31 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 109

எனக்கு அவருடைய வேண்டுகோள் பிடிக்கவில்லை என்பதை என்னுடைய முகத்தைப் பார்த்தே அவர் தெரிந்துக்கொண்டார் என்று நினைக்கிறேன். ‘என்ன சார் நீங்க, எப்பவும் முரண்டு பிடிக்கற இவரே ஒத்துக்கிட்டார். நீங்க ஏதும் சொல்லி மறுக்கா இவரும் பெறண்டுரப் போறார் சார்.’ என்றார்.

நான் அவருக்கு பதிலொன்றும் கூறாமல் என் நண்பரைப் பார்த்தேன். அவரிடம், ‘எப்படி சார் நீங்களும் இந்த மாதிரியான முட்டாள்தனமான ஐடியாவுக்கு ஒத்துக்கறீங்க? வெறும் சர்டிஃபிக்கேட் கொடுத்துட்டா முடிஞ்சி போச்சா? இவர் சொல்றதப் பார்த்தா குறைஞ்ச பட்சம் ரெண்டு லட்சமாவது நஷ்ட ஈடு கேட்பார் போலத் தெரியுது. நீங்க குடுக்கப்போற சர்டிஃபிகேட்ட நம்பி பாலிசிய புதுப்பிச்சிருவாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?’ என்றேன் ஆங்கிலத்தில்.

நாங்கள் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொள்வதை விரும்பாத வாடிக்கையாளர், ‘சார் நீங்க பாட்டுக்கு இங்க்லீஷ்ல பேசிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? என் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லுங்க.’ என்றார் சற்றே கோபத்துடன்.

என்னுடைய நண்பர் நான் முற்றிலும் எதிர்பார்க்காத விதமாக, ‘இங்க பாருங்க ----------------. நான் நீங்க கேக்கறா மாதிரி சர்டிஃபிகேட் குடுக்கறதுக்கு தயாரா இருக்கேன். ஆனா இனிமே மேனேசரா இருக்கப்போறது இவருதான். இவருக்கு இந்த விஷயம் பிடிக்காம இருக்கறபோது என்னை என்ன செய்ய சொல்றீக? நீங்களாச்சி இவராச்சி. ஏதாச்சும் பேசி முடிவுக்கு வாங்க.’ என்றவாறு அறையைவிட்டு வெளியேற முயற்சி செய்தார்.

என்ன நெஞ்சழுத்தம்யா உனக்கு என்று நினைத்தேன். செய்த தவற்றை மறைக்க வங்கி நியதிகளுக்கு முற்றிலும் ஒத்துவராத ஒரு காரியத்தை தான் செய்வதற்கு தயாராக இருப்பது போலவும் நான் அதற்கு குறுக்கே நிற்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயல்பவரை என்ன செய்தாலும் தகும் என்ற எண்ணத்துடன் வாடிக்கையாளரைப் பார்த்தேன். ‘அய்யா, நீங்க ஒரு புகார் எழுதி கொடுங்க. என்னால ஆனத செய்யறேன். ஆனா இப்ப நீங்க கேக்கறத என்னால மட்டுமில்ல இவராலகூட செய்யமுடியாது.’

அறையை விட்டு வெளியேறுவதைப் போல் பாவனை செய்த என்னுடைய நண்பர் நான் கூறியதைக் கேட்டதும் திரும்பி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். தான் சாமர்த்தியமாக வளைக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்திருப்பார், இனியாவது அறிவுபூர்வமாக சிந்திப்பார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் நேரெதிராக, ‘உங்க மேனேசர் சொன்னா மாதிரியே புகார் எளுதிக் கொடுத்துட்டு போம்யா.. எனக்கென்ன? இவரு பாட்டுக்கு உம்ம புகார வாங்கி மேல அனுப்பிட்டு அவர் சோலிய பார்ப்பாரு.. அவஸ்த படப்போறது நீர்தானய்யா? என்ன சொல்றீரு? புகார எளுதிக் கொடுத்துட்டு போறீரா?’ என்றார் கேலியுடன்.

வாடிக்கையாளருடைய முகம் போன போக்கிலிருந்தே அவருடைய கோபம் முழுவதும் என்மேல் திரும்பியிருக்கிறது என்பதை நான் புரிந்துக்கொண்டேன். ஆனாலும் என்னுடைய நண்பருடைய விபரீத விளையாட்டில் அவரே சிக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நான் உணர்ந்திருந்ததால் அவரிடம் ஆங்கிலத்தில், ‘சார், நீங்க தேவையில்லாம இவருக்கும் எனக்கும் இடையில பிரச்சினைய உண்டுபண்ண நினைக்கறீங்கன்னு நினைக்கறேன். அதனால இப்பவே இவர் முன்னாலயே நம்ம ஜோனல் மேனேஜருக்கு ஃபோன் பண்ணி இந்த விஷயத்த சொல்லி அவர்கிட்டவே இதுக்கு என்ன சொலுஷன் என்னன்னு கேட்ருவோம். என்ன சொல்றீங்க?’ என்றேன்.

என்னுடைய யோசனையைக் கேட்டதுமே அவருடைய முகம் வெளிறிப்போனது. அவசர அவசரமாக, ‘ப்ளீஸ் ஜோசப்.. அதுமட்டும் வேணாம். நான் சும்மாத்தான் இவருடைய யோசனைக்கு ஒத்துக்கறா மாதிரி நடிச்சேன். குடுக்கறேன்னு சொன்னேனே தவிர நான் இருக்கற ஒரு வாரம் வரைக்கும் இன்னைக்கி நாளைக்கின்னு இழுத்தடிச்சிட்டு போயிருவேன். அப்புறம் எனக்கொன்னும் தெரியாதுன்னு நீங்களும் தப்பிச்சிக்கலாம்.’ என்றார் ஆங்கிலத்தில்.

என்னுடைய நண்பர் மேல் நான் அதுவரை வைத்திருந்த நம்பிக்கை, மதிப்பு எல்லாம் அவருடைய இந்த பேச்சைக் கேட்டதுமே போய்விட்டது. இப்படி பேசுகிற மனிதர் கிளையில் இன்னும் என்னென்ன குளறுபடிகளை செய்திருப்பாரோ என்று அஞ்சினேன்.

எங்களுடைய ஆங்கில சம்பாஷனை வாடிக்கையாளருக்கு புரிந்ததோ என்னவோ அவருடைய கோபம் முழுவதும் என்மேல்தான் திரும்பியது. ‘சார் நீங்க மேனேசரா வரீங்கன்னு உங்க மாமனார் சொன்னதும். சரி நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரு மேனேசரா வந்தா நல்லதுன்னு நானும் சந்தோஷப்பட்டு எங்க ஆளுங்கக்கிட்ட எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டோம். ஆனா நா நெனச்சதுக்கு நேர் மாறா ஒரு தொட நடுங்கியா இருப்பீங்க போலருக்கு. நீங்க இந்த ஊர்ல ஒப்பேறமாட்டீங்க சார். நாங்க ஒளைச்சி சம்பாதிச்சி சாப்பிடற ஆளுங்க. நாய் மாதிரி ஒளைப்போம் ராசா மாதிரி உடுத்துவோம். எங்கள பார்த்து தப்பா எடப் போட்றாதீங்க, சொல்லிட்டேன். நா நாளைக்கு காலைல வருவேன். நா சொன்னா மாதிரி ஒரு சர்ட்டிஃபிகேட் கொடுக்கலைன்னா எங்க சங்க ஆளுங்களோட வந்து உங்க பேங்க் முன்னால போராட்டம் பண்ணுவோம். அப்புறம் வருத்தப்பட்டுக்காதீங்க, சொல்லிட்டன்.’ என்றவர் என்னுடைய நண்பரைப் பார்த்து, ‘சார், இவர்கிட்ட எனக்கு உங்க பேங்க்ல எவ்வளவு கணக்கு வழக்கு இருக்கு, நா எத்தன பேர சிபாரிசு பண்ணி கொண்டுவந்திருக்கேன்னு எடுத்து சொல்லி விஷயத்த நாளைக்குள்ள முடிச்சிருங்க. இல்லன்னா நீங்களும் ஊர் போய் சேர்ந்துக்க மாட்டீங்க.’ என்றவாறு வெளியேறி ஹாலில் நின்றுக்கொண்டிருந்த மற்ற சில வாடிக்கையாளர்களிடம், ‘வேய் புதுசா வந்திருக்கற மானேசரு சரியான வெளக்கெண்ணெய்.. உங்க கணக்கையெல்லாம் வேற எங்கயாச்சும் கொண்டு போயிருங்க. சொல்லிட்டன்.’ என்ற இரைந்து கூறிவிட்டு வெளியேறினார்.

‘சே.. எந்த நேரத்துலடா இந்த ஊர்ல கால் எடுத்து வச்சோம்.’ என்று நொந்துபோய் என்னுடைய நண்பரைப் பார்த்தேன். அவரோ ஒரு விஷமப் புன்னகையுடன். ‘என்ன ஜோசப். இந்த ஊரோட லட்சணம் இப்பவாவது புரிஞ்சிதா? நானும் நம்ம --------------ரும் (முந்தைய மேலாளர்) இந்த ஊர்ல குப்பையக் கொட்றதுக்கு என்ன பாடுபட்டிருப்போம்னு இப்பவாவது புரிஞ்சிக்குங்க.’ என்று எகத்தாளமாக கூற நான் இனியும் வாக்குவாதத்தில் இறங்க விரும்பாமல் என் எதிரில் இருந்த கடன் பத்திரங்கள் அடங்கிய கோப்பை சரிபார்க்க ரம்பித்தேன்.

ஆக, தேவையில்லாத ஒரு பிரச்சினையுடன் என்னுடைய தூத்துக்குடி வாசம் ஆரம்பித்தது.

அன்று மாலைவரை கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதிலும் என்னுடைய நண்பர் அளித்திருந்த கடன் கணக்குகளுக்கென ஈடாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், சொத்து பத்திரங்களை ஒவ்வொன்றாக சரிபார்ப்பதிலும் நேரம் போனதே தெரியாமல் போனது.

நான் அன்று நாள் முழுவதும் சரிபார்த்த கணக்குகளில் ஒரு சிலவற்றைத் தவிர எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கவே என்னுடைய பொறுமையை இழக்க ஆரம்பித்தேன். நான் லாக்கர் அறையிலிருந்து சரிபார்ப்பதற்காக எடுத்த அடகு வைத்த பொருட்களை திரும்பி வைத்தால்தான் என்னுடைய காசாளர் வீடு திரும்ப முடியும் என்பதால் அவர் மாலை ஏழு மணியானதும், ‘சார் நான் மூணாம் மைல்ல குடியிருக்கேன். இப்பப் போனாத்தான் சரியாயிருக்கும்.’ என்று வந்து நின்றார்.

இதற்கிடையில், நான் ஒவ்வொரு கணக்கை சரிபார்த்து முடித்ததும் அவற்றில் நான் கண்ட குளறுபடிகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொள்வதைப் பார்த்த என்னுடைய நண்பர் பொறுமையிழந்துபோய், ‘என்ன ஜோசஃப், நீங்க நம்ம இன்ஸ்பெக்ஷன் ஆளுங்கள விட மோசம் போலருக்கே. இப்படி ஒவ்வொன்னையும் பார்த்துக்கிட்டிருந்தீங்கன்னா நீங்க சார்ஜ் எடுக்கறதுக்கு ஒரு மாசம் ஆயிரும். நீங்க ஒன்னு பண்ணுங்க. என்ன நாளைக்கே ரிலீவ் பண்ணிருங்க. நா வேணும்னா நம்ம ஜோனல் மேனேஜர்கிட்ட சொல்லிக்கறேன்.’ என்றார் எரிச்சலுடன்.

அவர் வேண்டுமென்றே எங்களுடைய அறைக்கு வெளியே இருந்த தலைமைக் குமாஸ்தாவுக்கும். காசாளருக்கும் கேட்கும்படி குரலையுயர்த்தி பேசுவதை கவனித்த நான் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாமல் எழுந்துக்கொண்டேன். ‘சார், நான் சார்ஜ் எடுத்து முடிக்கற வரைக்கும் நீங்க என்னோட இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை. முக்கியமான சில டெப்பாசிட்டர்சையும், லோன் பார்ட்டீசையும் மட்டும் நாளைக்கும், அதுக்கடுத்த நாளைக்கும் அறிமுகப்படுத்திட்டு நீங்க போயிருங்க. இந்த செக்யூரிட்டிசை செக் பண்றதையெல்லாம் நானே பண்ணிக்கறேன். உங்க முன்னால நான் செக் பண்ணி எனக்கு தப்புன்னு தோன்றத குறிச்சி வச்சிக்கறத நீங்க வேற விதமா எடுத்துக்கறீங்க. எதுக்கு இந்த வம்பு? அதனால நீங்க போனதுக்கப்புறம் செக் பண்ணிக்கறேன்.’ என்றேன்.

அவர் சந்தேகத்துடன் என்னை பார்த்தார். ‘என்ன ஜோசப், அப்போ என்னை ரிலீவ் பண்ணும்போது உங்க ரிலீவிங் மேனேஜர் சர்ட்டிஃபிகேட்டை குடுக்கற ஐடியா இல்லையா?’

அவருடைய உள் நோக்கத்தைப் புரிந்துக்கொண்ட நான், ‘சேச்சே. அதெல்லாம் குடுத்துருவேன். ‘என்ன, சப்ஜெக்ட் டு டீடெய்ல்ட் வெரிஃபிகேஷன்னு போட்டு குடுப்பேன்.’ என்றேன்.

அவருக்கு அதில் திருப்தியில்லையென்றாலும் வேறு வழி தெரியாமல் ஒத்துக்கொண்டார். நான் அவரிடமும் அலுவலகத்திலிருந்த பணியாளர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு கீழே நிறுத்திவைத்திருந்த என்னுடைய இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்தேன்.

நான் கடைசிப் படியில் இறங்கும்போது கட்டிடத்தின் கீழ் பகுதியில் குடியிருந்தவர் என்னுடைய வாகனத்திற்கருகில் ஒரு சாய்வு நாற்காலியில் இருக்கையின் கரங்களின் மீது காலைநீட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு புன்னகையுடன், ‘குட் ஈவ்னிங் சார்.’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

அவர் உடனே எழுந்து புன்னகையுடன் என்னுடைய கரங்களைப் பற்றிக்கொண்டார். ‘கேள்விப்பட்டேன் சார். உங்க ஃப்ரெண்ட் சொல்லியிருந்தார். முதல் நாளே மேலே வந்து பாக்கவேணாம்னு நினைச்சிக்கிட்டு வரலை. நானும் ஒரு பேங்க் மானேஜரா இருந்து ரிசைன் பண்ணவந்தான்.’ என்றார்.

நான் வியப்புடன், ‘அப்படியா சார்? எந்த பேங்க்ல இருந்தீங்க?’ என்றேன்.

அவர் ‘பேங்க் ஆஃப் மதுராவில மண்டபம் பிராஞ்சுல இருந்தேன். நாந்தான் மரைக்கயார் ஃபேமிலில கடைசி பேரன். இந்த கீழ் போர்ஷன் முழுசும் என்னோடது. மேலருக்கறது என் அக்காவுக்கு பாத்தியமானது. அவங்களும் அத்தானும் திருவனந்தபுரத்துல இருக்காங்க. நீங்க இங்க வந்ததும் ஒருநா சாவகாசமா எல்லாத்தையும் சொல்றேன்.’ என்றார்.

நானும் சரி என்று கூறிவிட்டு வாகனத்தை உதைத்து ஸ்டார்ட் செய்தேன். அவர் உடனே ரகசியக் குரலில், ‘சார் நீங்க சார்ஜ் எடுக்கும்போது எல்லாத்தையும் ஒழுங்கா பார்த்துக்குங்க. உங்க ஃப்ரெண்ட பத்தி நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவர் ஒரு டிசிப்ளின் இல்லாத ஆளுன்னு நினைக்கிறேன். தப்பானவர் இல்லை. ஆனா எல்லாரையும் சட்டுன்னு நம்பிருவார்னு நினைக்கிறேன்.’ என்றார்.

நான், ‘சரி சார். பார்த்துக்கறேன். உங்க இன்ஃபர்மேஷனுக்கு நன்றி’ என்று சுருக்கமாகக் கூறிவிட்டு புறப்பட்டேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் என்னுடைய மாமனார் வீட்டை அடைந்து வாகனத்தை ஏற்றி நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததும் ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்தவரைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.

அவர் யாரென்று நினைக்கிறீர்கள்? அன்று காலையில் என்னுடைய கிளைக்கு வந்து என்னையே பகிரங்கமாக குறை கூறிவிட்டு சென்ற வாடிக்கையாளர்!

தொடரும்..

30 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 108

நான் இதேதடா புது வம்பு என்று நினைத்தேன். ‘நம்ம மருமகன்தான் மேனேசரா வராறுன்னு’ ஊர் முழுக்க விளம்பரம் செஞ்சிருப்பாரோ என்று நினைப்புடன் அவருக்கு எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அவரையே பார்த்தேன்.

சொந்த ஊரில் பணியாற்றுவது ஒரு வகையில் சந்தோஷம் என்றால் வேறொரு வகையில் அதுவே ஒரு பிரச்சினையாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. அதுவும் பணத்தையே மூலதனமாக, கருப்பொருளாக(raw material) வைத்து நடத்தப்படும் வணிகம் வங்கி வணிகத்தில் கேட்க வேண்டாம்.

சேமிப்பு நிதியைத் திரட்டுவதும் திரட்டிய நிதியை கடனாக கொடுப்பதுமே ஒரு வங்கி மேலாளரின் தலையாயப் பணி. என்னைப் போன்ற மேலாளர்களுள் பெரும்பாலோனோர் தங்களுடைய சொந்த ஊரில் பணியாற்ற விரும்பினாலும்  தங்களுடைய மனைவியுடைய ஊரில் பணியாற்ற சற்று தயக்கம் காட்டுவதுண்டு.

ஏன்?

தங்களுடைய கிளைக்கு வேண்டிய நிதி திரட்டும் நோக்கத்துடன் தங்களுடைய மனைவியுடைய உறவினரை அண்டிச் செல்ல ஒருவித ஈகோ இடம் கொடுக்காது. ‘என்னங்க நீங்க, பாக்கறவங்கக் கிட்டல்லாம் நீங்க எங்க பேங்க்ல டெப்பாசிட் போடுங்க, எங்க பேங்க்ல டெப்பாசிட் போடுங்கன்னு கேட்டு மானத்த வாங்கறீங்க. எங்க வீட்டு விசேஷத்துக்கு உங்கள கூட்டிக்கிட்டு வர்றதுக்கே பயமாயிருக்கு. உங்கள பார்த்தாலே மிரண்டு ஓடறாங்க பாருங்க. உங்க பேங்க் வேலையெல்லாம் வெளியாளுங்கக் கிட்ட வச்சிக்குங்க. நம்ம வீட்டாளுங்கக் கிட்ட வேணாம்.’ என்று என் மனைவியே தடுத்து விடுவார்.

ஆனால் அதே கடனுதவி வேண்டுமென்றால், ‘ஏங்க, அவரு எங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவருங்க. நீங்க அவர நம்புறீங்களோ இல்லையே எங்கப்பாவ நம்பி தாராளமா லோன் குடுக்கலாம். நம்ம வீட்டாளு ஒருத்தர் மேனேசரா இருக்காரே, நமக்கு சல்லிசா லோன் குடுப்பாருன்னுதானே கேக்கறாங்க? எல்லார்கிட்ட பேசற ரூலெல்லாம் பேசாம இவருக்கு குடுங்க.’ என்பார் என் மனைவி!

நிலமை இப்படியிருக்க, ‘டிபிஆர். நீங்க உங்க ஒய்ஃப் ஊர்லல்லே இருக்கீங்க. மத்த ஊர்ல நீங்க பண்ணதவிட ரெண்டு மடங்கு இங்க பண்ணனும்.’ என்று வங்கி மேலதிகாரிகளும் வர்த்தக பட்ஜெட்டை உயர்த்தி வைத்துவிடுவார்கள்.

இதில் வேறொரு குடும்பப் பிரச்சினையும் இருக்கிறது.

நம்முடைய தகப்பன் வழி, தாய் வழி பந்துக்களானால் நாம் விருப்பப்பட்டால், கடன் பெறுவோருக்கு எல்லா தகுதியும் இருந்தால் கொடுக்கலாம். இல்லையென்றால் முடியாது என்று மறுத்துவிடலாம். அவர் அதிகம் போனால் நம்முடைய தாய்க்கோ, தந்தைக்கோ உறவினராக இருப்பார். சிறு வயது முதலே நம்மை நன்கு தெரிந்தவர்களாயிருப்பதால் நாம் இல்லை என்று மறுத்துக்கூறினாலும் அதற்காக வருத்தப்பட்டு கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.

அதுவே மனைவி குடும்பத்தார் என்றால், ‘என்னவே உங்க மருமகன் ரொம்பத்தான் பண்ணிக்கிறார்.. நீரு சொன்னீருன்னுதானவே அவர்கிட்ட போனேன். ஏதோ மூனாம் மனுசங்கக்கிட்ட கேக்கறா மாதிரி செக்யூரிட்டிய தாரும், காரண்டிக்கு வேற ஒருத்தர கொண்டாரும்னு சொல்றார்?’ என்று நம் மனைவியின் உறவினரிடமே போய் முறையிடுவார்கள்.

சென்னை நான் பிறந்து வளர்ந்த ஊர். என்னுடைய தாய் மற்றும் தந்தையுடைய எல்லா உறவினர்களும் சென்னையில்தான். ஆனால் என்னுடைய குணத்தை நன்கு அறிந்திருந்த என்னுடைய பெற்றோர், சகோதரர்கள், தாய் மாமன்மார், சித்தி, சித்தப்பா யாருமே அவர்களுக்கோ அல்லது அவர்களுடைய நண்பர், உறவினருக்கோ இதுவரை நான் மேலாளராயிருந்த எந்த கிளையையும் அணுகியதில்லை.

ஆனால் தூத்துக்குடியில் நிலைமை சற்று பிரச்சினையாகத்தானிருந்தது. ஒரு தந்தைக்கு தன்னுடைய மகன் வங்கி மேலாளராயிருப்பது பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு மாமனாருக்கு அப்படியில்லை. அதுவும் தூத்துக்குடி போன்ற ஒரு சிறு நகரத்தில் அது ஒரு பெரிய மதிப்புக்குரிய விஷயம் போலிருக்கிறது. அதனால்தான் தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடத்தில் நான் அதே ஊரில் வங்கி மேலாளராக வருவதை பறைசாற்றியிருந்தார்.

அது ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தாலும் போகப்போக சரியாகிவிட்டது.

ஆகவேதான் அந்த படகுக்காரர் என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியை கேட்டதும் எனக்கு எரிச்சலாக வந்தது. இருப்பினும் அதை மறைத்துக்கொண்டு, ‘ஆமாங்க.’ என்றேன்.

அவர் உடனே சந்தோஷமாக, ‘பிறவென்ன சார். என்னைப் பத்தி உங்க மாமனார்கிட்ட வேணும்னாலும் கேட்டுக்குங்க. என் பேர்லயே அஞ்சாறு மெக்கனைஸ்ட் போட் இருக்கு.. அதுவுமில்லாம ஒத்திக்கு எடுத்து ஒரு நாலு போட்டு ஓட்டறேன். எங்கிட்ட மட்டும் சுமார் நூறு பயலுவ வேலைக்கி இருக்கானுக. ஒங்க பேங்க்ல மட்டுமில்ல சார் இங்கருக்கற நிறைய பேங்க்ல எனக்கு வரவு செலவு இருக்கு. எந்த பேங்கல வேணும்னாலும் கேட்டுக்கிறுங்க.. -----------------னா (அவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) எல்லா மேனேசர்களுமே நல்லத்தான் சொல்வாங்க.’ என்று கூறிவிட்டு என்னுடைய மேலாளர் நண்பரைப் பார்த்து நக்கலாக, ‘இவரத்தவிர.’ என்றார்.

நான் சங்கடத்துடன் என் நண்பரைப் பார்த்தேன். அவர் கோபத்துடன், ‘ஏன்வே சொல்ல மாட்டீரு. நீரு வந்து நின்னப்பல்லாம் நான் லோன் குடுத்தேன்லே. என்னைய இல்லே சொல்லணும்?’ என்றார்.

நான் சாதாரணமாக எந்த சூழ்நிலையிலும் என்னுடைய வாடிக்கையாளர்களிடத்தில் சரிக்கு சமமாக வாதாட விரும்பாதவன். வாடிக்கையாளருடைய தரப்பில் தவறு இருந்தாலும் முடிந்தவரை பொறுமையாய் பதிலளிப்பவன்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. எந்த ஒரு வாடிக்கையாளருமே தன்னைப் போன்ற இன்னொரு வாடிக்கையாளர் அவமானப்படுவதை விரும்பமாட்டார். நாம் ஒரு வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்யும் சமயத்தில் அலுவலகத்தில் இருக்கும் மற்ற வாடிக்கையாளர்கள் அதை கேட்க நேர்ந்தால் அடுத்த கணமே அவர்கள் வாய் வார்த்தையாக, ‘இந்த மேனசரு சரியான முசுடுய்யா. எதுக்கெடுத்தாலும் கோவப்படுறாரு’ என்று ஊர் முழுவதும் பறைசாற்றிவிடுவார்கள்.

வங்கி வர்த்தகமே மேலாளர்களும், கிளையில் பணிபுரியும் பணியாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்ற சேவையின் தரத்தின்மீதுதான் சார்ந்திருக்கிறது. அவர்களுடைய சேவையில் ஒரு சிறு பழுதிருந்தாலும் அது அக்கிளையின் வர்த்தகத்தையே பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகவேதான் அந்த வாடிக்கையாளருக்கு சரிசமமாக கோபப்பட்டு வாக்குவாதத்தில் இறங்கிய என்னுடைய மேலாளர் நண்பரை வியப்புடன் பார்த்தேன். உடனே ஆங்கிலத்தில், ‘இவரை ஒரு பத்து நிமிடம் வெளியே காத்திருக்க சொல்லுங்கள். நான் உங்களுடன் தனியாக பேச வேண்டும்.’ என்றேன்.

ஆனால் என்னுடைய நண்பர் என்னுடைய வேண்டுகோளின் பொருளைப் புரிந்துக்கொள்ளாமல், ‘நீங்க என்ன ஜோசப்? இந்த ஊராளுங்களே இப்படித்தான்.  பணிஞ்சி போனோம்னு வைங்க. தலைக்கு மேல ஏறி உக்காந்திருவாங்க. நீங்க பார்த்துக்கிட்டே இருங்க நான் இவர எப்படி டீல் பண்றேன்னு.’ என்று ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு வாடிக்கையாளரைப் பார்த்தார்.

அவரோ, ‘இவனுக என்ன இங்க்லீஷ்ல பேசிக்கிறானுங்க?’ என்பதுபோல் எங்கள் இருவரையும் பார்த்தார்.

நான், ‘ஐயா.. நீங்க கோபப்படாம இப்ப என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க.’ என்றேன்.

என்னுடைய நண்பர் கோபத்துடன் ஆங்கிலத்தில், ‘என்ன ஜோசப் நீங்க? இவனப்போயி ஐயான்னுக்கிட்டு.. நம்ம முன்னால ஒக்காரக் கூட தகுதியில்லாத மீன்பிடிக்கற பயலுக..’ என நானும் கோபத்துடன், ‘வார்த்தைய அனாவசியமா விடாதீங்க. வெளியிலருக்கற ஆங்கிலம் தெரிந்த வாடிக்கையாளருக்கு யாருக்காவது தெரியவந்தா வீண் பிரச்சினையாயிரும். கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.’ என்றேன்.

பிறகு, வாடிக்கையாளரிடம், ‘நீங்க சொல்லுங்க. இப்ப நாங்க என்ன பண்ணனும்?’ என்றேன்.

என் நண்பருக்கு என்னுடைய அறிவுரை  பிடிக்கவில்லையென்பது அவருடைய அடுத்த கேள்வி எனக்கு உணர்த்தியது.

‘சொல்லுவே. இப்ப அவர்தான் மேனேசரு. சொல்லும்.’ என்றார் வாடிக்கையாளரிடம்..

அவர் தயக்கத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார். ‘சார்.. இந்த பிரச்சினை இவரால வந்ததுதான்.’ என்றார் என் நண்பரை நோக்கி.

கோபத்துடன் இடைமறித்து பேச முயன்ற என் நண்பரை பொருட்படுத்தாமல், ‘அது முடிஞ்ச கதை. இப்ப என்ன பண்ணனும்? அத மட்டும் சொல்லுங்க.’ என்றேன்.

அவரும் கோபப்பட்டார். ‘அதெப்படி சார். இவர் மட்டும் இன்சூரன்ஸ் கம்பெனி அனுப்பன நோட்டீச என் வீட்டுக்கு அனுப்பியிருந்தா நா பாட்டுக்கு இன்சூரன்ஸ் பணத்த கட்டிட்டு போயிருப்பேன்லே.. இப்ப அதுலதான பிரச்சினையே இருக்கு?’

என்னுடைய நண்பர் நான் தடுப்பதற்குள் குறுக்கிட்டார். ‘நா அனுப்பலேன்னு எத வச்சி சொல்றீரு?’

அவரும் பதிலுக்கு சூடாக. ‘சரி சார். நீங்க அனுப்பினீங்கன்னு சொல்றீகல்லே. அதுக்கு உங்க பேங்க்ல ரெக்கார்ட் இருக்கும்லே. அத காட்டுங்க. நீங்க ஒரு இன்ஸ்டால்மெண்ட் கட்லனாவே நோட்டிஸ் அனுப்பற ஆளு. இத லெட்டர் ஏதும் வைக்காமயா அனுப்பியிருப்பீங்க? அத காட்டுங்க. என் தலையெளுத்துன்னு என்னாலவறத பாத்துக்கறேன்.’ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். ‘நீங்களே சொல்லுங்க சார். நான் சொல்றது சரிதானே?’

எனக்கும் அவர் கூறியது சரிதான் என்று தோன்றியது. என்னுடைய மேலாள நண்பர் விழித்ததைப் பார்த்தபோதுதான் எனக்கும் அவர்மேல் சந்தேகம் ஏற்பட்டது.

வாடிக்கையாளர் அவருக்கே உரிய பாணியில், ‘பாத்தீங்களா சார் இவர் பே முளி முளிக்கறத? இவர் அனுப்பவே இல்ல சார்.’ என்றார் கேலியுடன்.

நான் என் நண்பரைப் பார்த்தேன். அவர் மும்முரமாக தன்னுடைய மேசை இழுப்பைத் திறந்து எதையோ மும்முரமாக தேடுவதுபோல் இருந்தார்.

வாடிக்கையாளரோ இதுதான் சமயம் என்று அவருடைய வேண்டுக்கோளை வைத்தார். ‘சார்.. நீங்க நோட்டீச அனுப்பவேயில்லைன்னு தெளிவாயிருச்சி. இப்ப நா சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா.. இதுலருந்து விடுபட வாய்ப்பிருக்கு. நா இன்சூரன்ஸ் பண்ற ஏஜண்ட் நம்ம பையந்தான். அவன் கிட்ட யோசன கேட்டுட்டுத்தான் வந்திருக்கேன்.’

என்னுடைய நண்பர் எரிச்சலுடன், ‘நீர் பிரச்சின பண்றதுங்கற முடிவோடத்தான் வந்திருக்கீரு.. என்ன யோசனைய்யா அது? சொல்லுங்க கேப்போம்.’ என்றார்.

‘உங்க பேங்க்லருந்து பழைய டேட்டுல அதாவது அந்த இன்சூரன்ஸ் முடிஞ்ச டேட்டுக்கு ஒரு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு டிராஃப்ட் இன்சூரன்ஸ் கம்பெனி பேருக்கு குடுத்தா மாதிரி ஒரு சர்டிபிகேட் குடுக்கணும். மத்தத நா பாத்துக்கறேன்.’ என்றார் கூலாக..

நான் அவருடைய யோசனையிலிருந்த முட்டாள்தனத்தைவிட என்னுடைய நண்பர் இந்த பிரச்சினையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற திருப்தியுடன் ‘செஞ்சிட்டா போச்சி.’என்ற பதிலைக் கேட்டு  திகைத்துப் போய் அவரையே பார்த்தேன்..

தொடரும்

29 March 2006

திரும்பிப் பார்க்கிறே 107

தூத்துக்குடி கிளைக்கு வருவதற்கு முன்பு நான் மேலாளராகவிருந்த இரு கிளைகளுமே நான் புதிதாய் துவங்கிய கிளைகளாகும். ஆரம்ப முதலே நாமே தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களாதலால் அக்கிளைகளை நடத்திச் செல்வது மிக எளிதாக இருந்தது.

புதிய கிளையை திறப்பது ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கு ஒப்பாகும். கிளையைத் திறப்பதற்கு முன்னர் பல சிரமங்களை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டியிருக்கும்.

ஒரு புது கிளையைத் திறப்பது திருமணம் செய்துக்கொள்வதுபோலென்றால் பழைய கிளையொன்றை பொறுப்பேற்றுக்கொள்வதென்பது ஏற்கனவே மணம் முடித்து குழந்தைகளுடன் இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்வதற்குச் சமம் என்றால் மிகையாகாது.

நமக்கு முன்பு மேலாளராக இருந்தவர்கள் செய்த நன்மை, தின்மை எல்லாமே நம்மையும் பாதிக்கும். அவர்கள் நேர்மையுள்ளவர்களாக, ஒழுக்கம் (disciplined) உள்ளவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை. அதுமட்டுமல்ல, நல்ல திறமையுள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கை நரகம்தான்.

தூத்துக்குடி கிளை திறக்கப்பட்டு ஏழு வருடங்கள் நிறைவுபெற்றிருந்ததாலும் அங்கு ஏற்கனவே பல சிக்கல்கள் இருந்ததாலும் (இது முன்னாலயே எனக்கு தெரியாமப் போச்சே என்று பிற்பாடு என்னை நானே நொந்துக்கொண்டேன்) கிளையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள எனக்கு இரண்டு வாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

எனக்கு முன்பு மேலாளர்களாகவிருந்த இருவருமே என்னுடைய நெருங்கிய நண்பர்கள். என்னுடன் பல நிலைகளிலும் சேர்ந்து பணியாற்றியவர்கள். இருவருமே தென் மாவட்டங்களைச் சார்ந்தவர்கள். ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள். இக்குலத்தைச் சார்ந்தவர்கள்தான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வணிகத்திற்கு பேர்போனவர்கள். ஆனால் சற்றே ஒழுங்கீனமானவர்கள்.. அதாவது, வணிகத்தை நடத்திச் செல்வதில்..

அதைப் பிறகு பார்ப்போம்.

தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தமான தொழில் மீன் பிடிப்பு. நான் மேற்கூறிய குலத்தினரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த குலத்தினரும் தூத்துக்குடி மக்கள் தொகையில் ஏறத்தாழ சரிபாதி. இவ்விரு குலத்தினருக்கும் இடையில்தான் ஜன்மப் பகை என்று கூறியிருந்தேன். ஆயினும் வணிகம் என்று வந்துவிட்டால் இதை இரு குலத்தாருமே பொருட்படுத்த மாட்டார்கள்.

தூத்துக்குடியிலிருந்த வங்கி கிளை மேலாளர்கள் பெரும்பாலும் வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களாகத்தான் இருந்தனர். பல அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். அதில் சிலருக்கு தமிழே சரியாக பேச வராது. தமிழ் தெரிந்தவர்களுக்கே இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் பேசும் தமிழ் சரியாய் விளங்காது. இதில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மேலாளர்களின் நிலை என்னவாயிருக்கும்?

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்களும்தான் ஏறத்தாழ எல்லா வங்கிகளிலும் கடனுதவி பெற்றிருந்தார்கள். என்னுடைய வங்கியிலும் அதே நிலைதான்.

தூத்துக்குடியில் மீன்பிடித் தொழில் 'காத்துக்காலம்' எனப்படும் ஜூலை மாத நடுவாக்கில் துவங்கி அக்டோபர் மாதம் வரை கனஜோராக நடைபெறும். தூத்துக்குடிக் கடல் பகுதி இறால் சாகுபடிக்கும் மிகவும் பிரசித்தமானது. மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிங்க ரால் எனப்படும் ஒருவகை ராட்சத இறால்களை கொள்முதல் செய்ய கேரள மாநிலத்திலிருந்து வணிகர்கள் refrigerated வாகனங்களில் வந்து காத்து நிற்பார்கள்.

நடுக்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் டீசல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள படகுகளை லாஞ்ச் (Launch) மற்றவற்றை தோணிகள் என்று வகைப்படுத்தி வங்கிகள் கடன் வழங்குவது வழக்கமாயிருந்தது.

ஒரு லாஞ்ச் கட்டுமானத்திற்கென சுமார் ஐந்திலிருந்து ஆறு லட்சம்வரை கடன் வழங்குவதுண்டு. அவ்வாறு வங்கிகளிலிருந்து கடனுதவி பெற்று கட்டப்படும் லாஞ்சுகளை மரைன் காப்பீடு எனப்படும் திட்டத்தில் முழுமையாக காப்பீடு செய்ய வேண்டும் என்பது வங்கிகள் நிர்ணயிக்கும் விதிகளுள் ஒன்று.

கடலுக்குள் செல்லும் இத்த்கைய லாஞ்சுகள் விபத்துக்குள்ளாகும் விகிதம் சற்றே கூடுதல் என்பதால் காப்பீட்டு சந்தாவும் (Insurance premium) வருடத்திற்கு சுமார் ரூ.15000 த்திலிருந்து ரூ.25000 வரை இருந்தது. தூத்துக்குடியிலிருந்த பொது காப்பீட்டு கழகங்களின் (Genernal Insurance Corporations) மொத்த வர்த்தகத்தின் கணிசமான விழுக்காடு இத்தகைய காப்பீட்டு பத்திரங்களிலிருந்து கிடைக்கும் சந்தாதான் என்றால் மிகையாகாது. ஆனால் இத்தகைய நிறுவனங்கள் வருடா வருடம் வழங்கும் நஷ்ட ஈடும் கணிசமாக இருக்கும்.

காப்பீட்டு சந்தாவின் அளவு அதிகமிருந்ததாலும் ‘நம்ம படகுக்கு என்ன வரப்போவுது? எதுக்கு வம்பா இவனுகளுக்கு கொட்டி கொடுக்கறது?’ என்ற படகு உரிமையாளர்களின் மெத்தன போக்கினாலும் பெரும்பாலானோர் வங்கிகளின் நியதியை மீறி தங்களுடைய படகுகளை காப்பீடு செய்யாமல் இருந்துவிடுவார்கள். அதைக் கண்டும் காணாததுபோல் வங்கி மேலாளர்களும் இருந்துவிடுவதுண்டு.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இத்தகைய படகுகள் விபத்துக்குள்ளாகிவிட்டால் முதலில் வங்கியை நோக்கி ஓடிவருபவர்கள் அவற்றின் உரிமையாளர்களாகத்தான் இருப்பார்கள். வங்கி மேலாளர் முன்னெச்சரிக்கையாக காப்பீட்டு பத்திரத்தை புதுப்பிக்காமலிருந்துவிட்டால் தொலைந்தார். அடிக்கவே வந்துவிடுவார்கள். ‘என்னவே என்னத்த -------ங்கிக்கிட்டிருந்தீரு? இப்ப எம்படகு சாஞ்சி கிடக்குதே இதுக்கு யாருவே பொறுப்பு? என்ன பண்ணுவீரோ ஏது பண்ணுவீரோ எங்களுக்கு தெரியாது.. நாசமா போன படகு எளுந்திருச்சி நிக்கணும்னா இன்சூரன்ஸ் பணம் கைக்கு வந்தாவணும்.’ என்று முறைத்துக்கொண்டு நிற்பார்கள்..

அத்தகைய ஒரு சிக்கலைத்தான் நான் பணியில் சேர்ந்த முதல்நாளே சந்திக்க நேர்ந்தது.

என்னுடைய அப்போதைய மேலாளர் நான் கிளையின் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் வரை அல்லது குறைந்தபட்சம் ஒருவார காலமாவது இருந்துவிட்டுச் செல்லவேண்டும் என்ற நியதி இருந்ததால் அவர் அலுவலகத்தையொட்டியிருந்த குடியிருப்பிலேயே இருந்தார். அவர் வீட்டைக் காலி செய்யும்வரை நான் ஏதாவது விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்றாலும் என்னுடைய மாமனார் வீடு அருகிலேயே இருந்ததால் அங்கு சென்று தங்கினேன்.

நான் பணியில் சேர்ந்த அன்று சுமார் பதினோரு மணிக்கு பதற்றத்துடன் ஒருவர் நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த மேலாளர் அறைக்குள் நுழைந்தார்.

‘சார் நம்ம லாஞ்சோட பாலிசி பேப்பர்ச கொஞ்சம் எடுங்க சார்.. நேத்து ராத்திரி இந்த பயலுக திரும்பி வராக்கல மணல் மேட்டு மேல மோதிட்டானுக.. போட்டு முன் பக்கம் ஒடைஞ்சி பெருத்த சேதாரமாயிருச்சி சார்..’

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என் நண்பரைப் பார்க்க அவர் படு மெத்தனமாக, ‘என்னவே வெளையாடுறீரா? உம்ம லோனத்தான் க்ளோஸ் பண்ணி ஆறுமாசமாவுதுல்லே.. பிறவு நா எதுக்கு பாலிசிய ரினியூ பண்றது?’ என்றார்.

அவருடைய முகம் இதைக் கேட்டதும் பேயறைந்தது போல ஆக மேலே பேச முடியாமல் இருக்கையில் சரிந்து அமர்ந்து எங்கள் இருவரையும் மாறி, மாறி முரைத்தார்.

என்னுடைய வங்கியிலிருந்து கடந்த ஆறு ண்டுகளில் நான்கு முறை கடனுதவி பெற்று முழுவதுமாக திருப்பி செலுத்திய அவருடயை படகு நான் சேர்ந்த தினத்திற்கு முந்தைய தின இரவு விபத்துக்குள்ளாகியிருந்தது. முழுவதுமாக நஷ்டஈடு (Total loss claim) கோரப்படும் ரகத்தைச்சார்ந்த விபத்து.

ஆனால் குறிப்பிட்ட படகுக்கென வங்கியிலிருந்து பெற்றிருந்த கடனை முழுவதுமாக அவர் அடைத்திருந்ததால் படகுக்கான மரைன் பாலிசியை வங்கி மேலாளர் புதுப்பிக்கவில்லை.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல்.

முந்தைய பாலிசியை வங்கிதான் புதுப்பித்திருக்கிறது. அதற்குப்பிறகுதான் வாடிக்கையாளர் கடனை முடித்திருக்கிறார். வங்கியின் நியதிப்படி கடனை அடைத்து முடித்தவுடன் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு 'சந்தாதாரர் கடைனை அடைத்துவிட்டார். ஆகவே காப்பீட்டு பத்திரத்தை அவர் பெயருக்கே மாற்றிவிட எந்தவித ஆட்சேபனையுமில்லை.. இனிவரும் புதுப்பிப்புகளும் சம்பந்தப்பட்ட காப்பீடுதாரரே செய்துக்கொள்வார்' என்று வங்கி மேலாளர் அறிவித்திருக்க வேண்டும்.

அப்படி அறிவித்திருந்தால் புதுப்பிக்க வேண்டிய நோட்டீஸ் காப்பீடு நிறுவனத்திலிருந்து நேரடியாக உரிமையாளருக்கே அனுப்பப்பட்டு விடும். ஆனால் என்னுடைய முந்தைய மேலாளர் அதை செய்யாமல் விட்டுவிட்டார்.

சரி, காப்பீடு நிறுவனத்திலிருந்து வந்த புதுப்பிப்பு நோட்டீசையாவது அது வந்தவுடனே உரிமையாளருக்கு அனுப்பியிருக்க வேண்டும். இங்கேதான் சிக்கலே. என்னுடைய மேலாளர் தான் உடனே உரிமையாளரின் விலாசத்துக்கு அனுப்பிவிட்டேன் என்றார். ஆனால் உரிமையாளரோ வரவேயில்லை என்று சாதித்தார்.

‘சார் சும்மா, சும்மா சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்காதீங்க.. நீங்க அனுப்பியிருந்தா வந்து சேர்ந்திருக்குமில்லே..’ என்று வாடிக்கையாளர் குரலை உயர்த்தி வாதாட ரம்பித்தார்.

என்னுடைய மேலாளர் அவருக்கும் மேலே குரலை உயர்த்தி, ‘வேய்.. பாரும்.. நா சும்மா இருக்கேன்னு நெனச்சுக்கிட்டு குரல ஒசத்தாதேயும்.. நீமரு செய்ய வேண்டிய சோலிய செஞ்சீராவே.. லோனு முடிஞ்சிருச்சிவே, லாஞ்சு புக்கு, இன்சூரன்சு எல்லாம் வாங்கிட்டு போயிரும்னு எத்தன தரம் போன் போட்டிருப்பேன். ஃபிஷ்ஷிங் ஹார்பர்ல பாத்தப்பல்லாம் உம்ம கிட்ட சொல்லலே.. அப்பல்லாம் இருக்கட்டும் சார் எங்ஙன போயிரப்போவுதுன்னு கெத்தா பேசினீரு. மறந்துட்டீரா? புது மேனேசர் வருவார்னு சொன்னேன்லே.. அவருதான் இவரு.. வேணும்னா இவர்கிட்ட பேசிக்கிரும்..’ என என்னை நோக்கி கை காட்ட அவர் அப்போதுதான் என்னை பார்த்தார்.

சட்டென்று கோபம் தணிந்து, ‘சார் நீங்க நம்ம --------------ஐயாவோட மருமகனாமே.. சரியாய்யா?’ என்றார்.

நான் இதேதடா புது வம்பு என்று நினைத்தேன். ‘நம்ம மருமகந்தான் மேனேசரா வராறுன்னு’ நம்முடைய மாமனார் ஊர் முழுக்க விளம்பரம் செஞ்சிருப்பார் போலிருக்கிறதே என்ற நினைப்புடன் அவருக்கு எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அவரையே பார்த்தேன்.தொடரும்..

28 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 106

தஞ்சையிலிருந்து இத்தகைய சந்தோஷமான, மனதுக்கு நிறைவு தரக்கூடிய அனுபவங்களுடன் உழைப்பாளர்களின் தினமான மே மாதம் ஒன்றாம் தேதியன்று அதிகாலையில் தஞ்சையிலிருந்து ஒரு வாடகைக் காரில் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டோம்.

என்னுடைய வீட்டு சாமான்கள், ஃபர்னிச்சர்கள் எங்களுக்கு பின்னால் ஒரு லாரியில் தொடர்ந்தன..

தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு நான்கு மணி நேரம். மதுரையிலிருந்து அருப்புக் கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு சுமார் இரண்டரை மணியிலிருந்து மூன்று மணி நேரம்..

ஆனால் வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி வயல் வெளிகளின் ஓரத்தில் அமர்ந்து இளநீர் குடிப்பதும் சாலையோரத்திலிருந்த புளிய மரங்களில் புளியங்காயை விளையாட்டாய் கல்லெறிந்து விழவைத்ததும்.. முதன் முதலாக கண்ணுக்கெட்டும் தூரம்வரை பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளைப் பார்த்த என் மகளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை..

அதெல்லாம் ஒரு பசுமையான நினைவுகள்..

எங்களுடைய வாகனம் தூத்துக்குடியை அடைந்தபோது மாலை மணி ஐந்தைக் கடந்திருந்தது.

என்னுடைய மாமனார் வீட்டுக்கு ஏற்கனவே தொலைப்பேசி செய்து அறிவித்திருந்ததால் நாங்கள் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய மாமனார் லாரியில் வந்திருந்த பொருட்களை இறக்கி வைக்க ஏற்பாடு செய்திருந்த நால்வர் அடங்கிய ஒரு குழு எங்களை வரவேற்றது. நாங்கள் சென்றடைந்த சிறிது நேரத்தில் என் மாமனாரும் வந்து சேர்ந்தார்.

தூத்துக்குடி கிளை மேலாளர் தங்கியிருக்க அலுவலக கட்டிடத்தின் பின்புறத்திலேயே வசதி இருந்ததால் நாங்கள் சென்றடைந்த நேரத்தில் அவரும் அங்கு இருந்தார். அத்துடன் அன்று ஞாயிற்றுக்கிழமையாயிருந்தும் துணை மேலாளர் மற்றும் தலைமைக் குமாஸ்தா (Head Clerk), காசாளர் என எல்லோரும் அலுவலகப் பணியில் மும்முரமாக இருந்ததைப் பார்த்தேன்.

‘எதுக்கு ஞாயிற்றுக்கிழமையிலும் இவங்க வந்திருக்காங்க?’ என்றேன் மேலாளரிடம். அவர் என்னைப் பார்த்த பார்வையில் சற்றே கேலி தெரிந்ததைப் போலிருந்தது. ‘இது தஞ்சாவூர் பிராஞ்ச் இல்லை டிபிஆர். வேல பெண்டு கிழிஞ்சிரும். வந்துட்டீங்கல்லே.. இனி நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.’

அட! அப்படியென்னடா வேலை பெரிசா .. என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் வெளியே சொல்லி அவருடைய விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை.

இதற்கிடையில் தூத்துக்குடி கிளை கட்டிடத்தைப் பற்றி விவரிக்க வேண்டும்.

மரைக்காயர் மஹல் என்றால் தூத்துக்குடியில் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. WGC சாலை எனப்படும் தூத்துக்குடியின் பிரதான சாலையில் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்த பிரம்மாண்ட கட்டிடம் அது. கீழ்தளம், மேல்தளம் என இரண்டே தளங்கள் இருந்தாலும் அதனுடைய மொத்த உயரத்தை வைத்துப் பார்த்தால் ஏதோ நான்கு மாடி கட்டிடம் போல தோற்றமளிக்கும்.

அதற்கடுத்தாற் போலிருந்த ‘தந்தியாபீஸ்’ எனப்படும் தபால் நிலையமும், தொலைப்பேசி அலுவலகமும் இக்கட்டிடத்தைவிட இரண்டு மடங்கு தளங்களைக் கொண்டிருந்தாலும் உயரமென்னவோ ஒன்றுதான்.

கீழ்தளத்திற்குள் நுழைந்து தலையை உயர்த்தி பார்த்தால்தான் புரியும் அதன் கம்பீரம். கீழ்தளத்தின் கூரை தரையிலிருந்து சுமார் பதினெட்டிலிருந்து இருபதடி உயரம் இருக்கும்! அதற்குமேல் மேல்தளம். அதனுடைய கூரையும் அதே அளவு உயரத்தில்.. ஆக மொத்த கட்டிடத்தின் உயரம் சுமார் நாற்பதடி..

அக்கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து பார்த்தால் தூத்துக்குடி மொத்தமும் தெரியும். கிழக்கே தூரத்தில் நீலநிற கடலும் - நீல நிறமா, என்ன சார் விளையாடறீங்களா என்று தூத்துக்குடிக்காரர் ஒருத்தர் மறுத்து எழுதப்போகிறார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் -– தூத்துக்குடி முழுவதும் வானத்தை முட்டிக்கொண்டு நிற்கும் தேவாலய கோபுரங்களும் (இத்தனை சிறிய ஊரில் இத்தனை தேவாலயங்களா என்று வியந்ததுண்டு. கொச்சியும் அதுபோலத்தான். ஒரே சாலையில் மூன்று தேவாலயங்களைப் பார்த்திருக்கிறேன்), சிவன் கோவில் கோபுரமும், மசூதிகளின் மணிகூண்டுகளும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்..

என்னுடன் வந்து நின்ற வாகனத்திலிருந்த என்னுடைய வீட்டுப் பொருட்களை வாகனத்திலிருந்து இறக்கி எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேல்தளத்தில் (என்னுடைய கிளை அலுவலகம் மேல் தளத்தின் முன்புறமும் குடியிருப்பு அதன் பின்புறம் அமைந்திருந்தது. என்னுடைய குடியிருப்புக்கு அலுவலகத்திற்குள் நுழைந்துதான் செல்ல வேண்டும். இதன் காரணமாக நானும் என் குடும்பத்தினரும் பட்ட அவஸ்தைகளை பிறகு சொல்கிறேன்) கொண்டு சென்று இறக்குவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதைக் கட்டிடத்தைப் பார்த்தால்தான் விளங்கும்.

மாடிப்படிகள் அந்தக்கால கருங்கற் பாறைகளாலானவை. ஒவ்வொரு படியும் சுமார் ஒரு அடி உயரம் இருந்தது. இதில் அடிபட்டுக்கொள்ளாமல் என் மகள் ஏறிச் செல்வதே ஒரு சர்க்கஸ் போல இருந்தது. இதில் கட்டில், அலமாரி, குளிர்பதனப் பெட்டி போன்ற சாதனங்களை ஏற்றுவதென்றால்..
‘அதப்பத்தியெல்லாம் நீங்க கவல படாதீங்க. நாம பாட்டுக்கு எங்க அம்மா வீட்டுக்கு போலாம். இதெல்லாம் எங்கப்பா இருந்து ஏத்தி வச்சிருவாங்க.’ என்றார் என் மனைவி.

எங்களுக்கருகில் நின்றிருந்த என்னுடைய மாமனாரும் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். நான் என்னுடைய மேலாளர் நண்பரைப் பார்த்தேன். அவர் ஒன்றும் பேசாமல் ஒரு விஷமப் புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.

‘டிபிஆர் இத எறக்கறதுக்கு தஞ்சாவூர்ல எவ்வளவு குடுத்தீங்க?’ என்றார்.

அவர் இதை ஏன் கேட்கிறார் என்று விளங்காமல், ‘எதுக்கு கேக்கறீங்க?’ என்றேன்.

‘சொல்லுங்க. விஷயமாத்தான் கேக்கறேன்.’

‘Frankஆ  சொல்லணும்னா. நா ஒன்னுமே கொடுக்கலை. நம்ம பேங்க் வாட்ச் மேனும் அவரோட பையனுமே லாரில வந்தவ க்ளீனரோட சேர்ந்து தூக்கி வச்சிட்டாங்க. ஆனா அங்க அது க்ரெளண்ட் ஃப்ளோர். லாரிய வாசல்வரைக்கும் கொண்டு நிறுத்திட்டு ஈசியா ஏத்தி வச்சிட்டாங்க. இந்த பில்டிங்க பார்த்தால பயமா இருக்கே.’

எங்களுடைய இந்த சம்பாஷனை ஆங்கிலத்தில் இருந்ததால் பொருட்களை இறக்க வந்திருந்த தூத்துக்குடி குழுவினருக்கும் வாகனத்துடன் வந்திருந்த தஞ்சைவாசிகளுக்கும் நாங்கள் விவாதித்த விஷயம் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. அதுவும் நல்லதுக்குத்தான்.

என்னுடைய மேலாள நண்பர் பதில் கூறாமல் புன்னகையோடு நிறுத்திக்கொண்டார். என் மாமனார் அவரை நெருங்கிச் சென்று, ‘சார் தயவு செய்து நீங்க எதையாச்சும் சொல்லி காரியத்த கெடுத்துராதீங்க. நான் ஏற்கனவே பேசிதான் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். இவனுங்க தோணிக்குப் போற பயல்க. இந்த ஜாமானெல்லாம் அவனுங்களுக்கு லேசான விஷயம்..’ என்றார்.

‘ஒங்க மருமவன் என்ன சொல்றாருண்ணே..’ என்றார் ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்த நால்வர் குழு தலைவர். இந்த அண்ணேங்கறது தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் மிகவும் பிரபலம். தம்பிங்கற உறவு முறையே கிடையாது. எல்லோரும் எல்லோருக்கும் அண்ணந்தான். அவ்வளவு மரியாதை! அதைப்பற்றி தனியாக பிறகு எழுதுகிறேன்.

‘அதொன்னும் இல்லவே.. நீரு ஒம்ம ஆளுங்கள ஜாமான வண்டியிலருந்து இறக்கி வைக்கச் சொல்லும்யா..’ என்றார் என் மாமனார்.

‘என்னலே பாத்துக்கிட்டுக்கிட்டு நிக்கறீக.. சட்டுபுட்டுன்னு எறக்கி போட்டும் போணும்லே..? என்றார் குழுத்தலைவர் தன் சகாக்களிடம்.

ஆனால் அவர்களோ அசைவதாகத் தெரியவில்லை.

‘எலே என்னத்தலே பாக்கறீக? ஜாமான் சாஸ்தியாருக்கேன்னா. அதெல்லாம் அண்ணனனோட மருமவன் பாத்து குடுப்பாகல்லே.. நீய சோலிய ஆரம்பிங்கலே..’

‘அதான் நான் அப்பவே போயிருவோம்னேன்.. இப்ப பாருங்க.. உங்க தலைய பாத்ததுமே கூட கேக்கறாங்ய..’ என்று என் காதைக் கடித்தார் என் மனைவி.

என்னுடைய மேலாளர் முகத்தில் ஒரு விஷமப்புன்னகை. அவர் அப்படித்தான். என்னுடைய நெருங்கிய நண்பர்தான். ஆனால் பிறத்தியார் படும் அவஸ்தையைப் பார்த்து ரசிப்பதில் மன்னன். நானும் அவரும் குமாஸ்தாக்களாக ஒரே கிளையில் பணிபுரிந்திருக்கிறோம்..

கடினமான வேலைகளையெல்லாம் சாமர்த்தியமாக நம் தலையில் கட்டிவிட்டு காலையாட்டிக்கொண்டு உக்கார்ந்திருப்பார். 'இத்தன வருஷாமாகியும் நீர் மாறாம அப்படியேத்தான் இருக்கீரு’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

பொருட்களை இறக்க வந்த தூத்துக்குடி குழு தங்களுக்குள் குசுகுசுவென ஏதோ பேசிக்கொள்வது தெரிந்தது.

‘என்னப்பா நீங்க பாத்துக்கிட்டே நிக்கறீங்க. முன்னமே பேசித்தானே கூப்டுக்கிட்டு வந்தீங்க.. இப்ப என்னவாம்? ஏதாச்சும் கூட வேணுமாக்கும்?’ என்றார் என் மனைவி தன் தந்தையிடம்.

என் மாமனார் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். மருமகன் முன்னால நம்ம மானத்தை இப்படி வாங்கறானுவளே என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. நேரே விடுவிடுவென ரகசியமாக பேசிக்கொண்டிருந்தவர்களை நெருங்கினார். என்ன பேசினாரோ தெரியவில்லை.. நால்வரும் வாயெல்லாம் பல்லாக அடுத்த அரை மணியில் எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு.. என் மாமனார் ரகசியமாய் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு ‘வரோம் சார்.’ என்று எனக்கு கையசைத்துவிட்டு அவர்கள் வந்த முச்சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு பறந்துவிட்டனர்.

என்னுடன் தஞ்சையிலிருந்து வந்த ஓட்டுனரும், க்ளீனரும் நான் வற்புறுத்தியும் ஒன்றும் வாங்க மறுத்து திரும்பிச் சென்றனர்.

‘பாருங்கப்பா. தஞ்சாவூர்காரங்களுக்கு நாம என்ன சொந்தமா பந்தமா? ஊர்ல ஏத்தும்போதும் இந்த டிரைவரும் க்ளீனரும் சேர்ந்து ஏத்தினாங்க தெரியுமா? இங்ஙனயும் ஜாமான எறக்கி வைக்க ஹெல்ப் பண்ணலே.. நம்ம ஊராள்ங்களும்  இருக்கான்வளே.. அள்ளிக் குடுத்திருப்பீங்களே.. அவனுக வாயெல்லாம் பல்லா இளிச்சப்பவே நெனச்சேன்..’ என்று சலித்துக்கொண்டார்  என் மனைவி..

‘டிபிஆர். உங்க மாமனார் பேசி கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்னு சொன்னதுமே நா நெனச்சேன்.. இந்த ஊர்ல இப்படித்தான்.. அதான் வந்துட்டீகல்லே.. நீங்களே பார்த்துக்குவீங்க.. ஏண்டா வந்தோம்னு நினைக்காம இருந்தா சரி..’ என்ற என்னுடைய மேலாள நண்பர்.. ‘அண்ணே நான் ஒங்கள தப்பா சொன்னேன்னு நினைச்சிக்காதீங்க.. இந்த ------------பயலுவளுக்கு எத்தன குடுத்தாலும் பத்தாது.. நீங்க வேணா பாருங்க.. நேரா ஒயின் ஷாப்புக்குத்தான் போயிருப்பானுவ..’ என்றார் என்னுடைய மாமனாரைப் பார்த்து.

என் மாமனார் முகம் போன போக்கு அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஏதோ அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறதென்று எனக்கு தோன்றியது..

என்னுடைய மேலாள நண்பர் சார்ந்த குலத்தினருக்கும் அவர் கூறிய -------------பயலுவ சார்ந்த குலத்தினருக்கும் இடையே இருந்த ஒருவித ஜன்மப்பகையைப் (அதை பகை என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை) பற்றி பிறகுதான் எனக்கு தெரிந்தது..

தொடரும்

27 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 105

உங்களுக்கு தஞ்சையில் ஏறப்பட்ட அனுபவங்களின் தொகுப்பை ஒரு சோக சம்பவத்துடன் முடிக்காதீர்கள் என்று சில சக வலைப்பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கொசுறுப் பதிவு..

தஞ்சையில் அலுவலகப் பணிகள் முடிந்தால் unwind செய்வதற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பார்த்தால் சினிமாதான். அதற்கு தஞ்சையில் எந்த குறையும் இருக்கவில்லை.

அத்தனைச் சிறிய நகரத்தில் தேவைக்கும் அதிகமாகவே திரையரங்குகள் இருந்தன. சென்னையைப் போல் முன்பதிவு செய்ய வேண்டுமென்ற தொல்லையும் இருக்கவில்லை.

வங்கி மேலாளர் என்ற பதவி அளித்திருந்த இன்னுமொரு வசதி எனக்கிருந்தது. தஞ்சையிலிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அவசர தேவைக்கு ஹ¤ண்டிக்கு மேல் கடன்பெறும் வழக்கமிருந்தது. அவர்கள் கடன் பெறுவது நம்முடைய சேட்டிடம்தான். அவர் அந்த ஹ¤ண்டிகளை என்னுடைய வங்கியில் மறுஅடகு (Repledge) வைத்து கடன் பெறுவது வழக்கம்.

ஈடாக வைக்கப்பட்டிருந்த ஹ¤ண்டிகளை பணம் செலுத்தி திருப்பிப் பெற திரையரங்கு உரிமையாளர்களோ அல்லது அவர்களுடைய பணியாட்களோ வங்கிக்கு வருவது வழக்கம். ஆக தஞ்சையிலிருந்த ஏறக்குறைய எல்லா தியேட்டர் உரிமையாளர்கள் அல்லது அங்கு பணிபுரியும் மேலாளர்களை நான் தெரிந்து வைத்திருந்தேன்.

நான் தஞ்சையிலிருந்த காலத்தில்தான் நம்முடைய தமிழக திரைப்படத்துறையில் ‘பா’ வரிசை இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகமாயிருந்தது.

பாக்கியராஜின் முந்தானை முடிச்சு, அந்த ஏழுநாட்கள், பாரதி ராஜாவின் மண்வாசனை, பாலசந்தரின் அக்னிசாட்சி, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை போன்ற பரபரப்பாகப் பேசப்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. என்னுடைய பங்கு கோவிலுக்கருகாமையிலிருந்த அருள் திரையரங்கில் நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து வெளியாயின.

‘என்னங்க, இன்னைக்கி ஏதாவது படம் பார்க்கலாங்க.’ என்று மதியம் மூனு மணி வாக்கில் என் மனைவி தொலைப்பேசியில் கூறினால் அடுத்த தொலைப்பேசி சம்பந்தப்பட்ட திரையரங்கு மேலாளருக்கு..

‘ரெண்டு சீட் தானே சார்.. போட்டு வச்சிடறேன். மெயின் படம் ஆறு மணிக்கு.. ஒரு பத்து நிமிஷம் முன்னால வந்தீங்கன்னா சரியாயிருக்கும்..’ என்று பதில் வரும்.

அப்புறமென்ன, ஐந்தரை மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டை சென்றடைந்தால் மேடமும் என் மூத்த மகளும்  தயாராயிருப்பார்கள்.  குழந்தையை முன்னால் என் கால்களுக்கிடையில் நிறுத்திக்கொண்டு புறப்பட்டு திரையரங்கில்  சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவோம்.

ஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம் என் மகளுக்கு திரைப்படங்கள் என்றாலே அலர்ஜி. விளம்பரங்கள் முடியும்வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள். அதெப்படித்தான் திரைப்படம் துவங்குவதை உணர்வாளோ தெரியாது. டைட்டில் சாங் துவங்கியதுமே அழத்துவங்கிவிடுவாள்.

ஆள்மாறி, ஆள்மாறி வெளியே கொண்டு செல்லாவிட்டால் அக்கம்பக்கத்தாட்களுடைய உச், உச்.. துவங்கிவிடும்..

ஆக, ஏதாவது படத்தை முழுவதுமாக பார்த்தோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் பாதி படம் பார்த்தால் என் மனைவி மீதி படத்தைப் பார்ப்பார். வீடு திரும்பியதும் படு சீரியசாக பரஸ்பரம் நாங்கள் பார்த்த பாகத்தை மற்றவருக்கு கூறுவோம்.  ஆனால் பாலசந்தரின் அக்னிசாட்சியை மட்டும் என் மகள் விரும்பிப் பார்த்தாள் என்றால் நம்ப முடிகிறதா? அதில் அதிக அளவில் பாட்டுகள் இல்லையென்பதால் இருக்கலாம்.

வீட்டுக்கு வந்து.. என்றேன் அல்லவா? அந்த வீட்டுக்கு வருதல் எப்போதுமே படு ரிஸ்க்கான சமாச்சாரம். அநேகமாய் படம் முடிவதற்குள் என் மகள் தூக்கக் கலக்கத்தில் இருப்பாள். ‘அம்மா மடியில் உக்காந்துக்கம்மா.’ என்று எத்தனைக் கெஞ்சினாலும் முடியவே முடியாது என்பாள். தூக்கக் கலக்கத்தில் இருக்கும் இரண்டு வயது மகளை கால்களுக்கிடையில் நிறுத்திக்கொண்டு தூங்கி விழும்போதெல்லாம் ஒரு கையில் பிடித்துக்கொண்டு சரியான விளக்கொளி இல்லாத தஞ்சை நகரில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்வோம்.

வீடு வந்து சேரும்போது என் மகள் நின்றுக்கொண்டிருந்தாலும் நல்ல உறக்கத்தில் இருப்பாள். என் மனைவி பின் சீட்டிலிருந்து இறங்கி வந்து அப்படியே அவளை அள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றபிறகுதான் நான் வாகனத்தை அணைத்துவிட்டு வீட்டுக்குள் செல்லமுடியும்.

நானோ என்னுடைய மனைவியோ எந்த ஒரு நடிகருடையவும் இயக்குனருடையவும் விசிறியல்லாததால் யாருடைய படமானாலும் வெறும் பொழுதுபோக்காகவே பார்ப்போம். வீட்டிற்கு  வந்து தேவையில்லாத விமர்த்தில் இறங்கமாட்டோம்.

ஆனால் கப்பலிலிருந்து என்னுடைய மனைவியின் மூத்த சகோதரர் வந்துவிட்டால் போதும். அவருடன் சேர்ந்து எந்தவொரு படத்தையும் நிம்மதியாய் பார்க்க முடியாது. அவர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகராய் இருந்ததால் எல்லா நடிகர்களையும் அவருடன் ஒப்பிட்டு காரசாரமாக விமர்சிப்பார். முக்கியமாய் அப்போது கொடிகட்டி பறந்துக்கொண்டிருந்த பாக்கியராஜ் அவர்களின் குரலைக் கேட்டாலே பற்றிக்கொண்டு வரும் அவருக்கு.

அவர் இருக்கும்போது முதல் காட்சியில் (மாலைக் காட்சி) பார்த்துவிட்டு வந்தால் காரசார விவாதம் முடிந்து உறங்கச் செல்வதற்கு நள்ளிரவு முடிந்துவிடும். ‘ஐயோ போறுமே. படம் பார்த்த சந்தோஷத்தையே கெடுத்துருவீங்க போலருக்கே, வந்து சாப்டுட்டு படுங்க.’ என்று என் மனைவி அழைக்கும்வரை விவாதம் தொடரும்.

சினிமாவுக்கு அடுத்து ரோட்டரி க்ளப் நிகழ்ச்சிகள். வாரத்திற்கு ஒரு முறை கூடும் இக்கூட்டங்களுக்கு நிச்சயம் சென்றுவிடுவேன். தஞ்சையிலிருந்த பெரிய செல்வந்தர்களும், வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பு. என்னுடைய வயதையொத்தவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக இல்லாததால் என்னுடன் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கு யாரும் கிடைக்காமல் நாளடைவில் வாரக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.

இதையறிந்த சேட் (அவர்தான் அப்போதைய பிரசிடெண்ட்டாக இருந்தார்) என்னை ரோட்டராக்ட் என்ற பள்ளி மாணவர்களுக்கான அமைப்பின் தலைவராக நியமித்தார். இது ரோட்டரி க்ளப்பின் மேற்பார்வையில் பள்ளி மாணவர்களுக்கான அமைப்பு. தஞ்சையிலிருந்த சுமார் ஐந்து பள்ளிகள் அங்கத்தினர்களாக சேர்க்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு பள்ளியில் ரோட்டராக்ட் கூட்டம் என்னுடைய தலைமையில்நடைபெறும். அதில் பங்குகொண்டு மாணவர்களுடன் சேர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது ஒரு சந்தோஷமான அனுபவம். அவர்களுடன் சேர்ந்து அடுத்துள்ள பல கிராமங்களுக்கும் சுகாதாரம், மருத்துவ சிகிச்சை, தட்டம்மை, போலியோ நோய்கள் வராமல் தடுக்க உதவுவது, சுற்றுப்புற சூழலைப் பேணுவது போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் பங்குகொண்டிருக்கிறேன். என் அன்றாட அலுவலகப் பணியில் கிடைக்காத ஒரு மனநிறைவு இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றபோது எனக்கு கிடைத்தது.

என்னுடைய தஞ்சைவாசம் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் எனக்கு பல நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்ததென்றால் அது மிகையாகாது.

என்னுடைய இரண்டாண்டு அனுபவத்தில் எனக்கு மிகவும் திருப்தியளித்தது தஞ்சை வணிகர்களுடைய நேர்மை. என்னிடம் கடனுதவி பெற்றவர்களுள் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோருமே தாங்கள் பெற்ற கடனை முழுமையாக அடைத்து தீர்த்தனர் என்று எனக்குப் பிறகு கிளை மேலாளர்களாக வந்த என்னுடைய நண்பர்கள் எனக்கு அவ்வப்போது தெரிவித்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதுமட்டுமல்ல.. நான் இருந்த காலத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பலரும் இப்போதும் என்னுடைய வங்கியிலேயே தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

எங்களுடைய தஞ்சை வாடிக்கையாளர்களுள் பலரும் பார்ப்பதற்கு மட்டுமல்ல பழகுவதற்கும் எளிமையானவர்களும் கூட.  எத்தனை பெரிய வர்த்தகர்களாயினும், என்னைவிட வயதில் முதிர்ந்தவர்களாயினும் ‘அய்யா’ என்று மரியாதையுடன் அழைப்பதைக் கேட்டபோதெல்லாம் எனக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறேன்.

ஆகவே இத்தகைய இனிய அனுபவங்களை என்னுடைய பிரிவு உபசார கூட்டத்தில் அவர்களுடன் நான் பகிர்ந்துக்கொண்டபோது குழுமியிருந்த பலரும் உணர்ச்சிவசப்பட்டுப் போனார்கள். அவர்களிடமிருந்து விடைபெறும் நேரத்தில் நானு உணர்ச்சி மிகுதியால் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறி நின்றது இப்போதும் நினைவிருக்கிறது.

நான் சென்னையில்தான் முதன்முதலாய் மேலாளராய் பதவியேற்றேன் என்பதை முன்னமே கூறியிருக்கிறேன். நான் தஞ்சையில் அளித்த கடனுதவிகளைப் போல பல மடங்கு சென்னைக் கிளையில் அளித்திருக்கிறேன். ஆனால் நான் அங்கிருந்து மாற்றப்பட்டபோது நடந்த பிரிவு உபசார கூட்டத்தில் தஞ்சை வாடிக்கையாளர்களைப் போல  யாரும் திரண்டு வந்துவிடவில்லை.

என்னுடைய கிளைக்கு அருகாமையிலிருந்த சுமார் பத்து பதினைந்துபேர்கள் மட்டுமே. அதிலும் பெரும்பாலோனோர் என்னுடைய கிளைப்பு வைப்பு நிதி வைத்திருந்தவர்களே. அதுதான் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கும் தஞ்சை போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

பெரு நகரங்களில் மனித உறவுகள் ஒரு பரஸ்பர எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் quid pro quo!

நம்மிடமிருந்து ஒன்றும் கிடைக்காது என்று அறிகின்ற பட்சத்தில் அந்த நிமிடமே உறவுகள் அறுந்துபோகும்.

ஆனால் தஞ்சையில் நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த ஒரு ஆட்டோமொபைல் டீலரும் கூட - அவருக்கு என்னால் கடனுதவி அளிக்க முடியாமற்போனதை சுருக்கமாக கூறியிருந்தேன் -– வந்திருந்து என்னை வாழ்த்திப் பேசியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஏற்படுகின்ற உறவுகள் மிகவும் புனிதமானவையல்லவா?

தஞ்சையிலிருந்து இத்தகைய சந்தோஷமான, மனதுக்கு நிறைவு தரக்கூடிய அனுபவங்களுடன் உழைப்பாளர்களின் தினமான மே மாதம் ஒன்றாம் தேதியன்று அதிகாலையில் தஞ்சையிலிருந்து ஒரு வாடகைக் காரில் (அப்போதெல்லாம் அம்பாசிடர்தானே.. குளிர்பதன வசதியும் பிரபலமடைந்திருக்கவில்லை) நான், என் மனைவி மற்றும் மூத்த மகள் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டோம்.

தொடரும்..

24 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 104

நான் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிலும் காலி மனை கிடந்ததென்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

வீட்டின் மேற்கே சுற்றுச்சுவருக்கு அப்பால் என்னுடைய வீட்டு உரிமையாளரின் சகோதரருடைய குடும்பம் குடியிருந்தது. கிழக்கு மற்றும் வடக்கே காலி மனைகள். தெற்கே, வீட்டிற்கு எதிரிலும் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காலி மனைகள்தான்.

வீட்டினுள், மேற்கு (இடது) பக்கத்தில் இரண்டு படுக்கையறைகள். கிழக்கு (வலது)பக்கத்தில் முன்னால் ஒரு சிறிய சிட் அவுட், அதனையடுத்து ஒரு விருந்தினர் ஹால், அதனையடுத்து படிகூண்டு, பின்னால் உணவறை, அதையொட்டி சமையலறை பின்னால் புழக்கடை..

வீட்டினுள், நான்கு பக்கத்திலும் சுமார் பத்து ஜன்னல்கள். எல்லாவற்றிலும் கண்ணாடி கதவுகள். தஞ்சையில் காற்று காலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்.

என் வீட்டைச் சுற்றிலும் காலி இடங்களானதால் காற்று காலத்தில் சன்னல் கதவுகள் எல்லாம் கொக்கியிட்டு வைத்திருக்கவில்லையென்றால் காற்றின் வேகத்தில் சன்னல் கதவுகள் தாமாக அடித்துக்கொள்ள அவற்றில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் நிமிட நேரத்தில் உடைந்துவிடும். அப்படி கண்ணாடி இல்லாத ஜன்னல் கதவுகள் பல இருந்தன.

நான் கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்த சம்பவம் நடந்து முடிந்த மூன்றாம் நாள். அதாவது ஆகஸ்ட் பதினெட்டாம் நாள்.

நான் அலுவலகத்திற்கு புறப்படும்போது என் இளைய மகள் இரண்டாவது படுக்கையறையில் இருந்த தூளியில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

என் மூத்த மகள் அன்றைய இரவு சம்பவத்திற்குப்பிறகு சரியான சுகம் இல்லாமல் போனதால் அவளை என் இளைய மகள் பிறந்த அதே மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துவிட்டு அவர்கள் அளித்த தூக்க மருந்தின் தாக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

நான் அலுவலகத்தை சென்றடைந்து என்னுடைய அனுதின அலுவலில் ஆழ்ந்துப் போயிருந்த நேரம்.

வீட்டிலிருந்து தொலைப்பேசி. எதிர் முனையில் பதற்றத்துடன் என் மனைவி.

என்ன என்றேன்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு பேய் காத்தோட மழையடிச்சி வீட்டுக்குள்ளாற எல்லாம் மழைதண்ணி வந்திருச்சிங்க. தூளியில படுத்திருந்த பாப்பாவும் சுத்தமா நனைஞ்சி போயிட்டா. பிள்ளை குளிர்ல நடுங்குது. நானும் அம்மாவும் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருக்கோம். உடனே புறப்பட்டு வாங்க.. சீக்கிரம்.’

கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எதிர் கடையிலிருந்த பாயின் வண்டியை வாங்கிக்கொண்டு ஓடுகிறேன்.

என்னுடைய வங்கியிருந்த பகுதியிலும் சரி, என் வீடு இருந்த பாதையிலும் சரி எங்கும் மழையின் அடையாளம் கூட இல்லை. ஆனால் என்னுடைய வீடு இருந்த பகுதியில் மட்டும் மழை பெய்திருந்த சுவடுகள்..

வீட்டையடைந்தபோது பாப்பா உடம்பு சில்லிட்டு போயிருக்கிறது. என் மனைவி அழுத கோலத்தில். மூத்தவள் அந்த களேபரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில்..

எனக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு என் மூத்த மகளை என்னுடைய மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு இளைய மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.

மருத்துவமனையில் என் மகளுடைய பிரசவம் பார்த்த மருத்துவரே இருந்ததால் உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டனர்..

இரண்டு மணி நேரம் போராட்டம்.

நானும் என் மனைவியும் மருத்துவமனை வராந்தாவில் தவிப்புடன் காத்திருந்தோம்..

அவசரப் பிரிவு பகுதியிலிருந்த என் மகளை இரு தாதிமார்கள் கொண்டுவந்து வேறொரு அறையில் கிடத்தியதைப் பார்த்துவிட்டு ஓடிச் செல்கிறோம்..

யாராவது ஒருத்தர் மட்டும் வந்து பார்க்கலாம் என்கின்றனர்.

‘என்னால முடியாதுங்க. நீங்க போய் பார்த்துட்டு வாங்க. அப்புறம் நான் போய் பார்க்கிறேன்.’ என்கிறார் என் மனைவி.

நான் சென்று பார்க்கிறேன். அமைதியாய், ஒரு மென்மையான பூவைப்போல் கிடக்கிறாள் என் மகள். மேல் மூச்சு வாங்குகிறது. பஞ்சு போன்ற கைகளில் குளுக்கோஸ் ஊசி குத்திய இடமெல்லாம் சிவந்து போய்..

ஜுரத்தின் உச்சத் தாக்கத்தில் முகமெல்லாம் ரத்தச் சிவப்பாய்.. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்களை லேசாய் திறந்து வலப்புறம் திரும்பி திறந்திருந்த ஜன்னல் வழியாக யாரையோ அல்லது எதையோ பாக்கிறாள். அடுத்த நொடி சந்தோஷத்துடன் ஒரு அழகிய புன்னகை அவளுடைய உதடுகளில்.. முகமெல்லாம் விளக்கொளிபோல் பளீரென்று வெளிச்சம் தோன்றி மறைகிறது..

நான் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் இரண்டும் மூடிக்கொள்கின்றன... சுவாசம் அடங்கிப் போகிறது..

பிறந்து சரியாய் பத்தாம் நாள், இந்த உலகை விட்டே போய்விட்டாள் என் மகள்..

அந்தப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்...

இதை நான் எப்படிப் போய் வெளியே பதற்றத்துடன் காத்திருக்கும் என் மனைவியிடம் அறிவிக்கப்போகிறேன் என்று மலைத்துப் போய் நிற்கிறேன்.

திரும்பிப் பார்க்கிறேன். இதை எதிர்பார்த்திருந்ததுபோல் என்னுடைய மருத்துவர் வருகிறார். குழந்தையைக் குனிந்து பார்த்துவிட்டு என்னைப் பார்க்கிறார். என் கண்களில் ததும்பி நின்ற கண்ணீரினூடே.. ‘How did this happen, Doctor?’ என்கிறேன்..

‘Sorry Mr.Joseph, It appears to be a freak fever. We could not diagnose it. He body was so cold when you brought her. We could not revive her. I am sorry.’ என்றவாறு மெள்ள வெளியேறுகிறார்.

இதை அறை வாசலில் நின்றவாறு கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி ‘என்னங்க..’ என்று கண்ணீருடன் ஓடிவருவது தெரிகிறது. அப்படியே அவளை அணைத்துக்கொண்டு ஆறுதலிளிக்கிறேன்..

அதற்குப் பிறகு ஆக வேண்டிய காரியங்களையெல்லாம் இயந்திரக் கதியில் செய்து முடிக்கிறேன்.

என்னை ஆயருக்கு அறிமுகப்படுத்திய குருவும் என்னுடைய பங்குக் குருவும் (அவரும் என்னுடைய நண்பர்தான்) கூடவே இருந்து குழந்தையை நல்லடக்கம் செய்ய உதவுகின்றனர்..

நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என நான் முற்றிலும் எதிர்பார்க்காத அளவு கூட்டம் என் வீட்டின் முன்னே குழுமிவிட ஏதோ ஒரு விஐபியின் சவ அடக்கம் போல நடந்து முடிகிறது..

********

‘என்னால இனியும் இந்த வீட்ல இருக்க முடியாதுங்க. நானும் எம் பொண்ணும் எங்க அம்மா கூடவே போறோம்... ஓன்னு இந்த ஊர விட்டே டிரான்ஸ்ஃபர் கேளுங்க.. இல்லையா வீட்ட மாத்திட்டு ஊருக்கு வந்து எங்கள கூப்டுக்குங்க..’

அத்துயரச் சம்பவம் நடந்து முடிந்த இரண்டாம் நாள் என்னுடைய மனைவி இப்படிக் கூறியதும் எனக்கும் மறுத்துப் பேச துணிவில்லை. சரியென்று சம்மதித்து அன்றே பஸ் ஏற்றி மூவரையும் அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னுடைய மனைவி விரும்பியதுபோல எனக்கு மாற்றம் கிடைக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்ல எனவும் அப்படியே கிடைத்தாலும் ஐந்தாறு மாதங்களாவது, அதாவது அடுத்த மேமாதம் வரை ஆகும் என்பது எனக்கும் தெரியும் என் மனைவிக்கும் தெரியும்..

ஆகவே இந்த இடைபட்ட காலத்தில் மீண்டும் வீட்டை மாற்றுவது உசிதமல்ல என்று நினைத்தேன். என்னுடைய மனைவியின் துக்கம் குறைந்தது அவளாகவே திரும்பி வருவாள் என்று நினைத்து நான் மட்டும் அவ்வீட்டில் தனியாக வசித்தேன்.. வீட்டின் புழக்கடையில் தோட்டத்தில் அபிரிதமாய் காய்த்துக் கிடந்த செடிகளைப் பார்க்கும்போதெல்லாம் என் உள் மனசில் ஒரு எண்ணம் தோன்றும், 'என் மக போன சந்தோஷத்துல கொஞ்சம் அதிகமாவே பூத்து, காய்க்றீங்களோ?'

நான் நினைத்தது போலவே அடுத்த மாதமே என் மனைவி என் மகளுடன் திரும்பி வந்தாள்..

ஆரம்பத்தில் இரு வாரங்கள் வரை இரவு நேரங்களில் தன் மகளை நினைத்துக்கொண்டு வருந்தியவள் நாளடைவில் சகஜ நிலைக்கு திரும்பி வர எங்களுடைய வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.. மூத்தவளும் பாப்பா எங்கம்மா, பாப்பா எங்கம்மா என்ற  கேட்டு கேட்டு நாங்கள் சொன்ன பதிலில் திருப்தியடையாமல் சகஜ நிலைக்குத் திரும்ப மேலும் சில மாதங்கள் பிடித்தன. வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் எங்க பாப்பாவ அந்த சிங்கந்தான் கொண்டு போயிருச்சி என்பாள்..

ஆனால் கடவுள் கிருபையால் மீண்டும் என் மனைவி அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற சேதி.. ‘எம் பொண்ணே மறுபடியும் வந்துட்டாங்க..’ என்ற மகிழ்ச்சியும் என் மனைவிக்கும் எனக்கும் தெம்பைக் கொடுத்தது.. என் மூத்த மகளுடைய கவனமும் வரப்போகும் குழந்தையின் மேல் திரும்பியது.

ஆனாலும் ‘இந்த ஊரைவிட்டு மாற்றம் கேளுங்க. இப்பத்தான் நம்ம ஊர்லயே உங்க ப்ராஞ்ச் இருக்கே..பாப்பா பொறக்கறதுக்குள்ள நாம இந்த ஊர விட்டு போயிரனுங்க.’ என்று என் மனைவி துளைத்தெடுக்க ஆரம்பிக்கவே அடுத்த ஐந்தாறு மாதங்களில் அதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய வட்டார மேலாளருடைய பரிந்துரையும், அச்சமயம் தூத்துக்குடியில் கிளை மேலாளராக இருந்த என்னுடைய நெருங்கிய நண்பரின் பெருந்தன்மையும் எனக்கு மாற்றம் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.. (அவரும் அடுத்துருந்த அம்பாசமுத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தூத்துக்குடி மிகவும் பிடித்துபோயிருந்தது.)

ஒரேயொரு பிரச்சினை, என்னுடைய கிளைக்கு யாருமே வரத் தயாராக இல்லாததுதான்..

என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட நிலைதான் பலரையும் ‘தஞ்சையில பிள்ளைங்கள வச்சிக்கிட்டு வளக்குறது ரொம்ப கஷ்டம்போல’ என்று ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது..

மார்ச் மாதமே என்னுடைய மாற்றத்திற்கான உத்தரவு வந்தும் ஏப்ரல் மாத இறுதியில்தான் ஒரு திருமணமாகாதவர் தஞ்சைக்கு வர ஒத்துக்கொண்டார்..

ஆக, 1984ம் வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி தஞ்சையை விட்டு என்னுடைய வங்கி அலுவலைப் பொறுத்தவரை பல பலனுள்ள அனுபவங்களுடனும் என்னுடைய சொந்த வாழ்க்கையில் பல சுகமான, சந்தோஷமான அனுபவங்கள் மற்றும் ஒரேயொரு இழப்புடனும் என் மனைவியின் பிறந்த ஊரான தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டோம்..

தொடரும்..

23 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 103

குழந்தைகள் பெரியவர்கள் செய்வதை அப்படியே பிடித்துக்(படித்து என்றும் சொல்லலாம்) கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி..

என்னுடைய மகளும் அப்படித்தான். அவள் ஒன்றரை வயதானபோதே பேசத் துவங்கியவள். மழலை என்ற சொல்லே அவளுடைய பேச்சில் தெரிந்ததில்லை.

வார்த்தைகள் பளார், பளார் என்று தெறிக்கும். ஆகையால் நாம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவள் காதுபட எந்த வார்த்தையை யார் பேசினாலும் அடுத்த நிமிடமே அவளுடைய உதடுகளிலிருந்து அதே வார்த்தைகள், அதே பாணியில் வந்து விழும்.

என்னுடைய வீட்டில் வேலைக்கு வரும் பெண் தன்னுடன் தன்னுடைய எட்டு வயது மகள¨யும் அழைத்து வருவார். அச்சின்னஞ்சிறு பெண்ணை வரம்பில்லாமல் பாத்திரங்கள் துலக்கவும், வீட்டையும் தோட்டத்தையும் சுத்தம் செய்ய அவள் உத்தரவிடும்போதெல்லாம் எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.

என்னுடைய மனைவியிடம் அவளை கண்டிக்கும்படி சொல்வேன். ஆனால் என்னுடைய மனைவியோ, ‘என்னங்க பண்றது? எனக்கும் அவ பண்றத பார்த்தா கோபமாத்தான் இருக்கு. ஆனா நாம ஏதாச்சும் சொல்லப் போயி அவ வேலைக்கே வராம நின்னுட்டா அவ்வளவுதான். வயித்த தள்ளிக்கிட்டு நா எத்தன வேலயத்தான் செய்யிறது?’ என்பார். அவருக்கு அவருடைய கவலை.. கை நீட்டி சம்பளம் வாங்கும் பெண் பால்மணம் மாறாத குழந்தையை வேலை செய்ய ஏவிவிட்டு ஹாய்யாக வெற்றிலையை சுவைத்துக்கொண்டு வாயடித்துக்கொண்டிருக்கும் அந்த வேலைக்காரப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய பிரஷர் ஏறும். ஆனாலும் அப்பெண்குழந்தை, கை வலிக்குதும்மா என்றபோதெல்லாம் எரிச்சலுடன் முண்டம், முண்டம்.. என்று ஏசுவாள்..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய மகள் ஒருநாள் ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்த வேலைக்காரியைப் பார்த்து, ‘ஏய் முண்டம்? என்னா வேலை செய்யாம உக்காந்திருக்கே?’ என்றாளே பார்க்கவேண்டும்!

அதிர்ச்சியில் என் மகளைப் பார்த்த அப்பெண் என் மனைவியிடம், ‘அட, பாருங்கம்மா ஒங்க பொண்ணு என்ன பேச்சு பேசுதுன்னு? எங்கருந்து இந்த வார்த்தைய புடிச்சிது?’ என என் மனைவிக்கு என்ன தோன்றியதோ, ‘இதெல்லாம் உங்கக்கிட்டருந்து படிச்சதுதான். நீங்கதான ஒங்க பொண்ண எப்ப பார்த்தாலும் அந்த வார்த்தைய சொல்லியே திட்டுவீக? அதப் பார்த்துத்தான் என் பொண்ணும் படிச்சிக்கிட்டா. இனிமேலாச்சும் சின்ன பிள்ளைங்க இருக்கற எடத்துல என்னத்த பேசறது, எப்படி பேசறதுன்னு தெரிஞ்சி பேசுங்க.’ என்று திட்டித் தீர்த்தார்.

வேலைக்கார பெண்ணின் மகளுக்கு என்ன தோன்றியதோ என் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். தன்னால் சொல்லி திட்டமுடியாததை இவள் தைரியமாக செய்துவிட்டாளே என்று நினைத்ததோ என்னவோ..

****

வேறொரு நாள் சனிக்கிழமை. நான் அலுவலகத்திலிருந்து சுமார் மூன்று மணிக்கு வீட்டையடைந்தபோது முன் ஹாலிலிலிருந்து வீடு முழுவதும் அரிசியும் மணலும் கலந்து தூவப்பட்டிருந்தது.

அன்று அலுவலகத்திலிருந்த வேலைப் பளுவும், ஒரு வாடிக்கையாளருடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதமும் என்னுடைய மனதையும் உடலையும் வெகுவாகப் பாதித்திருக்க வீடு கிடந்த கோலத்தைப் பார்த்ததும் ஆத்திரம் என்னையுமறியாமல் பொங்கி வந்தது.

கையிலிருந்த பெட்டியை சோபாவில் வீசிவிட்டு படுக்கையறையை எட்டிப் பார்த்தேன். கட்டிலில் என் மனைவி அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க என்னுடைய மகளைக் காணவில்லை.

வீட்டின் இன்னொரு சாவி என்னிடம் இருந்ததால் வாசற்கதவுக்கு முன்னாலிருந்த இரும்புக் கேட்டை உள்ளிருந்து பூட்டிவிட்டு வாசல் மரக்கதவை திறந்துவைத்திருப்பார் என் மனைவி. வெளியே சுற்றுச்சுவருக்கு வெளியே யார் வந்து நின்றாலும் வாசற்கதவை திறக்காமலே பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு.

ஆகவே நான் கேட்டைத் திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததை என் மனைவி அறிந்திருக்கவில்லை.

அயர்ந்து உறங்குபவரை எழுப்ப விரும்பாமல் வீட்டின் பின்னாலிருந்த சமையலறையை நோக்கி நடந்தேன். அங்கே நான் பார்த்த காட்சி என்னை ஒருபுறம் திகைக்க வைத்தாலும் அதுவரை எனக்கிருந்த கோபத்தை உடனே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

கையிலிருந்த காய்கறி கூடையிலிருந்த அரிசி மற்றும் மணல் கலந்த கலவையை அன்று தோட்டக்காரர் விதைகளை வீசியதுபோல படு சிரத்தையாய் உணவு அறை மற்றும் சமையலறையில் வீசிக்கொண்டிருந்தாள் என் மகள்..

இடுப்பில் ஜட்டி மட்டும். அதற்கு மேல் ஒரு துவாலை.. வேட்டி! தோளில் ஒரு துவாலை.. தோட்டக்காரரும் தோளில் ஒரு துண்டுடன் தான் இருப்பார்!

சிறிது நேரம் சப்தம் எழுப்பாமல் நின்ற இடத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நிற்பது தெரியாமலே கூடையிலிருந்த கலவையை எடுப்பதும் தனக்குத்தானே முனுமுனுத்துக் கொண்டு ஒரு இஞ்ச் இடம் விடாமல் தெளிப்பதுமாய் மும்முரமாய் இருந்தாள் என் விவசாயி மகள்!

என் மகளை அப்படியே அள்ளி உணவு மேசையில் அமர்த்திவிட்டு
என் மனைவி எழுவதற்குள் சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் அடுத்த ஒரு மணி நேரம் சாப்பாட்டையும் மறந்து வீடு முழுவதும் கூட்டியெடுத்து முடிப்பதற்குள் என் முதுகு இரண்டாகப் பிளந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் என் மனைவிக்கு என்னுடைய மகள் செய்த காரியம் தெரியவேண்டாம் என்று நினைத்து நான்  செய்து முடித்த காரியத்தை என் மனைவி எழுந்ததும் அவரிடம் என் மகள் அழுதுக்கொண்டே ‘இந்த அப்பாவ பாருங்கம்மா. நான் வீடு முழுசும் தெளிச்சிருந்த விதையை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் குப்பையில கொட்டிட்டாங்க’ என்று புகார் செய்ததுதான்.

பிறகு ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் நான் எடுத்துரைக்க வீங்கிய வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க முடியாமல் என் மனைவி சிரிக்க, நல்ல வேளை அக்கம்பக்கத்தில் வீடுகள் ஏதும் இல்லாததால் ‘என்னாச்சி இவங்களுக்கு?’ என்று யாரும் எட்டிப்பார்க்க வழியில்லை.

இதே சென்னையாயிருந்தால் இப்படி வாய்விட்டு சப்தமாய் சிரிக்கக் கூட முடியாது. இந்த களேபரத்துக்கு இடையில் ‘எதுக்குப்பா சிரிக்கிறீங்க.?’ என் மகள் அப்பாவித்தனமாய் கேட்டுக்கொண்டே அழுததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது..

அதனால்தானோ என்னவோ குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்..

***

என்னுடைய மகளுடைய இன்னுமொரு விபரீத செய்கை நட்ட நடுராத்திரியில் எழுந்துக்கொள்வதுதான்.

நானும் என் மனைவியும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்போம். படீர், படீர் என்ற அறை முதுகில் விழும். பதறியடித்துக்கொண்டு எழுந்து பார்த்தால் என்னுடைய மகள் எழுந்து கொட்ட, கொட்ட விழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள்.

ஆரம்பத்தில் இருவரும் மாறி, மாறி அவளை உறங்கச் செய்ய படாத பாடுபடுவோம். நாளடைவில் அவளுடைய சுபாவம் பரிச்சயமாக அவளை அப்படியே கட்டிலில் அமர்த்திவிட்டு அவளைச் சுற்றிலும் பொம்மைகளை பரப்பி வைத்துவிட்டு நானும் என்னுடைய மனைவியும் மீண்டும் உறங்கிவிடுவோம்.

காலையில் எழுந்துப் பார்த்தால் பொம்மைகள் மீதே என் மகளும் படுத்து உறங்கிக் கிடப்பாள்..

‘அவ நடுராத்திரிலதானடி பொறந்தா.. கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருப்பா. வயசு ஏறுனா எல்லாம் சரியாயிரும்.’ என்றார் என் மாமியார் ஒருமுறை.. ‘அதுக்காகத்தான் பெரியவங்க கூட இருக்கணுங்கறது.. உங்களுக்கு என்ன தெரியும்?’

அவர்கள் கூறியது போலவே குழந்தை நேரம் காலமில்லாமல் அழும்போது ஆரம்பத்தில் எதற்கு அழுகிறது என்றுகூட விளங்காது. அதுவும் கடைசியாய் நாங்கள் தஞ்சையிலிருந்த இருந்த வீடு அந்துவான காட்டில் இருப்பது போல் இருந்தது..

வீட்டு உரிமையாளரின் சகோதரர் குடும்பத்தைவிட்டால் அக்கம்பக்கத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வீடுகளே இருக்காது..

இரவு எட்டு மணிக்கே ஆள் நடமாட்டம் குறைந்துபோய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மையிருட்டாய் தெரியும்.

‘யம்மா, உங்க வீட்டு பின்னாலருக்கற முருங்கை மரத்துல முனி இருக்குதும்மா..’ என்று ஒரு நாள் என்னுடைய வேலைக்காரப் பெண் என் மனைவியிடம் கூறிவிட ‘இதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லைங்க’ என்று என் மனைவி அப்போது கூறிவிட்டாலும் அவருக்கு உள்ளூர பயம் இருந்ததென்னவோ உண்மைதான்..

****

இரண்டாவது மகள் பிறந்து சுமார் ஒரு வாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்..

என்னுடைய மாமியார் வீட்டிலிருந்து வந்திருந்த அவருடைய தங்கைகள் இருவரும், என் மனைவியுடைய இளைய சகோதரர்களும் அடுத்த இரு நாட்களில் ஊருக்குத் திரும்பிச் செல்ல என் மாமியார், நான், என் மனைவி என கூட்டம் குறைந்து  பத்துநாள் கலகலப்புக்குப் பிறகு வீடு அமைதியாய் போனது..

என்னுடைய மூத்த மகளைப் போலவே இரண்டாவது மகளும் நள்ளிரவு பிரசவம் ஆனதால் இரண்டு பிள்ளைகளும் நள்ளிரவில் எழுந்துக்கொள்வது வழக்கமாகிப் போனது. மூத்தது விளையாட்டை ஆரம்பித்தால் சின்னது அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடும்..

சரி, மாமியாரும் மனைவியும் பார்த்துக்கொள்ளட்டும் என்று நான் என்னுடைய படுக்கையறைக் கதவை தாளிட்டுவிட்டு உறங்கலாம் என்று நினைத்தால் என் மூத்த மகள் விடமாட்டாள். ‘அப்பா பாப்பா கத்துதுப்பா.. அம்மாவால ஒன்னும் பண்ண முடியலை. அம்மாச்சியாலயும் ஒன்னும் பண்ண முடியலை. நீங்க வாங்கப்பா’ என்று கதவைத் தட்டி ஆர்ப்பாட்டாம் செய்துவிடுவாள்..இது தினமும் நடக்கும் கதைதான்.

நள்ளிரவானாலும் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக்கொண்டு வெளியே இருட்டை எந்தவித பயமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருப்பதும் என்னுடைய மூத்த மகளுடைய விபரீத வழக்கங்களுள் ஒன்று. நானோ என் மனைவியோ இதைப் பார்த்துவிட்டு கதவை அடைக்கச் சென்றாலும் அழுகைதான். ‘சரி போய்த் தொலை’ என்று வாசல் விளக்கையும் விடிய விடிய எரிய வைத்துவிட்டு செல்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் விழிப்போம் நானும் என் மனைவியும். ‘இதென்னடி பழக்கம்னு மண்டையில ரெண்டு போட்டு படுக்க வைக்கறத விட்டுட்டு என்னடி பிள்ளைய வளக்கறே?’ என்பார் என் மாமியார்.

அப்படி ஒரு நாள் கதவைத் திறந்துவைத்துவிட்டு நான் என்னுடைய படுக்கையில் சென்று விழ என் மகளின் குரல், ‘அப்பா வெளியில ஒரு சிங்கம் வந்து நின்னுக்கிட்டு நம்ம பாப்பாவ கேக்குதுப்பா..’

பதறியடித்துக்கொண்டு நான், என் மனைவி, என் மாமியார் ஓடி சென்று  பயத்தில் அலறிக்கொண்டிருந்த என் மகளை வாரியணைத்துக்கொண்டு வாசற்கதவை சாத்திவிட்டு அவளை சுவாசப்படுத்திவிட்டு படுக்கச் செல்ல விடியற்காலை இரண்டு மணியாகிவிட்டது..

‘விடிஞ்சதும் முதல் வேலையா உம் மாப்பிள்ளக்கிட்ட சொல்லி வேற வீட்ட பாக்கச் சொல்லு. நல்லா வீட்ட பார்த்து வந்தீங்க. ஏதோ நம்ம ஊர் மைய வாடியில (மயானத்துல) இருக்கறா மாதிரி இருக்கு.’ என்றார் என் மாமியார்..

தொடரும்..


22 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 102

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு காய்கறிகளை மார்கெட்டில் பார்த்துதான் பழக்கம். அதுவும் சென்னையில் நான் இருந்த பகுதியில் காய்கறிகள் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவதுண்டு. ஆகவே பால்கனியில் ரோஜா செடிகளை வளர்ப்பதைத் தவிர விவசாயம் என்றால் என்ன என்பதை சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான விவசாயிகள் நிகழ்ச்சியில்தான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் தஞ்சையில் நாங்கள் இறுதியாய் குடிபுகுந்த வீட்டைச் சுற்றிலும் இருந்த காலி இடம் என் மனைவிக்கு நாமும் காய்கறிகளை வீட்டிலேயே வளர்த்தாலென்ன என்று ஒரு சபலத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அதற்கு முன்பு குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தில் தக்காளி, வெண்டை, புடலை, அவரை போன்ற காய்கறி செடிகள் செழித்து வளர்ந்திருந்ததைப் பார்த்ததிலிருந்தே என் மனைவிக்கு இந்த யோசனைதான். ‘நாமளும் இந்த மாதிரி வீட்லயே நமக்கு தேவையான காய்கறிகளை வளர்த்தா எவ்வளவு நல்லாருக்கும்?’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அது புதுவீட்டுக்கு வந்து வீட்டைச் சுற்றிலும் இருந்த வெற்று இடத்தைப் பார்த்ததிலிருந்து இன்னும் கூடியது.

‘இங்க பார், நீ நினைக்கறா மாதிரி அது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்லை. விதைய போட்டுட்டு தண்ணிய ஊத்திட்டா செடி தன்னால வளந்துரும்னு நினைச்சிக்கிட்டிருக்கே. அதுக்கு இன்னும் என்னென்னமோ செய்யணும். ரெண்டு வயசு பொண்ண வச்சிக்கிட்டு சமாளிக்கறதுக்கே உனக்கு நேரம் போறலை. இதுல இத வேற இழுத்துப் போட்டுக்காத.. மிஞ்சிப்போனா இன்னும் ரெண்டு மூனு வாரத்துல பிரசவத்துக்கு ஊருக்கு போவேண்டிய ஆளு நீ. இப்ப இந்த வேலை தேவைதானா? செடிய நடுறேன், தண்ணிய ஊத்துறேன் பேர்வழின்னு கீழ விழுந்து ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணிக்காதே. அப்புறம் உங்கம்மாவுக்கு நான் பதில் சொல்லமுடியாது’ என்று நான் அடித்த லெக்சர் மேடத்தின் காதில் விழுந்தால்தானே.

அவ்வார இறுதியில் சனிக்கிழமை அரைநாள் என்பதால் மதியம் உணவுக்கு வீட்டுக்கு சென்றபோது ஒரு வயசானவர் வீட்டுக்கு பின்புறம் இருந்த இடத்தில் மும்முரமாக மண்வெட்டியால் கொத்தி சீர்படுத்திக்கொண்டிருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த என் மனைவியோ நான் வந்து நிற்பதையும் கவனியாமல் தோட்டக்காரரை ‘அங்க கொத்துங்க. இப்படி செய்ங்க, அப்படி செய்ங்க’ என்று மிரட்டிக்கொண்டிருக்க அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த செம்மண்ணில் என் மகள் புரண்டு விளையாடி செக்க செவேல் என்று நிறம் மாறியிருந்தாள்.

சரி, மூன்றாவது மனிதர் இருக்கும் நேரத்தில் பிரச்சினை செய்யவேண்டாம் என்று நினைத்த நான் என் மகளை அள்ளி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். அடுத்த பத்து நிமிடம் குழந்தையைக் கதற, கதற அழுத்தி தேய்த்து குளிப்பாட்டி அவளை பழைய நிறத்துக்கு மாற்றி எடுப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டுக்குள் ஓடி வந்த என் மனைவி. ‘என்னங்க.. நீங்க எப்ப வந்தீங்க? வந்ததும் வராததுமா பாப்பாவ ஏன் குளிப்பாட்டறீங்க?’ என்று கேட்டபோதுதான் விளங்கியது அவள் மண்ணில் புரண்டு விளையாடியதைக் கூட அவர் கவனிக்கவில்லையென்பது..

‘நல்லா இருக்கு, நீ குழந்தைய பார்த்துக்கற லட்சணம். நிலத்த கொத்தி எடுக்கறப்பவே இப்படீன்னா, இன்னும் விதைய போட்டு வளர்க்க ஆரம்பிச்சா உம் பொண்ணையே மறந்துருவே போலருக்கே.. அதுக்குத்தான் சொன்னேன் இந்த வேலையெல்லாம் வேணாம்னு.’ என்றேன் சற்றே கோபத்துடன்.

என்னுடைய கோபம் எப்போதுமே என் மனைவியிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நான் கோபமாயிருக்கிறேன் என்று தெரிந்ததுமே அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றுவிடுவது அவருடைய டெக்னிக்.. ஃபயரிங் ரேஞ்சிலிருந்து விலகிப்போய்விட்டால் பிரச்சினையில்லையே?

‘இருங்க, அவர அனுப்பிச்சிட்டு வந்திடறேன்.’ என்றவாறு சென்றுவிட நானே சாப்பாடு மேசையில் எனக்கென எடுத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு முடித்தேன். சனிக்கிழமையென்றாலே சாப்பிட்டதும் ஒரு குட்டித்தூக்கம் போடுவது வழக்கம்.

குழந்தையை கட்டிலில் கிடத்தி தூங்க வைத்துவிட்டு அருகிலேயே படுத்தவன் அப்படியே உறங்கிப் போனேன். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து எழுந்தவன் வீட்டின் பின்புறத்திலிருந்து பேச்சுக் குரல் வரவே, ‘இன்னுமா அந்த ஆள் போகலை.’ என்று முனுமுனுத்தவாறு சென்று பார்த்தேன்.

என்னுடைய மனைவியின் மேற்பார்வையில் அந்த வயாதானவர் சுமார் இரண்டாயிரம் சதுர அடி நிலத்தை கொத்தி முடித்து சதுர, சதுரமாக நிலத்தை வகுந்து பாத்தி கட்டி விதைகளை தெளித்துக் கொண்டிருந்தார். பின்புற வாசலருகே கிடந்த காலி விதை பாக்கெட்டுகளை எடுத்துப் பார்த்தேன்..

முன்பிருந்த வீட்டில் நான் பார்த்த அதே தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், அவரை விதைகள்..

தோட்டத்தின் மூலையில் சுற்றுச்சுவரையொட்டி மூங்கிலாலான ஒரு சிறிய பந்தல் அவரை, புடலைக்கு தயாராக இருந்தது..

நான் பார்த்த பார்வையிலேயே என்னுடைய கோபத்தை புரிந்துக்கொண்ட என் மனைவி தோட்டக்காரரைப் பார்த்து கண்சாடைக் காட்டி, ‘சும்மா இருங்க. அவர் போட்டும், பேசிக்கலாம்.’ என்றார் குரலெழுப்பாமல்.

அவர் அடுத்த அரைமணியில் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிச் செல்ல, என் மனைவி ‘நான் பிரசவத்துக்கு ஊருக்கு போகலை. நாம இப்ப பாக்கற நர்சிங் ஹோமுலயே பிரசவத்த வச்சிக்கலாம். எங்கம்மா இப்ப வீட்ல சும்மாத்தான இருக்காங்க. அவங்கள இங்க ஒரு ரெண்டு மாசத்துக்கு வரச்சொல்லிட்டா போச்சி.’ என்றார் சாவகாசமாக.

‘ஏன், இந்த காய்கறி விவசாயம் கெட்டுப் போயிரும்னா இங்கேயே பிரசவத்த பார்த்துக்கலாங்கறே? முதல் பிரசவத்துல ஊர்ல இருந்தப்பவே சரியான டைமுக்கு போகாம அவஸ்தைப் பட்டேன்னே. இப்ப ஊர் பேர் தெரியாத ஊர்ல உங்கம்மா வந்து சேர்றதுக்கு முன்னாலயே வலியெடுத்தா யார் உன்ன கூட்டிக்கிட்டு போறது? அதெல்லாம் ஒன்னும் வேணாம். அப்படியே இங்க பிரசவம் வச்சிக்கிட்டாலும் குழந்தைய பார்ப்பியா இத பார்ப்பியா?’

என்னுடைய எல்லா கேள்விக்கும் தயாராக ஒரு பதிலை வைத்திருந்த என் மனைவியிடம் இனியும் பேசி பலனில்லை என்பதை உணர்ந்த நான், ‘சரி. இப்பவே தூத்துக்குடிக்கு ஃபோன் போடு. உங்கம்மாவையே கேட்போம்.’ என்றேன்.

ஆனால் நான் நினைத்ததற்கு நேர் மாறாக என்னுடைய மாமியாரும், மாமனாரும் என்னுடைய மனைவியின் யோசனையை அப்படியே ஏற்றுக்கொள்ள, ‘நீங்க கவலைப்படாதீங்க மாப்பிள்ளை.. நான் அவ அம்மாவ நாளைக்கே அனுப்பி வைக்கிறேன். தஞ்சாவூர்லதான் மெடிக்கல் காலேஜே இருக்கே. அப்புறம் மருத்துவத்துக்கு என்ன பிரச்சினை.’ என்று என்னுடைய மாமனார் கூற என்னால் ஒன்றும் மறுத்துப் பேச முடியாமல் போனது.

‘சரி.. நீயாச்சி, உங்கம்மாவாச்சி எப்படியோ போங்க. அப்புறம் ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சி.. எங்கம்மாவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. இப்பவே சொல்லிட்டேன்.’ என்ற எச்சரிக்கையுடன் முடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

அடுத்த நாளே வந்து சேர்ந்த என்னுடைய மாமியாரும் தோட்டத்தைப் பார்த்ததும், ‘அட எம்பொண்ணு கூட உருப்படியா ஒரு காரியத்த செஞ்சிருக்காளே.’ என்று வியந்து நிற்க ‘பார்த்தீங்களா நீங்களும் இருக்கீங்களே?’ என்பதுபோல என்னைப் பார்த்தார் என் மனைவி.

அடுத்த இரண்டு நாட்களில் தோட்டக்காரர் வந்திருந்து தண்ணீர் ஊற்றுவதிலிருந்து, களை எடுப்பது, தக்காளி செடி வளர்ந்து வரும்போது வளைந்துவிடாமல் இருக்க என்ன செய்வது என விலாவாரியாக சொல்ல சொல்ல என் மனைவியும் மாமியாரும் படு சீரியசாக குறித்துக்கொண்டனர்.

விதைகள் முளைக்க ஆரம்பித்து, அடுத்த இரண்டு வாரங்களில் குட்டி, குட்டியாய் செடிகள் முளைக்க ஆரம்பிக்க, இதெல்லாம் தேவைதானா என்று நினைத்த என்னையும் ஒரு இனம் புரியாத ஆர்வம் பற்றிக்கொண்டது. என் இரண்டரை வயது மகளுக்கோ கேட்கவே வேண்டாம். நேரம் காலம் தெரியாமல் தோட்டத்தை விட்டு வீட்டுக்குள் வரவே மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

ஆக, அன்று துவங்கிய காய்கறி விவசாயம் கன ஜோராக அடுத்த ஒரு வருடம் நீடித்தது. நான் முற்றிலும் எதிர்பார்க்காத அளவுக்கு விளைச்சல் அமோகமாக விளைய நாங்கள் உபயோகித்ததுபோக என்னுடைய கிளையிலிருந்த மூன்று அலுவலர்கள், என்னுடைய அலுவலக உரிமையாளர்கள் குடும்பங்களுக்கும் சப்ளை போனது..

***

நான் எதிர்பார்த்தது போலவே என்னுடைய மனைவிக்கு மருத்துவர் குறித்திருந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பிரசவ வலி வர அலுவலகத்திலிருந்த நான் உடனே என்னுடைய உரிமையாளரின் வாகனத்தில் விரைந்து சென்று அவரை நான் தங்கியிருந்த வீட்டிற்கு மிக அருகாமையிலிருந்த மருத்துவமனையிலேயே சேர்த்தேன்.

என்னுடைய மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில்தான் நடிகர் திலகத்தின் மகளும் முதல் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய மூத்த சகோதரர் நடிகர் பிரபு அவ்வளவாக பிரபலம் அடைந்திருக்கவில்லை. இருந்தாலும் நடிகர் திலகத்தின் மகனாயிற்றே.. அவருடைய தங்கை அனுமதிக்கப்பட்டிருந்த அறையைச் சுற்றி எப்போதும் ஒரு சிறு கூட்டம் அலைந்துக்கொண்டிருக்கும்..

என்னுடைய மனைவி அனுமதிக்கப்பட்ட அன்று இரவே பிரசவம் எந்தவித பிரச்சினையுமில்லாமல் நடந்தது. என்னுடைய மூத்த மகளைபோலவே இரண்டாவதாக பிறந்த மகளும் என்னுடைய நிறத்தைக் கொண்டிராமல் என் மனைவி நிறத்தில் இருந்தது என் மனைவியைவிட மாமியாருக்கு மிகவும் திருப்தி..

என்னுடய மாமனார், பள்ளியில் படிக்கும் இரண்டு கொழுந்தன்மார்களும், என்னுடைய மாமியாருடைய தங்கைகளும் அடுத்த நாளே வந்து சேர என் வீட்டில் ஒரு குட்டி கூட்டத்தால் கலகலத்தது..


தொடரும்..

20 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 101

சட்டென்று பொங்கி எழுந்த கோபத்தில், ‘உங்க கிட்ட குடுக்க முடியாதுங்க. இத கொண்டு வந்து கொடுத்த ஆள்கிட்டதான் குடுக்க முடியும். அவர வரச்சொல்லுங்க’ என்று விரட்டியடித்தேன் என்னுடைய அந்த செயலும் வில்லங்கத்தை விலைக்கு வாங்கப்போகிறது என்பது தெரியாமல்.

வில்லங்கமான ஆட்களை எதிர்கொள்ளும்போது ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பது அனுபவத்தில்தான் தெரியவரும்.

எனக்கு அப்போதிய அனுபவம் இல்லை என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இச்சம்பவம்.

அப்போக்குவரத்து நிறுவனத்தின் முதலாளி எத்தனை எத்தன் என்பதை நான் சரிவர அறிந்திருக்கவில்லை. அத்துடன் அவருடைய செல்வாக்கு எங்கெல்லாம் பரவி இருந்தது என்பதையும் பிறகுதான் அறிந்துக்கொண்டேன்.

என் அலுவலகம் தேடிவந்த வேலையாளிடம் அவருடைய பத்திரத்தைக் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டு நான் என்னுடைய அலுவலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அலுவலகம் முடியும் நேரத்தில் என்னைத் தேடிக்கொண்டு என்னுடைய பகுதியிலிருந்த காவல் நிலையத்திலிருந்து ஒரு கான்ஸ்டபிள் வந்தார்.

சாதாரணமாக என்னுடைய கிளையில் தங்க நகைகள் மீது கடன் பெற காவல்துறையினர் வருவதுண்டு என்பதால் நானோ அல்லது என்னுடைய ஊழியர்களோ அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று வந்தவரும் ஏற்கனவே என்னுடைய கிளைக்கு வந்து அறிமுகமானவர்தான்.

நானும் காசாளரும் வங்கி கணக்கு வழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு ரொக்கத்தையும் அன்று ஈடு வைக்கப்பட்ட தங்க நகைகளையும் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு அப்போதுதான் வெளியில் வந்து நின்றுகொண்டிருந்தோம்.

அவரை புன்னகையுடன் வரவேற்ற என்னுடைய காசாளர், ‘என்ன சார் கோல்ட் லோனா. இன்னைக்கி முடியாதே சார்.’ என்றார்.

அவரோ மிகவும் சீரியசாக, ‘சார்.. நா அதுக்கு வரலை. மேனேஜர் சார்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயமா பேசணும்.’ என்றார்.

நான், ‘என்ன சார் சொல்லுங்க?’ என்றேன்.

அவர் சற்றே தயங்கி, ‘சார் உங்க கேபின்ல போயி பேசலாம்னு நினைக்கிறேன். விஷயம் கொஞ்சம் சிக்கலானது.’ என்றார்.

நானும் காசாளரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

‘சரி சார். உள்ள வாங்க.’ என்று கூறிவிட்டு காசாளரைப் பார்த்து, ‘நீங்களும் வாங்க.’ என்று கண்ணால் சாடை காட்டிவிட்டு அவரை என்னுடைய காபினுக்கு அழைத்துச் சென்று அமர்ந்தேன்.

என்னுடைய காசாளரும் அறைக்குள் நுழைவதைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே சங்கடப்பட்டார். ‘சார் உங்கக் கிட்ட தனியா பேசலாம்னு..’

நான் அவரையும் என்னுடைய காசாளரையும் மாறி, மாறி பார்த்தேன். காசாளர் என்னுடைய பார்வையை தவறாக புரிந்துக்கொண்டு, ‘அப்போ நான் வெளிய நிக்கறேன் சார், நீங்க பேசிட்டு வாங்க.’ என்றவாறு அறையை விட்டு வெளியேற முயன்றார்.

நான் அவரை தடுத்தி நிறுத்திவிட்டு கான்ஸ்டபிளைப் பார்த்து, ‘சார் நீங்க சொல்ல வந்தத தாராளமா சொல்லலாம். இவர் எனக்கு அசிஸ்டெண்ட். இவருக்கு தெரியாத ரகசியம் ஒன்னும் இல்லை.’ என்றேன்.

அவர் சற்று தயங்கிவிட்டு, ‘சார் இன்னைக்கி காலைல ----------- டிரான்ஸ்போர்ட் ஓனர் அவரோட ஆள அனுப்பி ஏதோ டாக்குமெண்ட கேட்டாராம். நீங்க அதெல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்களாமே சார்.’

நான் வியப்புடன் என்னுடைய காசாளரைப் பார்த்தேன். ‘ஆமாம் சார். ஏன்னா அந்த டாக்குமெண்ட முதல்ல கொண்டு வந்த ஆள் வந்தாத்தான் குடுக்க முடியும்னு சார் சொல்லியனுப்புனார். அதுக்கென்ன இப்போ.’ என்றார் அவர் சற்றே கோபத்துடன்.

கான்ஸ்டபிள் அவரைப் பார்த்து, ‘சார்.. நான் மேனேஜர்கிட்ட பேசிட்டுப் போக வந்திருக்கேன். நீங்க சும்மா கேட்டுக்கிட்டிருங்க.’ என்றார் பதிலுக்கு சூடாக.

நான் இருவரையும் கையமர்த்திவிட்டு, ‘சார்.. அவர் கோபத்தோட சொன்னாலும் அதான் நடந்தது. அந்த பத்திரத்த யார் கொண்டு வந்து கொடுத்தாங்களோ அவர் வந்தாத்தான் கொடுக்க முடியும்.’ என்றேன். ‘நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. இதுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்னு நான் தெரிஞ்சிக்கலாமா சார்?’

‘அந்த டிரான்ஸ்போர்ட் முதலாளி உங்க மேல ரிட்டன் கம்ப்ளெய்ண்ட் குடுத்துருக்கார் சார். இல்லன்னா நாங்க ஏன் தலையிடறோம்?’ என்றார் உரத்த குரலில்.

குறிக்கிட முயன்ற என்னுடைய காசாளரை தடுத்து நிறுத்திய நான், ‘என்னன்னு சார் கம்ப்ளெய்ண்ட்?’ என்றேன்.

‘நீங்க அவரோட சொத்து பத்திரத்தை சட்ட விரோதமா வச்சிக்கிட்டிருக்கிறீங்களாம். அவர் அந்த சொத்த விக்க தீர்மானிச்சிருக்கறதுனால அது உடனே வேணுமாம். வில்லங்கம் பண்ணாம குடுத்துருங்க சார். அது பெரிய இடம்.. உங்களுக்கேன் வம்பு?’

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. என்ன அக்கிரமம்! போலியான ஒரு பெயரைக் கொடுத்து ஒரு வங்கியையே ஏமாற்ற நினைத்த ஒருவர் கொடுத்த புகாருக்கு அடிபணிந்துவிடச் சொல்லி சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய காவல்துறையே அது பெரிய இடம், உங்களுக்கேன் வம்பு என்று பாதிக்கப்பட்ட என்னை பயமுறுத்துகிறது..

சட்டென்று மனதில் ஒரு யோசனை தோன்ற, ‘சார் ஒரு நிமிஷம் வெளியே வெய்ட் பண்ண முடியுமா? நான் எங்க பேங்க வக்கீல்கிட்ட பேசணும்.’ என்றேன்.

அவர் எரிச்சலுடன் என்னைப் பார்த்தார். ‘எதுக்கு வக்கில், கோர்ட்டுன்னு யோசிக்கறீங்க? முதல்ல நீங்க யாரு, யார்கிட்ட மோதறீங்கன்னு தெரிஞ்சிக்குங்க. வக்கீல்ங்க சொல்லிட்டு போயிருவாங்க. அப்புறம் மாட்டிக்கிட்டு அவஸ்தை படப்போறது நீங்க. பேசாம காதும், காதும் வச்சா மாதிரி அந்த பத்திரத்தை எங்கிட்ட குடுத்துறுங்க.. இல்லையா, எங்கூட ஸ்டேஷன் வரைக்கும் வந்து நீங்களே எங்க இன்ஸ்பெக்டர் அய்யாக்கிட்ட குடுத்துருங்க. ஏன் சார் வம்ப விலைக்கு வாங்கறீங்க?’

நான் என்னுடைய காசாளரைப் பார்த்தேன். அவர் வேண்டாம் என்பது போல தலையை அசைக்க கான்ஸ்டபிள் கோபத்துடன் அவரைப் பார்த்தார். ‘யோவ் நீ எந்த ஊர் ஆள்யா? சார் கொடுக்கறேன்னாலும் நீ விடமாட்ட போலருக்கு? ஒழுங்கா வீடு போய் சேரணும்னு நெனப்பில்லையா? போய்யா உன் சோலிய பார்த்துக்கிட்டு..’ என்று இரைய அலுவலக நேரம் முடிந்தும் போகாமல் வெளியில் காத்துக்கொண்டிருந்த என்னுடைய மற்ற அலுவலர்களும் கதவைத் திறந்துக்கொண்டு என் அறைக்குள் நுழைந்தனர்.

விஷயம் விபரீதமாகும் முன்பு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நின¨ப்பில் நான், ‘சார்.. நீங்க பேசறது கொஞ்சம் கூட சரியில்லை. என் ஆஃபீஸ்குள்ள வந்து என்னோட கேஷியரையே நீங்க மிரட்டறீங்க. சரி, ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க. நான் வெளிய போயி வக்கீல்கிட்ட பேசிட்டு வந்திடறேன். அவர கன்சல்ட் பண்ணாம என்னால ஒன்னும் செய்யமுடியாது.’ என்றவாறு அறையை விட்டு வெளியேறி என்னுடைய வழக்கறிஞருக்கு ஃபோன் செய்தேன்.

அவர் நான் கூறியதை முழுவதும் கேட்டுவிட்டு, ‘சார்.. நீங்க ஒன்னும் பதற்றப்படாதீங்க. பத்திரம் எங்கிட்ட இருக்குன்னு சொல்லிருங்க. கான்ஸ்டபிள் சொன்னா மாதிரி இது கொஞ்சம் பெரிய இடம்தான். ரொம்ப கவனமா டீல் பண்ணனும். நீங்க ஃபோன அந்த கான்ஸ்டபிள்கிட்ட குடுங்க. நான் பேசறேன்.’ என்றார்.

நான் பேசிக்கொண்டிருந்த தொலைப்பேசியின் வேறொரு இணைப்பு என் அறைக்குள் இருந்ததால் நான் அவருடைய அழைப்பை அதற்கு மாற்றிவிட்டு என்னுடைய அறைக்குள் நுழைந்து கான்ஸ்டபிளிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன். ‘எங்க வக்கீல் லைன்ல இருக்கார். உங்களோட பேசணுமாம்.’

அவர் மனமில்லாமல் ஒலிவாங்கியை என்னிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி, ‘யார் சார் நீங்க?’ என்றார் எரிச்சலுடன்.

மறுமுனையில் என்ன சொன்னாரோ அடுத்த நொடியே, ‘சார் நீங்கதான் இவங்க வக்கீலா? எனக்கு தெரியாம போயிருச்சி சார். தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரு சின்ன சிக்கல்.. அதான்..’ என்று சங்கடத்துடன் இழுத்தார்.

அடுத்த ஐந்து நிமிடம், ‘சரி சார். ஆமா சார்.. சரி, சார்.’ என்று பலமுறை ஆமாம் போட்டுவிட்டு இறுதியில் ஒலிவாங்கியை என்னிடம் நீட்டியவரின் முகத்தில் முன்பிருந்த எரிச்சலும் கோபமும் சுத்தமாய் மறைந்திருந்தது! ‘சார் உங்ககிட்ட பேசணுமாம்..’

நான், ‘யெஸ் சார்.’ என்றேன் என்னுடைய வழக்கறிஞரிடம்..

‘சார் நான் நல்லதனமா சொல்லியிருக்கேன். நான் சொன்னா மாதிரியே பத்திரம் எங்கிட்டதான் இருக்கு மேனேஜர்கிட்ட பேசி பிரயோசனம் இல்லை. பத்திரம் வேணும்னா அந்த டிரான்ஸ்போர்ட் முதலாளி எங்கிட்ட வந்து வாங்கிக்கச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கேன். என்ன சார் .. நான் சொன்னாப்பலே செஞ்சிரலாம் இல்லே. இல்லேன்னா உங்கள வீடுவரைக்கும் வந்து மிரட்டுனாலும் மிரட்டுவாங்க..’

எனக்கு அவர் கூறிய யோசனை அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் வேறு வழி தெரியாததால் சரி என்றேன் அரைமனதுடன்.

என்னுடைய குரலில் தொனித்த அதிருப்தி அவருக்கு புரிந்திருக்கவேண்டும். உடனே அவர், ‘சார் இதத்தவிர வேறு யோசனை உங்களுக்கு இருந்தா சொல்லுங்க. அப்படியே செஞ்சிரலாம்.’ என்றார்.

‘அப்படி இல்லை சார்.. என்கிட்ட இந்த பத்திரத்த கொடுத்த ஆள் நாளை மறுநாள் வந்து நான் கொடுத்த பத்திரத்த திருப்பி தாங்க சார்னு கேட்டா என்ன பண்றதுன்னுதான் யோசிக்கறேன்.’ என்றேன்.

அவர் சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, ‘அப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க?’ என்றார். அவருடைய லோசனையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அதிருப்தி குரலில் தெளிவாகத் தெரிந்தது..

இவரை விட்டால் இப்பிரச்சினையிலிருந்து சுமுகமாக என்னால் வெளிவர இயலாது என்று நினைத்தேன். ஒருவேளை சேட்டுக்கு இந்த டிரான்ஸ்போர்ட் முதலாளியைத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரை நம்பிக்கொண்டு என்னுடைய வழக்கறிஞருடைய லோசனையை நிராகரித்தால் ஒருவேளை சேட்டுக்கு இந்த ஆளை தெரியாமல்போய் மீண்டும் இவரிடமே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்றும் நினைத்தேன்.

சரி.. வருவது வரட்டும் என்ற நினைப்பில், ‘இல்லை சார் நீங்க சொன்னபடியே செய்யலாம்.ஆனால் அந்த ஓனர்கிட்டருந்து கைப்பட நாந்தான் என்னுடைய பத்திரத்தை என்னுடைய வேலையாள் மூலமாக கடன் பெறுவதற்காகக் கொடுத்தனுப்பினேன். எனக்கு இப்போது கடன் தேவையில்லை என்பதால் பத்திரத்தைத் திருப்பித் தர கேட்டுக்கொள்கிறேன்.’னு எங்க பேங்குக்கு அட்றஸ் பண்ணி ஒரு ரிக்வெஸ்ட்டும் பத்திரத்த அவர்கிட்ட கொடுக்கும்போது பத்திரத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று ஒரு ரசீதும் பெற்றுக்கொண்டால் நல்லாருக்கும்னு நினைக்கிறேன்.’ என்றேன்.

அவர் உடனே, ‘நல்ல ஐடியா, சார். அப்படியே செஞ்சிடறேன். நீங்க கவலைப்படாதீங்க.’ என்றார்.

நான் தொலைப்பேசியை துண்டித்துவிட்டு நிமிர கான்ஸ்டபிள் எழுந்து ‘நான் வரேன் சார். உங்க வக்கீல் சார் சொன்னத அப்படியே எங்க அய்யாகிட்ட சொல்லிடறேன்.இனி உங்க பாடு உங்க வக்கீல் பாடு. அப்புறம் ஏதாச்சும் வில்லங்கமா ஆச்சுதுன்னா எங்கக்கிட்ட வராதீங்க. சொல்லிட்டேன்.’ என்று வெளியேறினார்.

என்னுடைய காசாளர் என்னைப் பார்த்தார். ‘என்ன அக்கிரமம் பார்த்தீங்களா சார்? இது தஞ்சாவூர்தானான்னே ஆச்சரியமா இருக்கு. பம்பாய் மாஃபியாம்பாங்களே அந்த ரேஞ்சுக்கு நடக்குது பாருங்க?’ என்று சிரிக்க நானும் அறையிலிருந்த ஊழியர்களும் சிரித்தோம்.

உண்மைதான்.. அப்படித்தான் இருந்தது அந்த அனுபவம்!

தொடரும்..