24 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 104

நான் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிலும் காலி மனை கிடந்ததென்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

வீட்டின் மேற்கே சுற்றுச்சுவருக்கு அப்பால் என்னுடைய வீட்டு உரிமையாளரின் சகோதரருடைய குடும்பம் குடியிருந்தது. கிழக்கு மற்றும் வடக்கே காலி மனைகள். தெற்கே, வீட்டிற்கு எதிரிலும் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காலி மனைகள்தான்.

வீட்டினுள், மேற்கு (இடது) பக்கத்தில் இரண்டு படுக்கையறைகள். கிழக்கு (வலது)பக்கத்தில் முன்னால் ஒரு சிறிய சிட் அவுட், அதனையடுத்து ஒரு விருந்தினர் ஹால், அதனையடுத்து படிகூண்டு, பின்னால் உணவறை, அதையொட்டி சமையலறை பின்னால் புழக்கடை..

வீட்டினுள், நான்கு பக்கத்திலும் சுமார் பத்து ஜன்னல்கள். எல்லாவற்றிலும் கண்ணாடி கதவுகள். தஞ்சையில் காற்று காலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்.

என் வீட்டைச் சுற்றிலும் காலி இடங்களானதால் காற்று காலத்தில் சன்னல் கதவுகள் எல்லாம் கொக்கியிட்டு வைத்திருக்கவில்லையென்றால் காற்றின் வேகத்தில் சன்னல் கதவுகள் தாமாக அடித்துக்கொள்ள அவற்றில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் நிமிட நேரத்தில் உடைந்துவிடும். அப்படி கண்ணாடி இல்லாத ஜன்னல் கதவுகள் பல இருந்தன.

நான் கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்த சம்பவம் நடந்து முடிந்த மூன்றாம் நாள். அதாவது ஆகஸ்ட் பதினெட்டாம் நாள்.

நான் அலுவலகத்திற்கு புறப்படும்போது என் இளைய மகள் இரண்டாவது படுக்கையறையில் இருந்த தூளியில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

என் மூத்த மகள் அன்றைய இரவு சம்பவத்திற்குப்பிறகு சரியான சுகம் இல்லாமல் போனதால் அவளை என் இளைய மகள் பிறந்த அதே மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துவிட்டு அவர்கள் அளித்த தூக்க மருந்தின் தாக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

நான் அலுவலகத்தை சென்றடைந்து என்னுடைய அனுதின அலுவலில் ஆழ்ந்துப் போயிருந்த நேரம்.

வீட்டிலிருந்து தொலைப்பேசி. எதிர் முனையில் பதற்றத்துடன் என் மனைவி.

என்ன என்றேன்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு பேய் காத்தோட மழையடிச்சி வீட்டுக்குள்ளாற எல்லாம் மழைதண்ணி வந்திருச்சிங்க. தூளியில படுத்திருந்த பாப்பாவும் சுத்தமா நனைஞ்சி போயிட்டா. பிள்ளை குளிர்ல நடுங்குது. நானும் அம்மாவும் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருக்கோம். உடனே புறப்பட்டு வாங்க.. சீக்கிரம்.’

கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எதிர் கடையிலிருந்த பாயின் வண்டியை வாங்கிக்கொண்டு ஓடுகிறேன்.

என்னுடைய வங்கியிருந்த பகுதியிலும் சரி, என் வீடு இருந்த பாதையிலும் சரி எங்கும் மழையின் அடையாளம் கூட இல்லை. ஆனால் என்னுடைய வீடு இருந்த பகுதியில் மட்டும் மழை பெய்திருந்த சுவடுகள்..

வீட்டையடைந்தபோது பாப்பா உடம்பு சில்லிட்டு போயிருக்கிறது. என் மனைவி அழுத கோலத்தில். மூத்தவள் அந்த களேபரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில்..

எனக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு என் மூத்த மகளை என்னுடைய மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு இளைய மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.

மருத்துவமனையில் என் மகளுடைய பிரசவம் பார்த்த மருத்துவரே இருந்ததால் உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டனர்..

இரண்டு மணி நேரம் போராட்டம்.

நானும் என் மனைவியும் மருத்துவமனை வராந்தாவில் தவிப்புடன் காத்திருந்தோம்..

அவசரப் பிரிவு பகுதியிலிருந்த என் மகளை இரு தாதிமார்கள் கொண்டுவந்து வேறொரு அறையில் கிடத்தியதைப் பார்த்துவிட்டு ஓடிச் செல்கிறோம்..

யாராவது ஒருத்தர் மட்டும் வந்து பார்க்கலாம் என்கின்றனர்.

‘என்னால முடியாதுங்க. நீங்க போய் பார்த்துட்டு வாங்க. அப்புறம் நான் போய் பார்க்கிறேன்.’ என்கிறார் என் மனைவி.

நான் சென்று பார்க்கிறேன். அமைதியாய், ஒரு மென்மையான பூவைப்போல் கிடக்கிறாள் என் மகள். மேல் மூச்சு வாங்குகிறது. பஞ்சு போன்ற கைகளில் குளுக்கோஸ் ஊசி குத்திய இடமெல்லாம் சிவந்து போய்..

ஜுரத்தின் உச்சத் தாக்கத்தில் முகமெல்லாம் ரத்தச் சிவப்பாய்.. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்களை லேசாய் திறந்து வலப்புறம் திரும்பி திறந்திருந்த ஜன்னல் வழியாக யாரையோ அல்லது எதையோ பாக்கிறாள். அடுத்த நொடி சந்தோஷத்துடன் ஒரு அழகிய புன்னகை அவளுடைய உதடுகளில்.. முகமெல்லாம் விளக்கொளிபோல் பளீரென்று வெளிச்சம் தோன்றி மறைகிறது..

நான் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் இரண்டும் மூடிக்கொள்கின்றன... சுவாசம் அடங்கிப் போகிறது..

பிறந்து சரியாய் பத்தாம் நாள், இந்த உலகை விட்டே போய்விட்டாள் என் மகள்..

அந்தப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்...

இதை நான் எப்படிப் போய் வெளியே பதற்றத்துடன் காத்திருக்கும் என் மனைவியிடம் அறிவிக்கப்போகிறேன் என்று மலைத்துப் போய் நிற்கிறேன்.

திரும்பிப் பார்க்கிறேன். இதை எதிர்பார்த்திருந்ததுபோல் என்னுடைய மருத்துவர் வருகிறார். குழந்தையைக் குனிந்து பார்த்துவிட்டு என்னைப் பார்க்கிறார். என் கண்களில் ததும்பி நின்ற கண்ணீரினூடே.. ‘How did this happen, Doctor?’ என்கிறேன்..

‘Sorry Mr.Joseph, It appears to be a freak fever. We could not diagnose it. He body was so cold when you brought her. We could not revive her. I am sorry.’ என்றவாறு மெள்ள வெளியேறுகிறார்.

இதை அறை வாசலில் நின்றவாறு கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி ‘என்னங்க..’ என்று கண்ணீருடன் ஓடிவருவது தெரிகிறது. அப்படியே அவளை அணைத்துக்கொண்டு ஆறுதலிளிக்கிறேன்..

அதற்குப் பிறகு ஆக வேண்டிய காரியங்களையெல்லாம் இயந்திரக் கதியில் செய்து முடிக்கிறேன்.

என்னை ஆயருக்கு அறிமுகப்படுத்திய குருவும் என்னுடைய பங்குக் குருவும் (அவரும் என்னுடைய நண்பர்தான்) கூடவே இருந்து குழந்தையை நல்லடக்கம் செய்ய உதவுகின்றனர்..

நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என நான் முற்றிலும் எதிர்பார்க்காத அளவு கூட்டம் என் வீட்டின் முன்னே குழுமிவிட ஏதோ ஒரு விஐபியின் சவ அடக்கம் போல நடந்து முடிகிறது..

********

‘என்னால இனியும் இந்த வீட்ல இருக்க முடியாதுங்க. நானும் எம் பொண்ணும் எங்க அம்மா கூடவே போறோம்... ஓன்னு இந்த ஊர விட்டே டிரான்ஸ்ஃபர் கேளுங்க.. இல்லையா வீட்ட மாத்திட்டு ஊருக்கு வந்து எங்கள கூப்டுக்குங்க..’

அத்துயரச் சம்பவம் நடந்து முடிந்த இரண்டாம் நாள் என்னுடைய மனைவி இப்படிக் கூறியதும் எனக்கும் மறுத்துப் பேச துணிவில்லை. சரியென்று சம்மதித்து அன்றே பஸ் ஏற்றி மூவரையும் அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னுடைய மனைவி விரும்பியதுபோல எனக்கு மாற்றம் கிடைக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்ல எனவும் அப்படியே கிடைத்தாலும் ஐந்தாறு மாதங்களாவது, அதாவது அடுத்த மேமாதம் வரை ஆகும் என்பது எனக்கும் தெரியும் என் மனைவிக்கும் தெரியும்..

ஆகவே இந்த இடைபட்ட காலத்தில் மீண்டும் வீட்டை மாற்றுவது உசிதமல்ல என்று நினைத்தேன். என்னுடைய மனைவியின் துக்கம் குறைந்தது அவளாகவே திரும்பி வருவாள் என்று நினைத்து நான் மட்டும் அவ்வீட்டில் தனியாக வசித்தேன்.. வீட்டின் புழக்கடையில் தோட்டத்தில் அபிரிதமாய் காய்த்துக் கிடந்த செடிகளைப் பார்க்கும்போதெல்லாம் என் உள் மனசில் ஒரு எண்ணம் தோன்றும், 'என் மக போன சந்தோஷத்துல கொஞ்சம் அதிகமாவே பூத்து, காய்க்றீங்களோ?'

நான் நினைத்தது போலவே அடுத்த மாதமே என் மனைவி என் மகளுடன் திரும்பி வந்தாள்..

ஆரம்பத்தில் இரு வாரங்கள் வரை இரவு நேரங்களில் தன் மகளை நினைத்துக்கொண்டு வருந்தியவள் நாளடைவில் சகஜ நிலைக்கு திரும்பி வர எங்களுடைய வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.. மூத்தவளும் பாப்பா எங்கம்மா, பாப்பா எங்கம்மா என்ற  கேட்டு கேட்டு நாங்கள் சொன்ன பதிலில் திருப்தியடையாமல் சகஜ நிலைக்குத் திரும்ப மேலும் சில மாதங்கள் பிடித்தன. வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் எங்க பாப்பாவ அந்த சிங்கந்தான் கொண்டு போயிருச்சி என்பாள்..

ஆனால் கடவுள் கிருபையால் மீண்டும் என் மனைவி அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற சேதி.. ‘எம் பொண்ணே மறுபடியும் வந்துட்டாங்க..’ என்ற மகிழ்ச்சியும் என் மனைவிக்கும் எனக்கும் தெம்பைக் கொடுத்தது.. என் மூத்த மகளுடைய கவனமும் வரப்போகும் குழந்தையின் மேல் திரும்பியது.

ஆனாலும் ‘இந்த ஊரைவிட்டு மாற்றம் கேளுங்க. இப்பத்தான் நம்ம ஊர்லயே உங்க ப்ராஞ்ச் இருக்கே..பாப்பா பொறக்கறதுக்குள்ள நாம இந்த ஊர விட்டு போயிரனுங்க.’ என்று என் மனைவி துளைத்தெடுக்க ஆரம்பிக்கவே அடுத்த ஐந்தாறு மாதங்களில் அதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய வட்டார மேலாளருடைய பரிந்துரையும், அச்சமயம் தூத்துக்குடியில் கிளை மேலாளராக இருந்த என்னுடைய நெருங்கிய நண்பரின் பெருந்தன்மையும் எனக்கு மாற்றம் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.. (அவரும் அடுத்துருந்த அம்பாசமுத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தூத்துக்குடி மிகவும் பிடித்துபோயிருந்தது.)

ஒரேயொரு பிரச்சினை, என்னுடைய கிளைக்கு யாருமே வரத் தயாராக இல்லாததுதான்..

என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட நிலைதான் பலரையும் ‘தஞ்சையில பிள்ளைங்கள வச்சிக்கிட்டு வளக்குறது ரொம்ப கஷ்டம்போல’ என்று ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது..

மார்ச் மாதமே என்னுடைய மாற்றத்திற்கான உத்தரவு வந்தும் ஏப்ரல் மாத இறுதியில்தான் ஒரு திருமணமாகாதவர் தஞ்சைக்கு வர ஒத்துக்கொண்டார்..

ஆக, 1984ம் வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி தஞ்சையை விட்டு என்னுடைய வங்கி அலுவலைப் பொறுத்தவரை பல பலனுள்ள அனுபவங்களுடனும் என்னுடைய சொந்த வாழ்க்கையில் பல சுகமான, சந்தோஷமான அனுபவங்கள் மற்றும் ஒரேயொரு இழப்புடனும் என் மனைவியின் பிறந்த ஊரான தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டோம்..

தொடரும்..

23 comments:

டி ராஜ்/ DRaj said...

மனசு கஷ்டமாபோயிடுச்சு சார். யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.

ராஜ்.

துளசி கோபால் said...

என்னங்க டிபிஆர்ஜோ,

இப்படி ஆயிருச்சு. நம்ம கையிலே ஒண்ணுமில்லே எல்லாம் விதின்னு இருக்க வேண்டியதுதானா?

பாவம் பச்சைப் புள்ளெ. மனசு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போச்சுங்க.

puddhuvai said...

I didn't expect this. I cannot comment more than this.

sivagnanamji(#16342789) said...

sory joe
thanjai patri ezhudhiyadhai ellam
anubavichu padichu vandhen
ippo manasukku romba kashtam aydichu
kamaliyin maraname enakku pidikkale
ana adhu kadhai
idhu thanvaralaru ache
really sory

tbr.joseph said...

வாங்க ராஜ்,

யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. //

பிறப்பும் இறப்பும் சகஜம்தானே ராஜ். ஆனாலும் அந்த சமயத்துல நம்மால அந்த துயரத்த தாங்கிக்கத்தான் முடியல..

tbr.joseph said...

வாங்க துளசி,

நம்ம கையிலே ஒண்ணுமில்லே எல்லாம் விதின்னு இருக்க வேண்டியதுதானா?//

ஆமாங்க. பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்ததெல்லாம் வேஸ்ட்தானா? எதுக்கு எனக்கு இந்த கொடுமைன்னு என்னுடைய மனைவி கேட்டப்போ எனக்கு இப்படித்தான் சொல்லணும்னு தோனிச்சி.

tbr.joseph said...

வாங்க புதுவை,

I didn't expect this.//

நாம எதிர்பார்க்கறதெல்லாம் நடக்காம இருக்கும்போதே நாம கடவுள நினைக்கறதில்லை.. இதுல நாம என்ன நினைக்கிறோமோ அதெல்லாம் நடந்துட்டா?

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.. என்ற கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன..

tbr.joseph said...

வாங்க ஜி!

kamaliyin maraname enakku pidikkale
ana adhu kadhai//

நிஜ வாழ்க்கையும் சில சமயங்கள்ல நாம எங்கேயோ எப்போதோ படிச்ச கதையில வர்ற மாதிரியே வர்றதில்லை..

கதைதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் கதை..

நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும்.. அத அப்பப்போ தாங்கிக்கற மனதை, தைரியத்தை, கொடுப்பது அந்த கடவுள்தான்.

Jagan said...

For the past few months i waited for ur post everyday though i didn't write any comments and i felt happy after reading the post every day. But today " enna valzhai ithu nu thonuthu sir,"

--
Jagan

tbr.joseph said...

enna valzhai ithu nu thonuthu sir,"

உண்மைதான் ஜெகன்.. சில சமயங்கள்ல நம்ம எல்லாருக்குமே ஏற்படற உணர்வுதான் அது..

ஆனாலும் நாம எல்லாருமே நம்ம வாழ்க்கையில தொடர்ந்துக்கிட்டுத்தான இருக்கோம்..

ஆனா பிறந்து பத்து நாட்கள் மட்டும் வாழ்ந்துட்டு ஒரு உயிர் பிரியும்போது அந்த வாழ்க்கை என்ன அர்த்தம்னுதான் நமக்கு நினைக்க தோனுது..

இறைவனுடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னால ஏதாச்சும் ஒரு அர்த்தம் இருக்குன்னு சொல்வாங்க.. ஆனா இந்த மாதிரி செயலுக்கு பின்னால?

அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

அமல் said...

ஜெகன் போலதான் நானும், உங்கள் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். வேலை பளுவால் பின்னூட்டமிட நேரமில்லை. ஆனால் இந்த பதிவின் இறுதி பகுதி (குழந்தை இழப்பு) பெரிதும் என் மனதை பாதித்தது. வீட்டுக்கு அருகிலேயே மகப்பேறு மற்றும் குழந்தைக்கான மருத்துவமனை இருந்தும் குழந்தை இறந்தது என்பது என்னவென்று சொல்வது. மேலும்

//என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட நிலைதான் பலரையும் ‘தஞ்சையில பிள்ளைங்கள வச்சிக்கிட்டு வளக்குறது ரொம்ப கஷ்டம்போல’ என்று ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது//

என்ற வரிகள் பெரிதும் பாதித்தது. ஏன்னா... அருகில் உள்ள மற்ற மாவட்டத்திலுருந்து கூட தஞ்சைக்குதான் சிகிச்சைக்கு வருவார்கள். எப்படி அது போன்ற ஒரு உணர்வு மற்றவர்களுக்கு வந்தது?

நானும் இந்த ஊருதான்... முந்தைய பதிவுகளில் நீங்கள் குறிப்பிட்ட பரிசுத்த நாடார் என் உறவினர்தான். அவருடைய வீட்டுக்கு அருகில் தான் என் வீடும் உள்ளது. அதையெல்லாம் படிக்கும் போது இருந்த மகிழ்ச்சி, இந்த பதிவை படித்த உடன் போய்விட்டது.

அன்புடன்,
அமல்

tbr.joseph said...

வாங்க அமல்,

தஞ்சைக்குதான் சிகிச்சைக்கு வருவார்கள். எப்படி அது போன்ற ஒரு உணர்வு மற்றவர்களுக்கு வந்தது?//

நீங்க சொல்றது ரொம்பவும் சரி அமல். ஆனால் தஞ்சையில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும் தஞ்சையில் கிடைக்கின்ற மருத்துவ வசதிகள். எத்தனை மருத்துவ வசதிகள் உள்ள ஊரானாலும் அங்கும் மரணங்கள் ஏற்படுவது சகஜம்தானே..

என்னுடைய வங்கியிலிருந்தவர்களுக்கு தஞ்சையைப் பற்றி தெரியாதல்லவா? அதனால்தான் அப்படி ஒரு எண்ணம் தோன்றியிருந்திருக்கலாம். அத்துடன் இதெல்லாம் மனதைப் பற்றிய விஷயமாயிற்றே.. உணர்ச்சிபூர்வமான முடிவுகள் எதற்கும் சரியான காரணம் கற்பிக்க முடியாதல்லவா?

அதையெல்லாம் படிக்கும் போது இருந்த மகிழ்ச்சி, இந்த பதிவை படித்த உடன் போய்விட்டது.//

தஞ்சையிலிருந்த இரண்டாண்டு காலத்தில் எனக்கு கிடைத்த பசுமையான, சந்தோஷமான நினைவுகள் பல இருக்கின்றன. அதில் இறுதியில் நான் குறிப்பிட்ட ஒரு இழப்பு யாருக்கும் அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் ஏற்படக்கூடியதுதான். அதை நான் எழுதியதால் தஞ்சையின் சிறப்புக்கு நான் ஊறுவிளைவித்ததாக தயவுசெய்து நினைக்காதீர்கள். சொந்த ஊரைப் பற்றி குறைத்து யார் எழுதினாலும் அதை படிக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கும். உங்களுடைய வருத்தத்தையும் நான் புரிந்துக்கொள்கிறேன்.

dondu(#4800161) said...

"நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்களை லேசாய் திறந்து வலப்புறம் திரும்பி திறந்திருந்த ஜன்னல் வழியாக யாரையோ அல்லது எதையோ பார்க்கிறாள். அடுத்த நொடி சந்தோஷத்துடன் ஒரு அழகிய புன்னகை அவளுடைய உதடுகளில்.. முகமெல்லாம் விளக்கொளிபோல் பளீரென்று வெளிச்சம் தோன்றி மறைகிறது.

நான் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் இரண்டும் மூடிக்கொள்கின்றன... சுவாசம் அடங்கிப் போகிறது..

பிறந்து சரியாய் பத்தாம் நாள், இந்த உலகை விட்டே போய்விட்டாள் என் மகள்..

அந்தப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்..."

நிச்சயம் குழந்தை அன்னை மேரி மற்றும் அவர் கையில் குழந்தை சேசுவைத்தான் பார்த்திருப்பாள். பிறந்த பத்தே நாளில் இறந்த அந்தக் குட்டிபெண் அப்போது இருந்தது கத்தோலிக்கர்கள் கூறுவது போன்று "State of Grace"-ல் தான். பாவ மன்னிப்பு எல்லாம் தேவையில்லை அச்சிறு பூவுக்கு.

எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய நாவல் கனவுத் தொழிற்சாலையில் திரைக்கவிஞன் அருமைராஜனின் குழந்தை மகன் இறந்தது மற்றும் அவன் சவ அடக்கத்தைப் பற்றி கவித்துவமாக எழுதியிருப்பார். அவருடைய இறந்த குட்டித் தங்கையை பற்றித்தான் இதை எழுதும்போது தான் நினைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். படித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் நீங்கள் ஒன்றும் மிஸ் செய்யவில்லை, ஏனெனில் நீங்கள் இங்கு எழுதிய கவித்துவமான எழுத்துக்கள் ரேஞ்சுக்கு அவர் எழுதியது இல்லை என்றே கூறுவேன்.

உங்களுக்கு இரு குழந்தைகள் என்று தெரியும். முதலில் அந்தப் பாப்பாவைப் பற்றி எழுதியபோது அவள்தான் உங்கள் இரண்டாம் மகள் என்ற எண்ணத்தில் இருந்ததால் நீங்கள் எழுதியது எனக்கு தாங்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

அவருடைய இறந்த குட்டித் தங்கையை பற்றித்தான் இதை எழுதும்போது தான் நினைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். படித்திருக்கிறீர்களா? //

படித்திருக்கிறேன். சுஜாதா மென்மையான உணர்வுகளை எழுதுவதில் வல்லவர் அல்லவே. அவருடைய கதைகள் பெரும்பாலும் matter of factஆக எழுதப்பட்டிருக்கும். நம்முடைய ஹிந்து பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் போல..

tbr.joseph said...

நிச்சயம் குழந்தை அன்னை மேரி மற்றும் அவர் கையில் குழந்தை சேசுவைத்தான் பார்த்திருப்பாள். பிறந்த பத்தே நாளில் இறந்த அந்தக் குட்டிபெண் அப்போது இருந்தது கத்தோலிக்கர்கள் கூறுவது போன்று "State of Grace"-ல் தான். பாவ மன்னிப்பு எல்லாம் தேவையில்லை அச்சிறு பூவுக்கு.//

அப்படித்தான் நானும் அப்போது நினைத்தேன் சார். அதனால்தான் அக்காட்சி என்னுடைய மனதில் அப்படியே பதிந்திருந்தது.

sivagnanamji(#16342789) said...

please dont stop this episode with the death of your little angel
pls finish it some interesting anecdotes

tbr.joseph said...

வாங்க ஜி!

please dont stop this episode //

You mean my Thanjavur episode?

Let me see.

G.Ragavan said...

முருகா!!!!!!!!! இதென்ன நிகழ்வு! காரணத்தை இறைவனே அறிவான். வருந்த வேண்டாம் சார். அன்று நடந்தது அன்றோடு போகட்டும். இன்று நடப்பது இனிதே நடக்கட்டும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

உங்களைப் போன்ற பல நண்பர்கள் அன்று ஆறுதல்தான் என்னை அத்துயரத்திலிருந்து மீட்டது..

நன்றி ராகவன்.

ஜோ / Joe said...

என்ன சார்,
இப்படி அழ வச்சுட்டீங்க!

tbr.joseph said...

வாங்க ஜோ,

நல்லதையும் கெட்டதையும் பகிர்ந்துக்கறதுக்குத்தானே இந்த தொடரே..

ஆனாலும் வருத்தம்தான் நம்ம எல்லோரையும் ரொம்பவும் பாதிக்குது இல்லையா?

arunagiri said...

"அடுத்த நொடி சந்தோஷத்துடன் ஒரு அழகிய புன்னகை அவளுடைய உதடுகளில்.. முகமெல்லாம் விளக்கொளிபோல் பளீரென்று வெளிச்சம் தோன்றி மறைகிறது.
நான் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் இரண்டும் மூடிக்கொள்கின்றன... சுவாசம் அடங்கிப் போகிறது.."

என்னை மிகவும் உலுக்கிய பதிவு இது.
இதைப்படித்து விட்டு மேலே படிக்காமல் வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டு சில நேரம் அமர்ந்திருந்தேன். Experimental science தாண்டி எத்தனை விஷயங்கள் Experiential தளத்தில் உள்ளன! எனது வாழ்க்கையின் பல நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன.

"சிங்கம் வந்து பாப்பாவக் கேக்குதுப்பா" என்று மூத்த மகள் சொன்னது, "முருங்கை மரத்தில் முனி இருக்கிறதுங்க" என பணிப்பெண் சொன்னது, பிறகு இந்த சோக நிகழ்வு- இவையெல்லாம் பலவித திசைகளில் சிந்தனைகளைத் தூண்டிவிட்டு விட்டன.

உணர்ந்தறிதல் என்ற தளத்தில் இருக்கும் பலருக்கு இந்த "ஏழாம்" அறிவு (இஎஸ்பி?) அதிகம்- அதுவும் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு "மனசில தோணிச்சு" என்று சொல்கிறோமே, அது போன்ற பகுத்தறிவு தாண்டிய அறிவு மிகக்கூர்மை என்பார்கள். இன்றைய அறிவு சார் உலகில் மனம் சார்ந்த intelligence எள்ளப்பட்டாலும் இந்த மன அறிவை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அளவில் உணர்கிறோம், உபயோகப்படுத்துகிறோம் என்பதே உண்மை.

இன்னொரு எண்ணமும் cross ஆனது. அவரவர்களுக்கு அமானுஷ்யம் அவரவர் நம்பிக்கையாய்க் காட்சி அளிக்கிறது என்று தோன்றியது. வேலைக்காரிக்கு முனியாய்த் தெரிந்த அதே அமானுஷ்யம்தான் உங்கள் மகளுக்கு சிங்கமாய்த் தெரிந்ததோ? இயேசு பிரானுக்கு "யூத சிங்கம்" என்றொரு பெயர் உண்டுதானே.
அந்தப் பிஞ்சு ஆன்மாவின் கணக்கில் எஞ்சி இருந்த சில நாட்களைக் கழித்துப் பிறவியில்லாப் பெருவாழ்வில் இறையொடு இணைய உங்கள் வீடு தெரிவு செய்யப்பட்டதோ?

சில சமயங்களில் பதில்கள் அல்ல; கேள்விகளே முக்கியம் எனத் தோன்றுகிறது. புரிந்தவைகளை விட புதிர்களே இறையையும் நம் வாழ்வையும் இணைக்கும் இழைகளாய் இருக்கின்றன.

Bibin Chandra said...

Its very shocking. Im very sorry for that little baby.
May she join with her real world i.e. very near to God.

Im reading your "Thirumbiparkiren" form first for pasr four days. Its really good. enjoyable. But this post upsets me.
-bibin