27 செப்டம்பர் 2005

குஷ்புவின் பேட்டி

ஓட்டை வாய் குஷ்பூவும் பொறுப்பில்லா பத்திரிகைகளும்!

தமிழ் சஞ்சிகைகளில் ஒன்றில் சமீபத்தில் வெளிவந்த குஷ்பூவின் நேர்காணலில் அவர் தெரிவித்த சில கருத்துகள் கடந்த சில நாட்களாக தமிழகத்தில், குறிப்பாக வேலையில்லா சில அரசியல்வாதிகள், மற்றும் அவர்களுடைய கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை நாள்தோறும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

குஷ்புவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியான தமிழ் பத்திரிகை சாதாரணமாக மேல்மட்ட தமிழர்கள் மட்டுமே வாசிக்கக்கூடிய பத்திரிகையாகும். அதில் எழுதப்படும் தமிழை பாமர மக்களால் ஒருபோதும் புரிந்துக்கொள்ள இயலாது!

அத்தகைய பத்திரிகையில் வந்த இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழகமும் அறியச் செய்த பெருமை அரசியல்வாதிகளையும் பொறுப்பற்ற பத்திரிகைகளையுமே சாரும்.

குஷ்பு தெரிவித்தக் கருத்துக்கள் அவருடைய சொந்தக் கருத்து. அதுவும் அவருடைய பதிலை ஆழ்ந்து கவனித்தால் அவரிடம் திருமணத்துக்கு முன் உறவு (Premarital sex) சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பொருத்தமான பதிலைத்தான் தந்திருக்கிறார். அவருடைய கருத்து ஒட்டு மொத்த தமிழின பெண்களையே இழிவு படுத்திவிட்டது என்று வாதிடுவதோ அல்லது அவரைத் தமிழ்நாட்டை விட்டே விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று விளக்குமாறையும், வாரியலையும், காலணிகளையும் தூக்கிக்கொண்டு அவர் வீட்டின் முன் கோஷமிடுவதென்பது அதிகபட்ச ரியாக்ஷன் என்றே படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்மீது இ.பி.கோ 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதுதான்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்பதே கேள்விக்குறி. அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டாலும் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டாத பட்சத்தில் இந்த வழக்கு வெறும் பிரசாரத்திற்கு வேண்டுமானால் பயனளிக்குமே தவிர குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க பயன் தருமா என்பதும் கேள்விக்குறியே.

இதில் முக்கியமாக தண்டிக்கப்பட வேண்டியவை சிறிய விஷயத்தையும் ஊதி, ஊதி பெரிதாக்கி தங்களுடைய கற்பனைகளையும் சேர்த்து எழுதும் பொறுப்பற்ற பத்திரிகைகள்தான். இதுபோன்ற பத்திரிகைகள் உலகெங்கும் உள்ளன என்றாலும் நம்நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் சற்றே கூடுதல்தான்.
சில வாரங்களுக்கு முன் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பேட்டி ஒன்றில் திரைப்பட நடிகைகளைப் பற்றி தரக்குறைவாக பேசினார் என்று குரல் கொடுத்தவர்களுள் முதன்மையாயிருந்த குஷ்புவே இப்போது தன்னுடைய பொறுப்பற்ற பேச்சால் சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிப்பது இன்னொரு வேடிக்கை.

தன்னுடைய கருத்துகள் யார் மனதையும் புண்படுத்தவேண்டுமென்று கூறப்பட்டவையல்ல என குஷ்பு அறிவித்துள்ள சூழ்நிலையில் இவ்விஷயத்தை இனியும் பெரிது படுத்தாது விட்டு விடுவதுதான் அழகு.

டி.பி.ஆர். ஜோசஃப்

3 கருத்துகள்:

  1. பெயரில்லா1:29 PM

    //ஓட்டை வாய் குஷ்பூவும் //

    தங்கருக்கும் இதுதான் பிரச்சனை

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள தீவு,

    நீங்கள் கூறியது மிகச்சரி!

    பட்டால்தான் தெரியும்.

    டி.பி.ஆர்.ஜோசஃப்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்து சரியானது.

    பதிலளிநீக்கு