03 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 91

இத்திட்டம் (IRDP) 1980ல் நடைமுறைக்கு வந்தது. நான் தஞ்சையில் பணியாற்றிய காலம் 1982 டு 84.  என்னைப் போன்ற வங்கி மேலாளர்கள் இக்காலக் கட்டத்தில் அரசு அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாகி பட்ட அவதி கொஞ்சநஞ்சமல்ல.

சுமார் எட்டு சதவிகிதத்திலிருந்து பத்து சதவிகிதம் வரை வட்டியளித்து சேர்க்கப்பட்ட சேமிப்புகளிலிருந்து நான்கிலிருந்து ஆறு சதவிகித வட்டிக்கு இத்தகைய கடன்களை வழங்கி வங்கி வணிகத்தில் நஷ்ட்டப்பட விருப்பமில்லாத வங்கிகள் இக்கடன்களை வழங்க ஆரம்பத்தில் முன்வரவில்லை.

அதுமட்டுமல்ல. இத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன்களில் எழுபத்தைந்து சதவிகிதத்திற்கும் கூடுதலான கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல் வாரா கடன்களாகப் போனது. அதற்கு முழுப் பொறுப்பையும் வங்கிகள் என்னைப் போன்ற மேலாளர்களுடைய தலையில் திணித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் துவங்கவே மேலாளர்கள் இத்தகைய கடன்களை வழங்குவதில் தயக்கம் காட்டத் துவங்கினர், என்னையும் சேர்த்து.

ஆகவே வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கிலிருந்து சரி பாதி வரை மான்யமாக வழங்க முன்வந்தது மத்திய அரசு. அதாவது வங்கிகள் வழங்கும் இத்தகைய கடன்களில் சரி பாதியை அரசே வங்கிகளுக்கு வழங்கிவிடும். கடன் பெறுவோர் மீதியை செலுத்தினால் போதும்!

ஆனால் இவ்வேற்பாடு வங்கி மேலிடத்திலிருந்தவர்களுக்கு மட்டுமே உதவியாக இருந்தது. மீதிக் கடனை வசூல் செய்ய வேண்டிய கடமை மேலாளர்களுக்கு..

சரி, கடன் பெறுவோரை அடையாளம் கண்டுக்கொள்ளவாவது மேலாளர்களுக்கு உரிமை இருந்ததா என்றால் அதுவும் இல்லை.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் அ.வாதிகளும், அ.காரிகளும்  தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுடைய பெயர்களைப் பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியரை நிர்பந்தித்து (மிரட்டி என்று கூட சொல்லலாம்) வங்கிகளுக்கு அனுப்பிவைத்தது என்பதுதான் உண்மை.

இது ஒரு புறம்.

மறுபுறம் அதுவரை கிராமங்களில் வட்டிக்கு கடன் வழங்கி வந்த பணபலம் படைத்த உள்ளூர் லேவாதாவிகள் ஒரு நூதனமான திட்டத்துடன் களமிறங்கினார்கள்.

தங்களிடம் கடன் பெற்று திருப்பி அடைக்க வழியில்லாமல் பரிதவித்துநின்ற ஏழை விவசாயிகளுடைய பெயர்களை அவர்களுக்கு துணை போன அ.வாதிகளுடைய தயவுடன் கடன் பெறுவோர் பட்டியலில் சேர்த்து வங்கிகளிடமிருந்து சலுகைக் கடன் பெற ‘உதவி’ செய்வதுபோல் பாவனை செய்யவாரம்பித்தனர். ஆனால் அவ்வாறு கிடைத்த கடன் தொகையைக் கொண்டு தங்களுடைய கடனுக்கு வரவு வைத்துக் கொண்டு விவசாயிகளை நிர்க்கதியாய் விட்டதுதான் உண்மை!  

நான் தஞ்சையில் இருந்த இரண்டாண்டு காலத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் மூலமாக சந்தையில் பணப்புழக்கம் அதிகமானது என்பது உண்மைதான். ஆனால் அப்பணப்புழக்கம் யாரை வாழவைத்தது என்பதைக் கூர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது லட்சணம்.

இதை எப்படி எதிர்கொள்வது என்பதை தஞ்சையிலிருந்த அனைத்து வங்கி மேலாளர்களும் கூடி ஆலோசித்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. வங்கி மேலாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட Bankers’ Club என்ற அமைப்பு எல்லா ஊர்களிலும் இருப்பதையும் அதன் செயல்பாட்டைக் குறித்தும் முன்னொரு பதிவில் எழுதியிருந்தேன்.

அதன் மாதாந்திர கூட்டத்தை கூட்டி இதைப் பற்றி விவாதித்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. எனக்கு மிக நெருக்கமாயிருந்த சில வங்கி மேலாளர்களிடம் இதைக்குறித்து மேலோட்டமாக விவாதித்தேன்.

அப்போதுதான் தெரிந்தது இதில் வங்கி மேலாளர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்பது.

ஏன்?

அரசுடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்களை அ.வாதிகள் மற்றும் அ.காரிகளை அனுசரித்துப்போகுமாறு அவர்களுடைய மேலதிகாரிகளாலேயே நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள். 'அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. இதில் மெத்தனம் காட்டும் மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று அவர்களுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்த சுற்றறிக்கையை சிலர் என்னிடம் காட்டியபோது என்னால் அவர்களுடைய நிலைமையைப் பார்த்து அனுதாபப்படத்தான் முடிந்தது.

‘சார்.. நீங்க தனியார் வங்கியில ஒர்க் பண்ணாலும் இந்த விஷயத்துல கண்டுக்காம இருக்கறதுதான் உங்களுக்கு நல்லது. உங்களால எத்தனை லோன் சாங்ஷன் பண்ண முடியுமோ அத செஞ்சிட்டு போயிருங்க. அத விட்டுட்டு நம்ம க்ளப்ல இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவெடுக்கலாம்னு நினைச்சீங்கன்னா அதுக்கு நம்ம க்ளப் பிரசிடெண்ட்டாருக்கற பாரத ஸ்டேட் வங்கியின் மத்திய கிளை மேலாளர் நிச்சயம் ஒத்துக்கமாட்டார். அத்தோட நிக்காம அவரே உங்களபத்தி கலெக்டர்கிட்ட போட்டு குடுத்தாலும் குடுத்துறுவார். எதுக்கு வீணா உங்க பேர நீங்க கெடுத்துக்கறீங்க?’ என்று எனக்கு மிகவும் நெருக்கமாயிருந்த ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர் அறிவுறுத்தியபோது எனக்கு அதிலிருந்த அக்கறை விளங்கவே அமைதியாகிப் போனேன்.

நான் அவர் கூறியதை நெடுநேரம் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். அன்றைய நியதியின்படி என்னுடைய கிளையின் மொத்த கடன் தொகையில் நாற்பது விழுக்காடு நலிந்தோருக்கு சலுகைக் கடனுதவி வழங்கவேண்டும். அதை நானாக முன்வந்து செய்துவிட்டால் பிறகு அ.வாதிகள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வழங்க தேவையிருக்காதே என்று எனக்குத் தோன்றியது.

தஞ்சை ஆயர் அவர்கள் என்னுடைய கிளை திறப்புவிழாவன்று கூறியதை நினைத்துப் பார்த்தேன். அதுதான் சரியான வழி என்று உறுதி செய்துக்கொண்டு அன்று மாலையே என்னுடைய வங்கி அலுவல்களை சீக்கிரம் முடித்துக்கொண்டு ஆயரின் இல்லத்திற்குச் சென்று எனக்கு அறிமுகமான பாதிரியாரைச் சந்தித்தேன்.

அவர் என்னை உடனே ஆயரின் இல்ல வளாகத்தில் செயலாற்றி வந்த தஞ்சை பல்நோக்கு சேவை மையத்திற்கு என்னை அழைத்துச் சென்று அதன் தலைவராக இயங்கிவந்த ஒரு பாதிரியாருக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் நான் சென்ற நோக்கத்தை கேட்டதும் ஒரு புன்னகையுடன் அவருடைய மையத்தின் குறிக்கோளையும் அவர்கள் செயல்படுத்திவந்த திட்டங்களைப் பற்றியும் எனக்கு விளக்கத்துவங்கினார்.

‘நீங்க நினைக்கிறது சரிதான் ஜோசப். அரசு திட்டங்களை செயல்படுத்தும் விதமாகத்தான் ஆயரின் நேரடி பார்வையில் எங்களுடைய பல்நோக்கு சேவை மையும் செயல்படுகிறது. தஞ்சை மாவட்ட மக்களுக்கும் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் இடையில் பாலமாக அமைந்து செயலாற்றும் அமைப்புதான் இப்பல்நோக்கு சேவை மையம். அதன் கீழ் செயல்படுத்தப்படும் நலிந்தோருக்கான சகலவிதமான திட்டங்களும் அரசின் திட்டங்களையொட்டி தீட்டப்பட்டவைதான். எங்களுடைய மையத்தில் சாதி, இன, மத வேறுபாடுகளை நாங்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. ஆகவேதான் உங்களைப் போன்ற பல வங்கி மேலாளர்களும் நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவதில் தயக்கம் காட்டுவதில்லை..’

நான் அவர்கள் செயல்படுத்திவந்த திட்டங்களைப் பார்வையிட்டேன். அரசு செயல்படுத்தி வந்த இருபதம்ச திட்டங்களையொட்டியே அவர்களுடைய ஆடு,மாடு, கோழி வளர்ப்பு திட்டங்களும், கைவினைத் தொழிலாளர்களுக்கு பயன்படும் விதமாக கூடை, கோரைப் பாய் முடைதல், பிளாஸ்டிக் பைகள் செய்தல், செருப்பு மற்றும் இதர காலனிகள் செய்தல் போன்ற சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு பணம் மற்றும் பொருளுதவி செய்தல் என பல திட்டங்களும் அவற்றுள் இருந்தன..

அத்துடன் நின்றுவிடாமல் அச்சேவை மையம்  முன்வந்து தஞ்சையை சுற்றியிருந்த பல கிராமங்களை தத்தெடுத்து அதில் வசித்துவந்த பல ஏழைக் குடும்பங்களுக்கு தொழில் மற்றும் விவசாயம் செய்ய பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வந்ததையும் அறிந்தேன்.

நான் என்னுடைய கிளையைத் துவக்கி  மேல் ஆகியிருந்ததால் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் வருடத்திற்கு இன்னும் நான்கு மாதங்களே இருந்தன. அவ்வாண்டில் நான் அதுவரை வழங்கியிருந்த கடன் தொகைகளைக் கணக்கிட்டு அதில் நாற்பது விழுக்காட்டை அடைய எவ்வளவு தொகை இத்திட்டங்களின் கீழ் வழங்க இயலும் என்பதையும் தீர்மானித்தேன்.

சகட்டு மேனிக்கு ஊர் முழுவதும் சுற்றி கடன் வழங்கிவிட்டு வசூலிக்க முடியாமல் திணறுவதை விட ஓரிரு கிராமங்களில் என்னுடைய கிளையிலிருந்து கடன் வழங்குவது உசிதமாயிருக்கும் என்று தீர்மானித்தேன். சேவை மையம் செயல்படுத்தி வந்திருந்த திட்டங்களுள் ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் காலனிகள் செய்தல் திட்டங்களில் ஈடுபடுவோர்க்கு பணம் மற்றும் பொருளுதவி செய்ய தயாராயிருக்கிறோம் என்று சேவை மையத்திற்கு எழுத்து மூலம் தெரிவித்தேன்.

என்னுடைய கடிதம் கிடைத்தவுடனே என்னுடைய முடிவுக்கு நன்றி தெரிவித்ததுடன் நான் வழங்கும் மொத்த தொகையில் இருபத்தைந்து விழுக்காடு என்னுடைய கிளையில் வைப்பு நிதியாக வைப்பதாக தெரிவித்து அவர்களிடம் இருந்து கடிதம் வந்தபோது நான் மகிழ்ந்து சேவை மையம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு கடனுதவி வழங்கும் என்னுடைய திட்டத்தை விவரித்து என்னுடைய வட்டார மேலாளருக்குத் பரிந்துரை செய்தேன்.

அவரும் என்னுடைய பரிந்துரையை ஏற்று நான் குறிப்பிட்டிருந்த கடன் அளவையும் அனுமதித்துடன் கடன் வழங்கும் நாளை தீர்மானித்து அறிவித்தால் அதை ஒரு விழாவாகவே நடத்திவிடலாம் என்று எனக்கு அறிவுரை வழங்கினார்.

அவருடைய அந்த பரிந்துரை சேவை மையத்தின் தலைவருக்கும் பிடித்துப் போக தஞ்சை ஆயரின் தலைமையிலோ அல்லது வட்டாட்சியரின் தலைமையிலோ இவ்விழாவை நடத்தலாம் என்று யோசனை கூறினார்.

அவருடைய இரண்டாவது யோசனையில் எனக்கு அவ்வளவாக விருப்பமில்லாவிட்டாலும் என்னுடைய வட்டார மேலாளரும் அதற்கு விருப்பம் தெரிவித்ததால் நான் வேறு வழியில்லாமல் வட்டாட்சியரை அணுக நேரிட்டது..

நான் நினைத்தது போலவேதான் நடந்தது..

வட்டாட்சியர் என்னவோ நல்லவராய்தான் தெரிந்தார்.. ஆனால்...

தொடரும்..

17 comments:

இலவசக்கொத்தனார் said...

//ஆனால்//

உங்களுக்கு இதே பொழப்பா போச்சு சார். கை விரல்களிலே நகமே இல்லாத மாதிரி பண்ணிடறீங்களே! :)

மணியன் said...

நீங்கள் அ.காரி என்பது அரசு அதிகாரிகள் எனக் கொள்கிறேன்,வங்கி அதிகாரிகளை தனியாக குறிப்பிட்டிருப்பதால்.

வட்டாச்சியர் = அரசியல்வாதி, சரியா?

tbr.joseph said...

வாங்க இ.கொ.

இந்த நகம் கடிக்கறவங்களுக்கு காரணமே தேவையில்லை..

என் வீட்டம்மாவும் அந்த ரகம்தான். எப்ப கடிப்பாங்கன்னே தெரியாது.. விரலெல்லாம் மொட்டையா இருக்குறத பாக்கறப்பத்தான் தெரியும்..

சந்தோஷத்துலயும் கடிப்பீங்க.. துக்கத்துலயும் கடிப்பீங்க.. கோபத்துலயும் கடிப்பீங்க.. சஸ்பென்சா இருக்கும்போது கேக்கணுமா?

tbr.joseph said...

என்னங்க மணியன்..

வட்டாட்சியர்னா அ.வாதியா?

மாவட்ட தலைவருங்க..

அரசியல் தலைவரில்லை.. ஆட்சித்தலைவர்..

புரியணுமே.. இல்லேன்னா நீங்க Gone caseதான் :-))

மணியன் said...

சார், வட்டாசியர் அரசு அதிகாரி என்று தெரியும். :) :(

அவருடன் அரசியல்வாதிகள் அதிகம் புழங்குவதால் அவரே அரசியல்வாதிக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தெரியப் படுத்தி உங்கள் நல்லெண்ணத்திற்கு தடங்கல் ஏற்படுத்தினாரோ என்று சுருக்கமாக கேட்டேன்.

tbr.joseph said...

மீண்டும் வருக மணியன்,

நீங்க சொன்னது புரிஞ்சும் நான் சும்மா உங்கள சீண்டி பார்த்தேன் :-)

சாதாரணமா நான் என்னுடைய சர்வீஸ்ல சந்திச்ச கலெக்டர்ங்க எல்லோருமே ரொம்ப டீசண்டானவங்க ஒரே ஒருத்தர தவிர. அவர் நீங்க சொன்னாமாதிரி ஒரு நேர்மையற்ற அதிகாரி. ஆனால் தஞ்சையில் இருந்தவர் மிகவும் நல்லவராயிருந்தார். அதுவுமல்லாமல் அவர் வடக்கத்திக்காரராயிருந்ததால் லோக்கல் அ.வாதிகளுடைய வலையில் விழாமல் இருந்தார்.

sivagnanamji(#16342789) said...

mavatta aatchiyar or mavatta atchiththalaivar== collector
kottatchiyar or kotta atchiththalaivar== sub-collector(i.a.s) or r.d.o
vattatchiyar== thasildhar

kindly focus your attention on how the subsidies benefitted oficials and politicians

sivagnanamji(#16342789) said...

// en vettu ammavum....parkrappathan thariyum//

aaha unga nagaththai parthuthan
thoothukudi puratchi thalaivi mood
therinchippeengala?

tbr.joseph said...

வாங்க எஸ்.ஜி..

எங்கடா ரொம்ப நாளா ஆள காணோமேன்னு பார்த்தேன்..

உங்க டிக்ஷனரி ரொம்ப பேருக்கு உபயோகமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். நன்றி..

அப்புறம் how the subsidies benefitted oficials and politicians னு சொல்றீங்களே..

அப்படி ஏதாச்சும் என் பதிவில சொல்லியிருக்கேனா என்ன?

சப்சிடி நேரா எங்களுக்கே வந்துருமே.. அதுல அ.வாதிகளுக்கும் அ.காரிகளுக்கும் என்ன கிடைச்சிருக்கப் போவுது?.

sivagnanamji(#16342789) said...

//en vettu ammavum......theriyum//

adikkadi unga nagaththa parthuppeengala thalaivare?

tbr.joseph said...

thoothukudi puratchi thalaivi mood
therinchippeengala? //

நீங்க வேற ஜி.

முகத்தின் அழகு நகத்தில் தெரியும்னு சொல்லியிருந்தா பரவாயில்லை..

அகத்தில்னுல்லே சொல்லி வச்சிருக்காங்க..

நகத்த பார்த்தால்லாம் மூடு தெரியாது..

மூடு மோசமாயிருக்கும்போது நகத்த கடிப்பாங்கன்னு வேணும்னா சொல்லலாம்.

sivagnanamji(#16342789) said...

subsidy amount kai marina than (only after deducting the amount)
rokkam payanali kaikku varum

sivagnanamji(#16342789) said...

adhu sari, yar nagathai? unga nagama or avunga nagaa nnen

tbr.joseph said...

adikkadi unga nagaththa parthuppeengala thalaivare? //

நானா?

ஆஃபீஸ்ல நம்ம டெவலப்பர்ஸ் பேசற பாஷை சில சமயத்துல நம்ம அறிவுக்கு எட்டாது.. மண்டைய பிறாண்டிக்குவேன்..

மண்டையில முடி வேற இல்லையா.. கைல நகம் இருந்தா பிறாண்டுற வேகத்துல ரத்தக் களறியாயிடக்கூடாதுன்னு நகத்த சீரா வெட்டி வச்சிருப்பேன்..

நகத்த கடிச்சி விரல மொட்டையா வச்சிக்கற வேலையெல்லாம் நம்ம கிட்ட கிடையாது..

முத்து(தமிழினி) said...

ஜோசப் சார்,
சூப்பர் சார்..உங்கள் ப்ரீஎம்ப்டிவ் ஸ்டைல்..அந்த காலத்திலேயே நீங்க இதை பண்ணியிருக்கீங்க...அதாவது பெனிபிசியரிகளை நீங்களே ரெடி பண்ணீட்டீங்க....கிரேட்
மற்றபடி ஐ.ஆர்.டி.பி லோன்லயும் லோக்கல் லேவாதேவி காரங்க பண்ணிய கலாட்டாவை கேள்விப்பட்டு அதிர்ந்துப்போனேன்.

tbr.joseph said...

வாங்க முத்து,

அந்த காலத்திலேயே நீங்க இதை பண்ணியிருக்கீங்க...அதாவது பெனிபிசியரிகளை நீங்களே ரெடி பண்ணீட்டீங்க....//

அப்படியா? அதனால நான் பட்ட சிரமங்களை இனி வரும் பதிவுகளில் விவரிக்கும்போது உங்களுக்கு புரியும்.. அ.வாதிகளை ஏமாற்றினாலும் அ.காரிகளை ஏமாற்ற முடியாதென்பதை.. நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையே இந்த அரசு அதிகாரிகள்தான்.

G.Ragavan said...

ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளக்கிப் பிச்சை எடுத்தாராம் பெருமாளு...அதப் பிடிங்கித் தின்னாரம் அனுமாரு....அந்த மாதிரி இருக்கு இந்த விசயம்.

எதையும் நல்லதாவும் பயன்படுத்தலாம். கெட்டதாவும் பயன்படுத்தலாம். ஆனாலும் கெட்டதுக்குதான் கவர்ச்சி அதிகம். அந்த மாதிரி நல்ல விசயத்துக்குக் கொண்டு வந்த திட்டத்தை எப்படியெல்லாம் வளைச்சு நெளிச்சு பணத்தை ஒளிச்சு வெக்கிறாங்கன்னு....சரி விடுங்க....தலையெழுத்து.