இருந்தா ஒரு காப்பியாச்சும் குடுங்களேன். பேங்க் ஃபைல்ல அத காணோம்.’ என்றேன்.

அவர் உடனே, ‘பாக்கறேன் சார். ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க.’ என்றார். ஆள் லேசுப்பட்ட ள் இல்லேடா என்றது என் உள்மனது.

‘சரிங்க. கிடைச்சதும் குடுத்தனுப்புங்க.’ என்றவாறு  அவருடைய அலுவலக அறைக்கு திரும்பினோம்.

சிறிது நேரம் பொதுவான விஷயங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பி முற்றத்தை அடைந்ததும் குனிந்து ஓரிரண்டு கொப்பரைத் தேங்காயை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு, ‘இது என்ன ஒரு லாரி லோடு இருக்குமா ராஜேந்திரன்?’ என்றேன் வேண்டுமென்றே.

அவருக்கு என்னுடைய கேள்வியின் உட்பொருள் புரிந்தாலும் புரியாததுபோல், ‘இருக்கும் சார். இன்னும் அஞ்சாறு லோடு வரவேண்டியது.. என்னான்னு தெரியலை லேட்டாகுது. வந்ததும் வேலை முழுமூச்சா ஆரம்பிச்சிரும்.’ என்றார்.

குனிந்து வேலாயாய் இருந்த பெண்கள் ஒருவர் ஒருவரை விஷமத்துடன் பார்த்து சிரிப்பதைப் பார்த்த நான் அவரிடம், 'ஆனா போன வாரம் நீங்க பேங்க்ல கொடுத்த ஸ்டாக் ரிப்போர்ட்ல -------- லட்சம் மதிப்புள்ள ஸ்டாக் இருக்கறதா குறிப்பிட்டிருக்கீங்களே ராஜேந்திரன்’ என்றே ஆங்கிலத்தில் வீணாக அவருடைய ஊழியர்களுடைய முன்னால் அவருடைய மானத்தை வாங்க வேண்டாமே என்ற நினைப்பில்.

அவருடைய முகம் சட்டென்று கறுத்துப்போனது. ‘அது வந்து சார்...’ என்றார் தயக்கத்துடன்.

‘சொல்லுங்க ராஜேந்திரன். எதுவாயிருந்தாலும் வெளிப்படையா சொல்லிருங்க. அதான் உங்களுக்கு நல்லது.’

‘சரி சார். வாங்க, போய்க்கிட்டே சொல்றேன்.’ என்றவாறு அவருடைய ஊழியர்கள் இருந்த இடத்தை விட்டு அகன்று வாசலை நோக்கி நடந்தார். நாங்களும் அவரைப் பின்தொடர்ந்தோம்.

வாசலையடைந்து நாங்கள் வந்திருந்த வாகனத்தின் அருகில் சென்று நின்றதும் ராஜேந்திரன் என்னைப் பார்த்தார். அவருடைய பார்வையில் கையும் களவுமாய் பிடிபட்ட ஒருவருடைய குற்ற உணர்வு இருந்தது.

‘சாரி சார். ஒரு ரெண்டு வாரம் டைம் குடுங்க. எல்லாத்தையும் சரி பண்ணிடறேன். கெட்ட நேரம் நா தொட்டதெல்லாம் மண்ணா போயிருச்சி. அதான்..’ என்றவரைப் பார்த்தேன்.

இவர் தான் தான் புத்திசாலி என்று நினைத்து செய்ததை கெட்ட நேரம் என்று திசைதிருப்புகிறார் என்ற நினைப்புடன் இவரை சும்மா விடலாகாது என்று முடிவு செய்தேன். ‘உங்க உப்பளம் பிசினஸ் எப்படி இருக்கு சார்?’ என்றேன் சட்டென்று.

அவர் என்னுடைய கேள்வியை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. இருப்பினும் சமாளித்துக்கொண்டு, ‘உப்பளமா? எங்களுக்கா? எங்க தொழிலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத விஷயமாச்சே சார். எதுக்கு கேக்கறீங்க?’ என்றார்.

நான் என்னருகில் நின்ற என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்தேன். அவர் நமக்கேன் வம்பு என்பதுபோல் தரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் திரும்பி ராஜேந்திரனைப் பார்த்தேன். பிறகு, ‘ராஜேந்திரன். என்கிட்டருந்து இனியும் மறைக்கறதுல எந்த பிரயோசனமும் இல்லை.உங்க ஆயில் மில் மற்றும் உங்க பெட்ரோல் பங்குக்கு நாங்க கொடுத்திருக்கற --------------லட்சத்துல ஏறக்குறைய பாதிக்கும் மேல நீங்க டைவர்ட் பண்ணியிருக்கீங்க. அந்த பிசினஸ்ல ஏற்பட்ட நஷ்டம் ஒங்க இந்த ரெண்டு பிசினைசையும் பாதிச்சிருக்கு. இன்னமும் ஒன்னும் கெட்டுப் போயிரலை. நீங்க நாளைக்கு பேங்குக்கு வந்து இந்த விஷயத்த எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி ஒரு லெட்டர் குடுக்கணும். இன்னும் எவ்வளவு நாளைக்குள்ள கணக்கிலருந்து டைவர்ட் பண்ணியிருக்கறத திருப்பி செலுத்தமுடியும்னும் எழுதி குடுக்கணும். இல்லன்னா உங்க ஆயில் மில் அப்புறம் பெட்ரோல் பங்குக்கு குடுத்த கடனை திருப்பி வசூலிக்க கேஸ் போடறதத் தவிர வேற வழியிருக்காது, சொல்லிட்டேன். அப்புறம் என் மேல வருத்தப்படாதீங்க.’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டு திகைத்துப்போய் நின்ற அவரை லட்சியம் செய்யாமல் என்னுடைய வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றேன்.

ஆனால் என்னுடைய செயல் அடுத்த நாள் எனக்கே வில்லங்கமாய் முடிந்தது..

தொடரும்..

27 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 122

சாதாரணமாக உப்பளம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சொந்தமாயிருக்கும் நிலங்களையே உப்பு தயாரிப்பிற்கு உபயோகிப்பார்கள். சரியாக பராமரிக்கப்படாத எல்லா விவசாய நிலங்களுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு விளைச்சலுக்கு தகுதியில்லாததாக ஆகிவிடுவதுண்டு. மேலும் காலங்காலமாக வானம்பார்த்த பூமியில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்த விவசாயிகள் பட்டண வாழ்க்கை என்ற மோகத்திற்கு அடிமைப்பட்டோ அல்லது தொடர்ச்சியாக நாலைந்து வருடங்கள் பருவ மழை பொய்த்துப்போய் விவசாயம் செய்ய முடியாமல் கடன் பாரத்தால் விற்றுவிட்டு சென்றுவிடுவதுண்டு. அவற்றை அப்படியே அடிமாட்டு விலையில் வளைத்துப்போட்டு உப்புத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள் இடைத்தரகர்கள்.

உப்பளங்கள் எல்லா இடங்களிலும் அமைக்கப்படுவதில்லை. சென்ன¨யில் இத்தனை நீளமான கடற்கரை இருந்தும் மணலி போன்ற இடங்களைத்தவிர உப்பளங்கள் நான் பார்த்ததில்லை. தமிழ்நாட்டில் தூத்துக்குடி கடற்கரை உப்பு தயாரிப்பிற்கு மிகவும் பெயர்பெற்றது.

நான் அங்கு மேலாளராக செல்லும்வரை உப்புத்தயாரிப்பைப் பார்த்ததே இல்லை. திருமணம் ஆன புதிதில் தூத்துக்குடி நகரிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒருமுறை சென்றபோது வழிநெடுகிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாலியின் இருமருங்கிலும் உப்பளத்தைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய கிளையிலிருந்து உப்பளங்களுக்கு கணிசமான தொகையைக் கடனாக வழங்கியிருந்தோம். நான் கிளை பொறுப்பேற்று முடிந்தவுடன் நான் என்னுடைய வங்கி கடன் வழங்கயிருந்த ஒரு நிறுவனத்தின் உப்பளத்திற்கு நேரில் சென்றபோதுதான் உப்பு தயாரிப்பில் இருந்த சூட்சுமத்தை அறிந்துக்கொண்டேன்.

உப்பளங்களிப் இருக்கும் பாத்திகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் அவற்றில் சிலவற்றை இவை பெண்பாத்திகள் என்றும் வேறு சிலவற்றை ஆண்பாத்திகள் என்றும் எனக்கு விளக்கியபோது வியந்துபோனேன். எல்லா பாத்திகளிலும் ஒரே அளவில் கடல் நீரை பாய்ச்சி இருந்தாலும் உப்பு உற்பத்தியாவதற்கு ஆண்பாத்தியிலிருந்த நீரை பெண்பாத்திகளுடன் கலக்க வேண்டுமாம். அதாவது ஒரு ஆண்பாத்தியை சுற்றிலும் நான்கு அல்லது ஐந்து(!) பெண்பாத்திகளை அமைத்து ஆண்பாத்தியில் சில தினங்கள் சேர்த்து வைத்திருக்கு கடல் நீரை பெண்பாத்திகளுக்கு திறந்துவிடுகிறார்கள். அவை இரண்டும் கலந்ததிலிருந்து சுமார் ஒரு வார காலத்திற்குள் கடல்நீர் ஆவியாகி உப்பு பாத்தியின் அடியில் சேறு போல் படிந்து காணப்படுகிறது.

அவற்றை மரத்தினாலான துடுப்பு போன்ற நீளமான கரண்டியால் பாத்திகளின் நடுவில் குவியலாக சேர்த்து மேலும் சில தினங்கள் சூரிய வெளிச்சத்தில் உலரவிடுகிறார்கள். இங்ஙனம் அறுவடைக்கு தயாராகவிருக்கும் உப்பை கூடைகளில் அள்ளி உப்பளத்தின் ஒரு பகுதியிலிருக்கும் வெற்று நிலத்தில் குவியல் குவியலாக மலைபோல் சேமித்து அவற்றை பனைஓலைகளால் மூடிவைக்கிறார்கள்.

அறுவடை நேரத்திலோ அல்லது அறுவடை முடிந்து லாரிகளில் ஏற்றி அனுப்பும்வரையிலுள்ள இடைபட்ட காலத்திலோ பெருத்த காற்றோ மழையோ வந்துவிட்டால் உப்பு முழுவதும் கரைந்து உப்பள உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடும்.

நான் தூத்துக்குடி கிளைக்கு பொறுப்பேற்பதற்கு முந்தைய வருடம் அப்படித்தான் நேர்ந்திருக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து பெய்த ஒரு வார மழையில் உப்பளங்களில் சேமித்து வைத்திருந்த அனைத்து உப்பும் மழையில் கரைந்து ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாயிருந்தனர்.

பரம்பரை பரம்பரையாக இத்தொழில் ஈடுபட்டிருந்த ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் இத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே எதிர்பார்த்து அத்தகைய பாதிப்புகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்களாலான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்திருப்பார்கள்.

ஆனால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கு இத்தொழிலில் முன்பின் அனுபவம் இல்லை. அது ஒன்று.

மற்றொன்று, சுமார் ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் அவர்கள் அமைத்திருந்த உப்பளம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல. ஏற்கனவே உப்புத்தயாரிப்பில் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகியிருந்த ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான உப்பளத்தை பெருந்தொகைக் கொடுத்து இரண்டு வருட லீசுக்கு எடுத்திருந்தனர்.

சாதாரணமாக தங்களுடைய சொந்த உப்பளங்களை வைத்திருப்பவர்களுக்கு அறுவடைக் காலத்திலோ அல்லது அதற்கு பிந்தைய ஒரு மாதகாலத்திலோ மழையாலோ, பெருங்காற்றாலோ நஷ்டம் ஏற்படுவது அவர்கள் வேலையாட்களுக்கு கொடுத்த கூலியும் மற்றும் இதர தயாரிப்பு சிலவுகள் மட்டுமே.

அதற்குத் தேவையான தொகையைத்தான் வங்கிகள் கடனாக வழங்கியிருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையில் வாங்கிகளில் அளித்திருக்கும் பெரும்பாலான கடன்கள் வசூலாகாமல் நிலுவையில் நின்றுபோகும். அப்போதெல்லாம் வங்கிகள் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வட்டியில் மேலும் கடன் வழங்கி அவர்கள் தொழிலை மீண்டும் துவக்க உதவிசெய்வதுண்டு.

ஆனால் நான் குறிப்பிட்டிருந்த நிறுவனத்தினர் உற்பத்தி நஷ்டத்துடன் அவர்கள் லீஸ் கட்டணமாக கொடுத்திருந்த தொகையும் நஷ்டப்பட்டுப்போயினர்.

இத்தகைய லீஸ் கட்டணத்தை எந்த வங்கியும் கடனாக வழங்க முன்வராது. ஏனெனில் இத்தகைய தொழிலுக்கு கடன் வழங்க முன்வரும் வங்கிகள் எல்லாமே அதற்கு முன்வைக்கும் முதல் நியதியே உப்பளம் அமைக்கப்படும் நிலப்பரப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.

ஆகவே இந்நிறுவனத்தினர் நடத்திவந்த எண்ணெய் ஆலைக்கென எங்களுடைய கிளை வழங்கியிருந்த கடன் தொகையிலிருந்து ஒரு பெரும் பகுதியை தங்களுடைய உப்பளத்தின் லீஸ் கட்டணத்திற்கு உபயோகித்திருக்கிறார்கள். ‘சார் ஆறே மாசத்துல உற்பத்திய முடிச்சி பெருந்தொகையை லாபமாக சம்பாதித்துவிடலாம். எண்ணெய் ஆலையிலிருந்து எடுத்த பணத்தை வங்கிக்கு தெரியாமலேயே திருப்பி அடைத்துவிடலாம்.’ என்று நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த பாகஸ்தரின் வார்த்தையில் மயங்கி மதிகெட்டுப்போய் இந்த தவறான செயலில் என்னுடைய முந்தைய மேலாளருக்குத் தெரியாமல் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன் விளைவு, உப்பளத்தில் முடக்கிய தொகையை மீட்கமுடியாமல் போய் எண்ணெய் ஆலையும் முடங்கிப்போனது.

சாதாரணமாக இத்தகைய பெருந்தொகையை கடனாக வழங்கும் நேரத்தில் கணக்கில் இருந்து ரொக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுக்கலாகாது என்ற நியதியை என்னுடைய வங்கியில் வைப்பது உண்டு. ஆனால் அதை என்னுடைய மேலாளரும் அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்த உதவி மேலாளரும் கடைப்பிடிக்க தவறியது முதல் தவறு. ஏனெனில் எண்ணெய் ஆலைக்குத் தேவையான மூலப்பொருளான கொப்பரைத்தேங்காயை இந்நிறுவனம் கேரளத்திலிருந்துதான் வாங்குவது வழக்கம். அந்நிறுவனங்களுக்கு கொள்முதல் செய்வதற்குத் தேவையான தொகையை வாடிக்கையாளர் தன்னுடைய காசோலை மூலமாகவோ அல்லது டிராஃப்ட் மூலமாகவோ  நேரடியாக செலுத்தவேண்டும் என்பதும் என்னுடயை தலைமையலுவலகத்தினர் வலியுறுத்தியிருந்தனர்.

இரண்டாவது, மாதத்திற்கு ஒருமுறையாவது தங்களுடைய ஆலையில் வைத்திருந்த மொத்த சரக்கின் விவரத்தை வங்கிக்கு தெரிவிக்கவேண்டும் என்பதும் நியதியாகவிருந்தது. அங்ஙனம் கிடைக்கப்பெறும் அறிக்கையிலிருந்த சரக்கு விவரங்களைச் சரிபார்த்து அதன் மதிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்டிருக்கும் மொத்த கடன் மதிப்புக்கு ஈடாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் சரக்கு இருப்பின் மதிப்பு குறைவாய் இருக்கும் பட்சத்தில் வங்கியிலிருந்து அதிகப்படியாக எடுத்திருந்த தொகையை உடனே வசூலிக்கவேண்டும் என்பதும் நியதி.

இவ்விரண்டு நியதிகளையும் என்னுடைய முந்தைய மேலாளர் கடைபிடிக்க தவறியதுடன் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது வாடிக்கையாளரின் வர்த்தக ஸ்தலத்திற்கு சென்று அதன் செயல்பாட்டையும் கையிருப்பில் இருந்த சரக்கின் தரத்தை மேல்வாரியாகவெங்கிலும் சரிபார்க்க வேண்டும் என்ற நியதியையும் கடைபிடிக்க தவறியிருந்தார்.

அதன் விளைவுதான் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட தொகை ஒரு வருடத்திற்கு மேலாகியும் வசூலிக்கப்படாமல் இருந்தது. இத்தகைய கணக்குகளை ஒவ்வொரு வருடமும் மேலதிகாரிகளுடன் அனுமதியுடன் மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என்ற நியதியும் இருந்ததால் நான் சென்று பொறுப்பேற்றதும் முதல் வேலையாக அந்நிறுவனத்தின் எண்ணெய் ஆலையை பார்வையிட வேண்டும் தீர்மானித்தேன்.

சாதாரணமாக வாடிக்கையாளர்களின் வர்த்தக ஸ்தலங்களைப் பார்வையிட விரும்பும் நேரங்களில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முன்னர் அவர்களிடம் அறிவிப்பதுண்டு. ஆனால் இந்த நிறுவனத்தைப் பார்வையிட எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் துணைக்கு என்னுடைய உதவி மேலாளாரை அழைத்துக்கொண்டு சென்றேன்.

நான் சென்ற நேரம் மாலை சுமார் நான்கு மணி. ஆலையின் நுழைவு வாசல் ஒரு பழைய காலத்து கோவில் வாசலைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. கதவும் சிறந்த வேலைப்பாடுகளுடன் பழைய கால மரத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் சரியான பராமரிப்பில்லாமல் பெரிய கீறல்களுடன் காணப்பட்டது.

கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்ததும் சுமார் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் கடப்பா கல் என்பார்களே அதால் வேயப்பட்டு ஒரு பெரிய வானம் பார்த்த முற்றம். ஒரு மூலையில் சுமார் ஒரு லாரி லோடு அளவிற்கான உடைக்கப்பட்ட கொப்பரைத் தேங்காய் சூரிய வெளிச்சத்தில் உலரவைக்கப்பட்டிருந்தது. இரண்டே இரண்டு பணிப்பெண்கள் அருகில் அமர்ந்து கொப்பரைத் தேங்காய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தனர்.

அதைக் கடந்து முற்றத்தின் மறுகோடியில் இருந்த அலுவலக அறையை நெருங்கினேன். கண்ணாடி  தடுப்பிற்கப்பால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த -------கார் குடும்பத்தின் மருமகன் அமர்ந்திருந்தது தெரிந்தது. கதவைத் தட்ட திரும்பிப் பார்த்தவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. நான் பொறுப்பேற்ற வாரத்தில் என்னை வங்கியில் வந்து சந்தித்திருந்ததால் என்னை அடையாளம் தெரிந்தது.

பதற்றத்துடன் எழுந்து ஓடிவந்து கதவைத் திறந்தார். ‘என்ன சார் சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?’ என்றார் சற்று எரிச்சலுடன்.

தொடரும்.

21 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 121

ஒவ்வொரு வங்கி மேலாளருக்கும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்கள் வந்தாலே வேலை நெட்டி முறித்துவிடும்.

இப்போது மார்ச், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் ஆண்டு மற்றும் அரையாண்டு கணக்கு முடிக்கும் வேலை அப்போது ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில்.

கணினி என்ற நாமமே இல்லாத அன்றையசூழ்நிலையில் எல்லா கணக்குகளுக்கும் வட்டியை கணக்காக்கி வரவும் பற்றும் வைத்து கிளையின் பேலன்ஸ் ஷீட்டை தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவதற்குள் போதும், போறதும் என்றாகிவிடும்.

டிசம்பர் மாதத்தில் வரும் கிறிஸ்துமஸ், ஜனவரி ஒன்றாம் தேதி வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களில்கூட மனத்தை செலுத்த முடியாமல் வேலை, வேலை என்று சில நாட்களில் கிளையிலேயே இரவு முழுவதும் கண் விழித்து பணிபுரிந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது நிலைமையே வேறு. அன்று மண்டையை உடைத்துக்கொண்டு நாம் செய்த வேலைகளையெல்லாம் இப்போது அனாயசமாக கணினியும் அதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் மென்பொருளும் க்ஷண நேரத்தில் கனகச்சிதமாக செய்து முடித்துவிடுகிறது. இன்றைய தலைமுறை நிச்சயம் கொடுத்து வைத்ததுதான். சந்தேகமேயில்லை.

ஆனாலும் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்கள் என்னைப் பொறுத்தவரை மிகவும் விசேஷமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மாதங்கள்.

ஏன்?

என்னுடைய மூத்த மகள் பிறந்தது டிசம்பர் மாதம். இப்போதிருக்கும் இளைய மகள் பிறந்தது ஜூன் மாதம்.

ஒரு வங்கி மேலாளருக்கு மிகவும் தொடர்புடைய மாதங்களில் பிறந்தவர்கள் என்னுடைய இரு மகள்களும்!

********

'அழுதுகிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிருக்கணும்லே' என்று தன்னுடைய கடைசி மகனைப் பார்த்து என்னுடைய மாமனார் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

அதுபோல்தான் இருந்தது என்னுடைய அப்போதைய நிலையும். சரியாக நேரம் பார்த்து வங்கி அரையாண்டு வேலையில் மும்முரமாக ஈடுபட வேண்டிய நேரத்தில் வந்து பிறந்தாள் என்னுடைய மகள்.

நல்ல வேளை, வங்கி அலுவலகமும் வீடு ஒன்றாக இருந்த்து. அது மட்டுமா? என்னுடைய மனைவியை சேர்த்திருந்த மகப்பேறு மருத்துவ மனையுமல்லவா எதிரிலேயே இருந்தது?

என்னுடைய மாமனார் வீடும் அருகிலேயே இருந்ததால் நான் என் மனைவியின் அருகில் அமர்ந்திருக்க தேவையில்லாமல் என்னுடைய அலுவல்களில் கவனத்தை செலுத்த முடிந்தது.

என்னுடைய சட்ட ஆலோசகர் கூறியிருந்தது போலவே அடுத்த இரண்டு, மூன்று தினங்களுக்குப் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

‘சார். நான் சொன்ன ஆள்கிட்ட பேசியிருக்கேன். அவரும் சம்பந்தப்பட்ட ஆள்கிட்ட பேசிட்டு வேண்டியத செய்யறேன்னு சொல்லியிருக்கார். நீங்க முனிசிபல் ஆஃபீசுக்கு போயிருந்த விஷயத்த அவர்கிட்ட சொல்லலே. நீங்களும் அவசரப்படாம ஒரு வாரம் பத்து நாள் பாருங்க. அப்புறமும் ஒன்னும் நடக்கலைன்னா நாம பார்ட்னர்ஸ் ரெண்டு பேருக்குமே வக்கீல் நோட்டிஸ் விடலாம். பெறகு ஆக வேண்டியத பார்த்துக்கலாம். நீங்க நினைச்சா மாதிரி ப்ராப்பர்டீச அட்டாச் பண்ணணும்னா முதல்ல லோன் ரிக்கவரிக்கு சூட் ஃபைல் பண்ணணும். அதுக்கு உங்க எச்.ஓ. பர்மிஷன் வாங்கணுமில்லையா? அத வேணும்னா வாங்கி வச்சிருங்க. நார்மல் கோர்ஸ்ல ரிக்கவரி ஆவலன்னா கேஸ் போட்டுட்டு ஆக வேண்டியத பார்க்கலாம். என்ன சொல்றீங்க?’ என்றார்.

எனக்கும் அதைவிட்டால் வேறு வழி தெரியாததால், ‘சரி சார். அப்படியே செஞ்சிரலாம்.’ என்றேன்.

பிறகு வேறு சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்து விட்டு அவர் கிளம்பிச் சென்றார்.

*******

நான் நேற்று கூறிய கடன் கணக்கைப் போலவே வேறொரு வில்லங்கம் பிடித்த கணக்கும் இருந்தது.

ஆனால் இக்கணக்கில் நிலுவையில் நின்ற தொகை மிகவும் பெரியது. அத்துடன் அது தூத்துக்குடியில் சற்று பிரபலமாயிருந்த உயர் குலத்தைச் (---கார்) சார்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அக்குடும்பத்திற்கு ஒரு தேங்காய் எண்ணெய் ஆலையும் தூத்துக்குடி மத்திய பேருந்து நிலைய சாலையில் ஒரு பெட்ரோல் பங்க்கும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக இவ்விரு வணிகத்திலும் ஈடுபட்டிருந்த குடும்பம் அது.

நான் சென்னைக் கிளையில் மேலாளராக இருந்த சமயத்தில் என்னுடைய வங்கியின் முதல்வராக இருந்தவர் அவருடைய முந்தைய வங்கியில் பொது மேலாளராக இருந்த சமயத்தில் அவ்வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்கள். அவருடைய தூண்டுதலால் அவ்வங்கியிலிருந்து புலம்பெயர்ந்த பல வணிகர்களைப் போலவேதான் இவர்களும்.

நான் சென்னைக் கிளையில் இருந்த காலத்தில் அதே முதல்வர் பரிந்துரைத்த ஒரு வாடிக்கையாளரிடம்.
சிக்கிக்கொண்டு நான் பட்ட அவஸ்தையை ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

ஆனால் அந்த வாடிக்கையாளரை புத்திசாலித்தனமாக(!) இல்லை, அதிர்ஷ்டவசமாக என்னால் முளையிலேயே அதாவது கடன் கொடுக்காமலேயே, கிள்ளியெறிந்துவிட முடிந்தது.

ஆனால் என்னுடைய முந்தைய மேலாளருக்கு அந்த சாமர்த்தியம் போறாது போலிருக்கிறது. அல்லது அவருடைய துரதிர்ஷ்டம் என்றும் கூறலாம்.

நான் மேலே குறிப்பிட்ட தூத்துக்குடி வாடிக்கையாளரின் கணக்கு அந்த முந்தைய வங்கியிலிருந்தபோதே வில்லங்கம் பிடித்த கணக்காய்த்தான் இருந்திருக்கிறது என்றும் அந்த விஷயம் தெரிந்தும் எங்களுடைய வங்கியின் அப்போதைய முதல்வரின் நிர்பந்தத்தால் அக்கணக்கை அவ்வங்கியிலிருந்து தத்தெடுக்க வேண்டி வந்தது என்பதையும் என்னுடைய காசாளர் வழியாக தெரிந்துக்கொண்டேன்.

இத்தகைய கணக்குகளைத் தான் என்னுடைய அப்போதைய மேலதிகாரிகளுள் ஒருவர் கிண்டலாக, ‘these limits were not sanctioned TBR, they were sold!’ என்பார். அதாவது for extraneous ‘considerations’. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அது எப்படியோ போகட்டும். இப்போது நமக்கு அதுவல்ல முக்கியம்.

அந்த அடிப்படையில் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர் நிறுவனம் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாகும். அதில் இருந்த பாகஸ்தர்களுல் ஒரேயொருவரைத் தவிர எல்லோரும் நான் மேலே கூறிய ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அந்த ஒரேயொருவரை எப்படித்தான் தங்களுடைய குடும்ப நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார்களோ தெரியவில்லை. அந்த ஒருவரின் விபரீத யுக்திகளால்தான் பாரம்பரியமாக அவர்கள் நடத்திவந்த தொழில் நலிந்து போனது என்றால் மிகையாகாது.

சரி அப்படியென்ன விபரீத யுக்தி அது!

சொல்கிறேன்.

நான் குறிப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்த சமூகத்தினருக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத தொழில் உப்பு தயாரிப்பது. மீன்பிடி தொழிலுக்கு எப்படி ஒரு சமூகத்தினர் இருந்தனரோ அதே போல உப்பு தயாரிப்பிலும் தூத்துக்குடியைப் பொருத்தவரை அது ஒரு சமூகத்தைச் சார்ந்தவருடைய பாரம்பரிய தொழிலாகும். அதில் அப்போது எனக்குத் தெரிந்தவரை வேற்று சமூகத்தினரைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை.

ஆனால் அத்தொழிலில் குறைந்த முதலீட்டில் பெருத்த லாபம் அடையலாம் என்று நான் குறிப்பிட்ட அந்த ஒருவர் அக்குடும்பத்தைச் சார்ந்த மூத்த மருமகனை தன் ஜால வார்த்தகைளால் வசியப்படுத்தியிருக்கிறார்.

நான் இக்கடனை வசூலிக்க இனி வரும் பதிவுகளில் கூறப்போகும் அதிரடியாக எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக என்னைச் சந்திக்க வந்த அம்மனிதரை முதன் முறையாக பார்த்தவுடனே இவரை எப்படி நம்பி அக்குடும்பத்தினர் தங்களுடைய நிறுவனத்தில் பாகஸ்தராக சேர்த்தனர் என்று வியந்து போனேன்.

நடிகர் மற்றும் இயக்குனர் விசு அவர்கள் ஒரு படத்தில் ஓயாமல் வெட்டியாக வாயடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருவார். சம்சாரம் அது மின்சாரம் என்று நினைக்கிறேன். சவரம் செய்யாத நரைத்த தாடியுடன், காவி வேட்டியுடன் வீட்டு திண்ணையில் அமர்ந்துக்கொண்டு போவோர் வருவோரையெல்லாம் வம்புக்கு இழுப்பார்.

அதே கோலத்தில் பல வாரங்கள் சவரம் செய்யாத முகத்துடன், அழுக்குப் பிடித்த வேட்டி சட்டையுடன் வந்தவரைப் பார்த்ததும் என்னுடைய அறைக்குள் வரவிடுவதா வேண்டாமா என்று யோசித்தேன்.நான் சாதாரணமாக ஒருவரின் உடையையும், உருவத்தையும் மட்டும் பார்த்துவிட்டு அவருடைய குணத்தையும் தகுதியையும் எடை போடுபவன் அல்ல. ஆனால் ஏனோ எனக்கு அவரைக் கண்ட முதல் பார்வையிலேயே இவர் நம்பத்தகுந்தவர் அல்ல என்று தோன்றியது.

சொல்லப் போனால் அவராக வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வரை எனக்கோ அல்லது என்னுடைய கிளையில் இருந்தவர்களுக்கோ அவர் யாரென்றே தெரிந்திருக்கவில்லை.. என்னுடைய காசாளரையும் சேர்த்து.

‘சார் நாந்தான் பாலாஜி (கற்பனைப் பெயர்) ----------ங்கார் மில்ஸ்ல பார்ட்னர்’ என்று அவர் கூறியதும் என்னையுமறியாமல் இவருடைய பேச்சில் மயங்கி நல்லதொரு நிறுவனத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த அக்குடும்பத்து மருமகன்மேல்தான் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.


தொடரும்..

20 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 120

ஒங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.’ என்ற அறிவுரையுடன் கொடுத்துவிட்டு நான் ‘அளித்ததை’ பெற்றுக்கொண்டு சென்றார்.

எனக்குக் கிடைத்த தகவலை வைத்தே சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கு ஒரு வில்லங்க சான்றிதழ்களைப் பெற்றுவிட முடியும் என்று நினைத்தேன். அவற்றை நீதிமன்றத்தின் மூலம் attach செய்துவிட்டால் வாடிக்கையாளர் தாமாக வங்கியின் கடனை அடைக்க முன்வருவார் என்றும் யோசித்து அப்படியே செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

அதை செயல்படுத்தும் எண்ணத்துடன் முனிசிபல் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த நான் என்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் கடந்திருந்தது.  

இப்போது சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று பயனில்லை. இனி நாளைக் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் முனிசிபல் அலுவலகத்தில் அவர் கூறிய அறிவுரைப்படி என்னுடைய மாமனாரிடம் இதைப்பற்றி பேச வேண்டுமா என்று யோசித்தேன். எதற்காக அவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் என்றும் தோன்றியது.

அவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்றால் என் மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டுமே அவரிடம் இவர்களைப் பற்றி கேட்டால்  என்ன என்றும் தோன்றியது. ஆனால் அதே சமயம் பிரசவம் இன்றோ நாளையோ என்ற நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் என் மனைவியிடம் இப்படிப்பட்ட விஷயத்தைப் பேசுவது உசிதமல்ல என்று நினைத்தேன்.

சட்டென்று மனதில் ஒரு எண்ணம் உதித்தது. இதற்கு சரியான நபர் என்னுடைய வங்கியின் சட்ட ஆலோசகர்தான் என்று தோன்றியது. ஆனால் அவரை வார நாட்களில் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சந்திக்க முடியும் என்பதால் என்னுடைய அலுவலகத்திற்குத் திரும்பி மீதமிருந்த அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு அவரைச் சந்திக்க செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

மேலும் அன்று ஜூன் மாதம் 29ம் நாள். எங்களுடைய அரையாண்டு கணக்கு முடிப்பதன் சம்பந்தமாக அலுவல்கள் நிறைய இருந்தன. ஆகவே அலுவலகம் திரும்பி அந்த அலுவல்களில் மூழ்கிப் போனேன்.

என்னுடைய அலுவலக மேசையில் ஒரு சிறிய அலாரம் டைம் பீசை வைத்திருப்பது வழக்கம். என்னுடைய முக்கியமான அலுவல்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க ஒரு நாளில் இரண்டு மூன்று முறையாவது எனக்கு நினைவுபடுத்த அலாரம் வைப்பது வழக்கம். இப்போதிருப்பதுபோல கணினி இருக்கவில்லையே..

வேலை மும்முரத்தில் என்னுடைய சட்ட ஆலோசகரை சந்திக்க வேண்டும் நான் மாலையில் எடுத்த முடிவு மறந்துபோகவிருந்த சமயத்தில் அலாரம் அடிக்கவே, என்னுடைய மேசையிலிருந்தவற்றை இழுப்பில் வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய அலுவல்களில் மும்முரமாக இருந்த என்னுடைய உதவி மேலாளரிடமும் அலுவலகத்திற்கு பின்னால் என்னுடைய குடியிருப்பில் இருந்த என்னுடைய மனைவியிடமும் கூறிக்கொண்டு புறப்பட்டேன்.

என்னுடைய வங்கியின் சட்ட ஆலோசகர் தூத்துக்குடியில் எதிரும் புதிருமாய் இருந்த இரு சாதிப்பிரிவினரில் ஒரு பிரிவினைச் சார்ந்தவராயினும் எல்லோரிடம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இனிமையுடன் பழகும் சுபாவம் உள்ளவர். அவருக்கு இருந்த வாடிக்கையாளர்களுள் எல்லா சாதிப் பிரிவனரையும் சார்ந்தவர்கள் இருந்தனர்.. பிழைப்புக்காக என்றாலும் அதையும் பொருட்படுத்தாமல் தன் இனத்தைச் சார்ந்தவருக்கு மட்டுமே வாதிடும் வழக்கறிஞர்களும் தூத்துக்குடியில் இருக்கத்தான் செய்தார்கள்.

நான் அவருடைய அலுவலகத்தை அடைந்த நேரம் peak hour என்பார்களே அதுபோல் இருந்தது. இருக்க இடம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் கூட்டம். அவர் தூத்துக்குடி முனிசிபாலிட்டிக்கும் சட்ட ஆலோசகராக இருந்ததால் வழக்குகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் குறைவில்லை.

ஆயினும் நான் நுழைந்ததை தன்னுடைய அறையிலிருந்தே கவனித்த அவர் என்னைப் பார்த்ததும் புன்னகையுடன் எழுந்து  ‘உள்ளார வாங்க ஜோசஃப்’ என்றார்.

நான் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து தயங்குவதைப் பார்த்த அவர், ‘இவங்கெல்லாம் தெனமும் வர்றவங்க. ஆனா நீங்க எப்பவாச்சும் தானே.. அதனால சும்மா வாங்க..’ என்றவாறு தன் அறையில் குழுமி இருந்தவர்களைப் பார்த்து, ‘என்னய்யா.. இவரு நம்ம பேங்க் மேனேசர்.. இவர தனியா பாத்துக்கணுமில்லே.?’ என்றார் சிரித்தவாறு.

குழுமியிருந்தவர்களுள் சிலர் என்னுடைய வாடிக்கையாளர்களாகவும் இருந்தனர். அவர்கள் மட்டும் என்னைப் பார்த்து புன்னகைக்க மீதியுள்ளவர்கள் என்னை, ‘யாருவே இவுக?’ என்பதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

நான் அவரருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து வந்த விஷயத்தை சுருக்கமாகக் கூறிவிட்டு முனிசிபல் அலுவலகத்தில் இருந்து எனக்கு கிடைத்திருந்த விவரங்களை அவரிடம் காண்பித்தேன்.

அவர் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நான் கொடுத்த ச்சீட்டையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு குழுமியிருந்தவர்களுக்கு விளங்கக் கூடாது என்ற நோக்கத்தில் ஆங்கிலத்தில், ‘இது வேணுமா சார்? நீங்க டார்கெட் பண்ணியிருக்கற ஆளு நீங்க நினைக்கறா மாதிரி லேசுபட்ட ஆளில்லையே, அதான் யோசிக்கறேன். நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?’ என்றார்.

‘சொல்லுங்க சார்.’

‘இந்த ஆள நல்லா தெரிஞ்ச ஒரு ஆள எனக்கு தெரியும். என்னோட க்ளையண்ட்தான். நா வேணும்னா அவர்கிட்ட ஒங்க லோன் சமாச்சாரமா பேசிப் பாக்கறேன். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க.’

என்னுடைய வங்கியின் சட்ட ஆலோசகராய் கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றிய, தூத்துக்குடி நகரைச் சார்ந்த ஒரு வழக்கறிஞரே தயங்குகிறார் என்றால் நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தவர் உண்மையிலேயே ஒரு வில்லங்கம் பிடித்த ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்ற நினைப்பில் ‘ஓக்கே சார்.. ரெண்டு நாளைக்கப்புறம் நான் உங்கள கூப்டறேன்.’ என்று கூறிவிட்டு எழுந்து நின்றேன்.

அவரும் எழுந்து என்னுடன் என்னுடைய வாகனம் வரை வந்தார். ‘நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க ஜோசப். நீங்க வந்து ரெண்டு  மாசம்தான் ஆயிருக்குன்னு நினைக்கிறேன். முதல்ல இந்த ஊரைப்பத்தி, இங்கருக்கற ஆளுங்களோட பேக்ரவுண்ட பத்தி முழுசா விசாரிச்சி தெரிஞ்சிக்குங்க. அப்புறம் ரிக்கவரிக்கு இறங்குங்க. நானும் இங்க வந்து ப்ராக்டீஸ் துவங்கி சுமார் இருபது வருஷத்துக்கு மேல ஆவுது.. இருந்தாலும் சில சமயங்கள்ல உயிர கைல பிடிச்சிக்கிட்டு இருக்கறதுபோல தோணும். இது மத்த ஊர்ங்க போல இல்ல. ரொம்பவும் கவனமா நாம மூவ் பண்ணணும். ஏதோ சொல்லணும்னு தோனிச்சி. பி கேர்ஃபுல். இட் ஈஸ் ஃபார் யுவர் ஓன் குட்.’

நான் என்னுடைய வீட்டிற்கு திரும்பும் வழியெல்லாம் அவர் கூறிய அறிவுரையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என்னுடைய பெயரை யாரோ உரக்க அழைப்பதைக் கேட்டு சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன்.

நான் பணியில் சேர்ந்ததும் சந்தித்த ஆறேழு படகுகளுக்கு சொந்தக்காரர் (இன்சூரன்ஸ் பாலிசி விவகாரத்தில் என்னுடன் வாதம் செய்தவர்) அவருடைய பணக்காரத்தனமான நாற்சக்கர வாகனத்திலிருந்து என்னை அழைப்பதைப் பார்த்தேன். அவருடைய முகத்தில் இருந்த புன்னகை அவர் மீண்டும் வம்புக்கு வரவில்லை என்ற நினைப்புடன் வாகனத்திலிருந்து இறங்கி நான் நின்ற இடத்திலேயே நின்று அவருக்காகக் காத்திருந்தேன்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்திலிருந்து பந்தாவாக இறங்கியவருடைய தோற்றத்தைப் பார்த்து அசந்து போனேன் நான். என்னுடன் முதல் நாள் அலுவலகத்திலும் அன்று மாலை என்னுடைய மாமனார் வீட்டில் வந்திருந்தவருக்கும் இவருக்கும்தான் எத்தனை வித்தியாசம் என்று நினைத்தேன்.

‘என்ன சார் அப்படி பாக்கறீங்க?’ என்று சிரித்தவர். ‘ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு இருக்கேன். இந்த மாதிரி கோலத்துல போனாத்தான் பெரியவன்னு மதிக்கிறானுவ. பேங்குக்கு வரும்போது நம்மள ஒரு கடன்காரனால்லே பாக்கறீய? அங்க போயி இந்த மாதிரி அஞ்சி விரல்லயும் மோதிரத்த போட்டுக்கிட்டு வந்து நின்னா கடனத்தான் குடுத்துருவியளா?’ என்று மேலும் உரக்க சிரிக்க சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிலர் எங்களைத் திரும்பிப் பார்த்தனர். அவர்களுள் ஒருவர் என்னுடன் இருந்தவரைப் பார்த்ததும், ‘என்னண்ணே இங்ஙன நிக்கறீய?’ என்று குசலம் விசாரித்தார்.

நான் தர்மசங்கடத்துடன் இப்ப எதுக்குய்யா வந்திரிக்கீக? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வெறுமனே உதட்டில் ஒரு புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தேன்.

அவரைக் குசலம் விசாரித்தவர் அகன்றதும், ‘சார் நா அன்னைக்கி பேசினது சரியில்லைன்னு எனக்கு ரொம்ப நாள் உறுத்திக்கிட்டே இருந்திச்சி. ஒரு வாரம் முன்னால உங்க மச்சான பார்த்தேன். அவன் என்னோட ஸ்கூல் ஃப்ரெண்டு. என்னடா நீ எம் மச்சான்கிட்ட போயி தகராறு பண்ணியாம்மேன்னதும் எனக்கு ரொம்ப சங்கடமா போயிருச்சி. ஒங்கள ஆஃபீஸ்ல வந்து எப்படி பார்த்து பேசறதுன்னு தெரியாம சங்கடப்பட்டுக்கிட்டு இருந்தேன். அதான் வழியில உங்கள பார்த்ததும் வண்டிய நிறுத்தச் சொல்லிட்டு உங்கள கூப்டேன். தப்பா நினைச்சிக்காதீங்க. நாங்கல்லாம் அடா புடான்னு தொழில் செய்யற காட்டுப்பசங்க சார். யார் கிட்ட என்ன பேசறது எப்படி பேசறதுன்னு சமயத்துல தெரியாம போயிருது.’ என்றவரைப் பார்த்து என்ன பேசுவதென தெரியாமல் நின்றிருந்தேன்.

‘நீங்க அத இன்னும் மறக்கலைன்னு தோனுது.’ என்று அவர் மீண்டும் தொடரவே நான் அவருடைய கையைப் பிடித்து, ‘சேச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. என்னோட வேலையில இதெல்லாம் ரொம்ப சகஜம். உங்களுக்கு ஏற்பட்டுப்போன நஷ்டத்துல நீங்க கொஞ்சம் படபடன்னு வந்தீங்க. நான் அத அன்னைக்கே மறந்துட்டேன். என் மாமனார்தான் ஒருவேளை உங்க ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லியிருக்கணும்.’ என்றேன்.

அவர் பதிலுக்கு, ‘என்ன சார் பெரிசா நஷ்டம்..? தொழில்ல ஏற்படாத நஷ்டமா? பணமா சார் முக்கியம்? உங்களமாதிரி ஆளுங்களோட நட்புதான் சார் முக்கியம். அதையெல்லாம் யோசிக்காம எடுத்தேன் கவுத்தேன்னு பேசிட்டு அப்புறமா சங்கத் தலவைர் தலையிட்டு சமாதானம் பண்ற வரைக்குமில்லே நடந்துக்கிட்டேன்? அத நினைச்சாத்தான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு?’ என்று அங்கலாய்த்தார்.

இதென்னடா வம்பு மனுஷன் கோபத்துலயும் பேசிக்கிட்டே இருப்பார் இப்பவுமா என்ற நினைப்பில், ‘நான் அர்ஜெண்ட் வேலையா போகணும் சார்.’ என்று விடைபெற்று வாகனத்தில் ஏறிக்கொண்டு புறப்பட்டேன். வரும் வழியில் அவரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. இவர்களுள் பெரும்பாலோனோர் இப்படித்தான். வெயிலிருந்து பார்ப்பதற்கு வாட்டசாட்டமான உருவமும், கறடுமுரடான தோற்றமும்.. முரட்டுத்தனமான வார்த்தைகளும்.. ஆனால் பழகிவிட்டால் பாசத்துக்கு அடிமையாகி தங்கள் உயிரையும் கொடுக்கத் துணியும் குழந்தை உள்ளம்.. பலாப்பழத்தைப் போல..

வீட்டையடைந்ததும் வாசலிலேயே காத்திருந்த என்னுடைய மனைவியின் மூத்த சகோதரர் (கப்பலில் வேலை பார்ப்பவர். விடுமுறையில் ஊருக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன), ‘என்ன மச்சான் எங்க போய்ட்டீங்க? தங்கச்சிக்கு பிரசவ வலி வந்திருச்சி. நல்ல வேளை அவ உடனே ஃபோன் பண்ணதால அம்மா வந்து எதுத்தாப்பல ஜெயலட்சுமி க்ளினிக்குக்கு கூட்டிக்கிட்டு போயிருக்காங்க. இன்னைக்கி ராத்திரிக்குள்ள பிரசவம் ஆயிரும்னு டாக்டர் சொல்லியிருக்கார்.. நீங்க போய் பாருங்க. நான் வீட்டுக்கு போய்ட்டு இப்ப வரேன்.’ என்று படபடக்க நான் வாகனத்தை நிறுத்திவிட்டு என்னுடைய வங்கி அலுவலகத்தின் நேரெதிரில் இருந்த மருத்துவ மனைக்குள் நுழைந்தேன்.

அன்று இரவு சுமார் பதினோரு மணிக்கு என்னுடைய மூன்றாவது மகள் பிறந்தாள்.

தொடரும்..


19 April 2006

ஒன்னு வாங்குனா ஒன்னு இனாம்!!

அரிசி வேணுமா அரிசி!!

ஒரு கிலோ வாங்கினா ஒரு கிலோ இணாமுங்க..

இன்றைய Financial Express நாளிதழில் Rice War in Tamilnadu என்ற ஒரு செய்திக் கட்டுரையைப் படித்ததும் ஏன் நாமும் இன்றைக்கு இதை எழுதி சிலரை வம்புக்கு இழுக்கக் கூடாது என்று நினைத்தேன்.  அதில் வந்திருந்த கார்ட்டூனையும் சேர்த்திருக்கலாம். ஆனால் முயன்றும் அதை lift செய்ய இயலவில்லை.

அது போகட்டும். விஷயத்துக்கு வருவோம்..

சில நாட்களுக்கு முன் Is D(MK) Desperate? என்ற ஒரு கட்டுரையை என்னுடைய ஆங்கிலப் பதிவில் இட்டு சிலருடைய கோபத்தை சம்பாதித்தேன். அதில் ஒருவர் 'ஏன் வேணும்னா ‘ஜெ’ விமரிசித்து எழுதுங்களேன்' என்பதுபோல் சவாலும் விட்டிருந்தார்.

அப்போது எனக்கு தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை. ‘ஜெ’ அவர்களே மனமுவந்து அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை நேற்று வழங்கியதன் விளைவே இக்கட்டுரை..

சரிங்க. மு.க. தான் ஆட்சியை எப்பாடு பட்டாவது பிடித்துவிடவேண்டும் என்று தனக்கு கனவில் தோன்றியவற்றையெல்லாம் மக்களுக்கு அளிப்பதாக வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். ‘நான் ஆட்சியில் இல்லை அதனால் ‘எதை’ வேண்டுமானாலும் அறிவிக்கலாம்’ என்று அவரே ‘ஜெ’ வின் அறிக்கையை விமர்சித்து கூறியதிலிருந்து அவருடை வாக்குறுதிகள் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கோடியிட்டு காட்டியிருக்கிறார். ஆகவே அதை மறந்துவிடுவோம்..

ஒரு ஆளுங்கட்சியின் தலையான தலைவர்.. முதலமைச்சர், எப்படிங்க இப்படி ஒரு அறிக்கையை விடலாம்? அதுவும் தேர்தல் களத்தில்? கம்பை அவரே எதிர்கட்சிகளிடத்தில் கொடுத்துவிட்டு அடிங்கள் என்று குனிந்து கொடுப்பது போலல்லவா இருக்கிறது?

இதில் வை.கோவின் நிலைதான் பரிதாபம். அவர் ‘ஜெ’விடம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஒழுங்காக தினமும் மு.க வின் வாக்குறுதிகளை அக்கு வேறு ணி வேராக கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார். ‘ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு இவர் குடுப்பாராம் நாம வாங்கிக்கணுமாம். ஏன்யா தெரியாமத்தான் கேக்கேன்..எங்களோட ஒப்பில்லா தலைவியின் தலைமையில் நடந்துக்கொண்டிருக்கிற மக்களாட்சியில் மூனு ரூவாய்க்கு குடுக்கறப்பவே 1300 கோடி துண்டு விழுதுங்கறாங்க. இதுல இவரு ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்கு.. துண்டு விழுதறத சன் டிவிலருந்து குடுப்பாங்களா?’ என்று மேடைதோறும் முழங்கிக்கொண்டிருந்தவர் இனி என்ன செய்யப் போகிறார், பாவம்?

ஒரு துண்டு வாங்குனா ஒரு துண்டு இனாம்.. இல்லை.. ஒரு புடவை வாங்குனா ப்ளவுஸ் பீஸ் இனாம்.. பனியன் வாங்குனா ஜட்டி இனாம்னு கேட்டிருக்கோம்..

அது மாதிரி ஒரு கிலோ அரிசி வாங்குனா ஒரு கிலோ அரிசி இனாம்..

அது சரி.. இதுக்கெல்லாம் ஃபைனான்ஸ் பண்றது யாருன்னு நினைக்கறீங்க?

நீங்களும் நானுந்தாங்க..

என்ன பாக்கறீங்க? Deducted at source னு சொல்லிட்டு நம்ம மாத சம்பளத்துலருந்து பிடிச்சிக்கற வரிப் பணம்தான் இப்படி தேவையற்ற வாக்குறுதிகளுக்கு மூலதனம்...

இத எல்லாம் தெரிஞ்ச மத்திய ஃபைனான்ஸ் மினிஸ்டர் வேற ‘It is feasible’னு ஹார்வர்ட் ஸ்டைல்ல ஆமோதிக்கறார்..

அதாவது மு.க சொன்னா feasible. அதையே 'ஜெ' சொன்னா கேலி பண்ண வேண்டியது.. யார் என்ன கொடுத்தாலும் நாங்க வாங்கிக்க தயார்னு நிக்கற below poverty (!) வாக்காளர்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இன்னும் என்னென்ன cess வரப்போவுதோன்னு திகைச்சி நிக்கற என்னைப் போன்ற மாச சம்பளக்காரர்கள்.

கேவலம்டா சாமி..

திரும்பிப் பார்க்கிறேன் 119

அவற்றில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை எல்லாம் சந்தித்து விவரம் அறிவதுதான் அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய முக்கிய பணியாய் இருந்தது..

தூத்துக்குடியின் மிக முக்கியமான தொழில்களுள் ஒன்று மீன் பிடித்தல் என்று முன்பே கூறியிருந்தேன். தூத்துக்குடி மீன் பிடித் துறைமுகத்தில் மாலை வேளைகளில் சென்றால் படு பரபரப்பாய் இருக்கும்.

நூற்றுக்கும் மேற்பட்ட மீன் பிடிப் படகுகள் நங்கூரம் இட்டு படகுத் துறைமுகத்தில் நிற்க அதிலிருந்து அன்றைய பிடிப்பை இறக்கி தரம் வாரியாகப் பிரித்து, குவியல் குவியலாய் அமைத்திருக்க  மீன் மற்றும் இரால் ஏற்றுமதியாளர்களும், உள்ளூர் மீன் விற்பனையாளர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தில் அவற்றைக் கொள்முதல் செய்து செல்வது நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

அதுபோலவே தூத்துக்குடி சரக்குத் துறைமுகமும் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் இந்தியாவிலுள்ள துறைமுகங்களுள் மிக அதிக அளவிலான சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துவரும் துறைமுகம் அது.

இங்கு வந்து செல்லும் வெளிநாட்டும் மற்றும் உள் நாட்டு கப்பல்களுக்கு அவர்களுக்கு தூத்துக்குடியை விட்டு அடுத்த துறைமுகத்திற்கு செல்லும் வரையிலான பலசரக்குகள் (Provisions) அதாவது அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள், ரொட்டி, பட்டர், ஜாம், மாமிசம், பதப்படுத்தப்பட்ட மீன், இறால் வகையறாக்கள்.. ஆகியவற்றை சப்ளை செய்யும் தொழிலில் தூத்துக்குடியில் இருந்த பல நிறுவனங்களும் ஈடுபட்டிருந்தன.

சாதாரணமாக கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் இத்தகைய நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கும். பலசரக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முன்பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குத் தேவையானவற்றை சப்ளை செய்துவிட்டு அதற்குறிய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு பெற்றுக்கொள்ளும்.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையில் இருந்த போட்டியை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் யார் தங்களுக்கு அதிக காலக்கெடு அளிக்கிறார்களோ அல்லது தங்களிடமிருந்து பெறவேண்டிய தொகைக்கு யார் அதிகம் தொல்லைக் கொடுக்காதிருக்கிறார்களோ அவர்களுக்கே அந்த ஒப்பந்தத்தை (contract) அளிப்பார்கள். அவர்கள் சப்ளை செய்யும் பொருட்களில் விலை அதிகமிருந்தாலோ அல்லது அவற்றின் தரம் சற்று சுமாராக இருந்தாலோ அதைப் பொருட்படுத்தமாட்டார்கள்.

இத்தொழிலில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய முதலீட்டில் இயங்கும் தனி முதலாளி (Proprietorship) அல்லது கூட்டு (Partnship firm) நிறுவனங்களாகவே இருக்கும். ஆகவே முதலில் பணத்தை முடக்கி சரக்குகளை சப்ளை செய்துவிட்டு கப்பல் நிறுவனங்கள் அதற்குண்டான தொகையை அளிக்கும் வரை பணத்திற்காகக் காத்திருக்க அவர்களுடைய நிதிநிலை இடமளிக்காது.

அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு கடன் வழங்குவது தூத்துக்குடியிலிருந்த வங்கிகளுடைய முக்கிய வணிகத்தில் ஒன்று . இந்நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருட்களுக்குண்டான இன்வாய்சை கப்பல் நிறுவனங்களின் பெயரில் தயாரித்து அதனுடைய மதிப்பிற்கு ஈடான மூன்று மாத காலத்திற்குள் காலாவதியாகும் வகையில் ஹ¤ண்டி ஒன்றையும் தயாரித்து அத்துடன் அவர்கள் சப்ளை செய்த கப்பல் சரக்கு மாஸ்டர் அல்லது கேப்டனின் ஒப்பமிட்ட அத்தாட்சியையும் (acknowledgement) இணைத்து வங்கிக்கு சமர்ப்பிப்பார்கள்.

வங்கிகள் அவற்றை சரிபார்த்துவிட்டு இன்வாய்சின் மதிப்பில் 75% லிருந்து 80% வரை இந்நிறுவனங்களுக்கு கடனாக வழங்குவார்கள். அதன் பிறகு அவர்களிடமிருந்து பெற்ற எல்லா தஸ்தாவேஜுகளையும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் செயலாற்றும் இடத்திலுள்ள தங்களுடைய கிளைகளில் ஒன்றிற்கு வசூலுக்காக அனுப்பி வைப்பார்கள். கப்பல் நிறுவனங்கள் பணத்தை தருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்திற்குண்டான வட்டி தூத்துக்குடி நிறுவனங்களுடைய கணக்கில் இருந்து வசூல் செய்யப்படும்.

இத்தகைய வணிகத்தில் நல்ல லாபம் கிடைத்ததாலும் இதில் தில்லுமுல்லுகள் நடைபெற வாய்ப்பு குறைவு என்பதாலும் தூத்துக்குடியிலிருந்த பல வங்கிகளும் - என்னுடைய வங்கியும் சேர்த்து - ஈடுபட்டிருந்தன.

இத்தொழிலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஈடுபட்டிருந்தனர் என்றாலும் இதில் கிடைத்த லாப விகிதம் ஒரு சில வேற்று சமூகத்தினரையும் கவர்ந்திழுக்கவே இங்கொன்றும் அங்கொன்றுமாக இத்தகைய நிறுவனங்களும் இதில் ஈடுபட்டிருந்தன.

என்னுடைய கிளையில் இருந்தும் இத்தகைய நிறுவனங்கள் சிலவற்றிற்கு கடன் வழங்கப்பட்டிருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை நேர்மையுடன் செயலாற்றி வந்தன. அவர்களுடைய வரவு செலவுகளும் வங்கியின் நியதிகளுக்குட்பட்டே இருந்து வந்தன.

ஆனால் அவற்றுள் ஒரேயொரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த கடன் மட்டும் காலக்கெடு முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக வசூலிக்கப்படாமல் இருந்தது. அந்நிறுவனத்தின் கோப்பை எடுத்து வாசித்துப்பார்த்த என்னுடைய கண்ணில் தெரிந்தது ஒரு விபரீதம்.

என்னுடைய சொந்த வாழ்க்கையில் எந்த சாதியைப் பற்றியும் கவலைப்படாதவன் நான். ஆனால் என்னுடைய வங்கி அனுபவத்தில் நான் கண்ட வரை ஒவ்வொரு சாதியைச் சார்ந்தவருக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயங்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அவை என்னவென்று ஆராய்ச்சி செய்வதோ அல்லது நான் என்னுடைய ஊகம் எந்த அடிப்படையில் ஏற்பட்டதென்றோ இங்கே விவாதிப்பது சரியல்ல என்று நினைக்கிறேன்.

ஆயினும் என்னுடைய ஊகங்கள் பல சமயங்களில் சரியாய் இருந்திருக்கின்றன. ஆகவே நான் குறிப்பிட்ட நிறுவனம் கோப்பில் முற்றிலும் நேர்மறையான குணாதிசயங்களைக் கொண்டிருந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து துவக்கப்பட்டிருந்ததைக் கண்டதும் எனக்கு வியப்பாய் இருந்தது.

அன்று மாலையே என்னுடைய காசாளரை என்னுடைய அறைக்குள் அழைத்து என்வசமிருந்த அந்த கோப்பைக் காட்டி இவர்களைத் தெரியுமா என்று வினவினேன்.

அவர் என்ன நினைத்தாரோ சட்டென்று, ‘எனக்கு அவ்வளவா தெரியாது சார். ஆனா இந்த பார்ட்டி லோன் கேட்டு வந்ததுமே நான் குடுக்காதீங்க சார்னு நம்ம மேனேசர்கிட்ட சொன்னேன்..ஆனா அவர்தான் கேக்கல.’ என்றார்.

‘எதுக்கு அப்படி சொல்றீங்க?’ என்றேன்.

அவர் சிறிது நேரம் எப்படி சொல்வதென தெரியாமல் தயங்கியதைப் போல் தோன்றவே, ‘சும்மா சொல்லுங்க கோமஸ். அதா லோன் குடுத்து ரெண்டு வருசத்துக்கு மேல ஆகப்போவுதே..’ என்றேன்.

அவர், ‘இவங்க ரெண்டு பேருமே வெவ்வேற சாதிக்காரங்க சார். அதுவும் நம்ம ஊர்ல எப்ப பார்த்தாலும் ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிட்டு நிக்கற சாதிக்காரங்க. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டா பிசினஸ் பண்றதெல்லாம் சரிவராது சார். நாங்கதான் காலங்காலமா பார்த்துக்கிட்டு வரமே.. இவங்க ரெண்டு பேருமா சேர்ந்து என்ன பிசினஸ் பண்ணாலும் அது ரொம்ப நாளைக்கு நடக்காது.. எல்லாம் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்காவத்தான் இருக்கும்னு நினைச்சேன்.. அத சார்கிட்ட சொல்லவும் செஞ்சேன்.. கேட்டாத்தான?’ என்றார்.

தொடர்ந்து, ‘எங்க சாதிக்காரன் கடைசியில் ஏமாந்து நின்னதுதான் பாக்கி.. நம்ம பேங்க்ல மட்டுமில்ல சார். அந்தாளு இவர் பேர்ல ஊர்ல நிறைய பேர ஏமாத்திட்டு தைரியமா தாதா மாதிரி சுத்திக்கிட்டிருக்கான். அவன் நம்ம ஊர்க்காரனும் இல்ல சார். ---------பட்டிக்காரன். (தூத்துக்குடியிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்த நகரம் அது. ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு பேர் போன நகரமும் கும்.) அவரோட சேர்ந்து  எங்க சாதிக்காரன்  நஷ்ட்டப்பட்டது போகட்டும். நம்ம பேங்குமில்ல நஷ்டப்பட்டு நிக்கி..?’

அவர் கூறியதில் நியாயம் இருந்ததோ இல்லையோ அவர் இறுதியில் கூறியதில் என்னவோ உண்மை இருந்தது. அந்த காலத்தில் வசூலிக்கப்படாமல் இருந்த தொகை சற்று பெரிதுதான்.

ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு இதை எப்படி வசூலிக்கலாம் என்று அந்நிறுவனத்தின் கோப்பை ஆராயத் துவங்கினேன்.

கடன் கோரி வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்துடன் அவர்கள் பெயரிலும் அவர்களுடைய குடும்பத்தினர் பேரிலும் இருந்த அசையும் (movable) மற்றும் அசையா (immovable) சொத்துக்களின் விவரத்தையும் சமர்ப்பிப்பது வழக்கம். எந்தவித சொத்தும் இல்லாதவர்களுக்கு சாதாரணமாக எங்களுடைய வங்கியிலிருந்து கடன் வழங்குவதில்லை.

அவற்றுள் வங்கியின் கணிப்பில் கடன் வழங்குவதற்குப் போதுமான மதிப்புள்ள சொத்தை ஈடாக வங்கியில் மார்ட்கேஜ் செய்யவும் நிர்பந்தம் (insist) செய்வது வழக்கம். அப்படித்தான் என்னுடைய முந்தைய மேலாளரும் செய்திருந்தார். ஆனால் அவரகள் அடகு வைத்திருந்த சொத்தின் மதிப்பு நிலுவையில் நின்ற தொகையைவிட சற்றே குறைவாய் இருந்தது என்று நினைத்தேன்.

வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த சொத்துடன் இன்னும் ஓரிரு சொத்துக்கள் பாகஸ்தர்களுடைய பெயரில் இருந்ததைக் கவனித்த நான் அதைக் குறித்துக்கொண்டு அன்று மாலையே என்னுடைய கிளைக்கு மிக அருகாமையிலிருந்த தூத்துக்குடி முனிசிபல் அலுவலகத்திற்குச் சென்றேன். என்னுடைய மாமனார் பெயரில் சில வீடுகள் தூத்துக்குடியில் இருந்ததால் அவற்றிற்கு வீட்டு வரி வசூலிக்கவரும் ஓரிருவரை நான் தெரிந்து வைத்திருந்தேன்.

அவர்களைச் சந்தித்து நான் குறித்துவைத்திருந்த சொத்து எந்த பெயரில் இருக்கிறதென பார்த்து சொல்ல முடியுமா என்று கேட்டேன். முனிசிபல் நியதிகளின்படி அது இயலாத காரியம் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அத்தகைய காரியத்தை செய்து முடிக்க ‘மேற்படி’ அளித்தால் முடிந்துவிடும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தேன்.

என்னுடைய சொந்த தேவைக்கல்லவே, வங்கியின் பணத்தை வசூலிக்கத்தானே என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு அவர்களுள் ஒருவர் கேட்ட தொகையை சிறிது நேர பேரத்திற்குப் பிறகு அளிப்பதற்கு சம்மதித்தேன். ‘நீங்க இங்ஙனயே நில்லுங்க. நான் கொண்டுக்கிட்டு வாரேன்.’ என்று சென்றவர் அடுத்த அரை மணியில் எனக்குத்தேவையான தகவல்களுடன் வந்தார்.

ஆனால் அதை என்னிடம்  கொடுப்பதற்கு முன்னால்.. ‘சார்.. நீங்க நம்ம ---------- ஐயாவோட மருமகனாச்சேன்னு சொல்றேன். இந்த ஆளுக பயங்கரமான ஆளுக சார்.. நீங்க எதையாச்சும் செஞ்சிட்டு வில்லங்கத்துல சிக்கிக்கிராதீங்க.. எதுக்கும் ஒங்க மாமனார்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு செய்ங்க.. ஒங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.’ என்ற அறிவுரையுடன் கொடுத்துவிட்டு நான் ‘அளித்ததை’ பெற்றுக்கொண்டு சென்றார்.

தொடரும்...

18 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 118

என்னுடைய முந்தைய மேலாளர்களுக்கு விளக்கம் கேட்டு என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்த கடிதங்களின் நகல்கள் கிடைக்கப் பெற்றதும் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவை அழைத்து அவற்றைக் காண்பித்தேன்.

அவரும் அந்த நகல்களைப் படித்ததும் என்னிடம், ‘சார் இது நிச்சயம் பிரச்சினையை பெரிசாக்கிரும்னு நினைக்கிறேன். இருந்தாலும் உங்களுக்கும் வேற வழியில்ல சார். நீங்க உங்க ரிப்போர்ட்ட அனுப்பறதுக்கு முன்னால கூப்டு சொன்னப்பவே அவங்க உடனே புறப்பட்டு வந்து இந்த பார்ட்டிங்கள நேர்ல போய் பார்த்து ஏதாச்சும் செய்திருக்கலாம்.’  என்றார்.

இதைத்தான் நானும் எதிர்பார்த்திருந்தேன். சாதாரணமாக இத்தகைய குளறுபடிகளை செய்த மேலாளர்களே குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை நேரில் சென்று கண்டால் அவர்களும் முழு ஒத்துழைப்பளிக்க முன்வருவார்கள். என்னுடைய மேலாள நண்பர்கள் அதை செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். என்னுடைய தலைமைக் குமாஸ்தா அவர்களிடம் என்னுடைய அறிக்கையின் விவரத்தை தெரிவித்தவுடனே அவர்கள் புறப்பட்டு வந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. ஆனால் அது நடக்கவில்லை.

என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து சென்றிருந்த கடிதம் அவர்கள் இருவருக்கும் விளக்கமளிக்க இரண்டு வாரங்கள் அளித்திருந்தன. அதற்கு முன்னர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த குளறுபடிகளை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் உதவியுடன் நிவர்த்தி செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அதை விட்டு அவர்களுடைய செயல்களுக்கும் நியாயம் கற்பிக்க முயற்சி செய்தால் அவர்களுக்குத்தான் பிரச்சினையாக முடியும் என்று நான் நினைத்தேன்.

ஆனால் அது அவர்களுக்கு தோன்றவில்லை என்பது அவர்களுடைய விளக்க கடிதங்களின் நகல்கள் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு கிடைத்தபோது விளங்கியது. அவர்கள் செய்ததாக கூறப்பட்டிருந்த எல்லா குளறுபடிகளுமே என்னுடைய கற்பனை என்பதுபோலிருந்தது அவர்களுடைய விளக்கம்!

அதுமட்டுமல்ல. இரண்டு வாரங்கள் கழித்து அவர்களுடைய விளக்கத்தை மேற்கோள் காண்பித்து என்னிடம் விளக்கம் கேட்டிருந்தது என்னுடைய வட்டார அலுவலகம்!!

எப்படியிருக்கிறது?

ஆனால் அவர்களுடைய நேரம் சரியில்லை என்று நினைத்த நான் அடுத்த ஒரு வாரத்தில் இரவு நேரங்களில் அமர்ந்து நான் அதுவரை சேர்த்து வைத்திருந்த அத்தாட்சிகளை பட்டியலிட்டு அதன் நகல்களையும் சேர்த்து விளக்கமான ஒரு அறிக்கையை அனுப்பினேன். இம்முறை என்னுடைய அறிக்கையை அலுவலகத்திலிருந்த எவரிடம் காண்பிக்கவில்லை. அதை ஒரு ரகசிய அறிக்கையாக நேரே என்னுடைய வட்டார மேலாளருடைய பார்வைக்கு அனுப்பி வைத்தேன்.

அத்துடன் அதை மறந்துவிட்டு என்னுடைய அன்றாட அலுவல்களை கவனிக்க துவங்கினேன்.

*******

ஏற்கனவே துவக்கப்பட்டிருந்த கிளைக்கு பொறுப்பேற்பது எவ்வளவு பிரச்சினை என்பதை முன்னமே கூறியிருந்தேன்.

அதில் மிகவும் சீரியசான வேறொரு பிரச்சினை முந்தைய மேலாளர்கள் கொடுத்திருந்த கடனை வசூலிப்பது.

புதிய கிளைகள் என்றால் நாமே தேர்ந்தெடுக்கிற வாடிக்கையாளர்களுக்குத்தான் கடன் கொடுப்போம். கடன் வழங்குவதற்கு முன்னரே தீர விசாரித்துவிட்டு வழங்குவதால் பெரும்பாலான கடன்கள் சரியாக வசூலிக்கப்பட்டுவிடும். இருந்தாலும் ஓரிரண்டு கணக்குகள் எதிர்பாராத காரணங்களால் வாராக் கடனாகிவிடுவதுண்டு. அவற்றுள் முக்கியமான காரணங்களுள் ஒன்று வியாபாரத்தில் நஷ்டம். வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு தவறிப்போய் அவருடைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட வாய்ப்பிருக்கிறது அல்லவா?அந்த நேரங்களில் முதலில் அவர் வங்கிக் கடனை அடைப்பதைத்தான் தள்ளிப்போடுவார்.

வாடிக்கையாளரின் வணிகம் நஷடப்படுவதற்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று தேவைக்கதிகமான அல்லது குறைவான அளவு முதலீடு செய்வது.

அவருடைய சுய முதலீடு அவருடைய வணிகத்தின் தேவைக்கு போறாமல் இருக்கும் பட்சத்தில்தான் அவர் வங்கிகளை நெருங்குவார்.

அப்போது அவருடைய வணிகத்திற்கு தேவையான அளவு முதலீட்டை சரியாக கணித்து அவருடைய சுயமுதலீட்டைக் கழித்துவிட்டு மீதமுள்ள முதலீட்டை வழங்குவதுதான் ஒரு வங்கி மேலாளரின் பணிகளுள் முக்கியமான ஒன்று.

தேவைக்கு குறைவான தொகையைக் கடனாக அளிப்பது எந்த அளவுக்கு பிரச்சினையை வாடிக்கையாளருக்கு கொடுக்குமோ தேவைக்கு அதிகமான அளிக்கப்படும் கடனும் அதற்கு நிகரான சில வேளைகளில் அதற்கும் மேலாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது நான் என் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.

ஒருவர் எந்த பிரச்சினையுமில்லாமல் வணிகம் செய்வதற்கு தேவைக்குக் குறைவான கடனுதவி அளிக்கப்பட்டால் அவர் வங்கிக்கு வெளியே அதிக வட்டிக்கு கடனளிப்பவர்களிடம் தனக்குத் தேவையான தொகையைக் கடனாகப் பெறுவதற்கு தள்ளப்படுவார். அதன் மூலம் அவருடைய கடன் பளு அதிகமாவதுடன் வெளியில் அவர் பெறும் கடனுக்குண்டான வட்டி விகிதம் நிச்சயம் வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தைவிட மிக அதிகமாயிருக்கும். அவருடைய வணிகத்தில் இருந்து கிடைக்கும் லாப சதவிகிதமும் இத்தகைய அதிக வட்டி விகிதத்தின் பாதிப்பால் குறைந்துவிட வாய்ப்புண்டு.

ஆனால் அதுவாவது பரவாயில்லை. அவருடைய தேவைக்கு அதிகமான அளவு கடன் அளிப்பது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

அதெப்படி என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.

ஒருவருக்கு வணிகம் செய்ய ரூ.1000 முதலீடு வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நான் மேலாளராகவிருந்த காலத்தில் (இப்போதும் பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை) வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.250/- தன் கையிலிருந்து முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகையில் அவருடைய நண்பர்கள், குடும்பத்தார் இடமிருந்து ரூ.250 வட்டியில்லா அல்லது குறைந்த வட்டிக்கு கடனாக பெறுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அதற்குப் பிறகு அவருக்கு வேண்டிய முதலீடு ரு.500. அதை முழுவதுமாய் வங்கி அவருக்கு கடனாக அளிக்கும் பட்சத்தில் அவருடைய வணிகம் சீராக செல்ல வாய்ப்பிருக்கிறது.

அதுவே வங்கிகள் ரூ.500 க்கு பதிலாக ரூ.250/- அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருடைய வணிகத்தில் அது போறுமானதாக இருக்காது என்ற நினைப்பில் மீதமுள்ள தொகையான ரூ.250ஐ அதிக வட்டிக்கு (வங்கிகள் 15% வட்டிக்கு கடனாக அளித்தால் சந்தை வட்டி விகிதம் நிச்சயம் 25 லிருந்து 30%ஆக இருக்க வாய்ப்புண்டு). இந்த அதிகப்பட்ச வட்டி அவருடைய லாப சதவிகிதத்தைக் குறைத்துவிட வாய்ப்பிருக்கிறதல்லவா?

வங்கிகள் அளிக்கும் பெரும்பாலான கடன் தொகை ஒருவரின் வணிகத்திலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்துதான் வசூலிக்கப்படுகின்றன. லாபம் குறைந்துவிடும் பட்சத்தில் வங்கிகளின் வசூலிப்பும் பாதிக்கப்படும்.

சரி அதே வணிகரின் தேவைக்கு அதிகமாக அதாவது அவருடைய தேவையான ரூ.500க்கு பதில் அவருடைய மொத்த முதலீட்டு தேவையான ரூ.1000 த்தையும் வங்கியே அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

நேர்மையான நோக்கத்துடன் வணிகம் செய்பவர் என்ன செய்வார்? வங்கியிலிருந்து கிடைத்த தொகையையும் வணிகத்தில் மூதலீடு செய்து வணிகத்தை இரட்டிப்பாக்கி வெகு விரைவில் செழிப்படைவார். வங்கியும் அவர்களுடைய கடனை வெற்றிகரமாக வசூல் செய்துவிட முடியும்.

ஆனால் ஒரு நேர்மையற்ற வணிகர் என்ன செய்வார் தெரியுமா? வங்கியிலிருந்து கடன் கிடைத்ததுமே தன்னுடைய சுய மூதலீட்டு தொகையான ரூ.250 வணிகத்திலிருந்து எடுத்துவிடுவார். அந்த நிலையில் அவருடைய மொத்த வணிகமும் தன்னுடைய நண்பர்களிடமிருந்து பெற்ற கடனையும் வங்கியிலிருந்து பெற்ற கடனையுமே சார்ந்திருக்கும்.

அதன் பிறகு வணிகத்தில் ஏற்படும் நஷ்டம் அவருடைய முதலீட்டை பாதிக்காதல்லவா? ஒன்று வணிகத்தில் சரியான அக்கறைக் காட்டமாட்டார். அல்லது வேண்டுமென்றே நஷ்டக்கணக்கை காட்டி வங்கி கடனை அடைக்காமல் சாக்கு போக்கு சொல்ல ஆரம்பிப்பார்.

சரி. விவேகமில்லாத வணிகர் என்ன செய்வார் தெரியுமா? வங்கியிலிருந்து கிடைத்த அதிக தொகையை அவருடைய வணிகத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வணிகத்தில் மூதலீடு செய்து அதை வீணடித்துவிடுவார். அந்த வணிகத்தில் முடக்கப்பட்ட வங்கியின் தொகையும் (Fund) நாளடைவில் காணாமல் போய் இவருடைய மூல வணிகத்திலிருந்து முதலீட்டை சம்பந்தமில்லாத வணிகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழியில்லாமல் மாற்றி (divert) செய்து இரண்டு வணிகமுமே மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட மஞ்சள் கடுதாசி (insolvency) கொடுக்கும் நிலைக்கு சென்றுவிடுவார்.

இத்தகைய வாடிக்கையாளர்களுடைய போக்கை துவக்கத்திலேயே கண்டுபிடித்து அவர்களுக்கு சரியான நேரத்தில் அறிவுரை வழங்காவிட்டால் சீர்செய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய வணிகம் சென்றுவிட்ட பிறகு (point of no return) வருத்தப்பட்டு பலனில்லை.

பல சமயங்களில் ஒரு மேலாளர்   கடன் வழங்கும் நேரத்தில் வாடிக்கையாளரின் தேவயைச் சரியாக கணித்தபிறகுதான் கடன் வழங்கியிருப்பார். ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் அதன்பிறகு அந்த வாடிக்கையாளரை அடிக்கடி சென்று அவர் வணிகம் செய்யும் விதத்தை கவனிப்பது மிக மிக அவசியம். அப்போதுதான் வாடிக்கையாளரும் இந்த மேலாளரை ஏமாற்றமுடியாதுபோலிருக்கிறது என்பதை உணர்ந்து தவறான பாதையில் செல்ல முயல மாட்டார்.

ஆனால் துரதிர்ஷ்டமாக அவர் அக்கிளையிலிருந்து மாற்றலாகிச் சென்றபிறகு வருகிற மேலாளர் மற்றும் வாடிக்கையாளருடனான உறவில் விரிசல் ஏற்பட்டு அவரை அடிக்கடி சந்திப்பதை நிறுத்திவிட்டால் அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு நேர்மையற்ற அல்லது விவேகமற்ற வாடிக்கையாளர் தன் மனம் போன வழியில் சென்று வங்கி கொடுத்த கடன் தொகையை வீணாக்கிவிடுவதுண்டு.

பெரும்பாலான வங்கிகளில் கடன்கள் வாராக் கடனாகிப்போவதற்கு நான் மேற்கூறிய காரணங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்.

என்னுடைய கிளையில் இத்தகைய கணக்குகள் சில இருந்தன. முக்கியமாக எனக்கு முன்னாலிருந்த மேலாளர் அவருக்கு முந்தைய மேலாளர் கொடுத்த கடன்களை சரிவர கவனிக்காததால் வாராக் கடன்களாகிப் போன கடன்கள்..

அவற்றில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை எல்லாம் சந்தித்து விவரம் அறிவதுதான் அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய முக்கிய பணியாய் இருந்தது..

இதற்கிடையில் என்னுடைய மனைவி இரண்டாம் பிரசவம் வேறு நெருங்கியது...

தொடரும்..12 April 2006

இது பெற்றோர்களுக்கு!

நான் தினமும் காலையில் எழுந்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் நடக்கச் செல்வதுண்டு.

அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்லும் ... LKG யிலிருந்து பள்ளி இறுதிவரைப் படிக்கும் மாணவ, மாணவியர்.. .. அவர்களுடைய கலர்ஃபுல்லான சீருடையில் பளிச்சென்று.. சில சிரித்துக்கொண்டு, சில எரிச்சலுடன் வேண்டாவெறுப்பாக, சில ரிக்ஷா மற்றும் பள்ளி வேன்களில், சில அப்பா, அம்மா, அண்ணன்மார்களுடைய வாகனத்தின் பின் சீட்டில் அமர்ந்தவாறு அன்றைய தேர்வுக்கான பாடங்களை படு சீரியசாக உதடுகள் முனுமுனுக்க மனப்பாடம் செய்துக்கொண்டு....

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நடந்து செல்வது ஒரு தனி ஆனந்தம்தான்.

அப்படித்தான் நேற்றும்..

என்னுடைய வீடு இருக்கும் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதி காலை நேரத்தில் அமைதியாக இருக்கும். சுமார் எட்டு குறுக்குத் தெருக்களைக் கொண்ட பகுதி. எட்டாவது குறுக்குத் தெருவில் நுழைந்து 7, 6, 5, என்று  முதல் குறுக்குத் தெருவில் வெளியேறும்போது  நாற்பத்தைந்து நிமிடங்கள் செல்வதே தெரியாது..

நான் தினமும் என்னுடைய நடை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ஒரு பணக்காரத்தனமான குடியிருப்பிலிருந்து ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க மாணவன் ஒரு தனி ஆட்டோவில் ஏறிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவரை வழியனுப்ப அவருடைய தாயாரும் வாசல்வரை வந்து நின்று ஆட்டோ அத்தெருமுனையில் திரும்பும்வரை நின்றுக்கொண்டிருந்துவிட்டு செல்வார்.

நேற்றும் வழக்கம்போல நான் அவ்வீட்டை நெருங்கினேன். சட்டென்று என்னுடைய வாக்கிங் காலணியின் வார் (Shoe lace) ஒன்று அவிழ்ந்திருந்ததைக் கவனித்த நான் சாலையோரத்திலிருந்த ஒரு குட்டிச் சுவரில் காலை வைத்து அதை சரிசெய்துக்கொண்டிருந்தேன்.

வழக்கம்போல சர்ரென்று அந்த ஆட்டோ வந்து குடியிருப்பின் வாசலில் நின்றுக்கொண்டிருந்த மாணவனின் அருகே நிற்க மாணவன் தன் தாயை நோக்கி கையைசைத்துவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். ஆட்டோவிற்குள் குனிந்து பார்த்த அவனுடைய தாயார் உடனே கிளம்பவிருந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சரமாரியாக ஆட்டோ ஓட்டுனரை வார்த்தைகளால் விளாச ஆரம்பித்தார்.

நான் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்.

என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை..

‘ஏய்யா, எம் பையன் தனியா வசதியா போய்வரணும்னுதானே நீ கேட்டதுக்கும் மேல சொளையா குடுக்கறேன். ஒன்ன யாருய்யா வேற ஒரு ஆள அதுவும் அவனோட வயசுல ஒரு பொண்ண கூட கூட்டிக்கிட்டு போ சொன்னது? இன்னைக்கி ஆட்டோவுக்குள்ள குனிஞ்சி பார்த்ததுனால தெரிஞ்சது. டெய்லி இப்படித்தான் பண்றியா?’

ஆட்டோ ஓட்டுனர் பணிவுடன், ‘எம்மா.. டெய்லி இல்லம்மா. இந்த  பொண்ணும் பத்தாவதுதாம்மா. நம்ம தம்பியோட க்ளாஸ்தான். இன்னைக்கி பரீட்சைக்கு நேரமாயிருச்சின்னுதான் வழியில பார்த்து கையை காட்டிச்சுன்னு கூட்டியாந்தேன்.’ என்று கூற இதை மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த கணவர் ஓடிவந்து அவர் பங்குக்கு ஆட்டோ ஓட்டுனரை ஏச..  அதுவரை பொறுமையாயிருந்த ஆட்டோ ஓட்டுனரும் எதிர்த்து பேச அங்கே சில நிமிடங்களில் ரசாபாசாமாகிவிட்டது..

நான் அத்துடன் எழுந்து அங்கிருந்து புறப்பட்டேன்..

வரும் வழியெல்லாம் இதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

அந்த மாணவனுடைய தாயும் தந்தையும் நடந்துக்கொண்டவிதம் சரிதானா?

எனக்கென்னவோ அந்த இரு குழந்தைகளுமே இவர்களுடைய நடத்தையால் மனத்தளவில் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நேற்றைய தேர்வை இருவருமே சரியாக எழுதியிருக்க முடியாதென்றே தோன்றுகிறது.

பெரியவர்கள் சச்சரவில் ஈடுபட்டிருக்கும்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த இருவருமே தலையைக் குனிந்துக்கொண்டு தங்களுடைய மடியில் இருந்த புத்தகப் பையையே பார்த்துக்கொண்டிருந்தைப் பார்க்க முடிந்தது.

அவர்களுடைய மனநிலை நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

முக்கியமாக அந்த மாணவன். அம்மாணவி பள்ளியைச் சென்றடைந்ததுமே அவனுடைய பெற்றோர் நடந்துக்கொண்டவிதத்தைப் பற்றி நிச்சயம் தன்னுடைய தோழிகளிடம் விவரித்திருப்பார்.  

கேவலம், ஒரே வகுப்பில் பயிலும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் சேர்ந்து ஒரு வாகனத்தில் செல்வதை அவனுடைய பெற்றோர் இந்த அளவுக்கு பெரிதுபடுத்தியிருக்க வேண்டுமா? அவருடைய கேள்வியை மீண்டும் பாருங்கள்.. ‘அதுவும் அவனோட வயசுல ஒரு பொண்ண கூட’ எத்தனை கேவலமான மனது அந்த தாய்க்கு..

நேற்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பிய என்னுடைய இளைய மகளிடம் இந்நிகழ்ச்சியை விவரித்தபோது அவள் கூறியது: ‘பாவம்பா அந்த பையன்’

உண்மைதான். இச்சம்பவத்தால் மனத்தளவில் அதிகம் பாதிக்கப்படப்போவது அந்த மாணவன்தான்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

திரும்பிப் பார்க்கிறேன் 117

என்னுடைய காசாளரும் உதவி மேலாளரும் குளறுபடிகளை சரிசெய்ய அதுவரை எடுத்திருந்த முயற்சிகளை ஆய்வு செய்ததில் அவர்களால் இயன்றவரை குளறுபடிகளை சரிசெய்ய முயன்றது தெரியவந்தது. ஆனாலும் அவர்களால் முழுவதுமாக சரிசெய்துவிட முடியவில்லை.

பத்திரங்களைப் பூர்த்திசெய்வதிலிருந்த குளறுபடிகளில் பெரும்பாலானவற்றை சரிசெய்திருந்தார்கள். நல்ல வேளை. அவர்கள் இருவருமே மிகவும் கவனத்துடன் பூர்த்தி செய்திருந்ததால் வாடிக்கையாளர்களுடைய கையொப்பம் பெறவேண்டிய தேவை இருக்கவில்லை.

அவர்களால் நிவர்த்தி செய்ய முடியாமல் போனவைகளில் முக்கியமானது பத்திரங்களை ரிவைவ் செய்வது.

பத்திரங்களை ரிவைவ் செய்வது சட்டரீதியாக மிகவும் அத்தியாவசியமானதாகும். அதாவது எந்த ஒரு கடன் பத்திரமும், முக்கியமாக புரோ நோட் எனப்படும் Promissory Noteகள் கையொப்பமிட்ட தேதியிலிருந்து மூன்று வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

ஆகவே மூன்று வருட கெடு முடிவடையும்வரைக் காத்திருக்காமல் இருபத்தி ஏழாம் மாதமே அதாவது ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே, வாடிக்கையாளரிடமிருந்து ரிவைவல் கடிதம் ஒன்றை அதற்குரிய முத்திரைத் தாளில் பெற்றுவிட வேண்டும் என்பது நியதி.

அதென்ன ஒன்பது மாதக் காலக்கெடு?

எந்த ஒரு வாடிக்கையாளருமே 'ரிவைவல் கடிதத்தில் கையொப்பமிட வேண்டும் வாருங்கள்' என்றால் உடனே வந்துவிட மாட்டார். அவருக்கு கடன் தேவைப்படும்போது தினம் தினம் ஏன், ஒரே நாளில் இரண்டு, மூன்றுமுறை கூட நடையாய் நடப்பார்.

ஆனால் வங்கியின் தேவைக்கு வாருங்கள் என்றால் அவருக்கு என்று வசதிப்படுகிறதோ அப்போதுதான் வருவார். வந்தாலும் சார் இன்னைக்கி நாள் நன்றாக இல்லை என்பார். நாள் நன்றாக இருந்தால் இப்போ எமகண்டம், ராவுகாலம் நாளைக்கு போடுகிறேனே என்பார்.

சில சந்தர்ப்பங்களில் கடன் கொடுத்த இரண்டு வருடங்களில் வாடிக்கையாளருடனான உறவே முறிந்து போயிருக்கும். அந்நேரங்களில் அவர் வேண்டுமென்றே வராமல் காலம் தாழ்த்துவார்.

இதில் வேறொரு சிக்கலும் இருக்கிறது. கடன் கொடுத்த மேலாளர் இதற்கிடையில் மாற்றலாகிப் போயிருப்பார். புதிதாக வந்திருக்கும் மேலாளருக்கு வாடிக்கையாளரைப் பரிச்சயமிருக்காதல்லவா? புது மேலாளர் வாடிக்கையாளருக்கு கடிதம் அனுப்பி, அனுப்பி அலுத்துபோய் நாமே நேரில் சென்று பார்த்தாலென்ன என்று நினைத்துக்கொண்டு அவர்களுடைய வீடு தேடி செல்வார்.

வில்லங்கம் பிடித்த வாடிக்கையாளர் என்ன செய்வார்? இருந்துக் கொண்டே, ‘அவர் இல்லீங்க.. வெளியூர் போயிருக்கார்.’ என்று கூசாமல் சொல்லச் சொல்வார். அல்லது அவரே.. ‘அவர் என் தம்பிதாங்க. நீங்க குடுத்திட்டு போங்க. நான் அவன் வந்ததும் கையெழுத்து வாங்கி வைக்கறேன்.’ என்பார்.

மேலாளரும் வேறு வழியில்லாமல் ஏதோ கையொப்பம் கிடைத்தால் போதும் என்று கொடுத்துவிட்டு வருவார். அவ்வளவுதான், அது வரவே வராது. அவர் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? நேரே எடுத்துக்கொண்டு அவருடைய வழக்கறிஞரிடம் சென்று, ‘சார் இதுல மேனேசர் கையெழுத்து கேக்கறார். போடலாமான்னு பார்த்து சொல்லுங்க.’ என்றிருப்பார்.

நேர்மையான வழக்கறிஞராயிருந்தால், ‘பரவால்லை போட்டு குடுங்க.’ என்பார். அவரும் வாடிக்கையாளரைப் போலவே வில்லங்கம் பிடித்தவராயிருந்தால், ‘இதுல கையெழுத்து போடறேன், போடறேன்னு இழுத்தடிங்க சார். ப்ரோ நோட்டு மூனு வருஷமானா காலாவதியாயிரும். அப்புறம் நீங்க லோன கட்டுலனாலும் மேனேசரால ஒன்னும் செய்யமுடியாது.’ என்று தவறான உபதேசத்தைக் கொடுத்திருப்பார்.

அதை நம்பி நம்முடைய வாடிக்கையாளரும் அன்றிலிருந்தே கடனையும் அடைக்க மாட்டார். மேலாளருக்குத்தான் அவரை அடையாளமே தெரியாதே. அவர் நேரே சென்றாலும் ஒரு பலனும் இருக்காது.

ஆக, மேலாளர் டென்ஷனில் இரவெல்லாம் உறங்காமல் தவிக்க வேண்டியதுதான்.

இத்தகைய இடைஞ்சல்களை எல்லாம் வங்கி மேலாளர் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதை முன்கூட்டியே ஊகித்துத்தான் கெடு முடிவடைய ஒன்பது மாத காலம் இருக்கும்போதே வாடிக்கையாளரிடமிருந்து ரிவைவல் கடிதத்தை முறைப்படி பெற்றுவிடவேண்டுமென்ற நியதி வகுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அதுபோன்று ரிவைவல் வாங்காத கணக்குகளே பத்துக்கும் மேல் இருந்தன. என்னுடைய காசாளரும், உதவி மேலாளரும் வங்கியிலிருந்து அனுப்பிய எந்த கடிதத்திற்கும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பதில் வந்திருக்கவில்லை.

அந்த பத்து கடன்களும் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து இன்று வரை கிளையில் இருந்த ஒரே ஆள் என்னுடைய காசாளர்தான். ஆனால் என்னுடைய முந்தைய மேலாளர்கள் அவரை யாரிடமும் அறிமுகப்படுத்தவே இல்லை என்பதால் அவர்களுள் ஓரிருவரைத் தவிர யாருடைய முகமும் அவருக்கு நினைவில் இல்லை.

என்னதான் முயன்றாலும் அவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள எந்த வழியும் தெரியாமல் அவர்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தியது யார் என்பதை அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளிலிருந்து பார்க்கும்படி என்னுடைய உதவி மேலாளரைப் பணித்தேன்.

அவரும் எல்லாக் கோப்புகளையும் தலைகீழாய் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘சாரு.. எதுலயுமே அந்த டீடெய்ல்ஸ் இல்லே.. எல்லாத்துலயும் மேனேசர் சாரே.. known to meன்னு எழுதியாருக்காரு..’ என்றார்.  

சரி, இவற்றை என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்துக்கொண்டு மற்ற குளறுபடிகளை பார்த்தேன்.

அடுத்தது, வாடிக்கையாளரிடமிருந்து கடனுக்கு ஈடாக பெறப்படும் சொத்து பத்திரங்களை பட்டியலிட்டு பெறுவது மற்றும் அப்பத்திரங்களில் காணப்பட்ட சொத்துகளுக்கு உண்மையிலேயே வாடிக்கையாளர் பாத்தியஸ்தர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வது.

அதற்கும் சில விதிமுறைகள் இருந்தன.

முதலாவது, எந்த சொத்து பத்திரத்தை வாடிக்கையாளர் சமர்ப்பித்தாலும் அது நிச்சயம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். நல்ல வேளை, இப்போதுபோல் அதி நவீனமான நகல் எடுக்கும் காப்பியர்கள் அப்போது இல்லை. எது அசல் எது நகல் என்பதை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

இரண்டாவது, சொத்து சம்பந்தப்பட்ட தாய் பத்திரத்திலிருந்து சுமார் பதிமூன்று வருடங்களுக்குண்டான பத்திரங்கள் பெறப்பட வேண்டும். எதற்காக என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் தேவைப்படும். ஆகவே அதை விட்டு விடுவோம்.

மூன்றாவது, சொத்தின் மீது ஏதாவது வில்லங்கம் அதாவது வங்கிக்கு அச்சொத்தை ஈடாக அடகு வைப்பதற்கு வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்ப்பது. அதற்கு தாய் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்த சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து வில்லங்கம் ஒன்றும் இல்லை என்ற சான்றிதழ் பெறப்படவேண்டும். வில்லங்கம் என்று வங்கிகள் சொல்வதில் சில: அந்த சொத்தின் மீதாக வேறு ஏதாவது கடன் அல்லது நிலுவை இருப்பது. நிலுவை என்றால் சொத்துவரியாகக் கூட இருக்கலாம். நிலுவையிலுள்ள சொத்து வரியை வசூலிக்க சொத்தையே ஜப்தி செய்யும் முன்னுரிமை அரசுக்குத்தான். வங்கிகள் அதன்மேல் எத்தனைக் கடன் கொடுத்திருந்தாலும் அரசுக்கு வரவேண்டிய நிலுவைக்குப் பிறகுதான் எல்லாமே. அதே போல்தான் விற்பனைவரி, வருமான வரி விஷயத்திலும். இரண்டாவது வில்லங்கம் சொத்தை வாங்கும்போது அதன் விலையில் ஏதாவது ஒரு பங்கை ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பிடித்துவைத்துக்கொள்வது. அத்தகைய சூழ்நிலையில் சொத்தை விற்றவருக்குத்தான் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் அத்தொகையின்மேல் மட்டுமல்ல முழுச்சொத்திலும் முன்னுரிமை இருக்கும். இருபது இருபத்தைந்து வருடங்கள் வரை வாங்கியவர் அத்தொகையை பைசல் செய்யாதிருக்கும் பட்சத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தொகையுடன் அதற்குண்டான வட்டியையும் சேர்த்தால் சில சமயங்களில் வங்கி அச்சொத்தின் மீது கொடுத்த கடனைவிடவும் கூடுதல் சொத்தை விற்றவருக்கு சேரவேண்டியிருக்கும்.

நான்காவது, சொத்தின்மேல் மைனர் எனப்படும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு உள்ள உரிமை. இதுதான் மிகவும் வில்லங்கம் பிடிச்ச வில்லங்கம்! அதை சரிவர கவனிக்காமல் கடன் கொடுத்துவிட்டால் கடனுக்கு கடனும் வராது, மைனர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் வங்கியே சிலவேளைகளில் ஈடுகட்ட வேண்டி வந்துவிடும். இதையும் இங்கு விளக்குவது கடினம்.

ஆக இந்த நான்கு முக்கியமான விதிமுறைகளையும் கடன் வழங்குவதற்கு முன்பே கடைபிடித்திருக்க வேண்டும். இதில் உதவத்தான் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு சட்ட ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

பத்திரங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றவுடனே அவற்றை சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசகரிடம் அனுப்பி அவருடைய சட்ட சான்றிதழைப் பெறவேண்டும் என்பதும் நியதி. ஆனால் பெரும்பாலான ஊர்களில், முக்கியமாக தூத்துக்குடி போன்ற சிறிய ஊர்களில், வங்கியின் சட்ட ஆலோசகரும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வழக்கறிஞரும் ஒரே ஆளாக இருந்துவிடுவதுண்டு.

அச்சமயங்களில் சாதாரணமாக வழக்கறிஞருக்கு தன்னுடைய தற்காலிக வாடிக்கையாளரான வங்கியைக் காட்டிலும் தன்னுடைய நிரந்தர வாடிக்கையாளரிடம்தான் கூடுதல் ‘பாசம்’ இருக்கும். ஆகவே வில்லங்கம் இருந்தாலும், ‘பெரிசா ஒன்னும் இல்லைசார். We can take an affidavit from the borrower.’ என்று சர்வசாதாரனமாக கூறிவிடுவார். முக்கியமாக தமிழ்நாட்டில் தஞ்சை, ஆந்திராவில் பீமாவரம், ராஜாமுந்திரி, குண்டூர் போன்ற விவசாயக் குட்டுக் குடும்பங்கள் இருந்த பகுதிகளில் இந்த குடும்பப் பாகப் பிரிவினையில் பல குளறுபடிகளை அதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களே செய்துவிடுவதுண்டு.

அவர்களே அந்த நகரத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் சட்ட ஆலோசகர்களாகவிருப்பதால் தங்களுடைய குளறுபடிகளை மறைத்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்துவிடுவார்கள்.

அவர்களுடைய தகிடுதத்தங்கள் கடன்களை வசூலிக்க வங்கிகள் நீதிமன்றங்களை நாடும்போதுதான் வெளியே வரும்..

அப்போது சட்டத்தை படித்தறியாத வங்கி மேலாளர்கள்தான் பலிகடாவாகிவிடுவார்கள்.

நான் மேலே கூறிய நான்கு குளறுபடிகளுமே என்னுடைய கிளையில் இருந்தன..

அதை நான் தலைகீழாக நின்றாலும் நிவர்த்தி செய்வது கடினமென்பதால் அவற்றையும் என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையில் சேர்ப்பதென முடிவு செய்தேன்.

‘சார், உங்க அறிக்கைய அனுப்பறதுக்கு முன்னால எதுக்கும் நம்ம மேனேசர்ங்கக் கிட்ட பேசிரலாமே சார்.’ என்றார் என்னுடைய தலைமைக் குமாஸ்தா..

சரி என்று சம்மதித்து அவரையே அவர்களை ஃபோனில் அழைத்து பேசச் சொன்னேன். ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் என் மேல் மனத்தாங்கல் இருந்ததால்தான் இந்த ஏற்பாடு..

ஆனால் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவரே வந்து, ‘சார், ஒன்னும் பலனில்லை. அவங்க ரெண்டு பேருமே உங்க மேனேஜர் என்ன பெரிய வக்கீலா. லீகல் அட்வைசர் க்ளியர் பண்ணத இவர் எப்படிய்யா சரியில்லைங்கறார்னு சொல்லிட்டாங்க.’ என்றார்..

‘சரி விடுங்க.’ என்றேன்.

அத்துடன் என்னுடைய பொறுப்பேற்பு அறிக்கையை முடிவு செய்து என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன்...

ஒரு மாதம் வரை ஒரு தகவலும் வரவில்லை..  நான் முற்றிலும் எதிர்பார்த்திராத நாளில் என்னுடைய முந்தைய மேலாளர்கள் இருவருக்கும் என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ‘விளக்கக் கோரல்’களின் நகல்கள் வந்து சேர்ந்தன..

அதற்கப்புறம் சுமார் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவர்கள் என்மேல் குறை கூற நான் அவர்களைக் குறை சொல்ல ஒரே டென்ஷன்தான்..

தொடரும்..

11 April 2006

மு.க.வின் நோக்கம் என்ன?

Is (D)MK Desperate?

It appears that DMK or rather MK is desperate to win the forthcoming elections in TN.

What could be the reason?

மேலே

PS: Responses may be in any language. But responses in English would be preferred!!

திரும்பிப் பார்க்கிறேன் 116

அன்று இரவே என்னுடைய அறையில் அமர்ந்து அந்த டிரஸ்ட் மேலாளருக்கு எதிர்வரும் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவிருந்த பட்டுவாடா திட்டத்தை விவரித்து கடிதம் எழுதியனுப்பினேன்.

இதற்கிடையில் நான் முன்பே கூறியிருந்தபடி என்னுடைய உதவி மேலாளரும் காசாளரும் சேர்ந்து நான் பட்டியலிட்டு கொடுத்திருந்த குளறுபடிகளைத் தங்களால் இயன்றமட்டும் நிவர்த்தி செய்திருந்தார்களா இல்லையா என்பதை அவர்கள் இருவருடயை அன்றைய பணிகள் முடிந்தவுடன் விவாதிக்கலாம் என்று அடுத்த நாள் காலையிலேயே அவர்களிடம் தெரிவித்தேன்.

அதன்படி அன்று மாலை அவர்கள் இருவரும் அதுவரை எடுத்த முயற்சிகளையும் அதன் பலன்களையும் என்னுடைய அறையில் அமர்ந்து ஆய்வு செய்தோம்.

முதலில் என்னுடைய முன்னாள் மேலாளர்கள் எத்தகைய குளறுபடிகளைச் செய்திருந்தார்கள் என்பதை சுருக்கமாகக் கூறுகிறேன்.

ஒவ்வொரு வங்கியிலும் கடன் தொகைகளை வழங்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இருக்கும். அவற்றில் முக்கியமானது கடன் பத்திரங்களை தயாரித்தல், அவற்றை பூர்த்தி செய்தல்  மற்றும் அவற்றில் வாடிக்கையாளர்களின் கையொப்பங்களை பெறுதல்.

இவற்றுள் ஒன்றில் குளறுபடி நடந்தாலும் அந்த பத்திரங்கள் செல்லாதவையாகிவிட வாய்ப்பிருக்கிறது. கடன் கணக்குகள் வாராக் கடன்களாகி வழக்கு தொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது வழக்கின் ஆரம்ப நிலையிலேயே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நீதிபதியின் முன்னர் எடுத்து வைக்கும் வாதம், ‘கடன் பத்திரங்களில் நாங்கள் கையொப்பமிட்ட போது ஒன்றும் நிரப்பப்படாமல் இருந்தன’ என்பதுதான்.

இத்தகைய வாதம் வைக்கப்படும்போது பெரும்பாலான நீதிபதிகள் அதை பெரிதாகப் பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் மாஜிஸ்திரேட் வழக்காடு மன்றங்களில் சில சமயங்களில் சில மாஜிஸ்திரேட்டுகள் இதை காரணம் காட்டியே வழக்கைத் தள்ளுபடி செய்துவிட வாய்ப்புண்டு. அதற்கு சட்ட நியதிகளுக்கு முரணான பல காரணங்கள் இருக்கலாம். அதை நான் இங்கு எழுதுவது உசிதமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

ஆக, பத்திரங்களை தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சரிவர பூர்த்தி செய்வதும் மிக முக்கியம்.

முக்கியமாக, ஒரு வங்கி கிளை மேலாளரின் அதிகாரத்திற்குட்பட்ட கடன்களை வழங்கும் நேரத்தில் பெரும்பாலான மேலாளர்கள் இதை சரிவர கவனிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்கலாம். இத்தகைய கடன்களை வாடிக்கையாளர்கள் கடைசி நேரத்தில் வந்து, ‘சார் நீங்க மட்டும் இந்த சமயத்துல உதவி பண்ணலைன்னா நா அவ்வளவுதான் சார். மார்க்கெட்ல அப்புறம் நிக்கவே முடியாது சார்.’ என்று என்னவோ அன்று மட்டும் அந்த கடன் கிடைக்கவில்லையென்றால் தங்களுடைய குடியே முழுகிப் போகும் என்பதுபோல் வந்து நிற்பார்கள்.

இந்த நேரத்தில் மேலாளரும் சற்று உணர்ச்சிவசப்படுபவராக இருந்துவிட்டால், ‘சரி உக்காருங்க. ஒரு அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணிரலாம்.’ என்று அவர்களை உட்காரவைத்துவிட்டு கையிலிருக்கும் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கையில் இருக்கும் முத்திரைத் தாளை (ஒருவேளை அது வேறு யாராவது வாடிக்கையாளர் அவருடைய கடனுக்காக வாங்கி கொடுத்திருந்ததாகக் கூட இருக்கலாம்) எடுத்து சரிவர பூர்த்தி செய்யாமல்
வெற்று பத்திரமாகவே வாடிக்கையாளரிடம் நீட்டுவார்கள்.

அவர்களும் அப்போதைய அவசரத் தேவைக்கு மேலாளர் நீட்டும் எந்த பத்திரத்திலும் கையொப்பமிட தயாராக இருப்பார்கள். ஆக, இரண்டு அவசரக்குடுக்கைகளும் சேர்ந்து எல்லா வங்கி நியதிகளையும், சட்ட தேவைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள். வாடிக்கையாளரும் ‘அவசரத்துக்கு வந்து நின்னப்போ இல்லேன்னு சொல்லாம பணம் குடுத்தீங்களே. நீங்க தெய்வம் சார்’ என்று பெரிதாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு சந்தோஷத்துடன் சென்றுவிடுவார்கள்.

சரி, அன்று மாலையாவது இருந்து அந்த கடன் பத்திரங்களை ஒன்று மேலாளரோ அல்லது அவருடைய மேற்பார்வையில் உதவி மேலாளரைக் கொண்டோ அவற்றைப் பூர்த்தி செய்து வைப்பார்களா என்றால் அதுவும் இருக்காது. 'இதோ, இன்னைக்கி செய்யலாம் நாளைக்கி செஞ்சிரலாம்' என்று ஒரு வாரம் பத்துநாள் என்று அவர்களுடைய இழுப்பிலேயே போட்டு வைத்துவிடுவார்கள்.

கடன் பத்திரங்களை சரிவர பூர்த்தி செய்யாமல் கடன் வழங்குவதைவிட பயங்கரம் இப்படி மேலாளரின் இழுவையிலேயே அவற்றைப் போட்டு வைப்பதுதான். வங்கியின் நியதிப்படி கடன்களுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கடன் பத்திரங்களை அன்று மாலைக்குள்ளாகவே அதற்குரிய புத்தகத்தில் சேர்த்து பாதுகாப்பு அறையில் வைத்துவிட வேண்டும். அது பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோ இல்லையோ அது வேறு விஷயம். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அது மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் வைத்திருக்கப்படலாகாது.

ஏதோ ஒரு காரணத்திற்காக அதை மேலாளரின் தனிப்பட்ட பொறுப்பில் ஓரிரவு வைத்திருந்து அடுத்த நாள் காலையில் தலைமையலுவலகத்திலிருந்து ஆய்வாளர்கள் குழு வந்து அதைக் காண நேர்ந்தால் விஷயம் விபரீதமாகிப்போய்விட வாய்ப்புண்டு.

இது ஒரு பக்கம். மேலாளருடைய கெட்ட நேரம் அவருடைய இழுப்பில் வைக்கப்பட்டிருந்த கடன் பத்திரம் காணாமற் போய்விட்டாலோ அல்லது அது சேதமடைந்து குறிப்பாக வாடிக்கையாளர் கையொப்பமிட்டிருந்த பகுதி கிழிந்து போய்விட்டாலோ அவ்வளவுதான். அந்த மேலாளர் தொலைந்தார்.

இதில் வேறொரு பிரச்சினையும் இருக்கிறது. கடன் கொடுத்த அன்றே பத்திரங்களைப் பூர்த்தி செய்தால் கடனுக்குண்டான வட்டி விகிதம், அவர் அடைக்க வேண்டிய தவணை எண் மற்றும் தொகை எல்லாம் நினைவிலிருக்கும். அதுவே ஒருவாரம் பத்து நாட்கள் ஆகிவிட்டால் கேட்கவே வேண்டாம். ஏனென்றால் அதற்கிடையில் அதே மேலாளர் இன்னும் ஐந்தாறு கடன்களை வழங்கியிருப்பார்.

அதற்குண்டான எல்லா கடன் பத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு 'இதுல எந்த கையெழுத்து யாருதுன்னே தெரியலையே' என்று முழித்துக்கொண்டு நிற்கவும் வாய்ப்பிருக்கிறது. சரி. அதுவும் பரவாயில்லை. எல்லாப் பத்திரங்களையும் ஒரே நாளில் மேசையின் மேல் பரப்பிவைத்துக்கொண்டு (பெரும்பாலும் வருடாந்தர ஆய்வு நெருங்கிவிட்டது என்பதை மேலாளர் உணரும்போதுதான் இந்த சர்க்கஸ் நடக்கும்) பூர்த்தி செய்ய முனைந்தால் நிச்சயம் தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பத்திரத்தை பூர்த்தி செய்யும் நேரத்தில் ஏற்படும் ஒவ்வொரு தவறையும் வாடிக்கையாளர் தன்னுடைய முழு கையொப்பமிட்டு அங்கீகரிக்க வேண்டும். ‘சார் உங்க பத்திரத்துல ஒரு சின்ன தப்பு வந்திருச்சி. வந்து கொஞ்சம் கையெழுத்து போடுங்க சார்.’ என்று வாடிக்கையாளரிடம் சென்று தங்களுடைய தவறை ஒத்துக்கொள்ள மேலாளரின் ஈகோ இடம் தராது என்பது ஒருபுறம், இவர் கேட்டதும், ‘கேட்ட உடனே கடன் கொடுத்த மகராசா சார் நீங்க’  என்று வாழ்த்திவிட்டுப் போன அதே வாடிக்கையாளர் ‘இன்னைக்கி வரேன் நாளைக்கு வரேன்’ என்று நாள்கணக்காக, சில நேரங்களில் மாதக்கணக்காக இழுத்தடிப்பதும் சர்வ சாதாரணம்.  

ஆனாலும் என்னுடைய மேலாளர் நண்பர்கள் பலரும் இதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் வணிகத்தை வளர்ப்பதிலேயே குறியாயிருப்பார்கள். ‘உங்களுக்கு வேற வேலையில்லை ஜோசஃப். உங்கள மாதிரி இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்தா பிசினஸ் பண்ணாப்பலதான்.’ என்று பலரும் என்னை கிண்டலடித்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தகைய ஒழுங்கீனங்கள் எதுவும் இல்லாமலே வங்கி வணிகத்தை ஸ்டெடியாக வளர்க்க முடியும் என்று நிரூபித்துக்காட்டிய மேலாளர்கள் பலர் இன்று பெரிய பதவியில் இருக்கின்றனர். ஆனால் வணிகத்தை எப்படியாவது வளர்க்க வேண்டும் என்று நினைத்து ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டவர்களுள் பெரும்பாலோனோர் வழியிலேயே தடம்புரண்டு பதவி இழப்பை, சில வேளகளில் வேலை இழப்பையே சந்திக்க நேர்ந்ததை நான் என்னுடைய் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

இதில் வேறொரு கோணமும் இருக்கிறது. எந்த ஒரு தரமான வாடிக்கையாளரும் கடைசி நேரத்தில் வந்து, ‘சார் கடன்’ என்று நிற்கமாட்டார் என்பதும் நான் அனுபவத்தில் கண்ட உண்மை. அத்துடன் வந்து நின்றவுடன் கடன் கொடுக்கும் மேலாளரையும் தரமான வாடிக்கையாளர்கள் மதிக்கமாட்டார்கள் என்பதும் உண்மை.

அதற்காக கடன் என்று வந்து நிற்பவரை வாரக் கணக்கில், மாதக் கணக்கில் இழுத்தடிக்க வேண்டும் என்பதல்ல.

வாடிக்கையாளரின் நியாயமான தேவையை சரியாக கணித்து, அவர்களுடைய கடனுக்கு தேவைப்படும் அனுமதியை மேலதிகாரிகளிடத்திலிருந்து முறையாகப் பெற்று, அவர்களிடமிருந்து பெறப்படவேண்டிய பத்திரங்களை சரிவர தயாரித்து, அவற்றை முழுமையாக பூர்த்தி செய்து அவர்களிடம் வங்கியிலிருக்கும் வேறொரு அதிகாரியையோ அல்லது பணியாளரையோ வைத்து கையொப்பம் வாங்கச் செய்து அவற்றை நானும் ஒருமுறை சரிபார்த்தபின் கடன் வழங்குவதுதான் என்னுடைய வழக்கம். அதற்காக இரு வாரங்களிலிருந்து இருபது நாட்கள் வரை ஆகலாம், அதாவது என்னுடைய மேலதிகாரிகளுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட கடனாயிருந்தால்.

அதுவே என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதாயிருந்தால் என்னுடைய வங்கியின் நியதிப்படி அவர்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்றதிலிருந்து அவர்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய தஸ்தாவேஜுகளையெல்லாம் அளித்த நாளிலிருந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது எடுத்துக்கொள்வேன். காலையில் விண்ணப்பத்தைக் கொடுத்து பகலிலோ அல்லது அன்று மாலையோ கடன் வேண்டும் என்று வந்து நிற்பவர்களிடம் ஏன் முடியாது என்று பொறுமையாக விளக்கமளித்து அவர்களும் ஒத்துக்கொண்டால் கடன். இல்லையென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற புன்னகையுடன் வழியனுப்பிவிடுவேன். இம்மாதிரி நேரங்களில் சிலருடைய கோபத்தையும் அவதூறு பேச்சையும் மற்ற வாடிக்கையாளர்கள் முன்னிலையிலும், என்னுடைய மற்ற பணியாட்கள் முன்னிலையிலும் கேட்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.

அவதூறு பேசிவிட்டுச் செல்லும் வாடிக்கையாளர் அடுத்த நாளே அவருடைய தேவையை நினைத்து வந்து மன்னிப்பு கேட்டுவிடுவார். ஆனால் அவருடைய ஏச்சுக்கும், பேச்சுக்கும் அஞ்சி அவர் வந்து நின்றவுடனே பத்திரங்களை சரிவர பூர்த்தி செய்யாமல் கடன் வழங்கி நம்முடைய கெட்ட நேரம் அது வாராக் கடனாகப் போய் வழக்காடு மன்றத்தில் போய் நீதிபதியின் முன் சென்று, ‘எல்லாம் தெரிஞ்ச நீங்களே இந்த மாதிரி incomplete documents கோர்ட்ல சப்மிட் பண்ணா எப்படி சார்? I can’t tolerate this.’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டால் என்க்வயரி, increment cut, பதவி இறக்கம் அல்லது பதவி உயர்வு கைவிட்டு போதல் என்ற அவமானங்களை சந்திக்க வேண்டியதுதான்.

தொடரும்..


10 April 2006

திரும்பிப் பார்க்கிறேன் 115

அன்று அந்த டிரஸ்ட் மேலாளரும் என்னுடைய காசாளரும் இருந்த மனநிலையில் நான் மனதில் நினைத்திருந்த திட்டத்தைப் பற்றி பேசினாலும் எந்த பயனும் இருக்காது என்பதுடன் இவர்கள் இருவருக்கும் இடையே தேவையில்லாத வாக்குவாதம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று நினைத்த நான் அவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்ததும் எங்களுடைய இரு நிறுவனங்களுக்கும் இடையே இருந்த வங்கி-வாடிக்கையாளர் உறவை இனியும் வலுப்படுத்துவதைப் பற்றி மட்டும் பேசிவிட்டு புறப்பட்டேன்.

நானும் மேலாளரும் உரையாடிக்கொண்டிருந்த நேரம் முழுவதும் என்னுடைய காசாளர் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நாங்கள் இருவரும் அவரிடமிருந்து விடைபெறும் நேரத்தில்  அவருடைய நெல்லை ஆயரைச் சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்படி கேட்டேன்.  அவர் உடனே, ‘சரி சார்.’ என்று விடையளித்தார்.

நான் அவருடைய அறையைவிட்டு வெளியேறும் நேரத்தில், ‘சார் ஒரு நிமிடம். உங்களிடம் தனியாக பேச விரும்புகிறேன்.’ என்றார் என்னுடைய காசாளரைப் பார்த்தபடி.

அவர் இதை கேட்ட விதமும் என்னுடைய காசாளரைப் பார்த்த விதமும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லையெனினும் என்னுடைய காசாளர் உடனே என்னிடம், ‘நீங்க பேசிட்டு வாங்க சார். நான் வண்டிக்கிட்ட வெய்ட் பண்றேன்.’ என்று கூறிவிட்டு வெளியேறியதால் வேறு வழியின்றி அவர் வெளியேறும் வரை பொறுத்திருந்து மேலாளரைப் பார்த்தேன். ‘சொல்லுங்க சார்.’

அவர் என்னுடைய காசாளர் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘சார் இந்த பையன் அவ்வளவு சரியில்லை. எங்க பெனிஃபிஷியர்ஸ் பணம் வாங்க வரும்போது அவனோட சாதி ஆளுங்களுக்கு நல்ல நோட்டும் மத்தவங்களுக்கு குறிப்பா எங்க சாதி ஆளுங்களுக்கு மோசமான, சில சமயத்துல கிழிஞ்சிபோன நோட்டுங்களும் கொடுக்கறதா எனக்கு நிறைய கம்ப்ளெய்ண்ட்ஸ் வந்திருக்கு. உங்களுக்கு முன்னால இருந்த மேனேஜர் இவனையும் அந்த ஹெட் க்ளார்க்கையும் அவங்க எடத்துல நிறுத்தி வச்சிருந்தார். நீங்களும் இவனுங்களுக்கு ரொம்ப எடம் குடுத்திராதீங்க. அப்புறம் உங்களுக்கே மரியாதை இல்லாம பன்னிருவான்க.’என்றார்.

அவர் பேசிய விதம் எனக்கு ஆத்திரத்தைக் கிளப்பினாலும் இவரிடம் வாக்குவாதம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று நினைத்துக்கொண்டு, ‘கவலைப்படாதீங்க சார். I will take care.’ என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.

வெளியில் வந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்து டிரஸ்ட் அலுவலகம் இருந்த சிதம்பர நகரைக் கடந்து மத்திய பேருந்து நிறுத்தத்தை அடையும்வரை எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த என்னுடைய காசாளர் மவுனமாக வரவே அவருடைய மனநிலையை உணர்ந்து அவரிடம் சற்று பேச வேண்டும் என்று நினைத்து, ‘இங்க பக்கத்துலருக்கற ரெஸ்டாரண்ட்ல ஒரு காப்பி சாப்டுட்டு போலாம் வாங்க.’ என்று அவர் மறுப்பதற்கு வாய்ப்பு அளிக்காமல் ஒரு உணவகம் முன்பு நிறுத்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு நுழைந்தேன்.

எதிரும் புதிருமாக ஒரு மேசையில் இருவரும் அமர்ந்தோம். ஆனால் அப்போதும் அவர் சந்தோஷமில்லாத முகபாவத்துடன் அமர்ந்திருந்தார். ‘என்ன கோமஸ், அவர் பேசினதையே இன்னும் நினைச்சிக்கிட்டிருக்கீங்களா?’ என்றேன்.

அவர் குனிந்துக்கொண்டே, ‘நான் போனதும் என்னைப் பத்தி புகார் ஏதும் சொல்லியிருப்பாரே.’ என்றார்.

நான் அவரிடம் உண்மையை சொன்னால் பிரச்சினை மேலும் பெரிதாக வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து, ‘இல்லீங்க. அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.’ என்றேன்.

அவர் என்னுடைய பதிலில் திருப்தியடையவில்லை என்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. நான் இதை மறைப்பதால் அவருக்கு என்மேல் இருந்த நம்பிக்கைக் குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் எனக்குத் தோன்றியது. அதைக் காட்டிலும் அவர் கூறியதை அப்படியே மறைக்காமல் கூறுவதன் மூலம் அது உண்மையா என்றும் தெரிய வாய்ப்பிருக்கிறது என்று நினைத்த நான் மேலாளர் கூறியதை அப்படியே மிகைப்படுத்தாமல் கூறினேன்.

நான் கூறி முடிக்கும்வரை அமைதியாய் கேட்ட அவர் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு, ‘அப்படியா சார் சொன்னான் அவன்? அவனெ...’ என்று மேலே தொடர முடியாமல் உதடுகள் துடிக்க தடுமாறியதைக் கண்டதும் என்னுடைய முடிவு தவறாகிப்போனதோ என்று ஒரு நொடி நினைத்தேன்.

ஆனால் சிறிது நேரத்தில் வெய்ட்டர் கொண்டு வந்து வைத்த குளிர்ந்த நீரைக் குடித்து சகஜ நிலைக்கு வந்தார். பிறகு, ‘அந்தாள் சொன்னத நீங்க நம்பிட்டீங்களா சார்?’ என்றார்.

நான் சற்று நேரம் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தேன். இது இருபக்கமும் கூரான கத்திபோன்ற கேள்வி என்று நினைத்தேன். ‘இல்லீங்க’ என்று சொன்னால் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இவரையும் எனக்கு ஒரு மாத காலத்திற்கும் குறைவாகத்தான் பரிச்சயம் என்பதால் மேலாளர் கூறியது உண்மையாக இருந்தால் இவர் என்னுடைய பதிலால் தன்னுடைய தவறான அணுகுமுறையை மேலும் தீவிரமாக்கிவிட வாய்ப்பிருந்தது. மாறாக ஆமாங்க என்றால் இவர் உடனே என்னையும் ஒரு எதிரியாக வரித்துவிட வாய்ப்பிருந்தது என்று நினைத்தேன்.

ஆகவே பேச்சை மாற்ற நினைத்து, ‘சரி அத அப்புறம் சொல்றேன். இப்ப நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க. எதுக்கு இந்த ஊர்ல மட்டும் இந்த சாதி விஷயம் இவ்வளவு தீவிரமா இருக்கு?’ என்றேன்.

அவர் என்னுடைய எண்ணத்தைப் புரிந்துக்கொண்டாரோ இல்லையோ நான் கேட்ட கேள்வி அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். உடனே தூத்துக்குடியின் சரித்திரத்தையே எனக்கு விளக்க ஆரம்பித்துவிட்டார். அந்நகரத்தையே இருகூறாக இரு  முக்கிய சாதிகளைச் சார்ந்த மக்கள் பிரித்திருந்ததை பல உதாரணங்களுடன் எனக்கு விளக்கினார். அவருடைய பேச்சிலிருந்த ஆவேசம் அவ்விரு இனத்தவரிடையே இருந்து வந்த மன வேற்றுமை இன்று நேற்று தோன்றியதல்ல என்பதை புரிந்துக்கொண்டேன்.

இதற்கிடையில் நாங்கள் ஆர்டர் செய்திருந்த சிற்றுண்டியை வெய்ட்டர் கொண்டுவரவே பேச்சு சிறிது நேரம் தடைபட்டுப் போனது. நல்ல வேளை, அவர் சற்று முன்பு கேட்ட கேள்விக்கு நான் பதிலளிக்கவில்லை என்பதை அவர் மறந்தே போனார்.

நாங்கள் ரெஸ்டாரண்டிலிருந்து வெளியேறியபோது நேரம் மாலை ஏழுமணியைக் கடந்திருந்தது. அவருடைய வீடு மணல் தெருவில் இருந்ததால் அவருடைய வீட்டையடைய என்னுடைய வங்கி அலுவலகத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவருடைய வீடுவரை வருகிறேன் என்று நான் கூறியதை மறுத்து, ‘வேணாம் சார். நான் இவ்வளவு சீக்கிரம் வீட்லபோய் என்ன பண்றது? நா சாதாரணமா எங்க சங்க ஆபீசுக்கு போய் கேரம்ஸ் விளையாடிட்டு ஒரு பத்து மணி போலத்தான் வீட்டுக்கு போவேன். நீங்க போங்க. நா பஸ் பிடிச்சி போய்க்கறேன்.’ என்றார்.

ஆக, அன்று அவரிடம் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து நான் இந்த ஊரிலிருந்து மாற்றலாகிச் செல்லும்வரை எத்தனை கவனமாக இருக்கவேண்டும் என்பதை முழுவதுமாக உணர்ந்துக்கொண்டேன். நல்லவேளை. என்னுடைய தந்தை என்ன காரணத்தாலோ என்னையும் என் சகோதரர்களையும்  பள்ளியில் சேர்த்த நேரத்தில் எங்களுடையக் குடும்பப் பெயரை எங்களுடைய பெயருடன் சேர்த்து பதியாமல் விட்டுவிட்டார். இல்லையென்றால் என்னுடைய பெயரை வைத்தே நான் எந்த இனத்தைச் சார்ந்தவன  என்று இவ்வூரில் இருந்த என்னுடைய வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வாய்ப்பிருந்திருக்கும் என்று நினைத்தேன்.

நான் இதை ஏன் இவ்வளவு வேலை மெனக்கெட்டு சொல்கிறேன் என்பதை நான் தூத்துக்குடியைப் பற்றிய இத்தொடரை எழுதி முடிக்கும்போது புரிந்துக்கொள்வீர்கள். நான் இதற்கு முன்பிருந்த தஞ்சையிலும் நான் வீடு தேடி அலைந்தபோது இப்பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. ஆனால் என்னுடைய கிளை அலுவலில் இப்பிரச்சினை இடையூறாக இருந்ததில்லை.

நான் சிறுவயது முதலே சென்னையில் வளர்ந்ததால் சாதிக் கலவரம் என்ற வார்த்தையைக் கூட நான் கேட்டதில்லை. திரு. பக்தவத்சலம் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் சென்னை மற்றும் தமிழகமெங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெகு தீவிரமாக நடத்திய காலக்கட்டத்தில்கூட நான் காட்பாடியில் போர்டிங் பள்ளியில் இருந்ததால் அதன் தீவிரத்தை முழுவதுமாக நான் உணரவில்லை.

மேலும் என்னுடைய பள்ளியில் தமிழ் மீடியத்துடன் ஆங்கில ஸ்ட்ரீம் என்பார்களே அது இருந்ததால் நான் அதில் சேர்ந்தேன். இரண்டாம் விருப்பப் பாடமாக  தமிழைத் தவிர்த்து, ஹிந்தியைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். தமிழை நான் ஆரம்பப் பாடசாலையில் பயின்றதோடு சரி.

ஆகவே சிறுவயது முதலே என்னுடைய சாதி மற்றும் மொழியில் எனக்கு பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ இப்போதும் இனம், மொழி என்பதையெல்லாம் பெரிதாக நினைத்துக்கொண்டு ஏன் இந்த அரசியல்வாதிகள் கூச்சலிடுகிறார்கள் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகளையும் அதே கண்ணோட்டத்துடன் நான் வளர்த்தேன்.

நான் தூத்துக்குடியில் சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்கள் இரு வேறு அணிகளாய் பிரிந்து நின்றதைப் பார்த்தபிறகுதான் என் மூத்த மகளைப் பள்ளியில் சேர்த்த சமயத்தில் இந்திய கத்தோலிக்கன் என்று மட்டுமே கொடுத்தேன்.

என்னுடைய மகளை தூத்துக்குடியில் மிகவும் பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்துவ கன்னியர்களால் நடத்தப்பட்டு வந்த ஹோலிகிராஸ் பள்ளியில் சேர்த்தபோது பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த கன்னியாஸ்திரி ஒரு ஆங்கிலோ இந்தியர். கோவாவைச் சார்ந்தவர்.

அவர் அந்த நகரத்திற்கு வந்து சுமார் ஐந்தாண்டுகாலம் ஆகியிருந்தது. ஆனாலும் அவரும்கூட என்னுடைய மகளைப் பள்ளியில் சேர்க்க ஒத்துக்கொண்டு நான் படிவங்களை அவருடைய அறையில் அமர்ந்து பூர்த்திக்கொண்டு செய்துக்கொண்டிருக்கும் அந்த பத்து நிமிட நேரத்தில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்க வந்த இரு பெற்றோர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக அட்மிஷனை மறுத்ததைப் பார்த்து அதிர்ந்துபோனேன். ஆனாலும நான் ஒன்றும் பேசாமல் படிவத்தைப் பூர்த்தி செய்து முடித்து அவரிடம் சமர்ப்பித்தேன்.  அவர் நான் Caste என்று இருந்த இடத்தில் ஒன்றும் நிரப்பாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, ‘Why did you leave it blank Mr.Jospeh? You might stand to lose the benefits your child would be eligible for, later.’ என்றார். நான், ‘I don’t mind Sister. Please don’t insist on this.’ என்றேன்.

அவரும் புன்னகையுடன், ‘As you please’ என்று கூறிவிட்டு படிவத்தில் ‘Admitted’ என்ற முத்திரையை பதித்துவிட்டு என்னிடம் திருப்பிக் கொடுத்தார். ‘Do you know one thing Mr.Joseph?’ என்றார்.

‘Yes Sister?’

‘Here people walk in and demand admission on the basis of their caste. They feel that they should be given admission as they belong to this particular caste which is the majority in this town, whether they deserve it or not.’

நான் என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

அவர் என்னுடைய சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, ‘I bluntly refuse to give admission to their children as I did just now.’ என்றார்.

நான் ஏன் என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

‘They just flash their family name as if it is a qualification. They would also proudly say that they could pay any amount as donation to get their children admitted. But once they get the admission that’s it. They won’t pay any attention to their child’s education. They won’t even ensure that their child attends the school everyday. Our School’s name gets noticed because of the performance of children belonging to other castes especially the hindu Brahmin children, these people only tarnish our name.’  

நான் என்ன பதில் பேசுவதென தெரியாமல் வெறுமனே நன்றி கூறிவிட்டு என் மகளை அழைத்துக்கொண்டு பள்ளிக் கட்டணத்தை அடைக்கும் இடத்தை நோக்கி நடந்தேன்.

என்னுடைய பெயருடன் சேர்த்து என்னுடைய சாதிப் பெயரும் இருந்திருந்தால் என்னுடைய மகளுக்கும் அந்த அவல நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன்..

சுயநலம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அப்போது எனக்கு இப்படி நினைப்பதைத் தவிர வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை..

தொடரும்..