21 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 84

பண்ணையாரயையும் அவருடைய வளர்ப்பு மகளையும் என் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் என் கிளையை அடைந்தபோது என்னுடைய பொது மேலாளரும், வட்டார மேலாளரும் கிளம்புவதற்கு தயாராக இருந்தனர்.

நான் திரும்பிய நேரம் உணவு இடைவேளை நேரமாக இருந்தும் காலையில் திறப்புவிழாவுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களில் பலர் எனக்காக காத்திருந்தனர்.

‘வாங்க டிபிஆர்.’ என்று என்னை வரவேற்ற பொது மேலாளர், ‘How is your Daughter?’ என்றார்.

நான் நன்றியுடன் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். ‘She is better Sir. Thankyou so much.’

அவர் என்னுடைய வாடிக்கையாளர்களைச் சுட்டிக்காட்டி, ‘இவங்க எல்லாரும் ஒரு மணி நேரத்துக்கும் மேல நீங்க திரும்பி வர்றதுக்காக காத்துக்கிட்டிருக்கறதுலருந்தே நீங்க எந்த அளவுக்கு உங்க கனெக்ஷன்ஸ டெவலப் பண்ணியிருக்கீங்கறது தெரியுது. I am really happy TBR, keep it up.’ என்றார்.

அங்கு நின்றுக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோனோர் என்னுடைய கிளையில் கடனுதவியை எதிர்பார்த்திருந்த வர்த்தகர்கள்தான். என்றாலும் தஞ்சையில் இருபதுக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் இருந்த சூழ்நிலையில் என்னுடைய கிளையில் கடனுதவி கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களில் யாரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு மேலாளருக்காகக் காத்திருந்திருக்க மாட்டார்கள் என்ற நன்றியுணர்வுடன் அங்கு குழுமியிருந்த எல்லோரையும் நன்றியுடன் பார்த்தேன்.

என்னுடைய வட்டார மேலாளர், ‘TBR, we have roughly calculated the opening day deposits. It is more than double of what we fixed for your branch. Congrats. It also appears that you need to mobilize only little more than Rs.------ to achieve your current year’s annual budget.’ என்றவாறு என்னுடைய பொது மேலாளரைப் பார்த்து விஷமத்துடன், ‘Sir should we not increase his annual budget?’ என்றார்.

அங்கு குழுமியிருந்தவர்கள் உரக்க சிரிக்க என்னுடைய பொது மேலாளர், 'Don’t spoil his opening day mood. Let him enjoy this achievement for a while, at least until the next BM’s conference. What do you say TBR?’ என்றார் புன்னகையுடன்.

நான் பணிவுடன், ‘Whatever you say, Sir’ என்றேன்.

‘That’s good. Keep up the good work and build upon it.’ என்றவாறு குழுமியிருந்த அனைத்து வாடிக்கையாளர்களையும் பார்த்து கும்பிட்டார். ‘Thank you for your overwhelming response. Please continue to extend your support to our Bank. I assure our continued assistance to your business needs.’ என்றார். பிறகு என்னை நோக்கி, ‘Do not hesitate to contact me personally for whatever you need TBR. I’ll also tell Chairman about what you have achieved today. I know that it is a small town. Still you have achieved this much. Good. Your work will be definitely rewarded.’ என்றார்.

உடனே என்னுடைய வட்டார மேலாளர், ‘Sir, he has been promoted to scale III in the last promotion i.e. after he joined at Thanjavur.’ என்றார்.

‘I know that of course. That’s for what he had achieved in the past, before his promotion.’

அத்துடன் அவர்கள் இருவரும் என்னிடமும் அங்கிருந்த எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றனர். அவர்களை வழியனுப்பிவிட்டு திரும்பியதும், பாய், சேட், நாயக்கர், செட்டியார் உள்பட என்னுடைய பதவியுயர்வை அறிந்திராத பல வாடிக்கையாளர்களும் என்னை வாழ்த்திவிட்டு விடைபெற்றனர்.

அன்று மாலையில் வரவு செலவை முடித்து ஜெனரல் லெட்ஜரை முடித்தபோது அன்று துவக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையையும், டெப்பாசிட் செய்யப்பட்ட மொத்த தொகையையும் பார்த்தபோது உண்மையிலேயே என்னுடைய சாதனையா இது என்று மலைத்துப் போனேன்.

சென்னை கிளையின் துவக்கத் தினத்தன்று இதைவிட மூன்று மடங்கு அதிக தொகை கிடைத்தது உண்மைதான். ஆனால் அது சென்னை! அது மட்டுமல்லாமல் என்னுடைய கிளை திறக்கப்படுவதற்கு முன்னரே மூன்று கிளைகள் சென்னையிலிருந்ததாலும் அக்கிளைகளில் நான் பல்வேறு நிலைகளில் பணி புரிந்திருந்ததாலும் எனக்கு நிறைய வாடிக்கையாள நண்பர்கள் இருந்தனர்.

ஆனால் தஞ்சை போன்ற சிறு நகரத்தில் அதுவும் நான் அங்கிருந்த மூன்றே மாதங்களில் இச்சாதனை நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். ஏறக்குறைய நான் சென்று சந்தித்திருந்த எல்லோருமே ஏதோ ஒரு வகையில் என்னை நினைவில் வைத்திருந்து எனக்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது என்னுடைய உழைப்பைப் பற்றி நினையாமல் தஞ்சையில் இத்தனை நல்ல உள்ளங்களா என்று நினைத்தேன்.

‘சார் சந்தோஷப்பட்டா போறாது. செமையா ஒரு பார்ட்டி குடுக்கணும்.’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். என்னுடைய காசாளர் தலைமையில் என்னுடைய மூன்று பேர் கொண்ட ஊழியர் குழு. என்னுடைய உதவி மேலாளரும் புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தார்.

‘நிச்சயமா. எங்க வேணும்னு சொல்லுங்க. போலாம்.’ என்றேன்.

அந்த நேரம் பார்த்து என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைந்தனர் என்னுடைய கட்டிட உரிமையாளர், அவருடைய மூத்த சகோதரர், அவருடைய மகன் மூவரும். ‘சார் உங்க எல்லாருக்கும் இன்னைக்கி ராத்திரி நம்ம வீட்லதான் பார்ட்டி. சூடா பிரியாணி.. நம்ம வீட்டு பிரியாணிய யாரும் சாப்டுருக்க மாட்டீங்க.’

‘அப்படியா சார். ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னாமாதிரி உங்க வீட்டு பிரியாணின்னா விசேஷமாத்தான் இருக்கும். மேனேஜர் சாரோட பார்ட்டி இன்னொரு நாளைக்கு வச்சிக்கலாம்.. இன்னைக்கு உங்க வீட்டு பார்ட்டிதான்.’ என்றார் என்னுடைய காசாளர்.

இந்த நேரத்தில் என்னுடைய காசாளரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் என்னை விட சுமார் ஆறு வயது மூத்தவர். வேலையிலும் என்னை விட மிகவும் சீனியர். தஞ்சைக்கு அருகிலிருந்த திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர். பதிமூன்று ஆண்டுகளாக சென்னைக் கிளையொன்றில் பணிபுரிந்துக்கொண்டிருந்தவர். பதவி உயர்வு ஒன்றும் வேண்டாம் ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்தவருக்கு தஞ்சையில் ஒரு கிளை துவக்கப்போகிறார்கள் என்ற தகவல் வந்ததும் நான் தான் அக்கிளைக்கு மேலாளராகப் போகிறேன் என்று கண்டுபிடித்து நான் சென்னையிலிருந்து மாற்றலாகி புறப்படவிருந்த கடைசி நாளன்று என்னை வீட்டில் வந்து சந்தித்து, ‘சார் எப்படியாச்சும் எனக்கு உங்க பிராஞ்ச்ல போஸ்டிங் வாங்கிக் குடுங்க சார். உங்களுக்கு ரொம்ப ஹெல்ஃபுல்லா இருப்பேன்.’ என்றார்.

அவர் கூறியிருந்தது போலவே நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் எனக்கு மிகவும் உதவியாயிருந்தார். கிளை துவங்கப்பட்ட காலத்தில் நேரம், காலம் பார்க்காமல் நான் அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பும் வரை கூடவே இருப்பார். கிளையில் பணம் செலுத்த, பட்டுவாடா செய்ய பகல் இரண்டு மணிவரைதான் என்றாலும் மாலை ஐந்து மணிக்கு வாடிக்கையாளர்கள் வந்து நின்றாலும் நான் கூறினால் உடனே பெற்றுக்கொள்ளவும், பட்டுவாடா செய்யவும் தயாராயிருப்பார். கணினியின் நாமமே இல்லாதிருந்த அந்த காலத்தில் ஐந்து மணிக்கு பணத்தை பெறவோ பட்டுவாடா செய்யவோ நேரிட்டாலும் அடுத்த அரைமணியில் அவருடைய பணியை முடித்துவிட்டு காபினைவிட்டு வெளியே வந்து ஜெனரல் லெட்ஜரை முடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் ஜூனியர் குமாஸ்தாவை ஒதுங்கிக்கொள்ள கூறிவிட்டு பத்தே நிமிடத்தில் அவருடைய தவற்றைக் கண்டுபிடித்து அசெட்/லையபிலிட்டி இரண்டையும் சமன் செய்துவிடுவார்.

என்னுடைய கிளையிலிருந்த என்னுடைய துணை மேலாளருக்கும் அத்தனை அனுபவமும், திறமையும் இல்லை. தமிழ் அவ்வளவாக பேசவும் தெரியாது. ஆனால் தான் அதிகாரி என்ற பந்தா கொஞ்சம் அதிகம். இருப்பினும் என்னுடைய காசாளர் அவரையும் ஒரு அதிகாரியாக மதித்து பணிவுடன் நடந்துக்கொள்வார். வாடிக்கையாளர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கத் தெரியாமல் அவர் தடுமாறிய நேரத்தில் எல்லாம் குறுக்கிட்டு சாதுரியமாக பதிலளித்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்.

அவருடன் நான் பணியாற்றிய அந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறைக்கூட அவர் கோபப்பட்டு நான் பார்க்கவே இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் நானோ அதற்கு நேரெதிர். மூக்கில்மேல் கோபத்தை வைத்துக்கொண்டு நிற்பேன்.

அவருடன் பழகிய அந்த குறுகிய காலத்தில் என்னுடைய போக்கிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்னுடைய காசாளர். சென்ற வருடம்தான் அதே தஞ்சைக் கிளையிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது தஞ்சை, திருச்சி, கரூர், கொடுமுடி போன்ற ஊர்களிலெல்லாம் என்னுடைய வங்கிக் கிளைகள் இருப்பதால் ஐந்தாறு வருடங்களுக்கு ஒரு முறை அவருக்கு மாற்றல்கள் இருந்தாலும் தன்னுடைய சொந்த ஊரைவிட்டு அதிக தூரம் அவர் செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நான் வருடா வருடம் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இருந்த பூண்டி மாதா தேவாலயத்திற்குச் செல்லும் நேரத்தில் தஞ்சையிலிருந்த விடுதிகளில் ஒன்றில் தங்கி அங்கிருந்து ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு சென்று திரும்புவேன். பிறகு தஞ்சையிலிருந்து ரயில் பிடித்து சென்னை திரும்புவேன்.

தஞ்சையில் தங்குவதற்கான லாட்ஜ் அறைகள், திரும்புவதற்கான ரயில் டிக்கட், தஞ்சையிலிருந்து பூண்டி சென்று திரும்ப வாடகைக் கார் வசதிகள் எல்லாவற்றையும் அவர் தஞ்சையிலிருந்தபோதெல்லாம் மனமுவந்து செய்துக் கொடுப்பார். அத்தனைச் சிறிய கிராமத்தில் வசித்தாலும் அவருடைய இரு ஆண்மக்களும் வளர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர்களாகி இன்று அமெரிக்காவில் ஒருவரும் கனடாவில் ஒருவரும் பணிபுரிய இவரும் இவருடைய மனைவி மட்டும் அதே திருக்காட்டுப்பள்ளியில் அமைதியான சூழ்நிலையில், சுத்தமான காற்றை அனுபவித்துக்கொண்டு..

‘என்ன இருந்து என்ன பிரயோசனம் சார்.. மூனு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் வருஷா வருஷம் அமெரிக்காவுக்கு போய்ட்டு அப்படியே கனடாவுக்கும் போய்ட்டு வருவோம். பின்லேடன் புண்ணியம் இப்ப ரெண்டு வருஷத்துக்கு ஒருதரம் போய் வர்றதுக்குக்கூட விசா குடுக்க மாட்றான். ஏகப்பட்ட கெடுபிடி. ரெண்டு பசங்களுக்கும் ரெண்டு ரெண்டு பேரப் பசங்க இருக்குதுன்னுதான் பேரு.. அதுங்கள பார்த்தே ரெண்டு வருஷத்துக்கு மேலாவுது..’ என்றார் அவர் என்னுடைய மூத்த மகளின் திருமணத்திற்கு வந்திருந்தபோது..

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்..

வீட்டுக்கு வீடு வாசற்படி...

தொடரும்6 comments:

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
கடந்த 2 பதிவுகளும் நெஞ்சைத் தொடுவதாக இருந்தது
//தஞ்சையில் இத்தனை நல்ல உள்ளங்களா என்று நினைத்தேன்.//
ருஷ்ய ராமநாதனுக்கு உள்ளம் குளிர்ந்திருக்கும்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

நான் தஞ்சையைப் பற்றி எழுதியது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

நான் இதுவரை பணியாற்றிய ஊர்களில் தஞ்சையில்தான் மிக அதிக அளவுக்கு நல்ல, எளிமையான மனிதர்களைச் சந்தித்தேன் என்றால் மிகையாகாது.

முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பது, அவர்களுக்கு உதவுவது, அத்துடன் நாம் செய்த மிகச்சிறிய உதவிகளையும் நினைவில் வைத்துக்கொண்டு நமக்கு உண்மையுள்ளவர்களாகவிருப்பது..

இதிலெல்லாம் தஞ்சை மக்களுக்கு நிகர் இல்லை..

G.Ragavan said...

நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லார் சொல் கேட்பத்வும் நன்றெ

நல்லவங்கள பாகுறதும் பழகுரதும் ரொம்பவே நல்லது. உங்களுக்கு அந்த வாஇப்பு கிடைச்சிருக்கிறது நல்லதே.

தஞ்சையப் பத்தி புகழ்ந்து எழுதுனதால அனேகமா இராமநாதன் ஒங்களுக்கு எதுவும் விருது குடுத்தாலும் குடுப்பாரு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லார் சொல் கேட்பத்வும் நன்றே//

உண்மைதான் ராகவன். நல்லவங்கள சந்திச்சதுக்கப்புறம் நம்ம மனசுல ஏற்படற சந்தோஷம் இருக்கே. அது ஒரு அலாதி அனுபவம்!


தஞ்சையப் பத்தி புகழ்ந்து எழுதுனதால அனேகமா இராமநாதன் ஒங்களுக்கு எதுவும் விருது குடுத்தாலும் குடுப்பாரு. //

என்ன இராமநாதன்.. ஜோவும், ராகவனும் சொல்றது கேக்குதா?

எப்போ பார்ட்டி? சொந்த ஊர்லயா? இப்போ இருக்க ஊர்லயா?

சீக்கிரம் சொல்லுங்க.. எங்கன்னாலும் நா ரெடி.. பாஸ்போர்ட் கூட இருக்கு..

இராமநாதன் said...

அப்பாடா,
ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். இத்தன நாள் எழுதுனதுக்கு பிராயச்சித்தம் குடுத்துட்டேன்! :)

பார்ட்டி தானே.. குடுத்திடுவோம். சீக்கிரமே. கொஞ்சம் பொறுமை!

விருதுதானே.. 'தஞ்சை கொண்ட தண்ணீர் மன்னன்' நல்லாருக்கா? பின்ன, எல்லா பாங்குகளுக்கும் மூணே மாசத்துல தண்ணி காட்டிட்டீங்களே!

tbr.joseph said...

அப்பாடா, வந்துட்டீங்களா இராமநாதன்? வாங்க.

உங்க பட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பார்ட்டிக்கப்புறம்தான் ஏத்துக்கறதா உத்தேசம்.

அடுத்த முறை தஞ்சைக்கு வரும்போது சொல்லுங்க..

அது சரி, உங்களுக்கு டவுணேவா.. அல்லது வெளியவா?