17 அக்டோபர் 2005

தனி மனித சுதந்திரமும் சமுதாயமும்

இந்திய நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பல சுதந்திரங்கள் இருக்கின்றன.

தனி மனிதன் ஒருவனின் பேச்சும், எழுத்தும், செயலும் சமுதாயத்தைப் பாதிக்குமாஎன்பது விடை காண முடியாத கேள்விக் குறி.

ஒரு சமுதாயத்தில் காலங்காலமாக நடைமுறைப் பழக்கமாக (Can we say Custom?) இருந்து வரும் ஒரு செயலை (அது எதுவாகவும் இருக்கலாம்) ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ யாராவது ஒரு தனிமனிதன் (ஆங்கிலத்தில் இரு பாலாருக்கும் பொதுவான Individual என்ற சொல்லை எளிதாகப் பயன்படுத்திவிடலாம்) பேசுவதாலோ, எழுதுவதாலோ சமுதாயம் பாதிக்கப் படும் என்று சொல்லிவிடமுடியுமா?

பலநூறு தனி மனிதர்களைக் கொண்டதுதான் சமுதாயம் என்பது உண்மைதான்.

ஆனால் சமுதாயத்திலுள்ள ஒருவனோ, ஒருத்தியோ அச்சமுதாயத்தையும், அதன் நடைமுறைப் பாவனைகளையும் விமர்சனம் செய்கையில் அது ஆதரவாய் இருக்கையில் ஏற்றுக்கொள்வதும் எதிர்க்கப்படுகையில் பொங்கி எழுவதும் அச்சமுதாயம் முழுவதுமாக வளரவில்லையென்பதையே காட்டுகிறது.

மேலை நாடுகளில் பெரும் பொக்கிஷமாய் பாதுகாக்கப் படும் தனிமனிதச் சுதந்திரம் சமீப காலமாக நம் நாட்டில் முக்கியமாய் நம் தமிழ்நாட்டில் துச்சமாய் கருதப்பட்டு நசுக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

ஐந்தாண்டுகளுக்குமுன்வரை ஆளுங்கட்சியாயிருந்த ஒரு கட்சியின் குடும்பப் பத்திரிகை சமீப காலமாக சமுதாயக் காவலன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பத்திரிகைத் தர்மத்தையும், தனி மனித உரிமையையும் மீறி நடக்க ஆரம்பித்துள்ளது வேதனைக்குரிய விஷயம்.

அக்கூட்டணியின் அங்கத்தினர்களுள் ஒன்றான ஜாதிக் கட்சி சமீப காலம் வரை தன் எதிர்துருவமென கருதியிருந்த வேறொரு ஜாதிக் கட்சியுடன் தனிக் கூட்டணி அமைத்துக் கொண்டு தமிழ் சமுதாயத்தின் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க புறப்பட்டிருக்கிறது புதுவிதமான ஆயுதங்களுடன்.

இவற்றிற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல் ஒரு பெண்ணின் லீலா விநோதங்களில் சமீப காலம் வரைச் சிக்கித்தவித்த காவல்துறை இப்போது சமுதாயத்தைச் சீர்திருத்தப் புறப்பட்டிருக்கிறது.

நல்ல வேளை! சென்னை உயர்நீதிமன்றம் குறுக்கிட்டு காவல்துறையின் உணர்ச்சிபூர்வ நடவடிக்கையை முளையிலேயே கிள்ளியெறிந்து உணவகத்தின் உரிம ரத்தை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

ஆனால் இத்தனைக்குப் பிறகும் நடிகையின் விஷயத்திலும் சரி, உணவு விடுதியில் நடந்ததாய் கூறப்பட்ட விஷயத்திலும் சரி, அதைத் தொடர்ந்து பின்னர் காவல்துறை எடுத்த நடவடிக்கையையும் கூட கண்டும் காணாததுபோல் இருக்கும் தமிழக முதல்வரின் மெளனத்தை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.

நேற்றைய பத்திரிகைச் செய்தியொன்றில் சம்மந்தப்பட்ட நடிகை சகநடிகைகளுடன் முதல்வரைச் சந்தித்து நியாயம் கேட்கப்போவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை பார்க்கும்போது இனியாவது முதல்வர் அவர்கள் தன் மெளனத்தைக் கலைப்பார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக