27 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 105

உங்களுக்கு தஞ்சையில் ஏறப்பட்ட அனுபவங்களின் தொகுப்பை ஒரு சோக சம்பவத்துடன் முடிக்காதீர்கள் என்று சில சக வலைப்பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கொசுறுப் பதிவு..

தஞ்சையில் அலுவலகப் பணிகள் முடிந்தால் unwind செய்வதற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பார்த்தால் சினிமாதான். அதற்கு தஞ்சையில் எந்த குறையும் இருக்கவில்லை.

அத்தனைச் சிறிய நகரத்தில் தேவைக்கும் அதிகமாகவே திரையரங்குகள் இருந்தன. சென்னையைப் போல் முன்பதிவு செய்ய வேண்டுமென்ற தொல்லையும் இருக்கவில்லை.

வங்கி மேலாளர் என்ற பதவி அளித்திருந்த இன்னுமொரு வசதி எனக்கிருந்தது. தஞ்சையிலிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அவசர தேவைக்கு ஹ¤ண்டிக்கு மேல் கடன்பெறும் வழக்கமிருந்தது. அவர்கள் கடன் பெறுவது நம்முடைய சேட்டிடம்தான். அவர் அந்த ஹ¤ண்டிகளை என்னுடைய வங்கியில் மறுஅடகு (Repledge) வைத்து கடன் பெறுவது வழக்கம்.

ஈடாக வைக்கப்பட்டிருந்த ஹ¤ண்டிகளை பணம் செலுத்தி திருப்பிப் பெற திரையரங்கு உரிமையாளர்களோ அல்லது அவர்களுடைய பணியாட்களோ வங்கிக்கு வருவது வழக்கம். ஆக தஞ்சையிலிருந்த ஏறக்குறைய எல்லா தியேட்டர் உரிமையாளர்கள் அல்லது அங்கு பணிபுரியும் மேலாளர்களை நான் தெரிந்து வைத்திருந்தேன்.

நான் தஞ்சையிலிருந்த காலத்தில்தான் நம்முடைய தமிழக திரைப்படத்துறையில் ‘பா’ வரிசை இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகமாயிருந்தது.

பாக்கியராஜின் முந்தானை முடிச்சு, அந்த ஏழுநாட்கள், பாரதி ராஜாவின் மண்வாசனை, பாலசந்தரின் அக்னிசாட்சி, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை போன்ற பரபரப்பாகப் பேசப்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. என்னுடைய பங்கு கோவிலுக்கருகாமையிலிருந்த அருள் திரையரங்கில் நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து வெளியாயின.

‘என்னங்க, இன்னைக்கி ஏதாவது படம் பார்க்கலாங்க.’ என்று மதியம் மூனு மணி வாக்கில் என் மனைவி தொலைப்பேசியில் கூறினால் அடுத்த தொலைப்பேசி சம்பந்தப்பட்ட திரையரங்கு மேலாளருக்கு..

‘ரெண்டு சீட் தானே சார்.. போட்டு வச்சிடறேன். மெயின் படம் ஆறு மணிக்கு.. ஒரு பத்து நிமிஷம் முன்னால வந்தீங்கன்னா சரியாயிருக்கும்..’ என்று பதில் வரும்.

அப்புறமென்ன, ஐந்தரை மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டை சென்றடைந்தால் மேடமும் என் மூத்த மகளும்  தயாராயிருப்பார்கள்.  குழந்தையை முன்னால் என் கால்களுக்கிடையில் நிறுத்திக்கொண்டு புறப்பட்டு திரையரங்கில்  சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவோம்.

ஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம் என் மகளுக்கு திரைப்படங்கள் என்றாலே அலர்ஜி. விளம்பரங்கள் முடியும்வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள். அதெப்படித்தான் திரைப்படம் துவங்குவதை உணர்வாளோ தெரியாது. டைட்டில் சாங் துவங்கியதுமே அழத்துவங்கிவிடுவாள்.

ஆள்மாறி, ஆள்மாறி வெளியே கொண்டு செல்லாவிட்டால் அக்கம்பக்கத்தாட்களுடைய உச், உச்.. துவங்கிவிடும்..

ஆக, ஏதாவது படத்தை முழுவதுமாக பார்த்தோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் பாதி படம் பார்த்தால் என் மனைவி மீதி படத்தைப் பார்ப்பார். வீடு திரும்பியதும் படு சீரியசாக பரஸ்பரம் நாங்கள் பார்த்த பாகத்தை மற்றவருக்கு கூறுவோம்.  ஆனால் பாலசந்தரின் அக்னிசாட்சியை மட்டும் என் மகள் விரும்பிப் பார்த்தாள் என்றால் நம்ப முடிகிறதா? அதில் அதிக அளவில் பாட்டுகள் இல்லையென்பதால் இருக்கலாம்.

வீட்டுக்கு வந்து.. என்றேன் அல்லவா? அந்த வீட்டுக்கு வருதல் எப்போதுமே படு ரிஸ்க்கான சமாச்சாரம். அநேகமாய் படம் முடிவதற்குள் என் மகள் தூக்கக் கலக்கத்தில் இருப்பாள். ‘அம்மா மடியில் உக்காந்துக்கம்மா.’ என்று எத்தனைக் கெஞ்சினாலும் முடியவே முடியாது என்பாள். தூக்கக் கலக்கத்தில் இருக்கும் இரண்டு வயது மகளை கால்களுக்கிடையில் நிறுத்திக்கொண்டு தூங்கி விழும்போதெல்லாம் ஒரு கையில் பிடித்துக்கொண்டு சரியான விளக்கொளி இல்லாத தஞ்சை நகரில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்வோம்.

வீடு வந்து சேரும்போது என் மகள் நின்றுக்கொண்டிருந்தாலும் நல்ல உறக்கத்தில் இருப்பாள். என் மனைவி பின் சீட்டிலிருந்து இறங்கி வந்து அப்படியே அவளை அள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றபிறகுதான் நான் வாகனத்தை அணைத்துவிட்டு வீட்டுக்குள் செல்லமுடியும்.

நானோ என்னுடைய மனைவியோ எந்த ஒரு நடிகருடையவும் இயக்குனருடையவும் விசிறியல்லாததால் யாருடைய படமானாலும் வெறும் பொழுதுபோக்காகவே பார்ப்போம். வீட்டிற்கு  வந்து தேவையில்லாத விமர்த்தில் இறங்கமாட்டோம்.

ஆனால் கப்பலிலிருந்து என்னுடைய மனைவியின் மூத்த சகோதரர் வந்துவிட்டால் போதும். அவருடன் சேர்ந்து எந்தவொரு படத்தையும் நிம்மதியாய் பார்க்க முடியாது. அவர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகராய் இருந்ததால் எல்லா நடிகர்களையும் அவருடன் ஒப்பிட்டு காரசாரமாக விமர்சிப்பார். முக்கியமாய் அப்போது கொடிகட்டி பறந்துக்கொண்டிருந்த பாக்கியராஜ் அவர்களின் குரலைக் கேட்டாலே பற்றிக்கொண்டு வரும் அவருக்கு.

அவர் இருக்கும்போது முதல் காட்சியில் (மாலைக் காட்சி) பார்த்துவிட்டு வந்தால் காரசார விவாதம் முடிந்து உறங்கச் செல்வதற்கு நள்ளிரவு முடிந்துவிடும். ‘ஐயோ போறுமே. படம் பார்த்த சந்தோஷத்தையே கெடுத்துருவீங்க போலருக்கே, வந்து சாப்டுட்டு படுங்க.’ என்று என் மனைவி அழைக்கும்வரை விவாதம் தொடரும்.

சினிமாவுக்கு அடுத்து ரோட்டரி க்ளப் நிகழ்ச்சிகள். வாரத்திற்கு ஒரு முறை கூடும் இக்கூட்டங்களுக்கு நிச்சயம் சென்றுவிடுவேன். தஞ்சையிலிருந்த பெரிய செல்வந்தர்களும், வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பு. என்னுடைய வயதையொத்தவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக இல்லாததால் என்னுடன் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கு யாரும் கிடைக்காமல் நாளடைவில் வாரக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.

இதையறிந்த சேட் (அவர்தான் அப்போதைய பிரசிடெண்ட்டாக இருந்தார்) என்னை ரோட்டராக்ட் என்ற பள்ளி மாணவர்களுக்கான அமைப்பின் தலைவராக நியமித்தார். இது ரோட்டரி க்ளப்பின் மேற்பார்வையில் பள்ளி மாணவர்களுக்கான அமைப்பு. தஞ்சையிலிருந்த சுமார் ஐந்து பள்ளிகள் அங்கத்தினர்களாக சேர்க்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு பள்ளியில் ரோட்டராக்ட் கூட்டம் என்னுடைய தலைமையில்நடைபெறும். அதில் பங்குகொண்டு மாணவர்களுடன் சேர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது ஒரு சந்தோஷமான அனுபவம். அவர்களுடன் சேர்ந்து அடுத்துள்ள பல கிராமங்களுக்கும் சுகாதாரம், மருத்துவ சிகிச்சை, தட்டம்மை, போலியோ நோய்கள் வராமல் தடுக்க உதவுவது, சுற்றுப்புற சூழலைப் பேணுவது போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் பங்குகொண்டிருக்கிறேன். என் அன்றாட அலுவலகப் பணியில் கிடைக்காத ஒரு மனநிறைவு இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றபோது எனக்கு கிடைத்தது.

என்னுடைய தஞ்சைவாசம் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் எனக்கு பல நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்ததென்றால் அது மிகையாகாது.

என்னுடைய இரண்டாண்டு அனுபவத்தில் எனக்கு மிகவும் திருப்தியளித்தது தஞ்சை வணிகர்களுடைய நேர்மை. என்னிடம் கடனுதவி பெற்றவர்களுள் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோருமே தாங்கள் பெற்ற கடனை முழுமையாக அடைத்து தீர்த்தனர் என்று எனக்குப் பிறகு கிளை மேலாளர்களாக வந்த என்னுடைய நண்பர்கள் எனக்கு அவ்வப்போது தெரிவித்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதுமட்டுமல்ல.. நான் இருந்த காலத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பலரும் இப்போதும் என்னுடைய வங்கியிலேயே தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

எங்களுடைய தஞ்சை வாடிக்கையாளர்களுள் பலரும் பார்ப்பதற்கு மட்டுமல்ல பழகுவதற்கும் எளிமையானவர்களும் கூட.  எத்தனை பெரிய வர்த்தகர்களாயினும், என்னைவிட வயதில் முதிர்ந்தவர்களாயினும் ‘அய்யா’ என்று மரியாதையுடன் அழைப்பதைக் கேட்டபோதெல்லாம் எனக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறேன்.

ஆகவே இத்தகைய இனிய அனுபவங்களை என்னுடைய பிரிவு உபசார கூட்டத்தில் அவர்களுடன் நான் பகிர்ந்துக்கொண்டபோது குழுமியிருந்த பலரும் உணர்ச்சிவசப்பட்டுப் போனார்கள். அவர்களிடமிருந்து விடைபெறும் நேரத்தில் நானு உணர்ச்சி மிகுதியால் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறி நின்றது இப்போதும் நினைவிருக்கிறது.

நான் சென்னையில்தான் முதன்முதலாய் மேலாளராய் பதவியேற்றேன் என்பதை முன்னமே கூறியிருக்கிறேன். நான் தஞ்சையில் அளித்த கடனுதவிகளைப் போல பல மடங்கு சென்னைக் கிளையில் அளித்திருக்கிறேன். ஆனால் நான் அங்கிருந்து மாற்றப்பட்டபோது நடந்த பிரிவு உபசார கூட்டத்தில் தஞ்சை வாடிக்கையாளர்களைப் போல  யாரும் திரண்டு வந்துவிடவில்லை.

என்னுடைய கிளைக்கு அருகாமையிலிருந்த சுமார் பத்து பதினைந்துபேர்கள் மட்டுமே. அதிலும் பெரும்பாலோனோர் என்னுடைய கிளைப்பு வைப்பு நிதி வைத்திருந்தவர்களே. அதுதான் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கும் தஞ்சை போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

பெரு நகரங்களில் மனித உறவுகள் ஒரு பரஸ்பர எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் quid pro quo!

நம்மிடமிருந்து ஒன்றும் கிடைக்காது என்று அறிகின்ற பட்சத்தில் அந்த நிமிடமே உறவுகள் அறுந்துபோகும்.

ஆனால் தஞ்சையில் நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த ஒரு ஆட்டோமொபைல் டீலரும் கூட - அவருக்கு என்னால் கடனுதவி அளிக்க முடியாமற்போனதை சுருக்கமாக கூறியிருந்தேன் -– வந்திருந்து என்னை வாழ்த்திப் பேசியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஏற்படுகின்ற உறவுகள் மிகவும் புனிதமானவையல்லவா?

தஞ்சையிலிருந்து இத்தகைய சந்தோஷமான, மனதுக்கு நிறைவு தரக்கூடிய அனுபவங்களுடன் உழைப்பாளர்களின் தினமான மே மாதம் ஒன்றாம் தேதியன்று அதிகாலையில் தஞ்சையிலிருந்து ஒரு வாடகைக் காரில் (அப்போதெல்லாம் அம்பாசிடர்தானே.. குளிர்பதன வசதியும் பிரபலமடைந்திருக்கவில்லை) நான், என் மனைவி மற்றும் மூத்த மகள் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்..

24 comments:

Krishna said...

செமினார் போயிட்டு வந்த உடனே முதல் வேலயா உங்க 4 பதிவுகளை ஒண்ணா, நேற்று இரவு படித்தேன். உயிரிழப்பு எப்போது நினைத்தாலும் வலிதானே, வலித்தது. இன்னொரு பதிவு வந்தா நல்லா இருக்குமேன்னு நினத்தேன்.அதையே, ஜியும் கேட்க, இந்த பதிவை படித்ததும் ஒரு சின்ன ஆசுவாசம்.

G.Ragavan said...

ஆகா! தஞ்சாவூருல அத்தன தேட்டருங்க இருக்கா! நான் போயிருந்தப்ப கண்ணுல ஒன்னு கூடப் படலை.

தஞ்சாவூர்ல நான் ரொம்பவே சின்னப்புள்ளையா இருந்தப்ப ஒரு ரெண்டு வருசம் இருந்திருக்கோமாம். எனக்கு தஞ்சாவூர்ல இருந்தப்ப நினைவிருக்குறது ரெண்டே விஷயங்கள்தான்.

1. தத்தக்கா பித்தக்கான்னு அடுத்த வீட்டுக்கு நடந்து போறது. பக்கத்து வீட்டுல என்னமோ குடுத்தாங்க....அதக் கொண்டு வந்து அம்மாகிட்ட கொடுத்தது..

2. ஒரு பழைய படம். முத்துராமன் நடிச்சது. காற்றினிலே வரும் கீதம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு பாட்டு...அந்தப் படத்தைப் திரை கட்டிப் போட்டாங்க....அதுல கதாநாயகி மஞ்ச கவுன் போட்டுக்கிட்டு ஊஞ்சல் ஆடுற காட்சி வரும். அந்தக் காட்சி கண்ணுல மாறாம நின்னிருச்சு....அப்புறமா அந்தக் காட்சிய ரொம்ப நாள் கழிச்சிப் பாத்தப்பதான் நான் பாத்தது முத்துராமன் நடிச்ச படம். இசை இளையராஜான்னு தெரிஞ்சது.

தூத்துக்குடிக்கு வர்ரீங்களா...வாங்க..வாங்க...நேத்துத்தான் ஒரு அரமணி நேரம் மட்டும் தூத்துக்குடீல இருந்தேன். டிரெயின்னுக்கு நேரமானதால அவ்வளவுதான் இருக்க முடிஞ்சது. நீங்க சொல்லச் சொல்ல...என்னுடைய நினைவுகளையும் செம்ம பண்ணிக்கிறேன். (இந்தச் சொல் தூத்துக்குடி வட்டாரத்தில் மிகவும் சொல்லப்படுவது. சிறுவயதில் repair என்ற சொல்லைப் பயன்படுத்திய நினைவில்லை. செம்ம பண்ணனும்னுதான் சொல்லீருக்கேன்.)

துளசி கோபால் said...

நீங்க சொன்னது ரொம்பச் சரி. அன்பும் பண்பும் இன்னும் கிராமத்து மக்கள்கிட்டேதான் இருக்கு. நகரம் பெருசா
வளரவளர 'வெளிப்புற நாகரீகம்'னு சொல்றது வளர்றதே தவிர மனசுலே அன்பு வத்திப் போயிருதுங்க.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

மிக்க நன்றிங்க.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

தஞ்சாவூருல அத்தன தேட்டருங்க இருக்கா! //

தூத்துக்குடியில மட்டும் என்னவாம்? தடுக்கி விழுந்தா சர்ச் ஒருபக்கம்னா தியேட்டர்ங்க இன்னொரு பக்கம். அப்புறம் இன்னொன்னும் இருக்குமே.. அங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க?

tbr.joseph said...

வாங்க துளசி,

நகரம் பெருசா
வளரவளர 'வெளிப்புற நாகரீகம்'னு சொல்றது வளர்றதே தவிர மனசுலே அன்பு வத்திப் போயிருதுங்க//

எத்தனை சரியான வார்த்தைங்க..

G.Ragavan said...

// தூத்துக்குடியில மட்டும் என்னவாம்? தடுக்கி விழுந்தா சர்ச் ஒருபக்கம்னா தியேட்டர்ங்க இன்னொரு பக்கம். அப்புறம் இன்னொன்னும் இருக்குமே.. அங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க? //

அதெல்லாம் அந்தக் காலம்னு சொல்லத் தோணுது சார். சார்லஸ் தியேட்டர் இப்ப இல்லை. மினிசார்லஸ் மட்டும் ஓடுது. காரனேஷன் நாறனேஷன் ஆகி ரொம்ப வருஷம் ஆகுது. பாலகிருஷ்ணா இன்னமும் இருக்கு. ராஜ், மினிராஜ், சினிராஜ்...இருக்கு. எஸ்.ஏ.வி பள்ளிக்கூடம் பக்கத்துல ஜோசப் தேட்டர் (ஒங்களோடதா சார்?) இன்னும் இருக்கான்னு தெரியலை. கிளியோபாட்ராவும் கே.எஸ்.பி.எஸ்.கணபதியும் இன்னும் ஓடுது. அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் மாறாம திருச்செந்தூர் ரோட்டுல முருகன் தேட்டர். இதுவே பெரிய பட்டியலாட்டம் இருக்கே!

புதுக்கிராமத்துல சார்லஸ் வீடும் பிரிண்ஸ் டாக்டர் வீடும் முன்னாடி முகப்பு மாறி பொலிவா இருக்கு.

tbr.joseph said...

இதுவே பெரிய பட்டியலாட்டம் இருக்கே! //

பார்த்தீங்களா நீங்களே ஒத்துக்கிட்டீங்க..

என்னுடைய இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லலையே?

அங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க? //

மணியன் said...

தஞ்சை மக்கள் தரணியெல்லாம் ஆள்கிறார்கள், தங்கள் ஊரை 'நகர நாகரிகம்' தீண்டாமல் பார்த்துக் கொள்ளட்டும்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

தங்கள் ஊரை 'நகர நாகரிகம்' தீண்டாமல் பார்த்துக் கொள்ளட்டும்.//

இது யாருக்குங்க மணியன்.. தஞ்சாவூர் ஆளுங்களுக்கா? என்ன இருந்தாலும் சென்னை ஆளுங்க மாதிரி இல்ல அங்க இருக்கறவங்க..

sivagnanamji(#16342789) said...

thanks for honouring my appeal....
'india lives in villages"....
farewell from thanjavur
***********************************how is it thirumbi parkren 104& 105
occur simultaneusely?
***********************************

tbr.joseph said...

வாங்க ஜி!

how is it thirumbi parkren 104& 105
occur simultaneously?//

அதாங்க எனக்கும் புரிய மாட்டேங்குது.. இந்த ப்ளாக்கர் தொல்லை இன்னும் தீரலை போலருக்குது. என்னோட பதிவை அனுபவம்/நிகழ்வுகள் பகுதியில பதிஞ்சும் இன்னமும் அனுப்பு பொத்தாந்தான் தெரியுது.. அமுக்குனா என்னய்யா நீரு அனுப்பறதுக்கு ஒன்னும் இல்லையேங்குது மெசேஜ்.. பின்னூட்டம் ஒன்னுமே பதிவுல தெரிய மாட்டேங்குது.. போஸ்ட் அ கமெண்ட் க்ளிக் பண்ணா எல்லா பின்னூட்டங்களும் தெரியுது..
ஏன் கேக்கறீங்க..

எல்லாருக்குமே இப்படித்தானா இல்ல எனக்கு மட்டுமா.. ஆனா சூரியன் பதிவுல இந்த தொல்லை இல்லை..

துளசி கோபால் said...

சூரியன் பதிவு சரியா இருக்கா?
அப்ப இதை மட்டும் ப்ளொக்கர் 'திரும்பிப் பாக்காம' இருக்கு போல:-)

tbr.joseph said...

அப்ப இதை மட்டும் ப்ளொக்கர் 'திரும்பிப் பாக்காம' இருக்கு போல:-) //

என்ன இது நீயுசி சோக்கா :-(?

ஆனா என்னவோ, இப்ப சரியாயிருச்சி பாருங்க..

இப்படியே இருக்கட்டும்னு வேண்டிக்கறேன்..

அப்புறம் இங்க்லீஷ் ப்ளாக் பக்கம் போனீங்களா.. ப்ளாக் தேசம் போய் அப்பப்ப பாருங்க..

இராமநாதன் said...

என்ன நடக்குது இங்க? எல்லாரும் தஞ்சாவூர் புகழ்ப்புராணம் பாடிகிட்டுருக்கீங்க அதிசயமா? :))

நல்லது நல்லது. ஜோசப் சார், இத்தன நாள எழுதுனதுக்கெல்லாம் சேத்து வச்சு எங்க ஊர ஒரு தூக்கு தூக்கிட்டீங்க. நன்றி.

ஜிரா,
அதெப்படியா அது. படம் பேர் நியாபகம் இல்ல. ஹீரோ யாருன்னு தெரியல. ஆனா ஹிரோயின் போட்டிருந்த ட்ரெஸ், சாங்க் சிச்சுவேஷன்லாம் மட்டும் ஸ்பஷ்டமா நியாகபம் வச்சுருக்கீரு?

மணியன்,
//தஞ்சை மக்கள் தரணியெல்லாம் ஆள்கிறார்கள்,//
சரியாச் சொன்னீங்க. திருவாரூரும், மன்னார்குடியும் நம்ம பேட்டதானே.

tbr.joseph said...

வாங்கய்யா..

ஊரப்பத்தி எழுதனதுமே மூக்குல வேர்த்துருமே..

என்னடா ஆளையே காணமே கோபம்போலருக்குது.. சரி நம்ம வீட்டுக்கு எப்ப வராறோ அப்பத்தான் நாமளும் போணும்னு வைராக்கியமா இருந்தேன்.. வந்துட்டீங்கல்லே.. இனிமே சமாதானம்தான்..

நீங்கல்லாம் சொன்னாலும் சொல்லாட்டியும் தஞ்சாவூர் நமக்கு ரொம்பவும் புடிச்ச ஊருங்க. அடுத்த மாசம் எட்டு, ஒன்பதுல ரெண்டு நா அங்கதான் ரூம் எடுத்து தங்கிட்டு வேளாங்கன்னிக்கும், திருக்காட்டுப்பள்ளிக்கும் போணும்னு ப்ளான்..

இப்ப எப்படி இருக்குன்னு பார்த்துட்டு உங்க சந்து, பொந்து பத்தியெல்லாம் எழுதறேன்.. அதாங்க பஸ்ஸ்டாண்டுக்கும் தெற்கு வீதிக்கும் இடையிலருக்குமே.. அதப்பத்தி எழுதணும்னு சொன்னீங்கல்லே.. அத இன்னொரு தடவ நேர்ல பார்த்துட்டு எழுதலாம்னுதான்..

அமல் said...

//அதாங்க பஸ்ஸ்டாண்டுக்கும் தெற்கு வீதிக்கும் இடையிலருக்குமே.. அதப்பத்தி எழுதணும்னு சொன்னீங்கல்லே.. அத இன்னொரு தடவ நேர்ல பார்த்துட்டு எழுதலாம்னுதான்.. //
ஆர்வத்தில், காரை (Car) எடுத்து செல்லாதீர்...

tbr.joseph said...

வாங்க அமல்,

நீங்க வேற அந்த சந்துக்குள்ள ஸ்கூட்டர்ல போயே படாத பாடு பட்டிருக்கேன். இதுல கார் வேறயா? Maruti 800ஐ விட சின்னதா புதுசா ஒரு கார கண்டுபிடிச்சா ஒருவேளை போலாம்.

G.Ragavan said...

// என்னுடைய இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லலையே?

அங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க? //

இதென்ன கூத்தாருக்கு...என்னன்னு தெரியல்லயே..இரவு நேரங்களில் லாஞ்சிக கெளம்பும்....புதுக்கிராமத்திலும் போல்டன்புரத்துலயும் இரவு நேரங்களில் ஒன்னும் கலகலத்தது இல்லையே....மீன்பிடித்துறைமுகத்துக்கு எதுக்க இருந்த பொதுப்பணித்துறை காம்பவுண்டு ரொம்பவும் பெருசு. அங்க கலகலக்குறது மீன் வாடையும் லாஞ்சிச் சத்தமுந்தான். நீங்களே சொல்லீருங்க சார்.

tbr.joseph said...

ராகவன்,

தூத்துக்குடி பரோட்டாவும் கொத்துக்கறியும் சென்னை வரைக்கும் ஃபேமஸ் ஆச்சுங்களே.

ராத்திரி பத்துமணிக்கு மேல பஸ்ஸ்டாண்ட், மட்டக்கடை ஏன் பிரையண்ட் நகர், சிதம்பர நகர் பக்கமெல்லாம் ஒரு ரவுண்ட் போய் வாங்க.. ட்யூப் லைட் சகிதம் ரோட்டோரத்துல நைட் க்ளப்புங்க அமர்க்களமா நடக்கறத..

G.Ragavan said...

// ராகவன்,

தூத்துக்குடி பரோட்டாவும் கொத்துக்கறியும் சென்னை வரைக்கும் ஃபேமஸ் ஆச்சுங்களே.

ராத்திரி பத்துமணிக்கு மேல பஸ்ஸ்டாண்ட், மட்டக்கடை ஏன் பிரையண்ட் நகர், சிதம்பர நகர் பக்கமெல்லாம் ஒரு ரவுண்ட் போய் வாங்க.. ட்யூப் லைட் சகிதம் ரோட்டோரத்துல நைட் க்ளப்புங்க அமர்க்களமா நடக்கறத.. //

அட அதச் சொல்றீங்களா....அதுக்கு மட்டக்கடைக்கும் சிதம்பர நகருக்கும் ஏன் போகனும்...புதுக்கிராமத்துல பொதுவா இந்தக் கடைக கிடையாது...ஆனா கொஞ்சந் தள்ளி போல்டன்புரம் போனப்போதும்....பீங்கானாபீசுக்கும் போல்டன் புரத்துக்கும் நடுவுல நெறைய கடைக இருக்கு. ஆனா நாங்க அங்க வாங்க மாட்டோம். பிரின்ஸ் ஆஸ்பித்திரீல இருந்து பத்துகட தள்ளி வக்கீல் வத்சலா வீட்டுக்கு முன்னாடி ஒரு கடை உண்டு. அங்கதான் வாங்குவோம்.

tbr.joseph said...

புதுக்கிராமத்துல பொதுவா இந்தக் கடைக கிடையாது..//

ராகவன் உங்க புதுக்கிராமத்துல என்னதாங்க இருக்கு.. ஐயர், ஐயங்கார்வாள் இருக்கற எடத்துல கோயில விட்டா என்னதான் கிடைக்கும்.. எட்டு மணியான ரோடே ஜிலோன்னு ஆயிருமே..

G.Ragavan said...

// ராகவன் உங்க புதுக்கிராமத்துல என்னதாங்க இருக்கு.. ஐயர், ஐயங்கார்வாள் இருக்கற எடத்துல கோயில விட்டா என்னதான் கிடைக்கும்.. எட்டு மணியான ரோடே ஜிலோன்னு ஆயிருமே.. //

உண்மைதான். பிள்ளையார் கோயிலு பெருமாள் கோயிலு சங்கரமடமுன்னு இருந்தாலும்....அந்தக்காலத்துல sophisticated இடமாகத்தான் இருந்திருக்கிறது புதுக்கிராமம். இன்னமும் கூட. ஸ்டீபன் டாக்டரும், பிரின்ஸ் டாக்டரும், சார்லஸ் தியேட்டர் காரர்களும், தமயந்தி அம்மாவின் வீடும், அக்சார் பெயிண்ட்காரர்கள் வீடும் இன்னும் அங்குதான் இருக்கிறது. ASKR கல்யாண மண்டபமும் அங்குதான். சின்ன வயதில் அதுதான் ஊரிலேயே பெரிய மண்டபம். ஆனால் இப்பொழுது நிறைய வந்து விட்டன. நான் சொர்ணமுடி நடனமும் சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரியும் அனுபவித்தது அங்குதான். ஆனால் அப்பொழுது விவரம் சரியாக இல்லை. இருந்திருந்தால் ஆட்டத்தையும் கச்சேரியையும் நன்றாக ரசித்திருக்கலாம்.

tbr.joseph said...

அந்தக்காலத்துல sophisticated இடமாகத்தான் இருந்திருக்கிறது புதுக்கிராமம். இன்னமும் கூட.//

ஒத்துக்கறேன் ராகவன். நான் அங்கருக்கற PSS (petrol bunk) ஐயங்கார் வீட்டுக்கு சில முறை சென்றிருக்கிறேன். அதே மாதிரி சார்லஸ் தியேட்டர் வீட்டுக்கும் சென்றிருக்கிறேன் (ஒரு வில்லங்கமாத்தான்).. மத்தபடி என் ஆஃபீஸ்லருந்து பிரையண்ட் நகருக்கு போற வழியாத்தான் நான் அந்த பக்கம் சென்றிருக்கிறேன்.