13 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 96

என்னுடைய வங்கி அனுபவத்தில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

நாள்தோறும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு வங்கிக் கிளைகளில் பணிபுரிபவர்களுக்குத்தான் கிடைக்கிறது என்று நான் கூறினால் அது மிகையாகாது..

வங்கிகளில் வந்து செல்லும் மக்கள் மற்ற அலுவலகங்களுக்குச் செல்வதுபோல் ஏதோ ஒன்றிரண்டு தேவைகளுக்காக மட்டும் வந்து செல்வதில்லை. வங்கிகளுடன் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு ஒரு மருத்துவர்-நோயாளி அல்லது வழக்கறிஞர்-கட்சிக்காரர் உறவைப் போன்றதல்ல..

சில வங்கி-வாடிக்கையாளர் உறவுகள் காலங்காலமாக, பரம்பரை, பரம்பரையாக நீடித்திருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஆனாலும் வங்கி மேலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதால் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் பற்றி தெரிந்துக்கொண்டு அவர்களுக்குரிய மதிப்பை அளிப்பதற்கு சற்று காலதாமதமாக வாய்ப்பிருக்கிறது.

நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் என்னுடைய கிளையில் கணக்குத் துவங்குங்களேன் என்று ஒரு நடுத்தர வயதுடைய தொழிலதிபரை அணுகினேன்.

அவர் பரம்பரையாகவே விவசாயத்தில் ஈடுபட்டிருந்த குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் தன் தந்தை செய்துக்கொண்டிருந்ததை விரிவுபடுத்தி, நெல் மட்டுமல்லாமல் பருப்பு மற்றும் பல்வேறு தானியங்களையும் கொள்முதல் செய்து வட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும் தொழிலையும் துவக்கி திறம்பட நடத்தி வந்தவர். அவருடைய குடும்பத்திற்கு தஞ்சை நகருக்கு அருகாமையில் வெற்றிகரமாக நடந்து வந்த ஒரு நெல் அறவை மில்லும் இருந்தது (Rice Mill).

அவருடைய குடும்பத்தினர் தஞ்சையில் இயங்கிவந்த ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் பரம்பரையாக சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக வரவு செலவு வைத்திருந்தனர் என்றும் ஆனால் தற்போதைய மேலாளருடனான அவருடைய உறவில் ஏதோ விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்றும் என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் வழியாக கேள்விப்பட்ட நான்  அவரை அணுகினேன்.

அவரைச் சந்திக்க சென்றபோது அவருடைய வங்கி உறவில் ஏற்பட்டிருந்த விரிசலைப் பற்றி குறிப்பிடாமல் என்னுடைய கிளையில் ஒரு கணக்கு துவங்குங்களேன் என்று மட்டும் கேட்டேன்.

நான் நினைத்திருந்ததைப் போலவே அவர், ‘சார் எங்க தாத்தா காலத்திலிருந்தே எங்க வரவு செலவு முழுசும் --------- பேங்க்லதான். திடீர்னு அத வேறொரு பேங்குக்கு மாத்தறதுனா அவ்வளவு ஈசி இல்லையே.’ என்றார். நான் அதற்கு மறுமொழியாக, ‘இருக்கலாம் சார். ஆனால் உங்களுக்கு பல நிறுவனங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் ஏதாவது ஒரு நிறுவனத்தின் கணக்கை என் வங்கியில் துவங்குங்கள். எங்களுடைய சேவையைப் பார்த்துவிட்டு நீங்களே மற்ற நிறுவனங்களின் கணக்கையும் என் கிளைக்கே மாற்றும் எண்ணத்திற்கு வந்துவிடுவீர்கள்.’ என்றேன் புன்னகையுடன்.

அதைக் கேட்டதுமே அவர் உரக்கச் சிரித்தார். சிரிப்பினூடே, ‘நல்லா பேசறீங்க சார். அதுக்காகவே ஒரு கணக்க திறக்கிறேன்.’ என்று கூறிவிட்டு அடுத்த சில நாட்களில் என்னுடைய கிளைக்கு வந்து ஒரு சிறிய தொகையை அடைத்து அவர் அப்போதுதான் துவக்கியிருந்த வணிகத்திற்கான கணக்கை துவக்கினார்.

தஞ்சை நகரை சுற்றிலும் முந்திரி தோட்டங்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

தஞ்சைக்கே உரித்தான சிவப்பு மண் (Red soil) முந்திரி, மற்றும் பலாப் பழ சாகுபடிக்கு மிகவும் ஏதுவானது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் குறிப்பிட்ட வாடிக்கையாளர் முந்திரி தோட்ட விவசாயிகளுக்கு தகுதியான விதைகள் வழங்குவதிலிருந்து அது வளர்ந்து மரமாகி பூத்து, காய்க்கும் பருவம் வரை தேவையான தொகையைக் கடனாக வழங்கி அறுவடை நேரத்தில் அவர்களுடைய தோட்டத்திலிருந்து கிடைக்கும் அத்தனை விளைச்சலையும் கொள்முதல் செய்து தமிழ்நாடு மற்றும் அடுத்த மாநிலங்களுக்கு முக்கியமாக கேரளாவிற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் தொழிலைத் துவக்கியிருந்தார்.

என்னுடைய வங்கியின் பெரும்பாலான கிளைகள் கேரள மாநிலத்தில் இருந்ததால் அவருக்கு என்னுடைய கிளையில் வரவு செலவு வைத்துக்கொள்வதன் உபயோகத்தை நாளடைவில் உணர்ந்த அவர் மெள்ள, மெள்ள தன்னுடைய முந்திரி வர்த்தகத்தின் முழு வரவு செலவையும் என்னுடைய கிளையிலேயே நடத்த ஆரம்பித்தார்.

ஆக நான் ஆரம்பத்தில் அவரிடம் கூறியது போலவே அவருடைய குடும்பத்தினரின் அனைத்து வர்த்தக கணக்கையும் என்னுடைய கிளைக்கு மாற்ற அவர் விரும்பி என்னை அணுகியபோது எனக்கு சந்தோஷமாக இருந்தது. ‘கண்டிப்பா செஞ்சிரலாம் சார்.’ என்றேன்.

ஆனால் அவர், ‘சார் அதுல ஒரு சிக்கல் இருக்கு.’ என்றார்.

‘சொல்லுங்க சார், என்ன சிக்கல்?’

‘இதுவரைக்கும் நான் உங்கக்கிட்ட சொல்ல வேண்டாம்னுதான் பார்த்தேன். ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால வரைக்கும் நாங்க இப்ப கணக்கு வச்சிக்கிட்டிருக்கற பேங்கோட எந்த பிரச்சினையும் இல்லாமத்தான் இருந்தது சார்.  ஆனா சமீபமா வந்த மேனேஜர் கொஞ்சம் சோக்கு பேர்வழியா இருக்கார். அவருக்கு வேண்டியதையெல்லாம் எங்கள மாதிரி அளுங்கக்கிட்டருந்து கறந்துரலாம்னு பாக்கறார். பம்பாய்லருந்து வந்திருக்கறதுனால அங்கருக்கறா மாதிரி நம்ம ஊர்ல அவர் எஞ்சாய் பண்றதுக்கு ஒன்னும் இல்லையா, எல்லா சனிக்கிழமையும் திருச்சிக்கு போயிரணும். அதுக்கு வண்டியிலருந்து அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் வேண்டிய எல்லா செலவும் எங்கள மாதிரி ஆளுங்கதான் ஏத்துக்க வேண்டியிருக்கு. அதான் எங்க சங்க மீட்டிங்க போட்டு கொஞ்சம், கொஞ்சமா ஒவ்வொருத்தரா வேற, வேற பேங்குக்கு போயிரலாம்னு முடிவு பண்ணிருக்கோம். அது எப்படியோ அவருக்கு தெரிஞ்சி போயிருச்சி. போன வாரத்துல நான் மெதுவா போயி சார் எங்க ஓவர்டிராஃப்ட் கணக்க முடிச்சிரலாம்னு பாக்கறோம் எங்க குடும்பத்தோட ஃபிக்ஸட் டெப்பாசிட்லருக்கற பணத்த ட்யூ டேட்டுக்கு முன்னாலயே க்ளோஸ் பண்ணி ஃபுல்லா செட்டில் பண்ணிடறோம்னு சொன்னேன். மனுஷன் அதுக்கென்ன செஞ்சிரலாம்னு சொல்லிட்டார்.’

நான் இதில் என்ன பிரச்சினை என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

‘நீங்க பாக்கறது புரியுது சார். ஆனா முதல்ல சரின்னு சொன்ன மனுஷன் திடீர்னு ஃபோன்ல கூப்டு நீங்க கேட்டா மாதிரி செய்யறதுக்கு எனக்கு பவர் இல்ல.. ஒரு ரிக்வெஸ்ட் எழுதி குடுங்க எங்க பம்பாய் ஹெட் ஆஃபீசுக்கு போய்ட்டுதான் வரணும்னுட்டார். அது மட்டுமில்ல சார் அன்னையிலருந்து எங்க ஓவர்டிராஃப்ட் கணக்கையும் ஆப்பரேட் பண்ண விடாம முடக்கிட்டார். இப்ப யாருக்கும் செக் குடுக்கவும் முடியலை.. கணக்குலருந்து கேஷா எடுத்து பட்டுவாடா பண்ணலாம்னா அதையும் விட மாட்டேங்குறாரு சார். அதுக்கு உண்மையான காரணும் என்னன்னு இன்னைக்கித்தான் சார் தெரிஞ்சது.’ என்றார் பரிதாபமாக.

‘என்ன சார், சொல்லுங்க. என்ன காரணம்?’

‘நான் என் கேஷ¤ நட் வியாபார கணக்க உங்க பேங்குக்கு மாத்தினதோட மத்த கணக்கையும் உங்க பேங்குக்குத்தான் மாத்தப்போறேன்னு எப்படியோ தெரிஞ்சிக்கிட்டார் சார். எங்கடா நமக்கு வந்துக்கிட்டிருந்த எக்ஸ்ட்ரா வருமானம் கட்டாயிருமேன்னு நினைச்சிட்டார் போலருக்குது.. நீங்க அவர்கிட்ட பேசினா நல்லாருக்கும்னு நினைச்சித்தான் உங்க கிட்ட வந்தேன்.’

அவரைப் பார்க்கவே தர்மசங்கடமாக இருந்தது எனக்கு. நான் கேட்டுக்கொண்டேன் என்பதற்காக என்னுடைய வங்கியில் கணக்கு துவங்கப்போக கடைசியில் அவருக்கே பிரச்சினையாகிவிட்டதை நினை¨த்து வருத்தமடையாமல் இருக்க முடியவில்லை.

அவர் கூறியதைப்போல ஒரு சில வங்கி மேலாளர்கள் அப்படித்தான். அவர் கூறிய மேலாளரை நானும் நேரில் சில முறை சந்தித்திருக்கிறேன். அருகில் சென்றாலே மேலை நாட்டு செண்ட் வாசனை மூக்கைத் துளைக்கும். கழுத்தில் பத்து சவரன் பொறுமான தங்க மாலை  அணிந்திருப்பது தெரிய வேண்டும் என்பதற்காகவே சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை திறந்து விட்டிருப்பார். வலது கையில் ஐந்து சவரன் ப்ரேஸ்லெட், பத்து விரல்களில் சுமார் ஐந்தாறு மோதிரங்கள், இடது கையில் விலையுயர்ந்த மேலைநாட்டு கைக்கடிகாரம் என அவரைப் பார்த்தாலே ஒரு பணக்காரத்தனம் தெரியும். வடக்கத்திக்காரராயிற்றே கலருக்கு கேட்கவே வேண்டாம். அசப்பில் பார்த்தால் பழைய ஹீரோ ஜிதேத்திரா மாதிரி இருப்பார்.

நான் அவரைப் பார்த்த போதெல்லாம் இவருடைய கோலத்தைப் பார்த்தவுடன் நமக்கு எழும் சந்தேகம் இவருடைய மேலதிகாரிகளுக்கு ஏன் ஏற்படுவதில்லையென வியந்ததுண்டு.

எங்களுடைய வங்கி மேலாளர் கூட்டங்களுக்கு வரும்போது எங்களையெல்லாம் துச்சமாக ஒரு பார்வை பார்ப்பார். 'டேய் பட்டிக்காட்டு பசங்களா' என்பதுபோல் இருக்கும் அவர் பார்வை.

இந்த சூழலில் நான் போய் அவரிடம் பேசி என்ன சாதித்துவிட முடியும் என்ற யோசனையில் அமர்ந்திருந்தேன்.

‘என்ன சார் ஒன்னும் பேசாம இருக்கீங்க? இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு நீ நம்ம கேஷ¤ நட் கணக்க அங்கருந்து மாத்துனதுதாண்டா காரணம்னு எங்க அப்பா பேசறார் சார்.’

அவர் கூறுவதில் என்ன தவறு என்று யோசித்தேன். நம்மால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு நாம்தான் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்ற முடிவுடன் அவரைப் பார்த்தேன். ‘சார் பிரச்சினையை எங்கிட்ட சொல்லிட்டீங்களே. சமாதானமா போங்க. ரெண்டு நாளைக்குள்ள இதுக்கு ஒரு முடிவு கண்டுபிடிக்கறேன். அதுவரைக்கும் உங்களுக்கு தற்காலிகமா ஏதாச்சும் ஃபண்ட்ஸ் வேணும்னா ஒரு ரிக்வெஸ்ட் எழுதிக்குடுத்துட்டு போங்க.. நான் என் ஜோனல் மேனேஜர் கிட்ட சாங்ஷன் வாங்கி வைக்கறேன்.’

அவர் உடனே சந்தோஷமாக, ‘ரெண்டு மூனு நாள்னா நா மேனேஜ் பண்ணிக்கறேன் சார்.’ என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

நான் அவர் சென்றபிறகு இதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். சட்டென்று பொறிதட்டியதுபோல் ஒரு யோசனை தோன்ற என் காசாளரை அழைத்து என் மனதில் தோன்றியதை அவரிடம் கூறினேன்.

அவர் சிறிது நேர யோசனைக்குப் பிறகு தயக்கத்துடன், ‘சார்.. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்கிற மாட்டீங்களே?’ என்றார்.

நான் வியப்புடன், ‘சார் நா என்னைக்கு உங்கள தப்பா நினைச்சிக்கிட்டிருக்கேன்? உங்க சீனியாரிட்டிக்கு என்னைக்குமே மதிப்புண்டு. சொல்ல வந்தத தயங்காம சொல்லுங்க.’ என்றேன்.

‘தாங்ஸ் சார். நீங்க சொன்ன யோசனை அந்தாள பெரிசா ஒன்னும் பாதிச்சிராது சார். அந்த மேனேஜருக்கு கீழ நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் இருக்கார். அவர்கூட இவரப்பத்தி நிறைய விஷயங்கள் எங்கிட்ட சொல்லியிருக்கார். அதுல ஒன்ன வச்சி அவர மடக்கிரலாம்னு நினைக்கிறேன்.’ என்றார்..

‘என்ன சார்?’ சொல்லுங்க என்றேன் ஆவலுடன்.

தொடரும்..

5 comments:

D The Dreamer said...

சார்:
திரும்பவும் சஸ்பென்ஸா முடிக்க ஆரம்பிச்சிடீங்களா? என்ன மாஸ்டர் ப்ளான் போட்டீங்கன்னு படிக்க வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

//வங்கி மேலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதால் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் பற்றி தெரிந்துக்கொண்டு அவர்களுக்குரிய மதிப்பை அளிப்பதற்கு சற்று காலதாமதமாக வாய்ப்பிருக்கிறது//

இந்த விசயத்தில ரொம்ப அனுபவபட்டிருக்கேன் சார். சில மானேஜர்களுக்கு நம்மளை பாத்தாலே பிடிக்காம போயிடும். அப்புறம் அவரு மாற்றல் ஆகி போகுறதுக்கு ஆண்டவனை வேண்டறத தவிர வேறு வழியில்லை. :)

tbr.joseph said...

வாங்க ராஜ்,

அப்புறம் அவரு மாற்றல் ஆகி போகுறதுக்கு ஆண்டவனை வேண்டறத தவிர வேறு வழியில்லை. :)//

வேண்டுங்க, நல்லா வேண்டுங்க.. சீக்கிரமே போயிருவார்.

துளசி கோபால் said...

இப்படித்தான் அடுத்தவன் காசுலே 'ஜல்ஸா' செய்ஞ்சுக்கிட்டு இருக்கறவங்க அநேகம்பேர் இருக்காங்க.
சரி, சரி சீக்கிரம் சொல்லுங்க, அந்த ஆளுக்கு எப்படி வச்சீங்க 'ஆப்பு'ன்னு?

tbr.joseph said...

வாங்க துளசி,

சரி, சரி சீக்கிரம் சொல்லுங்க, அந்த ஆளுக்கு எப்படி வச்சீங்க 'ஆப்பு'ன்னு? //

நாளைக்கு சொல்றேனே.

G.Ragavan said...

அடப்பாவி...இவன் ஜிங்பாங் பண்ண அடுத்தவன் காசா? அத்தோட விட்டானா? இப்பத் தொல்லை வேற குடுக்குறானே......தின்னுட்டுப் போனாலும் பரவால்லைன்னு விட்டா....அடிமடியிலேயே கை வைக்கிறானே படுபாவி......ம்ம்ம்...என்ன சொல்றது!

சரி என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க ரெண்டொரு நாளு பொறுக்கனும். பொறுக்குறோம். அதுக்காக எங்களை யாரும் பொறுக்கின்னு சொல்லாம இருந்தாச் சரி. ஹா ஹா ஹா