31 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 70

அவருடைய பட்டறை தேவாலயத்திலிருந்து மிக அருகிலேயேதான் இருந்தது. நாங்கள் மூவரும் அங்கு சென்று சேர்ந்தபோது நான் அன்று சந்தித்த நபரும் அங்குதான் இருந்தார். அவர் என்னைக் கண்டதும் சற்றே சங்கடப்பட்டார் என்பது அவரை பார்த்ததுமே எனக்கு விளங்கியது.

ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாதுபோல் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எங்களுடைய அறிமுகப்படலம் முடிந்ததும் இரு பாதிரியார்களும் விடைபெற்று சென்றனர்.

அடுத்த அரைமணி நேரம் அவருடைய தொழிலைப் பற்றி அவர் கூறியதைப் பொறுமையுடன் கேட்டேன். அப்போது தஞ்சையில் அவருக்குப் போட்டியாக யாரும் இல்லாததால் அவருடைய ஆட்டோமொபைல் வர்த்தகமும், இருசக்கர, நாற்சக்கர சேவை மையமும் மிகச் சிறப்பாகவே நடந்துக் கொண்டிருந்தது.

அவருடைய நிறுவனத்தின் நிதிநிலையும் நான் எதிர்பார்த்த அளவு மோசமில்லை. வங்கிக் கடன் கொடுப்பதற்கு ஏதுவான தொழில்தான் என்று எனக்குத் தோன்றியது. அவருடைய நிறுவனத்தின் நிதியறிக்கையின்படி பார்த்தால் வர்த்தகத்தில் அவர் செய்திருந்த முதலீடு வேறெந்த வர்த்தகத்திற்கும் மாற்றப்பட்டிருக்கவில்லை.

பாதிரியார் அவர் நஷ்டப்பட்டதாய் கூறிய தொகை நிச்சயம் அவருடைய ஆட்டோமொபைல் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும் அவராக முன்வந்து நட்டம் அடைந்த விவரத்தைத் தெரிவிக்காததால் எனக்கு எப்படி கேட்பது என்று தெரியாமல் சுற்றி வளைத்து, ‘உங்களுக்கு தேவையான தொகை நிறுவனத்துல இருக்கே. அப்ப எதுக்கு இப்ப இருக்கற கடன் தொகைய விட இரண்டு மடங்கு அதிகமா கேக்கறீங்க?’ என்றேன்.

அவர் பதில் கூறாமல் என்னையே பார்த்தார். பிறகு நாங்கள் அமர்ந்திருந்த அறையிலிருந்த அவருடைய பணியாட்களை வெளியே போகும்படி கண்ணால் சைகைக் காண்பித்துவிட்டு தன் மேசை இழுப்பிலிருந்து ஒரு கனத்த கோப்பை எடுத்தார்.

‘சார், ஃபாதர் உங்கக் கிட்ட சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன். ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால தேவையில்லாதவங்க பேச்சைக் கேட்டு கொஞ்சம் முட்டாள்தனமான பிசினஸ்ல பணத்த முடக்கி நஷ்டமாயிருச்சி.’

‘ஆனா உங்க ட்டோமொபைல் ஃபர்மோட பேலன்ஸ் ஷீட்டுல அந்தமாதிரி தொகைய மாத்துனா மாதிரி தெரியலையே?’

அவர் என்ன சொல்லலாம் என்று யோசிப்பதுபோல தோன்றியது. ‘இவர் மட்டும் உண்மையை சொல்லாவிட்டால் நிச்சயம் உதவி செய்யக்கூடாது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவருடைய பதிலை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அவர் வேறொரு இழுப்பிலிருந்து ஒரு சிறிய டைரிபோன்ற புத்தகத்தை எடுத்தார். அதைப் பிரித்து ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எனக்கு காண்பித்தார்.

அதில் அவருடைய வேறொரு நிறுவனத்திற்கு கடனாகக் கொடுத்தவர்களின் பட்டியல் இருந்தது. ஒவ்வொருவரும் கொடுத்த தொகையுடன் இறுதியில் மொத்த தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘இதுவும் உங்க நிறுவனம்தானா?’ என்றேன்.

‘ஆமாம் சார்.ஆனா இதுல எங்க ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும்தான் பார்ட்னர்சா இருக்காங்க. இந்த ஃபர்மை  அரசாங்க ஏலத்துல தஞ்சாவூர் மற்றும் சுத்துப்புறத்துல ஒரு அஞ்சி சாராயக்கடை எடுக்கறதுக்காகவே ப்ளோட் பண்ணோம்.

தற்சமயத்துக்கு ஆட்டோமொபைல் பிசினஸ்க்காக பேங்க்லருந்து எடுத்த கடன் தொகைலருந்துதான் கட்சிக்காரங்களுக்கு கொடுக்க வேண்டியதாப் போச்சி. கடை ஏலம் எடுத்ததும் எங்க பேங்க்ல அதுக்கு தனியா கடன் குடுக்கறேன்னு இதுக்கு முன்னாலருந்த மேனேஜர் சொல்லியிருந்தார். நான் இந்த பிசினஸ்லருந்து தேவையான தொகையை எடுத்ததும் தெரியும். கடையும் கிடைக்கலை. மேனேஜரும் மாத்தலாகிப் போயிட்டார். புது மேனேஜர் ஸ்டாக் வெரிஃபிகேஷனுக்கு வந்தப்போ பேங்கலருக்கற கடன் தொகைக்கு ஈடா ஸ்டாக் இல்லைங்கறத பார்த்துட்டு உடனே ஓவர்டிராஃப்டுலருந்து சரக்கு வாங்குறதுக்குத் தானே பணம் ட்ரா பண்ணணும்? இப்போ தேவையான சரக்கு கையிருப்பு இல்ல. அதனால ஓவர்டிராஃப்ட் கணக்குலருந்து தேவைக்கு அதிகமா எடுத்ததை உடனே ரெகுலரைஸ் பண்ணணும்னு சொல்லிட்டார். நான் இன்னும் கொஞ்சம் டைம் குடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலை.. கைமாத்தா இவங்க கிட்டல்லாம் வாங்கிதான் பேங்க் ஓவர்டிராஃப்ட ரெகுலரைஸ் பண்ணேன்.. முதல்ல அக்கவுண்டை ரெகுலரைஸ் பண்ணுங்க, நான் உங்களுக்கு  கூடுதலா தேவைப்படற தொகையை மேலிடத்துல சொல்லி சாங்க்ஷன் வாங்கித்தரேன்னு சொன்னவர் நான் ரெகுலரைஸ் பண்ணதும் கைய விரிச்சிட்டார். கைமாத்தா வாங்குன ரெண்டு மூனு இடத்துலயும் அவரே ஃபோன் சொல்லிட்டார். அவர் வேற ஏதோ எதிர்பார்த்து அது கிடைக்கலைன்னதும் இப்படி செஞ்சிட்டார்னு நினைக்கிறேன். அவங்க எல்லாரும் கொடுத்த தொகைய திருப்பி கேக்கறதுனால இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். வாங்குன எடத்துல நேரத்துக்கு திருப்பித் தரலைன்னா மார்க்கெட்ல எங்க க்ரெடிபிளிட்டியும் போயிரும். அப்புறம் ஆட்டோமொபைல் பிசினஸ்சுக்கும் யாரும் க்ரெடிட் தரமாட்டாங்க. இருபத்தஞ்சி வருஷமா இந்த பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்படியொரு இக்கட்டான சிச்சிவேஷன நாங்க ஃபேஸ் பண்ணதேயில்லை. எல்லாம் என் நேரம்னு சொல்றதா இல்ல முட்டாள்தனம்னு சொல்றதான்னு தெரியலை. இந்த சூழ்நிலையிலதான் நான் நேத்தைக்கு பிஷப் ஹவுஸ் போயிருந்தப்போ ஃபாதர்கிட்ட சொன்னேன். உங்கக் கிட்ட சொல்றேன்னு சொன்னார்.’

அவரை பார்க்க ஒரு பக்கம் பாவமாயிருந்தாலும் இவ்வளவு பெரிய தொகையை நான் கொடுக்க முன்வந்தாலும் அவரால் இப்பிரச்சினையிலிருந்து மீண்டும் எழுந்து வர முடியுமா, அப்படியே முடிந்தாலும் அதற்கு எவ்வளவு காலம் வேண்டியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.

இருப்பினும் அவரை மேலும் நிராசைக்கு தள்ள விரும்பாத நான், ‘சரி சார். நான் கிளையைத் திறந்ததும் உங்க நிறுவனத்தோட கடந்த மூனு வருஷத்தோட பேலன்ஸ் ஷீட்டும், உங்க பேங்க் பாஸ் புத்தக நகலையும் கொண்டு வாங்க. என்னால முடியுதான்னு பாக்கறேன். இப்ப எதுவும் ப்ராமிஸ் பண்ண முடியாது. ஏன்னா உங்களுக்கு தேவையான தொகை என்னுடைய அதிகாரத்தைக் கடந்தது. ஐ வில் ட்ரை டு ஹெல்ப் யூ, ஒன்லி தட் மச் ஐ கேன் டெல் யூ நவ்.’ என்று விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.

வீட்டையடைந்ததும்தான் நினைவுக்கு வந்தது. என்னுடைய வட்டார மேலாளர் பொது மேலாளரிடம் தங்கும் அறையைப் பற்றி கேட்டு சொல்வதாய் சொன்னாரே.. என்ன சொன்னாரோ தெரியவில்லையே என்று..

வீட்டினுள் நுழைந்ததும் என் மனைவியிடம் நான் இல்லாத நேரத்தில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு ஏதும் வந்ததா என்று வினவினேன்.

'ஆமா,  நீங்க வீட்டுக்குள்ள வந்தவுடனே பேங்க் விஷயம் நான் சொல்லக் கூடாது. நீங்க மட்டும் கேக்கலாமோ?’ என்றார் என் மனைவி.

என்ன மறுமொழி சொல்வதென தெரியாமல் ஒரு நொடி விழித்தேன். பிறகு சமாளித்துக் கொண்டு.. ‘சரி தப்புதான். முதல்ல ஒரு காப்பிய குடு.. அப்புறம் சொல்லு..’ என்றேன்.

‘சரி பரவாயில்லை. சும்மாத்தான் சொன்னேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க திருச்சி மேனேஜர் ஃபோன் பண்ணார். நீங்க இன்ன¨க்கி அங்க வருவீங்கன்னு உங்க ஜோனல் மேனேஜர் சொன்னாராம். அதான் என்னாச்சி, ஏன் வரலைன்னு கேட்டார். அப்புறம் திருச்சி கோத்ரெஜ்லருந்தும் ஃபோன் வந்துது. இன்னைக்கி காலைல என்னமோ சேஃப் டெப்பாசிட் லாக்கராமே அத லாரியில ஏத்தி அனுப்பியிருக்காங்களாம். ராத்திரி எட்டு மணிபோல உங்க ஆஃபீசுக்கு வந்து சேருமாம். இறக்கி வைக்கறதுக்கு ஆளுங்களும் வராங்களாம். அந்த நேரத்துல நீங்க அங்க இருக்கணுமாம்.’

‘அப்படியா? நல்லதாப் போச்சி. இதுக்குத்தான் திருச்சிக்கு வரேன்னு சொல்லியிருந்தேன். சரி.. எங்க ஜோனல் மேனேஜர்கிட்டருந்து ஃபோனே வரலையா?’

‘இல்லீங்க. இருங்க காப்பி கொண்டுவரேன்.’ என்றவர் அடுத்த சில நிமிடங்களில் காப்பி டம்ளருடன் திரும்பி வந்து , ‘என்னங்க நீங்க திருச்சிக்கு போகும்போது நானும் வரேங்க. திருச்சி சாரதாஸ்ல பட்டுப்புடவையெல்லாம் சீப்பா இருக்குமாம். எங்க அம்மா சொல்லியிருக்காங்க.’ என்றார் ஒரு அசட்டுப் புன்னகையுடன்.

‘போச்சிரா. இது வேறயா? மாமியாருக்கென்ன.. மூத்த மகன் கப்பல்ல பொறியாளர். மாசா மாசம் சொளையா வருது.. எனக்கு அப்படியா?’ என்று மனதுக்குள்தான் நினைக்க முடிந்தது. வெளியே சொன்னால் அப்புறம் பிரச்சினைதான். ‘சரியென்று சொல்லி வைப்போம். திருச்சிக்கு போவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் ஆயிற்று.’ என்று நினைத்துக் கொண்டு, ‘சரிம்மா. திருச்சிக்கு போகும்போது பார்க்கலாம்.’ என்று அப்போதைக்கு தப்பித்தேன்.

மணியைப் பார்த்தேன். மாலை ஏழு மணி ஆகியிருந்தது.

போவதற்கு முன் என்னுடைய வட்டார மேலாளரை அழைத்து விஷயத்தைக் கேட்டுவிடலாம் என்று நினைத்து அவரை அழைத்தேன்.

அவர் தொலைப்பேசியை எடுத்தவுடனே, ‘என்ன டிபிஆர்.. நீங்க திருச்சிக்கு வருவீங்கன்னு சொல்லி வச்சிருந்தேனே. நீங்க போகலையா?’ என்றார்.

‘இல்ல சார். நாம ஆர்டர் பண்ண ஃபர்னிச்சரும் SDLம் டெஸ்பாட்ச் பண்ணிட்டேன்னு ஃபோன் வந்தது, அதான் போகவேண்டாம்னு டிசைட் பண்ணேன். இன்றைக்கு ராத்திரி எட்டு மணிக்குள்ள வந்துரும். அதான் வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.’ என்றேன்.

‘அப்படியா சரி டிபிஆர். வேற விஷயம் ஒன்னுமில்லையே.’

அவர் இணைப்பை துண்டித்துவிடுவாரோ என்ற அச்சத்தில், ‘சார் நம்ம ஜி.எம் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னீங்களே, கேட்டீங்களா?’ என்றேன் அவசர அவசரமாக.

‘ஆமா டிபிஆர். கேட்டுட்டேன். அதுக்கிடையில நம்ம கோயம்புத்தூர் கஸ்டமர் ஒருத்தரோட ஃப்ரெண்டோட ஃபார்ம் ஹவுஸ் தஞ்சாவூர்லருந்து இருபத்தஞ்சி கிலோ மீட்டர் தூரத்துல இருக்காம். அவர் நம்மளோட ரொம்ப காலத்து கஸ்டமர். நானும் உங்க கூடவே வந்து இருந்துட்டு வரேன்னு சொன்னார். ஜி.எம்முக்கு ரொம்ப பழக்கமானவர் வேற. சரின்னு சொல்லிட்டேன். சோ. அந்த பிரச்சினையப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. அவரும் கூடவே வர்றதுனால எங்களுக்குன்னு நீங்க தனியா கார் கூட அரேஞ்ச் பண்ண வேணாம்.’

அப்பாடா.. ஒரு பெரிய பிரச்சினை விட்டதென்ற நிம்மதியுடன், ‘சரி சார். ரொம்ப தாங்க்ஸ். நாளைக்கு அழைப்பிதழ் ப்ரூஃப் ரெடியாயிரும். அது கிடைச்சதும் உங்களுக்கு ஃபோன்லயே படிச்சி காட்றேன். நீங்க அப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா உடனே ப்ரிண்டுக்கு கொடுத்திரலாம். ரெண்டு நாளைல தரேன்னு ஃபாதர் சொல்லியிருக்கார்.’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் என்னுடைய கிளை அலுவலகத்திலிருக்க வேண்டும் என்ற முனைப்போடு என்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்..

நான் சென்றடைவதற்கு முன்பே திருச்சியிலிருந்து வந்த வாகனம் என்னுடைய அலுவலகத்திற்கு முன்பு நின்றுக் கொண்டிருந்தது. வாகனத்தைச் சுற்றிலும் பெருந்திரளான கும்பல் நின்றுக் கொண்டிருந்ததை தெரு முனையிலிருந்தே என்னால் பார்க்க முடிந்தது.

என்ன ஏது என்று பார்ப்பதற்குள் லாரி ஓட்டுனருடன் யாரோ இருவர் தகராறு செய்துக் கொண்டிருப்பதையும் கட்டட உரிமையாளரின் சகோதரர் மகன் அவர்களுள் ஒருவருடைய சட்டையைப் பிடித்து அடிப்பதைப் பார்த்தேன்..

சலிப்புடன், ‘என்னடா இது.. மறுபடியும் ஒரு பிரச்சினையா?’ என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் சென்றேன்..

அதற்குள் கைகலப்பு பெரிதாகி...

தொடரும்..  


30 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 69


என்ன பதில் கூறலாம் என்று யோசனையுடன் அவர்கள் இருவரையுமே மாறி, மாறி பார்த்தேன்..

‘என்ன ஜோசப், உங்களுக்கு விருப்பமில்லேன்னா நாங்க கம்பெல் பண்ணலை. ஆனா ஒன்னு, அவர் அன்னைக்கி ஜாதி விஷயமா பேசினத நீங்க மனசுல வச்சிக்கிட்டுருக்கறதுல அர்த்தமில்ல ஜோசப். அவர் சொன்னது அவங்க குடும்பத்துல பரம்பரை பரம்பரையா செஞ்சிட்டிருக்கறததான். அதுல எங்களுக்கு சம்மதமில்லைங்கறது வேற விஷயம். ஆனா அதுக்காக அவரை எங்களால வெறுக்க முடியலை ஜோசப். ஏன்னா அவங்க குடும்பம் நம்ம டயோசியசுக்கு (ஒரு ஆயரின் அதிகாரத்திற்குக் கீழ் வரும் எல்லா பங்குகளையும் சேர்த்து மேற்றிராசனம் (டயோசிசிஸ்) என்று அழைக்கப்படுகிறது.) கொடுத்த நன்கொடைகள கணக்கிலெடுக்கறப்போ அவர மன்னிக்கத்தான் தோனுது. தவறு செய்தவரகளை மன்னிக்கறதுதானே ஜோசப் நம்முடைய வேதத்திற்கு முதுகெலும்பே. இறைவனே அவரை மன்னிக்க தயாராயிருக்கும்போது நாம எம்மாத்திரம்?’

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு ஆயரை திறப்புவிழாவுக்கு அழைக்க வேண்டுமென்று ஆலோசனை சொன்ன பாதிரியாராச்சே, என்னால் என்ன சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல. அவர் சொன்னதுபோல் கத்தோலிக்க கிறீஸ்துவ மதத்தின் முதுகெலும்பே தவறு செய்தவர்களை, அது எதிரியாயிருந்தாலும், மன்னிப்பதுதானே?

நான் எத்தனை பாவம் செய்திருப்பேன்? பாவசங்கீர்த்தனத்தில் (கத்தோலிக்க கிறீஸ்துவர்களுடைய பாவ அறிக்கையை கடவுளுடைய பிரதிநிதியாகிய பாதிரியாரிடம் வெளியிடுவதன்மூலம் கடவுளிடமிருந்து பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பது நம்பிக்கை) எத்தனை பாவங்களை அறிக்கையிட்டிருப்பேன்! இறைவன் என்னுடைய பாவங்களை முழுமனதோடு மன்னித்திருக்கையில்.....

‘சரி ஃபாதர். கிளை திறந்ததும் நீங்க சொன்னத யோசிக்கறேன். எங்க வங்கியோட நியதிகளுக்கு உட்பட்டு என்னால உதவி செய்ய முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்.’ என்றேன்.

‘அது போதும் ஜோசப். அவரோட நிதி நிலைமை  நீங்க கொடுக்கப் போற கடன அடைக்கறதுக்கு போதுமானதா இருக்குதான்னு ஜட்ஜ் பண்ணிட்டு குடுத்தாப் போறும். இப்ப வேணும்னா நீங்க அவர பாக்கணும்னாலும் பாக்கலாம் ஜோசப்.’

இப்பவேவா? நிச்சயம் அவர் கேட்கும் கடன் தொகை என்னுடைய அதிகாரத்திற்குள் இருக்காது. என்னுடைய வட்டார மேலாளரையும் கடந்து என்னுடைய தலைமையலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதாயிருக்கும். இருந்தாலும் பார்த்து வைப்பதில் தவறில்லையே என்று நினைத்தேன். மேலும் எனக்கு மீண்டும் தஞ்சை டவுணுக்குள் போகவேண்டிய வேலையொன்றும் அன்று இல்லை. இதை முடித்துக் கொண்டு நேரே வீட்டுக்கு சென்று விடலாம் என்று நினைத்தேன்.

‘நோ ப்ராப்ளம் ஃபாதர். எனக்கும் இன்னைக்கி வேறு வேலையில்லை. அவர் ஃப்ரீயான்னு கேளுங்க. போய் பார்த்துரலாம்.’ என்றேன்.

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு என்னுடைய பங்கு குரு அவருடைய இல்லத்திற்குள் சென்றார். அவருக்கு தொலைப்பேசி செய்ய என்று நினைத்தேன். நானும் என்னை ஆயருக்கு அறிமுகப்படுத்திய பாதிரியார் மட்டும் இருந்தோம்.

‘ஃபாதர் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்கமாட்டீங்களே’ என்றேன்.

பாதிரியார் பங்கு அலுவலகத்தைப் பார்த்தவாறு, ‘சொல்லுங்க ஜோசப்.’ என்றார்.

‘அவர் என்ன பிசினஸ் செய்து நஷ்டமடைஞ்சார் ஃபாதர்?’

பாதிரியார் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். ‘எதுக்கு கேக்கறீங்க ஜோசப்?’

‘இல்ல ஃபாதர். சும்மாத்தான்.’

‘அது ஜோசப்..’ என்று இழுத்தவர், ‘தமிழ்நாடு அரசு செஞ்ச வேலைதான். சொல்றதுக்கே வெக்கமாயிருக்கு ஜோசப். யாரோ சொன்னாங்கன்னு இவரும் இவரோட பார்ட்னர்சும் சேர்ந்து சாராயக்கடை ஏலத்துல பார்ட்டிசிபேட் பண்ணாங்க. கடையும் கிடைக்கலை. இவர் லஞ்சம்னு கொடுத்த பணமும் திரும்பி வரலை. எல்லாம் நம்ம ஊர் கட்சிக்காரங்க பண்ண வேலை..’

எனக்கு நன்றாகப் புரிந்தது. நான் முந்தைய கிளையில் மேலாளராக இருந்தபோது  துவங்கிய பிரச்சினை  இது. என்னுடைய சென்னை கிளையின் வாடிக்கையாளர்களில் ஒருவரும் இதேபோல் ஆளுங்கடசியின் வட்டார செயலாளரின் தூண்டுதலால் வைப்பு நிதியிலிருந்த மொத்த தொகையையும் எடுத்து கொடுத்து ஏமாந்து நின்றது நினைவுக்கு வந்தது.

அந்த காலக்கட்டத்தில் குறைந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதென்று நினைத்து ஏமாந்து போனவர்கள் ஏராளம், ஏராளம். தமிழ்நாடு அரசு முதன்முதலாக பொது ஏல முறையில் சாரயக் கடைகளை திறந்த சமயம் அது. அரசியல்வாதிகளின் தகிடுதத்தங்களைக் புரிந்துக் கொள்ளாமல்  ஏமாந்து நின்ற தொழிலதிபர்கள் அநேகம் பேர். அவர்களில் இவரும் ஒருவர் போலிருக்கிறது..

நான் மேலே குறிப்பிட்ட என்னுடைய சென்னைக் கிளை வாடிக்கையாளர்  மிகவும் கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்தவர். நான் கிளையைத் துவக்கிய ஆரம்பக் காலத்தில் என்னுடைய மத்திய கிளை வாடிக்கையாளர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். என்னுடைய கிளையின் அருகிலேயே அவருடைய பங்களா இருந்தது.

பரம்பரை பரம்பரையாக வசதிப்படைத்த குடும்பத்திலிருந்து வந்தவர். பழகுவதற்கு மிகவும் நல்லவர். அவருடைய நண்பர் கூறினாரே என்ற ஒரே காரணத்துக்காக வேறொரு வங்கியிலிருந்த வைப்புநிதி கணக்கிலிருந்த தொகையை அதனுடைய காலத்திற்கு முன்பே முடித்து அதனால் ஏற்பட்ட வட்டித்தொகை நஷ்டத்தையும் கணக்கில் கொள்ளாமல் என்னுடைய வங்கியில் இட்டவர்.

கணவன், மனைவி, ஒரு மகள் என்ற அந்த சிறிய குடும்பத்தை எனக்கு மிகவும் பிடித்துப்போக நான் அந்த குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவனாகிப் போனேன்.

ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னுடைய அறிவுரையை முற்றிலும் அலட்சியப்படுத்தி ஒரு அரசியல்வாதியின் நயவஞ்சக பேச்சை நம்பி ஏமாந்து போனார்.

இப்போதும் என்னுடைய நினைவில் நின்றது அவருடைய செயல். ‘அரசின் சாராயக் கடை ஏலத்தில் நீங்கள் பேருக்கு பங்குக்கொண்டால் போதும். உங்களுக்கு இத்தனை கடை கிடைப்பதற்கு நான் பொறுப்பு’ என்ற பேச்சை நம்பி என்னுடைய கிளையிலிருந்த தன்னுடைய வைப்புநிதியை முழுவதும் எடுத்து அவரிடம் கொடுத்து... ஏலமும் கிடைக்காமல்... அரசியல்வாதியை நம்பிக் கொடுத்த பணமும் கிடைக்காமல்... தன்னுடைய சேமிப்பு முழுவதையும் ஏமாந்து.. நான் மாற்றலாகி அவரிடம் விடைப்பெற சென்ற சமயத்தில் அவர் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்ததைப் பார்த்தது.. என்னுடைய மனதை மிகவும் சங்கடப்படுத்திய காட்சி அது...

எனக்கு பாதிரியார் கூறியவரின் நிலை நன்றாகப் புரிந்தது. அந்த சூழ்நிலையில் ஒழுக்கமான குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், பேராசை என்று என்னால் கூறமுடியவில்லை, நஷ்டப்பட்டு... அவரிடம் அனுதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

அத்தகையவரை நம்பி நான் எப்படி கடன் கொடுப்பது?

இங்கே பாதிரியார்களைப் பற்றி ஒரு வார்த்தை. நானும் கத்தோலிக்க கிறிஸ்துவன்தான். நான் முன்பே கூறியபடி என்னுடைய குடும்பத்திலும் இரண்டு பாதிரியார்கள் இருக்கிறார்கள்.  இருந்தாலும் பாதிரியார்களைப் பற்றிய என்னுடைய கணிப்பை இங்கே கூறாமல் இருக்க முடியவில்லை.

அவர்கள் குழந்தைகள் மாதிரி. அவர்களுக்கு நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்று இனம் கண்டுக்கொள்ள தெரியாது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு அவர்களிடம் சென்று ‘சாரி ஃபாதர். நான் வேணும்னு செய்யலை’ என்று கூறினால் போதும். உடனே மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். அவர்களை ஏமாற்றி கோவில் சொத்துக்களை ஏமாற்றி அனுபவித்த எத்தர்களில் பலபேரை எனக்குத் தெரியும்.

‘என்ன ஃபாதர் நீங்க? அவன் ஒரு சரியான ஃப்ராடு. அவனுக்கு போய் ஹெல்ப் பண்றீங்களேன்னு’ கேட்டா, ‘போட்டும் சார்.. அவங்க உண்மையிலேயே கெட்டவங்களாயிருந்தா கடவுள் பார்த்துப்பார்’னு சொல்ற குழந்தை குணம் கொண்டவர்கள்.

அவர்களைப் போன்றவர்தான் இவரும் என்று நினைத்தேன் நான்.

இந்த இடத்தில் நான் ஒன்று கூற விரும்புகிறேன். என்னுடைய மேலாளர் அனுபவத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னுடைய மதத்தைச் சார்ந்தவர் என்பதால் நான் தகுதியில்லாத எவருக்கும் விதிகளை மீறி கடன் கொடுத்ததேயில்லை.

விதிகளை மீறி இருக்கிறேன். ஆனால் என்னுடைய மதத்தைச் சார்ந்தவர் என்பதால் அல்ல. கடன் பெறுவதற்கு முழு தகுதியும் உள்ளவர் என்றால் அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எந்த சாதி சனத்தைச் சார்ந்தவர் என்றாலும் விதிகளை சிறிது தளர்த்தி உதவி செய்திருக்கிறேன். சில சமயங்களில் ஏமாற்றப்பட்டு என்னுடைய மேலதிகாரிகளின் தண்டனைக்கும் உள்ளாகியிருக்கிறேன்.

இருப்பினும் என்னுடைய மேலாளர் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக பார்த்தால் நான் ஏமாற்றப்பட்ட நேரங்கள் மிகவும் கொஞ்சமே. அதனால்தானோ என்னவோ இன்னமும் கொஞ்சம் நல்ல பேரோடு பதவியில் இருக்கிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

என்னுடைய பங்கு குரு தொலைப்பேசி செய்துவிட்டு திரும்பி வந்து, ‘உங்களுக்கு வேற எதுவும் அர்ஜெண்டா வேலையில்லேன்னா அவரை போய் பார்க்கலாம் சார். டஇப்ப அவர் வொர்க் ஷாப்லதான் இருக்காராம்.’ என்றார்.

‘ஓ! பாக்கலாமே. அவர பார்த்துட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்.’ என்று நான் எழுந்து நின்றேன்.

பாதிரியார்கள் இருவரும் அவரவர் இரு சக்கர வாகனத்தில் கிளம்ப நான் என்னுடைய ஸ்கூட்டரில் கிளம்பினேன்.

அவருடைய பட்டறை தேவாலயத்திலிருந்து மிக அருகிலேயேதான் இருந்தது. நாங்கள் மூவரும் அங்கு சென்று சேர்ந்தபோது நான் அன்று சந்தித்த நபரும் அங்குதான் இருந்தார். அவர் என்னைக் கண்டதும் சற்றே சங்கடப்பட்டார் என்பது அவரை பார்த்ததுமே எனக்கு விளங்கியது.

தொடரும்..
27 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 68


இதே சிந்தனையுடன் அவரிடம், ‘எங்க ஜோனல் மேனேஜர் கிட்ட கேட்டுட்டு உங்கள வந்து பாக்கறேன் சார்’ என்று கூறிவிட்டு தஞ்சை பேருந்து நிலையத்தையொட்டியிருந்த தபால் நிலையத்தை நோக்கி சென்றேன் தொலைப்பேசி செய்ய...

ஆனால் அவர் அன்றைக்கு என்ன மூடில் இருந்தாரோ நான் சொல்வதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை..

‘அதனாலென்ன டிபிஆர். We will somehow manage. It is a matter of two, three days only. நீங்க கவலைப்படாம திறப்புவிழா வேலைய பாருங்க. ஜி.எம் தான் என்ன சொல்வாருன்னு தெரியல.. நான் அவர்கிட்ட பேசி சமாதானம் பண்றேன். திருச்சில ஸ்டே பண்ணிட்டா போச்சு. Don’t worry. I’ll try to convince him.’ என்றார்.

என்ன மறுமொழி சொல்வதென தெரியாமல் மவுனமாயிருந்தேன்.

சில சமயங்களில் அப்படித்தான். நாம் ஒரு விஷயத்தைப் பெரிதாக நினைத்துக் கொண்டு ஐயோ என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் நிற்போம். ஆனால் அது பிறருடைய கண்களுக்கு ஒன்றுமில்லாத விஷயமாக போய்விடும். நேர் எதிராக, நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாய் நினைக்காமல் ஒதுக்கித் தள்ளிவிடுவோம். ஆனால் அதுவே பூதாகரமாக மாறி நம்மை நாம் முற்றிலும் எதிர்பார்க்காத நேரத்தில் நம்மைப் பயமுறுத்தும்.

இப்படி பல நேரங்களில் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நேர்ந்திருக்கிறது.

‘என்ன டிபிஆர். சைலண்டாயிட்டீங்க. சின்ன சின்ன விஷயத்துக்கொல்லாம் அப்செட்டானீங்கன்னா இனியும் நீங்க செய்ய இருக்கற எல்லா வேலையிலயும் ஏதாச்சும் தப்பு நடந்துக்கிட்டே இருக்கும். லீவ் திஸ் டு மீ. திருச்சியிலருந்து SDL (Safe Deposit Locker), Furniture எல்லாம் வந்துருச்சா? இன்னும் வரலைன்னா நம்ம திருச்சி மேனேஜருக்கு ஃபோன் பண்ணுங்க. முடிஞ்சா ஒரு நடை திருச்சிக்கு போய்ட்டு வந்துருங்க.. I’ll call you back after speaking to our GM. Bye.’ துண்டிக்கப்பட்ட தொலைப்பேசியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த நான் ஒலிவாங்கியை அதன் இருக்கையில் வைத்துவிட்டு வெளியேறினேன்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பிற்பகல் மூன்று மணி!

இனி திருச்சிக்குச் சென்று திரும்ப வாய்ப்பில்லை. நாளைக் காலையில் செல்வதுதான் உசிதம் என்று நினைத்தேன்.

என்னுடைய வாகனத்தை அடைந்தபோது சட்டென்று நினைவுக்கு வர புறப்பட்டு நேரே ஆயரின் இல்லத்திற்கு சென்று வரவேற்பறையில் நான் சந்திக்க நினைத்த பாதிரியார் இருக்கிறாரா என்று விசாரித்தேன்.

வரவேற்பறையில் இருந்த பெண் பாதிரியார் என்னுடைய பங்கு தேவாலயத்திற்கு சென்றிருப்பதாக  தெரிவிக்கவே என் வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கு சென்றேன்.

நான் சென்றடைந்த நேரம் அவரும் என் பங்கு குருவும் அவர்களுடைய இல்லத்திற்கு வெளியே மர நிழலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். சுற்று வட்டாரத்தில் பெரிய கட்டடங்களே இல்லாததால் மாலை காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. வெளியே வெயில் சுட்டெரித்தாலும் தேவாலயத்தைச் சுற்றிலுமிருந்த மரங்களின் நிழலில் வெயிலின் கொடுமை காணாமற் போயிருந்தது.

நான் வாகனத்தில் வந்திறங்கியதைப் பார்த்த இருவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று என்னை வரவேற்றனர். நானும் சிரித்துக் கொண்டே அவர்கள் இருவருக்கும் வணக்கம் செலுத்தினேன்.

‘வாங்க சார். வந்து உக்காருங்க. என்ன விஷயம்?’ என்ற என் பங்கு குருவைப் பார்த்து புன்னகையுடன், ‘இல்ல ஃபாதர்.. என் கிளைப்பு திறப்புவிழா பத்திரிகையை ஃபைனலைஸ் பண்ற விஷயாம ஃபாதர பாக்கறதுக்காக பிஷப் ஹவுசுக்கு போயிருந்தேன்.’ என்று அவருடைய நண்பரை நோக்கி கையைக் காண்பித்தேன். ‘ஃபாதர் இங்க இருக்கறதா சொன்னதுனால உடனே புறப்பட்டு வந்தேன்.’

உடனே நான் குறிப்பிட்ட பாதிரியார் என்னைப் பார்த்து புன்னகை செய்தார். ‘அப்படியா சார்.. வாங்க வந்து உக்காருங்க. இன்விடேஷன் டிராஃப்ட் கொண்டு வந்திருக்கீங்களா? கொடுங்க பாக்கலாம்.’

நான் என் வாகனத்திலிருந்த என்னுடைய கைப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த அழைப்பிதழ் மாதிரியை எடுத்துக் கொண்டு சென்று அவர்கள் இருவரும் காண்பித்த இருக்கையில் அமர்ந்தவாறே என் கையிலிருந்த அழைப்பிதழ் மாதிரியை அவரிடம் கொடுத்தேன்.

அதை நிதானமாக வாசித்துப் பார்த்த பாதிரியார் அவருடைய நண்பரிடம் கொடுத்துவிட்டு என்னைப் பார்த்தார். ‘கரெக்டா வந்திருக்கு சார். நீங்களும் கத்தோலிக்கர் என்பதால ஆயரோட பேரையும் அவருடைய படிப்பு எல்லாத்தையும் கரெக்டா போட்டுருக்கீங்க. நானே இன்னைக்கி சாயந்திரத்துக்குள்ள எங்க ப்ரெஸ் இன் சார்ஜ் ஃபாதர் கிட்ட கொடுத்துடறேன். ரெண்டு நாளைக்குள்ள ரெடியாயிரும். ப்ரூஃப் வேணும்னா நீங்க நாளைக்கு காலைல ஒரு பதினோரு மணி போல நேரா ப்ரெஸ்சுக்கு போயிருங்க. நான் சொன்னேன்னு என் பேர சொன்னீங்கன்னா போறும் ஃபாதர் குடுத்துருவார். ஆனா நீங்க அப்ரூவ் பண்ற நேரத்துலருந்து 36 ஹவர்ஸ் வேண்டியிருக்கும்.’ என்றார்.

நானும்  சரி என்று சொல்லிவிட்டு கிளம்பும் நோக்கத்தில் எழுந்து நின்றேன்.

பாதிரியார்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். என்னுடைய பங்கு குரு என்னைப் பார்த்தார். ‘என்ன சார் நீங்க வந்த வேல முடிஞ்சதும் கிளம்பறீங்க? ஏதாவது அர்ஜண்ட் வேலை இருந்தா போங்க. இல்லன்னா ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க.’

‘அப்படியொன்னும் இல்ல ஃபாதர். நான் வரும்போது நீங்க ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டிருந்தீங்க. நான் வந்ததுனால உங்க டிஸ்கஷன நிறுத்திட்டீங்களோன்னும் நினைச்சித்தான் நான் கிளம்பினேன். சொல்லுங்க.’ என்றவாறு மீண்டும் அமர்ந்தேன்.

அவர்கள் இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் எதைப் பற்றியோ சொல்லுவதற்கு தயங்குவது போல தெரிந்தது.

நான் அவர்களே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தேன்.

‘சார்..’ என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார் என் பங்கு குரு..

‘சொல்லுங்க ஃபாதர்.. நீங்க சொல்ல வந்தது எதுவானாலும் சொல்லுங்க..’ என்றேன்.

‘நீங்க அன்றைக்கு என்னைப் பார்க்க வந்தீங்களே. அந்த தேர் திருவிழாவுக்கு முந்தின நாள்னு நினைக்கிறேன்.’

எனக்கு நன்றாக ஞாபகம் வந்தது. அந்த நாளை எப்படி மறக்க முடியும்? கோவில் தர்மகர்த்தா என்ற பெயரில் ஒருவர் கோவில் தேர் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று வாதிட்டதை நினைத்துக் கொண்டேன்.

‘நல்லா நினைவிருக்கு ஃபாதர். சொல்லுங்க.’

‘அவர் இப்ப கொஞ்சம் ஃபைனான்ஸ் ப்ராப்ளத்துல சிக்கிக்கிட்டிருக்கார். அவருக்கு உங்க பேங்க் உதவி பண்ண முடியுமான்னு கேக்கலாம்னுதான் ஃபாதர கூப்டு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். ஃபாதர் உங்க பேங்கோட ப்ராஞ்ச் திறந்ததும் கேக்கலாம்னு சொல்லிக்கிட்டிருந்தார். எதிர்பாராம நீங்களே வந்துட்டீங்க.’ என்றவரையே சிறிது நேரம் பதில் கூறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எப்படி இருக்கு? அவர் இவரை ஒரு குருவானவர் என்று கூட பார்க்காமல் எடுத்தெறிந்து பேசிவிட்டு சென்றவர். அவருக்கு இவர் உதவி செய்ய வேண்டுமென்று அவர்களுக்கிடையில் நடந்த வாக்குவாதத்தை முற்றிலும் ஒத்துக்கொள்ளாத என்னிடம் கேட்கிறார்.

இவர் வேண்டுமானால் ஒரு பாதிரியானவர் என்ற உன்னத நிலையில் நின்று அவரை மன்னித்துவிட தயாராயிருக்கலாம். ஆனால் நான் சாதாரண மனிதன் தானே. நான் அவரை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க தயாராக இல்லை. என்னுடைய வங்கி வாழ்க்கையில் என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் எத்தனையோ தொழிலதிபர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் கடனுதவி செய்திருக்கிறேன்.. சில நேரங்களில் வங்கியின் நியதிகளை என் தேவைக்கேற்ப வளைத்தும் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் கடன் தேவைப்படுகிறவர்கள் சார்பில் ஒரு அத்தியாவசிய தேவை, வங்கியின் நியதிகளுக்குட்பட முடியாத நிலை என்று இருந்தால் மட்டுமே அப்படி செய்திருக்கிறேன். அதனால் சில பின் விளைவுகளையும் நான் சந்திக்க நேர்ந்திருக்கிறது.

ஆனால் அந்த கோவில் தர்மகர்த்தா விஷயத்தில் எனக்கு சிறிதளவும் இரக்கம் ஏற்படவில்லை. ஆகையால் பிடிவாதமாக மவுனம் சாதித்தேன்.

பாதிரியார்கள் இருவருக்குமே என்னுடைய மவுனத்தின் பொருள் புரிந்தது. ஒரு தர்மசங்கடமான மவுனம் அங்கு நிலவியது.

என்னை ஆயரிடம் அழைத்துச் சென்ற பாதிரியார் என்னைப் பார்த்தார். ‘ஜோசப் அன்னைக்கி நடந்ததையெல்லாம் பங்கு சாமியார் நீங்க வர்றதுக்கு முன்னால எங்கிட்ட சொன்னார். உங்க மவுனமே இதுல உங்களுக்கு விருப்பமில்லங்கறத காட்டுது. இருந்தாலும் நான் இப்ப சொல்லப் போறத கொஞ்சம் கேளுங்க. அப்புறமும் இதுல உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்துல நாங்க ரெண்டு பேருமே வற்பறுத்த மாட்டோம். என்ன சொல்றீங்க?’

எனக்கும் அவர்கள் என்னதான் சொல்லப் போகிறார்கள் பார்ப்போமே என்று தோன்றியது. ‘சொல்லுங்க ஃபாதர்.’ என்றேன்.

‘ஜோசப்.. நீங்க சந்திச்சவரோட முப்பாட்டங்க கோவிலுக்கு தானமா கொடுத்த இடம்தான் இதெல்லாம். சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும். அன்னைக்கி இது கட்டாந்தரையா இருந்த எடம்தான். ஆனா இன்னைக்கி ரேட்ல பார்த்தா குறைஞ்சது பத்து, பதினஞ்சி லட்சம் பொறும். முக்கியமா மெடிக்கல் காலேஜ் வந்து பிரபலமானதுக்கப்புறம் தஞ்சாவூர் டவுண் காலேஜையும் தாண்டி வளர்ந்துக்கிட்டே போயிருச்சி. நீங்க குடியிருக்கற எடமெல்லாம் கூட இவங்க குடும்பத்துக்கு சொந்தமா இருந்ததுதான். நாளடைவில அவங்க குடும்பத்துக்கு தேவையானத மட்டும் வச்சிக்கிட்டு பணத்தேவை ஏற்பட்டப்போ எல்லாம் ப்ளாட் போட்டு போட்டு வித்துட்டாங்க. இப்ப அவங்களுக்குன்னு இருக்கறது அவங்களோட ஆட்டோ மொபைல் ஷோ ரூமும் அதுக்குப் பின்னாலருக்கற வொர்க் ஷாப்.. அதோ நீங்க பாக்கறீங்களே அந்த பங்களா, அதுவும் அதுக்கு பின்னாலருக்கற சுமார் பத்தாயிரம் சதுர அடி இடம்தான்.. இந்த ஊர்ல முதல் முதல் அம்பாசிடர் கார் டீலர்ஷிப் எடுத்தது அவங்க அப்பாதான்.. இவர் காலத்துல ஃபியட் கார் டீலர்ஷிப் எடுத்தார்.. அப்புறம் பஜாஜ் ஸ்கூட்டர், லாம்பி அப்படீன்னு விரிவு பண்ணார்.. போன பத்து வருஷத்துல நல்லாவே இருந்தார்.. இடையில அவரோட பார்ட்னரா சேர்ந்த ஆளுங்க பேச்ச கேட்டுக்கிட்டு அவருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிசினஸ்ல கால வச்சிட்டு பயங்கர நஷ்டமாயிருச்சி.. அவர் இதுவரைக்கும் தொடர்பு வச்சிருந்த ------பேங்க் திடீர்னு கைய விரிச்சிட்டாங்க.. இவரோட குணத்துக்கு புதுசா வந்த மேனேஜர்கிட்ட ஒத்துப் போக முடியலை..’ மேலே தொடராமல் தயக்கத்துடன் நிறுத்திய பாதிரியாரையே பார்த்தேன்.

அவருடைய குரலில் இருந்த இறக்கம், கவலை என்னை வியப்பில் ழ்த்தியது..

இவரையே பயமுறுத்தி இந்த பங்கில் இருந்து விரட்டியவர் அவர் என்று நான் வேறொரு பங்கு விசுவாசி மூலமாக அறிந்து வைத்திருந்தேன். அப்படியிருக்க அவர் முட்டாள்தனமாக முன்பின் பழக்கமில்லாத வர்த்தகத்தில் இறங்கி நஷ்டமடைந்துவிட்டார் என்பதற்காக கவலைப் பட்டு அவருக்கு உதவ வேண்டுமென்று என்னிடம் வந்து நிற்கிறார்..

என்ன பதில் கூறலாம் என்று யோசனையுடன் அவர்கள் இருவரையுமே மாறி, மாறி பார்த்தேன்..

தொடரும்..
26 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 67

நாளைய பிரச்சினை நாளைக்கு ...

அடுத்த நாள் காலையில் கண் விழித்தவுடனே எனக்கு முன் இரண்டு முக்கிய கடமைகள் இருந்தன.

முதலில் துவக்க விழாவுக்கு வரவிருக்கின்ற என்னுடைய பொது மேலாளர் மற்றும் வட்டார மேலாளர் தங்குவதற்கு சகல வசதிகளுடன் கூடிய இரண்டு அறைகளுக்கு ஏற்பாடு செய்வது.

பிறகு, திருச்சிக்கு சென்று வருவது.

முதலில் செய்ய வேண்டிய காரியத்தை காலையிலேயே முடித்துவிட்டால் மதியத்திற்கு முன்பாக திருச்சி சென்று இரவுக்குள் ஊர் திரும்பிவிடலாம் என்ற முனைப்போடு வீட்டிலிருந்து ஒன்பது மணிக்குப் புறப்பட்டேன்.

இப்போதுள்ளது போன்று சகல வசதியுடன் ஸ்டார் அந்தஸ்த்து பெற்ற விடுதிகள் அப்போது இல்லை. தமிழக அரசு சுற்றுலாத் துறை நடத்திய விடுதி ஒன்றும், வேறொரு விடுதி (இப்போது அதை மூடி விட்டார்கள் ) ஒன்றும் மட்டுமே இருந்தன.

என்னுடைய வட்டார மேலாளர் வந்தபோது இவற்றுள் எதில் அறை இருந்ததோ அதில் ஏற்பாடு செய்வது வழக்கம்.

ஆகவே முதலில் தஞ்சை மெய்ன் சாலையில் இருந்த டிடிசி விடுதிக்கு சென்று விசாரித்தேன்.

எனக்கு வேண்டியிருந்த நாட்களில் அறைகள் காலியில்லை என்று பதில் வந்தது. அங்கிருந்து அடுத்த விடுதிக்கு சென்றேன். ஊஹ¤ம். அங்கும் காலியில்லை.

அதுவரை, இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் அறை கிடைக்காமல் இருந்ததில்லை. சாதாரணமாக தஞ்சை பல்கலைக் கழகத்திலோ அல்லது தஞ்சை மருத்துவ கல்லூரியிலோ பயிற்சி கூட்டங்களோ அல்லது செமினார்களோ நடந்தால் மட்டுமே இவ்விரு விடுதிகளும் அறை கிடைப்பது கடினம்.

ஆகவே வரவேற்பறையிலிருந்த ஊழியர்களை இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தேன்.

‘சார் அன்னைக்கி மட்டுமில்ல.. அந்த வாரம் முழுசும் தஞ்சாவூர்லருக்கற எல்லா அறைகளும் புக் ஆயிருச்சி. ரூம் வேணும்னா திருச்சிக்குதான் போவணும்.’ என்று பதில் வந்தது.

எனக்கு வியப்பாயிருந்தது. அப்போது தஞ்சையில் நடுத்தர விடுதிகள் பத்துக்கும் மேல் இருந்தன. எல்லாவற்றிலுமிருந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளனவென்றால்... அப்படியென்ன நடக்கவிருக்கிறது? ஏதாவது அரசு விழா அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டமாயிருக்குமோ..

‘இல்ல சார். நம்ம ------ மினிஸ்டர் வீட்டுக்கு கல்யாணம். அதான்..’ என்றார் வரவேற்பறையில் என்னைப் போலவே அறை கிடைக்காமல் வெறுத்துப் போயிருந்த ஒருவர். ‘இவனுங்களுக்கென்ன? பணமா இல்லை.. ஊரையே புடிச்சிக்கிட்டான்க.. என்னத்த சொல்றது?’

நான் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போய் நின்றேன். பிறகு இனியும் தாமதித்துப் பயனில்லை என்று உடனே புறப்பட்டு அருகிலேயே இருந்த நாயக்கரின் அலுவலகத்துக்குச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் வியப்புடன், ‘வாங்க சார்.. ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு உங்கள பார்த்து. நான் சொன்ன பண்ணையார பார்த்துட்டு வரேன்னு போனவர்தான். இன்னைக்கி வரீங்க. நீங்க வந்து பார்த்தீங்கன்னு நீங்க அங்கருந்து புறப்பட்டவுடனே அவர் போன் பண்ணி சொன்னாரு. உங்கள அவருக்கு ரொம்ப புடிச்சி போச்சி போலருக்கு.. கட்டாயம் உங்க பேங்குல கணிசமா ஒரு தொகைய போடறேன்னு சொன்னார்.’ என்றார்.

அவர் கூறியது உண்மைதான். நான் வேலைப் பளுவில் அவருக்கு நன்றி கூற மறந்தே போய்விட்டேன். ‘சே.. என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் அவர்.’ என்று என்னை நானே நொந்துக் கொண்டேன். இப்போது இந்த விடுதி விஷயத்தைச் சொன்னால் நிச்சயம் என்னைப் பற்றிய அவருடைய மதிப்பு இனியும் குறைய வாய்ப்பிருக்கிறது.. என்ன செய்யலாம்? என்று யோசித்தேன்.

‘என்ன சார்? நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா? உங்களுக்கு இருந்த வேலையில மறந்து போயிருப்பீங்க. விடுங்க.. வந்த விஷயத்த சொல்லுங்க. உங்க முகத்த பார்த்தா புதுசா ஏதோ பிரச்சினைன்னு தோனுது. எதாருந்தாலும் சொல்லுங்க.’

சரி.. அவரே கேட்கிறார். சொல்லி விடுவோம், என்ற முடிவுடன் அவரைப் பார்த்தேன். ‘தப்பா நினைச்சிக்காதீங்க சார். இங்கயும் அங்கயும் ஓடுனதுல பண்ணையாரைப் பார்த்த விஷயத்த உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்.’ என்றதுடன் நிறுத்தாமல் கடந்த வாரத்தில் நான் செய்தவைகளை, யரை சந்தித்த விஷயமும் சேர்த்து, சுருக்கமாக விவரித்தேன்.

‘அப்படியா சார்? பாத்தீங்களா ஒரே ஆளா இருந்துக்கிட்டு இவ்வளவு வேலையையும் செஞ்சி முடிச்சிருக்கீங்க. நான் என்னடான்னு எங்கிட்ட சொல்லலங்கற விஷயத்த பெரிசா சொல்லிக்கிட்டு நிக்கறேன். இப்ப நாந்தான் என்ன தப்பா நினைச்சிக்காதீங்க சொல்லணும். வந்ததுலருந்து நின்னுக் கிட்டே இருக்கீங்களே சார். உக்காருங்க. மோர் கொண்டு வரச் சொல்றேன். குடிச்சிட்டு நிதானமா எதுவாருந்தாலும் சொல்லுங்க. உங்களாலயே செஞ்சி முடிக்க முடியலைனா நிச்சயம் பெரிய விஷயமாத்தான் இருக்கும். சொல்லுங்க, என்னால ஏதாவது செய்ய முடியுதான்னு பாக்கறேன்.’ என்றார் மூச்சு விடாமல்.

அவர் அளித்த குளிர்ந்த மோர் என்னுடைய டென்ஷனை சற்றே குறைத்தது. அறை கிடைக்கவில்லை என்று தெரிந்தால், ‘இது கூட உங்களா முடியலையா ஜோசப்? இட் ஈஸ் அ ஷேம்.’ என்பாரே என்னுடைய வட்டார மேலாளர் என்று நினைத்தேன்.

இவராலாவது முடிந்தால் அதிலிருந்து தப்பிக்கலாமே என்று நினைத்து, ‘சார்.. திறப்பு விழாவுக்கு வர்ற எங்க ஜெனரல் மேனேஜரும், வட்டார மேலாளரும் தங்கறதுக்கு அந்த டேட்டுல ஒரு ரூம் கூட கிடைக்கல சார். எல்லா இடத்துலயும் சுத்திட்டுதான் வரேன். என்ன பண்றதுன்னு தெரியலை.. அதான் உங்க மூலியமா ட்ரை பண்ணலாம்னு...’ என்றேன் தயக்கத்துடன்..

அவர் ‘அப்படியா, ஏன்?’ என்பதுபோல் பார்த்துவிட்டு சுவரில் தொங்கிய நாட்காட்டியைப் பார்த்தார். அதில் நான் கூறிய மூன்று தியதிகளையும் ஏற்கனவே சிவப்பு மையால் வட்டமிட்டு வைத்திருக்கப்பட்டிருந்ததை வியப்புடன் நானும் பார்த்தேன்.

‘என்ன சார்? உங்களுக்கும் அழைப்பு வந்திருக்கா? அந்த டேட்டுல வட்டம் போட்டு வச்சிருக்கீங்க?’ என்றேன்.

அவர் சலிப்புடன் என்னைப் பார்த்தார். 'ஆமா சார். நேத்து வரைக்கும் ஊர்ல தாதா மாதிரி சுத்திக்கிட்டிருந்தான். தலைவர் சீட்ட குடுத்தாலும் குடுத்தாரு.. அவர் பேர சொல்லிக்கிட்டு ஒரு களுதைய நிக்க வச்சாக்கூட செயிச்சிருக்குமே. செயிச்சிட்டான். இப்ப கைல புடிக்க முடியல.. வீட்டுல கல்யாணம்.. ஊரையே வளைச்சி போட்டுட்டான்.. லாட்ஜ்காரங்க இஷ்டப்பட்டா குடுக்கறாங்க? இல்லேன்னா, அவனோட அடிபொடிங்க என்ன வேணாலும் செய்யுமேன்னு பயந்துக்கிட்டுத்தான். தலைவர் பேர சொல்லி சொல்லியே புடிச்சிருப்பானுங்க.. நீங்க அன்னைக்கி பாத்துத்தானா திறப்பு விழாவ வைக்கணும்? நா இல்ல சார், யார் நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாதே.. இப்ப என்ன பண்ணலாம்?’

என்னடா இது இவரும் இப்படி சொல்லிட்டாரே.. சே.. டேட்ட முடிவு பண்றது முன்னால இவர கேட்ருக்கலாம். எல்லாம் நம்ம முட்டாத்தனம்.. என்று என்னை நானே நொந்துக் கொண்டேன்..

அவரும் என்னையே பார்த்தார். பிறகு, ‘தேதிய ஒரு வாரத்துக்கு தள்ளிப் போடுங்களேன் சார்.’ என்றார் தயக்கத்துடன்..

அது முடிஞ்சாத்தான் செஞ்சிரலாமே.. ஆயர்கிட்டக் கூட சொல்லி சமாளிச்சிரலாம். ஆனா என் வங்கி அதிகாரிகளை சமாளிப்பதுதான் கஷ்டம். உடனே இவன் எதுக்கும் லாயக்கில்லாதவன்னும் முத்திரை குத்தி விடுவார்களே என்று யோசித்தேன்..

‘அது முடியும்னு தோனலை சார். பிஷப்புக்கிட்ட வேற தேதிங்க கிடைக்கணும்.. அழைப்பிதழ் அடிக்கலைன்னாலும் மறுபடியும் அவர்கிட்ட போய் நின்னு முடியாதுன்னுட்டா வேற ஒருத்தர தேடி அலையணும். அதான் யோசிக்கிறேன்.’

‘அதுவும் சரிதான் சார்.’ என்றவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, ‘நான் ஒரு யோசனை சொல்றேன். நீங்க உங்க ஜோனல் மேனேஜர் கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க.’ என்றார்.

‘சொல்லுங்க சார்.’ என்றேன் வலுடன்.

‘இங்கருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்துல நம்ம நண்பர் ஒருத்தரோட பண்ணை வீடு இருக்கு. அவருக்கு ரெண்டு மூனு ரைஸ் மில் இருக்கு. உங்க பேங்க்ல லோன் கீன் எதுவும் கிடைக்குமா சார்னுகூட என் கிட்ட கேட்டார். திறக்கட்டும் சார் நான் கேட்டு பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். பண்ணை வீட்ல வசதிங்கன்னு பெரிசா இருக்காது. இருந்தாலும் ரெண்டு மூனு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க ஜோனல் மேனேஜர் கிட்ட சொல்றதுக்கு முன்னால நீங்க போய் பாக்கணும்னாலும் சொல்லுங்க ஏற்பாடு பண்றேன்.’

நான் என்ன சொல்வதென தெரியாமல் தயங்கினேன். என்னுடைய வட்டார மேலாளர் ஒருவேளை சம்மதித்தாலும் சம்மதிப்பார். ஆனால் என்னுடைய பொது மேலாளரைப் பற்றி நான் கேள்விப் பட்ட வரைக்கும் அவர் நிச்சயம் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார். கண்டிப்பு, நேர்மை என்ற சொற்களுக்கு பொருளாய் இருப்பவர் அவர். முன் பின் தெரியாத, வங்கியின் வாடிக்கையாளராகக் கூடிய, அதுவும் கடன் உதவியை எதிர்பார்த்திருக்கும் ஒருவருடைய வீட்டில் நிச்சயம் தங்க சம்மதிக்க மாட்டார்.

இருந்தாலும் உடனே ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ‘என் வட்டார மேலாளரிடம் கேட்டுவிட்டு சொல்றேன் சார்.’ என்று கூறிவிட்டு புறப்பட்டு நேரே சேட்டின் அலுவலகம் சென்றேன்.

அவரும் நாயக்கர் கூறியது போலவே ‘முடிஞ்சா உங்க டேட்சை மாத்தப் பாருங்க சார். டவுண்ல அந்த ரெண்டு ஓட்டல விட்டா வேற எங்க கிடைச்சாலும் உங்க அதிகாரிகளுக்கு பிடிக்காது.’ என்றார்

நான் சுருக்கமாக அதிலிருந்து பிரச்சினைகளை எடுத்துரைத்தேன். அவர் உடனே, ‘சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா ஒன்னு சொல்றேன்.’ என்றார்.

‘சொல்லுங்க’ என்றேன்.

‘எனக்கு மெடிக்கல் காலேஜ் பக்கத்துல ஒரு கெஸ்ட ஹவுஸ் இருக்கு. பிசினஸ் விஷயமா நம்ம மெட்றாஸ் ஃப்ரண்டு அவரோட சினி ஃப்ரெண்ட்ச எப்பனாச்சும் கூட்டிக்கிட்டு வருவாரு.. நாங்க ரெண்டு பேரும் இன்வெஸ்ட் பண்ணிதான் அந்த கெஸ்ட் ஹவுசை கட்டியிருக்கோம். ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலருக்கற எல்லா வசதிகளும் இருக்கும். உங்க ஜி.எம்மும் ஜோனல் மேனேஜரும் தாராளமா வந்து தங்கலாம். வித் நோ ஸ்ட்ரிங்க்ஸ் அட்டாச்ட். நான் பிசினசையும் ஃப்ரண்ட்ஷிப்பையும் மிக்ஸ் பண்றதே இல்லை..’ என்றார்.

நாயக்கருடைய நண்பரின் பிரச்சினை இவர் விஷயத்திலும் இருக்கிறதே என்று யோசித்தேன்.. இவரும் நிச்சயம் என்னிடம் இவருடைய வர்த்தகத்திற்கு கடன் கேட்டு வரப்போகிறவர்களில் ஒருவராயிருப்பாரே.. ஜி. எம் ஒத்துக் கொள்வாரா?

என்ன செய்யலாம்?

சே, இன்று விழித்தபோது இப்படி நாள் முழுவதும் இதற்கே போய்விடும் என்று நினைக்கவேயில்லை..

How am I going to explain this mess to my Zonal Manager?

இதே சிந்தனையுடன் அவரிடம், ‘எங்க ஜோனல் மேனேஜர் கிட்ட கேட்டுட்டு உங்கள வந்து பாக்கறேன் சார்’ என்று கூறிவிட்டு தஞ்சை பேருந்து நிலையத்தையொட்டியிருந்த தபால் நிலையத்தை நோக்கி சென்றேன் தொலைப் பேசி செய்ய...

தொடரும்..

25 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 66

அன்றைய கூட்டத்தில் கலந்துக் கொண்ட நான் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் உணவு விருந்திலும் கலந்துக் கொண்டு பிற்பகலில் வீடு திரும்பியபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது..

வீடு வந்து சேர்ந்ததுமே பிரச்சினைக்குரிய எந்த விஷயத்தையும் பேசக்கூடாது என்ற என்னுடைய முந்தைய எச்சரிக்கையை அடுத்து மிகவும் கவனமாக இருப்பது என் மனைவியின் வழக்கம்.

அன்றும் அப்படித்தான். நான் உடை மாற்றி, குளித்து முடிக்கும் வரை என்னிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்த என் மனைவி, என்னிடம் காப்பியை கொடுத்துவிட்டு என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த ஒரு கனத்த உறையை கொடுத்தார்.

அது எப்போதும் வரும் உறைதான். வாரத்திற்கொரு முறை வருவது வழக்கம். சரி.. பிறகு திறந்துக் கொள்ளலாம் என்று நினைத்து அருகிலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு தரையிலமர்ந்து பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த என் மகளை எடுத்து வைத்துக் கொண்டு சிறிது நேரம் விளையாடினேன்..

அலுவலக வேலைகளுக்கிடையில் என் மகளுடன் கொஞ்சி விளையாடி எத்தனையோ மாதங்களாகி விட்டன. அவளுக்கு இரண்டு வயது முடிந்திருந்தது. படு சுட்டி.. படு வாயாடி. மழலையின் சுவடே இல்லாமல் வார்த்தைகள் படார், படார் என்று வந்து விழும்.

‘என்னம்மா இது இந்த போடு போடுது? என் பேத்திங்க எங்க வீட்டுக்கார பார்த்தா பேசவே பேசாது.. அது மட்டுமில்லீங்க, எந்த குழந்தையும் அவர பாத்ததுமே ஓன்னு அழும் இல்லன்னா கிட்டவே வராது.. உங்க பொண்ணு என்னடான்னா.. அவர படாத பாடு படுத்துது.. அவர மாதிரியே கால வளைச்சி, வளைச்சி நடந்து காட்டுது.. உங்கள பாத்தா அப்படி தெரியலையே, இவ யார மாதிரி வந்திருக்கா?’ என்று என்னுடைய வீட்டு உரிமையாளரின் மனைவி என் மகளைப் பற்றி புகார் கூறுவார்கள்..

பதிலுக்கு என் மனைவி.. ‘வேற யார மாதிரி? எல்லா அவ அப்பாதான். அவங்க இப்பவும் அப்படித்தானே இருக்காக? எல்லார் கிட்டயும் சண்டை போட்டுக்கிட்டுதான நாங்க இங்க வந்து எல்லாருமிருந்து யாருமில்லாதமாதிரி முளிச்சிக்கிட்டி நிக்கோம்’ என்று என் காலை சந்தர்ப்பம் பார்த்து வாரிவிட்டார்...

‘சரி.. சரி போறும் சார்.. என்னமோ இன்ப அதிர்ச்சின்னு சொல்லிட்டு சஸ்பென்ச இப்படி இழுக்கறீங்களே.’ என்று நீங்கள் முனகுவது கேட்கிறது..

விஷயத்துக்கு வருவோம்..

என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த உறையை திறந்தேன்.

அதில்தான் இருந்தது விஷயம்.

நான் தஞ்சையில் காலடி வைத்த இரண்டாவது வாரமே என்னை அடுத்த நிலைக்கு பதவி உயர்வுக்கான நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள்.

அப்போதுதான் புதிய சேர்மனின் வெறுப்புக்காளாகி மாற்றலாகி வந்திருந்ததால் போவதா வேண்டாமா என்று வெகு நேரம் லோசித்து சரி போய்தான் பார்ப்போமே  என்று சென்றேன்.

என்னுடைய அதிர்ஷ்டம், முந்தைய சேர்மனைப் போலல்லாமல் புதியவர் நேர்காணல் வேலையை இரண்டு பொது மேலாளர்களிடத்திலும் ஒப்படைத்திருந்தார்..

ஆக, என்னுடைய நேர்காணல் எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் கழிந்திருந்தது. இருப்பினும் நேர்காணலுக்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்பட்டிருந்ததால் எனக்கெங்கே கிடைக்கப் போகிறதென்று அந்த விஷயத்தை நான் மறந்தே போய்விட்டேன்..

என்னுடைய தலைமையலுவலக உறையிலிருந்து நான் முதலில் எடுத்த கடிதமே என்னுடைய பதவி உயர்வு நியமன உத்தரவுதான்.

Grade II விலிருந்து Grade III என்ற நிலைக்கு. இன்றைய சூழலில் சொல்ல வேண்டுமென்றால், மேலாளர் பதவியிலிருந்து சீனியர் மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டேன்..

நான் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு பதவி உயர்வு என்பதால் அதைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது..

நான் இன்று காலையில் என்னுடைய வட்டார மேலாளரை அழைத்தபோது கூட மனுஷன் இதைப் பற்றி மூச்சே விடவில்லையே என்ற நினைப்பும் வந்தது.. ஏன் எதற்கு என்றெல்லாம் யோசித்து என்னுடைய சந்தோஷத்தை இழக்க நான் விரும்பவில்லை..

சரி நேரில் பார்க்கும்போது கேட்டுக் கொள்ளலாம் என்று அதைத் தள்ளி வைத்துவிட்டு என் மனைவியை அழைத்தேன்.. ‘ட்ரெஸ் பண்ணிக்கிட்டு புறப்படு.. கோயிலுக்கு போய்ட்டு அப்படியே டவுண்ல சாப்டு வரலாம்.’ என்றேன்.

என்னைப் பார்த்த என் மனைவியின் முகத்தில் எந்தவித ரியாக்ஷனும் இல்லை.. ‘என்ன இன்னைக்கி புதுசா?’ என்பது போல் ஒரு பார்வை.

நான் ஒன்றும் கூறாமல் என் நியமன உத்தரவை நீட்டினேன்.

‘உங்க ஆஃபீஸ் விஷயத்துல தலையிடாதேன்னு நீங்கதான சொன்னீங்க? இப்ப எதுக்கு எங்கிட்ட குடுத்து படீங்கறீங்க?’ என்ற என் மனைவியைப் பார்த்து சிரித்தேன்.

இதாங்க இந்த பொம்பளைங்களோட.. எப்பனாச்சும் ஏதாச்சும் மூட்ல ஒன்னும் சொல்லிட்டோம்னா அத அப்படியே ஞாபகத்துல வச்சிருந்து சமயம் பார்த்து அவுத்து விடுவாங்க..

நான் உடனே எழுந்து சென்று உத்தரவை அவர் கையில் திணித்து ‘படிச்சி பார். அப்புறமும் உனக்கு பிடிக்கலைன்னா நாம எங்கயும் போவேணாம். நான் போய் குளிச்சிட்டு வரேன்..’ என்று கொடியில் ஆடிய துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தேன்..

என் பின்னால் என் மனைவியுன் சந்தோஷக் குரல். ‘ஏங்க.. நீங்கதான் இண்டர்வியூவுக்கு போய்ட்டு வந்தப்போ உங்களுக்கு எங்க கிடைக்க போவுதின்னீங்க? அப்புறம் எப்படி? இந்த ப்ரமோஷன் சேர்மன் கிட்ட சண்டை போட்டதுக்காகவா?’

‘ஏய், என்ன நக்கலா?’ என்று நினைத்துக்கொண்டு திரும்பி அவளைப் பார்த்து சிரித்தேன். ‘ஒருவேளை அவருக்கே என்ன பார்த்து பயம் வந்துருச்சோ என்னவோ.. எப்படியோ கிடைச்சிருச்சில்ல.. என்ன வெளிய போலாமா?’

‘பின்னே.. இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கிறதே அபூர்வம். மெட்றாஸ்லருந்தப்பவாவது சனிக்கிழைமையான வெளிய கூட்டிக்கிட்டு போவீங்க. இங்க வந்ததுலருந்துதான் எடம் புடிக்கேன் ஏவல் புடிக்கேன்னு எங்கள மறந்தே போயிட்டீங்களே.. (இது தூத்துக்குடி பாஷை. கண்டுக்காதீங்க) ஏதோ பெரிய மனசு பண்ணி சேர்மன் போனா போட்டும் ப்ரமோட் பண்ணியிருக்கார். அத கொண்டாடாம எப்படி? இதோ அஞ்சு நிமிஷத்துல ரெடி.. எல்லாம் எம் பொண்ணு பிறந்த ராசி..’ என்று மூச்சு விடாமல் பேசியவர் இதுதான் நேரம் என்ற நினைப்புடன், ‘ஏங்க வெளிய போறப்போ போஸ்ட் ஆஃபீஸ்லருந்து எங்கம்மாவுக்கு ஃபோன் போடலாங்க..’ என்றார்.

‘ஏன் எங்க வீட்டுக்கு சொல்ல வேண்டாமா?’

‘அதுக்கு என் பர்மிஷன் வேணுமாக்கும்? சரி நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.. நான் பாப்பாவ ரெடி பண்றேன்.’

ஆக, இந்த எதிர்பாராத சந்தோஷத்தை முதலில் பக்கத்திலிருந்த சர்ச்சுக்கு சென்று விட்டு டவுணுக்குள் சென்றோம். சரி வந்ததுதான் வந்தோம் ஒரு சினிமா பார்த்தாலென்ன என்று தோன்றவே.. பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் பார்த்துவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு வீடு திரும்பினோம்..

வீட்டுக்குள் நுழைவதற்கென்றே காத்திருந்தது போல் தொலைப் பேசி அடித்தது..

வரவேற்பறை விளக்குகளைப் போட்டுவிட்டு போய் எடுப்பதற்குள் அமைதியாகிப் போன தொலைப் பேசியையே பார்த்துக்கொண்டு நின்றேன்..

யாராயிருக்கும்?

தொடரும் போட்டுரலாமா...?

சீ, வேணாம். அப்புறம் துளசி புறப்படற நேரத்துல டென்ஷனாயிட்டடங்கன்னா?

சரி, மறுபடியும் அடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

அடுத்த வினாடியே அடித்தது..

என்னுடைய வட்டார மேலாளர்!

இவர் எங்க இந்த நேரத்துல? மனுஷன் துக்க செய்திய சொல்றதுக்கேனே அலைவாரே என்ற நினைப்புடன்.. ‘ஹலோ சார். என்ன சார் இந்த நேரத்துல?’ என்றேன்..

பதிலுக்கு எதிர்முனையிலிருந்து உரத்த சிரிப்புக் குரல். ‘அப்பாடா’ என்றிருந்தது.. பிரச்சினை இல்லை..

‘டிபிஆர். காலையில நீங்க கூப்டப்போ உங்கள கன்க்ராட் பண்ண மறந்துட்டேன்.. சாயந்திரத்துலருந்து ரொம்ப நேரமா ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். எங்க செலப்ரேட் பண்ண போய்ட்டீங்களா?’ என்றார்.

‘ஆமா சார். சாரி சார்.’ என்றேன்.

‘சாரியா, எதுக்கு?’

‘நீங்க கூப்ட நேரத்துல இல்லாததுக்கு.’

‘ஓ அதுவா? இட் ஈஸ் ஓகே. அப்புறம் டிபிஆர். ஒரு விஷயம். நம்ம ஜி.எம் அநேகமா ஓப்பனிங் டேட்டுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே வர்றதா இருக்கார்னு நினைக்கிறேன்.நான் ரெகுலரா தங்குற ஓட்டல்லயே எனக்கும் அவருக்கும் புக் பண்ணிருங்க. அப்புறம் இன்னொரு விஷயம். உங்களுக்கு வேண்டிய ஸ்டாஃப் எல்லாம் போஸ்ட் பண்ணியாச்சி. திருச்சியிலருந்து ஒரு ஆஃபீசர கூட தற்காலிகமா உங்க ப்ராஞ்சுக்கு மாத்திருக்கேன். உங்க இன்விடேஷன் ரெடியானதும் எனக்கு கொஞ்சம் அனுப்புங்க. உள்ளூர் வி.ஐ.பிங்களுக்கு ஜி.எம் வந்ததும் குடுத்துக்கலாம். மத்தத நாளைக்கு சொல்றேன். ரூம்ஸ் புக் பண்ணிட்டு என்ன கூப்டுங்க. குட் நைட்..’

நல்ல வேளை, கடைசியில எதையாவது சொல்லி என் சந்தோஷத்தை கெடுத்துவிடுவாரோ என்று பயந்தேன். அப்படி இல்லாமல் விட்டாரே அதுவே பெரிய சந்தோஷம்தான் என்று நினைத்தவாறு படுக்கைக்கு சென்றேன்..

நாளைய பிரச்சினை நாளைக்கு ...

தொடரும்


24 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 65

என்னையுமறியாமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் சந்தித்த அந்த போலி சமூக சேவகரை நினைத்துக் கொண்டேன்.

பளிங்காலான இயேசு பிரானின் உருவத்தை மேசை மேல் வைத்திருத்தல் மட்டுமே ஒரு கிறீஸ்துவனின் அடையாளம் என்று புரிந்துக் கொண்டு அவருடைய போதனைகளை காற்றில் பறக்கவிட்ட அவர் எங்கே..

அதே இயேசு பிரான் தன் பொறுப்பில் விட்டுச் சென்ற பதினாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் உண்மையான ஆயனாய் பரிமளிக்கும் இவர் எங்கே..

இவர் வந்திருந்து என் கிளையைத் திறந்து வைத்தால் மட்டும் போதும் என்று அதுவரை நினைத்திருந்த நான் இவரையும் அந்த பண்ணையாரையும் போன்றோரின் கைகளிலிருந்து முதல் டெப்பாசிட் தொகை கிடைக்கப் பெற்றால் எத்தனை நன்றாயிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்..

நான் பதிலுக்கு அவரைப் பார்த்து பணிவுடன் புன்னகைத்து விட்டு எழுந்து நின்று மரியாதையுடன் நான் கொண்டு சென்றிருந்த அழைப்பு கடிதத்தை அவருடைய கையில் கொடுத்தேன்.

நான் எழுந்து நின்றதில் அர்த்தம் உண்டு.. ஏனெனில் அவர் மிகவும் மரியாதைக்கு பாத்திரமானவர். ஆனால் அவரும் பதிலுக்கு எழுந்து நின்று என்னுடைய கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்..

பிறகு நிதானமாக உறையை பிரித்து என்னுடைய கடிதத்தைப் படித்துவிட்டு கையிலேயே வைத்துக் கொண்டார். ‘ரொம்ப சந்தோஷம் தம்பி.. கண்டிப்பா வரேன்.’ என்றார் சுருக்கமாக.

நான் மேலே என்ன பேசுவதென தெரியாமல் மவுனமாயிருந்தேன். ஆயர் என்னுடன் வந்த பாதிரியாரைப் பார்த்து. ‘நீங்க இவருக்கு என்னென்ன உதவி பண்ண முடியுமோ எல்லாம் பண்ணி குடுங்க ஃபாதர்.’ என்றவாறே எழுந்து நின்று தன்னுடைய வலக்கரத்தை உயர்த்தி, ‘God bless you my son.’ என்று ஆசீர்வதிக்க இதை முற்றிலும் எதிர்பார்க்காத நான் என்னையுமறியாமல் ஒரு நொடி கண்கள் கலங்கிப் போய் நின்றேன். பிறகு சுதாரித்துக் கொண்டு அவருடைய மோதிரத்தை மீண்டும் ஒருமுறை முத்தம் செய்துவிட்டு வெளியேறி வராந்தாவில் என்னுடன் வந்த பாதிரியாருக்காக காத்திருந்தேன்.

அடுத்த நிமிடமே அவர் வெளியே வந்து, ‘வாங்க ஜோசப்.’ என்று என்னை அழைத்துக் கொண்டு அவருடைய அறைக்கு சென்றார்.

அவருடைய அறையும் எளிமையாகத்தான் இருந்தது. ஆனாலும் யரின் அறையை விட சற்றே வசதிகளுடன்..

‘எல்லாருமே ஆயர் மாதிரி எளிமையா இருக்க முடியாது ஜோசப். நீங்க அவர பார்த்துட்டு நாங்க எல்லாருமே அப்படித்தான் நினைச்சிராதீங்க.. நாங்களும் மனுஷங்க தானே.. ஒருவேளை நானும் ஆயரோட வயசுல இந்த உலகத்துலருக்கற எல்லா வசதிகளையும் துறந்துருவேனோ என்னமோ.. இந்த வயசுல.. இதையெல்லாம் துறக்க முடியலை ஜோசப். தினமும் ரேடியோ சிலோன்ல பாட்டு.. ஜெயகாந்தன், நா.பா, அகிலன் எழுதிய நாவல்கள்.. இதெல்லாம் சோதனையாத்தான் இருக்கு.. நாலு கூட்டங்களுக்கு போய் பேசறதுக்கு அப்பப்ப மதறாசிலிருக்கிற என் நண்பர் (இவர் அதிமுக எம்.பியாக இருந்தவர். திருநெல்வேலியை அடுத்த ஊரைச் சார்ந்தவர். இவரும் பாதிரியாரும்  கல்லூரி நண்பர்கள் என்றார்) எனக்கு தேவைப்படுகிற புத்தகங்கள வாங்கி அனுப்புவார்.. இதெல்லாம்தான் என் தனிமையை போக்கும் நண்பர்கள்..’ என்றார், என் பார்வையை புரிந்துக் கொண்டு..

‘அதுலெல்லாம் தப்பே இல்லை ஃபாதர். நீங்க சொல்லாமலே எனக்கு தெரியும். ஏன்னா என் குடும்பத்துலருந்தும் அப்பா வழியில ஒருத்தரும் அம்மா வழியில ஒருத்தரும்னு ரெண்டு பேர் குருவா இருக்காங்க.’ என்றேன்.

‘அப்படியா?’ என்று வியந்தவரிடம் அவர்களைப் பற்றி கூற அவர் மேலும் ஆச்சரியத்துடன், ‘என்ன ஜோசப், ரொம்ப நெருங்கி வந்துட்டிங்க போலருக்கு? அவங்க ரெண்டு பேரையுமே தெரியுமே.. ஒரு வழியில என்னோட கசின்ஸ்தான்..’ என்றார்.

ஆக அடுத்த அரைமணி நேரம் எங்கள் இருவருடைய குடும்பத்தினரைப் பற்றி பேச்சு திரும்பியது. பிறகு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு எழுந்தேன். ‘இன்னொரு விஷயம் ஜோசப். நீங்க உங்க அழைப்பிதழை அச்சடிக்கறதுக்கு வேற எங்கயும் போக வேணாம். எங்க கண்ட்ரோல்லருக்கற அச்சகத்துலயே அடிச்சிரலாம். இல்லன்னா ஆயருடைய பெயரையும் அவருடைய பதவியையும் பத்தி விளக்கமா சொல்லி அடிக்க வேண்டியிருக்கும். நீங்க வேற யாரையும் கூப்பிடறதா இருந்தா எனக்கு முன்னாலயே சொல்லணும் ஜோசப். ஏன்னா ஆண்டவர் பிரச்சினை¨க்குரிய ஆளுங்க கூட ஒரே மேடையிலருக்கறத விரும்ப மாட்டார். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.’ என்றார்.

அவர் கூறியது எனக்கு நன்றாகவே புரிந்தது. ‘நாங்க வேற யாரையும் கூப்டறதா இல்லை ஃபாதர். நீங்க சொன்ன மாதிரியே உங்க ப்ரெஸ்சுலயா அடிச்சிரலாம். நான் மேட்டரை ஃபைனலைஸ் பண்ணிட்டு வந்து ரெண்டு நாளைல சொல்றேன்.’ என்று உறுதியளித்துவிட்டு என் கிளைக்கு திரும்பினேன்...

போகும் வழியில் மத்திய தந்தியலுவலகத்துக்குள் நுழைந்து என் வட்டார மேலாளரிடம் நான் ஆயரை சந்தித்த விஷயத்தை விவரித்துக் கூறிவிட்டு அழைப்பிதழ் அச்சடிப்பதற்கு அனுமதி பெற்றேன்.

என்னுடைய கிளையின் ஃபர்னிஷிங் வேலை முடியும் தருவாயிலிருந்தது. ‘இன்னும் ரெண்டு நாள்தான் சார். கண்ணாடி வேலைதான் லேட்டாக்கிருச்சி. இங்க நாங்க நினைச்ச கண்ணாடி கிடைக்காம திருச்சிலருந்து கொண்டு வர வேண்டியாதா போயிருச்சி சார்.’ என்ற ஒப்பந்தக்காரரைப் பார்த்தேன். அவருக்கு கண்ணாடி மட்டும்தான் திருச்சியிலிருந்து வேண்டியிருந்தது.

எனக்கோ.. என்னுடைய கிளைக்கு வேண்டியிருந்த ஏறக்குறைய எல்லாமே திருச்சியிலிருந்துதான் வாங்க வேண்டியிருந்தது. திருச்சி என்றதும்தான் நினைவுக்கு வந்தது..

நான் ஐந்து வாரங்களுக்கு முன் ஆர்டர் செய்திருந்த மேசை, நாற்காலிகள், இரும்பு அலமாரிகள், இன்னும் வரவில்லையே என்பது நினைத்துக் கொண்டு அடுத்த நாளே திருச்சி சென்றுவர வேண்டுமென்று குறித்துக் கொண்டேன்.

சரி.. வந்ததுதான் வந்தோம் கட்டிட உரிமையாளரையும், சேட்டையும் பார்த்துவிட்டு போகலாம் என்று முதலில் என் கிளைக்கு எதிரே இருந்த உரிமையாளரின் சகோதரர் கடைக்கு சென்றேன்.

‘வாங்க சார்.’ என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றனர் கல்லா பெட்டியிலிருந்த இரு சகோதரர்களும்.

கடந்த முறை அவர்களை சந்தித்தபோதிருந்த கவலை ரேகைகளை அவர்களுடைய முகத்தில் காணவில்லை. NTC நிறுவனத்திடமிருந்து தங்களுடைய கடையை இனியும் குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது மீட்க முடியாது என்ற நிலையை வேறு வழியில்லை என்று ஒத்துக் கொண்டவர்கள் போலிருந்தனர் இருவரும். நானும் அப்பிரச்சினையைக் கிளறுவதால் எந்த பயனுமில்லை என்ற நினைப்பில் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு கிளம்பி சேட்டுடைய அலுவலகத்தை அடைந்தேன்.

உணவு வேளையானதால் பசி வயிற்றைக் கிள்ளியது. சேட்டின் அலுவலகத்தில் வேறு சிலர் திண்ணையில் காத்திருந்ததை சாலையிலிருந்தே கண்ட நான் சரி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து என் வாகனத்தை வந்த வழியே திருப்ப முயன்றேன். அந்த நேரம் பார்த்து வாசலுக்கு வந்த சேட்டின் மூத்த மகன் (அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும்) என்னைப் பார்த்ததும், ‘சார் எங்க போறீங்க? அப்பா உள்ளதான் இருக்கார். வாங்க.’ என்று இறங்கி வந்து என்னைப் பிடித்துக் கொண்டார். நானும் வேறு வழியின்றி வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் பின்னே சென்றேன்.

அலுவலகம் முழுவதும் ஆட்கள்!

நான் ஏதாவது விசேஷமோ என்று தயங்கி நின்றேன். சேட்டின் மகன் தரையில் விரிக்கப் பட்டிருந்த மெத்தையில் அமர்ந்திருந்த எல்லோரையும் விலக்கிக் கொண்டு தன் தந்தையிடம் சென்று நான் வந்திருந்த விஷயத்தை அறிவிக்க அவரும் உடனே வந்து என்னை அழைத்துச் சென்று கூட்டத்தின் நடுவில் அமர்த்தினார்.

‘சார் நல்ல நேரத்துல வந்தீங்க. இங்க கூடியிருக்கற எல்லாரும் நம்ம ஜாதி ஆளுங்க சார். இங்கரூந்து திருச்சி, கும்பகோணம் இந்த பக்கம் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு வரைக்கும் இருக்கற சுத்துவட்ட ஊர்ல நம்மள மாதிரியே பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கறவங்க.. இந்த மாதிரி வருஷத்துக்கு ஒரு தரம் ஒரு ஊர்ல வச்சி மீட் பண்றது வழக்கம். இந்த வருஷம் இங்க..’ என்றார். அத்துடன் அங்கிருந்த எல்லோருக்கும் என்னையும்  என்னுடைய வங்கியையும் அறிமுகப்படுத்தினார்.

குழுமியிருந்த எல்லோரும் என்னைப் பார்த்து வணக்கம் செலுத்தியதுடன் என்னைக் கட்டாயப் படுத்தி இரண்டொரு வார்த்தைகள் பேசவும் வைத்தனர்.

தற்செயலாக நடந்த அந்த சந்திப்பு பிறகு என்னுடைய வங்கி வர்த்தகத்தில் மிகவும் உதவியாக இருந்தது. ஏனென்றால் தஞ்சை நகரம் அக்காலத்தில் அவ்வளவாக தொழில் வளர்ச்சி பெறாத நகராமாயிருந்தது.

உள்ளாடைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த டாண்டெக்ஸ் நிறுவனம், லக்ஷ்மி சீவல் நிறுவனம் என்ற நிறுவனங்களைத் தவிர வேறு எந்த தொழில் நிறுவனங்களும் இல்லை..

ஆகவே தஞ்சையிலிருந்த எல்லா வங்கிகளும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை விட்டால் தங்க நகைக் கடன் கொடுப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சேட்டும் அவருடைய குலத்தை சார்ந்தோர் மட்டுமே ஹ¤ண்டிகளுக்கு மேல் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு உள்ளூரிலிருந்த செல்வாக்கும், பழக்கமும் அவர்களால் மிகவும் எளிதாக பலதரப்பட்ட தொழில் மற்றும் வர்த்தகம் செய்வோருக்கு கடன் வழங்க முடிந்தது.

என்னுடைய கிளைத் திறந்த ஆரம்ப மாதங்களில் இவர்களுக்கு கடன் வழங்கியதன் மூலம்  முதல் ஆறு மாதங்களிலேயே என்னுடைய கிளை லாபக் கணக்கைக் காண்பிக்க மிகவும் உதவியாய் இருந்தது.

அத்துடன் அவர்கள் மூலமாக பல வர்த்தக மற்றும் தொழிலதிபர்களின் அறிமுகமும் எனக்கு கிடைக்க வழி பிறந்தது..

அன்றைய கூட்டத்தில் கலந்துக் கொண்ட நான் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் உணவு விருந்திலும் கலந்துக் கொண்டு பிற்பகலில் வீடு திரும்பியபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது..

தொடரும்

23 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 64

நேரே அருகிலிருந்த தஞ்சை மத்திய தந்தியலுவலகத்திற்குச் சென்று என் வட்டார மேலாளரையழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு ஏக சந்தோஷம். ‘நாம இத முதல்லயே யோசிச்சிருக்கலாம். நான் ஒன்னு பண்றேன். இப்பவே நம்ம ஜி.எம் கிட்ட சொல்றேன். அவர் மறுப்பு சொல்லலேன்னா உடனே ஃபோன் பண்ணி பிஷப் கிட்ட கேட்டுட்டு அவர் சரின்னா இன்னைக்கி ராத்திரியே புறப்பட்டு வரேன். நாளைக்கு ரெண்டு பேருமா போயி இன்வைட் பண்ணலாம். நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி வீட்டுக்கு போங்க.. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல உங்கள கூப்பிடுவேன்.’ என்றார்.

அதேபோல் அன்றே அவர் தஞ்சை ஆயரை (நான் நேற்றைய பதிவில் அவரை பேராயர் என்று குறிப்பிட்டது தவறு. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இருந்தவர்கள்தான் பேராயர் (Archbishop) என்று அழைக்கப்பட்டனர்) அழைக்க அவரும் சந்தோஷத்துடன் சம்மதித்ததாகவும் அடுத்த நாள் நான் மட்டும் சென்று அவரை அதிகாரபூர்வமாக அழைத்தால் போதும் என்று கூறியதாக என்னுடைய வட்டார மேலாளர் கூறினார்.

அடுத்த நாள் நான் காலை சுமார் பதினோரு மணிக்கு என்னுடைய வங்கியின் சார்பான அதிகாரபூர்வமான கடிதத்துடன் அவரை திறப்புவிழாவுக்கு வந்திருந்து கிளையை திறந்துவைக்க வேண்டுமாறு அழைக்க சென்றேன்.

முதலில், முந்தைய தினம் நான் சந்தித்த பாதிரியாரை சென்று சந்தித்து விவரத்தைக் கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே ‘நீங்க இங்கயே கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க. நான் மேல போயி ஆண்டவரோட வேற யாரும் ஃபாதர்ஸ் இருக்காங்களான்னு பார்த்துக்கிட்டு வரேன்.’ என்று ஆயரின் அறை இருந்த இரண்டாவது மாடிக்கு சென்றுவிட்டு சில நிமிடங்களில் இறங்கி வந்தார்.

அவருடைய முகத்தில் ஏதோ சிந்தனை. ‘என்ன ஃபாதர் ஆண்டவர் ஃப்ரீயா இல்லையா? நான் வேணும்னா அப்புறம் வரட்டுமா?’ என்றேன். அவர், ‘ஒன்னுமில்லை ஜோசப். ஆண்டவர் ரூம்ல அந்த ------- பேங்க் காஷியர் ஐயரும் இருக்கிறார். அதான் பார்க்கிறேன்.’ என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண்டவருடன் ஐயரா? நான் குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன ஃபாதர் சொல்றீங்க? அவர் அவங்க பேங்க் விஷயமா பேச வந்திருக்கிறாரோ என்னவோ? சரி. நான் கொஞ்ச நேரம் வெய்ட் பண்றேன். உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா பாருங்க ஃபாதர். அவர் போய்ட்டாரான்னு தெரிஞ்சிக்கிட்டு உங்க ரூமுக்கு சொல்லியனுப்புறேன்.’

அவர் லேசாக சிரித்துவிட்டு என் எதிரிலேயே அமர்ந்தார். ‘இல்ல ஜோசப் உங்களுக்கு இவர பத்தி தெரியாது. ஐயர் நம்ம ஆண்டவரோட ஸ்கூல் மேட். அவர் மெட்ரிக்குலேஷனுக்கு மேல தாண்டலை.. முப்பது வருஷத்துக்கு முன்னால இந்த பேங்குல கிளார்க்கா சேர்ந்தவர், இன்னும் கேஷியராத்தான் இருக்கார். நம்ம ஆண்டவர் பொருளாதரம் முதுகலையில கோல்ட் மெடலிஸ்ட். ரோம்ல தியாலஜியில டாக்டர் பட்டம். தமிழ்நாட்டுலருக்கற மிகப் பழமையான மேற்றிராசனத்தின் ஆயர்.. இவருக்கும் அவருக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. நம்ம ஆண்டவர் மனிதர்களுடைய அந்தஸ்த்தைப் பார்க்காமல் பழகக் கூடியவர். இவர் அதையே அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு எப்ப பார்த்தாலும் ஆண்டவர வந்து பாக்கறதும் மேற்றிராசனத்தோட நிதி விஷயத்திலெல்லாம் தலையிட்டு அறிவுரை வழங்கறதும்.. சில சமயங்கள்ல எங்களாலயே ஒன்னும் பண்ண முடியலை ஜோசப்.. இப்பக் கூட ஆண்டவர் உங்க பேங்க் திறப்புவிழாவுக்கு உங்க ஜோனல் மேனேஜர் கூப்பிட்டத அவர்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கார். அந்த ஆள் தாராளமா போங்க.. ஆனா டிப்பாசிட் குடுக்கறத பத்தி எங்க மேனேஜர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு அட்வைஸ் குடுத்திட்டிருக்கார். அதான் யோசனையோட இப்ப போயி பாக்கணுமான்னு இறங்கி வந்துட்டேன்.’

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். இப்படிப்பட்ட போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்ததுதான் வங்கி உலகம். ஒரு வங்கியின் மேலாளர் தன்னுடைய வங்கியில் மட்டுமே ஒருவர் தன்னுடைய எல்லா சேமிப்புகளையும் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது நான் பல இடங்களிலும் கண்டதுதான். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  அதத நான் இதுவரை பொருட்படுத்தியதேயில்லை. ‘அதானாலென்ன ஃபாதர். நான் என்னுடைய திறப்புவிழா தின டெப்பாசிட் டார்கெட்ட ரீச் பண்ணிட்டேன். எனக்கு இப்ப ஆண்டவர் கிட்டருந்து டெப்பாசிட் ஒன்னும் வேண்டாம் ஃபாதர். அவர் மனமுவந்து இத்தன ஷார்ட் நோட்டீஸ்ல ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். இப்போதைக்கு அது போதும் ஃபாதர். அதப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் வேணும்னா கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி பார்த்துட்டு போறேன். . அத்தோட இன்னொன்னு ஃபாதர், நீங்க உங்களுடைய Multipurpose social service societyயோட திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டியதப் பத்தி என்னோட ஜோனல் மேனேஜர்கிட்ட பேசிட்டேன். உங்களுடைய எல்லா திட்டங்களுக்கும் எங்க வங்கியோட ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு ஃபாதர்.’ என்றேன்.

அவர் வியப்புடன் என்னை பார்த்தார். என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘ரொம்ப நன்றி ஜோசப். நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை.  நேத்தைக்கி நான் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் அதைப் பத்தி சொன்னேன். எனக்கு சில மானேஜர்களோட அலட்சியப் போக்க பார்த்து ஏற்பட்ட வேதனை அது. டெப்பாசிட்டுக்கு வேண்டி நடையா நடப்பாங்க. அவங்களுக்கு வேண்டியது கிடைச்சதும் அது மெச்சூர் ஆகற வரைக்கும் திரும்பியே பாக்க மாட்டாங்க. நான் எந்த திட்டத்துக்கும் உதவனும்னு கேட்டு போனாலும் சும்மா பேச்சுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டு கடைசி நேரத்துல credit squeeze அப்படீன்னு சொல்லி தட்டிக் கழிச்சிருவாங்க. அந்த ஆதங்கத்துலதான் நான் அப்படி பேசினேன். இருந்தாலும் அத நீங்க சீரியசா எடுத்துக்கிட்டு... ரொம்ப தாங்க்ஸ் ஜோசப்..’

எனக்கு அவருடைய குரலில் இருந்த உணர்ச்சி தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. என்ன செய்வதென தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தேன்.

அப்போது மாடிப் படிகள் வழியாக ஒருவர் இறங்கிச் செல்வதைக் கண்டேன். அவருடைய தார்பாச்சு என்பார்களே அம்மாதிரியான உடையும் நெற்றியில் நடுநாயகமாக இருந்த நாமமும் அவரை அடையாளம் காட்டியது. அவர் இறங்கி அங்கிருந்த எல்லா பாதிரியார்களையும் பார்த்து புன்சிரிப்புடன் கூழைக் கும்பிடு என்பார்களே அதுமாதிரியான ஒரு கும்பிடு போட்டவாறே வெளியேறி வாசலிலிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவர் சென்றதும் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த பாதிரியார் நிம்மதி பெருமூச்சு விட்டார். ‘வாங்க ஜோசப்.. இப்போ ஆண்டவர் ஃப்ரியா இருப்பார். வாங்க வேற யாரும் வர்றதுக்குள்ள போய் பார்த்துட்ட வந்திரலாம். வாங்க.’

அவர் முன்னே செல்ல நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.

இரண்டாவது மாடியின்  கோடியில் இருந்த ஆயரின் அறையை அடைந்து வெளியே வராந்தாவில் இருந்த எளிமையான பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் என்னை அமரச் சொல்லிவிட்டு அவர் ஆயரின் அறைக்குள் சென்றார்.

சில நொடிகளில் வெளியே வந்த பாதிரியார், ‘உங்கள உள்ளவே வரச் சொல்லிட்டார் ஜோசப், வாங்க.’ என்றார். நான் உடனே என்னுடைய காலனிகளைக் கழற்ற குனிந்தேன். அவர் என்னை தடுத்து, ‘இட் ஈஸ் ஓகே. இங்க அந்த ஃபார்மாலிட்டியெல்லாம் இல்லை, சும்மா வாங்க.’ என்றார்.

நான் அரைமனதுடன் என் காலனிகளுடனேயே அறைக்குள் நுழைந்தேன். அதுதான் ஒரு மேற்றிராசனத்தின் தலைவரான ஆயரின் அறைக்குள் நுழைவது முதல் முறை.

தஞ்சை மேற்றிராசனம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட, வேளாங்கன்னி திருத்தலம் உட்பட, சிறு நகர்களையும், கிராமங்களையும், உள்ளடக்கிய தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய மேற்றிராசனங்களில் ஒன்று.

அத்துடன் தமிழ்நாட்டிலேயே நிதிநிலையில் முதலிடத்தில் இருந்த மேற்றிராசனம். அதன் தலைவரான ஆயரின் நேரடி மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சிறுவர், இளைஞர், முதியவர் இல்லங்கள் என வேளாங்கன்னியில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தன.

அத்தனை சக்திவாய்ந்த ஒரு ஆயருடைய அறை எப்படி இருக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அறைக்குள் நுழைந்த நான் அந்த அறையின் எளிமை, இன்னும் சொல்லப் போனால், வறுமை கோலத்தைக் கண்டு வியந்துபோய் ஒரு விநாடி ஆயருக்குத் தரவேண்டிய மரியாதையைக் கூட கொடுக்க மறந்து பேச்சற்று நின்றேன்.

சாதாரணமாக, ஆயரைச் சந்திக்க செல்லும் எவரும் அவருடைய விரலில் இருந்த ஆயரின் அதிகார மோதிரத்தை முத்தம் செய்வது வழக்கம். அது எனக்கும் மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதை மறந்துவிட்டு நின்ற என்னையே இருவரும் புன்னகையுடன் பார்த்தனர்.

நான் அவர்கள் என்னையே பார்ப்பதை உணர்ந்து  சுதாரித்துக் கொண்டு கால்களை மடக்கி குனிந்து அவருடைய கரத்தை மரியாதையுடன் பிடித்து  மோதிரத்தை முத்தம் செய்து, ‘வணக்கம் ஐயா’ என்றேன்.

அவருக்கெதிரே இருந்த இரு மிகச் சாதாரணமான மர இருக்கைகளில் அமரும்படி சைகைக் காண்பித்து அவர் அவருக்கென இருந்த ஒரு பழைய சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

கீழே வரவேற்பறையிலிருந்த இருக்கைகளுடன் சேர்த்து இவற்றையும் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அத்தனை பழையதாய் வார்னிஷைக் கண்டு பல வருடங்களானதுபோல் இருந்தன. நான் மெள்ள அறையை சுற்றி மீண்டும் பார்த்தேன்.

அறையின் ஒரு மூலையில் மருத்துவமனைகளில் நாம் காண்பது போன்ற இரும்பு கட்டில். அதன் மேல் மெத்தை என்று ஒன்றும் இல்லாமல் வெறும் கோரைப்பாய்.. தலையணையக் காணவில்லை..
கட்டிலைச் சுற்றிலும் மிகப் பழைய, வெள்ளை நிறத்தை இழந்திருந்த கொசு வலை. அறை ஜன்னல்களில் பெட்ஷீட்டை நினைவுறுத்திய திரைகள், பழைய மங்களூர் ஓடுகளுடன் கூடிய மிக உயர்ந்த கூரை, மேலிருந்த மர உத்தரத்திலிருந்து தொங்கிய பழங்காலத்து  மின் விசிறி..

அறையின் இடது புறத்தில் சுவரையொட்டி பழைய பர்மா தேக்கிலான பல இழுவைகளைக் கொண்ட மேசை.. மேசை முழுவதும் பலதரப்பட்ட கோப்புகள், மேசையின் சுவரையொட்டிய விளிம்பில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்.. பழயை காலத்து மேசை விளக்கு.. என காணும் இடத்தில் எல்லாம் எளிமையின் கோலம்..

அறை முழுவதும் உலா வந்த என் பார்வை இறுதியில் ஆயரின் முகத்தில் சென்று நின்றபோது அவர் ஒரு சிறு புன்னகையுடன் என்னைப் பார்ப்பதைப் பார்த்ததும் கையும் களவுமாய் பிடிபட்ட கள்வனைப் போல் திருதிருவென விழித்தேன்.

தொடரும்..


20 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 63

இத்தனை நாள் இல்லாம என்ன திடீர்னு... இவர் என்ன கேக்கப் போறார்னு தெரியலையே.. ஏதாவது வேலை விஷயமா இருக்குமா.. இல்ல வேறேதாச்சுமா.. கடவுளே இனியொரு பிரச்சினைய சந்திக்கற மனநிலை எனக்கிப்போ இல்லைப்பா.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றேன்..

பிஷப் ஹவுஸ் வரவேற்பரை மிகவும் எளிமையாக இருந்தது. சுமார் 50 குருக்கள் ஒரே நேரத்தில் தங்க தனித்தனி அறைகளைக் கொண்ட இல்லத்தின் வரவேற்பரையைப் போலில்லாமல் சுமார் பத்து விருந்தினர்கள் மட்டுமே அமர்ந்து அளவளாவ ஏதுவாக இருந்தது..

இருக்கைகளும் மிகச் சாதாரணமான மர இருக்கைகள். பிரம்பால் பின்னப்பட்ட இருக்கை மற்றும் சாய்மான பகுதி.. இருபது இருபத்தைந்து வருடத்திற்கு முன் வார்னிஷ் செய்யப்பட்டது போன்ற தோற்றம்..

நானும் அவரும் எதிரும் புதிருமாக அமர்ந்தோம்.

என் மனைவி கூறியதுபோல் அவரும் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர்.. பத்தாவது முடித்தவுடன் தஞ்சை குருமடத்தில் சேர்ந்து சரித்திரத்தில் முதுகலைப் பட்டம், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல், பிறகு ரோமையில் தியாலஜியில் பி.எச்.டி என மிகவும் படித்தவர். நான் அவரை சந்தித்த சமயத்தில் ஒரு கத்தோலிக்க கிறீஸ்துவ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

பேசுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். கோவில்களில் அவர் ஆற்றும் உரை உணர்ச்சிபூர்வமானதாக இருக்கும். அத்துடன் நான் அங்கு இருந்த இரண்டாண்டுகளில் ரோட்டரி, லயன், ரோட்டராக்ட் கூட்டங்களிலும், வலம்புரி ஜான் மற்றும் பல இலக்கியவாதிகளின் தலைமையில் நடந்த இலக்கிய கூட்டங்களிலும் அவர் கலந்துக் கொண்டு பேசியதைக் கேட்டிருக்கிறேன்..

‘சொல்லுங்க ஃபாதர். ஏதாவது விசேஷம் இருக்கா? இல்லன்னா வீட்டுக்கு ஃபோன் பண்ணியிருக்க மாட்டீங்கன்னு தெரியும். அதனாலதான் இன்னைக்கி நான் கொஞ்சம் அவசரமான வேலையா போய்கிட்டிருந்தாலும் உங்கள பார்க்க வந்திருக்கேன்.’ என்றேன்.

அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, ‘உங்களுக்கு அவசரம்னா நாளைக்கு சொல்றேன்.. நீங்க கிளம்புங்க..’ என்று எழுந்து நின்றார்.

நானும் எழுந்து நின்றேன். அவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்று ‘வேற ஒன்னுமில்லை ஃபாதர். எங்க கிளை திறப்பு விழா டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். திறக்கறதுக்கு யாரை கூப்பிடறதுங்கறதுல லாஸ்ட் மினிட்ல ஒரு கன்ஃப்யூஷன். இன்னைக்குள்ள முடிவு பண்ணி எங்க HOவுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்.. அதான்..’ என்று இழுத்தேன்.

அவருடைய முகம் சட்டென்று பிரகாசமானது. ‘ஜோசப் நானும் அதப்பத்திதான் நானும் உங்க கிட்ட பேசணும்னு கூப்டேன்’ என்றார்.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன ஃபாதர் சொல்றீங்க?’

அவர் புன்னகையுடன் ‘உக்காருங்க. சொல்றேன்.’ என்று தொடர்ந்தார். ‘ரெண்டு வாரத்துக்கு முன்னால நம்ம பேராயரும் (பிஷப்) நானும் பேசிக்கிட்டிருந்தோம். அப்போ ----- பேங்க் மானேஜர் வந்திருந்தார். அவர்தான் பேராயர்கிட்ட உங்க பேங்க் இங்க ப்ரான்ச் திறக்கப் போற விஷயத்தை சொன்னார். நானும் ஆமாம் ண்டவரே (பிஷப்பை குருக்களும், என்னைப் போன்றோரும் இப்படி அழைப்பது சம்பிரதாயம்) எனக்கும் அந்த மானேஜரைத் தெரியும். அவரும் என் பங்குலதான் இருக்கார்னு சொன்னேன். நான் அத்தோட இந்த விஷயத்தை மறந்திட்டேன். நேத்தைக்கி நம்ம ஸ்கூல் ரோட்டராக்ட் கூட்டத்துக்கு இந்த ஹ¤ண்டி பிசினஸ் பண்ணுவாரே சேட் ஒருத்தர், அவரும் வந்திருந்தார். அவர்தான் ஸ்பான்ஸர் பண்ற ரோட்டரி க்ளப்புல ரோட்டராக்ட் கமிட்டி சேர்மன். அவர்தான் நீங்க உங்க ப்ராஞ்ச திறக்கறதுக்கு ஒரு VIP ஐ தேடிக்கிட்டிருக்கீங்கன்னும், டெப்பாசிட்டுக்காக ஊர் முழுசும் அலைஞ்சி கஷ்டப்படுறீங்கன்னும் என்கிட்ட சொன்னார். அட! அவர் நம்ம கிட்ட இதப்பத்தி ஒன்னுமே சொல்லலையேன்னு நினைச்சேன். என்ன ஜோசப் சாமியார்ங்களுக்கு இதப்பத்தி என்ன தெரியும்னு விட்டுட்டீங்களா?’ என்றார்.

நான் என்ன சொல்வதென தெரியாமல் ஒரு அசட்டு புன்னகையுடன் அவரை பார்த்தேன். ஆமாம் என்று எப்படி சொல்வது? இவங்களுக்கு யாரை தெரியும்?

‘அப்படியெல்லாம் இல்ல ஃபாதர்.’ என்றேன் பட்டும் படாமலும்..

அவர் என்னை கூர்ந்து பார்த்தார். ‘உங்களுக்கு இஷ்டமில்லேன்னா வேணாம். நான் சொல்றது யோசிச்சி பாருங்க. தஞ்சாவூர்லருக்கற பேங்குகள்ல யாருக்கு அதிக டெப்பாசிட் இருக்குன்னு நினைக்கறீங்க?’

உண்மையிலேயே எனக்கு தெரிந்திருக்கவில்லை. ‘தெரியலை ஃபாதர். யாருக்கு?’

அவர் சிரித்தார். ‘நம்ம பேராயருக்குத்தான். வேற யாருக்கு?’

என்னால் நம்ப முடியவில்லை. ‘எப்படி சொல்றீங்க?’

அவர் வியப்புடன் என்னைப் பார்த்தார். ‘வேளாங்கன்னிய மறந்துட்டீங்களா? அந்த குக்கிராமத்துல எதுக்கு இத்தனை பேங்குங்கன்னு நினைக்கறீங்க? என்ன ஜோசப், ஒரு கத்தோலிக்கர் மேனேஜரா வந்திருக்காரேன்னு நாங்க எல்லோரும் பேசி சந்தோஷப் பட்டுக்கிட்டிருக்கோம். நீங்க என்னடான்னா.. இந்த அடிப்படை விஷயத்தையே மறந்துட்டீங்களே. இப்பருக்கற உங்க பங்கு சாமியார் கூட நேத்தைக்கி உங்கள பத்தி சொல்லி வருத்தப் பட்டார்.. நாங்கூட அவருக்கு ஒரு இடம் இருக்குன்னு சொன்னேன். அப்புறம் மனுஷன் வந்து பாக்கவேயில்ல ஃபாதர்னு சொன்னார். என்ன ஜோசப், உண்மையா?’

சரியாப் போச்சு. நாம இவ்வளவு பாப்புலர் ஆயிட்டமா? அவர் சொல்லித்தான் எனக்கு புரிஞ்சது. அவர் சொன்னாப்பல நான் ஏறக்குறைய தஞ்சையிலிருந்த எல்லா வங்கி மேலாளர்களையும் சந்தித்துவிட்டேன். அதில் யாருமே கிறீஸ்துவர்கள் இல்லை..

‘அவர் காண்பிச்ச இடம் பிராஞ்ச் திறக்க ஏதுவா இல்ல ஃபாதர். நான் அவர பார்த்து விஷயத்த சொல்லியிருக்கலாம்.. விட்டுட்டேன். இப்ப அங்க போயி அவர பார்த்துட்டுதான் வரேன். சொல்லுங்க.. இப்ப நான் என்ன செய்யணும்?’

அவர் ‘என்னடா இவன்? இதுக்கு மேல எப்படி வெளிப்படையா சொல்றது?’ என்பதுபோல் பார்த்தார்.

நான் புரிந்தும் புரியாமலும், ‘இந்த மாதிரி விழாக்களுக்கெல்லாம் ஆண்டவரை எப்படி கூப்டறதுன்னு தெரியாமத்தான் விட்டுட்டேன் ஃபாதர்.. இப்ப வேணும்னாலும் போய் அஃபிஷியலா கூப்பிடுறேன்.’ என்றேன்.

அவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. ‘அதான் நானும் சொல்றேன். அதுல உங்களுக்கு நிறைய பெனிஃபிட் இருக்கும் ஜோசப். இப்ப எங்களுக்கு வருகிற பெருவாரியான டொனேஷன் தொகை, நாங்க நடத்திக்கிட்டிருக்கற ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள், விடுதிகள், எல்லாத்துக்கும் அலாட் கற பணத்தையெல்லாம் பேங்க்லதான வைப்பு நிதியாத்தான் வச்சிருக்கோம். அதுல ஒரு பங்கு உங்களுக்கு கிடைச்சாலே போதும். அவர விழாவுக்கு கூப்டா உங்களுக்குதான் நல்லது. அதுவுமில்லாம நம்ம மதத்த சேர்ந்த ஒரு மேனேஜர்கூட இல்லையேன்னு அவர் அடிக்கடி வருத்தப் படுவார். உங்க பேரைக் கேட்டதும் அவர் எவ்வளவு சந்தோஷப் பட்டார்னு எனக்குத்தான் தெரியும். நீங்க தைரியமா அவர கூப்டுங்க. கண்டிப்பா வருவார். ஆனா இன்னைக்கி வேணாம். நீங்க இங்க வந்தத நம்ம Procurator ஃபாதர் பார்த்துட்டார். இப்ப போனீங்கன்னா நாந்தான் இதுக்கு பின்னாலன்னு தெரிஞ்சிரும். நீங்க ஒன்னு பண்ணுங்க.. உங்களுக்கு மேலருக்கற அதிகாரி ஒருத்தர முதல்ல நம்ம ண்டவர ஃபோன்ல கூப்டு ஒரு மரியாதைக்கு பேச சொல்லுங்க.. நீங்க நாளைக்கு நேர்ல வந்து கூப்டுவீங்கன்னு சொல்ல சொல்லுங்க.. என்ன?’ என்றார். பிறகு பேராயரின் பெர்சனல் தொலைப்பேசி எண்ணை கொடுத்தார்.

சே.. இது எனக்கு தோனலையே. ஸ்டுப்பிட். என்று என்னையே திட்டிக் கொண்டு அவரைப் பார்த்து அசடு வழிந்தேன். ‘ரொம்ப தாங்க்ஸ் ஃபாதர். நான் என்னுடைய வட்டார மேலாளரையே நாளைக்கு வரச்சொல்றேன். கோயம்புத்தூர்தான ஃபாதர். கண்டிப்பா வருவார்.’

அவர் எழுந்து நின்றார். ‘அது உங்க இஷ்டம் ஜோசப். னாலும் முதல்ல இன்னைக்கி ஃபோன்ல கூப்டு நாளைக்கு ண்டவர் ஃப்ரியான்னு கேட்டுக்க சொல்லுங்க. அப்புறம் ஜோசப். இத்தோட முடிஞ்சி போயிருச்சின்னு வராம இருந்துராதீங்க..  You should know that we have huge multi purpose social service organisation. உங்கள மாதிரி அதிகாரிங்களுடைய உதவிய நாங்க ரொம்பவும் எதிர்பார்க்கிறோம் ஜோசப். அதுவும் நான் உங்க கிட்ட இந்த ஐடியாவ குடுத்ததுக்கு காரணம். We have seen that Bank Managers are only interested in getting deposits, not for distributing subsidised loans to the needy. அரசாங்கம் நிறைய மானியம் குடுக்க முன் வந்தாலும் உங்கள மாதிரி மேனேஜர்ங்க அத யூஸ் பண்ணிக்க முன்வருவதில்லை.. நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.’

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் மவுனமாக நின்றேன். ‘ஓகே ஃபாதர். ஐ வில் டூ மை பெஸ்ட். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.’ என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றேன்.

நேரே அருகிலிருந்த தஞ்சை மத்திய தந்தி அலுவலகத்திற்குச் சென்று என் வட்டார மேலாளரையழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு ஏக சந்தோஷம். ‘நாம இத முதல்லயே யோசிச்சிருக்கலாம். நான் ஒன்னு பண்றேன். இப்பவே நம்ம ஜி.எம் கிட்ட சொல்றேன். அவர் மறுப்பு சொல்லலேன்னா உடனே ஃபோன் பண்ணி பிஷப் கிட்ட கேட்டுட்டு அவர் சரின்னா இன்னைக்கி ராத்திரியே புறப்பட்டு வரேன். நாளைக்கு ரெண்டு பேருமா போயி இன்வைட் பண்ணலாம். நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி வீட்டுக்கு போங்க.. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல உங்கள கூப்டுவேன்.’ என்றார்.

அப்படா.. ஒரு வழியா இந்த தலைவலி சரியாயிருச்சி என்ற நிம்மதியில் வேறெங்கும் செல்லாமல் வீட்டுக்குச் சென்றேன்..


படிப்பினை: ஒரு வாசல் அடைக்கப்பட்டால் வேறொரு விசாலமான வாசல் திறக்கப்படும் என்பது பெரியவர்கள் சொன்ன வார்த்தை. அது உண்மைதான். நாம் எதிர்பார்த்திருந்த ஒரு காரியம் தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் இருக்க வேண்டும். நிச்சயம் வேறொரு வழி பிறக்கும்.

இனி வரும் இடுகைகளில் தேவைப் படும் இடங்களில் இதுபோன்ற படிப்பினைகள் இடப்படும். இதொன்றும் வேத வாக்கல்ல, யாரும் அப்படியே எடுத்துக் கொள்வதற்கு.. என் மனதில் பட்டதை எழுதுகிறேன். அவ்வளவுதான்.
19 January 2006

திரும்பிப் பார்க்கிறேன் 62

வீட்டையடைந்ததும் என் வட்டார மேலாளர் வழியாய் வேறொரு வில்லங்க செய்தி!!

அதைக் கேட்டவுடனே எனக்கு ‘இந்தாளுக்கு வேற வேலையில்லை.. ஒன்னுமில்லாத விஷயத்தையெல்லாம் பெரிசுபடுத்தி எதையாச்சும் சொல்றதே வேலை.. பேசாம திருப்பிக் கூப்பிடாமயே இருந்திட்டா என்ன?’ என்று நினைத்தேன்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதாங்க ஃபோன் வந்திச்சி.. நீங்க வந்ததும் கூப்பிட சொல்றேன்னேன். நீங்க போய் முதல்ல குளிச்சிட்டு வந்து  சாப்டுங்க.. அப்புறம் கூப்டலாம்’ என்ற என் மனைவியை முறைத்துப் பார்த்தேன்..

சாதாரணமாக வீட்டுக்கு வெளியே நடந்தவைகளால் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களை என் மனைவியின் மீது காட்ட மாட்டேன். அன்றைக்கு என்ன தோன்றியதோ.. ‘நான் வீட்டுக்குள்ள வர்றதுக்குள்ள விஷயத்த சொல்லிட்ட. இனி நா எங்க குளிக்கறது? சாப்டறது? எல்லாம் அவர்கிட்ட பேசிட்டு பாத்துக்கலாம்.. இதான் கடைசி.. சொல்லிட்டேன்.. இனிமே இந்த மாதிரி விஷயங்கள வீட்டுக்குள்ள வந்ததும் சொல்லாத..’ என்றேன் குரலை உயர்த்தி.

திருமணம் முடிந்து இந்த இரண்டு வருடத்தில் இப்படி கடிந்து நான் பேசியதில்லை.. என்னுடைய கோபத்தின் பின்னணியை அறிந்திராத என் மனைவியின் கண்கள் சட்டென கலங்கிப் போனது. அதைப் பார்த்ததும்தான் என் தவறு எனக்கு புரிந்தது..

பிறகு அவரை சமாதானப்படுத்திவிட்டு அவர் கூறியதைப் போலவே சென்று குளித்துவிட்டு வந்து அவர் கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு வேண்டா வெறுப்புடன் என் மேலாளரை அழைத்தேன்.. அவர் சாதாரணமாக இரவு எட்டு மணிக்கு முன்பு வீடு திரும்பமாட்டார்.. நான் அழைத்தபோது அலுவலகத்தில்தான் இருந்தார். என்னுடைய அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தார் போல் தெரிந்தது..

‘எடுத்தவுடனே.. என்ன டிபிஆர். எங்கே போயிருந்தீங்க?’ என்றார் யார், எவர் என்று கேட்காமலே..

‘கொஞ்சம் டெப்பாசிட்டர்ச பார்க்க போயிருந்தேன் சார். சொல்லுங்க என்ன விஷயம்?’ என்றேன்.

‘அதிர்ச்சியாயிடாதீங்க டிபிஆர். சேர்மன் திறப்புவிழாவுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டார்.’

என்னது? ஏனாம்? எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. நாள் குறித்துவிட்டு.. அழைப்பிதழ் வடிவத்தை முடிவு செய்வதற்காக என்னுடைய தலைமையலுவலகத்திற்கு அனுப்பி ஒரு வாரம் ஆகிறதே ஏதும் பிரச்சினையோ என்று இன்று காலைதான் நினைத்தேன். இதுதான் பிரச்சினை போல் தெரிகிறது..

சை.. என்ன ஆளுங்கடா.. எவனோ என்னத்தையோ போய் சேர்மன்கிட்ட சொல்லி கெடுத்திட்டான்க போலருக்கே.. என்று நொந்துபோனேன்..

‘என்ன டிபிஆர். அப்செட்டாயிட்டீங்களா? நாம என்ன பண்றது? நீங்க அனுப்பின இன்விடேஷன் மாட்டர கன்ஃபர்ம் பண்றதுக்கு சேர்மன் கிட்ட போயிருக்கு. அவர் ஒன்னும் சொல்லாம அவர் பேர மட்டும் அடிச்சிட்டு ‘let him manage with operations GM’னு எழுதி திருப்பியனுப்பிட்டாராம். HOவில யாருக்கும் அவர்கிட்ட போயி என்ன, ஏதுன்னு கேக்கறதுக்கு பயமாயிருக்காம்.. ஒருவேளை அவர கேக்காமலே அவர் பேர போட்டுட்டோம்னு கோபமான்னு தெரியலை..’

அதுதான் காரணமா? அடப்பாவி மனுஷா.. நான் போன வாரம் VIP யாரையும் கூப்டாம நம்ம சேர்மன வச்சே திறப்புவிழா நடத்திரலாம்னு சஜ்ஜஸ்ட் பண்ணப்போ நான் சேர்மன்கிட்ட சொல்லிக்கறேன்னு சொல்லிட்டு பேசாம இருந்திட்டார் போலருக்குதே.. சே.. திறப்புவிழாவுல வச்சி அவருக்கு என் பேர்லருந்த தவறான எண்ணத்த போக்கிரலாம்னு நினைச்சிருந்தேனே.. இப்ப என்ன பண்றது?

‘இப்ப என்ன பண்ணலாம்னு நினைக்கிறீங்க டிபிஆர். ஜி.எம் கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பேசினேன்.. அவர் டிபிஆர். ஓப்பன் பண்ற பிராஞ்சுக்கு தைரியமா போலாமா... நம்ம பழைய சேர்மனனுக்கு ஆனா மாதிரிஆயிராதில்லன்னு தமாஷ் பண்ணார்.. அதுக்குத்தான் நம்ம சேர்மன் நைஸா ஒதுங்கிட்டார் போலன்னும் கிண்டல் பன்றார்..’

போ.. இது வேறயா? கொடுமைடா.. என்று நினைத்தேன். இருக்கும். சேர்மன் பயங்கர ரெலிஜீயஸ் மைண்டட்னு கேள்விப் பட்டிருந்தேன்.. அலுவலக காரியங்களுக்குக் கூட நல்ல நேரம், எமகண்டம் பாக்கற ஆளுன்னு நான் அங்கே சென்றிருந்த அவருடைய காரியதரிசி கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தேன்..

‘சார்.. நம்ம ஜி. எம் என்ன சொல்றார் சார்.. வேற யாரையும் கூப்பிடணுமா வேணாமா.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்.. நான் கேட்டா ஏதாச்சும் தப்பா நெனச்சிக்க போறார்.. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள நாம டிசைட் பண்ணலைன்னா அப்புறம் திறப்பு விழாவ தள்ளிப் போடறா மாதிரி ஆயிரும்.. என்ன சொல்றீங்க சார்?’ என்றேன்..

‘திறப்பு விழாவ தள்ளிப் போடறதா? அது மட்டும் வேணவே வேணாம். நீங்க இப்ப சொன்னத நான் ஏற்கனவே கேட்டுட்டேன்.. அவரு லோக்கல்ல யாராவது பிசினெஸ் மேன் கெடச்சா பார்க்க சொல்லுங்க.. இல்லன்னா யாரும் வேணாம்னு சொல்லிட்டார். நீங்க ஒன்னு பண்ணுங்க டிபிஆர். நாளைக்கு ஒரு நாள் எடுத்துக்கிட்டு முயற்சி பண்ணுங்க.. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள யாரும் கிடைக்கலைன்னா.. யாரும் வேணாம். I will wait for your phone call tomorrow. என்னேரமானாலும் கூப்டுங்க..’

இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசித்தேன்..

என்னையே பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி.. ‘என்னங்க நீங்க இல்லாதப்போ இன்னொரு ஃபோன் கூட வந்துச்சு..’ என்றார் தயக்கத்துடன்.

எனக்கு அவருடைய முகத்திலிருந்த தயக்கத்தைப் பார்த்ததும் ஏண்டா இவளை முட்டாத்தனமா கோச்சிக்கிட்டோம் என்று தோன்றியது..

‘சொல்லு, யார் பண்ணா?’

‘நம்ம பங்கு சாமியார்.’

‘என்னவாம்?’

‘உங்களுக்கு டைம் இருக்கும் போது வரணுமாம். அவர் நம்ம ஊர் சாமியார் போலருக்கு.’

‘என்னது அவரா? அவர்தான் போய்ட்டாருன்னு சொன்னாங்களே? நாம ரெண்டு மூனு மாசமா அவர பாக்கவேயில்லையே.. நான் போனப்போ வேற ஒரு சாமியார்தானே இருந்தாரு.. வேற ஏதாவது சொன்னாரா?’

‘இல்லீங்க.. நீங்க வீட்ல இல்லேன்னதுமே.. இத மட்டும் சொல்லிட்டு வச்சிட்டார்.’

என்னவாயிருக்கும்? இரவு மணி எட்டரையாகியிருந்தது. இப்போது அவரைக் கூப்பிடுவது அவ்வளவு உசிதமாயிருக்காதென நினைத்தேன். சரி, நாளைக் காலையில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்..

அதே போல் அடுத்த நாள் காலை முதல் வேலையாய் அவரை சுமார் ஒன்பது மணிக்கு தொலைப் பேசியில் அழைத்தேன். மணி அடித்துக் கொண்டே இருந்தது..

சரி.. அலுவலகம் செல்லும் வழியில் பார்த்துவிட்டு போகலாம் என்று நினைத்து, குளித்து உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டேன்.

தஞ்சை டவுணுக்கு செல்லும் வழியில்தான் என் பங்கு தேவாலயம் இருந்தது. தேவாலயத்திற்கு பின்புறத்தில்தான் பங்கு குருவும் தங்கியிருந்தார்.. நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கண்ட அதே குருவானவர்தான் நான் சென்றபோதும் இருந்தார். இவரா தொலைப்பேசியில் அழைத்திருப்பார்?

நான் என் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கவும் அவர் என்னைப் பார்த்துவிட்டு புன்னகையுடன் வெளியில் வந்தார். ‘என்ன சார்.. நான் சொன்ன இடத்தைப் பார்த்தீங்களா? அப்புறம் ஒன்னுமே சொல்லலையே.. வேற இடம் கிடைச்சுதுன்னு கேள்விப்பட்டேன்..’

அப்படியானால், இவர் இல்லை என்னை நேற்று அழைத்தது. ‘சரி இவர்கிட்ட பேசிக்கிட்டிருந்தா நம்ம வேலை கெட்டுரும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.. ‘இல்ல ஃபாதர். நீங்க சொன்ன இடம் safe room கட்டறதுக்கு தோது படலை.. உங்க கிட்ட விஷயத்த சொல்லலாம்னு ரெண்டு மூனு தடவை ஃபோன்ல கூப்டேன்.  ரிங் போய்ட்டே இருந்திச்சி.. அப்புறம் நான் மறந்தே போய்ட்டேன்.. கோயிலுக்கு வரும்போதெல்லாம் உங்ககிட்ட பேசணும்னு முயற்சி பண்ணேன்.. ஆனா பூசை முடிஞ்சதும் உங்கள சுத்தி எப்ப பார்த்தாலும் கூட்டமா இருக்கே.. சரி அப்புறம் பாத்துக்கலாம்னு போயிருவேன்.. இன்னைக்கி இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்.. சாரி ஃபாதர்.. தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரு பிராஞ்ச் தொறக்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறா மாதிரி.. நான் ஒருத்தன் மட்டும் இருந்துக்கிட்டு.. நேரமே போதலை ஃபாதர்..’

அவர் சிரித்தார். ‘It is ok.’ என்றார். ‘அப்புறம் சார், உங்கள ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம பழைய பங்கு சாமியார் கேட்டார். உங்க வீட்டு ஃபோன் நம்பரும் குடுத்தேன்.. அவரு இப்ப நம்ம பிஷப் ஹவுஸ்லதான் இருக்கார்.. கூப்டாரா?’

‘இல்லையே ஃபாதர்.. எதுக்கு என்ன பாக்கணும்னு சொன்னாரா?’ என்றேன் உண்மைக்கு புறம்பாக.. பொய் சொல்றதே பாவம்.. அதுவும் ஒரு குருவிடத்திலா என்று என் மனசாட்சி உறுத்தியது. வேறென்ன செய்ய? ஆமாம் ஃபாதர் நேத்துதான் கூப்டுருந்தார் என்றால், ஓ! அதுக்குத்தான் இந்த பக்கம் வந்தீங்களான்னு நினைச்சிக்குவார் அப்புறம் வீணா வருத்தப்பட்டாலும் படுவார்.. என்று என் மனசாட்சிக்கு பதிலளித்தேன்..

அவர் சிரித்தார். ‘தெரியலை சார்.. நீங்க வேணும்னா போய் பாருங்களேன்..’ என்றார்.

அதற்குப் பிறகு சிறிது நேரம் கோவில் விஷயங்களைப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பி நேரே பிஷப் இல்லத்திற்கு சென்று அவரைப் பற்றி வரவேற்பறையிலிருந்த பெண்ணிடம் விசாரித்தேன். அவர் என்னை சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு சிறுவனையழைத்து நான் பார்க்க வந்த குருவிடம் நான் வந்திருப்பதை கூறும்படி சொன்னார்.

சிறுவன் சென்ற சில நொடிகளிலேயே அவரும் ஒரு புன்சிரிப்புடன் படிகளில் இறங்கி வந்து.. ‘வாங்க சார்.. ரொம்ப நாளாச்சே பார்த்துன்னுதான் ஃபோன் பண்ணேன்.. வாங்க, ஆஃபீஸ் ரூம்ல உக்காந்து பேசலாம்.’ என்று அழைத்துச் சென்றார்..

இத்தனை நாள் இல்லாம என்ன திடீர்னு... இவர் என்ன கேக்கப் போறார்னு தெரியலையே.. ஏதாவது வேலை விஷயமா இருக்குமா.. இல்ல வேறேதாச்சுமா.. கடவுளே இனியொரு பிரச்சினைய சந்திக்கற மனநிலை எனக்கிப்போ இல்லைப்பா.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றேன்..

தொடரும்..