30 November 2005

இது எப்படியிருக்கு!!

சவுதியிலுள்ள ஒரு கடைக்கோடி கிராமத்தில் வசித்துவரும் நான்கு சவுதி பெண்கள் தங்களை தினமும் ஏற்றிச் செல்லும் ஒரு வாடகைக்கார் ஓட்டுனரை திருமணம் செய்துக்கொண்டனர்!

எதற்காம்?

Al-Watan செய்தித்தாளின் கூற்றுப்படி சவுதி அரேபியாவிலுள்ள Al-Baha பகுதியைச் சார்ந்த அந்நான்கு பெண்களும் தினமும் தாங்கள் வசித்து வந்த பகுதியிலிருந்து தொலை தூரத்திலுள்ள பள்ளிக்கு சென்று போதித்து விட்டு வருவது வழக்கமாம். தினமும் அவர்களைக் கொண்டு செல்லும் ஓட்டுனரின் நன்னடத்தையால் கவரப்பட்டு நால்வரும் அவரை திருமணம் செய்துக்கொண்டனராம். இந்த விபரீத முடிவுக்கு காரணம் அதுமட்டுமல்லவாம். அவர்கள் போதித்து வந்த பள்ளியிருந்த பகுதியைச் சார்ந்த அவரை திருமணம் செய்துகொண்டால் தினமும் இத்தனை தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்காதே என்று நினைத்தனராம்.

எனவே நான்கு பெண்களும் அவரை திருமணம் செய்துக்கொண்டு தங்களுடைய மாத ஊதியத்தையும் அவருடன் பகிர்ந்துகொள்வது என்று முடிவு செய்தனராம்.

சவுதியில் பெண்கள் வாகனங்களை செலுத்த முடியாது என்பதும் ஆண்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்பதும் இப்பெண்களை இந்த முடிவுக்கு இட்டு சென்றிருக்கலாமோ..

என்னத்த சொல்றது?

நன்றி: தி எக்கானமிக் டைம்ஸ்

திரும்பிப் பார்க்கிறேன் - 25

வெளியே நின்றிருந்த அடகு கடைக்காரரிடம் என்னுடைய உதவி மேலாளர் பேசுவதை என்னுடைய அறையிலிருந்தே கண்ணாடி வழியாக பார்க்க முடிந்தது.

எதற்காக வந்திருப்பார்கள்? அந்த ஃப்ராடு பான் புரோக்கர் மாட்டிக்கொண்டிருப்பானோ? என்னுடைய வட்டார மேலாளரை பார்த்தேன். இவரிடம் சொல்லலாமா? எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று தெரியாமல் யோசித்தேன்.

‘என்ன மிஸ்டர் ஜோசஃப்? I told you to call the Police. What are you waiting for? Call them, now.’ அவருடைய குரலில் இருந்த finality என்னை ஒரு விநாடி யோசிக்க வைத்தது. மீண்டும் வெளியே என் உதவி மேலாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் அடகு கடைக்காரரை பார்த்தேன். இவரிடம் சொல்லிவிடலாம்.

‘சார்.. அந்த பான் புரோக்கரே வந்திருக்கிறார். Would you like to talk to him?’ என்றேன்.

வியப்புடன் எழுந்து நின்ற அவர் என்னுடைய பார்வை சென்ற திசையில் பார்த்தார். ‘Why didn’t you tell me? Call them inside.’

நான் அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்று அடகு கடைக்காரரையும் அவருடைய சகோதரரையும் உள்ளே வரச் சொல்லி சைகை காண்பித்தேன். அவர்களோ என்னை அவர்களுக்கருகே வரும்படி சைகை காண்பிக்கவே அவர்களை நெருங்கி, ‘எங்க வட்டார மேலாளர் வந்திருக்காரு சார். நீங்களே வந்து அவர்கிட்ட நடந்தத சொன்னீங்கனாத்தான் எனக்கும் என் உதவி மேலாளருக்கும் நல்லது.’ என்றேன்.

என் உதவி மேலாளர் குறுக்கிட்டு, ‘சார், நான்தான் பியூன் மூலம் சார் வந்திருக்கற விஷயத்த இவர்கிட்ட சொல்லி வரச் சொன்னேன். இவரு வேற நகையை அடகு வச்சி அந்த கணக்குல ஒரு ரூபா பாலன்ஸ் வச்சிட்டு மீதி பணத்தை கட்டிடறேன்னு சொல்றார் சார்.’

அப்பாடா என்றிருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்தேன். அவர்களும் படபடப்புடன் இருந்தார்கள். எப்படியாவது போலீஸ் புகாரைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் அவர்கள் கண்களில் தெரிந்தது.

‘நீங்க பணம் கட்டறேங்கறது சந்தோஷம். ஆனா அதோட இந்த பிரச்சினை சால்வாயிறாது. நீங்க ரெண்டு பேரும் அவர் உங்களுக்கு நல்லா தெரிஞ்சவருதான். அவரையே யாரோ ஏமாத்திட்டிருக்காங்கங்கறா மாதிரி எங்க வட்டார மேலாளர்கிட்டா சொன்னீங்கன்னா ஒருவேளை இவர் இந்த விஷயத்தை மேல ரிப்போர்ட் பண்ணமாட்டார்னு நினைக்கிறேன். அவர் உங்கள சந்தேகப்படறாமாதிரி வச்சிக்காதீங்க. அப்புறம் நீங்க இதுவரை நம்ம பேங்க்ல எடுத்திருக்கற எல்லா லோனையும் க்ளோஸ் பண்ண சொன்னாலும் சொல்வார். அதோட இனி உங்களுக்கு எந்த லோனும் கொடுக்கக்கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிருவார். என்ன சொல்றீங்க?’ என்றேன்.

இருவரும் உடனே என்னுடன் என் அறைக்குள் வந்து வட்டார மேலாளரிடம் நான் கூறியபடி கூற அவர் என்னை சந்தேகத்துடன் பார்த்தார். ‘என்ன ஜோச·ப் are these people telling the truth, or are you colluding with them to avoid the police complaint? (என்னுடைய வட்டார மேலாளரை பற்றி ஒரு வார்த்தை. இவருக்கும் என்னை இந்த கிளைக்கு மேலாளராக பரிந்துரைத்த என்னுடைய முதல் மேலாளருக்கும் இடையில் ஏதோ ஒரு ஈகோ பிரச்சினை. நான் அவருடைய சிஷ்யன் என்ற விதத்தில் என்னை எப்படியாவது குற்றப்படுத்தி தண்டனை பெற்றுத் தருவதில் குறியாயிருந்தார் என்று சில வாரங்கள் கழித்து எனக்கு தெரியவந்தது. இவரே பிறகு ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு பதவியிறக்கப்பட்டார். அவர் ஓய்வுபெற்று பத்து வருடங்களாகின்றன.)

என் மனதில் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அவரை பார்த்தேன். ‘Sir, these two are officer bearers in the local Pawnbrokers’ association. You can believe them.’ என்றேன்.

‘How do you know them? Do they have any account with us?’ இந்த விஷயத்தை அவர் அவ்வளவு எளிதாக விடமாட்டார் என்று தோன்றியது.

‘Yes Sir, right from the inauguration of this branch they are dealing with us. If you want I can show you the details of their past records.’ என்றேன்.

அப்படியும் திருப்தியடையாமல் எங்கள் மூன்று பேரையும் மாறி, மாறி பார்த்தார். பிறகு, ‘ஓகே. Let them go and remit the amount. But you should locate the original borrower and take an explanation in writing and forward to me along with your clarifications as to how it happened.’

‘சரி சார்.’ என்றேன்.

அத்துடன் திருப்தியடைந்தவராய் வந்ததற்கு பேருக்கு வேறு சில கணக்குகளையும் பரிசோதித்துவிட்டு என்னுடைய உதவி மேலாளரையும் கவனமாய் இருக்கவேண்டும் அறிவுறுத்திவிட்டு மாலையில் விடைபெற்று சென்றபிறகுதான் தலைக்கு வந்தது தலைப்பாயோடு போச்சு என்றிருந்தது.

ஒரு வாரத்திற்கு பிறகு கோடம்பாக்கத்திலிருந்த வேறொரு வங்கியிலும் அதே பான் புரோக்கர் வைத்திருந்த அடகு நகைகள் போலி என்று கண்டுபிடிக்கப்பட அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவன் கைது செய்யப்பட்டு லோக்கல் பத்திரிகைகளில் எல்லாம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அடுத்த நாள் காலையிலேயே என்னுடைய வங்கியின் சேர்மனிடமிருந்து தொலைபேசி வந்தது..

இப்பத்தான் ஒரு தலைவலி தலைப்பாயோடு போச்சின்னு நினைச்சிருந்தா இதோ வரேன் என்று இன்னொரு தலைவலி வந்தது தொலைப்பேசி வழியாக..


தொடரும்

29 November 2005

(50) திரும்பிப் பார்க்கிறேன் - 24

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. 'ரொம்ப முக்கியம்!' அப்படீன்னு நீங்க முனகுவது கேட்கின்றது. ஏதோ சொல்லணும்னு தோனிச்சி. சொல்லிட்டேன். 23/09/05 அன்னைக்கி 'நண்பனே, நண்பியே'ன்னு ஆரம்பிச்சது. இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இனியும் போறதுக்கு எவ்வளவோ தூரம் இருக்கு.

இப்ப என் பதிவுக்கு செல்வோம், வரீங்களா?

என் வங்கி கிளை தினமும் காலை 8.45 மணிக்கே துவங்கிவிடும். அன்று நான் அலுவலகத்தினுள் நுழைந்தபோது மணி காலை 10.00.

என் அறைக்கதவை திறந்த நான் என் வட்டார மேலாளரைக் கண்டு அதிர்ந்துபோனேன். நான் என்ன நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.

வட்டார மேலாளர், அவருடைய வட்டாரத்திலுள்ள கிளைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை விசிட் செய்து மத்திய அலுவலகத்திலிருந்து அவ்வப்போது இடும் நடைமுறை விதிகளை கிளைகள் சரிவர கடைப்பிடிக்கின்றனவா என்று ஆய்வு நடத்துவது வழக்கம். ஆனால் என்னுடைய கிளை திறக்கப்பட்டு மூன்று மாதங்களே கடந்திருந்தன. ஆகவே அவருடைய விசிட் கண்டிப்பாய் வழக்கமான (Routine) விசிட் அல்ல, நேற்று நடந்த விஷயத்தை எப்படியோ கேள்விப்பட்டுத்தான் முன்னறிவிப்பில்லாமல் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

என்னுடைய அதிர்ச்சியை ஒரு நொடியில் மறைத்துக்கொண்டு புன்னகையுடன் ‘வாங்க சார். குட்மார்னிங்.’ என்றேன். அவர் பதில் வணக்கம் தெரிவிக்காமல் மிகவும் சீரியசாக, ‘என்ன மிஸ்டர் ஜோசஃப் தினமும் இந்த நேரத்துக்குத்தான் ஆஃபீசுக்கு வருவீங்களா?’ என்றார்.

என்ன சொல்வது? நான் எங்கே போயிருப்பேன் என்று என்னுடைய உதவி மேலாளருக்கு தெரியும். நேற்று வீட்டுக்கு செல்லும்போதே அவரிடம் சொல்லிவிட்டுத்தான் போயிருந்தேன். ஆனால் அவர் இவரிடம் என்ன கூறினார் என்று எனக்கு தெரியாததால் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நின்றேன்.

‘சொல்லுங்க ஜோசஃப். அந்த Pawn Brokerஐ பாத்தீங்களா? என்ன சொன்னார்?’ என்றவரை ஒரு நொடி பார்த்தேன் ஒன்றும் கூறாமல்.

‘என்ன ஜோசஃப், இவருக்கு எப்படி தெரியும்னு பாக்கறீங்களா?’

‘இல்ல சார். நானே இன்னைக்கி ரிப்போர்ட் பண்ணலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.’

அவர் இன்னும் திருப்தியடையவில்லை என்பது அவருடைய இறுகிய முகத்திலிருந்தே தெரிந்தது. நான் என்னுடைய இருக்கையில் அமராமல் நின்றுகொண்டிருந்ததை பார்த்தவர் என் இருக்கையை நோக்கி சைகை செய்தார். நான் அமரும்வரை பொறுத்திருந்தவர், ‘இதுதான் உங்களுக்கு முதல் கிளை, ஆஸ் எ பிராஞ்ச் மானேஜர், இல்லையா?’ என்றார்.

‘யெஸ் சார்’ என்றேன் அவர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பத்துடன்.

‘இருந்தாலும் நீங்க இதுவரை மெட்ரோ ப்ராஞ்சஸ்ல அதுவும் சீனியர் ஆஃபீசர்ஸ்ங்க கீழத்தான் ஒர்க் பண்ணியிருக்கீங்க, இல்லையா?’

‘ஆமாம் சார்.’

‘அப்படியிருந்தும் எப்படி உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பேசிக் ப்ரொசீஜர் கூட தெரியாம போச்சி?’

என்ன சொல்ல வரார் இவர்? என்னுடைய குழப்பம் என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும்.

‘உங்க அசிஸ்டெண்ட் இன்எக்ஸ்பீரியன்ஸ்டுன்னு தெரிஞ்சும் எப்படி நீங்க அவரை இவ்வளவு பெரிய கடனை நீங்க இல்லாத நேரத்துல appraise பண்ண சொல்லலாம்? சரி, செஞ்சீங்க. நீங்க என்ன பண்ணியிருக்கணும்? திரும்பி வந்தவுடனே அவர் எடுத்த நகைகளை செக் பண்ணியிருக்கணும். அதுவும் செய்யலை. If you had done that, you could have found out that they are spurious and initiated recovery action without much loss of time. Not only that, you did not report either to me or to our Head Office when you realised that you would not be able to recover the amount before the end of the day. What should I infer from your actions Joseph? Can I infer that you purposely tried to conceal this from higher authorities?'என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.

அவர் கூறியதெல்லாம் முற்றிலும் சரி. இதற்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? மவுனமாய் நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

‘இதுக்கு என்ன சொல்ல போறீங்க ஜோசப்? ஷால் ஐ புட் திஸ் இன் மை ரிப்போர்ட்? டோன்ட் யூ நோ தட் இட் மைட் அஃபெக்ட் யுவர் கேரியர் ஆஸ் எ மேனேஜர்?’

‘ஐ நோ தட் சார். பட்..’

‘ஒகே. லெட் அஸ் கீப் தட் அசைட் ஃபார் எ மோமென்ட். சொல்லுங்க, அந்த Borrowerஐ ட்ரேஸ் பண்ணீங்களா?’

அன்று காலையில் அந்த பான் புரோக்கரை சந்தித்த விஷயத்தை சுருக்கமாக சொன்னேன். அவருடைய கோபம் இன்னும் அதிகரித்தது.

‘How can you be so stupid Joseph? Who gave you the authority to give him two more days? Call the Police and report the incident. NOW!' அவருடைய குரல் உயர்ந்து அறைக்கு வெளியே இருந்து என்னுடைய உதவி மேலாளரும் ஊழியர்களும் எங்களைப் பார்ப்பது தெரிந்தது.

காவல்துறையினரிடம் புகார் செய்துவிட்டால் பணத்தை திருப்பிப் பெற வழியேயில்லாமல் போய்விட வாய்ப்புண்டு. மேலும் அன்று பிரபலாமாயிருந்த 'நாத்திகம்' பத்திரிகை அலுவலகமும் அருகிலேயே இருந்ததால் விஷயம் காவல்துறையினரின் வழியாக பத்திரிகையினருக்கும் தெரிந்துவிட வாய்ப்புண்டு. இதை இவரிடம் எப்படி விளக்குவதென தெரியாமல் குழம்பி போய் நின்று கொண்டிருந்தேன்.

அந்த நேரம் பார்த்து அன்று காலையில் நான் சந்தித்த பான் புரோக்கரும் அவருடைய சகோதரரும் அலுவலகத்தினுள் நுழைவதை பார்த்தேன்.

தொடரும்.

(49) திரும்பிப் பார்க்கிறேன் - 23

என்னையே பார்த்துக்கொண்டு நின்ற என் மனைவியைப் பார்த்ததும் ஒரு விநாடி எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனேன். பின்னர் சுதாரித்துக்கொண்டு ‘என்ன’ என்று என் புருவங்களை உயர்த்தினேன்.

‘ஒன்னுமில்லை’ என்று தலையசைத்துவிட்டு செய்துகொண்டிருந்த வேலைக்கு திரும்பினார் என் மனைவி. ‘அப்படா’ என்றிருந்தது எனக்கு.

அதுதான் என் மனைவியுடைய ஸ்பெஷாலிட்டி. நானாக எந்த ஒரு விஷயத்தை சொல்லும்வரை துருவி துருவி கேட்கும் சுபாவம் அவருக்கு இல்லை. இன்றும் அப்படித்தான். என்னுடைய அலுவலக விஷயங்களை வீட்டில் டிஸ்கஸ் செய்யக்கூடாது என்பது எனக்கும் என் மனைவிக்கும் இடையேயுள்ள எழுதாத ஒரு ஒப்பந்தம்.

இப்போதும் வீட்டிற்குள் நுழைந்தவுடனே அலுவலக பிரயாசைகளை மறந்து என்னால் ரிலாக்ஸ் செய்ய முடிகிறதென்றால் அதற்கு என்னுடைய மனைவியின் இந்த நல்ல குணமும் ஒரு காரணம்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு செல்லும் வழியிலேயே முதல் வேலையாக அந்த பான் புரோக்கரின் வீட்டுக்கு சென்றேன். வீட்டு வாசலிலேயே அமைந்திருந்த அவருடைய கடையில் அவரும், அவருடைய மூத்த சகோதரரும் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் நான் நிம்மதியடைந்தேன். இன்று இவ்விஷயத்துக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்ற நிம்மதி.

ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கினேன். அவர்கள் இருவருடைய முகத்திலும் ஏதோ ஒரு குழப்பம் தென்பட்டதுபோல் தோன்றியது எனக்கு. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல், ‘என்ன சேட் இப்படி பண்ணீட்டீங்க? நீங்க சொன்னீங்கன்னுதான் அவருக்கு லோன் குடுத்தேன்.’ என்றேன்.

அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லாமல் ‘முதல்ல உக்காருங்க சார். சொல்றேன்.’ என்றவாறு தன் சகோதரனை ‘நீங்க சொல்லுங்க’ என்பதுபோல் பார்த்தார்.

‘என்ன சேட், ஏதாவது ப்ராப்ளமா? ஏதாயிருந்தாலும் சொல்லுங்க.’ என்றேன் இருவரையும் பார்த்து.

‘சார்.. உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் நேத்தைக்கி ராத்திரி தம்பி வந்தவுடனே உங்களுக்கு போன் பண்ணலை.. அந்த ஆளு தம்பியவே ஏமாத்திட்டான் சார்.’ என்று இழுத்தார் சேட்டின் சகோதரர்.

‘என்ன சார் சொல்றீங்க? எனக்கு விளங்கலை.’

‘நம்ம தோஸ்த்து தலைமறைவாயிட்டான் சார். இப்பத்தான் தெரியுது அவன் எங்க பான் புரோக்கர் சங்கத்துலருக்கற நிறைய ஆளுங்கள நிறைய பாங்குகள்ல இதுமாதிரி ரெக்கமண்ட் பண்ண சொல்லி முலாம் பூசுன நகைகள அடகு வச்சி ஏமாத்தியிருக்கான் சார். அந்த விஷயம் நேத்து பகலுக்கு மேல தற்செயலா எங்க சங்க ஆஃபீஸ்க்கு போயிருந்தப்போதான் எனக்கு தெரிஞ்சிது சார். அதான் நேத்தைக்கு சாயந்திரம் முழுசும் நானும் எங்க சங்கத்து ஆளுங்களும் அவன எப்படியாவது பிடிச்சிரலாம்னு ராத்திரி பதினோரு மணி வரைக்கும் தேடினோம். கிடைக்கவேயில்லை.. மாதச்சோத் (ஹிந்தியில் கெட்ட வார்த்தை) எஸ்கேப் ஆயிட்டான். இப்ப என்ன செய்யறதுன்னு தெரியலை..’

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் சிறிது நேரம் அவர்கள் இருவரையுமே மாறி, மாறி பார்த்தேன்.

‘இது நல்லால்லை சேட். உங்களுக்கு உதவ போய் நம்ம அசிஸ்டென்ட் மானேஜர் மாட்டிக்கிட்டார். அவர் பாவம் எங்கருந்து பணத்த கட்டுவார்? நான் சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க சேட். போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்றப்போ நீங்கதான் அவரை அறிமுகப்படுத்தினீங்கன்னு சொல்ல வேண்டியிருக்கும். அப்புறம் உங்க இஷ்டம்.’ என்றேன்.

உடனே இருவரும் பதறிக்கொண்டு என் கையைப் பிடித்தனர். ‘சார் அவசரப்பட்டு ஏடாகூடமா அந்த மாதிரி எதுவும் பண்ணிராதீங்க. அப்புறம் நான் இந்த ஏரியாவுலேயே பிசினஸ் பண்ணமுடியாது. எனக்கு ரெண்டே, ரெண்டே நாள் டைம் குடுங்கோ. அந்த மாதச்சோத் எந்த ஊர்லருந்தாலும் கண்டு பிடிச்சி உங்க முன்னால கொண்டுவந்து நிறுத்தறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க.’

எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அந்த பான்புரோக்கர் பெயரில் பத்துக்கும் மேல்பட்ட நகைக்கடன் என் கிளையிலிருந்து கொடுத்திருக்கிறேன். அவற்றுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளின் மதிப்பே மூன்று லட்சத்துக்கு மேல் இருக்கும். எப்படியும் இவர் என்னிடமிருந்து தப்பிக்க முடியாதென்று அவருக்கும் தெரியும். விட்டுப் பிடிக்கலாம். பணம் எங்கும் போய்விடாது.

ஆனால் ஒரு பிரச்சினை. இன்றைக்குள் பணத்தை ரிக்கவர் செய்யாவிட்டால் என்னுடைய தலைமயகத்துக்கு அறிவிக்கவேண்டியிருக்கும். அதன் பின் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே பயமாயிருந்தது. ஆனால் வேறு வழியில்லை. நானாக அறிவிக்காமலிருந்து வேறு வழியாய் தெரியவருவதைவிட இது மேல் என்றதான் தோன்றியது.

‘சரி சேட். நீங்க கேட்டாமாதிரி ரெண்டு நாள் வெய்ட் பண்றேன். ஆனா ஒன்னு. நீங்க இப்ப சொன்னதை எழுத்துல தரணும். இல்லன்னா ரெண்டு நாள் கழிச்சி நான் போலீசுக்கு போனா போலீசும் சரி, எங்க H.Oவும் சரி ஒத்துக்க மாட்டாங்க. அநாவசியமான கேள்வியெல்லாம் வரும், சொல்லிட்டேன். என்ன சொல்றீங்க?’ என்றேன்.

‘சார் அதெல்லாம் வேணுமா. நான் வாக்கு குடுத்தா போறாதா?’ என்றார் இளைய சேட்.

‘போறாது சேட். என்னோட நிலைமையையும் நினைச்சி பாருங்க. ஏமாத்துவேலைன்னு தெரிஞ்சவுடனே ஏன் சார் எங்க கிட்ட ப்ராது குடுக்கலைன்னு போலீஸ் கேட்டா இவர்தான் ரெண்டு நாளைல பணத்த கட்டிர்றேன்னு சொன்னார்னு உங்கள காமிக்கலாம் இல்ல? அதுக்காகத்தான். நான் சொல்றா மாதிரி நீங்க எழுதி தந்தாத்தான் என் பொசிஷன் சேஃபாயிருக்கும். வேற வழியில்ல சேட்.’ என்று நான் பிடிவாதமாய் சொல்ல அவர்கள் இருவரும் அரைமனதுடன் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர்.

நான் அதை பெற்றுக்கொண்டு வங்கியை அடைந்தபோது அங்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது!


தொடரும்

26 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 22

‘மனைவிக்கு தெரியாமல் நகைகளை எடுத்து இந்த காரியத்துக்கு உபயோகிப்பது சரியா?’ என்று வீட்டிலிருந்து திரும்பி அலுவலகத்துக்கு செல்லும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வந்தேன்.

‘சரியில்லைதான். ஆனா இதற்கு வேறு வழியில்லை.’ என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். இதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது? நாளைக்கி அந்த ஆளை பிடிச்சிரமுடியாதா? அதுக்கப்புறம் ஒன்னு வேற நகைகளை கொண்டுவா இல்லன்னா பணத்தை செலுத்தி கணக்கை முடித்துவிடு என்று சொல்லவேண்டியதுதானே? இதிலென்ன சிக்கல் வந்துவிடப்போகிறது? என்று ஓடியது என் எண்ணம்.

அலுவலகத்தை அடைந்ததும் நான் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறேன் என்பதை என்னுடைய உதவி மேலாளரிடம் சொன்னேன். அவரர் நான் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாயிருந்து விட்டு நான் முடித்ததும். ‘சார். நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?’ என்றார் தயங்கியவாறு.

‘தயங்காம சொல்லுங்க. இதுல உங்களுக்கு பாதிப்பு வராம நான் பாத்துக்கறேன்.’ என்றேன்.

‘உங்க மனைவியோட நகையை வச்சி இந்த கணக்கை Close பண்ணலாம்னு சொல்றீங்களே. அதுக்கப்புறம் அந்தாள் மேல ஆக்ஷன் எப்படி எடுக்கமுடியும்? அந்த ஆள் ஏதாவது வில்லங்கம் பண்ணி போலீஸ் ஆக்ஷன் எடுக்க வேண்டி வந்தா உங்க பேங்க்ல இருந்த கணக்கைத்தான் க்ளோஸ் பண்ணியிருக்கேன்னு போலீஸ் கை கழுவிட்டா?’ அவர் கூறியதில் இருந்த நியாயம் என்னை ஒரு விநாடி சிந்திக்கவைத்தது.

‘சரி. இப்ப என்ன பண்ணலாம், சொல்லுங்க?’ என்றேன். ‘இந்த விஷயம் H.O.க்கு தெரியாம செய்யணும். அதுக்கு என்ன வழி?’

அவர் சிறிது நேரம் யோசனையுடன் என்னை பார்த்தார்.

‘சும்மா சொல்லுங்க. நான் என்ன நினைப்பேன்னு யோசிக்காதீங்க.’ என்றேன்.

‘சார் இத H.O.வுக்கு ரிப்போர்ட் பண்ணாம சால்வ் பண்ண முடியாதுன்னு நான் நினைக்கறேன், சார். அப்படி செஞ்சா பின்னால நாம தப்பு செய்ததுமில்லாம செஞ்ச தப்ப ரிப்போர்ட் பண்ணாம மறைச்சிட்டோம்னு ஒரு என்க்வயரி வர்றதுக்கு சான்ஸ் இருக்கு.. அதனாலதான் சொல்றேன். எல்லாத்தையும் யோசிச்சி முடிவு எடுக்கலாம்.’என்றார்.

அவருடைய வாதத்தில் உண்மையிருந்தாலும் H.O.வுக்கு ரிப்போர்ட் செய்தாலும் நிச்சயம் இதைவிட பெரிய பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்க்வயரி என்று வந்தால் அடகு வைத்த நகைகளை யார் Appraise செய்தது என்று கேள்வி வரும். உதவி மேலாளர் என்று தெரிந்தால் அவருடைய கையிலிருந்து முழுப்பணத்தையும் வசூலிப்பதுடன் அவருக்கு தண்டனை வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதை அவரிடம் எப்படி சொல்வதென்று சில விநாடிகள் யோசித்தேன். வேறு வழியில்லை, அவருக்கு தெளிவாக எதற்காக மேலிடத்துக்கு தெரிவிக்க தயங்குகிறேன் என்று எடுத்து சொன்னேன்.

நான் சொன்னதின் உள்ளர்த்தத்தை புரிந்துகொண்ட அவர் என்னை கண்களில் நிறைந்த நன்றியுடன் என்னைப் பார்த்தார். ‘சார் உங்களுக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை.. என்னை காப்பாத்துறதுக்காக நீங்க உங்க மனைவியோட நகைகளை வச்சி.. வேண்டாம் சார். என்னுடைய கவனக்குறைவினாலதான் இந்த பிரச்சினை வந்தது.. என்னை காப்பாத்த போய் வேற ஏதாவது பிரச்சினையில நீங்க மாட்டிக்காதீங்க.. நாம இந்த கணக்கை க்ளோஸ் பண்ணிட்டு H.O.விலருந்து மறைச்சி அது வேற வழியா அவங்களுக்கு தெரியவந்திச்சினா பின்னால உங்களுக்கும் பிரச்சினையாயிடும். நாம பேசாம இன்னைக்கி Cash Close பண்ணிருவோம். நாளைக்கி ரிக்கவர் பண்ண முடிஞ்சா ரெகுலரைசைசேஷன் ரிப்போர்ட்டுன்னு ஒரு டீடெய்ல்ட் ரிப்போர்ட் அனுப்பிரலாம். இல்லன்னா வர்றது வரட்டும் சார். லெட் அஸ் நாட் காம்ப்ளிகேட் திங்க்ஸ்.’ என்றார் உறுதியுடன்.

நானும் அவர் சொல்வது சரி என்ற முடிவுக்கு வந்தேன். அன்றைய அலுவல்கள் முடிந்ததும் அலுவலகத்தை பூட்டிவிட்டு உதவி மேலாளரும் நானும் மீண்டும் அந்த பான் புரோக்கர் வீட்டுக்கு சென்றோம்.

அப்போதும் அவர் வீடு திரும்பியிருக்கவில்லை. அவருடைய மூத்த சகோதரர் (அவர் தனியாக வடபழனியில் கடை வைத்திருந்தார்) இருந்தார். அவர் நான் கூறியதை முழுவதும் கேட்டுவிட்டு, ‘சார் அம்மா நீங்க வந்து போனத சொன்னாங்க. என் தம்பியோட ஃப்ரெண்ட் யாருன்னு தெரியலை. இருந்தாலும் வொர்ரி பண்ணாதீங்க. ராத்திரி என்நேரமானாலும் தம்பி வந்ததும் உங்க வீட்டுக்கு போன் பண்றேன். அந்த ஆள்கிட்டருந்து பணத்தை திருப்பி வாங்கிரலாம். அதுக்கு நான் காரண்டி.’ என்றார்.

நான் உதவி மேலாளரை பார்த்தேன். அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லையென்பதை உணர்ந்தேன்.

‘குழப்பல்யா.. சரியாக்காம். தான் வீட்ட போய்ட்டு சுகாயிட்டு ஒறங்கு. நாள நோக்காம்.’ (கவலைப்படாதே. சமாதானமா வீட்டுக்கு போங்க. நாளைக்கி பாத்துக்கலாம்.) என்று மலையாளத்தில் அவரை சமாதானப்படுத்திவிட்டு நானும் மனதில் கலக்கத்துடன் வீடு திரும்பினேன். அலமாரியிலிருந்து எடுத்த லாக்கர் சாவியை எடுத்த இடத்திலேயே திருப்பிவைத்துவிட்டு திரும்ப நான் செய்வதையே பார்த்துகொண்டு நின்ற என் மனைவியைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.

தொடரும்.

25 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 21

‘சார் யாரை ஃபோன்ல கூப்பிடுறீங்க?’ என்றார் என் உதவி மேலாளர்.

‘இந்த ஆளை அறிமுகப்படுத்தினாரே அந்த Pawn Brokerஐ கூப்பிடறேன். We should make him responsible. இல்லன்னா அநாவசியமா நம்ம கைலருந்தில்ல போயிடும்? அதுவுமில்லாம இன்னைக்கி Cash Close பண்றதுக்குள்ள பணத்த ரிக்கவர் பண்ணலைனா Head Office க்கு வேற ரிப்போர்ட் பண்ணனுமே.’ என்றேன்.

எதிர்முனையில் தொலைப்பேசி அடித்துக்கொண்டேயிருந்தது. பதில் வரவில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி 5.10. இன்னும் அரை மணி நேரத்தில் அடகு வைத்தவரை பிடித்து பணத்தை வசூல் செய்தே ஆகவேண்டும். எனக்கெதிரே அமர்ந்திருந்த உதவி மேலாளரை பார்த்தேன். அவர் மிகவும் டென்ஷனாக இருந்தார். இவரை அனுப்பினால் காரியம் வெற்றியடையாதது மட்டுமல்ல குழப்பங்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நானே செல்வது என தீர்மானித்தேன்.

‘நான் ஒன்னு பண்றேன். இந்த நகைகளையெல்லாம் சேஃபில வச்சிட்டு நான் அந்த பான் புரோக்கர் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.. இடையில ஏதாவது ஃபோன் வந்தா நான் இன்னும் அரைமணியில வந்துருவேன்னு சொல்லுங்க.. Don’t Worry. Let us keep this secret. காஷியருக்குக் கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம். நான் திரும்பி வந்தப்புறம் Cash Close பண்ணா போறும். ஒரு கலெக்ஷனுக்கு போயிருக்கேன்னு மட்டும் காஷியர்கிட்ட சொல்லுங்க. நான் போன விஷயம் என்னாச்சின்னு ஃபோன் பண்றேன்.’ என்று அவரிடம் கூறிவிட்டு நான் கிளம்பினேன்.

அந்த பான் புரோக்கரின் வீடும் கடையும் ஒன்றாயிருந்தது எனக்கு தெரியும். வங்கியிலிருந்து கால்மணி நடை தூரத்திலேயே இருந்ததால் அவருடைய வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினேன். சிறிது நேரத்தில் கதவை திறந்த அவருடைய தாயார் (அவருக்கு என்னை தெரியும்) ‘என்ன சார் திடீர்னு? அவன் இல்லையே காலையிலேயே ஒரு ஃப்ரென்டு வந்தான்னு கூட்டிக்கிட்டு உங்க பேங்குக்கு வந்தான் இல்லே.. அதுக்கப்புறம் வீட்டுக்கு வரவே இல்லை சார்.’ என்றார்.

‘இதென்னடா சோதனை?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சாலையில் நின்று மேல்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன். இப்போதிருப்பதுபோல் கைத்தொலைபேசி வசதியில்லாததால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

சில நொடிகளில் அன்று நான் செய்யவேண்டியதை தீர்மானித்தேன். கையிலிருந்து பணத்தை செலுத்துவதை தவிர வேறு வழியில்லை.. இன்றைய கணினி யுகத்தில் அத்தகைய கடனே கொடுக்கப்படவில்லை என்று வங்கியின் பதிவுகளில் (Records) இருந்து அழித்துவிடமுடியும். ஆனால் அப்போது? எல்லாம் கைகொண்டு எழுதும் காலமாயிற்றே! எழுதப்பட்ட புத்தகங்களிலிருந்து சம்மந்தப்பட்ட பக்கத்தையும் கிழித்துவிட முடியாது. ஏனென்றால் எல்லா பக்கங்களும் வரிசையான எண்களைக் கொண்டவை..

அருகிலிருந்த கடையிலிருந்த தொலைப்பேசி வழியாய் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து விஷயத்தை சொன்னேன். ‘கையிலருந்து பணத்தை அடைக்காம வேறு வழியில்லை.. Do you have any cash with you?’ என்றேன்.

‘எவ்வளவு சார்?’

‘முழு கடன் தொகையான ரூ.25,000/- செலுத்த வேண்டும். அவ்வளவு பெரிய தொகை உங்கள் கணக்கில் இருக்கிறதா?’

‘இல்லையே சார். இப்ப என்ன பண்றது?’ அவருடைய குரல் நடுங்கியது. அவருக்கு வேலை நிரந்தரமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது. அந்த பயம் வேறு. திருமணமும் ஆகவில்லை. கேரள மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையும் அவ்வளவாய் தெரியாது.

‘டோன்ட் ஒர்ரி. நான் ஒன்னு பண்றேன். வீட்டுக்கு போயி என் ஒய்ஃபோட நகைகளை கொண்டு வரேன். மத்தத நாளைக்கு பாத்துக்கலாம். ஒரு அரைமணி நேரம் ஆகும். நான் வந்ததுக்கப்புறம் Cash Close பண்ணா போறும்.’ என்று அவருக்கு தைரியம் அளித்துவிட்டு என்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு விரைந்தேன்.

செல்லும் வழியெல்லாம் என் மனைவியிடம் இதை எப்படி சொல்வது என்ற சிந்தனைதான். எனக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளே ஆகியிருந்தன. என் மனைவியின் நகைகளெல்லாம் என்னுடைய வங்கியின் Safe Deposit Lockerல் தான் எப்போதும் இருக்கும். உறவினர், நண்பர் வீட்டு திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும் நேரங்களில் மட்டும் வெளியே எடுத்துவிட்டு அடுத்த நாளே திருப்பி வைத்துவிடுவது வழக்கம். வெறுமனே வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் லாக்கர் சாவியை எடுத்துக்கொண்டுபோய் நகைகளை எடுத்து இன்றைய அவசியம் முடிந்ததும் திருப்பி வைத்துவிடலாம் என்று என் சிந்தனை சென்றது.

அடுத்த நொடியே ‘வேண்டாம், மனைவியிடம் சொல்லிவிட்டு செய். ஏமாற்ற நினைக்காதே. எடுத்த நகையை திருப்பி வைக்க முடியாமற்போனல், பின்னர் வில்லங்கம்.’ என என் மனசாட்சி எச்சரிக்க என் மனைவியிடம் சொல்லிவிடலாம் என்று தீர்மானித்தேன்.

ஆனால் வீட்டை அடைந்ததும் மீண்டும் மனம் மாறி, அலமாரியிலிருந்த லாக்கர் சாவியை எடுத்துக்கொண்டு 'பேங்கலருந்து வர்றதுக்கு ராத்திரி லேட் ஆகும். அத உங்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.' என்று ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு வியப்புடன் என்னையே பார்த்த மனைவியை பொருட்படுத்தாமல் வெளியேறி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து வங்கிக்கு விரைந்தேன் இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை நினையாதவனாய்..

தொடரும்..

24 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 20

வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவது ஒரு கிளையின் மேலாளருடைய பிரத்தியேக பணியாகும்.

வங்கியினுடனான வாடிக்கையாளர்களுடைய வணிகத் தொடர்பு (Business relationship), அவருடைய வணிகத்தின் தற்போதைய நிலை ( Current Financial Status), அவருடைய கடன் பெறுவதற்கான தகுதி (Eligibility) ஆகியவற்றை மதிப்பிட்டு கடன் வழங்குவதற்கு மேலாளர்களுக்கு அவர்கள் மேலாளர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்பே பிரத்தியேக பயிற்சி ஒன்று அளிக்கப்படும்.

பெரிய கிளைகளிலுள்ள உதவி மற்றும் துணை/இணை மேலாளர்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவதுண்டு. என்றாலும் அவர்கள் கிளை மேலாளர் (Branch Manager) விடுப்பிலோ (On leave) அல்லது பணியின் காரணமாக கிளையை விட்டு (on official duty) வெளியே சென்றிருக்கும் சமயத்திலோ மட்டுமே அவர்கள் இப்பிரத்தியேக பணியை (கடன் வழங்குவது) ஆற்றுவார்கள். அப்போதும் கிளை மேலாளர் பணிக்கு திரும்பியதும் அவருடைய உதவியாளர்கள் வழங்கிய கடன்களின் தன்மையையும், உதவியாளர்கள் கடன் வழங்கும்போது கவனிக்க வேண்டிய அல்லது கடைபிடிக்கவேண்டிய நியதிகளையும் சரிவர கடைபிடித்தனரா என்பதையெல்லாம் ஆராய்ந்து குறைகள் இருப்பின் உடனே வட்டார அல்லது தலைமையலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு உண்டு.

ஆனால் என்னுடையதைப் போன்ற சிறிய கிளைகளில் அதுவும் புதிதாய் திறக்கப்பட்ட கிளைகளில் தங்க நகைகள் மீது கடன் வழங்குவது மட்டும் மேலாளருடைய தனிப்பட்ட பொறுப்பாகும். இருப்பினும் சில தவிர்க்க முடியாத சமயங்களில் அதாவது, அலுவலக பணியின் நிமித்தம் வணிக நேரத்தில் (Business Hours) வங்கியை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் சமயங்களில் இந்நியதியை தளர்த்தவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுண்டு.

அன்றும் அப்படித்தான்.

என்னுடைய கிளைக்கு அருகாமையில் கடை வைத்திருந்த Pawn Brokersல் ஒருவர் அவருடைய Pawn Broker நண்பர் ஒருவரை தங்க நகைகளின்மேல் கடன் பெற அழைத்து வந்திருந்தார்.

ஒரு முக்கியமான வாடிக்கையாளரை நான் சந்திக்க வேண்டி வெளியே சென்று வர புறப்பட்டுக்கொண்டிருந்தேன். எனவே என்னுடைய உதவி மேலாளரை அழைத்து அவருடைய தேவையை பூர்த்தி செய்யுங்கள் என்று கூறிவிட்டு வெளியே சென்று இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தேன்.

ஒவ்வொரு நாளும் இறுதியில் அன்றைய தினம் கடனளித்த எல்லா தங்க நகைகளையும் எடை, எண்ணிக்கை ஆகியவற்றை அதனதன் கடன் பத்திரங்களோடு (loan pledge forms) ஒப்பிட்டு பார்ப்பதுடன் நகைகளின் Purity ஐயும் நானும் என்னுடைய உதவி மேலாளரும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து வைப்பது வழக்கம்.

முதலில் நான் இல்லாத நேரத்தில் என்னுடைய உதவி மேலாளர் வழங்கிய கடன்களுக்கு அடகு வைத்திருந்த நகைகளை சரிபார்க்கலாம் என்று அவரையும் அழைத்து ஒவ்வொரு நகையாக பரிசோதிக்க ஆரம்பித்தோம்.

முதல் மூன்று நான்கு நகை கடன் கணக்குகளை சரிபார்த்துவிட்டு கடைசியாக - அதாவது நான் வெளியே இறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வந்தவரின் - கொடுக்கப்பட்ட கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளை சரிபார்க்க ஆரம்பித்தேன்.

கடன் தொகை ரூ.25,000/-. இரண்டு கெட்டி வளையல்களும், இரண்டு நால்வரி (Four line Chain) மாலைகளும் என்று நினைக்கிறேன். மாலைகளை உரைத்து பார்த்ததில் மாற்று சற்றே குறைவாயிருந்தது. பிறகு வளையல்களை எடுத்தேன் .

சாதாரணமாக வளையல்களை உரைப்பதற்கு முன் உள்ளங்கையில் வைத்து வளைகிறதா என்று விரல்களால் அழுத்தி பார்ப்பது வழக்கம். அசல் தங்கம் என்றால் உடையாமல் ஒரு Spring Reaction இருக்கும். மாற்று குறைவாயிருந்தால் வளைந்துபோகுமே தவிர உடையாது. பிறகு வளையலை உரை கல்லில் தட்டி பார்ப்போம். தங்க வளையல்கள் ணங், ணங், என்ற ஒலியெழுப்பும். இல்லையென்றால் தக், தக் என்ற ஒலி வரும். இது பயிற்சி வகுப்பில் கற்றுக்கொண்ட அடிப்படை பாடம். உரைகல்லின் மாதிரியை கீழே படமாக கொடுத்திருக்கிறேன். (கூகுள் தேடுதல் என்ஜினின் கைங்கரியம்)

Image hosted by Photobucket.com

இந்த இரண்டு வளையல்களையும் வளைக்க முயற்சித்தபோது உடையவில்லை. கல்லில் தட்டி பார்த்தபோதும் தங்க நகையின் ஓசையே வந்தது. இந்த இரண்டு பரிசோதனையிலும் திருப்தியடைந்து கடன் பெற்றவரும் வங்கிக்கு நன்கு அறிமுகமானவாயிருந்தால் அநாவசியமாக உரைத்து பார்க்க மாட்டேன். ஆனால் அன்று என்னவோ ஒரு சிறு சந்தேக பொறி தட்ட இரண்டையுமே உரைத்து பார்ப்பதென தீர்மானித்தேன்.

என் நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பரிசோதனையில் ஆசிட் ரியாக்ஷன் ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை. ஆனால் உரைத்த இடம் சட்டென்று கறுத்துப் போகவே இரண்டு வளையல்களையும் தனியே பிரித்தெடுத்து வைத்துவிட்டு அருகிலிருந்த நகைக்கடை உரிமையாளரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருடைய ஆசாரிகளுள் (Goldsmith) ஒருவரை உடனே அனுப்ப சொல்லி கேட்டேன். அவரும் எனக்கு நன்கு அறிமுகமானவராதலால் உடனே அனுப்பி வைத்தார்.

அவருடைய முதல் பார்வையிலேயே, ‘சார், உங்கள நல்லா ஏமாத்திட்டாங்க சார்..இது தங்கமே இல்ல.. நல்லா கெட்டியா தங்க முலாம் பூசியிருக்காங்க.. அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டார். சரி என்று மாலைகளை எடுத்து கொடுத்தேன். நான்கைந்து இடங்களில் பரிசோதித்துவிட்டு, ‘சார் படே கில்லாடிங்க சார். செயின்ல சில இடங்கள் மட்டும்தான் தங்கம். மற்றதெல்லாம் போலி. நீங்க உரைச்ச இடம் தங்கம்தான். அதான் நீங்க ஏமாந்துட்டீங்க.’ என்றார்.

எங்களுடைய கணக்குப்படி அந்த நகைகளில் இருந்த தங்கத்திற்கு சுமார் ரூ.5,000/- கொடுக்கலாம். உடனடியாக அடகு வைத்தவரை பிடித்து மீதமுள்ள தொகையை வசூலிக்காவிட்டால் எங்கள் இருவருடைய கையிலிருந்தும் அடைக்க வேண்டியதுதான்.

கடன் வழங்கியது காலை 11.00 மணி. இப்போது மணி மாலை ஐந்து. அடகு வைத்தவன் வேண்டுமென்றே செய்திருந்தால் இடைபட்ட ஆறு மணிநேரத்தில் பிடிபட காத்திருப்பானா என்ன?

‘இப்ப என்ன செய்யறது சார்? தப்பு என்மேலதான், நான் வேணும்னா பணத்தை கட்டிடறேன் சார்.’ என்று என்னுடைய உதவி மேலாளர் பதற்றமடையவே எனக்கும் அந்நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

உடனே அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து எனக்கு தெரிந்த ஒரு எண்ணை சுழற்றினேன்..


தொடரும்

22 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 19

நான் என்னுடைய வங்கியின் மும்பை கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய குமாஸ்தாக்களில் ஒருவர் காசோலைகளின் டோக்கனை மாற்றிக் கொடுத்ததன் விளைவாக ஏற்பட்ட குழப்பத்தை பற்றி எழுதியிருந்தேன்.

அதுபோன்ற ஒரு அசம்பாவிதம் கோடம்பாக்கம் கிளையில் இருந்த சமயத்திலும் நடந்தது.

என்னுடைய கிளை புதிய கிளையானதால் துவங்கிய முதல் வணிக வருடத்திலேயே (Financial Year April-March) லாபம் ஈட்டுவதற்கான ஒரே வழி முடிந்த அளவுக்கு கடன் வழங்குவதுதான்.

ஒரு வர்த்தகருக்கோ, தொழிலதிபருக்கோ கடன் வழங்குவதென்றால் அத்தனை சுலபமல்ல.

முதலில் அவர் வங்கியில் சுமார் ஒரு வருட காலத்திற்காவது கணக்கு வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல. அக்கணக்கில் அவர் செய்துவந்திருந்த வரவு-செலவுகள் திருப்திகரமானதாக இருந்திருக்க வேண்டும்.

அவர் வெளியாருக்கு அளித்திருந்த காசோலைகள் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி சென்றிருக்கலாகாது.. அவருடைய வர்த்தகம் குறைந்தது முந்தைய மூன்றாண்டுகள் லாபத்தில் இயங்கியிருக்க வேண்டும். வருமான வரி, தொழில் வரி, விற்பனை வரி என எல்லா ‘வரி’களையும் தவறாமல் செலுத்தியிருக்க வேண்டும்..

இப்படி பல கட்டுபாடுகள் உண்டு.

இவை எதுவும் இல்லாமல் கொடுக்க கூடிய ஒரே கடன் தங்க நகைகளுக்கு மீதான கடன்தான்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள வங்கி கிளைகளுக்கு பிற வணிக மற்றும் தொழில்களுக்கு கடன் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தங்க நகைகளின் மீது கடன் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் என்னுடைய கிளை புதிய கிளை என்பதால் என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து பிரத்தியேக அனுமதி எனக்கு கொடுக்கப்பட்டது..

இதற்கு வேறொரு காரணமும் உண்டு. என் வங்கி அமைந்திருந்த கோடம்பாக்கம், வட பழனி போன்ற இடங்களில் 1980களில் மிக அதிக அளவில் Pawn Brokers எனப்படுகிற தனியார்களால் நடத்தப்படுகின்ற தங்க நகைகளின் மேல் கடன் வழங்கும் நிறுவனங்கள் இருந்தன. இத்தகைய நிறுவனங்கள் இப்போதும் காணப்படுகின்றன என்றாலும் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்துவிட்டன.

தங்க நகைகளின் மேல் கடன் கொடுப்பது மிகவும் சிக்கலான காரியம். முதலில் தங்கத்தில் உள்ள சுத்த தன்மையை (Purity) கண்டுபிடிக்க வங்கி அதிகாரிகளுக்கு பிரத்தியேக பயிற்சி ஒன்றும் கொடுக்கப்பட்டதில்லை..

நகைகளை உரைத்து பார்க்க ஒரு சாணா கல்லும் (Touch Stone) ஒரு குப்பி nitric acid, துகள்களை ஒற்றி எடுக்க ஒரு மெழுகு (Wax) உருண்டையும் இருக்கும். தங்க நகைகளை கல்லில் உரைத்து அதன்மேல் அமிலத்தை லேசாய் வைத்ததும் சுர்ர்ர்ர்ர் என்று React செய்தால் அது போலி என கண்டுகொள்ளலாம் என்று மட்டுமே வங்கியின் பயிற்சி கல்லூரியில் சொல்லித்தருவார்கள்.

சொல்லித்தரும்போது பார்ப்பதற்கும் பயிற்சி முறையில் செய்து பார்க்கும்போதும் மிக எளிதாய் தெரியும். ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதல்ல. அதுவும் கடன் பெறுபவர் நமக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சமயத்தில் அவர்களுடைய நகைகளை கல்லில் தேய்த்து அமிலத்தை ஊற்றி பரிசோதிக்க தர்மசங்கடமாயிருக்கும்.

அதுவும் கோடம்பாக்கம் ஏரியா சினிமாக்காரர்களுக்கும், வெளியில் பணக்கார வேடம் கட்டி அலைவர்களுக்கும் பஞ்சமே இல்லை. பெரும்பாலும் என்னைப் போன்ற வங்கி அதிகாரிகள் கடன் வாங்க வரும் ஆட்களை வைத்துத்தான் நகைகளின் தரத்தையும் எடை போடுவோம்.

கடன் பெறுபவர் வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் ஒருவரால் சிபாரிசு செய்யப்பட்டிருந்தால் எந்தவித தயக்கமும் இன்றி கடன் கொடுத்துவிடுவது வழக்கம். நகைகளின் தரத்தை பிறகு சரிபார்த்துக்கொள்வோம். இல்லையென்றால் பிரச்சினைதான்.
பார்ப்பதற்கு எந்த வித்தியாசமுமில்லாமல் அசல் தங்கம் போலவே முலாம் பூசிய நகைகளை எந்தவித தயக்கமுமில்லாமல் பெரிய மனுஷ தோரணையுடன் அடகு வைக்க வருபவர்களும் உண்டு.

மற்றபடி You are left to your own instincts and luck. ஆமாங்க.. பெரும்பாலும் நம்முடைய யூகமும் நல்ல நேரம்தான் நம்மை காப்பாற்றும். நேரம் நல்லாயிருந்தா யூகமும் சரியாயிருக்கும். இல்லையென்றால் நம் யூகம் பொய்த்து நஷ்டம்தான்.

அப்படித்தான் நடந்தது எனக்கும்.

தொடரும்

21 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 18

ஆரம்பத்தில், வர்த்தக கணக்கில் வைக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் கூட வைக்க முடியாமல் தவித்த நாடார் சிறுக, சிறுக தன்னுடைய வர்த்தகத்தில் முன்னேற ஆரம்பித்தார்.

அவர் கடை இருந்த சுற்றுப்புரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் இருந்ததால் அவருடயை தவணைமுறை வர்த்தகம் எல்லோரையும் கவர்ந்தது. அவருக்கிருந்த அபிரிதமான பேச்சுத் திறமை அவருடைய வர்த்தகத்திற்கு மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. அவருடைய பேச்சுத்திறமையால் கவரப்பட்டு அவருடைய கடைக்கு மிக அருகிலேயே இருந்த மத்திய அரசு ஊழியர் காலனியில் குடியிருந்தவர்களில் பெரும்பாலோனர் அவருடைய வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.

என்னுடைய வங்கியில் இத்தகைய வீட்டுப் பொருட்களை வாங்க கடன் வழங்க பிரத்தியேக திட்டம் இருந்ததை ஒருநாள் அவரிடம் விளக்க, அடுத்த சில நாட்களிலேயே அவருடைய வாடிக்கையாளர்களுள் மத்திய அரசு ஊழியர்கள் சிலரை என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி அவர்களுக்கு இத்திட்டத்தில் கடன் கொடுக்க சிபாரிசு செய்தார்.

நாடார் கடையிலிருந்த வானொலி பெட்டி, டிரான்சிஸ்டர், ஸ்டீல் அலமாரி போன்ற வீட்டுப்பொருட்களை வாங்கும் அவருடைய வாடிக்கையாளர்களுக்கு பொருட்களின் விலையில் 75% என்னுடைய வங்கியிலிருந்த கடன் வழங்குவதென தீர்மானித்தேன்.

அந்த மத்திய அரசு ஊழியர்கள் காலனியும் என்னுடைய வங்கி கிளைக்கு அருகிலேயே இருந்ததாலும் நாடாரும் தவணைத் தொகையை வசூலிப்பதில் உதவி செய்ததாக உறுதியளித்ததாலும் காலனியில் வசித்தவர்களுள் அதிகாரி பதவியிலிருந்த சுமார் நூறு பேருக்கு தலா ரூ.5000/- வீதம் கடன் தருவதாக ஒரு பிரத்தியேக திட்டத்தை தயாரித்து என்னுடைய வட்டார அலுவலகத்திற்கு அனுப்பினேன். என்னுடைய வட்டார தலைவருக்கு திட்டம் திருப்தியளிக்கவே உடனே அனுமதி கிடைத்தது.

இத்திட்டத்தில் முதல் தவணையில் கடனுதவி பெற்ற அனைவரும் கடனைத் திருப்பி பெற நாடார் மிகவும் ஒத்துழைத்ததால் அவருடைய வணிகத்தை விரிவுபடுத்தவும் என்னுடைய கிளையிலிருந்து கடன் (Overdraft) வழங்கப்பட்டது.

நான் அக்கிளையிலிருந்து மாற்றம் பெற்று சென்றபோது நாடாருடைய வணிகம் கணிசமான அளவுக்கு வளர்ந்திருந்தது. அன்று நாட்டில் பிரபலாமாயிருந்த Dianora TV, Solidaire TV, Weston TV போன்ற தொலைக்காட்சி பெட்டிகள், மீனு மிக்ஸி, ரத்னா மின்விசிறி, கைத்தான் மின்விசிறி போன்ற வீட்டு உபயோக பொருட்களின் டீலர்ஷிப் எடுக்கத் துவங்கியிருந்தார்.

நான் சென்னையைவிட்டு மாற்றலாகிப் போய் சுமார் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்கு வட்டார அலுவலகத்துக்கு திரும்பி வந்த சமயம் நான் கனவிலும் நினைக்காத அளவுக்கு வளர்ந்திருந்தார். அவருடைய விரிவு படுத்தப்பட்ட கடையை கண்டு வியந்துபோனேன். ஆனால் அவர் மட்டும் நான் ஆரம்பத்தில் கண்டதுபோலவே எளிமையாய் இருந்தார். அவருடைய அந்த எளிமை இன்றுவரை தொடர்வதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் என்பது என்னுடைய அனுமானம்.

ஆனால் நாடார் ஒத்துக்கொள்ள மாட்டார். அயராத உழைப்புடன் அதிர்ஷ்டமும் தேவை என்று வாதிடுவார். இந்த அதிர்ஷ்டம் என்ற வார்த்தையில் எனக்கு அதிக நம்பிக்கையில்லை. ‘நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துத்தான் எங்க வீட்ல எதுவும் செய்வோம் சார், அதனால, உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் நீங்க எனக்கு முதல் முதலா கடன் வழங்கற நாள், நேரம் நல்ல நேரமாயிருக்கணும் சார்’ என்று நாடார் நிர்பந்தித்தபோது நான் ஏளனத்துடன் சிரித்தேன். இருப்பினும் அவருடைய வேண்டுகோளை தட்ட முடியாமல் சம்மதித்தேன். இச்சம்பவத்தை இன்றும் அவரை காணும்போதெல்லாம் அவர் என்னுடைய நினைவுக்கு கொண்டுவருவார்.

மேலாளர் பதவி வகித்த கடந்த இருபதாண்டு காலத்தில் நான் மேலாளாரக பணியாற்றிய கிளைகளில் இருந்து கடனுதவி பெற்றவர் பலர். ஆனால் நாடார் போன்ற ஒரு சிலரே அபிரிமிதமான வெற்றி பெற்றுள்ளனர்.

தோல்வி பெற்றவருள் ஒரு சிலரே தவறான வர்த்தகம், தொழில் இவற்றில் முதலீடு செய்தனர். சிலர் ஒழுக்கமின்மை, பொறுப்பின்மை, தவறான அணுகுமுறை, குறைவான சொந்த முதலீடு போன்றவற்றால் தோல்வியடைந்திருக்கலாம். பலருடைய விஷயத்தில் அவர்கள் தெரிந்தெடுத்த வணிகமோ, தொழிலோ சரியானதாயிருந்தும் தேவைக்கும் மேல் முதலீடு செய்திருந்தும் வர்த்தகத்தில்/தொழிலில் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு நடுவீதிக்கு வந்திருக்கின்றனர்.

ஏன், எதனால்? என்னால் முடிந்தவரை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இதுவரை பதில் கிடைக்கவில்லை. ஒருவேளை இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் துணை இல்லாததுதான் காரணமாயிருக்குமோ?

தொடரும்

19 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 17

எம்.ஜி.ஆரை பற்றி எழுதியது போதும் என்று நினைக்கிறேன்..

இனி நம்ம விஷயத்த பாத்துக்கிட்டு போவோம்..

வங்கிகளுடைய தலையாய தொழில் வாடிக்கையாளர்களிடமிருந்து சேமிப்பு தொகைகளைப் பெறுவதும் அவற்றை லாபகரமான வழிகளிலே தேவைப்படுவோருக்கு கடனாய் கொடுப்பதுமே.. (Accepting and Lending Money)

வட்டியாய் கிடைக்கின்ற தொகையிலிருந்து வட்டியாய் கொடுத்த தொகை போக (Interest received minus Interest paid) கிடைக்கும் தொகைதான் வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம். அதிலிருந்துதான் அவர்களுடைய எல்லா இதர செலவுகளையும் (Administrative expenses) பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் எல்லா சேமிப்பு பணத்தையும் கடனாய் கொடுத்துவிட முடியாது..

வாடிக்கையாளரிகளிடமிருந்து வட்டிக்கு பெறப்படும் தொகையில் (நூறு ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்) அதிக பட்சம் 60% இருந்து 70% வரையே கடனாய் வழங்க முடியும். மீதமுள்ள தொகையில் 5% வரை ரொக்கமாக ரிசர்வ் வங்கியில்(Cash Reserve)வைத்திருக்க வேண்டும். மீதியை (25%)மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களிலில்(Govt. Bonds) முதலீடு செய்ய வேண்டும் (Liquid Securities)

இந்த நிபந்தனைக்கு என்ன காரணம்?

வங்கிகள் கொடுக்கும் கடனெல்லாம் முழுவதுமாக திரும்பி வராது என்பதை என்னுடைய நேற்றைய பதிவில் கோடிட்டு காட்டியிருந்தேன். நூறு பேருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சம் கடன் கொடுத்ததில் வட்டியுடன் திருப்பி அடைக்கப்பட்டது சுமார் பத்து சதவிகிதமேயாகும். அப்படி திரும்பி வாரா கடனைத்தான் வங்கி பாஷையில் என்.பி.ஏ (Non performing assets) என்கிறோம்.

அப்படி ஒரு வங்கியின் பெருமளவு கடன்கள் வாராக்கடன்களாகி அவ்வங்கியின் வாடிக்கையாளர்களுடைய சேமிப்பை திருப்பித்தர முடியாத நிலைக்கு தள்ளப்படுமானால் அவ்வங்கி அரசாங்க கடன் பத்திரங்களை விற்று பணமாக்கி அவர்களுடைய சேமிப்பை திருப்பித்தர வேண்டும்என்பது நம் நாட்டில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் உள்ள ஒரு பொதுவான நியதி.

நல்ல கடன்களில் (Performing Assets) இருந்து கிடைக்கப் பெறும் வட்டித்தொகையைக் கொண்டே இதுபோன்ற வாரா கடன்களை எழுதி தள்ளுகின்றன வங்கிகள். இப்படி ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை ஆயிரம் கோடிகளை தாண்டுகிறது என்கிறது நம் ரிசர்வ் வங்கியின் ஒரு அறிக்கை!

வாரா கடன்களின் பின்னணி என்ன?

வங்கிகளில் இருந்து கடனாக பெற்ற தொகையை தங்களுடைய நியாயமான, நன்கு பழக்கமுள்ள, வணிகத்தில் (Trade) முதலீடு செய்யாமல் தங்களுக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வணிகத்தில் அல்லது தொழிலில் (Industry) முதலீடு செய்து முழுப்பணத்தையும் - அதாவது தங்களுடைய முதலீடு மற்றும் வங்கிகளிலிருந்து கடனாய் பெற்ற கடன் - இழந்துவிட்டு நடு வீதிக்கு வந்த வணிகர்கள், தொழிலதிபர்கள் எத்தனையோ பேர்.

என்னுடைய வங்கி மேலாளர் அனுபவத்தில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைப் பார்த்திருக்கிறேன். பலருக்கு கடனளித்து உதவியும் செய்திருக்கிறேன். அவர்களுள் பலரும் கடனாய் கிடைத்ததை தங்களுடைய வணிகத்தில் முடக்கி கணிசமான லாபம் ஈட்டி அதீத வளர்ச்சி பெற்றுள்ளனர். வேறு சிலர் நான் மேலே கூறியுள்ளதுபோல் வகைதெரியாமல் வணிகம் செய்து மஞ்சள் கடுதாசி (Insolvency) கொடுக்கும் அளவுக்கு நலிந்துபோயிருக்கின்றனர் என்பதையும் மறுக்கவியலாது.

இன்றைய பதிவில் என்னுடைய கிளையிலிருந்து (கடந்த ஐந்தாறு பதிவுகளில் குறிப்பிட்டிருந்த கிளை) கடன் பெற சைக்கிளில் வந்த ஒருவர் இன்று (அதாவது கடந்த 25 ஆண்டுகளுக்குள்) நினைத்து பார்க்கவியலாத அளவுக்கு வளர்ந்து தமிழ்நாட்டில் சுமார் ஐந்து இடங்களில் கிளைகளைக் கொண்ட நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பவரைப் பற்றி பார்ப்போம்.

அவரைப் பற்றி நல்லவற்றையே நான் எழுத உத்தேசித்தாலும் அவருடைய பெயரை வெளியிடுவது நல்லதல்ல என்றே நினைக்கிறேன். அவர் சார்ந்த சமூகத்தை குறிக்க ‘நாடார்’ என்று குறிப்பிடுகிறேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர்..

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி சென்னை வந்து அன்று சென்னையில் வீட்டு பொருட்களை, முக்கியமாக ரேடியோ மற்றும் டிரான்சிஸ்டர் போன்றவற்றை தவணை முறையில் விற்பதில் ஒரு மாபெரும் புரட்சியை செய்த வி.ஜி.பி நிறுவனத்தில் பில் கலெக்டராக - அதாவது தவணைத் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் வேலை - பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த ஓரிரு வருடங்களிலேயே அதைச் சார்ந்த வணிகத்தின் நெளிவு சுளிவுகளையெல்லாம் கற்றுக்கொண்டு சென்னை சூளை மேடு பகுதியில் 25 ச.அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து வி.ஜி.பி சகோதரர்களுடைய பாணியில் இரண்டு ரேடியோ, நான்கைந்து டிரான்சிஸ்டர்கள், இரண்டு ஸ்டீல் கட்டில்கள், சில மடக்கு நாற்காலிகள் என வணிகத்தை துவக்கினார்.

இந்நிலையில் என்னுடைய கிளையின் வாடிக்கையாளர்களுள் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வணிகக் கணக்கு (Current Account) துவங்குவதற்காக என்னை அணுகினார்.

(இதில் வேடிக்கையென்னவென்றால் அன்று இவரை அறிமுகப்படுத்தியவரும் இதே தொழிலில் சுமார் நான்காண்டுகாலம் ஓரளவுக்கு வெற்றி கண்டிருந்தவர்தான். ஆனால அவர் இன்றும் ஏறத்தாழ அதே நிலையில்தான் இருக்கிறார்.)

நம்முடைய வாடிக்கையாளர் ‘நாடாருக்கு’ வங்கியில் ஒரு வணிகக் கணக்கை துவக்க தேவையான குறைந்த பட்ச தொகையான ரூ.300/- கூட தொடர்ந்து கணக்கில் நிறுத்த (Maintain) வசதியில்லை அப்போது . பிறகு ஏன் கணக்கை துவக்க வேண்டும் என்கிறீர்களா?

சில்லரை வணிகம் செய்யும் ஒவ்வொருவரும்(Retail Traders) அவர்களுக்கு தேவையான பொருட்களை மொத்த வணிகத்தில் ஈடுபட்டிருப்பவரிடமிருந்தே (Wholesale Traders) தங்கள் வணிகத்துக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வர். பொதுவாக இரண்டு, மூன்று வாரங்களுக்குள் கொள்முதல் செய்த பொருட்களின் மதிப்பை செலுத்திவிட வேண்டும் என்ற நிபந்தனையிலேயே இப்பொருட்கள் இவர்களுக்கு விற்கப்படும்.

பெரும்பாலான Wholesale Traders காசோலை வழியாகவே கொடுக்கல் வாங்கல்களை செய்ய விரும்புவர். ஆகவேதான் வேறு வழியில்லாமல் நம்முடைய ‘நாடார்’ என்னுடைய கிளையில் ஒரு கணக்கை துவக்க விரும்பினார்.

நானும் அவருடைய பொருளாதார நிலைமையைப் புரிந்துகொண்டு என்னுடைய வங்கியின் சட்டதிட்டங்களை தளர்த்தி அவர் கணக்கைத் திறக்க உதவினேன்.தொடரும்.

18 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் – 16

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு - இறுதிப் பகுதி

என்னுடைய புதிய கிளைக்கு முதல் வர்த்தக நாளன்றே என்னுடைய வங்கித்தலைவர் மரித்த துக்க நாளாகிப் போனது என்னுடைய பெரிய துரதிர்ஷ்டம்.

குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் உறங்க முடியாமல் அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றபோது வேறொரு பிரச்சினை காத்திருந்தது!

துவக்க நாளன்று கட்சித்தொண்டர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினரின் துணையோடு வெளியேற்றினேன் என்று சொன்னேனல்லவா? அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு நான் வங்கியினுள் நுழைந்தவுடனே வட்ட செயலாளர் தலைமையில் சுமார் முப்பது தொண்டர்கள் கொண்ட படை அலுவலகத்தை முற்றுகை செய்தது.

எனக்கு உதவி செய்வதற்காக மத்திய கிளையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தத உதவி மேலாளர் இக்கூட்டத்தைக் கண்டு மிரண்டு போய் என்னிடம் சொல்லாமலே அலுவலகத்தை விட்டு வெளியே போய் விழாவுக்கு வந்திருந்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டு விஷயத்தை விளக்க அவரும் உடனே இரு காவலாளர்களை அலுவலகத்திற்கு அனுப்பினார்.

இந்த விஷயம் காவலாளர்கள் இருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து தொண்டர்களை விசாரிக்க துவங்கியபோதுதான் எனக்கு தெரிந்தது. அன்று மட்டும் நான் உடனே தலையிட்டு விஷயத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வராதிருந்தால் விபரீதமாக போயிருக்கும். ஆத்திரத்தில் தொண்டர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்.

நான் காவலாளர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தேன். பிறகு வட்ட செயலாளரை அறைக்குள் அழைத்து அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு ஐந்து பேருக்கு அன்றே - வங்கியின் நடைமுறைக்கு முற்றிலும் முரண்பட்டு - கடன் வழங்கினேன். பிறகு யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என அவர் முன்பே கொடுத்திருந்த பட்டியலை அவர்முன் வைத்து அடுத்து வரும் வாரத்திலிருந்து வாரத்திற்கு 25 பேர் வீதம் நான்கு வாரத்துக்குள் அனைவருக்கும் கடன் கொடுப்பதாய் வாக்குறுதி கொடுத்தேன். தனக்கு வேண்டப்பட்டவருக்கு கடன் கிடைத்த திருப்தியில் செயலாளர் உடன் வந்திருந்த கூட்டத்தை அழைத்துக்கொண்டு வெளியேறிய பிறகுதான் என்னால் நிம்மதியாய் என்னுடைய அலுவலை கவனிக்க முடிந்தது. ஆனால் என்னுடைய செயல் என்னுடைய மத்திய கிளை மேலாளர் வழியாக தலைமை அலுவலகத்துக்கு சென்று எனக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது வேறு விஷயம்.

கடன் கொடுக்கப் பட்டவர்களுள் பலரும் எந்த தொழிலும் செய்யாதவர்கள் மட்டுமல்ல. எந்த தொழிலும் செய்ய தகுதியில்லாதவர்களாயிருந்தார்கள் என்பதுதான் உண்மை. அடுத்திருந்த காய்கறி மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்துவந்த ஒருசில பெண்களைத்தவிர பெரும்பாலானோனர் செயலாளரின் கைத்தடிகள் என்பதும் உண்மை.

அதில் ஒரு பெண்மனி, கடன் பெற்ற மூன்றாம் நாள் வந்து 'ஐயா அந்த படுபாவி (செயலாளரைத்தான் சொல்கிறார்) நீங்க கொடுத்த லோன்ல பாதிய பிடிங்கிக்கிட்டான்யா.' என்று கண்ணீரோடு நின்றார்.

ஆனால் என்ன செய்ய? வங்கிக்கு கிடைத்த விளம்பரத்தின் விலை என்று நினைத்துக்கொண்டு மீதமிருந்த கடன் தொகையையும் பட்டுவாடா செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

இதுதான் இந்நாட்டின் தலைவிதி. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் எல்லா நலத்திட்டங்களுமே உரியவரை சென்றடைவதில்லை. இடைத்தரகர்களாய் செயல்படும் அரசியல்வாதிகள் - எல்லோருமல்ல, பெரும்பாலோனோர் - கடன்/ உதவி தொகைகளை சூரையாடிவிடுகின்றனர்.

இந்நிலைக்கு மத்திய, மாநில ஆளுகிற எல்லா கட்சிகளுமே உடந்தை.

அன்றைய முதலமைச்சரை காண அவருடைய ஆற்காடுசாலை அலுவலகத்துக்கு நானும் என்னுடைய மத்திய கிளை மேலாளரும் பலமுறை சென்றோம் என்று என்னுடைய முந்தைய பதிவுகளில் கூறியிருந்தேன். ஒருமுறைகூட அவரைக் காண வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால்தான் அவருடைய அமைச்சர்கள் இருவரை அணுகவேண்டியிருந்தது.

ஆற்காடுசாலை அலுவலகத்தில் ம.தி. பெரும்பாலான நாட்களில் இரவு வெகு நேரம் வரை இருப்பார்.

கட்சி தொண்டர்கள், பிரபல தொழிலதிபர்கள், சினிமா நடிக, நடிகைகள், அரசு மற்றும் எங்களைப் போன்ற தனியார்துறை அதிகாரிகள் என பலரும் பல்வேறு காரணங்களுக்காக அவரை காண வருவது வழக்கம். அவரைக் காண்பதில் நடிக, நடிகைகளுக்கே முன்னுரிமை தரப்பட்டது!

ஒரு நாள்.

ஒரு ஏழை கைம்பெண் கையில் ஒரு துணிப்பையுடனும், விண்ணப்ப படிவத்துடன் - மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் - யார் யாரையோ பார்த்து ஒன்றும் பலனளிக்காமல் தன் கண்கண்ட தெய்வம், பொன்மன செம்மலை கண்டால் தன் வாழ்வில் ஒளி கிடைக்கும் என்ற நப்பாசையில் வந்திருந்தார்.

வாரக் கணக்கில் தினமும் வந்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் வரை காத்திருந்த எங்களைப் போன்றோருக்கே அப்பேறு கிடைக்காத பட்சத்தில் இவருக்கு எப்படி கிடைக்கும்? அது வேறு விஷயம்.

ஆனால் அவரை அங்கிருந்த அலுவலர்கள் அவரை நடத்திய விதம் இருக்கிறதே.. இப்போது நினைத்தாலும் மனதில் ஒருவிட சங்கடத்தை ஏற்படுத்துகிறது..

அவ்வலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்ட நியதிகளில் முதல் நியதி உங்களுடைய விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் அது ஆளும் கட்சியினரால் பரிந்துரைக்கப் பட்டிருக்க வேண்டும். அது அப்பெண்ணிடம் இல்லை..

அங்கிருந்தவர்களுள் ஒருவர் ‘போயி உங்கூருலருக்கற எங்க வட்ட செயலாளர் கிட்ட கையெழுத்து வாங்கிக்கினு வா..’என்று விரட்ட,

அப்பெண், ‘ஐயா.. கலெக்டரு கையெழுத்து போட்டுருக்காருங்க.. இதுக்கு மேல என்னய்யா வேணும்..?’ என்றார்.

ஒரு கேலிச்சிரிப்பு அறையெங்கும் பரவுகிறது. யாரோ ஒருத்தர்..’ ‘தோ பார்றா.. கெய்வி ரூல் பேசறத? நாங்க எங்கூரு கட்சி எம்.எல்.ஏ கிட்ட கையெழுத்து வாங்கிக்கினு வந்தே இங்க ஒன்னும் ஒப்பேற மாட்டேங்குது.. இதுல நீ வேற.. போவியா..’

‘ஐயா.. என் தெய்வத்த ஒரு தபா பாத்தா போறும்யா.. மவராசன் கண்டிப்பா செய்வாரு.. நீங்க கொஞ்சம் அவிரு கிட்ட சொல்லுங்களேன்..’ கெஞ்சுகிறார்.

அதிகாரி ஒருவர் வாயிற்காப்போனை அழைக்கிறார், ‘யோவ் இந்த அம்மாவை யார்யா உள்ற விட்டா.. புடிச்சி வெளிய தள்ளுய்யா..’

அந்த வயதான பெண் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார்.. ‘ஐயாவ பாக்காம போமாட்டேன். அவரு கையால எவ்வளவு தர்மம் செய்திருக்கார்.. எனக்கு செய்யாம போமாட்டாரு.. நான் பாத்துட்டுதான் போவேன்.’

அவருடைய அழுகையை பொருட்படுத்தாமல் குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் வாயிலில் இறக்கி, சாரி, போட்டுவிடுகிறார்கள்.

அத்தோடு நின்று விடவில்லை.. அறையிலிருந்த அனைவரும் - பெரும்பாலோனோர் கட்சி தொண்டர்கள். அதில் ஒரு சில எம்.எல்.ஏக்களும் அடக்கம் - உரத்தகுரலில் சிரிக்கின்றனர்.

ம.தி.யின் படத்தில் வரும் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். அது ஆணவ சிரிப்பு..’ என்ற பாடல்தான் அப்போது நினைவுக்கு வந்தது..

இதுபோன்ற காட்சிகளைத்தான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கோலத்தில் நான் தொடர்ந்து சென்ற மூன்று நான்கு வாரங்களில் அங்கே காணமுடிந்தது. என்னுடன் பல சமயங்களிலும் வந்த என்னுடைய மேலாளருக்கு இதைக் காண மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அவர் சொன்னார்: 'கேரளத்தில் யார் வேணுமானாலும் முதலமைச்சரை அவருடைய அரசு அலுவலகத்திலோ அல்லது கட்சி அலுவலகத்திலே மிக எளிதாக சந்தித்துவிட முடியும். அதுமட்டுமல்ல. தமிழக அமைச்சர்கள் காட்டும் பந்தா கேரள அமைச்சர்களிடம் பார்க்கவே முடியாது.'

அது உண்மைதான். நான் கேரளத்தில், குறிப்பாக கொச்சியில் பல வருடங்கள் பணியாற்றிருக்கிறேன்.

அப்போது ஒரு நாள் கேரளத்தின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான Federal Bankன் நிர்வாக அலுவலகத்தை கொச்சியில் திறந்துவைக்க அப்போதைய கேரள முதல்வர் ஏ.கே. ஆண்டனி அவர்கள் வந்திருந்தார்கள். அவர் வந்ததும் போனதும் அக்கட்டிடத்தின் வெளியில் நின்றுக்கொண்டிருந்த யாருக்குமே தெரியவில்லை..

சாதாரண அம்பாசிடர் காரில் தனியாக சரியான நேரத்தில் வந்தார். அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு ஒரு பத்து நிமிடம் உரையாற்றினார். வங்கியினர் வழங்கிய சிற்றுண்டியைக் கூட மறுத்துவிட்டு ஒரு சிறிய கப்பில் வழங்கப்பட்ட டீயில் ஒரு பகுதியை மட்டும் பேருக்கு உறிஞ்சிவிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் தான் வந்த வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். போக்குவரத்து துளி நிமிடம் கூட நிறுத்தப்படவில்லை.. சாலையில் சென்று கொண்டிருந்தவரில் எவரும் முதலமைச்சர் வந்து சென்றதைக் கூட அறிந்திருக்கவில்லை!

வங்கியின் சேர்மன் வந்திறங்கியது Opel Austra! அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களில் மிகவும் பழையது முதல்வருடையத்தானிருக்கும்!

ஆனால் என்னுடைய கிளையை திறக்க முதல்வர் வந்திறங்கிய நேரத்திற்கு சுமார் பத்து நிமிடத்திற்கு முன்னரே வங்கி இருந்த சாலை முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது!

அடுத்தடுத்த மாநிலங்களுக்குள்தான் எத்தனை வித்தியாசம்.. வேறுபாடு!

அன்று சைக்கிளில் சென்றவர் இன்று சாண்ட்ரோவில்!!

என்னுடைய மேலாளர் அனுபவத்தில் நான் கடன் வழங்கி வெற்றி பெற்ற நிறுவனங்களுள் ஒன்றை பற்றி நாளைய பதிவில் எழுதலாம் என்றிருக்கிறேன்..

தொடரும்

17 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 15

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு - 5

Climax No.2

நல்ல விதமாய் விழா முடிந்தது என்ற சந்தோஷத்தில் அன்று என்னுடன் கிளையில் பணிபுரிந்த நண்பர்களுக்கு ஒரு சிறிய விருந்து கொடுத்துவிட்டு வீடு திரும்பிய போது நள்ளிரவை கடந்திருந்தது..

அடுத்த நாள் காலை வங்கியின் முதல் அலுவலக நாள். காலையிலேயே செல்ல வேண்டியிருந்தது.

சென்னையில் பிரபல உணவு விடுதியில் தங்கியிருந்த எங்களுடைய வங்கி தலைவரையும் Board Members ஐயும் மாலையில் சென்று வழியனுப்ப வேண்டியிருந்ததால் என்னுடைய துணை மேலாளரை அழைத்து அன்று மதியம் செய்யவேண்டியிருந்த எல்லா அலுவல்களையும் குறித்து விளக்க வேண்டும் என்ற நினைப்புடன் மளமளவென முந்தைய நாள் துவக்கப்பட்ட கணக்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்த சமயம்..

சுமார் காலை 10.00 மணி.

என்னுடைய மத்திய கிளை மேலாளரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு. எடுத்து காதில் வைத்ததுதான் தாமதம்.. மேலாளரின் கோபக்குரல்..

‘என்ன டி.பி.ஆர். என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க அங்க? உங்கள இங்க காணாம எல்லா Board Membersம் அப்செட்டாயிருக்காங்க.. எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு ஹோட்டலுக்கு வாங்க.. அர்ஜென்ட்..’

எனக்கு என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை..

உடனே சென்னையிலிருந்த என் வங்கியினுடைய வேறொரு கிளை மேலாளரை தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் Chairman தங்கியிருந்த ஹோட்டலுக்கு போயிருப்பதாயும் என்னை அவர் என்னுடைய வீட்டு தொலைப்பேசியில் பலமுறை அழைத்தும் நான் எடுக்காததால் எனக்கு தெரிவிக்க முடியவில்லை என்றும், நான் அழைத்தால் உடனே ஹோட்டலுக்கு புறப்பட்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அவர் சென்றிருக்கிறார் என்றும் அவருடைய ஊழியர்களுள் ஒருவர் கூற எனக்கு மேலும் குழப்பமானது..

என்னுடைய உதவியாளரை அழைத்து கிளை பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அரக்கபரக்க ஆட்டோ ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடினேன்.

ஹோட்டல் வாசலிலேயே எனக்காக காத்திருந்த என்னுடைய மத்திய கிளை மேலாளர் என்னைக் கண்டதும் பொரிந்து தள்ளிவிட்டார்.

‘என்ன டி.பி.ஆர். உங்க வீட்டுல ஃபோன் அடிச்சா உங்களுக்கும் உங்க Wifeக்கும் எடுத்து பேசற பழக்கமில்லையா? சரி ஃபோன் வேலை செய்யிதா இல்லையான்னு கூடவா பாக்க மாட்டீங்க.. இங்க என்ன நடந்துதுங்கறது விடியற்காலம் ரெண்டு மணியிலருந்து உங்களுக்கு தெரிவிக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு.. உங்க விழாவுக்காகன்னே வந்தவங்க எப்படி இருக்காங்கன்னு பாத்துக்கற Basic decency வேண்டாம் உங்களுக்கு? Shame on you..’

எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. விஷயத்தை சொல்லாமல் பேசிக்கொண்டே போகும் மேலாளரை எரிச்சலுடன் பார்த்தேன். ‘சார் என்ன நடந்தது அது சொல்லுங்க.. ப்ளீஸ்.’ என்றேன்.

‘நம்ம சேர்மன் காலைல அஞ்சி மணிக்கு ஹார்ட் அட்டாக் வந்து சரியா பாக்கறதுக்கு யாரும் இல்லாம அவர் ரூம்ல தூக்கத்திலேயே இறந்து போயிட்டார் டி.பி.ஆர். இதுக்கு உங்களுடைய அஜாக்கிரதையும் காரணம்னு Board Members நினைக்கிறாங்க. இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?’

‘மை காட்!’ எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் உதடுகள் நடுங்க.. அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு.. ‘என்ன சார் சொல்றீங்க.. எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா..’ என்னுடைய முட்டாள்தனத்தை அறிந்து பாதியிலேயே நிறுத்திக்கொண்டேன். என்னுடைய வீட்டு தொலைப்பேசி பழுதடைந்திருந்ததை நான் கண்டுகொள்ளாமல் இருந்தது எத்தனை துர்பாக்கியம்!

தொலைப்பேசித்துறையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றங்கள் அன்று இல்லையே என்று இன்று நினைத்தாலும் அங்கலாய்க்கிறேன்.

விழாவில் பங்குபெற்ற ஒரு பொதுவுடமை வங்கியின் கஸ்டோடியன் (என்னுடைய வங்கித்தலைவரின் நெருங்கிய நண்பர் அவர்) ‘யோவ், என்னோட பாங்க்ல கூட இப்படி ஒரு திறப்பு விழா நடந்ததில்லை. You have made a Fantastic beginning.’ என்று வாழ்த்த அபிரிதமான வெற்றியில் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டிருந்த என் தலைவருக்கு அந்த அபிரிதமான மகிழ்ச்சியே எமனாய் அமைந்தது!

நள்ளிரவைக் கடந்து சென்ற Cocktail விருந்தும் அவருடைய சடுதி மரணத்திற்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றனர் பலரும்.

சுமார் ஒரு மணியளவில் உறங்க சென்றவர் மூன்று மணியளவில் மார்பு பகுதியில் லேசான Discomfort ஏற்பட மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி இரண்டாவது மாடியிலிருந்த தன்னுடைய உதவியாளரை (அவருடைய அறையிலிருந்தே அழைத்திருக்கலாம். எல்லாம் விதியின் விளையாட்டு!) அவருடைய அறைக்கதவை தட்டி அவரிடம் விளக்க அன்று பார்த்து ஹோட்டலில் ஒரு மருத்துவர் கூட தங்கியிருக்கவில்லை.. பிறகுஅவருடைய பி.ஏ. சென்னைவாசியான என்னை தொடர்புகொண்டு ஒரு மருத்துவரை அழைத்துக்கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். என்னுடைய தொலைப்பேசி பழுதடைந்திருப்பதை அவர்கள் உணரவில்லை.. தொலைப்பேசி அடித்துக்கொண்டே இருக்கிறது டி.பி.ஆர். நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு என்மேல் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு பிறகு.. அரை மணி நேரம் கழித்து ஹோட்டல் ரிசப்ஷன் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவர் ஒருவரை அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்து பார்த்திருக்கிறார்..

‘Since the patient is under the influence of liquor I am unable to determine the cause for the uneasiness. I will give an injection as a temporary relief. If the uneasiness persists take him to the Royapettah Hospital.’ என்று கூறிவிட்டு மருத்துவர் சென்றிருக்கிறார்.

ஊசியின் பாதிப்பில் சேர்மன் உறங்கிவிட அரைமணி நேரம் காத்திருந்த அவருடைய பி.ஏவும் மற்றவர்களும் அவரவர் அறைக்கு சென்றிருக்கின்றனர்.

மறுநாள் காலை ஏழு மணியளவில் பி.ஏ அவருடைய அறைக்கு சென்று கதவை வெகு நேரம் தட்டியும் திறக்காததால் ரிசப்ஷனிலிருந்து ஆட்கள் வந்து கதவைத் திறக்க சேர்மன் உறக்கத்திலேயே இறந்திருப்பது தெரிய வந்திருக்கிறது!

முந்தைய நாள் விழாவில் கலந்துக்கொண்ட பத்திரிகையாளர்கள் விவரமறிந்து ஹோட்டலுக்கு வர அவருடைய மரணம் முதலமைச்சரை எட்டியது.. அவர் உடனே அருகிலிருந்தவர்களிடம் ‘மதுவின் சதி’ என்றாராம்.

என்னவென்று சொல்ல?

இன்று வரை என் மனதை அறுத்துக்கொண்டிருக்கும் துயர சம்பவம் அது!

16 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 14

துவக்க விழாவுக்கு முந்தைய நாள்.

நம்முடைய ரஜினி ராம்கி பின்னூட்டத்தில் கூறியதுபோல க்ளைமாக்ஸ் தினம்.

ஆயிற்று. விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாய் செய்தாகிவிட்டது!

முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து மாதிரி விழா அழைப்பிதழை Approve செய்து அனுப்பிவிட்டார்கள். அழைப்பிதழில் Chief Ministerல் ‘Cheif’ என்ற எழுத்துப்பிழை! நானும் என் கிளையில் இருந்த எல்லோரும் கவனமாயிருந்தும் இப்படியொரு பிழை! என்னுடைய மத்திய கிளை மேலாளருக்கு கடும் கோபம்.

‘சாரி சார்’ என்று அசடு வழிவதை தவிர வேறு வழியில்லை.

நல்ல வேளை என்னுடைய வங்கித் தலைவர் (Chairman) வருவதற்குள் தவறைத் திருத்திவிட்டோம்.

வங்கித்தலைவரும் சில சீனியர் Board Membersம் முதலமைச்சரை நேரில் பார்த்து அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 11.00 மணிக்கு Appointment செய்திருந்தோம்.

யாருடைய தவறு என்று தெரியவில்லை. (முதலமைச்சருக்கு அரசியல் செயலாளர், அரசாங்க செயலாளர் என்று இருவர் இருந்தனர். முன்னவர் மக்கள் திலகத்தின் வளர்ப்பு மகனைப்போன்று பல ஆண்டுகளாக அவருடன் இருந்தவர். ஆனால் அத்தனை படிப்பு இல்லாதவர். எனவே அவருக்கும் அரசாங்க செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் ஒத்து போகாது. எல்லாம் இந்த பாழாய் போன ஈகோ தான் காரணம். முதலமைச்சரின் தினசரி Appointments இவர்கள் இருவருடைய மேற்பார்வையில் கொடுக்கப்படும். இருவரும் கலந்தாலோசித்து இறுதி பட்டியலை முதலமைச்சரின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அரசியல் செயலாளரை நான் பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன். அவரிடம்தான் அன்றைய Appointmentஐ சொல்லியிருந்தேன். ஒருவேளை நான் அரசாங்க செயலாளரை நேரில் கண்டு இதை கூறவில்லை என்று அவர் கடுப்பாயிருக்கலாம். எப்படியோ இருவரும் தயாரித்த இறுதிப்பட்டியலில் எங்களுடைய Appointment இடம் பெற்றிருக்கவில்லை. அரசியல் செயலாளரும், அரசாங்க செயலாரும் முதலமைச்சரிடம் இத்தவறை அறிவிக்க தைரியமில்லாமல் நீ போ, நீ போ என்று ஒருவர் மற்றவரை சுட்டிக்காட்டுவதிலேயே குறியாயிருந்தனர்.)

என்னுடைய தலைவரும் அவருடன் கூட சென்றவர்களும் சரியாய் 10.45 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு சென்றும் பகல் ஒரு மணிவரை முதலமைச்சரை சந்திக்கமுடியாமல் போகவே நான் (என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்). இரண்டாவதாக சந்தித்த அமைச்சர் - இவர்தான் முதலமைச்சரிடம் தேதி பெற்றுத்தந்தவர் - அன்று தற்செயலாக முதலமைச்சரைக் காண வந்திருந்தார். நான் அவரைக் கண்டதும் அவரை நெருங்கி விஷயத்தை சுருக்கமாக விளக்க அவர் ‘நான் முதலமைச்சரிடம் சொல்கிறேன்’ என்று என்னுடைய வங்கி தலைவரின் Visiting Cardஐ பெற்றுக்கொண்டு உள்ளே சென்று பத்து நிமிடம் கழித்து வெளியே வந்து ‘யாராவது ரெண்டு பேர் மட்டும் வாங்க..’ என்று என் வங்கி தலைவரையும் எங்களுடன் வந்திருந்த Board Membersல் ஒருவரையும் உள்ளே அழைத்து சென்றார்.

சரியாய் இரண்டு நிமிடம்!

முதலமைச்சரின் அறையிலிருந்து வெளியே வந்த இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உள்ளே என்ன நடந்ததோ அன்று முழுவதும் நானும் என்னுடைய மத்திய கிளை மேலாளரும் அவருடைய வசை மழையில் நனைந்தோம் என்பது உண்மை!

அன்று இரவுதான் தெரிந்தது. முதலமைச்சர் அவர்கள் இருவரையும் தகுந்த மரியாதையுடன் நடத்தவில்லை என்பது. பேருக்கு அமரச்சொல்லிவிட்டு கொடுத்த அழைப்பிதழை பிரித்துக்கூட பார்க்காமல் சிறு புன்னகையுடன் வழியனுப்பிவிட்டாராம்! (ஒருவேளை அவருக்கிருந்த அலுவல்களின் நிமித்தம் அப்படி நடந்திருக்கலாம். இருப்பினும கலைஞருடனான என்னுடைய சந்திப்பை நினைத்துப் பார்த்தேன். எத்தனை லகுவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது அச்சந்திப்பு!)

திறப்பு விழாவுக்கு வந்திருந்த அரசியல் செயலாளர் என்னை முற்றிலுமாக புறக்கணித்ததிலிருந்து அவருக்கும் முதலமைச்சரிட மிருந்து சரியான ‘டோஸ்’ கிடைத்தது என்பது தெளிவானது.


திறப்பு விழா தினம்


மாலையில்தான் திறப்பு விழா என்றாலும் காலையிலிருந்தே லோக்கல் வட்டத்தினரும், கட்சித்தொண்டர்களும் அவர்களுடைய ஆக்கிரமிப்பை துவங்கி எனக்கும் என்னுடன் இருந்த சக வங்கி அதிகாரிகளுக்கும் பயங்கர டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

முகப்பு பந்தலிலிருந்து முதலமைச்சரின் இருக்கை வரை குற்றம் கண்டுபிடித்து இதை மாற்று, அதை மாற்று என்று ஒவ்வொன்றாய் மாற்ற நாங்கள் கவனமாய் செய்திருந்த எல்லா ஏற்பாடுகளும் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டு என்னுடைய வங்கி தலைவரும் எங்களுடைய Board Membersம் மாலை நான்கு மணிக்கு (விழா ஆறுமணிக்கு) வந்தபோதும் ஏற்பாடுகள் முடிவடையாமலிருக்கவே தலைவருடைய முந்தைய நாள் கோபம் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்தது.. அவரை திருப்தி படுத்துவதா அல்லது விழா அரங்கு முழுவதும் நிரம்பிவழிந்த கட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதா என்று தெரியாமல் நாங்கள் பட்டபாடு ... போதும், போதும் என்றாகிவிட்டது.

சரியாரக ஐந்து மணிக்கு முதலமைச்சரின் பாதுகாப்பு படை, என் வட்டார காவல் நிலைய அதிகாரிகளளுடன் வந்து சேர என்னுடைய வங்கி தலைவரே தலையிட்டு , ‘Sir This is a private function. Please ensure that all the party cadres and local leaders leave the hall. They have been a big nuisance to us since this morning.’ என்று முறையிட காவல்துறை அதிகாரியொருவர் லோக்கல் வட்ட செயலாளரை அணுகி கெஞ்சி (Yes. He was literally begging him!) கால் மணி நேரத்தில் அவர்கள் எல்லோரையும் வெளியேற்றினார். ( ஆனால் அதனுடைய பலனை நான் பிற்பாடு அனுபவிக்க வேண்டியிருந்தது)

அரங்கிலிருந்து வெளியேறிய அனைவரும் சாலையின் இருமருங்கிலும் நின்றுகொண்டு திறப்பு விழாவுக்கு பிரத்தியேகமாய் அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வந்து இறங்கியபோதெல்லாம் கூக்குரலிட்டு (முக்கியமாய் நான் முன்னே கூறிய நடிகைகள் வந்திறங்கியபோது அவர்களிட்ட கூச்சலில் அவர்கள் இருவருடைய முகமும் கோபத்தால் சிவக்க.. நாங்கள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றோம்.) கலாட்டா செய்ய.. ‘Sorry Sir, we can’t do anything. It might provoke them further. Please ignore them.’ என்று காவல்துறையினரும் கைவிரித்தனர்.

சரியாய் ஆறு மணி. முதலமைச்சரும், அவருக்கு பின்னால் இரு அமைச்சர்களும் வந்திறங்க குழுமியிருந்த கட்சித்தொண்டர்களின் ‘வாழ்க’ கோஷம் வின்னைப் பிளைந்தது.

முதலமைச்சர் கிளையின் நுழைவு வாயிலை அடையவும் கட்சித்தொன்டர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆரத்தி எடுக்கும் பெண்கள் அணி முன்னே வர (எத்தனை முயன்றும் இதை முன்கூட்டியே தடுக்க முடியாமல் போனது) முதலமைச்சரின் கூட வந்தவர்களுள் ஒருவர் ‘போம்மா தள்ளி. இதென்ன உங்க வீட்டு விழாவா? முதலமைச்சர் உடுப்பில கொட்டி கிட்டி வைக்கப்போற.. போ தள்ளி..’ என்று கூற முதலமைச்சரே கையை நீட்டி பெண்களை ஒதுக்கிவிட்டு வாயிலில் கட்டியிருந்த ரிப்பனை வெட்டி பலத்த கரகோஷத்திற்கிடையில் வங்கியை திறந்துவைத்தபோது.. (அப்பாடா என்றிருந்தது எனக்கு).

முதலமைச்சர் கிளையைத் திறந்து வைத்து ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என அவருடைய சிறப்பு சொற்பொழிவைத் துவங்கியதுதான் தாமதம் கட்டிடத்தின் வெளியே தெருவிலும் சுற்றிலுமிருந்த அனைத்து கட்டிடங்களின் மேற்தளங்கள் மேலும் குழுமியிருந்த தொண்டர்களின் கூட்டம் கரகோஷமிட்டு ஆர்ப்பரிக்க - முதலமைச்சர் உங்க விழாவுல அரைமணி நேரம்தான் பங்கு பெறுவார் என முன்னர் அறிவித்திருந்தும் - முதலமைச்சரின் சொற்பொழிவே சுமார் ஒரு மணி நேரம் எடுத்தது.

சொற்பொழிவினூடே அவர் இவ்வாறு கூறினார் ‘உங்களுக்கு இந்த வங்கியிலிருந்து கடனாக அளிக்கப்பட்ட தொகை இந்த வங்கியினருடையதல்ல. அது நம்முடைய பணம். நம்மைப் போன்ற பொதுமக்களுடைய தொகை.. அதை கடன் பெறுபவர் ஒவ்வொருவரும் திருப்பி செலுத்தினால்தான் வங்கிகள் அதை மீண்டும் பிறருக்கு கொடுக்க இயலும்.. நாணயத்தை (கடன் தொகை) பெறுவோர் நாணயமுடன் திருப்பி செலுத்த வேண்டும்’

)ஆனால் அவர் கூறியதில் ‘வங்கியின் தொகையல்ல. அது நம்முடைய பணம்.’ என்பது மட்டுமே கூடியிருந்த தொண்டர்களில் பலருக்கும் பிடித்திருந்தது போலும்.

அதனால்தானோ என்னவோ நான் அடுத்த ஒரு மாதத்தில் கடனாய் கொடுத்ததில் ஒரு சிலர் தவிர யாருமே கடனை திருப்பித் தரவேயில்லை..)

ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சில தடங்கல்களையும் கடந்து திறப்பு விழா சிறப்பாக நடந்தேறியதில் என்னுடைய வங்கித் தலைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

விடைபெற்று செல்லும் நேரத்தில் 'nice job TBR! keep it up'என்று என் தோளில் தட்டிவிட்டு சென்றார். அதுதான் அவரை நானும் அன்று என்னுடன் இருந்தவர்களும் கடைசியாய் பார்த்தது!'

அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

15 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் – 13

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு - 4

என்னுடைய மத்திய கிளையில் அப்போது மேலாளராக இருந்தவர் என்னுடைய முதல் அக்கவுன்டன்டைப் போலவே தீவிர சினிமா ரசிகர்.

அவருடைய வேண்டுகோளைத் தட்ட முடியாமல் அன்று மலையாளத் திரையுலகில் பிரபலமாயிருந்த இரண்டு நடிகைகள், ஒரு இளம் ஒளிப்பதிவாளர் ஆகியோரை விழாவில் வாழ்த்திப் பேச (Felicitation) அழைத்தோம். அவர்களும் விழா நாயகன் பெயரைக் கேட்டதுமே மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்கள். அவர்களுடன் ஒரு தமிழ் நடிகரையும் அழைக்கவேண்டும் என்று என் மேலாளர் விரும்பியதால் அன்று பிரபலாமாயிருந்த பல நடிகர்களையும் அணுகினோம் (கிளை கோடம்பாக்கத்தில் திறக்கப்படவிருந்ததால் திறப்பு விழாவில் நடிகர்களுடைய பிரசன்னம் நல்ல விளம்பர உத்தியென்பது என்னுடைய மேலாளரின் எண்ணம். அதற்காக நாய் படாத பாடு நான் பட வேண்டியிருந்தது).

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. நாங்கள் வீடு தேடி சென்று அழைத்தும் எல்லோரும் ஏதாவது சாக்கு சொல்லி தப்பிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள். ஒரேயொரு வில்லன் நடிகர் மட்டும் ‘தம்பி உங்க கிட்ட சொல்றதுக்கென்ன? நீங்க விழாநாயகனா அழைச்சிருக்கீங்களே.. அவரு திரைப்படத்துறையிலருந்து வந்தவராயிருந்தாலும் அவர் கூட ஒரே மேடையில இருக்கறதுக்கு நம்ம திரைப்படத்துறையில யாருமே விரும்பமாட்டாங்க.. அதான் காரணம். நீங்க வீணா அலையறத விட்டுட்டு அந்த ரெண்டு மலையாள பொம்பளைங்கள வச்சிட்டு ஷோவை முடிச்சிருங்க..’ என்று போட்டு உடைத்தார்.. (அவர் வார்த்தைக்கு பிரட்டு (தூத்துக்குடி பாஷையில் கெட்ட வார்த்தை) போட்டு பேசியதை அப்படியே எழுதினால் இந்த பதிவையே காசி அவர்கள் தூக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

நடிகர் கூறியதை முழுவதும் புரிந்துக்கொள்ள முடியாத என்னுடைய மேலாளர் தன் பாஷையில் ‘அயாளு எந்தா பறஞ்ச டி.பி. ஆர்? நம்மள்ட நேதாவ குறிச்சான? கொற தெறி விளிச்சின்னு மாத்திரம் மனசிலாயி.’ (அந்த ஆளு நம்ம தலைவரைப் பத்தியா சொன்னான் டி.பி.ஆர்? நிறைய கெட்ட வார்த்தைகள் சொன்னார்னு மட்டும் புரிஞ்சிது.) என்றார்.

ஆனால் ‘அத விடுங்க சார். நீங்க சொன்னீங்கன்னுதான் இந்த வேலைக்கு இறங்கினேன். போதும். நம்ம வேலைய பார்ப்போம். இன்விடேஷன ஃபைனல் பண்ணி மினிஸ்டர்கிட்ட குடுக்கற வழிய பார்ப்போம்’ என்று அந்த விஷயத்தை அத்துடன் முடிவுக்கு கொண்டு வந்தேன். ஆக, எங்களுடைய நடிக, நடிகைகளுடைய வேட்டை அந்த வில்லன் நடிகருடைய வீட்டோடு முடிந்தது (அவர் காலமாகி சுமார் பத்து வருடங்களாகின்றன!).

இரண்டொரு நாட்களுக்குள் அழைப்பிதழை டிராப்ட் எடுத்து நானே நேரில் போய் விழாத்தலைவராக அழைக்கப்பட்டிருந்த அமைச்சரின் செயலாளரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒரு வாரம் கழித்தும் பதிலொன்றும் வராததால் மீண்டும் அமைச்சருடைய செயலாளரை தொலைப்பேசியில் அழைக்க அவர், ‘சார் உடனே புறப்பட்டு வந்தீங்கன்னா நல்லாருக்கும். அமைச்சர் உங்க மேல ரொம்ப அப்செட்டாயிருக்கார்’ என்றார்.

இதென்னடா சோதனை என்று நொந்துக்கொண்டு தலைமைச் செயலகத்துக்கு ஓடினேன்.. அன்று பார்த்து சேட்டும் ஊரில் இல்லை.

அன்றுவரை நான் தனியாய் தலைமைச் செயலகத்துக்கு சென்றதில்லை..

சேட்டும், பிள்ளையும் அங்குள்ள வாயிற்காப்போனுக்கு ‘தாராளமாக கொடுத்து’விட்டுத்தான் உள்ளே நுழைதை பார்த்திருக்கிறேன். இதே தலைமை செயலகத்தில் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் ஒரு கிளை திறப்புவிழாவுக்கு அன்றைய முதலமைச்சரை அழைக்க வந்ததைப் பற்றி முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். அப்போதிருந்த தலைமைசெயலகத்திற்கும் இப்போதிருந்த தலைமை செயலகத்திற்கும் எத்தனை வித்தியாசம்?

முதலமைச்சரையோ அல்லது ஏதாவது ஒரு அமைச்சரையோ பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு அன்று கிடைத்த மரியாதை இப்போது எங்கோ தொலைந்து போயிருந்தது.

எல்லா வாயில்களையும் அடைத்துக்கொண்டு நின்ற கட்சித்தொண்டர்கள் கூட்டம் நம்மைப் போன்றவர்களை உள்ளே புகவிடாது. ஒன்று நாம் எல்லோருக்கும் தெரிந்த அரசியல்வாதியாயிருக்க வேண்டும் அல்லது நாம் அந்த அரசியல்வாதிக்கு தெரிந்தவராயிருக்க வேண்டும். இல்லை யென்றால் வாயிலில் நிற்போருக்கு தாராளமாக ‘சம்திங்’ தள்ள வேண்டும்.

ஆனால் எனக்கு யாரையும் தெரியாததால் காவலாளர்கள் என்னை உள்ளே விடுவதாயில்லை..எனக்கு ‘சம்திங்’ கொடுத்து பழக்கமில்லாததாலும் எவ்வளவு கொடுத்தால் உள்ளே விடுவான் என்றும் தெரியாததாலும் (குறைவாய் கொடுக்கபோய் ஏதாவது ஏடாகூடமாகிவிடுமோ என்ற பயம் வேறு!) என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கத்தான் முடிந்தது!

இப்போதுள்ளதுபோல் கைத்தொலைப்பேசி வசதியிருந்திருந்தால் அமைச்சரின் செயலாளரையாவது அழைத்திருக்கலாம். தலைமைச் செயலக வளாகத்தில் பொதுத்தொலைப்பேசி வசதியும் அப்போதில்லை. ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் கண்ணுக்கெட்டியதூரம் வரை பார்த்தும் ஒன்றும் அகப்படவில்லை.

என் நல்ல நேரம், அன்று தலைமைச்செயலகத்தில் வருடாந்தர மாவட்ட ஆட்சியர் மாநாட்டின் துவக்கநாளாயிருந்தது. நான் செய்வதறியாது வெளியே நின்றுக்கொண்டிருந்த நேரம் முதலமைச்சர் மாநாட்டைத் துவக்கி வைப்பதற்காக அவருடைய அறையிலிருந்து வெளியேறி தலைமைச் செயலகத்தின் புதிதாய் கட்டியிருந்த இணைப்பு கட்டத்திற்கு செல்ல, அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய பார்வையாளர் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாயில்களை நெருங்க அவர்களை கட்டுப்படுத்தவே காவலாளர்களுக்கு சரியாயிருந்தது.. அந்த களேபரத்தில் நான் உள்ளே நுழைந்ததை அவர்களால் கவனிக்க இயலவில்லை..

நான் உள்ளே நுழையவும் நம்முடைய அமைச்சர் அவருடைய அறையை விட்டு வெளியே வரவும் சரியாயிருந்தது.. நான் அவரைப் பார்த்து (பிள்ளை பாணியில்) ஒரு கூழைக் கும்பிடு போட்டேன் (என் தலையெழுத்து!). அவரோ என்னை அடையாளம் தெரியாமல் (அல்லது வேண்டுமென்றே) கையை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு (பதில் வணக்கமாம்!) முதலமைச்சரின் பின்னால் சென்ற சக அமைச்சர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் போய்விட்டார்.

நான் சிறிது நேரம் அவர் போவதையே பார்த்துக்கொண்டு நிற்க நான் நிற்பதைப் பார்க்காததுபோல் அவருடைய செயலாளரும் என்னைக் கடந்து செல்வதைப் பார்த்த நான், ‘சார், சார்’ என்று அழைத்தவாறே அவர் பின்னால் ஓடினேன்.

நல்ல வேளையாய் அவருக்கு என்னை நினைவிருந்தது! ‘என்ன சார்? நான் உங்கள எத்தன மணிக்கி வரச்சொன்னேன், சாவகாசமா இப்ப வர்றீங்க? அமைச்சர் இப்பத்தான் போனாரு.. திரும்பிவர எப்படியும் மூணு, நாலு மணி நேரமாகும்.. ஒன்னு வெய்ட் பண்ணுங்க.. இல்லன்னா போய்ட்டு வாங்க..’ என்று கூறிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் அமைச்சரின் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய் போய்விட்டார்.

(பொதுவாக இத்தகைய மாநாடுகள் நடக்கும்போது அமைச்சர்களின் இலாகா சம்மந்தப்பட்ட எல்லா கோப்புகளும் அவர்களுடைய செயலாளரின் கைகளில்தான் இருக்கும். அமைச்சர்களின் இருக்கைகளுக்கு பின்னால் அமர்ந்துக்கொண்டு அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் குறிப்புகளை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.)

அமைச்சரின் அறை வரை எட்டியதே பெரிய பாடு. இதில் வெளியே போய் மீண்டும் உள்ளே வரமுடியுமா, முடியாதோ என்று நினைத்துகொண்டு அமைச்சருடைய அறையின் வாயிலிலேயே நிற்பதென முடிவு செய்தேன்.. (ஒன்றோ, இரண்டோ மணியளவல்ல, அன்று காலை பதினோரு மணியிலிருந்து பிற்பகல் நான்கு மணிவரை!).

மாலை 4.00 மணிக்கு சாவகாசமாக திரும்பி வந்த செயலாளர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார் (எனக்கோ அவருடைய குரல்வளையை நெரித்தால் என்ன என்றிருந்தது!). ‘என்ன சார், நீங்க போகவேயில்லையா?’ என்றார்.

நான் பரிதாபமாக, ‘எப்படி சார் போறது? அமைச்சர் ஏதோ அப்செட்டாயிருக்கார்னு சொன்னீங்களே, அதான் முழுசா கேட்டுட்டு போயிரலாம்னு..’ என்று இழுத்தேன்.

‘சரி, அதுவும் நல்லதுக்குத்தான். வாங்க.. என்ன விஷயம்னு சொல்றேன்.’ என்றவர் அறைக்குள் நுழைந்து என்னையும் அமரச் சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ‘அதொன்னும் இல்லை சார். அந்த லோக்கல் வட்டம்தான் ஏதோ அமைச்சர்கிட்ட போட்டு குடுத்துட்டான். நீங்க அவர் வந்தப்போ ஏதோ ரூல்செல்லாம் பேசினீங்களாம். துவக்க விழா அன்றைக்கி லோனுக்கு வேண்டிய அடையாள சாங்க்ஷன்தான் குடுக்க முடியும்னு சொன்னீங்களாமே.. அதென்ன ஏமாத்து வேலைன்னு அமைச்சர் அப்செட்டாயிருக்கார்.. நீங்க கொஞ்சம் வெய்ட் பண்ணி பாத்துட்டு போயிட்டீங்கன்னா காரியம் முடிஞ்சிரும்.. நீங்க குடுத்த மாதிரி அழைப்பிதழ் முதலமைச்சர்கிட்ட குடுத்தாச்சி. இன்னும் ரெண்டொரு நாள்ல கிடைச்சிரும். அதப்பத்தி கவலையே இல்ல.’ என்றவர் குரலை இன்னும் ஒரு படி கீழே இறக்கி இன்னொரு விஷயம் சார் என்றார். சரி இவரு ஏதோ அடி போடறார் என்று நினைத்துக்கொண்டு ‘என்ன சொல்லுங்க?’ என்றேன்.

‘என் பையனுக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கனும். என் கிட்ட ஸ்கூட்டர் விலையில பத்து, பதினஞ்சி பெர்சன்ட் இருக்கு. நீங்க ஒரு லோன் போட்டு குடுக்கணும்..’ என்று தயக்கத்துடன் கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.

அரசுத்துறையில் இப்படிபட்ட ஆட்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நம்முடைய தேவைக்கு இவர்களைத் தேடி போகும்போது பயங்கர பந்தா காண்பிப்பார்கள். அதே இவர்களுக்கு தேவையென்று வந்துவிட்டால் அப்படியே அடியோடு மாறி காலை பிடிக்கவும் தயங்க மாட்டார்கள்.

இருப்பினும் அவரைப் பார்க்க பாவமாயிருந்தது. அப்போது பிரபலாமாயிருந்த லாம்பி ஸ்கூட்டரின் விலை பத்தாயிரத்துக்குள் தானிருந்தது. பதினைந்து சதவிகிதம் மார்ஜின் பணம் போக கடன் தொகை எட்டாயிரத்துக்குள் அடங்கும். ‘சரி சார். அது ஒரு பிரச்சினையே இல்லை. நீங்க இந்த வட்ட செயலாளர்கிட்ட சொல்லி என்ன கொஞ்ச நாளைக்கி அதாவது திறப்புவிழா முடியற வரைக்கும் சும்மா இருக்க சொன்னா போறும். அவர் பாட்டுக்கு டெய்லி ஒரு இருபது, முப்பது பேரை என் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து இவங்களுக்கெல்லாம் எப்ப லோன் குடுக்க போறிங்கன்னு நின்னா என்னால என்ன பண்ண முடியும்? அமைச்சர்கிட்ட சொல்லுங்க, அவர் சொன்னா மாதிரி நூறு பேருக்கு ஆயிரம் வீதம் கடன் குடுக்கறது என்னோட பொறுப்பு. ஆனா பிராஞ்சே தொடங்கறதுக்கு முன்னால லோன் குடுன்னா எப்படி குடுக்கறது? திறப்பு விழா அன்றைக்கு கடன் வழங்கும் சாங்க்ஷன் லெட்டர்ஸ் முதலமைச்சர் கையால ஒரு இருபது பேருக்கு குடுத்துடறோம். லோன் தொகை திறப்பு விழா முடிஞ்சி ஒரு மாசத்துக்குள்ள மொத்த நூறு பேருக்கும் குடுத்து முடிச்சிடறேன். என்ன சொல்றீங்க’ என்று விலாவாரியாக எடுத்து கூறினேன்.

நமக்கு ஸ்கூட்டர் கடன் கண்டிப்பாய் உண்டு என்பதில் மகிழ்ச்சியடைந்த செயலாளர் ‘நான் அமைச்சர்கிட்ட சொல்லிக்கறேன் சார். நீங்க போங்க’ என உற்சாகமாய் வழியனுப்பிவைத்தார். அத்துடன் 'சார் நீங்க இனிமே என்னை எப்ப வேணும்னாலும் வந்து பாருங்க. இந்தாங்க ஒரு நிரந்தர விசிட்டர்ஸ் பாஸ் தரேன். இத வாசல்ல காட்டுனீங்கன்னா போறும். ஒரு பய தடுக்க மாட்டான்.’ என்று அவர் கொடுத்த பாஸ்சை வாங்கி சட்டைப் பையில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினேன்..

சும்மா சொல்லக்கூடாது. அதன் பிறகு எந்த அரை வட்டம், முழு வட்டமும் திறப்பு விழா தினம் வரை என்னை நெருங்கவில்லை..

தொடரும்

13 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 12

எம்.ஜி. ஆருடன் சந்திப்பு - 3

கடந்த பதிவின் தொடர்ச்சி..

....‘சார்.. தம்பி நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்னு சொல்லிட்டு வந்தேன். நீங்க மானேஜர கூட்டிக்கிட்டு தைரியமா போங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். என்ன சேட், சொல்லுங்க சார் கிட்ட’ என்று அசடு வழிந்துவிட்டு.. அவருடைய காரில் ஏறி செல்ல.. நானும், மானேஜரும், சேட்டும் ஒரு காரில் ஏறி திரும்பி வந்தோம்..

அமைச்சர் கூறியபடி இரண்டு வாரங்கள் கழித்து அவருடைய பி.ஏ.வை தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டபோது அவர் கூறிய செய்தி என்னை அதிர வைத்தது..

முதலில் நான் யார் என்று பலமுறை கூறியும் அவருக்கு விளங்கவில்லை. பிறகு நான் அமைச்சர் எங்களிடம் கூறியதை கூறியபோது அவர் சர்வசாதாரணமாக.. ‘சார் மினிஸ்டர யார் யாரோ வந்து ஏதேதோ விஷயமா பேசிட்டு போறாங்க. அதையெல்லாம் ஞாபகத்துல வச்சிருக்க முடியுமா என்ன? என்றார்’ நானும் ‘சாரி சார். நான் அப்புறமா கூப்பிடுறேன்.’ என்று தொடர்பைத் துண்டித்துவிட்டு உடனே என்னுடைய மேலாளரிடம் தெரிவிக்க அவர் சேட்டை அழைத்து சற்று கோபத்துடன் பேசினார்.

இரண்டொரு வாரத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை.

மூன்றாவது வாரத்தில், ஒரு நாள் சேட் பிள்ளையை கையோடு அழைத்துக்கொண்டு எங்களுடைய மத்திய கிளை அலுவலகத்துக்கு வந்தார்.

‘சார் நீங்க யார்கிட்ட பேசனீங்கன்னு தெரியலை.. நான் அந்த பி.ஏ.கிட்ட இப்பத்தான் பேசிட்டு வரேன். அப்படி ஒரு போன் வரவேயில்லன்னு சாதிக்கறான். ஒழிஞ்சி போடான்னு விட்டுட்டேன். நீங்க ரெண்டு பேரும் இப்பவே வாங்க. இன்னொரு மினிஸ்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போரேன். அவர் இவனை மாதிரியில்ல.. ரொம்ப தங்கமான பையன். நம்ம தலைவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவன். நான் சொன்னா கண்டிப்பா செய்வான்.’ என்ற பிள்ளையை நம்ப முடியாமல் என்னுடைய மேலாளர் அவரைப் பார்த்து அவருக்கு தெரிந்த தமிழில் , ‘சார் சேட்டுக்காக பாக்கறேன். உங்களால முடிஞ்சா செய்யிங்க.. சும்மா நம்மள அலைய விடாதீங்க..’ என்றார் சற்றே கோபமாக..

தனக்கே உரிய பாணியில் பிள்ளை உடனே எழுந்து அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டார் (அவருக்கு எங்கே மூன்று பஸ்சுகளுக்கு வேண்டிய கடன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்).

‘சார்.. அப்படியெல்லாம் இல்ல சார்.. அவன மறந்துடுங்க.. நான் இந்த தடவை கண்டிப்பா முடிச்சி தர்றேன். இங்க வர்றதுக்கு முன்னால நான் இப்ப சொன்ன மினிஸ்டரோட பி.ஏவை பார்த்துட்டுதான் வர்றேன். கவலைப்படாம கிளம்பி வாங்க.. தம்பி சொல்லுங்க..’ என்று என்னையும் சிபாரிசுக்கு அழைக்க.. நான் என் மேலாளரிடம் ‘கடைசியா ஒருதடவை போய்ட்டு வரலாம் சார்’ என்றேன்.

ஆக, நால்வரும் கிளம்பி சென்றோம்..

அவர் கூறியபடி, அன்று காணச்சென்ற அமைச்சர் மிகவும் நல்லவராய் தெரிந்தார். ( இப்போது அரசியலிலேயே காணோம்.. என்னவானார் என்றே தெரியவில்லை..)

அவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் (வக்கீலுக்கு படித்தவர் என்பதால் ஆங்கில புலமையும் இருந்தது) எங்களை அழைத்து பேசி இரண்டொரு நாட்களுக்குள் தலைவரிடம் இருந்து தியதியைப் பெற்றுத் தருவதாக சொன்னவர் அப்படியே செய்யவும் செய்தார்..

அதனாலேயே வந்தது வேறொரு விணை.

பிள்ளை உடனே நாங்கள் முன்பு சென்று கண்ட அமைச்சரின் பி.ஏவை தொலைப்பேசியில் அழைத்து முதலமைச்சரின் சம்மதம் கிடைத்த செய்தியை அறிவித்ததுடன் நிற்காமல் அவரை தாறுமாறாக ஏசிவிட விஷயம் அமைச்சரின் காதுகளுக்கு எட்டியது.

எல்லா இடங்களிலும் நீக்கமற பரவியிருக்கும் ஈகோ அமைச்சரைத் தூண்டிவிட தியதி பெற்றுக் கொடுத்த அமைச்சரை (அவர் பாவம் வயசிலும், அரசியல் அனுபவத்திலும் செல்வாக்கிலும் மற்றவரை விட மிகவும் ஜூனியர்) தன்னுடைய அரசியல் செல்வாக்கை உபயோகித்து மிரட்ட அவர் மிரண்டு போய் பிள்ளையை அழைத்து ‘நீங்க அந்த அமைச்சரைப் பார்த்த விஷயத்தை ஏங்க என்கிட்டருந்து மறைச்சீங்க?’ என்று கோபித்துக்கொண்டார்.

எனவே ஒரு Fire Fighting Exercise ஐ நடத்த வேண்டியிருந்தது..

நான், பிள்ளை மற்றும் சேட் (என் மேலாளர் ‘டி.பி.ஆர். இனி இவன்க முன்னாலெல்லாம் கை கட்டி காத்து நிக்க என்னால முடியாது. தேதி கிடைச்சாச்சி. இனி நீங்களே பாத்துக்குங்க.’ என்று ஒதுங்கிக்கொண்டார்) முதலில் கண்ட அமைச்சருடைய செயலாளரை பார்க்க தலைமைச் செயலக அலுவலகத்திற்கு சென்றோம்.

பிள்ளை ஏற்கனவே அவரை தாறுமாறாக பேசியிருந்ததால் அவர் அவருடைய அதிகாரத்தை காட்ட எங்களை நான்கு மணி நேரம் காக்க வைத்துவிட்டு அமைச்சரை காண சம்மதித்தார்.

எங்களை அறைக்குள் வர சம்மதித்த அமைச்சரோ ஒரு பதினைந்து நிமிடம் வரை எங்களை கண்டு கொள்ளவேயில்லை. (எல்லா அமைச்சர்களுடைய அறைகளிலும் சட்டமன்றத்தில் நடப்பவற்றை அவரவர் அறைகளிலிருந்தே கேட்பதற்கு வசதியாக ஒரு சிறிய ஒலிபெருக்கி (Speaker) பெட்டி வைக்கப் பட்டிருந்தது. அமைச்சர்கள் தங்களை காண வந்துள்ள பார்வையாளர்களிடம் பேசிக்கொண்டே சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை கேட்கவியலும். தேவைப்பட்டால் உடனே சட்டமன்றத்துக்கு சென்று பதில் அளித்துவிட்டு திரும்பிவந்து தங்களுடைய அலுவல்களை கவனிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன்.) ஆனால் நம்முடைய அமைச்சர் நாங்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தும் வேண்டுமென்றே ஒப்புக்கு பெறாத விவாதங்களை ஒலிபெருக்கி வாயிலாக கேட்பதிலேயே குறியாயிருந்தார்.

சுமார் அரைமணி கழித்து வேண்டா வெறுப்பாக கேலியுடன் பிள்ளையைப் பார்த்து ‘என்னங்க தலைவரோட டேட் கிடைச்சிருச்சி போலருக்குது.. அப்புறம் எதுக்கு வந்தீங்க?’ என்றார்.

பிள்ளை மனதிற்குள் என்ன நினைத்தார் என்பது வேறு விஷயம். ஆனால் வெளியில், பணிவுடன் ‘தம்பி, தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க ரொம்ப பிசியான அமைச்சர்.. அதான் அவர் வழியா முதலமைச்சரைப் பாக்கலாம்னு...’ என்று இழுத்தார்.

அமைச்சர் உடனே பெருந்தன்மையாக ஆனால் பந்தா சற்றும் குறையாமல் ‘ நானும் தலைவர்கிட்ட பேசிட்டேன். நீயும் அன்னைக்கி தலைமை தாங்க வந்துருய்யா.. அவனை வேணும்னா (அதாவது தேதி பெற்றுக் கொடுத்த அமைச்சர்) வந்து வாழ்த்துரை வழங்க வச்சிரலாம்னு சொல்லிட்டார். தலைவர் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டு குத்து விளக்கு ஏத்திட்டு உங்க கிளையை திறந்து வச்சி பேசுவார்.. அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணிருங்க.. ஆனா ஒன்னு. தலைவர் இதவரை இந்த மாதிரி வங்கி திறப்பு விழாவுக்கெல்லாம் ஒத்துக்கிட்டதே இல்லை. அதனால அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் ரொம்ப சிறப்பா இருக்கணும்... அப்புறம் நான் முன்னமே சொன்னா மாதிரி கொறைஞ்சது நூறு பேருக்காவது சின்ன சின்ன கடன்களை தலைவர் கையால மேடையில் வச்சி குடுக்கணும்.. ஜாஸ்தியா வேணாம்.. ஒவ்வொருத்தருக்கு ரு 1000 – 1500 வரை (1980ல் அதுவே பெரிய தொகை!) குடுத்தா போறும். ஒரு 25 பேருக்கு தையல் மிஷின் குடுக்கணும்.. ரெண்டு மூணு நாளைக்குள்ள நம்ம வட்ட செயலாளர் ... வந்து உங்கள பாப்பாரு.. (இந்த வட்ட செயலாளர் எம்.ஜி. ஆர் காலத்திற்குப் பிறகு தி.மு.க வுக்கு மாறி பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.) எல்லத்தையும் நல்லபடியா ஏற்பாடு பண்ணிட்டு என்னை வந்து பாருங்க..’ என்று வழியனுப்பி வைத்தார்.

வெளியே வந்த எனக்கு ‘அப்பாடா இந்த மட்டில் விட்டாரே.’ என்றிருந்தது..

பிள்ளை என்னைப் பார்த்து, ‘என்ன சார்.. சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டேன்ல? என் விஷயத்தை மறந்திடாதீங்க..(அதாவது அவருடைய மூன்று பேருந்துகள் வாங்க கடன்) கிளை திறந்தவுடனே உங்கள வந்து பாக்கறேன்.’ என்றவாறு விடை பெற்றுக்கொண்டார்.

பிள்ளை தலைமறைந்ததும் சேட் என்னைப் பார்த்து விஷமத்துடன் புன்னகைத்தார். ‘சார்.. இதெல்லாம் உங்களுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ்.. இந்த பிள்ளை இருக்கானே அவன் ஒரு பயங்கரமான ஆளு.. இவனையெல்லாம் எங்கள மாதிரி ஆளுங்களாலத்தான் டீல் பண்ண முடியும். பாருங்களேன் போன பத்துவருஷமா எங்க கிட்ட லோன் வாங்கி, வாங்கிதான் பெருசானான். இப்ப உங்க அறிமுகம் கிடைச்சதும் என்னை விட்டுட்டு உங்ககிட்ட தாவறான் பாருங்க. ஜாக்கிரதை சார், இவனுக்கு லோன் குடுத்தீங்க.. உங்க கேரியரையே நாசமாக்கிருவான்.’

‘இதெல்லாம் எனக்கு தெரியாதாக்கும்!’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவரைப் பார்த்து நன்றியுடன் புன்னகைத்தேன்.

‘நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ் சேட். பிள்ளை விஷயத்தை நான் எப்படி டீல் பண்ணிக்கணுமோ அப்படி டீல் பண்ணிக்கறேன். அத விட முக்கியம் இப்ப இந்த வட்ட செயலாளரை டீல் பண்றதுதான்.. நூறு பேருக்கு 1000 என்றாலே ஒரு லட்சம் ஆயிடும். தொகை பெரிசில்லதான். ஆனா ஃபார்மாலிட்டீசை கம்ப்ளீட் பண்றதுக்குள்ள போறும், போறும்னு ஆயிரும்.. நான் வரேன் சார். ஃபங்ஷன் வேலைகளை இப்பவே முடுக்கிவிட்டாத்தான் ரெண்டு வாரத்துக்குள்ள முடிக்க முடியும்.’

சாதாரணமாக சொல்லிவிட்டாலும் திறப்புவிழா ஏற்பாடுகளில் கட்சி தொண்டர்களும், லோக்கல் தலைவர்களும் தலையிட்டு கொடுத்த தொல்லைகள்... அப்பப்பா இப்போது நினைத்தாலும் உறக்கம் போய்விடுகிறது..

டென்ஷன்கள் தொடரும்..

10 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 11

எம்.ஜி.யாருடன் சந்திப்பு - 2

சிறிது நேரத்திற்கு பிறகு..

‘சொல்லுங்க சேட்.. யார் இந்த தம்பி? நீங்க சொன்னவர்தானா.. ரொம்ப சின்னவரா இருக்காரே.. இவரா மேனேஜர்?’ என்ற பிள்ளையிடம் என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் திகைத்த ‘சேட்’ என்னைப் பார்த்து ஒரு மாதிரி ‘வழிந்தார்’ என்றே சொல்லவேண்டும்..

பிறகு சமாளித்துக்கொண்டு..

இல்ல சார் .. இவர் வயசுலதான் சின்னவரு.. ஆனா திறமையிருக்கு.. (நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் சில பதிவுகளில் சுயபுராணம் இருக்கும் என்று. இது அதில் ஒன்று) என பதில் கூற..

பிள்ளை அப்போதும் திருப்தியடையாமல் என்னைப் பார்த்தார்..

பிறகு என்ன நினைத்தாரோ திரும்பி சேட்டைப் பார்த்தார்....

‘சார் எனக்கு இப்ப இருக்கற மினிஸ்டருங்கள்ல எல்லாரையும் தெரியும். இருந்தாலும் நம்ம ... அமைச்சரை எனக்கு ரொம்ப நாளா பழக்கம். அவர் நம்ம ஊர்காரர் வேற..
தம்பி ரொம்ப சின்ன வயசா இருக்கறதுனால நாம மினிஸ்டர பாக்க போறப்போ இப்ப இருக்கற பிராஞ்ச் மானேஜர்ல யாராவது ஒருத்தரையும் இந்த தம்பியோட சேர்த்து கூட்டிக்கிட்டு போனா நல்லதுன்னு நினைக்கறேன், தம்பி நீங்க தப்பா நெனச்சுக்காதீங்க.. இந்த மினிஸ்டருங்களே ஒருமாதிரி ஆளுங்க.. அதான் சொல்றேன்.’ என்றார்.

சேட் தர்மசங்கடத்துடன் என்னைப் பார்த்தார். பிள்ளையோடு சோபாவில் ஈஷிக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணின் பார்வையிலும் ஏளனம் தெரிந்தது..

நான் சட்டென்று முடிவுக்கு வந்தவன்போல் அவரைப் பார்த்து.. ‘நீங்க சொல்றது சரிதான். நம்ம மேனேஜரையே கூட்டிக்கிட்டு போலாம் சார். நான் அவர்கிட்ட பேசிக்கறேன். நீங்க என்னைக்கி போலாம்னு சொல்லுங்க..’ என்றேன்.

சேட் பிள்ளையைப் பார்த்தார்..

அவர், 'சரிங்க தம்பி. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க. நான் மினிஸ்டர் பி.ஏ. கிட்ட பேசிட்டு சொல்றேன்'. என்று கூற நானும் சேட்டும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம்.

அந்த சிறிதுநேர பேச்சில் பிள்ளை என்னுடைய வங்கி கிளை திறக்கப்பட்டதுமே ‘ஒரு மூனு பஸ்சுக்கு கடன் தரணும் சார்’ என்ற வேண்டுகோளை (ஏன் Order என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆரை ஏற்பாடு செய்வதென்றால் சும்மாவா என்பது போலிருந்தது அவருடைய பார்வை) முன் வைத்தார். ‘அதெல்லாம் சார் செய்திருவார். நீங்க நம்ம தலைவரோட டேட் வாங்கி குடுங்க’ என்று சேட்டும் மறுமொழிய.. ‘பிடிச்சிதுரா சனியன்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அசடு வழிந்தேன் ஒன்றும் சொல்லாமல்.

‘சேட். டேட் வாங்கிக் குடுக்கறது என் பொறுப்பு. அதே போல நான் கேட்டதை முடிச்சி குடுக்கற வேலை உங்களோடதும் இந்த சாரோடதும் பொறுப்பு.(அதுவரை ‘ரொம்ப சின்னவராயிருக்காரே’ என கேலியுடன் பார்த்தவர் சட்டென்று ‘சார்’ என குறிப்பிட்டதை நான் கவனிக்க தவறவில்லை)

சேட் என்னைப் பார்த்து சைகை செய்ய நானும் சரியென்று ஒப்புக்கு தலையசைத்து வைத்தேன். என்னையுமறியாமல் கலைஞரிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அழைத்துச் சென்ற ‘செட்டியாரை’ நினைத்துக்கொண்டேன்.

ரெண்டு நாள் என்றவர் இரண்டு வாரமாகியும் யாதொரு தகவலும் தராதிருக்கவே தொலையட்டும் தொல்லை என்ற நினைப்பில் சென்னை மாவட்ட ஆட்சியரை அழைக்கலாமா என்ற எண்ணத்தில் சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம்..

சுமார் நான்கு வாரங்களுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் சேட் என்னை தொலைப்பேசியில் அழைத்து ‘சார்.. நாளைக்கி காலைல ஏழு, ஏழரை மணிக்கி State Guest Houseக்கு மேனேஜரை கூட்டிக்கிட்டு வந்துருங்க.. மினிஸ்டர் Secretariatடுக்கு போறதுக்குள்ள புடிச்சிரலாம்னு பிள்ளை சொல்றார், வர்றீங்களா’ என நானும் மேனேஜரும் செல்வதென தீர்மானித்து அடுத்த நாள் காலையிலேயே எழுந்து Guest House வாயிலை அடைந்தோம். சேட்டும் பிள்ளையும் அரை மணிகழித்து அவரவர் கார்களில் வந்தனர்.

பிள்ளை கூறிய அமைச்சர் மிகவும் இளைஞராயிருந்தார் (பெயர் வேண்டாம். அவர் இப்போதும் அரசியலில் இருக்கிறார். எதிர்கட்சிகளில் ஒன்றில். பதவியில் இல்லையென்றாலும் அவர் இப்போதும் சற்று வல்லமையுள்ளவர். பெரிய பந்தா பேர்வழி. நான் அவரை முதன் முதலில் சந்தித்தபோது வேட்டி, கைவைத்த பனியனில் - அங்கும் இங்கும் ஓட்டைகள் - கையில் அன்றைய தமிழ் செய்தித்தாளுடன் ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார். இப்போது அவருக்கு மூன்று நான்கு ரைஸ் மில் என கோடி கணக்கில் சொத்து!) அப்போதுதான் முதன் முதலாய் தேர்தலில் நின்று ஜெயித்து அமைச்சராகியிருந்தார்.

பிள்ளை மிகவும் சர்வசாதாரணமாக அவரைப் பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் இவரைப் பார்த்த பார்வையில் ‘யோவ் என்ன ரொம்பத்தான் பண்றே..’ என்பது தெளிவாய் தெரிந்தது. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னையும் என்னுடைய கிளை மேலாளரையும் பார்த்து, ‘சார் நீங்க நினைக்கறா மாதிரி தலைவரை இந்த மாதிரி பங்ஷனுக்கெல்லாம் கூப்டுற முடியாது.. இருந்தாலும் முயற்சி பண்றேன்.. நீங்க ரெண்டு வாரம் கழிச்சி என் பி.ஏ.வை கூப்டு ஞாபகம் படுத்துங்க. என்னால என்ன முடியுமோ செய்யறேன். ஆனா ஒன்னு. இப்பவே சொல்லிடறேன்.. தலைவர் வர்ற அன்னைக்கி சாமான்யபட்டவங்களுக்கு அவர் கையால ஏதாச்சும் லோன், கீன் உங்க பேங்க்லருந்து குடுக்கணும். எவ்வளவு குடுக்கணும் எத்தனை பேருக்கு குடுக்கணும்னு நம்ம லோக்கல் வட்ட செயலாளர் உங்க கிட்ட சொல்லுவார்.. என்ன சொல்றீங்க?’ என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.

அவர் வேகத்துடன் பேசிய தமிழ் சரியாய் புரியாமல் என்னுடன் வந்த மேலாளார் (கேரளாவைச் சேர்ந்தவர்) எல்லாவற்றுக்கும் முகம் நிறைய சிரிப்புடன் ‘நோ ப்ராப்ளம் சார், நோ ப்ராப்ளம் சார்.’ என ஆமோதிக்க நான் சங்கடத்துடன் நெளிந்தேன்.

பிள்ளையும் அவருடைய அவமதிப்பை பொருட்படுத்தாமல் அசட்டு சிரிப்புடன் ‘சார் (என்னைத்தான் சொல்கிறார்!) அதெல்லாம் செஞ்சிருவார் தம்பி (இது அமைச்சரை!). நீங்க கவலைப்படாதீங்க..’என வழிமொழிந்தார்..

அமைச்சர் பெரிய பந்தாவுடன் எழுந்து நிற்க (அதாவது நீங்க போகலாம் என்ற தோரணையில்) நாங்களும் எழுந்து பேருக்கு சிறிதாய் புன்னகைத்துவிட்டு வெளியே வந்தோம்.

பிள்ளை எங்களுடன் வெளியே வராமல் ‘சேட் நான் அமைச்சருடன் சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது நீங்க சாரைக் கூப்டுக்கிட்டு போங்க’ எங்களை வழியனுப்பி வைத்தாலும் அடுத்த சில நொடிகளிலேயே அவரும் வெளியே வந்ததிலிருந்தே அமைச்சரிடம் அவருக்கிருந்த செல்வாக்கு எனக்கு புரிந்தது!

இருப்பினும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் (சூரியனில் வரும் கவுண்டமனியை நினைவுக்கு வருகிறது) வெளியே வந்து சேட்டை தனியே அழைத்துக்கொண்டு போய் ‘.....யா பய. போஸ்ட்டுக்கு வந்ததுமே பழசையயெல்லாம் மறந்துடறானுங்க... சிங்கிள் டீக்கு என் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில வந்து கிடப்பான் சேட் இவன்.. வச்சிக்கறேன் இவன..’ என்று அடிக்குரலில் புலம்பிவிட்டு (அவருடைய அடிக்குரலே பத்தடி தூரம் வரைக் கேட்டது. தொலைப்பேசியில் அவர் பேசுவதைக் கேட்பதே ஒரு வேடிக்கை. கை, கால், உடம்பு என எல்லாவற்றையும் சேர்த்து ஆட்டிக்கொண்டு தொண்டைக் கிழிய கத்துவார். எதிர்முனையில் இருப்பவர் ஒலிவாங்கியை குறைந்தபட்சம் ஒரு அடியாவது தள்ளி பிடிக்கவேண்டும்) என்னைப் பார்த்து, ‘சார்.. மினிஸ்டர்கிட்ட தம்பி நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்னு சொல்லிட்டு வந்தேன். நீங்க மானேஜர கூட்டிக்கிட்டு தைரியமா போங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். என்ன சேட், சொல்லுங்க சார் கிட்ட’ என்று அசடு வழிந்துவிட்டு.. அவருடைய காரில் ஏறி செல்ல.. நானும், மானேஜரும், சேட்டும் ஒரு காரில் ஏறி திரும்பி வந்தோம்..

சங்கடங்கள் தொடரும்..

09 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் – 10

எம்.ஜி.ருடன் சந்திப்பு - 1

1979ம் வருடம் ஜனவரி மாதம்..

மும்பையிலலிருந்து மீண்டும் சென்னை மத்திய கிளைக்கு மாற்றப்பட்டேன்.. (இக்கிளை சென்னை தங்கசாலை தெருவிலிருந்து இட நெருக்கடி காரணமாக சென்னை 1 பகுதிக்கு மாற்றப்பட்ட கிளையாகும்).

என்னுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் (பெண் தூத்துக்குடியைச் சார்ந்தவர்) என் தந்தையின் நிர்பந்தம் காரணமாக (மாப்பிள்ளை மும்பையிலிருந்து மாறி சென்னை வந்தால்தான் பெண் கொடுப்போம் என்ற நிபந்தனையாம். எனக்கு அப்போது இது தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருப்பாய் என்று என் தந்தை கேட்பது என் மனதில் கேட்கிறது.என் தந்தை காலமாகி பதினைந்து ஆண்டுகளாகின்றன. ) என்னுடைய மேலதிகாரிகளின் கை, காலில் விழுந்து (ஒரு பேச்சுக்கு சொன்னேன்) மும்பையிலிருந்து மாற்றம் பெற்று வந்தேன்.

காதலர் தினத்தன்று!! (அப்போதெல்லாம் யாருக்கு தெரியும் இது காதலர் தினமென்று?) என்னுடைய திருமணம் தூத்துக்குடியில் நடந்தது..

அதே வருடம் (எத்தனை சுறுசுறுப்பு பாருங்கள்) டிசம்பர் மாதம் அழகாய் ஒரு பெண் குழந்தை.

(போதும் சுயபுராணம். எம்.ஜி.ர் விஷயத்துக்கு வாங்க என்று நீங்கள் முணகுவது கேட்கிறது)

மகள் பிறந்த ராசி..

அடுத்த சில மாதங்களிலேயே மேலாளர் பதவி..

1980ம் வருடம் ஜூலை மாதம்..

மேலாளரான பதவி உயர்வு கிடைத்த எல்லோருமே ஊர் மாற்றம் செய்யப் படுவர். சாதாரணமாக கிராமப்பகுதியில்தான் முதல் Posting இருக்கும்..

என்னுடைய அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை..

சென்னையில் மீண்டும் ஒரு கிளை திறந்தாலென்ன என்று என்னுடைய தலைமை அலுவலகத்துக்கு தோன்றியது..

சென்னை தங்கசாலைத் தெருவில் இடம் பிடித்தவன் என்ற முறையில் மீண்டும் அந்த பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.. அப்போதும் புதிய கிளைக்கு நானே மேலாளராக நியமிக்கப்படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை..

மிகுந்த சிரமத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் ஒரு அருமையான இடம் கிடைத்தது.. அப்போது அச்சாலையில் மூன்றோ நான்கோ வங்கிகளே இருந்தன.

இடம் கிடைத்ததும் மேலாளராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.

அப்போதைய மதுரைக் கிளை மேலாளராக இருந்தவரும்.. தலைமை அலுவலகத்தில் இருந்த வேறொரு சீனியர் அதிகாரியும் அப்பதவிக்கு நீ, நான் என்று போட்டியில் இறங்க.. என்னை ஒரு காம்ப்ரமைஸ் கான்டிடேட்டாக கருதி நியமித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும் (அதாவது என்னுடைய தனித்திறமை என்று எதுவும் இதற்கு காரணமில்லை என்று சொல்ல வருகிறேன்.)!

ஆக என்னுடைய மேலாளர் பதவி காலம் ஒரு புதிய கிளையைத் திறப்பதன் மூலம் ஆரம்பமானது.

சரி.. பிறகு யாரை வைத்து திறப்பது என்ற கேள்வி..

தங்கசாலை தெரு கிளை திறக்கப்படும்போது என்னுடைய வங்கியின் தங்க ( Golden )ஜூபிலி என்றால் 1980ல் வைர (Diamond) ஜூபிலி வருடம்!

ஆகவே அன்று போலவே இன்றைய தமிழக முதல்வரை திறப்பு விழாவுக்கு அழைத்தால் பொருத்தமாயிருக்கும் என எங்களுடைய தலைமை அலுவலகம் தீர்மானித்தது.

அன்று பிடித்த சனி.. என்னை விட்டு அகல சரியாய் மூன்று மாதங்கள் எடுத்தது!

அது எம்.ஜி.ர் அவர்கள் இரண்டாவது முறையாக தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த சமயம்.

என்னுடைய மத்திய கிளையின் வாடிக்கையாளர்களில்(எங்களுடைய வாடிக்கையாளர் ஒரு பெரும் Financier – Hire Purchase திட்டத்தில் பெரிய Transport நிறுவனங்களுக்கு Trucks & Lorries வாங்க கடன் கொடுப்பவர். அவரை சேட் என்று மட்டும் குறிப்பிடுகிறேன்) ஒருவரின் வாடிக்கையாளர். அவருடைய மாவட்டத் தலைநகரத்தில் மிகப்பெரிய Goods மற்றும் Public Transport நிறுவனத்தை நடத்தி வந்தார்.(இப்போதும் பிரபலமாயிருப்பவர். அதனால் அவருடைய பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய குலப்பெயரை வைத்து ‘பிள்ளை’ என்று குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்). அவருக்கு தமிழகத்திலுள்ள எல்லா கட்சியினரிடமும் - முக்கியமாக அ.தி.முகவுடன் (அப்போது அது அகில இந்திய கட்சியாக இருக்கவில்லை) மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். இப்போது எப்படியோ தெரியவில்லை..

எங்களுடைய வாடிக்கையாளர் சென்னை மத்திய கிளை தங்கசாலைத் தெருவில் துவக்கப்பட்ட வருடம் முதலே கணக்கு வைத்திருப்பவராதலால் எனக்கு மிகவும் பழக்கமானவர்.

ஆகவே நான்தான் புதிய கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்பதை நான் அறிவதற்கு முன்பே அறிந்ததும் (அவருக்கு என்னுடைய தலைமை அலுவலகத்திலும் அத்தனை செல்வாக்கு இருந்தது.. இப்போது சகோதரர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு தொழிலையே மூடிவிட்டு ராஜஸ்தான் திரும்பி சென்றுவிட்டார் என்று கேள்வி) ‘ஜோசப்.. நம்ம ‘பிள்ளை’ ரெண்டு நாள்ல மெட்றாஸ் வர்றார். எப்படியும் ஒருவாரம் இருப்பார். அவர் கிட்ட அறிமுகப்படுத்தி விடுறேன். அவருக்கு ரெண்டு மூனு மினிஸ்டர்சை நல்லா தெரியும். அவங்க வழியா போனா எம்.ஜி.ர். கண்டிப்பா ஒத்துக்குவார்..’ என்று கூறி அடுத்த சில நாட்களில் என்னை அழைத்துக்கொண்டு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு (அப்போதே அது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலாக இருந்தது. இப்போது அது சென்னையில் மிகவும் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுள் ஒன்று) அழைத்து சென்றார்.

நாங்கள் வருகிறோம் என்று முன்கூட்டியே அறிவித்திருந்ததால் நாங்கள் ஹோட்டலை அடைந்து அவருடைய அறைவாசலில் இருந்த அழைப்பு மணியை அமுக்க, ‘வாங்க சேட். வாங்க.’ என்று உள்ளிருந்தவாறே குரல் வர அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைய அங்கே நான் கண்ட காட்சி..

இப்போது பிரபலமாயிருக்கும் ஒரு நடிகையின் தாயும்.. அவரும்.. இருந்த கோலம்... (சாரி காசி சார்! இத்தோடு நிறுத்திட்டேன். அப்புறம் இந்த பதிவுக்கும் ‘ரெட்’ போட்டுறாதீங்க).

‘இதெல்லாம் இங்கே சகஜமப்பா’ என்ற கோலத்தில் என்னை அழைத்துவந்த ‘சேட்’ அப்பெண்ணைப் பார்த்து ‘எப்படி இருக்கீங்க மேடம். உங்கள பாத்து ரொம்ப நாளாச்சிதே.’ என்று குசாலம் விசாரிக்க அவர் சாகவாசமாக ஆடையை சரி செய்துக்கொண்டு எழுந்து சோபாவில் அமர்ந்து என்னை கண்டுகொள்ளாமல் ‘சேட்’டிடம் குழைய.. நான் என்ன செய்வதென்று தெரியாமல் பார்வையை அறையை சுற்றி ஓடவிட்டேன்..

சிறிது நேரத்திற்கு பிறகு..

‘சொல்லுங்க சேட்.. யார் இந்த தம்பி? நீங்க சொன்னவர்தானா.. ரொம்ப சின்னவரா இருக்காரே.. இவரா மேனேஜர்?’ என்ற பிள்ளையிடம் என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் திகைத்த ‘சேட்’ என்னைப் பார்த்து ஒரு மாதிரி ‘வழிந்தார்’ என்றே சொல்லவேண்டும்

(நினைவலைகள தொடரும்..)


இப்போது என்னுடைய நேற்றைய பதிவைப் பற்றி..

என்னுடைய மும்பை ரெட்-லைட் அனுபவங்களைப் பற்றி நான் எழுதிய முதல் இரண்டு பதிவுகளைப் பற்றி யாருமே பெரிசாய் கண்டு கொள்ளாததால் என்ன செய்வதென்று குழம்பி எழுதாத ஒரு பதிவை (நேற்றைய பதிவு) யாரோ ‘நிர்வாகி’ நீக்கியதாய் எழுதி ஒரு Sensation ஐ உற்பத்தி செய்யலாம் என்று நினைத்ததன் விளைவுதான்..

Did it create any big response. Yes, to a certain extent. It resulted in the biggest number of hits to my blog since becoming a member in thamizhmanam!!

பலரும் ஆர்வத்துடன் (I don't blame them) தங்களுடைய ஈமெய்ல் விலாசங்களை அனுப்பியிருந்தனர்..

அவர்களுக்கெல்லாம் ஒரு ஹி, ஹி!!

அது சரி! என்னுடைய நேற்றைய பதிவின் தியதியைப் பாருங்கள், புரியும்.

ஒரே ஒருவர்தான் பார்த்துவிட்டு பின்னூட்டம் இட்டுள்ளார்.. அதன் பிறகு யாரும் ஈமெய்ல் அனுப்பவில்லை.. அவருக்கு என் கண்டனங்கள்.. Suspenseஐ உடைத்ததற்காக!

அவருடைய பெயர்தான் தெரியவில்லை.

ஆனாலும் அவருடைய Sense of Observationக்காக அவருக்கு எல்லா தமிழ்மணம் வாசகர்கள் சார்பிலும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ போட்டுட்டேன்.

மற்றபடி நம்முடைய தமிழ்மணம் நண்பர்கள் பயங்கர புத்திசாலிகள்..

அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல...

திரும்பிப் பார்க்கிறேன் - 9

திரும்பிப் பார்க்கிறேன்.


எனது மும்பை ரெட்-லைட் அனுபவம் - 3

இப்பதிவு திரட்டப்படத் தேவையில்லாதது என கருதப்படுவதால் முற்றிலுமாக நீக்கப்படுகிறது..
நிர்வாகி

08 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 8

மும்பை ரெட்-லைட் அனுபவம் - 2

வீட்டின் வாயில் குறுகியதாக இருந்தாலும் வீடு உள்ளே விசாலமாக இருந்தது.

நாயகனில் காட்டப்பட்ட ‘பலான’ வீட்டை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். ஏறக்குறைய அதேபோல் நடுவே பெரிய ஹால், அதைச்சுற்றிலும் வாயிலில் Gaudy கலர்களில் தொங்கிய திரைச்சீலைகளுக்குப் பின்னாலிருந்த, புறாக்கூடுபோன்ற அறைகள்.. (கீழே ஒரு சாம்பிள் அறையின் உள்ளே) என திரையில் காட்டப்பட்ட அதே வீடு, அப்படியே அச்சாய்.

Image hosted by Photobucket.com

எங்களுடன் வந்த நிரூபரை முன்னே விட்டு நாங்கள் அவர் பின்னாலேயே போனோம்.

நடுவிலிருந்த ஹால் நிறைய பெண்கள், பெண்கள், பெண்கள்.. எல்லா வயசிலும் (படிவாலி (வயதானவர்கள்), சோட்டிவாலி (வாலிபிகள்)), நிறத்திலும், உயரமாய், குட்டையாய், மெலிவாய், தடியாய்..

எல்லோர் கண்களும் கூட்டமாய் உள்ளே நுழைந்த எங்களையே பார்க்க (தப்பித்தவறி நம் கண்கள் அவர்களுடைய கண்களை சந்தித்துவிட்டால் கண்களை சிமிட்டி, ஆபாச சைகைகளுடன் அழைத்தனர்), எங்கள் தலைவர் நேராக நடு ஹாலைக் கடந்து நேர் எதிரே அமைந்திருந்த ஒரு அறையின் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தார்.. நாங்களும் அவசர அவசரமாய் அவர் பின்னே நுழைய அறைக் கதவுகள் மூடப்பட்டன..

உள்ளே ஆச்சரியப்படக்கூடிய அளவிலான நவீன அலங்காரங்களுடன் கூடிய விசாலமான ஹால்.. சுற்றிலுமிருந்த சுவரையொட்டி தரையில் இடப்பட்டிருந்த வெள்ளை நிற மெத்தைகள்.. ஹிந்தி திரைப்படங்களில் வருவதுபோல்.. பணம் படைத்தவர்களை உபசரிக்க இப்படி சில வீடுகளில் மட்டும் வசதிகள் உண்டாம்!

ஹாலுக்கு நடுவே ஐந்து பேரடங்கிய இசைக்குழு.. நடுநாயகமாய் ஆஜானுபாகுவான.. அளவுக்கு மிஞ்சிய அரிதாரம், நகைகள் (போலியாகத்தானிருக்க வேண்டும்) நெற்றியில் பெரீஈஈஈய (அத்தனை பெரிசு!) சாந்து பொட்டு..என அமர்ந்திருந்த ஒரு பெண்மனியிடம் சென்று குனிந்து நம்முடைய நிரூபர் ஏதோ சொல்ல.. அந்த பெண் திரும்பி ‘ஆவோரே..’ என்று ஹாலுக்கு வலகோடியிலிருந்த மாடிப்படியை நோக்கி கூவ.. ஹிந்தி படங்களில் வருவதுபோல் ஆடை அலங்காரங்களுடன் நான்கைந்து பெண்கள் வெளியேறி ஹாலுக்கு வர... அடுத்த இருபது நிமிடங்கள்.. It was really a wonderful performance of hindusthani music and dance..

அன்றைய காமத்திப்புரா விஜயத்தில் இது ஒன்றுதான் இன்றும் சந்தோஷத்துடன் நினைவிலிருப்பது...

நடனம் முடிந்தவுடன் எங்களுடைய அன்றைய தலைவரும் என் நண்பர்களும் கூடி ரகசியமாய் ஹிந்தி, மராத்தி கலந்த கலவையாய் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

இதற்கிடையில் நடன மற்றும் இசைக்குழு ஹாலிலிருந்து வெளியேற அதே மாடிப்படி வழியாக முன் ஹாலில் பார்த்த பெண்களைப் போலல்லாமல் சற்றே பணக்காரத்தனமான, அழகான, வயது மிகவும் குறைந்த இளம் பெண்கள் இறங்கி வந்து ஹாலை அடைத்துக்கொண்டு வெவ்வேறு போஸ்களில் நின்றுக்கொண்டு எங்களையே வைத்த கண் வாங்காமல் பார்க்க.. அதுவரை என்னிடமிருந்த தைரியம் போய் நிரூபரிடம் பேசிக்கொண்டிருந்த ஐயருடைய சட்டையை பிடித்து இழுத்தேன்..

‘என்ன சார்.. ஏதாவது வேணுமா?’ என்றார் விஷமத்துடன். ‘ஜாஸ்தியா சொல்றாங்களாம் அதுதான் ரேட் பேசிக்கிட்டிருக்கோம்..’

எனக்கோ அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது..

‘இல்ல சாமி, எனக்கென்னவோ இது சரியில்லாத மாதிரி...’ என்று இழுத்தேன்.

‘உங்க டென்ஷன் புரியுது.. உங்களுக்கு வேணாம்னா வேணாம். ஆனா இவ்வளவு தூரம் வந்திட்டு.. ஒன்னும் வேணாம்னு எழுந்து போக முடியாது.. அதுவுமில்லாம.. நம்ம பசங்க விடமாட்டாங்க.. நான் வேணா உங்களோட இங்கயே இருக்கேன். அவனுங்க போயிட்டு வரட்டும். ஜஸ்ட பத்து, பதினஞ்சி நிமிஷம்தான்.. Don’t worry.’

ஐயர் போய் என்ன சொன்னாரோ என் நண்பர்களில் பலரும் பரிதாபமாய் என்னைப் பார்த்தனர். வேறு சிலரின் பார்வையில் ‘யே மதறாசி லோக் ஐசாயி ஹை!’ (இந்த மட்றாஸ் பசங்க அவ்வளவுதான்.) என்பதுபோல் தெரிந்தது. நான் பார்த்தும் பார்க்காததுபோல் குனிந்துக்கொண்டேன்.

அடுத்த இரண்டொரு நிமிடங்களில் ரேட் படிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை இழுத்துக்கொண்டு சென்று மறைய நான், ஐயர், நிரூபர் (அவர் டியூட்டியில் இருக்கிறாராம். அதனால்தான்..) என மீதமிருந்த எங்களை ஏளனத்துடன் பார்த்து முகத்தை சுளித்து பழிப்பு காட்டிவிட்டு மீதமிருந்த பெண்களும் நகர நாங்கள் மூன்று பேர் மட்டும் அவர்கள் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.

இவ்விஷயத்தில் மிகவும் அனுபவசாலியான அவரிடமிருந்து சேகரித்தவைகளை கீழே கொடுத்துள்ளேன்.

அலிகளின் விளையாட்டு

Image hosted by Photobucket.com

மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே விளங்கும் என்று நினைக்கிறேன் (முகச்சவரம் செய்துகொண்டிருப்பவர்!) முன் பின் தெரியாதவர்கள் தனியாய் காமத்திபுராவில் நுழைந்துவிட்டால் அவர்களை இப்பகுதி முழுவதும் நிறைந்திருக்கும் தரகர்கள் (இவர்களில் சில தாராவிப் பகுதி தமிழர்களும் உண்டு) அழைத்துச் செல்வது இவர்களிடம் தான்!

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com

குழந்தைகளை அருகிலேயே வைத்துக்கொண்டு தொழிலில் ஈடுபடும் பெண்களும் உண்டு. இந்நரகத்தில் வந்து சிக்கிக்கொள்ளும் குடும்பப் பெண்களும், இங்கு வந்த பிறகு துரதிர்ஷ்டவசமாய் தாய்மை அடைந்தவர்களும் உண்டு. தப்பித்தவறி, கவனக்குறைவால் (ஆரம்பக் காலங்களில்) கருத்தரிக்கும் பெண்கள் கருவுற்றிருப்பதை காலங்கடந்து கண்டுபிடித்து வேறுவழியில்லாமல் பெற்றெடுத்து அவர்களையும் தங்கள் கூடவே வைத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் இங்கே நிறையவே இருந்தனர்.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

ஒரே அறையில் அடுக்கடுக்காக அமைக்கப்பட்ட படுக்கைகளும், ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் இங்கு சர்வசாதாரணம்.

இங்கு வந்துவிட்டு பிரைவசியைத் தேடுபவர்கள் முட்டாள்கள். Where ignorance is bliss it is folly to be wise என்பதுபோல் இங்கு வந்து விட்டால் where accommodation is scarce it is folly to seek private place!!

இங்க இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமனி ஜாடையில் போய்விட வேண்டியதுதான்!

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

பால் மணம் மாறாத வயதிலேயே இளம் பெண்களைக் கடத்திக்கொண்டு வந்து தொழிலில் ஈடுபடச் செய்யும் கயவர்களும் இங்கு ஏராளம், ஏராளம்.

மேலே உள்ள படங்களே இதற்கு சாட்சி (இப் பதிவிலும் இதன் முந்தைய பதிவிலும் வெளியடப்பட்டுள்ள படங்கள் யாவும் பல இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. நான் அங்கே விஜயம் செய்தபோது என்னிடம் நிரூபர் கொடுத்த படங்கள் இப்போது என்னிடம் இல்லை. ஆனால் ஏறத்தாழ இதுபோன்ற படங்கள்தான் அவை.

அன்று நிரூபர் நண்பர் எங்களுடன் பகிர்ந்துக் கொண்டவைகள் பலவும் என்னுடைய மனதை வெகுவாக பாதித்தன.

நாங்கள் அன்று அப்பகுதியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும்போது மும்பை காவல்துறை அவ்வப்போது நடத்தி முடிக்கும் வேட்டை நாடகம் ஆரம்பித்தது. நல்ல வேளை. நம் நிரூபர் மும்பை காவல்துறையினருக்கும் அறிமுகமாயிருந்ததால் நாங்கள் தப்பித்தோம். ஐந்தாறு வேன்கள் நிறைய வந்திறங்கிய காவலர்கள் சகட்டு மேனிக்கு அப்பகுதியிலிருந்த பலரையும் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்களுக்கு ஒழுங்காக 'மாமூல்' கொடுக்காத வீடுகளில் புகுந்து தொழிலில் ஈடுபட்டிருந்த விற்பவர்,வாங்குபவர்! (ஐ மீன் வாடிக்கையாளர்கள்)எல்லோரையும் அள்ளிக்கொண்டு செல்ல அன்றைய எங்களுடைய காமத்திப்புரா விஜயம் என் நண்பர்களில் பலருக்கு மகிழ்ச்சியாகவும் என்னைப் போன்ற சிலருக்கு (உண்மையத்தாங்க சொல்றேன். நம்புங்க)வேதனையையும் தந்தது!

இத்தனை வேதனைகளுக்கிடையிலும் வருவோரை இயந்திரத்தனமாய் மகிழ்வித்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று அழைக்கிறது இந்த சமுதாயம்?
வேசி!..

ஆங்கிலத்தில் இவர்களை நாசூக்காக செக்ஸ் வொர்க்கர்ஸ் என்கிறார்கள்!

(தொடரும்)

07 November 2005

திரும்பிப் பார்க்கிறேன் – 7

என்னுடைய மும்பை வாசம் துவக்கத்தில் மகா போராக (Bore) இருந்தது. நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து என்னுடைய கிளைக்கு சென்றடைய சுமார் பத்து நிமிட நடை போதுமாயிருந்தது.

வார நாட்களில் வேலை முடிந்து வீடு சென்றடைய இரவு 9.00 மணியாகிவிடும். செம்பூர் புறநகர் ரயிலடியருகே இருந்த ஒரு தமிழ் உணவகத்தில் உணவருந்திவிட்டு காலாற ஒரு அரைமணிநேரம் சுற்றிலுமிருந்த தெருக்களில் (அப்போதெல்லாம் 1978ல் இப்போதுள்ள அளவுக்கு ஜன நெருக்கடியிருந்ததில்லை.)நடந்துவிட்டு வீடு சென்றடைவேன். பாக்கெட் டிரான்சிஸ்டரில் (அப்போதெல்லாம் டி.வி. பிரபலமடைந்திருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் மும்பை தூர்தர்ஷனை விட்டால் வேறு கதியில்லை. சனிக்கிழமை இந்திப் படமும், ஞாயிற்றுகிழமையில் மராத்தி படமும் போடுவான். ஒன்றும் விளங்காது.) சிலோனிலிருந்து வரும் தமிழ்பாட்டைக் கேட்டுவிட்டு பதினோரு மணியளவில் உறங்க சென்றுவிடுவேன்.

என்னுடைய கிளையில் இருந்த பாலக்காட்டு ஐயரைத் தவிர நண்பர்கள் வேறு யாருடனும் சகஜமாய் பழக ஆரம்பிக்காதவரை மும்பை வாசம் நரகமாயிருந்தது.

நாளடைவில் நண்பர்கள் வட்டம் பெருக, பெருக மும்பையில் பல இடங்களுக்கும் வார இறுதிகளில் (Week ends) சென்று வர ஆரம்பித்தேன்.

ஒரு சனிக்கிழமை என் நண்பர்களுள் ஒருவர் பாலக்காட்டு ஐயரிடம் என் காதுபட ‘அரே ஜோசப் சாப்கோ க்ராண்ட் ரோட் பர் லேகே ஜானேகா ரே.’ (டேய், நம்ம ஜோசப் சாரை க்ராண்ட் ரோட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணுன்டா.) என்றார்.

பாலக்காட்டு ஐயர் என்னை விஷமமாகப் பார்த்து கண்ணடித்தார். ‘என்ன சார், போலாமா?’. எனக்கு ஒன்றும் புரியவில்லை..

‘என்ன சாமி, என்ன சொல்றீங்க?’ (ஐயரை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம்) என்றேன்.

ஐயரும் என்னைச் சுற்றிலுமிருந்த நண்பர்களும் ஒருவர் ஒருவரைப் பார்த்து சிரித்துக்கொண்டுவிட்டு என்னைப் பார்த்தனர். ‘அரே க்யா ரே. சாப் ஷராப் பி நஹி பீத்தா ஹை. இன்கோ உதர் லேக்கே ஜாக்கே க்யா திக்கானேக்கா யார்?’ (சார் தண்ணி?! கூட அடிக்க மாட்டேங்கிறார். இவர அங்கல்லாம் கூட்டிக்கிட்டு போய் என்னத்த காமிக்கறது?).

அப்போதெல்லாம் லகுவாக இந்தி புரிந்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் கூட இல்லாததால் இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தலையே வெடித்து விடும்போலிருந்தது.

‘ஐயரே.. என்ன பத்தி இவனுங்க ஏதோ சொல்றானுங்கன்னு மட்டும் தெரியுது. என்னன்னு புரியல. நீங்களாவது சொல்லுங்களேன்.’ என்றேன்.

ஐயர் குழுமியிருந்த நண்பர்களை ஒருமுறை பார்த்துவிட்டு என்னிடம் தயக்கத்துடன், ‘சார் நீங்க தப்பா நினைச்சுக்கலனா, ஒன்னு சொல்றேன்.’ என்றார்.

‘சொல்லுங்க’ என்றேன்.

‘நீங்க ரெட்லைட் ஏரியான்னு கேள்விப்பட்டிருப்பீங்க.’

‘சரி’

‘இன்னைக்கி சாயந்திரம் அங்கல்லாம் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமான்னு பசங்க சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு இஷ்டமில்லன்னா.. கட்டாயப்படுத்தல..’

“எலேய் நீ அங்க ஏதாவது தப்புத் தண்டா பண்ணேன்னு தகவல் கிடைச்சது, நீ என் மகனே இல்லேன்னு தலைய முழுகிடுவேன்..’ என் தந்தை மும்பைக்கு வழியனுப்பும் போது கூறிய வார்த்தைகள் சமயம் பார்த்து என் செவியில் ஒலித்தன!

‘இந்த விஷப் பரீட்சை வேணுமா சாமி..’ என்றேன் என் நண்பரைப் பார்த்து.

‘உங்களுக்கு வேணாம்னா விட்டுரலாம் சார்.. பக்கத்துலருக்கற டிஸ்க்கொத்தேக்கு வேணா இன்னைக்கி போயிட்டு வரலாம்..’

ஐயரின் குரலில் ஒலித்த கேலி என்னை என்னவோ செய்ய சட்டென்று முடிவெடுத்தேன். என்னதான் நடக்குதுன்னு பாத்துருவமே.

‘சரி சாமி. போலாம்.’

‘இன்னைக்கே போலாமா?’ என்றார் சுற்றிலுமிருந்த நண்பரகளைப் பார்த்தவாறு.

‘சரி.’

‘அரே, சாப் ஜாயேகா போல்தா ஹை. சலோ.’ (சார் போலாம்னு சொல்லிட்டார்றா.. போலாம் வாங்க) என்று மும்பை நண்பர்களைப் பார்த்து சந்தோஷமாய் கூற நண்பர் பட்டாளம் நான் ஏதோ பெரிசாய் சாதித்துவிட்டதுபோல் என் கையைப் பிடித்து குலுக்கியது..

காமத்திப்புரா

இதுதான் மும்பை ரெட்-லைட் பகுதியின் பெயர்.
Image hosted by Photobucket.com

கிரான்ட் ரோட் இப்பகுதியின் பிரதான தெரு.

அங்கு செல்வது என்று முடிவெடுத்த பிறகு என்னுடைய மும்பை நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஒரு மராத்தி பத்திரிகை நிரூபரை அழைத்து எங்களுடனு வருவதற்கு ஏற்பாடு செய்தனர். (அதன் சூட்சுமம் காமத்திப்புரா பகுதிக்கு சென்ற பிறகுதான் விளங்கியது!)

ஆக, நானும் ஏழெட்டு நண்பர்களடங்கிய ஒரு குழுவும் பத்திரிகை நிரூபர் துணையுடன் காமத்திப்புரா பகுதியைச் சென்றடைந்தோம். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த நேரம். தெரு ஓரங்களில் மழைநீர் தேங்கி, குப்பையும் கூளமும் (அதில் சில காண்டம்களும்!!) பார்ப்பதற்கே அருவருப்பாக..

Image hosted by Photobucket.com

முதன் முதலாய் அங்கு செல்வோருக்கு கிரான்ட் தெருவை அடைத்துக் கொண்டு இப்போதோ அப்போதோ விழப்போகிறேன் என்ற நிலையில் நிற்கும் சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகள் ஆன கட்டிடங்களும் அதன் வாசலிலும், ஒவ்வொரு ஜன்னல்களிலும் சோகம் கவிந்த முகங்களோடு நிற்கும் பெண்களையும், தெருவில் நுழைந்தவுடனேயே நம்மை சூழ்ந்துக்கொண்டு... இந்தியாவிலுள்ள அத்தனை மொழிகளிலும் ஒரே கேள்வியைக் கேட்டு துளைத்தெடுக்கும் ஓசையும்... It is a nightmare for the uninitiated..

Image hosted by Photobucket.com

ஐயர் என் காதை கடித்தார்.. ‘பாத்தீங்களா சார்.. நாமள் மட்டும் இந்த நிரூபரோட வந்திருக்கலைன்னா அம்புடுதேன். (பாலக்காட்டு பாஷை அவ்வப்போது ஐயர் வாயிலிருந்து வரும். சில சமயங்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே விளங்காது.)

உண்மையிலேயே எனக்கு ஏன்டா வந்தோம் என்றிருந்தது..

‘எங்களோடயே நில்லுங்க சார்.. கொஞ்ச ஏமாந்தீங்கன்னா ஏதாவது வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டு போயிருவானுங்க.. அப்புறம் உங்கள கண்டுபிடிக்கறதே பெரிய பாடா போயிரும்’ என்ற ஐயரின் அறிவுரைக்கிணங்கி அவர்களோடேயே போய்க்கொண்டிருந்தேன்..

பத்திரிகை நிரூபரை அங்கு எல்லோருக்குமே தெரிந்திருந்தது.. யார் யாரிடமோ என்னென்னவோ பேசி கடைசியில் எங்களை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

(தொடரும்)