27 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 88

நாங்களிருவரும் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய வீட்டுக்காரர் அதீத கோபத்தில் முகமெல்லாம் சிவந்து ரெஸ்ட்லெஸ்சாகக் காணப்பட்டார்.

அவரை கைநீட்டி அடிக்க முற்பட்ட வேலையாளை என்னுடைய வீட்டுக்காரரின் தோட்டத்தில் வேலை செய்யும் பணியாட்கள் இருவர் பிடித்துக்கொண்டு நிற்க நிலமை படு டென்ஷனாக காணப்பட்டது..

ஆஃப்டர் ஆல் சுற்றுச் சுவரில் ஒரு சிறு பகுதி இடிந்து விழுந்ததற்கு இத்தனை களேபரமா என்று தோன்றியது எனக்கு.

எப்படி இவரால் அரசு அதிகாரியாக பணிபுரிந்து எந்த தொழிலாளர் பிரச்சினையிலும் அகப்பட்டுக்கொள்ளாமல் ஓய்வுபெற முடிந்தது என்றும் நினைத்தேன். இதை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது..

பால்கணியில் நின்றுக்கொண்டு என்னை ஒருவித கவலையுடனும், ஒருவித எரிச்சலுடனும் பார்த்துக்கொண்டு நின்ற என் மனைவியை அண்ணாந்து பார்த்தேன். ‘இது உங்களுக்கு தேவையா?’ என்று என்னை நோக்கி வாயசைத்தார் சப்தமில்லாமல்.

நான் யோசனையுடன் என்னுடன் வந்த பாயைப் பார்த்தேன்.

ஆபத்பாந்தவன் அனாதை ரட்சகன் என்பார்களே அதுபோல்தான் அவர் எனக்கு அன்று தோன்றினார்.

இம்மாதிரியான சூழ்நிலையில் அமைதியா இருந்தாத்தான் சார் சரியான முடிவுக்கு வந்து பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று எனக்கு பலமுறை உபதேசம் செய்தவர் அன்று என்ன நினைத்தாரோ, நான் சற்றும் எதிர்பார்க்காத விதமாக கோபத்துடன் ஆண்டெனா அடிக்க வந்திருந்த கடை பணியாளரை நெருங்கி அவருடைய சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்து விட்டார்..

‘ஏண்டா.. என்ன கொழுப்பு இருந்தா ஐயா வீட்டுக்குள்ள நுழைஞ்சி அவரையே அடிக்க கை நீட்டுவே.. ஐயா வயசென்ன உன் வயசென்ன?  கொன்னுருவேன்.. போடா இங்கருந்து.. உன் மொதலாளிகிட்ட சொல்லி உன் சீட்டை கிழிக்கறனா இல்லையா பாரு..’ என்று  சீறியதுடன் அவனைப் பிடித்துக்கொண்டிருந்த வேலையாட்களின் கைகளைத் தட்டிவிட்டு அவனை விடுவித்து வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டார்.

நான் மட்டுமல்லாமல் என்னுடைய வீட்டுக்காரரும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் திகைத்துப்போய் பாயை பார்த்ததிலிருந்தே தெரிந்தது..

நான் அதிர்ச்சியுடன் பாயைப் பார்க்க அவர் மற்றவர்களுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு என்னைப் பார்த்து லேசாக கண்ணடித்தார்.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது, அவர் ஏதோ உள்நோக்கத்துடன் தான் அப்படி நடந்துக்கொண்டார் என்று.

அவர் வேலையாளை கேட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு என் வீட்டுக்காரரை நெருங்கி அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டார், ‘சார்.. அந்த முட்டாப்பயலுக்காக நா உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. உங்களப்பத்தில் நா நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அதான் மேனேஜர் சார் வந்து உங்க வீட்ல ஒரு அசம்பாவிதம் நடந்துப்போச்சி.. அதுக்கு என்னுடைய முட்டாள்தனமும் ஒரு காரணம் அதனால நீங்களும் வந்து என் வீட்டுக்காரர்கிட்ட பேசணும்னு சொன்னதும் உடனே கிளம்பி வந்தேன்..’ என்றார்.

என் வீட்டுக்காரரருக்கு அவர் வேலையாளை அடித்ததும் பிறகு இதற்கு என்னுடைய முட்டாள்தனமும் காரணம் என்று நான் பாயிடம் கூறியதாக அவர் சொன்னதும் மிகவும் பிடித்துப்போயிருக்க வேண்டும்.

உடனே அவரும் சமாதானமாகி, ‘பாய் நீங்க ------------ ரெடிமேட் கடை ஓனர்தானே? ஜோசப்போட பிராஞ்சுக்கு முன்னால இருக்கற ஷாப்?’ என்றார் புன்னகையுடன். ‘நீங்க நம்ம ஊர் ஆளு. அதனால பெரியவங்கள மதிக்கணும்னு தெரிஞ்சிருக்கு. ஜோசப் வெளியூரு.. அதான் இப்படி நடந்துக்கிட்டார்.. காலையிலேயே எங்கிட்ட இந்த மாதிரி செய்யணும்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே என் ஆளுங்கள வச்சி செஞ்சி குடுத்திறுப்பேன்.. அனாவசியமா எனக்கு இந்த நஷ்டம் ஏற்பட்டிருக்காதில்லே..’

பாய் விஷயத்தைப் புரிந்துக்கொண்டு.. ‘சார்.. அதப்பத்தி நீங்க கவலப் படாதீங்க.. இப்போ தெற்குத் தெருவுல நம்ம வீட்ல மேசன் ஒர்க் நடந்துக்கிட்டிருக்கு.. அந்தாளுங்களையே வச்சி உங்களுக்கு ஒரு செலவுமில்லாம முடிச்சிக் குடுத்துடறேன்.. மேனேஜர் சார் எங்களுக்கு செஞ்ச உதவிக்கு இதக்குட நாங்க செய்ய மாட்டோமா சார்..’ என்று சமாதானம் செய்ய என் வீட்டுக்காரர் முகமெல்லாம் மலர்ந்து, ‘ரொம்ப சந்தோஷம் சார்.. வாங்க ஒரு மோர் குடிச்சிட்டு போலாம்.. வீட்ல போட்டது.’ என்றார்

பாய், ‘இல்ல சார்.. கடையில யாரும் இல்லே..சார் வந்து கூப்டதும் அவரோட ஸ்கூட்டர்லயே பொறப்பட்டு வந்துட்டோம்.. இன்னொரு நாளைக்கு சாவகாசமா வர்றேன் சார்.’ என்று கழன்றுக்கொண்டார்.

வீட்டுக்காரர் என்னைப் பார்த்த பார்வையில் லேசான மன வருத்தம் இருந்ததுபோல் தெரியவே நானும் அவரருகில் சென்று, ‘மன்னிச்சிருங்க சார்.. காலையிலேயே உங்க கிட்ட சொல்லியிருக்கலாம்.. ஆஃபீஸ் போற அவசரத்துல விட்டுப்போச்சி.’ என்றேன்..

அந்த இரண்டு வார்த்தகளே போதுமாயிருந்தது அவருடைய கோபத்தை தணிக்க.. ‘இனிமேயாச்சும் சொல்லிட்டு செய்ங்க ஜோசப்.. வேலையாளுங்கள நம்ம கைக்குள்ள வச்சிருக்கணும்.. இல்லன்னா நமக்கு நல்லது செய்யறேன்னு சொல்லிட்டு எதையாச்சும் வில்லங்கமா செய்துட்டு வந்து நிப்பாங்க..’ என்றார் ஒரு அதிகார தோரணையில்.

நான் பல்லைக் கடித்துக்கொண்டு வெளியில் ஒரு வெற்றுப் புன்னகையுடன், ‘நீங்க சொல்றது சரிதான் சார்.’ என்று கூறிவிட்டு பால்கணியில் நின்றிருந்த என் மனைவியிடம், ‘போய் வருகிறேன்.’ என்று சைகைக் காட்டிவிட்டு என் வாகனத்தைக் கிளப்பி பாய் ஏறிக்கொண்டதும் விருட்டென்று புறப்பட்டு சென்றோம்..

நான் சிறிது தூரம் சென்றதும் சாலையின் வளைவில் அடிபட்ட வேலையாள் தலையைக் குனிந்து நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தது, ‘சார், இப்படி ஓரமா கொஞ்சம் நிறுத்துங்க.’ என்றார் பாய்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கும் புரியவே நான் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் இறங்கும் வரை காத்திருந்தேன். பிறகு இருவரும் வேலையாளை நெருங்கினோம்.

‘என்னய்யா, நா மட்டும் இடையில புகுந்து உன்ன அடிக்கறா மாதிரி அவன்கக் கிட்டருந்த மீட்கலைனா என்ன ஆயிருக்கும் தெரியுமில்லே? நீ எந்த தைரியத்துல அவர அடிக்கப் போனே? அவருக்கிற ஆள் பலம், பணபலம் தெரியுமா உனக்கு?’ என்றார் பாய்.

அவர் தலையைக் குனிந்துக்கொண்டார். ‘நீங்க சொல்றது சரிதான் பாய்.. நானும் முட்டாத்தனமா செஞ்சிட்டு அவங்க ஆளுய்ங்கெல்லாம் ஓடிவந்து என்ன புடிச்சி மரத்துல கட்டி வைக்கறதாத்தான் இருந்திச்சி.. சாரோட வீட்டம்மா என்ன நெனச்சாங்களோ தெரியல தைரியமா இறங்கி ஓடிவந்து எனக்கு முன்னால நின்னுக்கிட்டாங்க.. வீட்டுக்கார ஐயாவும் இத எதிர்பார்க்கல போலருக்கு.. சரி வுடுங்கடான்னு உங்க பேரச் சொல்லி அவர் வரட்டும் அப்புறம் பேசிக்கலாம்ன்னு வுட்டுட்டாங்க.. அம்மா நீங்க ரெண்டு பேரும் கேட்டுக்கிட்ட வந்தப்புறம்தான் படியேறி போனாங்க..’

பாய் வியப்புடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். எனக்கும் ஆச்சரியமாயிருந்தது. என் மனைவியா? பார்றா! பரவாயில்லையே..

‘சரி.. உன் நேரம் நல்ல நேரமாயிருந்திச்சி.. உன் அவசர புத்தியால உன் வேலையும் இல்லையா போயிருந்திருக்கும்? சரி.. இந்தா இத வச்சிக்க.. உன் ஜாமான்க ஏதும் அங்க கிடக்கா?’ என்றார் பாய்.

அவர் கொடுத்த பணத்தை நன்றியுடன் பெற்றுக்கொண்ட வேலையாள், ‘ஆமாங்கய்யா.. அத எடுக்காம நான் போனோ எங்கய்யாவுக்கு என்ன பதில் சொல்றது? இங்க நடந்தது ஐயாவுக்கு தெரிஞ்சா என் வேலையும் போயிரும்யா.’

பாய்க்கு மீண்டும் கோபம் வந்தது. ‘ஏன்யா.. அந்த புத்தி மொதல்ல இல்ல வந்திருக்கணும்? அவரு பெரிய மிராஸ்தார் பரம்பரை.. கோபம் வரும்.. நீ தொழிலாளியாச்சேய்யா.. முன்ன பின்ன யோசிக்க வேணாம்? சரி, ஆண்டெனா அடிக்கற வேலை முடிஞ்சிதா?’

‘எங்க பாய்? அதான் க்ளாம்ப் அடிக்கறதுக்குள்ளயே சுவர் இடிஞ்சி பிரச்சினையாயிருச்சே?’

பாய் என்னைப் பார்த்தார். ‘இப்ப என்ன சார் பண்றது?’

நான் ஒன்றும் கூறாமல் அவரையே பார்த்தேன். மறுபடியும் அத அடிக்கப் போக பிரச்சினையாகிவிடுமோ என்று யோசித்தேன்.

பாய் அதற்கும் ஒரு யோசனை வைத்திருந்தார். ‘சார் ஒன்னு பண்ணலாம்.’ என்றார்.

‘என்ன சார்?’

‘நான் நாளைக்கே நம்ம மேஸ்திரிய ஒரு கொல்த்துக்காரனோட அனுப்பறேன். அவங்க சுற்று சுவ உடைஞ்ச பகுதிய சரிபண்ணும்போதே ஆண்டெனா ஃபிக்ஸ் பண்றதுக்குண்டான யு க்ளாம்ப்பையும் சேர்த்து வச்சி கட்டிரட்டும். அப்புறம் இவரில்லாம வேற ஆளுங்கள அனுப்ப சொல்லி ஆண்டெனா ஃபிக்ஸ் பண்ணிரலாம்.’ என்றவர் வேலையாளிடம், ‘நீங்க போங்க.. நானும் சாரும் உங்க பின்னாலயே வந்து உங்க ஓனர்கிட்ட இங்க நடந்தத சொல்லாம வேற ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிக்கிறோம்.’ என்றார்.

அவர் தயங்கியவாறே, ‘ஐயா என் வேல போகாம சொல்லுங்கய்யா.. முதலாளி கோபக்காரருங்க.. சட்டுன்னு போடா வேலைய விட்டுன்னு சொன்னாலும் சொல்லிருவாருங்க..’ என்றார்.

பாய் சிரித்தவாறே, ‘ஏன்யா நீரு மட்டும் கோவத்துல குறைஞ்சவராக்கும்.. போம்.. ஒன்னும் வராம நா பாத்துக்கறேன்.’ என்று கூறிவிட்டு என் வாகன பின் இருக்கையில் ஏறி அமர்ந்தார். ‘நீங்க வண்டிய எடுங்க, சார்.. போலாம்.’

நான் வாகனத்தை முடுக்கி முக்கிய சாலையை அடைந்ததும், ‘சார் இருந்தாலும் உங்க வொய்ஃபுக்கு தைரியம் ஜாஸ்தி சார். பார்த்தா அப்படி தெரியலையே.. அவங்க மட்டும் இடையில நுழையலன்னா இவன கட்டிப்போட்டு அடிச்சிருப்பாங்க போல?’ என்றா பாய்.

நான் நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே? ஜெயலலிதா பிறந்த அதே மாதத்தில் பிறந்தவராயிற்றே.. அவர் பிப்ரவரி 24 என்றால் என் வீட்டம்மா 26! அதாவது நேற்று!!

தைரியத்துக்கு கேட்கவா வேண்டும்?

தொடரும்..


24 February 2006

கே.பியுடன் ஒரு நேர்காணல்


சாதாரணமாக நான் சர்ச்சைக்குரிய விஷயங்கள்ல அவ்வளவா விருப்பம் காட்டுவதில்லை..

அதுக்கு முக்கிய காரணம் நாம் சரியென்று நினைப்பதை மற்றவர்களும் சரியானதுதான் என்று நினைக்கத் தேவையில்லையே என்பதுதான்.

ஆனாலும் இன்றைய ஹிந்து செய்தித் தாளில் Friday Reviewவில் நம்முடைய முன்னாள் இயக்குனர் சிகரம் (ஏன் இப்படி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். அதற்கு காரணம் இருக்கிறது) கே. பாலசந்தர் அவர்களின் பேட்டியில் அவர் ஆணவத்துடன் (அவர் என்ன நினைத்து அப்படியெல்லாம் சொன்னாரோ.. ஆனால் அதை படித்தபோது எனக்கு அவை ஆணவம் என்றுதான் தோன்றியது) அளித்த சில பதில்கள் என்னை இப்பதிவை எழுதத் தூண்டியது..

இப்போதே சொல்லிவிடுகிறேன். இது என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து நான் பார்க்கும் பார்வை. இதற்கு எல்லோருமே ஒத்துப்போகவேண்டும் என்றில்லை..

சரி விஷயத்துக்கு வருவோம்..

பாலசந்தர் இதுவரை நூறு படங்களை இயக்கியிருக்கிறார். அதையொட்டி அவரிடம் பேட்டியாளர் கேட்ட சில கேள்விகளையும் அதற்கு கே.பி அளித்த பதில்களை மட்டும் இங்கு அலசலாம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: நீங்கள் இயக்கிய நூறு படங்களில் உங்களுடைய பார்வையில் மிகச்சிறந்ததாக கருதும் ஐந்து படங்கள் எவை?

கே.பி: நான் இயக்கிய படங்களில் சிறந்த படங்களில் ஒன்று புன்னகை. பிறகு ஏக் துஜே கேலியே, தண்ணீர், தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை..  அத்துடன் வானமே எல்லை, சிந்து பைரவி, என்று பட்டியல் நீள்கிறது.. இறுதியில் ஜாதி மல்லி..

புன்னகை, ஹ்ரிஷிக்கேஷ் முக்கர்ஜி இயக்கிய சத்யகாம் என்ற ஹிந்தி படத்தின் அப்பட்டமான காப்பி.

ஏக் துஜே கேலியே.. அவர் அதை எதற்காகக் குறிப்பிட்டார் என்பது விளங்கவில்லை.. என்னைப் பொறுத்தவரை அது ஒரு மிகச்சாதாரணமான ஒரு மூன்றாம் தர மசாலாப் படம்..

தண்ணீர், தண்ணீர்.. அவருக்கு சிறந்த திரைக்கதை சிரியர் விருது பெற்றுத்தந்த படமாம்! அது ஒரு சரியான வானம் பார்த்த  மேடையில் (open air stage) நடத்தப்பட்ட நாடகம் என்பதுதான் என்னுடைய கருத்து.. அவருடைய பல படங்களைப் பார்க்கும்போது முன் வரிசையில் அமர்ந்துக்கொண்டு அண்ணாந்து ஒரு நாடகத்தைப் பார்க்கும் எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டதுண்டு. அவருடைய பல கேமரா கோணங்கள் அப்படித்தான் இருக்கும்.. தண்ணிர், தண்ணீரும் அதற்கு விதிவிலக்கல்ல..

வானமே எல்லை.. கேட்கவே வேண்டாம்..கே.பியின் கோணத்தில் இளைஞர்களின் பிரச்சினையைக் கையாண்ட விதம் ஒரு சிறுபிள்ளைத்தனம் என்று இளைஞர்களுக்கே தெரியும்..

சிந்து பைரவி.. ஒரு வித்வானின் இசைக்கச்சேரியில் வாரப்பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி, இரு பெண்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.. என கதாநாயகி பார்ப்பதை ஒரு நாடகத்தனமாகக் காட்டுவார். ஏனாம்? பாடகர் தெலுங்கில் பாடிக்கொண்டிருக்கிறாராம்! ஆகவே  அவரே எழுந்து (ஒரு அமெச்சூர் பாடகி!) நின்று ஒரு நாட்டுப்புற பாடலைப் பாடி கைத்தட்டல் பெறுவதைப்போல் நாடகத்தனமான ஒரு காட்சியை அமைத்திருப்பார்.. அக்காட்சிதான் அத்திரைப்படத்தின் உயிர்நாடி.. அதுவே அப்படியென்றால் மீதி படத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. அதில் ஒரு காட்சியில் அப்பாடகியின் பெரீஈஈஈய ஃபளாட்டைக் காட்டுவார்.. மிக விசாலமான அந்த ஃப்ளாட்டில் பாடகியின் உள்ளாடைகள் சோபாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரைந்து கிடக்கும்! அதை நாயகனுடைய பார்வையிலிருந்து எடுத்து வீசியெறிவார்! அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாது..

இதெல்லாம் கூட பரவாயில்லை. அப்பட்டியலில் கடைசியாக ஜாதிமல்லி என்ற ஒரு குப்பைப் படத்தையும் சேர்த்ததுதான் சகிக்க முடியவில்லை..  

அடுத்த கேள்விக்கு அவர் அளித்த பதில் அதைவிட தமாஷானது!

கேள்வி: பார்த்தாலே பரவசம் ஏன் வெற்றி பெறவில்லை?

கே.பி.: மாதவனும், சிம்ரனும் நடிக்காமல் அதிகம் பிரபலமடையாத நடிகர்களை (Minor actors) வைத்து எடுத்திருந்தால் படம் பாக்ஸ்ஆஃபீஸ் வெற்றி பெற்றிருக்கும்.. அதுமட்டுமல்லவாம்.. பாடல்கள் முக்கியமாக போகவே அவருடைய திரைக்கதை எடுபடவில்லையாம்!

இதென்ன லாஜிக்கோ தெரியவில்லை..

மாதவனைப் போன்ற ஒரு அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் நடிகரை  வைத்து படம் எடுக்கத்தெரியாமல் சொதப்பிவிட்டு சால்ஜாப்பு சொன்னா எப்படி..

அடுத்த சில கேள்விகளை விட்டு விடுவோம்..

கே.பியின் நடிப்பைப் பற்றிய ஒரு கேள்வி..

கேள்வி: உங்களுடைய அடுத்த படமான ‘பொய்’யில் நீங்கள் நடிக்கிறீர்கள். உங்களுடைய பார்வையில் நடிகர் கே.பியை எப்படி எடைப் போடுவீர்கள்?

கே.பி.: அடிப்படையில் நான் ஒரு நடிகன்! நான் இயக்குநர் தொழிலை மேற்கொண்டதால் நடிப்பை கைவிட வேண்டியிருந்தது!

அடடா.. நமக்கு நல்லதொரு நடிகர் கிடைக்காமல் போய்விட்டாரே என்று நினைக்காதீர்கள்.. அவருடைய இயக்கத்தைவிட கொடுமை அவருடைய செயற்கையான, அதிகப்படியான நடிப்பு! அவருக்கு டி.ஆரே மேல்.. வசனங்களையாவது உணர்ச்சிகரமாக டெலிவரி செய்வார்..

அடுத்த கேள்வி.. உங்களுடைய ‘பொய்’ எதைப் பற்றியது?

கே.பி: அது ஒரு வில்லன் இல்லாத காதல் கதை. திரைக்கதையில் clich'e (இதற்கு தமிழில் என்ன சொல்லலாம்? ஃபார்முலா?) இருக்காது.

கே.பி சார், அப்படின்னா உங்களுடைய மத்த படங்களோட திரைக்கதையில எல்லாம் இது இருக்குன்னு ஒத்துக்கறீங்களா?

நீங்க clich'e னு எத சொல்ல வரீங்களே தெரியலை.. ஆனா ஏறக்குறைய உங்களுடைய எல்லா திரைக்கதைகளுமே ஒரே மாதிரியான ஃபார்முலாவின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.

காட்சியமைப்புகளும் அப்படித்தான்..

மிகச்சிறந்த நடிகர்களாகக் கருதப்படும் சரிதாவையும் சுஜாதாவையும் ஏன் கமலையும் கூட உங்களுடைய contrived பாத்திர சித்தரிப்பில் சிறைபடுத்தியவர்தானே நீங்கள்?

கடைசி கேள்வி..

நீங்கள் எதையாவது சாதித்திருப்பதாக நினைக்கிறீர்களா (கேள்வியின் உள்ளே புகுந்து பார்த்தால் வேண்டுமென்றே நக்கலாக கேட்கப்பட்டது போல் தெரிகிறது?)

கே.பி: I have always given films, which are ahead of my times!
எங்கே இதை தமிழில் மொழிபெயர்த்து அதிலுள்ள அகங்காரத்தை குறைத்துவிடுவேனோ என்ற பயத்தில் பத்திரிகையில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளேன்..

அதாவது, காலத்தை விஞ்சிய என்று சொல்லலாமா?

எது? ஒரு வசவு (தகப்பன் தெரியாத பயலே) வார்த்தையை கமலை உச்சரிக்க வைத்தீர்களே, அதுவா?

அல்லது, உன் அம்மா உன் கணவரோட அப்பாவோட மனைவின்னா நான் உனக்கு என்ன உறவுன்னு ஒரு புதிர் போட்டீங்களே, அதுவா?

அதையே மறுபடியும் ஒரு காதலனோட காதலியே அவனோட அப்பாவோட இரண்டாவது மனைவியா வந்து அவன சத்தாய்க்கிறா மாதிரி ஒரு படம் பண்ணீங்களே, அதுவா?

இன்னும் உங்களோட அபத்தமான, ஏன் வக்கிரமமான கற்பனைகளை சொல்லிக்கிட்டே போகலாம் கே.பி சார்..

உங்களுக்கு ஒரு வார்த்தை.. அறிவுரைன்னு சொல்றதுக்கு எனக்கு வயசு போறாது..

உங்க டைம் முடிஞ்சிப் போயிருச்சி சார். கே.எஸ் கோபால கிருஷ்ணன்னு ஒருத்தர் இருந்தார். அருமையா வசனம் எழுதறேன்னு சொல்லிட்டு பக்கம் பக்கமா எழுதி அத நடிகர் நடிகைகளை ஏத்தி, இறக்கி பேசவச்சி அறுத்துடுவார்..

உங்களோட ஒப்பிடும்போது அவரே தேவலைன்னு தோனுது.. அதான் உண்மை.. அதப் புரிஞ்சுக்குங்க..

சின்ன, சின்ன குட்டிப் பசங்கல்லாம் வந்து எமோஷனலா, டெக்னிக்கலா சூப்பரா எடுக்கறாங்க..

நீங்க என்னவோ பெரிசா சாதிச்சிட்டதா..

போங்க சார்..
திரும்பிப் பார்க்கிறேன் 87

அதுமட்டுமா? லாட்ஜ் ரூமுக்குள்ள வாடகைக்கு அறைகள் எடுப்பவர் கவனத்திற்கு என்று சட்டமடித்து ஒரு அறிக்கை வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்களே.. அதே போன்ற ஒரு பட்டியலை அடுத்த நாளே வீட்டுக்காரம்மாள் என் மனைவியிடம் வாசித்தபோது..

இந்த பழைய ஜெனரேஷனுக்கும் புதிய ஜெனரேஷனுக்கும் ஒரு போதும் ஒத்துப்போகாது என்பார்களே அப்படித்தான் இருந்தது திருமணம் முடிந்து மூன்றே வருடங்கள் ஆகியிருந்த எங்களுக்கும் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருந்த எங்களுடைய வீட்டுக்காரர்களுக்கும்.

அத்துடன் அவர் உயர் அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால் வீட்டில் குடியிருப்பவரையும் அவருடைய அதிகாரத்திற்குக் கீழ் பணிபுரிபவர்கள் என்று நினைத்துவிட்டார்போலிருந்தது அவருடைய நடவடிக்கைகள்!

நான் அவருடைய வீட்டில் குடிபுகுந்த அன்றே இரவே எங்கள் இருவரையும் அவர்கள் குடியிருந்த கீழ் வீட்டுக்கு அழைத்து ஒரு பழைய காலத்து, ஆனால் துலக்கி பளபளப்பாயிருந்த பித்தளைச் செம்பில் வெல்லக் காப்பி ஒன்றைக் கொடுத்து (பாப்பாவுக்கு பால் மட்டும். அவர்கள் வீட்டிலேயே ஐந்தாறு கொழுத்த பசுக்கள் இருந்தன.. அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்கள் கண்டிப்பாய் காலையில் அரை லிட்டர் (குறைந்த பட்சம்) மாலையில் அரை லிட்டர் பசும்பால் வாங்கியாக வேண்டும் என்பது அவர் இட்ட பல நியதிகளில் ஒன்று) பேச்சைத் துவக்கினார்கள்.

ஆரம்ப குசலங்களுக்குப் பிறகு வீட்டுக்காரர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்..

‘நாங்க வீட்டை வாடகைக்கு கொடுத்துத்தான் ஜீவிக்கணும்னு இல்லைன்னு உங்களுக்கு தெரியும்தானே?’

நான் பதிலளிக்காமல் என் மனைவியைப் பார்த்தேன். பிறகு, ‘ஒங்க வீட்டையும் தோட்டத்தையும் பார்த்தாலே தெரியுதே சார்.’ என்றேன்.

அவர் பெருமையுடன் தன் மனைவியைப் பார்த்தார். அவருடைய மனைவியின் முகமும் பெருமையில் விகசித்தது.

‘You are right. நாங்க ரெண்டு பேருமே பரம்பரையா பணக்கார குடும்பத்துல வர்றவங்க.. இந்த வீடு நான் சர்வீஸ்லருக்கும்போதே கட்டுனது. சுமார் நாப்பது வருஷம் இருக்கும். (அதான் வீட்டு முகப்புலய 1939ன்னு எழுதி வச்சிருக்கீங்களே.. என்று நினைத்துக்கொண்டேன்.) ஒவ்வொரு செங்கலும் பார்த்து, பார்த்து கட்டுனது (அவர் எலெக்ட்ரிக் பொறியாளர் என்று சொன்னதாக ஞாபகம்!). அதனால அதுல ஒரு சின்ன கீறல் விழுந்தாக் கூட என் ஒடம்புல விழுந்தா மாதிரி இருக்கும்.. (அதாவது ஆணி கீணி அடிக்காதீங்கடான்னு மரியாதையா சொல்றார்!)..

இந்த எடத்துல ஒன்னு சொல்லிக்கணும்.. இல்லன்னா அப்புறம் மறந்துரும்..

நான் அவருடைய வீட்டில் குடியிருந்த சமயத்தில்தான் இலங்கையில் ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கப்பட்டது. அதே சமயத்தில் இந்தியாவில் ஆசிய தடகளப் போட்டியும்  நடந்தது. அப்போது நம் மத்திய அரசு பெருந்தன்மையுடன் SKD எனப்படும் அசெம்ப்ளி செய்யப்பட்ட கலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்து விற்க அனுமதியளித்தது. எல்லோரும் அவர்களுக்கு வேண்டிய தொ.கா. பெட்டிக்கு முன் பதிவு செய்யவேண்டும்.

நான் எனக்காக ஒன்றும் என் மூத்த மைத்துனருக்காக ஒன்றும் (அவர் க்ரீக் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தார்) முன்பதிவு செய்து நான் குறிப்பிட்ட வீட்டில் இருந்தபோதுதான் டெலிவரி கிடைத்தது.

ரூபவாஹினி ஒளிபரப்பு திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகளில் தெளிவாகத் தெரிவதாக எனக்கு தொ.கா.பெட்டியை விற்றவர் கூறினார் (அவரும் என் கிளையின் வாடிக்கையாளர்தான்). ஆனால் சுமார் இருபதடி உயர ஆண்டெனா பொருத்த வேண்டியிருந்தது. சரி, ஆனை வாங்கிட்டு அம்பாரம் வாங்க தயங்குவானேன் என்று நினைத்து அவரிடமே வந்து பொருத்தித் தாருங்கள் என்று கூறினேன். அவருடைய பணியாள் ஒருவர் இருபதட நீள, கனத்த இரும்பு கம்பத்தை ஒரு வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு என்னுடைய வீட்டு வாசலில் மூடப்பட்டிருந்த இரும்பு கேட்டில் அதே இரும்புக் கம்பத்தால் லேசாக தட்டி ஒலியெழுப்பி இருக்கிறார். நான் அப்போது அலுவலகத்தில் இருந்தேன். என் மனைவியிடம் ஏற்கனவே தொலைப்பேசியில் இன்னார் வருவார், அவரை ஆண்டெனா பொருத்த அனுமதிக்கும்படி கூறியிருந்தேன்.

அப்போதே அவர், ‘ஏங்க, நீங்க பாட்டுக்கும் ஆண்டெனா அடிக்கறேன் அம்பாரம் தூக்கறேன்னு ஆள அனுப்பிச்சிட்டு (தூத்துக்குடி பாஷையில் என் மனைவி இவ்வாறு கேலியாக இடக்கு செய்யும்போதெல்லாம் திருமணமான ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாக இருக்கும்.. போகப்போக பழகிவிட்டது) நம்ம வீட்டுக்காரர்கிட்ட யார் மாட்டிக்கிட்டு முளிக்கிறது? அவரே நாம வந்த முதல் நாளே ஆணியே அடிக்கக்கூடாதுன்னார்.. நீங்க என்னடான்னா இருபதடியில ஆண்டெனா அடிக்கப் போறேங்கறீங்க? என்னவோ.. நீங்களாச்சு உங்க வீட்டுக்காரராச்சு.. அவர் ஏதாச்சும் சொன்னா நா ஒன்னும் போய் கேக்க மாட்டேன்.’ என்றார் ஜகா வாங்கினார்.

நான், ‘அதெல்லாம் ஆண்டெனா அடிக்க வந்தவர் பாத்துக்குவார். வீட்டுக்காரர் ஏதாச்சும் சொன்னார்னா பாத்துக்கலாம்.’ என்ற அசட்டு தைரியத்துடன் கடை ஊழியரை அனுப்பி வைத்தேன். எனக்கு டி.வி பெட்டியை விற்றவருக்கு என் வீட்டுக்காரரை நன்றாகத் தெரியும் போலிருக்கிறது. ‘அவரு ஆணியே அடிக்கக் கூடாதும்பாரே சார்? நம்ம ஃப்ரெண்டு ஒருத்தர் குடிபோய்ட்டு அவரோட தொல்லை தாங்க முடியாம மூனே மாசத்துல ஓடிப்போய்ட்டாரே.. என்னமோ நீங்க சொல்றீங்களேன்னு ஆள அனுப்பறேன். அவர் அடிக்க சம்மதிச்சதுக்கப்புறம் ஆண்டெனாவுக்கு காச வாங்கிக்குறேன்..’ என்றார். அவருடைய வர்த்தகத்திற்கு கடனுதவி அளித்த மேலாளராயிற்றே என்று பரிதாபப்பட்டார் போலிருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம்..

ஆண்டெனா கம்பத்தைப் பார்த்தவுடனே என்னுடைய வீட்டுக்காரர் கேட்டைத் திறக்காமலே, ‘இந்த வீடு இல்லை’ என்று அவரை உள்ளே விட மறுத்திருக்கிறார்.

‘சார் இந்த வீட்ல பொருத்தித் தரச்சொல்லி இந்த ஐயாதான் சொல்லியனுப்பினார்’ என்று என் பெயர் பொறிக்கப்பட்ட அட்டையை அவர் வீட்டுக்காரரிடம் கொடுத்திருக்கிறார்.

அவர் உடனே, ‘அப்படியா? இங்கயே இரு.. அவருக்கென்ன தைரியம்? சொல்லாம கொள்ளாம இவ்வளவு பெரிய ஆண்டெனா அடிக்கறேன்னு உங்கிட்ட கொடுத்தனுப்பியிருக்காரு..’ என்று நேரே கோபத்துடன் வீட்டுக்குள் சென்று என்னை தொலைப்பேசியில் அழைத்து, ‘என்ன ஜோசப் உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கீங்க?’ என்றார் நான் ஒலிவாங்கியை எடுத்தவுடன்.

நான் பதிலுக்கு, ‘சார் டி.வி வாங்கியாச்சி. ஆண்டெனா அடிக்கக் கூடாதுன்னா எப்படி சார்? உங்க வீட்டுக்கு ஏதாச்சும் ஆச்சின்னா நான் போகும்போது ரிப்பேர் பண்ணிக் குடுத்தடறேன். சரி அப்படியும் நீங்க சம்மதிக்கலேன்னா, என்ன சார் இந்த மாதிரி வீட்ட எனக்கு புடிச்சிக் குடுத்தீங்களேன்னு போய் உங்க பாதிரியார் நண்பர்கிட்ட சொல்லிக்கறேன்.. ஏன்னா அவர் சொல்லித்தான் உங்க வீட்டுக்கு வந்தேன். அவர் உங்களப்பத்தி  முன்னமே சொல்லியிருந்தார்னா நிச்சயம் உங்க வீட்டுக்கு வந்தே இருக்க மாட்டேன்..’ என்றேன் சூடாக, வருவது வரட்டும் என்ற நினைப்பில்.

அவர் நான் இப்படி பேசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. அதற்கும் காரணம் இருக்கிறது. அவரும் என்னைப் போலவே கத்தோலிக்க கிறிஸ்துவர். நான் சென்றுக்கொண்டிருந்த மறை மாவட்ட தலைமை தேவாலயமான தூய இருதய ஆண்டவர் தேவாலய பங்கைச் சார்ந்தவர்தான் அவரும். அத்துடன் அவர் பங்கு பேரவைத் தலைவர். அவர் மிகவும் நல்லவர், அடக்கமும் பொறுமையுள்ளவர், தானதர்மம் செய்வதில் (எச்சிக் கையால கூட ஈ ஓட்டமாட்டான் என்பார்களே அந்த ரகத்தைச்சார்ந்தவர் அவர் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. அது வேற விஷயம்) வல்லவர் என்றெல்லாம் என்னுடைய பங்குக் குரு அவர் தலைமையேற்று நடத்திய ஒரு விழாவில் அவரை வரவேற்று பேசியிருப்பது எனக்கு தெரியும் என்பது அவருக்கும் தெரியும்.

இந்த சூழ்நிலையில் நான் போய் அவரைப் பற்றி ஆயரின் இல்லத்தில் பணிபுரிந்த, அதுவும் ஆயருக்கு காரியதரிசியாக இருந்த பாதிரியார் ஒருவரிடம் சொன்னால் அவருடைய இமேஜ் என்னாவது என்று நினைத்திருப்பார் போல் தெரிகிறது. நான் அப்பாதிரியாரிடம் போய் முறையிடுவேன் என்றதும் அப்படியே அடங்கிப் போய், ‘இல்ல மிஸ்டர் ஜோசப், நான் சொல்ல வந்ததை நீங்க முழுசா கேக்கலை.. என் கிட்ட ஒரு வார்த்தை காலையிலேயே சொல்லியிருக்கலாமேன்னுதான் நான் கேக்க வந்தேன்.’ என்று பின்வாங்கினார்.

நான் உடனே, ‘தப்புத்தான் சார். மன்னிச்சிருங்க.’ என்றேன்.

உடனடியாக நான் என் தவறை ஒத்துக்கொள்ளவே அவர் சமாதானமாகி சரி என்று வைத்துவிட்டார்.

ஆனால் ஆண்டெனா அடிக்கச் சென்றவர் வீட்டுக்காரர் மேல் இருந்த கோபத்தில் சற்று வலுவுடன் மொட்டை மாடி சுற்றுச்சுவரில் ஓட்டையிட, சுவரின் ஒரு பகுதி அப்படியே பிளந்து சுமார் இருபதடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது.. நல்ல வேளை, அது விழுந்த நேரத்தில் எப்போதும் பகல் நேரத்தில் அங்கு படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் வேலையாள் சற்று முன்னர்தான் எழுந்து பால் கறக்க சென்றிருக்கிறார்.

அதைப் பார்த்த வீட்டுக்காரர், ஆண்டெனா அடிக்க சென்றவரின் ஜாதிப் பெயரை சொல்லி அடிக்கப் போக அவன் ஆத்திரத்தில் அவரை திருப்பியடிக்கப் போக ஒரே களேபரமாகி என் மனைவி என்னை அழைத்து, ‘உடனே ஓடி வாங்க. வீட்டுக்காரர் இங்க ஒரே பெரளி பண்றார்’ என்றாள்.

நான் உடனே என்னுடைய கட்டிட உரிமையாளரின் மூத்த சகோதரரை அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று நினைத்து அவரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவருக்கும் என் வீட்டுக்காரரை நன்றாக தெரிந்திருந்தது, ‘என்ன சார்? என்கிட்ட ஒரு வார்த்தை இவர் வீட்டுக்குத்தான் போப்போறேன்னு சொல்லக்கூடாதா? வேணாம்னு தடுத்திருப்பேனே.. அவர் போற மாட்டுவண்டிக்குக் குறுக்காலக்கூட இந்த ஜாதிப்பசங்க வரக்கூடாதுன்னு நினைக்கிறவர் அவர்.. அவர் வீட்டுக்குள்ள போயி இவனுங்க அவரவே அடிக்கப்போனா என்னாவறது? இந்நேரம் அவர் போலீசுக்கு போன் பண்ணாலும் பண்ணியிருப்பார். நான் சொல்லிப் பாக்கறேன்.’ என்று கூறிவிட்டு என்னுடன் புறப்பட்டு வந்தார்.

நாங்களிருவரும் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய வீட்டுக்காரர் அதீத கோபத்தில் முகமெல்லாம் சிவந்து ரெஸ்ட்லெஸ்சாகக் காணப்பட்டார். ஆனால் என்னுடன் வந்த பாயின் ஒரு சமயோசித செய்கையால் அவருடைய கோபம் அடங்கி பிரச்சினையை அடுத்த அரை மணி நேரத்தில் சுமுகமாக முடிக்க முடிந்தது.

தொடரும்..

23 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 86

தஞ்சை ஆயர் அன்று இல்லத்தில் இருந்ததால் நானும், என் மனைவி மற்றும் மகளும் அவரை சந்திக்க முடிந்தது.

ஆயர் அவர்கள் அதே அமைதியான மற்றும் எளிமையான தோற்றத்தில் புன்னகையுடன் எங்களை வரவேற்றார். நானும் என் மனைவியும் அவருடைய அர்ச்சித்த மோதிரத்தை முத்தி செய்ய ஆயர் தன்னுடைய வலக்கரத்தால் எங்கள் மூவருடைய தலையையும் தொட்டு ஆசீர்வதித்தார்.

பிறகு நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத விதமாக என் மகளை என் மனைவியிடமிருந்து பெற்று தன் மடியில் வைத்துக்கொண்டார்.

நான் பதற்றத்துடன், ‘ஐயா உங்களுடைய உடுப்பு..’ என்றேன்.

அவர் புன்னகை மாறாத முகத்துடன், ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்ற யேசுவின் வார்த்தைகளை மறந்துட்டீங்களா ஜோசப்.’ என்றார் குறும்புடன்.

நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். பிறகு சற்று நேரத்திற்கு என்னுடைய மற்றும் என்னுடைய மனைவியுடைய குடும்பத்தாரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஆயர் நெடுநாட்கள் அறிமுகமானவர்களுடன் பேசுவதுபோல் எங்கள் இருவரிடமும் உரையாடிக்கொண்டிருந்தது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவருக்கு இருக்கும் அலுவல்களுக்கிடையில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று வியந்துப் போனேன்.

நாங்கள் புறப்படும் நேரம் வந்தபோது ஆயர் அவர்களுடைய அறைக்குள் சென்று இரு அழகான ரேடியம் ஜெபமாலைகளை (நான் போன முறை ரோமுக்கு போயிருந்தப்போ வாங்கிட்டு வந்தது ஜோசப் என்றார்)ஆசீர்வதித்து ஆளுக்கு ஒன்றாக எனக்கும் என் மனைவிக்கும் கொடுத்தார். பிறகு வெள்ளியாலான சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த ஒரு அழகிய சுரூபத்தை என் மகளுடைய கழுத்தில் அவரே அணிவித்தார்.

நாங்கள் இருவரும் அவருடைய செய்கையால் பேச்சற்று நிற்க அவர் புன்னகையுடன் எங்களை வழியனுப்பி வைத்தது இதை எழுதும்போதும் அப்படியே நிழற்படம் போல் என் கண்கள் முன்னே தெரிகிறது!

நாங்கள் அவருடைய அறையிலிருந்து திரும்பி வரும் வழியில் என்னை அழைத்துச் சென்ற பாதிரியார், ‘ஜோசப், உண்மையிலேயே நீங்க அதிர்ஷ்டசாலிதான். சாதாரணமா ரோம்லருந்து வாங்கிட்டு வர்ற ஜெபமாலைய எங்களுக்கே கொடுக்க மாட்டார். அவரோட நெருங்கிய உறவுக்காரங்களுக்கு இல்லன்னா தெரிஞ்ச நண்பர்களுக்குத்தான் கொடுப்பார். ஏன்னா இந்த ஜெபமாலைங்க நம்ம் போப்பாலயே ப்ளஸ் பண்ணாதாயிருக்கும். அதனாலத்தான் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு சொல்றேன்.’ என்றார்.

‘நீங்க சொல்றது சரிதான் சாமி.’ என்றார் என் மனைவி.

அவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பியதும், ‘இப்பவே வீட்டுக்காரங்க கிட்ட சொல்லிரலாமா? இல்லேன்னா திடுதிடுப்புன்னு போயி வீட்ட காலி பண்றோம்னு சொன்னா அவர் ஏதாச்சும் தப்பா நினைச்சிக்குவாரே..’ என்றேன் என் மனைவியிடம்.

‘அதெல்லாம் இப்ப வேணாங்க. ஒரு வேளை நம்ம இப்ப பார்த்துட்டு வந்திருக்கற வீட்டுக்காரர் சாமியார் சொன்ன வாடகைக்கு தரமாட்டேன்னுட்டார்னா? ஃபாதர் முதல்ல ஃபோன் பண்ணட்டும் அப்புறம் சொல்லிக்கலாம்.’ என்ற என் மனைவி தொடர்ந்து, ‘நீங்க வீட்டுக்காரர்கிட்ட எப்படி சொல்றதுன்னு கவலைப்படாதீங்க.. நானே சமயம் பார்த்து பக்குவமா அந்தம்மா கிட்ட சொல்லிடறேன்..’ என்றார்.

அவர் சொன்னதும் சரிதான். நான் எதையுமே எடுத்தேன் கவுத்தேன் என்று செய்துவிட்டு பிறகு வருத்தப்படும் ஜாதி. அலுவலக வாழ்விலும் சரி என்னுடைய சொந்த வாழ்விலும் சரி.. நான் அவசரப்பட்டு எடுத்த பல முடிவுகள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தியதுடன் நிறைய எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது..

‘You know how to make enemies out of Friends, TBR!’ என்றார் என்னுடைய சேர்மன்களில் ஒருவர். நூத்துக்கு நூறு உண்மையான வார்த்தை..

அடுத்த நாளே என் பாதிரியார் நண்பர் என்னை தொலைப்பேசியில் அழைத்து தன்னுடைய நண்பர் எங்களுக்கு வீடு கொடுப்பதற்கு சம்மதித்துவிட்டதாக கூறியதுடன் வரும் மாதம் முதல் தேதியிலிருந்து வாடகை அளிக்க வேண்டும் என்று விரும்பியதாக கூறினார்.

அதெப்படி? அடுத்த ஒன்றாம் தேதிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் இப்போதுள்ள வீட்டு உரிமையாளர் குறைந்தது ஒரு மாத நோட்டீசாவது வேண்டுமென்று கூறினால் இரண்டு வீட்டுக்கும் வாடகைக் கொடுக்க வேண்டி வருமே என்று யோசித்தேன்.

ஆனால் என் மனைவியோ மிகவும் எளிதாக, ‘நீங்க ஏன் அதப்பத்தியெல்லாம் கவலைப் படறீங்க? என்கிட்ட விட்டுறுங்க.. நான் பார்த்துக்கறேன்.’ என்றார்.

அதே போல் உரிமையாளரிடம் என்ன பேசினாரோ, எப்படி பேசினாரோ அன்று நான் இரவு வீடு திரும்பியதும், ‘இங்க பாருங்க.. நமக்கு சேர வேண்டிய வீட்டு அட்வான்ஸ் செக்.. வீட்டுக்காரர் கொடுத்தது..’ என்று என்னிடம் நீட்ட நான் அசந்துபோனேன்.

‘எப்படி? அவர் ஒன்னுமே சொல்லலையா?’ என்றேன்.

‘சொன்னார். சொல்லாமா இருப்பாரா? ஆனா நான் விடலை.. கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டேன். ஆனா அவங்க ஒன்னும் வருத்தப்படலை.. அவங்களுக்கு வாடகை முக்கியமில்லீங்க.. நாம போறேமேன்னுதான் கொஞ்சம் கவலை.. முக்கியமா நம்ம பொண்ணு இல்லாம இருக்க முடியாதேன்னுதான் அவர் கவலைப்பட்டார்.. நாங்க எங்க போறோம் டவுணுக்குள்ளத்தானே.. அடிக்கடி கொண்டுக்கிட்டு வறோம்னு சொன்னேன்.. பாப்பாவும் தாத்தா அங்க அணில், குருவில்லாம் நிறைய இருக்கு. தாத்தா, பாட்டி நீயும் வாயேன்னு கொஞ்சுனதும் ரெண்டு பேரும் அப்படியே குளிர்ந்து போய்ட்டாங்க.’ என்று தன்னுடைய திறமையை விலாவாரியாக விவரித்தார்.

சரி நமக்கு ஒரு வேலை மிச்சம் என்று நினைத்து நிம்மதியடைந்தேன்..

அடுத்தது இங்கருக்கறதையெல்லாம் தூசி தட்டி, மூட்டை கட்டி..

எப்படி என்று மலைப்பாக இருந்தது..

நான் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்தபோது என்னுடைய மைத்துனர்கள் இருவர் வந்து உதவி செய்தனர்.. ஆனால் இப்போது..  

சட்டென்று ஒரு யோசனை தோன்ற என் மனைவியைப் பார்த்தேன். ‘உன் தம்பிங்க ரெண்டு பேரையும் உடனே வரவச்சா என்ன?’

எதுக்கு என்பதுபோல் என்னைப் பார்த்த என் மனைவி, ‘அட நீங்க வேறங்க.. அவனுங்க வந்து போன தடவை மாதிரி பண்டம் பாத்திரங்களை முரட்டுத்தனமா தூக்கிப் போட்டுத்தான் பாதி பாத்திரம் சொட்டையும் சொள்ளையுமா வந்து சேர்ந்துச்சி.. அதெல்லாம் வேணாம்.. உங்க ஆஃபீஸ் பியூன்கிட்ட சொல்லி யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வரச்சொல்லுங்க.. ஒன்னோ ரெண்டோ குடுத்துட்டா போச்சு..’ என்றார் சர்வசாதாரணமாக..

நான் பார்த்தேன். பாத்திரங்கள் சொட்டை, சொள்ளையா போனது என்பதெல்லாம் சும்மா என்று எனக்குத் தெரியும்.. என் தம்பிங்கன்னா உங்களுக்கு வேலைக்காரங்க மாதிரி தெரியுதா என்பது போல் அவர் என்னைப் பார்த்தாரே அதான் நிஜம்.

ஆனா இந்த ஒன்னோ ரெண்டோ குடுத்துட்டா போச்சுங்கறது கடைசியில சுளையா ஐந்நூறு என்று வந்து நின்றபோதுதான்.. ‘சே இதுக்கு எங்க தம்பிங்களையே கூப்டுறுக்கலாம் போல..’ என்று என் மனைவி முனுமுனுத்தார்.

இருப்பினும் வீட்டுச் சாமான்களை ஒன்று விடாமல், எந்தவித சேதாரமும் இல்லாமல்.. அதற்கு மேல் எனக்கு எந்தவித டென்ஷனும் இல்லாமல் முடித்துக் கொடுத்ததற்கு இன்னும் கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை என்று தோன்றியது..

அத்தனை கனகச்சிதமாக முடித்துக் கொடுத்த அந்த மூன்று தஞ்சை இளைஞர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.  தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு மாற்றலாகி சென்றபோது அங்கிருந்த அடாவடி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டு நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே சொல்லி மாளாத வேதனை..

சமயம் வரும்போது சொல்கிறேன்..

சரி.. புது வீடு வந்தாகிவிட்டது..

என் மனைவிக்கும் மகளுக்கும் ஏதோ சொர்க்க பூமிக்குள் குடிவந்ததுபோல் முகத்தில் ஒரு சந்தோஷம்..

கீழே முகப்பில் இருந்த முற்றத்தில் பாதி அளவுக்கு, உரிமையாளருடைய அலங்கார காளை மாட்டு வண்டி நிற்பதற்கு வசதியாக, போர்ட்டிகோ அமைக்கப்பட்டிருந்தது..

அதனுடைய கூரை எங்களுக்கு பால்கணி..

சுமார் இருபதடி நீளம், பத்தடி அகலம் கொண்ட அந்த பெரிய பால்கணியில் ஒரேயொரு குறை, மிகவும் உயரம் குறைந்த சுற்றுச்சுவர்..

என் இரண்டு வயது மகள் உயரம் கூட இல்லை. நாங்கள்  குடிபுகுந்த முதல் நாள் அவள் கால் நுனியில் நின்று கீழே எட்டிப் பார்த்தபோது நான் பதறிப்போனேன்..

பால்கணியிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் மாங்கனிகள் தொங்கியது என் மகளுக்கு மட்டுமல்ல என் மனைவிக்கும் சோதனையாய் இருந்தது..

ஆனால் கீழே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த 'இந்தியன் தாத்தா' அத்தனை லேசுப்பட்டவர் இல்லை.. ‘ஐயாவுக்கு எந்த மரத்துல எத்தன காய் இருக்கு, பழம் இருக்குன்னு மனப்பாடமா தெரியும்மா.. நீங்க பாட்டுக்கு எங்க பாக்கப்போறாருன்னு பறிச்சிராதீங்க.. அப்புறம் அடுத்த நாளே காலி பண்ணிருங்கன்னு சொன்னாலும் சொல்லிருவார்.. பாப்பாவையும் பால்கணியில விடாதீங்கன்னு ஐயா சொல்லச் சொன்னாரு..’ என்று முதல் நாளே மாடிக்கு வந்து அறிவுறுத்திய அவருடைய வேலையாளைப் பார்த்ததும் என் மனைவிக்கு புதுவீட்டின் ச்சார்ம் (charm) போய்விட்டது என்றே கூறலாம்.

அதுமட்டுமா? லாட்ஜ் ரூமுக்குள்ள வாடகைக்கு அறைகள் எடுப்பவர் கவனத்திற்கு என்று சட்டமடித்து ஒரு அறிக்கை வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்களே.. அதே போன்ற ஒரு பட்டியலை அடுத்த நாளே வீட்டுக்காரம்மா என் மனைவியிடம் வாசித்தபோது.. ‘ஐயோ.. உங்க பேச்ச கேக்காம இங்க வந்ததுக்கு என்ன செருப்பால அடிச்சிக்கணும் போலருக்குங்க..’ என்ற என் மனைவியைப் பரிதாபத்துடன் பார்த்தேன்.


தொடரும்..

22 February 2006

சங்கிலிப் பதிவு - டி.ராஜின் கைங்கரியம்

சிங்கை D. ராஜ் (என்ன ராஜ் இப்படி மாட்டி விட்டுட்டீங்க?) அன்புத்தொல்லையால் (!) வந்த வினை..

இச்சங்கிலிப் பதிவில் அடுத்த வளையம் நான்..

எனக்குப் பிடித்த நாலு விஷயங்கள்..

Four Jobs I have had:

லெதர் குட்ஸ் தயாரிப்பு நிறுவனம்: வருடம்: 1967-69. இது என்னுடைய உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. ஆல் இன் ஆல் என்பார்களே அதுபோன்ற பதவி இருந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள்..

ஹிக்கின்பாதம்ஸ்: வருடம் 1969-1970. சென்னையில் அப்போது இருந்த புத்தகக் கடைகளில் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது.. சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட நிறுவனம். Amalgamations என்ற தென்னிந்தியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவன குழுவில் சேர்ந்தது.. சுமார் பதினெட்டு மாதங்கள்  குமாஸ்தாவாக பணியாற்றினேன்.. பணி நிரந்தரம் அடைய வாய்ப்பில்லை என்பதால் விலகினேன்.

இப்போதுள்ள வங்கி: 1971 ஏப்ரல்: குமாஸ்தாவாக சேர்ந்தேன்.. இன்று Deputy General Manager..

நான்காவது? தேவைப்பட்டால் பணி ஓய்வு பெற்ற பிறகு..

Four Movies I would love to watch over and over again..

1.     உதிரிப் பூக்கள்
2.     மவுன ராகம்
3.     சேது
4.     தவமாய் தவமிருந்து

Four Places I have lived

1.     சென்னை
2.     தஞ்சை
3.     மும்பை
4.     மதுரை

Four places I would rather be (now)

1. என் மூத்த மகளுடன் (சிறிது காலமாவது) மலேசியாவில்
2.என் அம்மாவுடன் (திருத்துறைப் பூண்டியில்)
3.தனிமையில் (பழைய சிந்தனைகளை அசைபோட)
4.என் அலுவலகம் (வேறு வழியில்லாமல்)

Four TV serials I love to watch

உண்மையா சொல்றேன் எனக்கு அதுக்கு நேரமே கிடைச்சதில்லை.. இருந்தாலும், தமிழ்ல ஒன்னுமே சொல்றதுக்கில்லை.. ஆங்கிலத்தில்? வீட்ல செட் டாப் பாக்ஸே இல்லை..

Four Places I have been on vacation

1.     லோனாவாலா, மும்பை,
2.     ஊட்டி,
3.     கொடைக்கானல்
4.     மூனார், கேரளா

Four of my favourite Foods (ரொம்ப முக்கியம்!)

1.     வெங்காய ஊத்தப்பம்,
2.     வெண் பொங்கல்,
3.     ரவா தோசை
4.     கேசரி (ஒரு காலத்தில். இப்பவும் சைதான்.. ஆசை இருந்து என்ன பண்ண?)

Four sites I visit Daily

1.     என்னுடைய வங்கியின் இணைய தளம்
2.     கூகுள்
3.     தமிழ்மணம் (வேற வழி?)
4.     Tamilnetmalaysia.com (என்னுடைய படைப்புகளை தெரியாத்தனமாக வெளியிடுவதால்)

Four People I would like to tag (மன்னிச்சிருங்கய்யா)

1.     கோ. ராகவன்,
2.     ஜோ மில்டன்
3.     சோம்பேறிப்பையன்
4.     டோண்டு (சாரி, போலி டோண்டு இல்லை)

திரும்பிப் பார்க்கிறேன் 85

தஞ்சைக்கு சென்ற புதிதில் நான் நடத்திய வாடகை வீடு வேட்டையைப் பற்றி எழுதியிருந்தேன்.

என் மகள் உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்தே என் மனைவி வீட்டை மாற்ற வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்.

‘டவுண்லருந்து நாம இனியும் இவ்வளவு தூரத்துல இருக்க வேணாங்க. ஊருக்கு வந்த புதுசுலத்தான் உங்களுக்கு யாரையும் தெரியலங்கறதுனால இவ்வளவு தூரத்துல வந்து இருக்க வேண்டியதா போச்சி.. இப்ப என்ன? உங்க கஸ்டமர்ங்கள்ல யார்கிட்டயாவது சொன்னா போறுமே.. அன்னைக்கி மாதிரி பாப்பாவுக்கு மறுபடியும் ஏதாச்சும் உடம்புக்கு வர்றதுக்குள்ள டவுணுக்குள்ளயே வேற வீட்ட பார்த்துக்கிட்டு போயிரலாங்க.’ என்றார்.

எனக்கும் அவர் கூறியது சரியென்றே தோன்றியது. இருந்தாலும் இத்தனை நல்ல வீட்டுக்காரரை விட்டு விட்டு போக வேண்டுமா என்று நினைத்து தயங்கினேன். அதுவுமல்லாமல் நான் கேட்ட உடனே வீட்டைக் கொடுத்தவரிடம் எப்படிப் போய் நான் காலி செய்கிறேன் என்று கூறுவதென்ற எண்ணமும் தோன்றியது.

இருப்பினும் என்னுடைய மனைவியின் நச்சரிப்பை பொறுக்கமுடியாமல் என்னுடைய வாடிக்கையாளர்கள் சிலரிடம் டவுணுக்குள் நல்ல வீடு ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன்.

அத்துடன் நில்லாமல் தஞ்சை ஆயரின் இல்லத்தில் எனக்கு அறிமுகமாயிருந்த பாதிரியாரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது அவரிடமும் இதைப் பற்றி பேச அவர் அடுத்த இரண்டு நாட்களிலேயே அருளாநந்தர் நகரில் வசித்து வந்த ஒரு நண்பரின் வீட்டு விலாசத்தைக் கொடுத்து, ‘போய் பார்த்துட்டு வந்துருங்க. மத்ததையெல்லாம் நான் பேசி முடிச்சித் தரேன்.’ என்றார்.

அவர் கூறிய அருளாநந்தர் நகர் என்னுடைய அலுவலகம் இருந்த பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்பகுதியில் பல வசதியான தனி வீடுகள் இருந்ததுடன் பாதிரியார் குறிப்பிட்டிருந்த வீட்டுக்கு மிக அருகிலேயே கத்தோலிக்க கன்னியர்கள் நடத்தி வந்த மகப்பேர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையும் இருக்கவே வீடு மிகச் சுமார் ரகத்தைச் சார்ந்தது என்றாலும் என் மனைவிக்கு அந்த வீடு பிடித்துப் போனது.

வீட்டு உரிமையாளர் தமிழக மின்சார இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெற்ற அந்த காலத்து பொறியாளர். உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றவர். அத்துடன் பரம்பரை பரம்பரையாகவே திரண்ட விவசாய நிலபுலன்களுடன் வாழ்ந்த மிராசுதார் வம்சத்தைச் சார்ந்தவர். அவர் அருளானந்தர் நகரிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பில் - எனக்கு தெரிந்த வரை முக்கனி எனப்படும் மா, பலா, வாழை என எல்லா மரங்களையும் ஒரே தோட்டத்தில் வளர்க்கும் அளவுக்கு விசாலமான தோட்டத்தைப் பார்த்ததே இல்லை அதுவும் டவுணுக்குள்ளேயே - அமைந்திருந்த பழைய காலத்து வீட்டில் வசித்து வந்தவர். வீட்டுக்கு முன்னாலிருந்த சுமார் முப்பதுக்கு அறுபது என்ற முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்காரமான காளை மாட்டு வண்டியைப் பார்த்ததும் அட! என்ற ஆச்சரியத்தில் ஒரு நொடி நின்று பார்த்தோம் நானும் என் மனைவியும்.

வீட்டு வளாகத்தின் முன்னாலிருந்த இரும்பு கேட்டைத் திறந்துக்கொண்டு முற்றத்தைக் கடந்து அவருடைய வீட்டு முகப்புக் கதவை யாரும் அவ்வளவு எளிதாக நெருங்கி விட முடியாது. வீட்டின் முகப்பு வாசலில் இருந்து பார்த்தால் நேராக வீட்டிற்கு பின்புற முற்றத்தில் (அதுவும் முகப்பு முற்றத்தைப் போலவே மிகவும் பெரியது.. கடப்பா கற்களால் ன அம்முற்றத்தில்தான் நெல்லைக் பரப்பி வைத்து காய வைப்பார்கள்) ஒரு இரும்புத் தூணில் கட்டி வைத்திருந்த அல்சேஷன் நாய் குரைக்கும் தோற்றத்தைப் பார்த்தாலே வீட்டிற்குள் அத்துமீறி நுழைய நினைப்பவர்கள் கதிகலங்கிப் போவார்கள் என்பது நிச்சயம்.

தினமும் காலை எட்டு மணியிலிருந்து மாலை விளக்கு வைக்கும் நேரம் வரை முகப்பு வாசலையடுத்த நீள வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் (இந்தியன் தாத்தா நாற்காலி நினைவிருக்கிறதா.. நாற்காலியின் நீண்ட கைகளை வைத்தே நெடுமுடி வேணுவைத் தாக்குவாரே.. அதே தான்!) அதன் நீண்ட மரக் கைகளின் மேல் இரண்டு கால்களையும் விரித்து நீட்டி வைத்துக்கொண்டு... ஒரு (.)சிங்கமான கோலத்தில் (ச்சே! விவஸ்தைக் கெட்ட மனுஷன் என்பார் என் மனைவி..) அமர்ந்துக்கொண்டு அரைக்கண் தூக்கத்தில் அமர்ந்திருப்பார் வீட்டு உரிமையாளர்.

ஆறடிக்கும் கூடுதலான ஆஜானுபாகுவான உயரம்.. மைனர் ஸ்டைலில் ஓட்டைகளுடன் பின்னப்பட்ட கையில்லாத பனியன், உயர் ரக மல் வேட்டி.. கண்களை பூதாகாரமாக காட்டி மிரட்டும் பூதக்கண்ணாடி.. வெள்ளை நிறத்தில் அடர்ந்த புருவங்கள், கோடாலி மீசை, எதிராளியைப் பார்வையாலேயே துளைத்தெடுக்கும் கூரிய, பெரிய கண்கள்.. அவருக்குக் கொஞ்சமும் பொறுத்தமில்லாத குட்டையான, குண்டான மனைவி..

இவர்கள் இருவர் மட்டுமே அந்த பெரிய திகில் பங்களாவாசிகள். அவருக்கிருந்த ஒரே மகள் திருமணமாகி அந்த காலத்திலேயே அமெரிக்காவில் குடியேறியிருந்தார்.

அவருடைய வீட்டு மாடியிலிருந்த மெட்றாஸ் டெரஸ் என்ற வகை மரச்சட்டங்கள் தாங்கிய தளத்தைக் கொண்ட இரண்டு படுக்கையறை, ஒரு ஹால்.. பின்னால் பழைய காலத்து பாணியில் மங்களூர் ஓடு வேய்ந்த பெரிய சமையலறை, உணவறை.. அதற்கும் பின்னால் வானம் பார்த்த பெரிய முற்றம்.. முற்றத்திற்கு வலது புறத்தில் தாழ்ந்த ஓட்டு கூரையுடன் டாய்லெட், குளியலறை.. இடது புறத்தில் துணி துவைக்க ஒரு பெரிய கருங்கல்.. அதற்கருகிலேயே சிமெண்டாலான தண்ணீர் தொட்டி..

நான் முன்பிருந்த புது ரக வீட்டை ஒப்பிடும்போது சுமார் பதினைந்து வருடத்திற்கு முன்னால் சென்றதுபோன்ற ஒரு உணர்வையூட்டிய அந்த வீட்டைப் பார்த்ததும் என்னையுமறியாமல் என் மனைவியை ‘இது தேவையா?’ என்பதுபோல் பார்த்தேன்.

என் பார்வையின் அர்த்தம் என் மனைவிக்கு புரிந்ததோ இல்லையோ என்னுடன் மேல் மாடிக்கு வந்த அவ்வீட்டின் வேலையாளுக்குப் புரிந்துவிட்டது.

‘என்னய்யா.. வீடு புடிக்கலையா?’ என்றான் பளிச்சென்று..

என் மனைவி பதில் ஏதும் கூறாமல் வீட்டை சுற்றி பார்ப்பதிலேயே குறியாயிருந்தார். என்னையும் என் மனைவியையும் மாறி, மாறி பார்த்த வேலையாள் புரிந்ததுபோல் தலையை அசைத்துவிட்டு.. ‘அம்மாவுக்கு புடிச்சிருச்சின்னா ஒங்களுக்கும் புடிச்சா மாதிரிதானய்யா..’ என்றான் கேலியுடன்.

பார்றா.. தஞ்சாவூர்ல கூட நக்கல் பண்றதுக்கு ஆள் இருக்கு.. என்று நினைத்தவாறு என் மனைவியைப் பார்த்தேன்.. வேணாம்னு சொல்லிறேன் என்பதுபோல ‘சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை. எனக்கும் புடிச்சிருக்கு அவங்களுக்கும் புடிச்சிருக்கும். ஏங்க?.’ என்றார் என் மனைவி நேர் மாறாக..

வேறென்ன சொல்ல? வேலையாள் சொன்னது ஒரு வகையில் சரிதான்.. வீட்டம்மாவுக்கு புடிச்சா போறாதா? அவுகதான வீட்ல பொழுதன்னைக்கும் இருக்கப் போறவுக.. நாம காலைல போனா ராத்திரிக்கி வந்து தூங்கறதோட சரி.. என்ன சொல்றீங்க?

‘சரி.. உனக்கு புடிச்சிருந்தா சரி..’ என்றேன் அரை மனதுடன்.

‘என்னங்க சுரத்தே இல்லாம சொல்றீங்க? பக்கத்துலயே ஸ்பத்திரி இருக்கு.. வீட்டுக்கு பின்னால எத்தன மரங்கள் இருக்கு பாருங்க.. ஃபேனே போட வேணாம்.. ஜன்னல திறந்து வச்சா காத்து பிச்சிக்கிட்டு வரும்போலருக்கு..’ என்ற மனைவியைப் பார்த்தேன்..

காத்தென்ன.. அதோட சேர்ந்த மாட்டுச் சாணத்தின் துர்நாற்றமும் வருமே.. துணைக்கு கொசுவும் வரும் என்று நினைத்துக்கொண்டேன்.. வீட்டு வேலையாள் முன்னால் எதற்கு என்று வாயை மூடிக்கொண்டு தலையாட்டினேன்..

‘சரிங்க.. வாங்க, ஓனர்கிட்ட எவ்வளவு வாடகை.. அட்வான்சுன்னு கேளுங்க.. மாசக்கடைசியிலயே இங்க வந்துரலாம்..’

‘அதெல்லாம் நம்ம ஃபாதர் பேசி முடிச்சித் தரேன்னு சொல்லியிருக்கார்.. நாம அவசரப்பட்டு எதையாவது சொல்லி வைக்க வேணாம்..’

‘சரி.. அதுவும் சரிதான்.’

அத்துடன் நானும் என் மனைவியும் வீட்டுக்காரரிடமும் அவருடைய மனைவியிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு வெளியே வந்தோம்.

என் இரு சக்கர வாகனத்தை முடுக்கி அவருடைய வீட்டைக் கடந்ததுமே, ‘இங்க பார், அந்தாளு ஈய பேனாக்கி பேன பெருமாளாக்குற ஆளு மாதிரி தெரியுது. வீட்டுக்கு பின் பக்கம் பார்த்தியா? ஒரு இன்ச் விடாம மரத்த வச்சி, ஒவ்வொரு மரத்த சுத்தியும் பெரிசா குழிய தோண்டி சாணத்த நிரப்பி.. தண்ணிய விட்டு வச்சிருக்கார்.. ராத்திரியான கொசு பிச்சிப் பிடுங்கிரும். சொல்லிட்டேன்.. இப்ப இருக்கற வீடு கொஞ்சம் தூரம்னாலும்.. நாம மெட்றாஸ்லருந்தா மாதிரி வசதியா இருக்கு.. இங்க ஓவர் ஹெட் டாங்க் கூட இல்ல போலருக்கு.. அவசரப்பட்டு வரவேணாம். யோசிச்சி செய்யலாம்.’ என்றேன்.

என் மனைவிக்கு நான் கூறியது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது அவருடைய மவுனத்திலிருந்தே எனக்குப் புரிந்தது. எனக்கு முன்னால் என் கால்களுக்கிடையில் நின்றுக்கொண்டிருந்த என் இரண்டரை வயது மகள்.. ‘அப்பா இந்த வீட்ல நெறயா அணில், குருவி எல்லாம் இருக்குப்பா.. இங்கயே வந்துரலாம்பா..’ என.. அதான் சமயம் என்று.. ‘என்ன இருந்து என்னடி பிரயோசனம்? உங்கப்பாவுக்கு மொசைக் தரையும், தலைக்கு மேல ஷவரும் இல்லே வேணும்.. நாம ரெண்டு பேரும் அந்த காட்டுல தனியா ஒத்தையா கெடந்து படற அவஸ்தை அவருக்கெங்க தெரிய போவுது..’ என்றார்..

ஆக, மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் மெஜாரிட்டிதான் ஜெயித்தது.. கிடந்து ஒரு ரெண்டு மாசம் அவஸ்த்தைப் படட்டும். தன்னால தெரியும் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து நேரே யருடைய இல்லத்திற்குச் சென்று பாதிரியாரிடம் வீடு பிடித்திருக்கிறது என்றேன்.

அவர் பதிலுக்கு, ‘அப்படியா சரி.. வாடகையெல்லாம் பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்.’ என்றார்.

‘ஓக்கே ஃபாதர்’ என்று நான் புறப்பட ‘ஜோசப், அன்னைக்கி ண்டவர் ஒங்க பொண்ண பாக்கணும் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னாரே.. கொண்டு போனீங்களா?’ என்றார்.

அட, ஆமா! மறந்தே போய்ட்டேன் என்று நினைத்த நான். ‘சாரி ஃபாதர்.. நா மறந்தே போய்ட்டேன். இப்ப ஆண்டவர் ஃப்ரியா இருந்தா பார்த்துட்டு போட்டுமா?’ என்றேன்.

தொடரும்..


21 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 84

பண்ணையாரயையும் அவருடைய வளர்ப்பு மகளையும் என் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் என் கிளையை அடைந்தபோது என்னுடைய பொது மேலாளரும், வட்டார மேலாளரும் கிளம்புவதற்கு தயாராக இருந்தனர்.

நான் திரும்பிய நேரம் உணவு இடைவேளை நேரமாக இருந்தும் காலையில் திறப்புவிழாவுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களில் பலர் எனக்காக காத்திருந்தனர்.

‘வாங்க டிபிஆர்.’ என்று என்னை வரவேற்ற பொது மேலாளர், ‘How is your Daughter?’ என்றார்.

நான் நன்றியுடன் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். ‘She is better Sir. Thankyou so much.’

அவர் என்னுடைய வாடிக்கையாளர்களைச் சுட்டிக்காட்டி, ‘இவங்க எல்லாரும் ஒரு மணி நேரத்துக்கும் மேல நீங்க திரும்பி வர்றதுக்காக காத்துக்கிட்டிருக்கறதுலருந்தே நீங்க எந்த அளவுக்கு உங்க கனெக்ஷன்ஸ டெவலப் பண்ணியிருக்கீங்கறது தெரியுது. I am really happy TBR, keep it up.’ என்றார்.

அங்கு நின்றுக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோனோர் என்னுடைய கிளையில் கடனுதவியை எதிர்பார்த்திருந்த வர்த்தகர்கள்தான். என்றாலும் தஞ்சையில் இருபதுக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் இருந்த சூழ்நிலையில் என்னுடைய கிளையில் கடனுதவி கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களில் யாரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு மேலாளருக்காகக் காத்திருந்திருக்க மாட்டார்கள் என்ற நன்றியுணர்வுடன் அங்கு குழுமியிருந்த எல்லோரையும் நன்றியுடன் பார்த்தேன்.

என்னுடைய வட்டார மேலாளர், ‘TBR, we have roughly calculated the opening day deposits. It is more than double of what we fixed for your branch. Congrats. It also appears that you need to mobilize only little more than Rs.------ to achieve your current year’s annual budget.’ என்றவாறு என்னுடைய பொது மேலாளரைப் பார்த்து விஷமத்துடன், ‘Sir should we not increase his annual budget?’ என்றார்.

அங்கு குழுமியிருந்தவர்கள் உரக்க சிரிக்க என்னுடைய பொது மேலாளர், 'Don’t spoil his opening day mood. Let him enjoy this achievement for a while, at least until the next BM’s conference. What do you say TBR?’ என்றார் புன்னகையுடன்.

நான் பணிவுடன், ‘Whatever you say, Sir’ என்றேன்.

‘That’s good. Keep up the good work and build upon it.’ என்றவாறு குழுமியிருந்த அனைத்து வாடிக்கையாளர்களையும் பார்த்து கும்பிட்டார். ‘Thank you for your overwhelming response. Please continue to extend your support to our Bank. I assure our continued assistance to your business needs.’ என்றார். பிறகு என்னை நோக்கி, ‘Do not hesitate to contact me personally for whatever you need TBR. I’ll also tell Chairman about what you have achieved today. I know that it is a small town. Still you have achieved this much. Good. Your work will be definitely rewarded.’ என்றார்.

உடனே என்னுடைய வட்டார மேலாளர், ‘Sir, he has been promoted to scale III in the last promotion i.e. after he joined at Thanjavur.’ என்றார்.

‘I know that of course. That’s for what he had achieved in the past, before his promotion.’

அத்துடன் அவர்கள் இருவரும் என்னிடமும் அங்கிருந்த எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றனர். அவர்களை வழியனுப்பிவிட்டு திரும்பியதும், பாய், சேட், நாயக்கர், செட்டியார் உள்பட என்னுடைய பதவியுயர்வை அறிந்திராத பல வாடிக்கையாளர்களும் என்னை வாழ்த்திவிட்டு விடைபெற்றனர்.

அன்று மாலையில் வரவு செலவை முடித்து ஜெனரல் லெட்ஜரை முடித்தபோது அன்று துவக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையையும், டெப்பாசிட் செய்யப்பட்ட மொத்த தொகையையும் பார்த்தபோது உண்மையிலேயே என்னுடைய சாதனையா இது என்று மலைத்துப் போனேன்.

சென்னை கிளையின் துவக்கத் தினத்தன்று இதைவிட மூன்று மடங்கு அதிக தொகை கிடைத்தது உண்மைதான். ஆனால் அது சென்னை! அது மட்டுமல்லாமல் என்னுடைய கிளை திறக்கப்படுவதற்கு முன்னரே மூன்று கிளைகள் சென்னையிலிருந்ததாலும் அக்கிளைகளில் நான் பல்வேறு நிலைகளில் பணி புரிந்திருந்ததாலும் எனக்கு நிறைய வாடிக்கையாள நண்பர்கள் இருந்தனர்.

ஆனால் தஞ்சை போன்ற சிறு நகரத்தில் அதுவும் நான் அங்கிருந்த மூன்றே மாதங்களில் இச்சாதனை நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். ஏறக்குறைய நான் சென்று சந்தித்திருந்த எல்லோருமே ஏதோ ஒரு வகையில் என்னை நினைவில் வைத்திருந்து எனக்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது என்னுடைய உழைப்பைப் பற்றி நினையாமல் தஞ்சையில் இத்தனை நல்ல உள்ளங்களா என்று நினைத்தேன்.

‘சார் சந்தோஷப்பட்டா போறாது. செமையா ஒரு பார்ட்டி குடுக்கணும்.’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். என்னுடைய காசாளர் தலைமையில் என்னுடைய மூன்று பேர் கொண்ட ஊழியர் குழு. என்னுடைய உதவி மேலாளரும் புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தார்.

‘நிச்சயமா. எங்க வேணும்னு சொல்லுங்க. போலாம்.’ என்றேன்.

அந்த நேரம் பார்த்து என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைந்தனர் என்னுடைய கட்டிட உரிமையாளர், அவருடைய மூத்த சகோதரர், அவருடைய மகன் மூவரும். ‘சார் உங்க எல்லாருக்கும் இன்னைக்கி ராத்திரி நம்ம வீட்லதான் பார்ட்டி. சூடா பிரியாணி.. நம்ம வீட்டு பிரியாணிய யாரும் சாப்டுருக்க மாட்டீங்க.’

‘அப்படியா சார். ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னாமாதிரி உங்க வீட்டு பிரியாணின்னா விசேஷமாத்தான் இருக்கும். மேனேஜர் சாரோட பார்ட்டி இன்னொரு நாளைக்கு வச்சிக்கலாம்.. இன்னைக்கு உங்க வீட்டு பார்ட்டிதான்.’ என்றார் என்னுடைய காசாளர்.

இந்த நேரத்தில் என்னுடைய காசாளரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் என்னை விட சுமார் ஆறு வயது மூத்தவர். வேலையிலும் என்னை விட மிகவும் சீனியர். தஞ்சைக்கு அருகிலிருந்த திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர். பதிமூன்று ஆண்டுகளாக சென்னைக் கிளையொன்றில் பணிபுரிந்துக்கொண்டிருந்தவர். பதவி உயர்வு ஒன்றும் வேண்டாம் ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்தவருக்கு தஞ்சையில் ஒரு கிளை துவக்கப்போகிறார்கள் என்ற தகவல் வந்ததும் நான் தான் அக்கிளைக்கு மேலாளராகப் போகிறேன் என்று கண்டுபிடித்து நான் சென்னையிலிருந்து மாற்றலாகி புறப்படவிருந்த கடைசி நாளன்று என்னை வீட்டில் வந்து சந்தித்து, ‘சார் எப்படியாச்சும் எனக்கு உங்க பிராஞ்ச்ல போஸ்டிங் வாங்கிக் குடுங்க சார். உங்களுக்கு ரொம்ப ஹெல்ஃபுல்லா இருப்பேன்.’ என்றார்.

அவர் கூறியிருந்தது போலவே நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் எனக்கு மிகவும் உதவியாயிருந்தார். கிளை துவங்கப்பட்ட காலத்தில் நேரம், காலம் பார்க்காமல் நான் அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பும் வரை கூடவே இருப்பார். கிளையில் பணம் செலுத்த, பட்டுவாடா செய்ய பகல் இரண்டு மணிவரைதான் என்றாலும் மாலை ஐந்து மணிக்கு வாடிக்கையாளர்கள் வந்து நின்றாலும் நான் கூறினால் உடனே பெற்றுக்கொள்ளவும், பட்டுவாடா செய்யவும் தயாராயிருப்பார். கணினியின் நாமமே இல்லாதிருந்த அந்த காலத்தில் ஐந்து மணிக்கு பணத்தை பெறவோ பட்டுவாடா செய்யவோ நேரிட்டாலும் அடுத்த அரைமணியில் அவருடைய பணியை முடித்துவிட்டு காபினைவிட்டு வெளியே வந்து ஜெனரல் லெட்ஜரை முடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் ஜூனியர் குமாஸ்தாவை ஒதுங்கிக்கொள்ள கூறிவிட்டு பத்தே நிமிடத்தில் அவருடைய தவற்றைக் கண்டுபிடித்து அசெட்/லையபிலிட்டி இரண்டையும் சமன் செய்துவிடுவார்.

என்னுடைய கிளையிலிருந்த என்னுடைய துணை மேலாளருக்கும் அத்தனை அனுபவமும், திறமையும் இல்லை. தமிழ் அவ்வளவாக பேசவும் தெரியாது. ஆனால் தான் அதிகாரி என்ற பந்தா கொஞ்சம் அதிகம். இருப்பினும் என்னுடைய காசாளர் அவரையும் ஒரு அதிகாரியாக மதித்து பணிவுடன் நடந்துக்கொள்வார். வாடிக்கையாளர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கத் தெரியாமல் அவர் தடுமாறிய நேரத்தில் எல்லாம் குறுக்கிட்டு சாதுரியமாக பதிலளித்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்.

அவருடன் நான் பணியாற்றிய அந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறைக்கூட அவர் கோபப்பட்டு நான் பார்க்கவே இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் நானோ அதற்கு நேரெதிர். மூக்கில்மேல் கோபத்தை வைத்துக்கொண்டு நிற்பேன்.

அவருடன் பழகிய அந்த குறுகிய காலத்தில் என்னுடைய போக்கிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்னுடைய காசாளர். சென்ற வருடம்தான் அதே தஞ்சைக் கிளையிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது தஞ்சை, திருச்சி, கரூர், கொடுமுடி போன்ற ஊர்களிலெல்லாம் என்னுடைய வங்கிக் கிளைகள் இருப்பதால் ஐந்தாறு வருடங்களுக்கு ஒரு முறை அவருக்கு மாற்றல்கள் இருந்தாலும் தன்னுடைய சொந்த ஊரைவிட்டு அதிக தூரம் அவர் செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நான் வருடா வருடம் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இருந்த பூண்டி மாதா தேவாலயத்திற்குச் செல்லும் நேரத்தில் தஞ்சையிலிருந்த விடுதிகளில் ஒன்றில் தங்கி அங்கிருந்து ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு சென்று திரும்புவேன். பிறகு தஞ்சையிலிருந்து ரயில் பிடித்து சென்னை திரும்புவேன்.

தஞ்சையில் தங்குவதற்கான லாட்ஜ் அறைகள், திரும்புவதற்கான ரயில் டிக்கட், தஞ்சையிலிருந்து பூண்டி சென்று திரும்ப வாடகைக் கார் வசதிகள் எல்லாவற்றையும் அவர் தஞ்சையிலிருந்தபோதெல்லாம் மனமுவந்து செய்துக் கொடுப்பார். அத்தனைச் சிறிய கிராமத்தில் வசித்தாலும் அவருடைய இரு ஆண்மக்களும் வளர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர்களாகி இன்று அமெரிக்காவில் ஒருவரும் கனடாவில் ஒருவரும் பணிபுரிய இவரும் இவருடைய மனைவி மட்டும் அதே திருக்காட்டுப்பள்ளியில் அமைதியான சூழ்நிலையில், சுத்தமான காற்றை அனுபவித்துக்கொண்டு..

‘என்ன இருந்து என்ன பிரயோசனம் சார்.. மூனு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் வருஷா வருஷம் அமெரிக்காவுக்கு போய்ட்டு அப்படியே கனடாவுக்கும் போய்ட்டு வருவோம். பின்லேடன் புண்ணியம் இப்ப ரெண்டு வருஷத்துக்கு ஒருதரம் போய் வர்றதுக்குக்கூட விசா குடுக்க மாட்றான். ஏகப்பட்ட கெடுபிடி. ரெண்டு பசங்களுக்கும் ரெண்டு ரெண்டு பேரப் பசங்க இருக்குதுன்னுதான் பேரு.. அதுங்கள பார்த்தே ரெண்டு வருஷத்துக்கு மேலாவுது..’ என்றார் அவர் என்னுடைய மூத்த மகளின் திருமணத்திற்கு வந்திருந்தபோது..

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்..

வீட்டுக்கு வீடு வாசற்படி...

தொடரும்20 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 83

எங்களுக்கருகில் நின்றிருந்த சேட் உடனே, ‘Sir he has been running around the entire Town on his own for the past three months. You should be really proud of him.’ என்று ஐஸ் வைத்தார்.

அவர் எதற்கு அடிபோடுகிறார் எனக்கு மட்டும்தானே தெரியும்?

என்னுடைய பொது மேலாளர் அவரைப் பார்த்து புன்னகையுடன், ‘Yes. We know.’ என்றார். பிறகு என்னைப் பார்த்து இவர் யார் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார்.

நான் அவரையும் அவருடைய வர்த்தகத்தைப் பற்றியும் கூறினேன். இதுதான் சாக்கு என்று அவர் இடையில் புகுந்து அவரைப் பற்றியும் அவருடைய சென்னை நண்பர் எங்களுடைய வங்கியின் மத்திய கிளையில் வைத்திருக்கும் கடன் கணக்கையும் விலாவாரியாக கூற ரம்பிக்கவே என்னுடைய பொது மேலாளர் என்னைப் பார்த்து, ‘டிபிஆர், I would like to meet some of your important Customers like Mr.---------. Is there any place where I can have some privacy?’ என்றார்.

என்னுடைய கிளையில் என்னுடைய கேபினைத் தவிர வேறு அறை ஏதும் இருக்கவில்லை. மேலும் கிளை முழுவதும் வாடிக்கையாளர்கள் அடைத்துக்கொண்டு நின்றிருந்ததால் நான் என்னருகில் நின்றுக்கொண்டிருந்த கட்டிட உரிமையாளரின் சகோதரரைப் பார்த்தேன்.

அவர் புரிந்துக்கொண்டு என் பொது மேலாளரிடம், ‘சார் உங்களுக்கு ஆட்சேபனையில்லேன்னா எதிர்த்தாப்லருக்கற என் கடையில ஒரு தனி காபின் இருக்கு. அத நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.’ என்றார்.

என்னுடைய பொது மேலாளர் என்னைப் பார்க்க, 'ஆமாம் சார். It would be suitable to sit and discuss with two or three persons.’ என்றேன்.

அவர் என்னுடைய வட்டார மேலாளரைப் பார்க்க அவரும் சரி என்பதுபோல் தலையை அசைத்தவாறே என்னிடம், ‘OK, TBR. You also come.’ என்றார்.

நான் உடனே என்னுடைய உதவி மேலாளரிடம் சென்று நான் வரும்வரை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கு நின்றுக்கொண்டிருந்த சில முக்கியமான வாடிக்கையாளர்களை அணுகி என்னுடைய பொதுமேலாளர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றேன்.

சேட்டுடன் அவருடைய வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர். என்னுடைய பொது மேலாளரும் சென்னை, மும்பைப் போன்ற பெருநகரங்களில் பணியாற்றியிருந்ததால் சேட்டின் வர்த்தகத்தைப் பற்றி அறிந்து வைத்திருந்தார். ஆகவே சேட்டின் தேவைகளைப் பற்றி அவர் கூறி முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்டுவிட்டு என்னைப் பார்த்தார். ‘TBR. You can accept applications from him and his friends for Rs.-------- each for the time being and send to me through your RM.’

பிறகு சேட்டைப் பார்த்து, ‘நான் உங்களுக்கும் உங்களுடைய நண்பர்களில் பத்து பேருக்கும் தலா ரூ.----------- வீதம் ஆறு மாதங்களுக்கு லிமிட்ஸ் சாங்ஷன் செய்கிறேன். உங்களுடைய கணக்கில் நீங்கள் செய்கிற வரவு செலவைப் பொறுத்து உங்களுடைய லிமிட்சைக் கூட்டுவதுடன் உங்களுடைய சங்கத்திலுள்ள இன்னும் சிலருக்கு கடனுதவி செய்ய முயல்கிறேன்.’ என்றார்.

சேட் இதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவருடைய முகத்திலிருந்த மகிழ்ச்சியே காட்டியது. வாயெல்லாம் பல்லுடன், ‘Thank you so much Sir. You need not worry about the turnover in the accounts.’ என்றார்.

அவர் சென்றதும் அதற்கடுத்து அவரைப் போலவே தஞ்சையில் நான் கடந்த இரண்டு வாரங்களில் சந்தித்திருந்த வர்த்தகர்களை பொது மேலாளருக்கு அறிமுகம்படுத்தினேன். ஏறக்குறைய வந்திருந்த எல்லோருக்குமே அவருடைய அதிகாரத்திற்குட்பட்ட கடன் தொகைக்கு In principle sanction அளித்தார். அன்று அவர் அனுமதியளித்த கடன் தொகைகளை நான் வழங்கினாலே அவ்வருட இறுதிக்குள்ளாகவே என்னுடைய கிளை லாபத்தில் இயங்க ஆரம்பித்துவிடும் என்று நினைத்தேன்.

ஆனால் அதே சமயம் இவ்வாடிக்கையாளர்களின் விண்ணப்பப் படிவங்களையெல்லாம் பூர்த்திசெய்து அதற்குண்டான கணக்கு வழக்கு பத்திரங்களையெல்லாம் சேர்த்து அனுப்புவதற்கு என்ன பாடுபடப் போகிறேனோ என்றும் நினைத்தேன்.

அத்துடன் போதும் என்று கிளம்பிய பொது மேலாளருடன் சுமார் பகல் ஒரு மணிக்கு என்னுடைய வங்கி கிளைக்கு திரும்பியபோது எனக்காகக் காத்திருந்த பண்ணையாரையும் அவருடைய வளர்ப்பு மகளையும் கண்டு அதிர்ந்துபோய்  ‘சே! இந்த சேட் பண்ண களேபரத்தில் ஐயாவை மறந்தே போனேனே என்று என்னை நானே நொந்துக்கொண்டுஅவரை அவசரமாக நெருங்கினேன். ‘என்ன ஐயா நீங்க இன்னும் போகலையா?’ என்றேன்.

அவர் புன்னகையுடன், ‘என்ன தம்பி நீங்க? உங்க கிட்ட சொல்லாம எப்படி போறதுன்னுதான்...’ என்றவாறு தன்னுடன் கொண்டுவந்திருந்த மஞ்சள் பையிலிருந்து தயக்கத்துடன் ஒரு உறையை எடுத்து என்னிடம் நீட்டினார். ‘தம்பி, நீங்க கேட்டா மாதிரியே என்னால முடிஞ்சத..’

அந்த காசோலையைக் கண்ட நான் அதிர்ந்துபோய் பண்ணையாரை திகைப்புடன் பார்த்தேன். அத்தனைப் பெரிய தொகை அது! இதை என்னுடைய வங்கியில் இடுவதற்காக எத்தனை வங்கியிலிருந்த வைப்புக் கணக்குகளை முடித்தாரோ என்று நினைத்தேன்.

உடனிருந்த நாயக்கர் என்னை சற்றுத் தள்ளி அழைத்துக்கொண்டு சென்று, ‘சார் நீங்க அவர ஒரு சாதாரண கஸ்டமராத்தான் நினைச்சிக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஆனா அவரு உங்கள ஒரு உறவா நினைச்சிக்கிட்டிருக்கார். அவரத்தான் சார் நீங்க உங்க அதிகாரிங்கக்கிட்ட அறிமுகப்படுத்தணும். அந்த களவாணிப்பய சேட்ட இல்ல.’ என்றார் சற்றே எரிச்சலுடன்.

அவர் பேசியதில் இருந்த ஆதங்கம் என்னையும் பாதிக்க எங்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த என்னுடைய பொது மேலாளர் பண்ணையாரின் தோற்றத்தைக் கண்டு பொருட்படுத்தாமல் சென்றதைப் பார்த்த நான் அவரை அழைத்து பண்ணையார் கொடுத்த காசோலையை அவரிடம் காண்பித்து அறிமுகப்படுத்தினேன்.

என்னுடைய பொது மேலாளரும்  காசோலையையும் பண்ணையாரையும் மாறி மாறி பார்த்துவிட்டு குழப்பத்துடன் என்னைப் பார்த்தார். நான் உடனே அவரைப் பற்றியும் அவருடைய தோட்டத்தைப் பற்றியும் சுருக்கமாக எடுத்துக் கூறினேன். எங்களுக்கு சற்று தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த நாயக்கரும் எங்களுக்கருகில் வந்து பண்ணையாரைப் பற்றி அவரிடம் கூற என்னுடைய பொதுமேலாளார் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

இதை எதிர்பார்க்காத பண்ணையார் கூச்சத்துடன் தன் கைகளை விடுவித்துக்கொண்டு, ‘எல்லாம் உங்க மேனேஜர் தம்பிதான் காரணம். பத்து பதினைஞ்சு மைல் தூரத்தையும் பாக்காம என்ன பல தடவை வந்து பார்த்து திரும்ப திரும்ப கேட்டதாலத்தான் எனக்கும் ஏதாச்சும் செய்யணும்னு தோனிச்சி சார். இப்ப கணக்கு வச்சிருக்கற பேங்க்லல்லாம் எங்கள மாதிரி விவசாயிங்கள கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா இந்த தம்பி என்னையும் மதிச்சி வந்து கேக்கும்போது...’ என்றார் குரல் தழுதழுக்க.

‘பாத்தீங்களா டிபிஆர்? இதத்தான் எல்லா மேனேஜர் மீட்லயும் நான் அடிக்கடி சொல்றது. கஸ்டமர்ங்கள்ல பெரியவங்க சின்னவங்கன்னு யாருமே இல்லை.. நம்மள பொறுத்தவரை அஞ்சு ரூபா வச்சிருக்கறவரும் கஸ்டமர்தான். அதுமட்டுமில்ல கஸ்டமர்ங்கள அவங்களோட தோற்றத்தை மட்டும் வச்சி எடைபோடக்கூடாது.. நான் இது என்னுடைய முப்பது வருஷ வங்கி வர்த்தக அனுபவம்’ என்றவாறு பண்ணையாருடைய கரங்களை மீண்டும் பற்றிக்கொண்டு, ‘ஐயா நானும் உங்களுடைய எளிமையான தோற்றத்தைக் கண்டு பார்த்தும் பார்க்காமல்தான் செல்லவிருந்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.’ என்றார்.

அவருடைய இந்த கனிவான வார்த்தைகள் பண்ணையாரின் தர்மசங்கடத்தை மேலும் அதிகரிக்க அவர் என்னைப் பார்த்து, ‘தம்பி நான் கிளம்பறேன். நீங்க ரசீது எழுதி வைங்க. நான் ரெண்டு மூனு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கறேன். நான் இப்படியே உங்க வீடு வரைக்கும் போய்ட்டு போறேன்.’ என்றார்.

அவர் பேசியதன் பொருள் விளங்காமல் என்னைப் பார்த்த என்னுடைய பொது மேலாளரிடம் அன்று காலையில் என் மகள் திடீரென்று சுகமில்லாமல் போனதையும் பண்ணையார் என் மகளைக் காண வேண்டும் என்று என்னிடம் தெரிவித்ததையும் சுருக்கமாக கூறினேன்.

அவர், ‘அப்படியா? எனக்கு தெரியவே இல்லையே. நீங்க ஒன்னு பண்ணுங்க. நான் வந்த கார் வெளியதான் நிக்குது. நீங்க இவரை கூட்டிக்கிட்டு போய்ட்டு வந்துருங்க. நீங்க வர்ற வரைக்கும் இங்கருக்கற கஸ்டமர்ஸ நானும் உங்க RMமும் பார்த்துக்கறோம்.’ என்றார்.

அவர் வேலையில் மிகவும் கண்டிப்பானவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் சென்னைக் கிளையில் இருந்தபோது தலைமையலுவலகத்துக்கு சென்றிருந்த நேரத்தில் இரண்டு மூன்று முறை அவருடைய கேபினில் சென்று சந்தித்திருக்கிறேன்.

ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டார். சுருக்கமாக வந்த விஷயத்தைக் கேட்டுவிட்டு, ‘ஓக்கே டிபிஆர். ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பிவைத்து விடுவார்.

அவரா இப்படி?

அதற்கு மேலும் காத்திருக்காமல் பண்ணையாரையும் அவருடைய மகளையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்குச் சென்றேன்.

நல்ல வேளை, நான் பண்ணையாருடன் சென்றடைந்தபோது என் மகளுடைய காய்ச்சல் சற்றே  குறைந்திருந்தது. இருப்பினும் மிகவும் களைப்புடன் இருந்த என்னுடைய மகள் பண்ணையார் முகத்தைக் கண்டதும் பளிச்சென்று புன்னகைக்கவே அவர் மிகவும் மகிழ்ந்துப் போனார். எனக்கே அவர்களுக்கிடையில் இருந்த அந்த அற்புதமான கெமிஸ்ட்ரியின் பின்னணி புரியவில்லை.

நாங்கள் தஞ்சைக்கு வந்த கடந்த சில மாதங்களில் சுமார் இரண்டு மூன்று முறை தூத்துக்குடியிலிருந்து வந்து சென்ற என்னுடைய மாமனாரென்று பண்ணையாரை நினைத்துக்கொண்டிருப்பாளோ என்றும் தோன்றியது. அந்த அளவுக்கு அவருடன் ஒட்டிக்கொண்டாள் என் மகள்.

என்னுடைய பொது மேலாளர் எனக்காக காத்திருப்பாரே என்பது நினைவுக்கு வர நான் பண்ணையாரை அழைத்துக்கொண்டு டவுணுக்கு திரும்பும் நோக்கத்துடன், ‘ஐயா நாம போலாம்னு நினைக்கிறேன். இன்னொரு நாளைக்கு நானே உங்கள என் மகளோட வந்து பார்க்கறேன்.’ என்றேன்.

ஆனால் அவரோ, ‘நீங்க கார எடுத்துக்கிட்டு போங்க தம்பி. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன்.’ என்றார்.

என் மனைவியும், ‘நீங்க போங்க. ஐயாவும் இவங்களும் இருந்து சாப்ட்டுட்டு போட்டும்.’ என்று அவருடைய மகளைச் சுட்டிக்காட்டி சொல்லவே நான் வேறு வழியின்றி அவர்களிருவரையும் விட்டுவிட்டு கிளம்பினேன்.

வரும் வழியெல்லாம் அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன்.

நான் தஞ்சையிலிருந்து மாற்றலாகி தூத்துக்குடி சென்று மூன்று வருடம் கழித்து சென்னைக்கு சென்று அங்கிருந்து மூன்று வருடங்கள் கழித்து மும்பைக்கு செல்லும் வரை வருடா வருடம் வேளாங்கண்ணிக்கு செல்லும்போதெல்லாம்  அங்கிருந்து பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் பண்ணையாரின் தோப்புக்கு சென்று  அவ்ருடன் ஒரு இரண்டு மூன்று மணி நேரம் தங்கிவிட்டு செல்லாமல் இருந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் என் மகளைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் இருவரும் பாசத்துடன் பழகிக்கொள்வதை பார்க்கும்போதெல்லாம் அப்படி அவர்கள் இருவரும் மற்றவரில் என்ன உறவைப் பார்த்தார்கள் என்று இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். என் மகளுடைய இரண்டுவயதில் துவங்கிய அந்த பாசம் அவள் வளர்ந்து பத்து வயதுவரை சற்றும் மங்காமல் இருந்தது பெரிய ஆச்சரியம்தான்.

மும்பையில் இருந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்து ஒரு முறை பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் தோப்பிற்குச் சென்றபோது தோப்பு கைமாறி இருந்தது. பண்ணையார் காலமாகி மூன்று வருடங்கள் ஆகியிருந்தது.

அவர் நோய்வாய்பட்டு படுக்கையில் விழுந்ததும் அவருடைய வளர்ப்பு மகளை ஊரை விட்டே விரட்டியடித்துவிட்டு அவருடைய உறவினர்கள் அவரை நிர்பந்தித்து சொத்து பத்திரத்தில் கையொப்பமிட வைத்து அவருக்கிருந்த எல்லாவற்றையும்  அபகரித்துக் கொண்டனர் என கேள்விட்டபோது நான் என் மனைவியும் வேதனையடைந்தோம்.

நல்லவேளை. என் மூத்த மகளை சென்னையில் என் தாயார் வீட்டில் விட்டு விட்டு சென்றிருந்தேன்.

அந்த நல்ல மனிதர் மரணத்தருவாயிலும் சந்தோஷமாக இல்லை என்பதை இன்று நினைத்தாலும் துக்கம்தான் மேலிடுகிறது.

தொடரும்..

17 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 82

தஞ்சை கிளையில் நான் பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு கிடைத்த அனுபவங்களை முழுவதும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கென்றே இன்னும் இருபது இடுகைகளுக்கும் கூடுதலாக எழுத வேண்டியிருக்கும்.

ஆகவே அதைத் தவிர்த்து எனக்கு கிடைத்த சில முக்கியமான அனுபவங்களை மட்டும் அடுத்து வரும் இரண்டு, மூன்று பாகங்களாக எழுதிவிட்டு என்னுடைய அடுத்த கிளைக்குச் செல்லலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

நான் முன்பே கூறியிருந்தபடி தஞ்சையின் முக்கியமான தொழில் விவசாயம்தான்.

தஞ்சையில் அப்போது இருந்த கனரக தொழிற்சாலைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தஞ்சையின் நுழைவாயிலில் இருந்த Tantex என்ற உள்ளாடை நிறுவனம் மற்றும் லக்ஷ்மி சீவல் நிறுவனம். இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நெல் அரவை மில்கள்தான் அதிகம் இருந்தன.

பிறகு எங்கு பார்த்தாலும் இருந்த உணவகங்களும், துணிக்கடைகளும் தான் தஞ்சையின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள்.

ஆகவே, தஞ்சையில் அதிக அளவில் வணிகக் கடன்கள் கொடுக்க வாய்ப்பிருக்கவில்லை. என்னுடைய வங்கியில் மட்டுமல்லாமல் தஞ்சையில் இயங்கி வந்த மற்ற எல்லா வங்கிகளிலும் சேமிப்பு (Deposit Accounts) கணக்குகள்தான் அதிகமே தவிர கடன் கணக்குகள் (Loan Accounts) முக்கியமாக, தொழில்கள் துவங்குவதற்கு கொடுக்கப்பட்ட கடன் கணக்குகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அதிலும், தங்க நகைகளை ஈடாக வைத்துக்கொண்டு பெரும்பாலும் விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட கடன்களே அதிகமிருந்தன.

மத்திய, மாநில மற்றும் தஞ்சை ஆயர் பொறுப்பில் இயங்கிவந்த Multipurpose Social Service Society போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட டு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, என்ற பல்வேறு கால்நடை பராமரிப்புத் திட்டங்களுக்கான சலுகைக் கடன்களே அதிகம்.

நான் அங்கிருந்த காலத்தில் என்னுடைய வங்கியிலிருந்து விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கடன் வழங்கியது கனரக வாகனங்கள் வாங்குவதற்குத்தான்.

பிறகு தமிழக அரசால் பரபரப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை ஏலம் எடுக்கவும் சரக்கு கொள்முதல் செய்யவும் வழங்கப்பட்ட கடன்கள்!

சாராய உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று தஞ்சையில் துவக்கப்பட அதைச் சார்ந்து பல வர்த்தகங்களும்! வெற்றிகரமாக துவக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று பழைய சாராய மற்றும் கள் குப்பிகளை வாங்கி விற்பது.. இதை ரீசைக்கிள் என்பார்கள். அதில் கிடைத்த லாப விகிதத்தை நான் எழுதினால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள் என்பது உறுதி.

என்னுடைய அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் பரிச்சயமான நாயக்கரின் நெருங்கிய நண்பருக்குத்தான் தஞ்சையில் சாராய உற்பத்தி உரிமம் கிடைத்தது.

எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும், என்னுடைய வங்கியின் வெல்விஷராகவும் இருந்ததால் அவர் வழியாக அந்த தொழிற்சாலையின் கணக்கும் எனக்கே கிடைத்தது.

இதில் ஒரு விவகாரமான காரியம் உள்ளது.

அன்று ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெரிய புள்ளிக்குத்தான் த.நாவிலிருந்த சாராய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவைக்கு உரிமம் கிடைத்தது. அவரும் சரி, அவருக்கு உரிமம் வழங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டியவரும் சரி, இப்போது உயிருடன் இல்லை.

அப்பெரிய புள்ளி தனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு அத்தொழிற்சாலை உரிமங்களை பகிர்ந்தளித்தார் என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை. அதில் பெரும்பாலோனோர் அண்டை மாநிலமான கேரளத்தைச் சார்ந்தவர்கள். அதற்கு என்ன காரணம் என்று நான் வெளிப்படையாக இங்கே எழுதுவது அத்தனை உசிதமானதல்ல என்று நினைப்பதால் அதை உங்களுடைய ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

அதற்கு பிரதியுபகாரமாக த.நா குடிமகன்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு குப்பிக்கும் 'இத்தனை' என்று உரிமம் வழங்க காரணமாயிருந்தவர்களுக்கு கப்பம் செலுத்தப்பட்டது என்பதையும் நான் அறிவேன்.

அதற்கு கணக்கில் வராத பணம் தேவைப்படும் அல்லவா? அதற்கு மூலாதாரம்தான் இந்த பழைய பாட்டில் ரீசப்ளை டெக்னிக் உதவியாயிருந்தது.

எப்படி?

சாராய கடைகளிலிருந்து காலியான பாட்டில்களை சுமார் ஐம்பது காசிலிருந்து ஒரு ரூபாய் வரைக்கும் சாராய தொழிற்சாலைக்கு மிகவும் நெருங்கியவர்கள் வாங்குவார்கள். அதை சேகரித்து ச்சாக்கு பைகளில் கட்டி சாராய தொழிற்சாலை உரிமையாளர் நடத்திவந்த ஒரு நிழல் நிறுவனத்திற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று ரூபாய்க்கு விற்பார்கள். ஒரு மாதத்தில் சுமார் ஒரு லட்சம் குப்பிகள் வரை சாராய மற்றும் கள்ளுக் கடைகளிலிருந்து வாங்கப்பட்டன என்று நினைக்கிறேன்.

அவை சுத்தம் செய்யப்பட்டு புதிய குப்பிகளை அதை தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வாங்குவதுபோல் போலியான குப்பி தயாரிக்கும் தொழிற்சாலைகள் பேரில் இன்வாய்ஸ் செய்வார்கள். எவ்வளவுக்கு என்று நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு ரீசைக்கிள்ட் குப்பியும் பத்திலிருந்து பதினைந்து ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக செலவுக் கணக்கு எழுதப்படும்!

கூட்டி, கழித்து பாருங்கள்..

எவ்வளவு க.பணம் திரட்டப்பட்டிருக்கும் என்கின்ற விவரம் புரியும்!

இந்த தங்கச்சுரங்கத்திலிருந்துதான் அ.வாதிகளுக்கும், அ.காரிகளுக்கும் கப்பம் அளிக்கப்பட்டது.

சாராய உற்பத்தி உரிமம் பெற்றிருந்தவர்கள் தொழிற்சாலை துவங்க வேண்டுமென்றால் அதை உள்ளூரில் வசிப்பவர் பெயரில்தான் துவக்கவேண்டும் என்ற நியதியை அரசு வைத்திருந்ததால் நம்முடைய நாயக்கரின் நண்பருக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்தது!

அவருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலம் தொழிற்சாலை நிறுவுவதற்கு ஏதுவாய் இருந்தது. நிலம் மட்டும்தான் அவருடையது. முதலீடு நான் முன்னே குறிப்பிட்ட மாநிலத்தைச் சார்ந்தவர்களுடையது..

என்ன பெரிய தொழிற்சாலை!

சர்க்கரை ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரெக்டிஃபைட் ஸ்பிரிட்டுடன் ஃபில்டர்ட் குடிநீரைச் சேர்த்து மீண்டும் வடிகட்டினால் கிடைப்பதுதான் சாராயம்!

இதற்கு என்ன பெரிய தொழிற்சாலை தேவை?

ஆனால் டேங்கர், டேங்கராக ரெக்டிஃபைட் ஸ்பிரிட் கொள்முதல் செய்வதற்கு கணிசமான தொகை தேவைப்பட்டது என்பது உண்மைதான். அண்டை மாநிலத்தில் இத்தகைய தொழிலில் காலங்காலமாக ஈடுபட்டிருந்தவர்கள் இடத்தில் பணத்திற்கு கேட்கவா வேண்டும்? மேலும் அம்மாநிலத்தில் அக்பாரி (சாராய மற்றும் மதுபான விற்பனை) வர்த்தகம் என்பது மிகவும் பிரபலமானது. அதற்கு கடன் வழங்க போட்டி போட்டுக்கொண்டு நின்றன வங்கிகள்.

லட்சக் கணக்கில் புழங்கும் வர்த்தகமாயிற்றே.. லாப விகிதம் நம்மால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது.. எனவே வங்கிகள் வழங்கும் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தும் வணிகர்களுக்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அளவிற்கு கடன் வழங்கவும் வங்கிகள் தயாராயிருந்தன..

அங்கு பெற்ற கடன் தொகைகள் திருப்பிவிடப்பட்டு த.நாவில் தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன, வங்கிகளுக்கே தெரியாமல்..

அண்டை மாநிலத்தைவிடவும் அதிக அளவிலான லாபம் த.நாவில் கிடைத்து தாங்கள் வழங்கிய கடன் தொகைகளும் ஒழுங்காக திருப்பி அடைக்கப்பட்டதால் வங்கிகளும் இத்தகைய மாநில எல்லைகளைக் கடந்து பணம் கைமாறுவதையும் கண்டும் காணாததுபோல் பாவனை செய்தன என்பதுதான் உண்மை.

அத்தகைய வழியில் துவக்கப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பெயரிலேயே நகரில் இருந்த பெரும்பாலான கடைகளும் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தன (அதனால்தான் நான் முன்னே குறிப்பிட்ட ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவருக்கு கடைகள் கிடைக்காமல் போயின. இன்னொரு விஷயம். இவருடைய வணிகத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட என்னிடம் கடனுதவி கேட்டிருந்தாரே, அதையும் என்னுடைய மேலிடம் மறுத்துவிட்டதாக நாசூக்காக - பொய் சொல்வதை இப்படித்தான் கூறுவோம் - நானே மறுத்துவிட்டேன்.). தொழிற்சாலை உற்பத்தி செலவு, பாக்கிங் செலவுகள் உட்பட ஒரு பாட்டிலுக்கு சுமார் பதினைந்திலிருந்து இருபது ருபாய் என்றால் கடையில் விற்க்கப்பட்ட விலை சுமார் இரண்டு மடங்கு!

ஆக, ஒரு குப்பிக்கு நூறு சதவிகித லாபம்!

குடிசைவாசி குடித்தே அழிந்தான் என்றால் விற்றவன் மாட மாடங்கள், கூடகோபுரங்கள் கட்டும் அளவுக்கு வளர்ந்தான் என்பது உண்மையிலும் உண்மை..

பலர் குடியைக் கெடுக்கும் குடி அதே சமயத்தில் சில கோபுரங்களையும் உருவாக்கியது என்பதும் நான் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை!

இந்த அபிரிதமான லாபம் அன்றைய ------- கட்சியைச் சார்ந்தவர்களைச் சென்றடையாமல் வழிமாறி போய்விட்டது என்பதை அறிந்துதான் அன்றைய அரசு ‘தாஸ்மாக்’ என்ற நிறுவனத்தை உறுவாக்கியது.

இந்நிறுவனம் சாராயத் தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக சாராயத்தைக் கொள்முதல் செய்து சில்லரைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தது நான் தஞ்சையிலிருந்த காலத்தில்தான்.

அதனால் தொழிற்சாலை அதிபர்களுக்கு கிடைத்துவந்த கொள்ளை லாபம் எந்த அளவுக்கு குறைந்து போனது என்பதை நேரில் கண்டவன் நான்.

அதுமட்டுமா? இந்த விற்பனை முறை தாஸ்மாக் நிறுவன அ.காரிகளுக்கும் மறைமுகமாக உதவியது என்பதும் உண்மை. தொழிற்சாலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சரக்குக்கு லட்சக் கணக்கில் காசோலை வழியாக பணம் பட்டுவாடா செய்யப்படும். அத்தகைய ஒவ்வொரு காசோலையைப் பெறுவதற்கும் ஆயிரக் கணக்கில் கவரில் வைத்து ‘தள்ளி’னால்தான் காசோலை கைமாறும்.

சாராயக் கொள்முதலை முதலில் துவக்கிய இந்நிறுவனம் பிறகு இந்தியன் மேட் மேலைநாட்டு மதுபான வகைகளையும் (விஸ்கி, பிராந்தி வகையறாக்கள்) கொள்முதல் செய்து விநியோகிக்கத் துவங்கியது..

சரி.. அப்போதும் சில்லரை வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வந்தது என்பது உண்மை..

அதனால்தான் இப்போது சமீபத்தில் சில்லறைக் கடைகளையும் அரசே ஏற்று நியாய விலை கடைகளிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியரை வைத்தே விஸ்கி, பிராந்தியை விற்க வைத்தது!

(இதற்கு வேறு ஒரு மறைமுகமான காரணமும் உண்டு என்று கடைகளை இழந்தவர்கள் கூறினாலும்.. நமக்கேன் வம்பு? கண்ணால் காண்பதே பொய்யாகப் போய்விடும்போது காதால் கேட்டதை எப்படி நம்புவது?)

இத்தகைய கடைகளில் பணிபுரிபவர்களும்கூட தங்களை இப்போதெல்லாம் அரசு ஊழியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்..!

கார்ப்பரேஷன் கழிப்பிடத்தை சுத்தம் செய்பவரிலிருந்து மதுபானத்தை ஊற்றி கொடுப்பவர் வரை அரசு ஊழியர்தான்!

நாளைக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைக் கடன்கள் எப்படி கொள்ளையடிப்படுகின்றன என்பதைக் கூறுகிறேன்.

தொடரும்..
16 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 81

அடுத்த நாளும் அப்படியே அமையவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கொண்டு வீடு திரும்பி நிம்மதியாக உறங்கினேன்..

ஆனால் நாம் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்றல்லவோ நினைக்கிறார்.

அன்று காலையில் எழுந்ததுமே என் இரண்டரை வயது மகளுக்கு நல்ல ஜுரம்.. இரவு முழுவதும் உறங்காமல் அழுதுக்கொண்டே இருந்திருக்கிறாள்..

அடுத்த நாள் திறப்புவிழாவாயிற்றே நள்ளிரவு கடந்து வந்து உறங்கச் சென்றவரை எப்படி எழுப்பி தொந்தரவு செய்வதென்று நினைத்த என் மனைவி ஹாலில் அமர்ந்து இரவு முழுவதும் மகளை தன் மடியிலேயே போட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.

காலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து ஹாலுக்குள் நுழைந்த நான் என் மகளின் சிவந்த முகத்தைப் பார்த்ததும் பதறிப்போய், ‘எதுக்கு என்ன எழுப்பாம இருந்தே?’ என்று என் மனைவியைக் கோபித்துக்கொண்டேன்.

பிறகு உடனே என்னுடைய அலுவலக உரிமையாளருடைய சகோதரரை தொலைப்பேசியில் அழைத்து விவரத்தைக் கூறினேன். அவர் அந்த நேரத்தில் நான் அழைத்தும் கோபம் கொள்ளாமல், ‘சார் நீங்க கவலைப்படாதீங்க. பாப்பாவ டாக்டர் கிட்ட காட்டிட்டே போங்க.. அதுவரைக்கும் இங்க நான் பார்த்துக்கறேன். ஓப்பனிங் பதினோரு மணிக்குத்தானே..’ என்றார்.

நான் உடனே என் வீட்டு மாடியில் இருந்த என் வீட்டுக்காரரை கதவைத் தட்டி எழுப்பி, ‘சார் பாப்பாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லை.. பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்ச யாராச்சும் டாக்டர்..’ என்றேன்.. நான் சாதாரணமாக என் மகளைக் காட்டும் மருத்துவர் டவுணில்தான் க்ளினிக் வைத்திருந்தார். அவர் க்ளினிக்கின் மாடியிலேயே குடியிருந்ததால் இப்போது சென்றாலும் அவரைப் பார்க்க முடியும். ஆனால் பத்து கிலோ மீட்டர் போக வேண்டுமே என்று யோசித்தேன்.

‘சார் இங்க பக்கத்துலதான் இருக்காரு. நீங்க போனா உங்கள தெரியலைன்னு காலையில வாங்கன்னு சொன்னாலும் சொல்லிருவார். இருங்க நானும் வரேன்.’ என்று ஒரு துண்டை மட்டும் தோள் மேல் போட்டுக்கொண்டு என்னுடன் ஓடி வந்தார்.

அவர் கூறியது சரியாகத்தான் இருந்தது. மருத்துவர் என் முகத்தைப் பார்த்ததும் எரிச்சலுடன், ‘யார் சார் நீங்க?’ என்றார்.

‘டாக்டர், சார் நம்ம வீட்லதான் குடியிருக்கார்.’ என்று என்னுடன் வந்தவரின் முகத்தைப் பார்த்ததும் அவர் முகம் மாறியது. உடனே கதவைத் திறந்து வெளியே வந்தார். ‘வாங்க சார். என்னாச்சி குழந்தைக்கு உடம்பு சரியில்லை போலருக்கு.’ என்று வீட்டு முன் தாழ்வாரத்திலிருந்த ஒரு சிறு அறைக்கதவைத் திறந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அறை சிறியதானாலும் மருத்துவம் பார்ப்பதற்கு தேவையான எல்லா வசதிகளும் இருந்தன. மருத்துவர் என் மகளை பரிசோதித்துவிட்டு, ‘சார்.. ஃபீவர்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு.. கோல்ட்தான் காரணம்னு நினைக்கிறேன். இப்ப ஒரு ஊசி போட்டு மூனு வேளை மருந்து கொடுக்கறேன். சரியாகலைனா நாளைக்கு பார்க்கலாம்.’ என்றார்.

‘சரி, டாக்டர்.’ என்று கூறிவிட்டு அவர் ஊசி போட்டு முடித்ததும் அவர் கொடுத்த மருந்துகளைப் பெற்றுக்கொண்டு மகளுடன் வீடு திரும்பிய நான் மணியைப் பார்த்தேன். ஆறு மணியாகி இருந்தது.

இப்போதே கிளம்பிச் சென்றால்தான் விழாவுக்கு தேவையான மீதமிருந்த கடைசி நேர ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இரவு முழுவதும் மகளை மடியில் போட்டுக்கொண்டு  கண் விழித்திருந்த என் மனைவியும் தூக்கக் கலக்கதில் இருந்தார். என் மகளோ மருத்துவர் இட்ட ஊசியின் மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். குளிர்ச்சியால் சிவந்திருந்த முகம் பழைய நிலமைக்கு மெள்ள, மெள்ள திரும்பிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

‘நீ போய் படு.. பாப்பா இருக்கற நிலமையில நீ ஃபங்க்ஷனுக்கு வரமுடியாது.. நான் பிஷப் புறப்பட்டு போனதும் ஃபோன் பண்றேன். ஜுரம் இறங்கலைன்னா சொல்லிட்டு வரேன். நாம ரெகுலரா பாக்கற டாக்டர போய் பார்க்கலாம்..’ என்று என் மனைவியிடம் கூறிவிட்டு குளியலறையை நோக்கி நடந்தேன்..

Man proposes God disposes என்பது எத்தனை சரியாக இருக்கிறது!

அடுத்த அரை மணி நேரத்தில் என் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன் பிப்ரவரி மாத குளிர்ந்த காற்று என் முகத்தில் அறைய மனத்திலிருந்த என் மகளைப் பற்றிய கவலை லேசானது..

என்னுடைய அலுவலகத்தையடைந்த போது என்னுடைய வட்டார மேலாளர் வந்துவிட்டிருந்தார். அவர் எப்போதும் அப்படித்தான். சரியான டென்ஷன் பார்ட்டி என்போமே அதுபோல.

நல்ல வேளை, நான் செல்வதற்கு முன்பே என் மகளைப் பற்றி பாய் சொல்லிவிட்டார். என்னைப் பார்த்ததும், ‘என்ன டிபிஆர். டாட்டர் எப்படி இருக்கா?’ என்றவரிடம், ‘ஷி ஈஸ் பெட்டர் சார். ஜுரம் மறுபடியும் வந்தாத்தான் வேற டாக்டர பாக்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்.’ என்றேன்.

‘சரி ஓகே. Now, brief me about the plans. ப்ரோக்ராம் என்ன? பிஷப், அவரே வந்துருவாரா, இல்ல நம்ம ஜி.எம் போய் அழைக்கணுமா?’

‘இல்ல சார். பிஷப் அதெல்லாம் நானே என் வண்டியில கரெக்டா பத்தே முக்காலுக்கு வந்திடறேன். விழா முடிஞ்சதும் நான் கிளம்பிருவேன்.. எனக்காக வேற ஒன்னும் அரேஞ் பண்ண வேணாம்னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கார். அதனால felicitation கூட ரெண்டே பேர்தான். நீங்க வெல்கம் பண்ணனும். அப்புறம் நம் ஜி.எம் பேசறார்.. அதுக்கப்புறம் குத்து விளக்கு ஏத்திவிட்டு பிஷப்போட சின்ன அட்றெஸ்.. அவர் அஞ்சு நிமிஷம்தான் பேசுவேன்னு சொல்லிட்டார். அப்புறம் felicitation and vote of thanks. மொத்த ஃபங்ஷனும் மேக்ஸிமம் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிரும்.’

வட்டார மேலாளர் திருப்தியுடன் என்னைப் பார்த்து தலையை அசைத்தார். ‘நீங்க பிஷப்ப தவிர வேற எந்த வி.ஐ.பியையும் கூப்டாதது நல்லதா போச்சி. போன வாரம் -------- கிளை திறப்புல உங்க ஃப்ரெண்ட்  ------------ ஊர்லருக்கற கலெக்டர்லருந்து சாம்பர் ஆஃப் காமர்ஸ் பிரசிடெண்ட் வரை கூப்டுட்டு ஒவ்வொருத்தரும் வந்து சேர்றதுக்குள்ள நம்ம சேர்மன் படு டென்ஷனா போயி எல்லார் முன்னாலயும் மேனேஜரையும் என்னையும் ஃபயர் பண்ணி.. ஏன் கேக்கறீங்க..’

நானும் சென்னையில் அவதிப்பட்டதால்தானே முன் ஜாக்கிரதையாய் செயல்பட முடிந்தது?

சரியாக பத்து மணிக்கு என் பொது மேலாளர் வந்து சேர்ந்தார். சாதாரணமாக அணியும் ஃபுல் சூட் அணியாமல் ஊருக்கேற்றார் போல் கதர் வேட்டி, கதர் சட்டையில் வந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது. எல்லாம் கோவை வாடிக்கையாளரின் ஏற்பாடு என்று பின்னர்தான் தெரிந்தது..

அவருக்கும் நான் ஏற்பாடு செய்திருந்த programme விவரத்தை விளக்கினேன். ‘யெஸ்.. நானும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள என் பேச்சை முடிச்சிக்கறேன்.. நீங்க சொல்றா மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா முடிச்சிரலாம். குட்.’ என்றார் திருப்தியுடன்.

அடுத்த அரைமணி நேரத்தில் விழாவுக்கு அழைத்திருந்த அனைவரும் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தனர். என் நண்பர் பண்ணையார் அவருடைய வளர்ப்பு மகளுடன் முதலாக வந்தார். வந்ததும் அவர் கேட்டது என் மகளைப் பற்றித்தான்.

நான் அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்றதும் திரும்பி தன் மகளைப் பார்த்து, ‘சாரோட வீட்டு விலாசத்தை குறிச்சிக்கம்மா.. விழா முடிஞ்சதும் அப்படியே போய் பார்த்துட்டு போயிரலாம்.’ என்றார்... நான் அவர் ஆசையைக் கெடுப்பானேன் என்று என்னுடைய வீட்டு விலாசம் அடங்கிய என்னுடைய அடையாள அட்டையை அவரிடம் கொடுத்தேன்.

சரியாக பத்தே முக்கால் மணிக்கு தஞ்சை ஆயரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் அலுவலக வாசலில் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய ஆயருடன் இறங்கியவரைப் பார்த்ததும் என்னுடன் நின்றுக்கொண்டிருந்த பொது மேலாளர் என்னைத் திரும்பிப் பார்த்தார். ‘அது யார் டிபஆர். நெத்தியில நாமத்தோட..’ என்றார். அது என்னை ஆயரிடம் அறிமுகப்படுத்திய பாதிரியார் குறை கூறிய ---------- வங்கி ஐயர்...

நான் அவருக்கு பதிலளிப்பதற்கு முன் ஆயர் தன் டைகளை சரிசெய்துக்கொண்டு எங்களை நோக்கி வர.. நாங்கள் மூவரும் கை கூப்பியவண்ணம் அவரை வரவேற்றோம்.

நான் குறித்து வைத்திருந்த அட்டவணைப் படி எல்லாம் கன கச்சிதமாக எந்தவித குழப்பமும் இல்லாமல் விழா நடந்தது..

ஆயர் அவர் கூறியிருந்தபடி ஐந்தே நிமிடத்தில் மிக அருமையாக பேசி முடித்தார். குழுமியிருந்தவர்களுள் தஞ்சையிலிருந்த வங்கி மேலாளர்கள் பலரும் இருந்ததை அறிந்த அவர், ‘உங்க தயவுலதான் நாங்க பல சமூக சேவை மையங்களையும் துவக்கி பல நல திட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே மிஸ்டர். ஜோசப் மட்டுமில்லாம நீங்க எல்லோரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.’ என்று புன்னகையுடன் கூறி தன் பேச்சை முடித்தார்.

பிறகு என்னுடைய கட்டட உரிமையாளரின் மூத்த சகோதரரும், சேட்டும் வாழ்த்துரைக்க என்னுடைய நன்றியுரையுடன் ஒரு மணி நேரத்திற்கும் முன்பாகவே சிறப்பாக நடந்து முடிந்தது..

ஆயர் அதற்குப் பிறகு தான் கொண்டு வந்திருந்த காசோலைகளை சம்பிரதாயமாக என் பொது மேலாளரிடம் அளிக்க அருகில் இருந்த ஐயரின் கண்கள் வியப்பால் விரிந்தன. இதைக் கவனித்த ஆயருடன் வந்திருந்த பாதிரியார் என்னைப் பார்த்து விஷமத்துடன் புன்னகை செய்தார்.

காசோலைகளைப் பெற்றுக்கொண்ட என்னுடைய பொது மேலாளர் ஆயருக்கு நன்றி கூறிவிட்டு, ‘We will definitely reciprocate your generous help with timely assistance to all your welfare projects, Sir.’ என்றார்.

‘Yes.. that is what I seek from all the Bankers in this Town.’ என்றார் ஆயர் புன்னகையுடன்..

குழுமியிருந்த அனைத்து வங்கி மேலாளர்களும் சரி என்பதுபோல் தலையை அசைக்க ஆயர் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றார்.

‘We will come up to your House Sir.’ என்று அவருடைய வண்டியுடன் கிளம்ப முயன்ற என்னுடைய பொது மற்றும் வட்டார மேலாளர்களை ஒரு சிறு புன்னகையுடன் தடுத்து நிறுத்தி, ‘that is not required. You carry on. God bless all of you and your branch.’ என்று வாழ்த்தியதுடன் என்னைப் பார்த்து, ‘ஜோசப், உங்களுக்கு ஒரு சின்ன பொண்ணு இருக்குதாமே.. அவளையும் உங்க மனைவியையும் கூப்டுக்கிட்டு ஒரு நா வந்து என்னை பாருங்க.’ என்றவாறு கிளம்பிச் சென்றார்.

என்னுடைய அதிகாரிகள் என் கையைப் பிடித்து குலுக்கி.. ‘இவ்வளவு சீக்கிரம் அவர்கிட்ட ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கிட்டதுக்கு பாராட்டுகள் டிபிஆர். I will definitely brief our Chairman about your efforts, keep it up.’ என்று வாழ்த்த எங்களுக்கருகில் நின்றிருந்த சேட் உடனே, ‘Sir he has been running around the entire Town on his own for the past three months. You should be really proud of him.’ என்று ஐஸ் வைத்தார்.

அவர் எதற்கு அடிபோடுகிறார் எனக்கு மட்டும்தானே தெரியும்?

தொடரும்..