31 December 2005

புத்தாண்டு வாழ்த்து!!

Image hosted by Photobucket.com

தமிழ்மண நண்பர்களுக்கு,

என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புலரும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் வெற்றியையும், மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் அளிக்கவேண்டுமென்று வாழ்த்தும்..

டி.பி.ஆர்.ஜோசஃப்

30 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 46

அப்புறம் ஒரு விஷயம் சார்.. சொல்ல மறந்துட்டேன்..’ என்றதும் குழம்பிப்போனேன். வேறேதும் பிரச்சினையாயிருக்குமோ என்று ஓடியது என் எண்ணம்.

‘சொல்லுங்க.’ என்றேன்.

‘நேத்து நீங்க போய் பார்த்தீங்களே அந்த கூட்டுறவு வங்கி ஜி.எம்? அவரே இன்னைக்கி காலைல நாந்தான் உங்கள அனுப்பிச்சேன்னு தெரிஞ்சிக்கிட்டு என்னை கூப்பிட்டார். என்ன சார் இப்படி நான் அனுப்பின சார் கிட்ட நடந்துக்கிட்டீங்களே, மானம் போயிருச்சி சார்னு சொன்னேன். அவரும் உடனே நீங்க அனுப்பின ஆளுன்னு எனக்கு தெரியாது சார். மன்னிச்சிருங்க.. சாரை உடனே குடி வரச்சொல்லுங்கன்னு சொன்னார். நான் உங்கள கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன். என்ன சொல்லட்டும் சார்?’

எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய அனுமதியில்லாமலே ஒரே ஒரு நாள் பழக்கத்தில் இத்தனை உரிமையுடன் நாயக்கர் நடந்துகொண்ட விதம் எனக்கு எரிச்சலையும் அதே நேரத்தில் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியது. நிதானமாக கவனத்துடன் இவரை கையாளவேண்டும் என்று என் உள்மனது எச்சரித்தது.

‘சரி சார். இவ்வளவு தூரம் நீங்களா உரிமையெடுத்துக்கிட்டு செய்யறப்போ நான் என்ன சொல்றது? நீங்க சொல்றபடியே செஞ்சிரலாம் சார்.’ என்றேன்.

உரக்க சிரித்தார் நாயக்கர். ‘இதுல என்னய்யா சிரிப்பு வேண்டியிருக்கு. சிரிப்பா போனது நானில்லே?’ என்று நினைத்துக்கொண்டேன்.

‘அதான் சார் கிராமப்புற ஆளுங்களோட பாசம்கறது. ரெண்டு நாளைக்கு முன்னால என்னோட நண்பர் மெட்றாஸ்லருந்து கூப்ட்டு இன்னார் ரயில்ல புறப்பட்டு வராறு.. அவருக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன். அவருக்கு என்னவெல்லாம் வேணுமோ அத்தனையும் செஞ்சி கொடுக்க வேண்டியது உன் கடமைடான்னு சொன்னத எப்படி சார் மறுக்க முடியும். அவர் உங்களுக்கு எவ்வளவு கடமை பட்டிருக்காரோ அதே மாதிரி கடமை அவருக்கு நான் பட்டிருக்கேன்லே. இன்னைக்கி நா இந்த நிலைமைல இருக்கேன்னா அதுக்கு அவரோட அப்பாருதான் சார் காரணம். அந்த நன்றி விசுவாசம்தான். என்ன நான் சொல்றது?’

உண்மைதான். சென்னையிலிருந்த நாயக்கருடைய நண்பர் மிகவும் நல்லவர். தங்கமானவர் என்று கூட சொல்லலாம். ‘சார், நீங்க சாங்ஷன் பண்ண இந்த கடன் தொகை தகுந்த சமயத்தில் கிடைத்த ஒரு புதையல் மாதிரி சார். நீங்க மட்டும் மத்த மேனேசருங்க போல ரூல், நியாயம்னு பேசி இழுத்தடிச்சிருந்தீங்கன்னா என் தொழிலும் நானும் திவாலாயி போயிருப்போம் சார்.’ என்று என் கிளையிலிருந்து கடன் தொகைக்கான காசோலையை பெற்ற அன்று நாத்தழுதழுக்க அவர் நன்றி கூறியது நினைவுக்கு வந்தது.

அதற்கு பிரதிபலனாகத்தான் நான் அவரிடம் ‘தஞ்சைக்கு மாற்றலாகிப் போகிறேன் அங்கே உங்களுக்கு யாரையாவது தெரியுமா சார்’ என்று கேட்டவுடனே சிறிதும் தயங்காமல் நாயக்கரின் விலாசத்தை கொடுத்ததோடு நிற்காமல் அவரே தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு எனக்கு உதவும்படி கூறியிருக்கிறார் போலும்.

இப்படி ஒருவருக்கொருவர் கடமைப்பட்டிருப்பதும் தேவைதான். நாயக்கர் என் சென்னை வாடிக்கையாளருக்கு கடமைப்பட்டிருக்கிறார், அவர் எனக்கு கடமைப்பட்டிருக்கிறார், நான் இப்போது நாயக்கருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இப்படியே கடமைபட்டோர் வட்டம் பெரிதாகி, பெரிதாகிதான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறதுபோலும். ('டேய் என்னாச்சி திரும்பிப் பார்க்கறேன்னுட்டு தத்துவ ஞானிமாதிரி ஆயிட்டே?' பயந்துராதீங்க எப்பவும் போல என் மனசாட்சிதான்.) சரி விஷயத்துக்கு வருவோம்.

நாயக்கர் கூறியபடி அந்த கூட்டுறவு அதிகாரியின் வீட்டிற்கு குடிபுகுவது அத்தனை புத்திசாலித்தனமாக இருக்காது என்றே பட்டது எனக்கு.

ஏன்?

ஒருவேளை நேற்று நான் அவரை ‘புகார் செய்யப்போகிறேன்’ என்று அச்சுறுத்தியதாலேயே எனக்கு அவர் வீட்டை வாடகைக்கு விட சம்மதித்திருக்கலாமே. அவருடைய தாயாரிடம் அவர் என்ன பொய் சொல்லி என்னை குடியமர்த்துகிறாரோ.. என் மனைவியோ மிகவும் எளிதாக உணர்ச்சிவசப்படக்கூடியவர். அங்கே குடிபோன பிறகு வீட்டு உரிமையாளருடைய தாயார் ஏதாவது அவமானப்படும்படி பேசிவிட்டால் மனம் குன்றிப்போக வாய்ப்புண்டு.

‘என்ன சார்? நீங்க அந்த வீட்டுக்கு குடிபோறீங்கன்னு அவர கூப்பிட்டு சொல்லிரலாங்களா?’

அவ்வீட்டில் குடிபோவதிலிருந்த சாதக பாதகங்களை அலசிக்கொண்டிருந்த என்னை நாயக்கரின் குரல் உசுப்பியது.

‘சார் நான் நேர்ல வந்து சொல்றேனே. அதுவரைக்கும் நீங்க அவர கூப்பிடாதீங்க. இப்ப வந்தா ஃப்ரீயா இருப்பீங்களா?’

‘என்ன சார் நீங்க, ஃப்ரீ க்ரீன்னுட்டு. புறப்பட்டு வாங்க. உங்க வேலைய முடிச்சிட்டுத்தான் இன்னைக்கி வேற வேலை.’

நான் அவருடைய அலுவலகத்தை அடைந்த போது அவருடன் வேறு சிலரும் இருந்தனர்.ஆனால் நான் சென்று அமர்ந்ததும் நாயக்கர் அவர்களை மவுன பாஷயில் வெளியேற வைத்தார்.

‘சொல்லுங்க சார். முதல்ல ஒரு மோர் குடிங்க. வாங்கிட்டு வரச்சொல்றேன். நேத்தைக்கு நீங்க வந்தப்போ உங்கள சரியா உபசரிக்க முடியாம போயிருச்சி. உங்க வீட்ல என்ன ஏதாவது தப்பா நினைச்சிருப்பாங்களா?’ என்றார்.

எனக்கு அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. மனுஷன் உள்ளத்தில் நல்லவராய்த்தான் இருப்பார் போல. சரியான ஜாதி வெறி பிடிச்ச மனுஷனா இருப்பார் போலருக்குதே என்று நான் நேற்று நினைத்தது தப்போ என்று தோன்றியது.

‘சேச்சே, அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க சார்.’ என்றேன்.

அலுவலக சிப்பந்தி கொண்டு வைத்த மோர் சில்லென்றும், காரமாகவும் தொண்டைக்கு இதமாயிருந்தது. ‘மோர் ரொம்ப நல்லாயிருக்கு சார்.’ என்றேன்.

அவர் உரக்க சிரித்தார். ‘இதென்ன சார் பிரமாதம். இத விட பிரமாதமான விஷயங்கள் நம்ம ஊர்ல இருக்கு. இப்பத்தான வந்திருக்கீங்க. போகப் போக இந்த ஊரு பிடிச்சிப் போயி இங்கவே செட்டிலானாலும் ஆயிருவீங்க. சரி அது போட்டும். நீங்க வீட்டு விஷயத்துல என்ன முடிவெடுத்தீங்க?’

நான் என்னுடைய எண்ணத்தை சுருக்கமாக கூறினேன்.

சிறிது நேரம் மெளனமாய் இருந்த நாயக்கர் ‘சரி சார். நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது. நம்ம தரகர் வரட்டும். நான் சொல்லி ரெண்டு நாளைக்குள்ள வேற ஏற்பாடு பண்றேன்.’ என்றார்.

அவர் கூறியதுபோலவே தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அருகாமையிலேயே நல்ல வசதிவாய்ந்த புத்தம்புது வீட்டை அடுத்த நாளே பிடித்துக்கொடுத்தார். நான் போஸ்டல் காலனி வீட்டிற்கு கொடுத்திருந்த ரூ.1000/- த்தையும் திரும்ப பெற்றுத் தந்தார் தரகர்.

அத்துடன் என்னுடைய வீட்டுப் பிரச்சினை முடிந்தது. அடுத்த சில நாட்களில் என்னுடைய வீட்டுப் பொருட்களும் இரு சக்கர வாகனமும் வந்து சேர்ந்தன. அடுத்த நாளே என் மனைவியும் ஊரிலிருந்து அவருடைய தாயாருடன் வந்திறங்கினார்.

ஆக ஒருவாறாக என்னுடைய தஞ்சைவாசம் இனிதே ஆரம்பித்தது.

அன்றிலிருந்து என்னுடைய வங்கி கிளை திறப்பதற்கான வேலைகளில் மும்முரமானேன்.

முதலில் தகுந்த ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும். அதற்கு முன் என் வங்கியின் வட்டார அலுவலகத்திற்கு (கோவையில் இருந்தது) தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய வீட்டு விலாசத்தை அறிவித்தேன். பிறகு என் வீட்டிற்கொன்றும் கிளைக்கு ஒன்றுமாக இரு தொலைப்பேசி இணைப்புகளைப் பெற என் வட்டார மேலாளரிடம் அனுமதி பெற்று அதற்கு வேண்டிய விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பித்தேன்.

தஞ்சாவூரில் அந்த காலத்தில் தொலைப்பேசி இணைப்பு பெறுவது குதிரைக்கொம்பாக இருந்தது. அதுவுமல்லாமால் நான் குடிபுகுந்த வீட்டுக்கு அருகில் யாரும் தொலைப்பேசி வைத்திராததால் 500 அடி தூரத்திலிருந்த பிரதான சாலை சந்திப்பிலிருந்து கேபிள் இழுக்கவேண்டியிருந்தது.

நம் ஆபத்பாந்தவன் நாயக்கரின் செல்வாக்கு அங்கும் விளையாடியது! அவர்மூலமாக தொலைப்பேசி அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரை அணுகி என் வீட்டு இணைப்புக்கான அனுமதி உத்தரவை ஒரே வாரத்திற்குள் பெறமுடிந்தது. ஆயினும் அடிமட்ட ஊழியர்களுக்கு சில ‘சில்லரை நோட்டுகளை’ தள்ளிய பிறகே வீட்டு இணைப்பு ‘இணைப்பானது!!’

என்னுடைய வீட்டிற்கு தொலைப்பேசி இணைப்பு வந்தது என்னையும் என் மனைவியை விடவும் சந்தோஷப்பட்டது மாடியிலிருந்த வீட்டு உரிமையாளர்தான். பணி ஓய்வு பெற்ற கணவன், மனைவி என வயசான காலத்தில் பிள்ளைகள் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிட தனியாய் விடப்பட்ட அவ்விருவருக்கும் என்னுடைய தொலைப்பேசி இணைப்பு சென்னையிலும், மும்பையிலும் வசித்து வந்த அவருடைய பிள்ளைகளுடன் தொடர்புகொண்டு பேச மிகவும் வசதியாயிருந்தது.

அவர் சென்னையில் பல ஆண்டுகாலம் மாநில அரசு பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணியாற்றியவர். ‘ரிட்டையர் ஆனதும் என் பூர்வீக ஊரான கும்பகோணத்திலிருந்த நஞ்சை நிலத்தை வித்துட்டு இந்த நிலத்தை வாங்கனேன் சார். மெட்றாஸ்லயே முப்பது வருஷம் வாழ்ந்திட்டு கும்பகோணம் மாதிரியான டவுண்ல என்னால இருக்க முடியல. அதான் இங்க வந்தேன். நீங்க மெட்றாஸ்காரங்கன்னு சொன்னதும் எனக்கு பிடிச்சி போச்சி. அதுவும் பேங்க் மேனேஜர்னு வேற சொன்னீங்க. எனக்கு இந்த வாடகைப் பணம் வந்துதான்னனு இல்லே.ஆனா துணைக்கும் ஒரு சின்ன குடும்பமா வந்தா குடுக்கலாம்னுதான் இருந்தேன். நான் நினைச்சா மாதிரியே தரகர் உங்கள கூட்டிக்கிட்டு வந்தப்போ உடனே ஒத்துக்கிட்டேன். இப்ப பாருங்க.. உங்களுக்கு டெலிஃபோன் கனெக்ஷனும் வந்திருச்சி. இந்த ஊர்ல உங்கள மாதிரி அதிகாரிங்களுக்குத்தான் ஆஃபீஸ்லயே வீட்டுக்கு ஃபோன் வசதியெல்லாம் கிடைக்குது.. நான் முப்பது வருஷமா அரசாங்கத்துல குப்ப கொட்டியும் ரிட்டயர்ட் ஆறதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் டெலிஃபோன் கொடுத்தான். அரசாங்க உத்தியோகத்துல பேரும் அதிகாரமும்தான் பெரிசா தெரியும். சலுகைகள்னு ஒன்னும் ஒப்பேறாது..’

தொலைப்பேசி இணைப்பு கிடைத்த அன்று வீட்டுக்காரர் அடித்த லெக்சர் இது. மூச்சுவிடாமல் பேசுவார். ஆனால் கணவன், மனைவி இரண்டு பேருமே குனத்தில் சொக்கத் தங்கம்.

தொடரும்..

29 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 46

சட்டென்று எனக்கு கோபம் வந்தது. ‘என்னங்க இது அக்கிரமம்! அதுக்கெதுக்கு என்னை வெக்கேட் பண்ண சொல்றீங்க?’

‘சார் உங்களுக்கே தெரியும். இது ஒரு அரசாங்க விடுதி. இதுல அரசு விருந்தினர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு அரசு ஆணை. நாயக்கர் ரூம் கேட்டப்பவே அவர்கிட்ட அதிகபட்சம் ரெண்டு நாளைக்குத்தான் ரூம் கொடுக்க முடியும்னு சொல்லியிருந்தோம். அவரும் சரின்னு சம்மதிச்சப்புறம்தான் ரூம் கொடுத்தோம். அதனால நீங்க வெக்கேட் பண்றத தவிர வேற வழியில்ல சார்.’

‘சரிங்க. இத நேத்தே செக் இன் பண்ணப்போ சொல்ல வேண்டியதுதானே. இப்படி திடுதிடுப்புன்னு சொன்னா ரெண்டு வயசு குழந்தைய வச்சிக்கிட்டு நான் நடுத்தெருவுலயா நிக்க முடியும்?’

எதிர் முனையில் அவர் யாருடனோ விவாதிப்பது லேசாக கேட்டது. ‘சார் நாயக்கர் உங்கக்கிட்ட சொல்லியிருப்பாருன்னு ரிசப்ஷன்ல நினைச்சிருக்காங்க. நீங்க ஒன்னும் இப்பவே போகவேணாம் சார். உங்களால முடிஞ்சா டவுண்லருக்கற லாட்ஜ்ல கிடைக்கிதான்னு பாருங்க. இல்லன்னா நாங்களே அரேஞ்ச் பண்ணித் தரோம். சாரி ஃபார் தி ட்ரபிள் சார்.’

எனக்கு கோபம் அதிகரித்தாலும் ஹோட்டல் சிப்பந்திகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட விருப்பமில்லாமல். ‘சரிங்க. நீங்களே ட்ரை பண்ணி ஒரு டபுள் ரூம் புக் பண்ணி குடுங்க.’ என்று இணைப்பைத் துண்டித்தேன். ‘சை! இன்னைக்கி காலைல முழிச்ச முகமே சரியில்லை போலருக்குதே.’ என்ற முனகலுடன் நிமிர்ந்தேன். எதிரில் முகத்தில் கேள்விக்குறியுடன் என் மனைவி, குளித்து முடித்த கோலத்துடன். ‘யாருங்க ஃபோன்ல? எதுக்கு இப்படி கோபப் பட்டீங்க? நீங்க போட்ட சத்தம் பாத்ரூம்ல கேக்குது. நல்ல வேளை பாப்பா முளிச்சிக்கலை.’

‘பின்னே திடீர்னு கூப்ட்டு ரூம் காலி பண்றான்னா கோபப்படாம கொஞ்ச சொல்றியா?’

‘ஐயையோ, காலி பண்ணிட்டு எங்க போறது? என்னங்க நீங்க? முதல்லயே விசாரிச்சிட்டு எடுக்க மாட்டீங்களா?’ என்ற என் மனைவியை எரிச்சலுடன் பார்த்தேன்.

சட்டென்று ஒரு யோசனை உதித்தது. என் மனைவியையும் மகளையும் சிறிது நாளைக்கு தூத்துக்குடிக்கு அனுப்பிவிட்டு இந்த வீட்டுப் பிரச்சினை தீரும் வரை தனியாக ஒரு விடுதியில் தங்குவது என்று.

தலையை உலரவைத்துக்கொண்டிருந்த என் மனைவியைப் பார்த்தேன். ‘இங்க பார். உன்னையும் பாப்பவையும் பஸ் ஏத்தி விடறேன். தனியா உங்க ஊருக்கு போயிரமாட்டே? மெட்றாஸ்லருந்து சாமானெல்லாம் வந்ததுக்கப்புறமா உங்கம்மா கூட புறப்பட்டு வந்தேன்னா நல்லாருக்கும், என்ன சொல்றே?’

ஊருக்கு போ என்றால் கசக்காவா செய்யும்? உடனே, ‘சரிங்க. நீங்க போய் டிக்கெட் கிடைக்குதான்னு பாருங்க. பகல் நேரம்தானே, த்ரூவா தூத்துக்குடிக்கு டிக்கட் கிடைச்சா நானே போய்க்கறேன். மதுரைல இறங்கி போறதுதான் கொஞ்சம் சிரமம். பாப்பா வேற இருக்கில்ல..’

அப்பாடா ஒரு பிரச்சினை விட்டது. தனியாளாய் இரண்டு, மூன்று நாளைக்கு ஏதாவது ஒரு அறையில் தங்கி சமாளித்துக்கொள்ளலாம்.

‘சரி. நீ தலைய காய வச்சிட்டு பலாரத்துக்கும் பாப்பாவுக்கு பாலுக்கும் ரூம் சர்வீசுக்கு சொல்லிரு. நான் குளிச்சிட்டு வந்து பஸ் ஸ்டாண்டுக்கு போறேன். அதுவரைக்கும் வேற ஏதாவது ஃபோன் வந்தா அப்புறமா கூப்பிடச் சொல்லு.’ என்றவாறு கட்டிலில் கிடந்த துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பயணச்சீட்டை எடுத்து என் மனைவியையும் மகளையும் தூத்துக்குடி செல்லும் பேருந்தில் நடத்துனரிடம் அறிமுகப்படுத்தி பாதுகாப்பாய் அனுப்பிவைத்தேன்.

இனி அடுத்தது வீட்டுப் பிரச்சினை. காலையில் சென்னையிலிருந்து வந்த அறிவுரை இப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது..

“நாயக்கர் தஞ்சாவூர்ல மட்டுமில்ல சுத்தி இருக்கிற இருபது இருபத்தஞ்சி கிராமங்கள்லயும் ரொம்பவும் செல்வாக்கு இருக்கறவர். அவரால உங்க பேங்குக்கு நல்லமாதிரியான பார்ட்டிங்களயெல்லாம் கொண்டுவரமுடியும். அதனால ஆரம்பத்திலயே அவர் மனசு கோணாம பார்த்துக்கறது நல்லதுன்னு நினைக்கறேன். அதனாலத்தான் சொல்றேன். மத்தபடி உங்க இஷ்டம்.”

என்னுடைய அறைக்கு திரும்பி நெடுநேரம் யோசித்தேன். நானோ பட்டணத்துவாசி. சென்னையை விட்டு சிறு நகரங்களில் வசித்ததே இல்லை. அதனால் கிராமவாசிகளின் நட்பு முறை, பழக்கங்கள், பேச்சு எல்லாமே எனக்கு பரிச்சயமில்லாத ஒன்று. அதேபோல் அவர்களுக்கிடையே இருந்த ஜாதி மற்றும் மொழியால் ஏற்பட்டுப்போன பிரிவுகளும் என்னால் புரிந்துக்கொள்ள முடியாததாய் இருந்தது.

என் வாடிக்கையாளர் கூறியதுபோல இப்பிரிவினைகளை யார் நினைத்தாலும் ஒரே இரவில் மாற்றிவிடமுடியாதென்பது நிதர்சனமான, மறுக்க முடியாத உண்மை.

என் முன்னே இருந்த பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள் இருந்தன. ஒன்று, நாயக்கருடைய கருத்தை புறக்கணித்துவிட்டு இப்போது பார்த்திருந்த வீட்டில் குடியேறுவது.

இரண்டாவது, அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டு அவர் வேறொரு வீட்டை அமைத்து தரும்வரை பொறுத்திருப்பது.

ஆனால் இரண்டிலும் சிக்கல்கள் இருந்தன.

முதலாவது தீர்வில் நாயக்கருடைய பகை. அதனால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தது. அவருடைய கோவை வாடிக்கையாளர்களில் யாரேனும் ஒருவருக்கு அதே ஊரிலிருந்த என்னுடைய வட்டார அலுவலகத்துக்கு பழக்கம் இருக்க வாய்ப்புண்டு. அவர் மூலம் என்னுடைய வட்டார மேலாளருக்கு தெரியவந்தால் எனக்கே பிரச்சினையாக முடியலாம். 'தஞ்சையில் நம்ம புதிய கிளையைத் திறப்பதற்காகத்தான் உங்களை அனுப்பினோம். தஞ்சையிலுள்ள ஜாதிப் பிரச்சினைக்கு தீர்வு காண அல்ல' என்று அவர் குற்றம் சாற்றும் பட்சத்தில் நான் தலைகுனிய வேண்டியிருக்கும்.

நேற்று நாயக்கர் தரகரை நடத்தியவிதத்திலிருந்து அவரே வேண்டுமானாலும் என்னுடைய வட்டார மேலாளரின் தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்து புகார் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவுமல்லாமல் நாயக்கர் நினைத்தால் என்னுடைய கிளைக்கு தகுந்த இடம் கிடைக்கவிடாமல் தொல்லைக் கொடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக, முதல் தீர்வு இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டுவராது என்று தோன்றியது.

சரி, அடுத்த தீர்வில் என்ன பிரச்சினை?

நேற்று நான் முன்தொகையாக கொடுத்த ரூ.1000/- திரும்பப் பெற வேண்டுமானால் வீட்டு உரிமையாளரைச் சந்தித்து பேச வேண்டியிருக்கும். சரி, அப்படியே போய் சந்தித்தாலும் நேற்று ‘வீடு ரொம்பவும் பிடிச்சிருக்குங்க. நீங்க வேற யாருக்கும் வீட்டைக் கொடுக்காம இருக்கறதுக்குத்தான் இந்த ரூ.1000/-‘ என்று சொல்லிவிட்டு இப்ப போயி என்னன்னு சொல்றது? நீங்க கீழ் சாதின்னா? இப்படி யோசிப்பதே கேவலமாய் பட்டது எனக்கு.

பேசாம சேர்மன் சொன்ன கப்பல் பார்ட்டிக்கு லோன் கொடுத்திருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காதில்ல? பெரிய நீதிமான் மாதிரி ரூல் பேசினே.. இப்ப என்னாச்சி, ஊர் பேர் தெரியாத ஊர்ல வந்து லோல் படுறே? என்று குதர்க்கம் பேசிய என் உள் மனதை அடக்க முடியாமல் தடுமாறினேன்.

என் யோசனையை கலைக்கும் விதமாக அடித்த தொலைப்பேசியையே குழப்பத்துடன் சிறிது நேரம் பார்த்துவிட்டு ஒலிவாங்கியை எடுத்தேன். எதிர்முனையில் நாயக்கர்!

‘சொல்லுங்க சார்.’ என்றேன் தயக்கத்துடன்.

‘என்ன சார் உங்க வீட்டம்மாவையும் குழந்தையையும் ஊருக்கு அனுப்பிட்டீங்க போல?’

நான் திடுக்கிட்டு போய் ஒலி வாங்கியையே பார்த்தேன். இவருக்கென்ன ஊரெல்லாம் உளவாளிகள் இருக்கிறார்களா?

அவர் எதிர்முனையில் உரக்க சிரிக்க ஒலிவாங்கியை சற்றே தள்ளிப்பிடித்தேன். ‘என்னாடா இது அதுக்குள்ள இவனுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு பாக்கறீங்களா? நேத்தக்கி இங்க வந்திருந்தீங்க இல்லையா? அதுல ஒருத்தன் உங்கள இன்னைக்கி மைய பஸ் ஸ்டாண்டுல பாத்திருக்கான். அவந்தான் உடனே ஓடியாந்து தகவல் சொன்னான்.’

சரிதான். இந்தாளுக்கு தெரியாம நாம் இந்த ஊர்ல ஒன்னும் செய்ய முடியாது.. ஆக, என்னுடைய முதல் தீர்வு நிச்சயம் பிரச்சினையை பெரிதாக்குமே தவிர குறைக்காது என்பது தெளிவு..

‘என்ன சார், சைலண்டாயிட்டீங்க. சொல்லுங்க.. எதுக்கு அவங்கள சொல்லாம கொள்ளாம ஊருக்கு அனுப்பிச்சிட்டீங்க? நேத்து நீங்க பார்த்த வீட்டை நான் வேணாம்னு சொல்லிட்டேன்னா?’

‘அதெல்லாம் ஒன்னுமில்லை சார். எத்தனை நாளைக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கறதுன்னு பார்த்தேன். அத்தோட இந்த ரூமை வேறு காலி பண்ண சொல்றாங்க. அதான் அவங்களாவது நிம்மதியா ஊர்ல ஒரு வாரத்துக்கு இருக்கட்டுமேன்னு அனுப்பி வச்சேன். உங்கள பாக்கறதுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்களோ பண்ணிட்டீங்க..’

சலிப்புடன் உச் கொட்டிய நாயக்கர், ‘ஆமா சார். இந்த கவர்மெண்ட் லாட்ஜ்னால இப்படித்தான். நம்ம பெரிய கோயில் கட்டி இந்த வருஷத்தோட ஆயிரம் வருஷம் பூர்த்தியாவுது. அதுக்கு ஒரு வாரத்துக்கு பெரிசா விழா எடுக்கறோம். நானும் விழா கமிட்டி உறுப்பினராக்கும். அதான் ரூமை காலி பண்ண சொல்லியிருப்பான். நீங்க வேற லாட்ஜெல்லாம் தேடி அலைய வேணாம் சார். கவலைய விடுங்க. நம்ம நண்பரோட கெஸ்ட ஹவுஸ் இப்ப நீங்கருக்கற ரூமைவிட விசாலமா இருக்கும். அத ஒரு வாரத்துக்கு அரேஞ்ச் பண்ணி தரேன். நீங்க நேத்து பார்த்த வீட்டு அட்வான்ஸ் தொகையை போய் வாங்கிட்டு வந்திருடான்னு தரகன அனுப்பிருக்கேன். அவன் வந்ததும் உங்ககிட்ட வருவான். உங்க பெட்டிய அவன் கிட்ட குடுத்துருங்க. கெஸ்ட ஹவுசை உங்களுக்கு காமிப்பான். அப்புறம் ஒரு விஷயம் சார்.. சொல்ல மறந்துட்டேன்..’ என்றதும் குழம்பிப்போனேன். வேறேதும் பிரச்சினையாயிருக்குமோ என்று ஓடியது என் எண்ணம்.

தொடரும்

28 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 45

நாயக்கருடைய கமிஷன் மண்டி தஞ்சையின் பிரதான சாலைகளில் ஒன்றில் அமைந்திருந்தது. அவருடன் வர்த்தகம் செய்வோரின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலிருந்ததால் எந்த நேரமும் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றவும் இறக்கவும் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருப்பதுண்டு.

நாங்கள் குடியிருக்க வீட்டை பேசி முடித்த விஷயத்தை அவரிடம் அறிவிக்க நானும் என் மனைவியும் தரகருடன் அவருடைய அலுவலகத்தை சென்றடைந்தபோது மாலை நேரமாயிருந்ததாலும் அன்று மாதத்தின் கடைசி நாளாயிருந்ததாலும் வாகனங்கள் மற்றும் அவருடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையுடன் அவரிடம் நெல் கொள்முதல் பணத்தை வாங்க வந்திருந்த அடுத்துள்ள கிராமத்து விவசாயிகளுமாய் சேர்ந்து அவருடைய அலுவலகத்தின் முன் ஒரு சிறிய ஜனத்திரளே குழுமியிருந்தது.

எங்களுடைய வாகனம் அவருடைய அலுவலகத்திலிருந்து சில மீட்டர் தூரம் இருந்தபோதே தரகர் என்னைப் பார்த்து, ‘சார் வீடு முடிஞ்ச விஷயத்தை பொதுவா சொன்னாப்போறும். நான் பெறகு வீட்டுக்காரரப் பத்தியெல்லாம் விலாவாரியா சொல்லிக்கறேன்.’ என்றார்.

எனக்கும் அவருடைய யோசனை சரியென்று படவே, ‘சரி. நாங்க உங்கள இறக்கிவிட்டுட்டு ஹோட்டலுக்கு போயிடறோம். இந்த கூட்டத்துல நாயக்கரோட பேசி அவர் வேலைய கெடுக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.’ என்றேன்.

‘ஆமா சார். நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிரலாம்.’ என்ற தரகர் எங்களுடைய வாகனம் நாயக்கருடைய அலுவலகத்தையடைந்ததும் அவசர அவசரமாக கதவைத் திறந்துக்கொண்டு இறங்கினார்.

ஆனால் அந்த நேரம் பார்த்து அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த நாயக்கர் தான் மென்றுக்கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றை சாலையோரத்தில் உமிழ்ந்துவிட்டு கையிலிருந்த பித்தளை செம்பிலிருந்த நீரால் வாயைக் கொப்புளித்தவாறே வண்டியிலிருந்து தரகர் மட்டும் இறங்குவதைப் பார்த்தார். ‘என்னய்யா சார் வரலை?’ என்றவாறே எங்கள் வாகனத்தை நோக்கி வந்தார்.

வேறு வழியில்லாமல் நானும் வாகனத்திலிருந்து இறங்கி, ‘வணக்கம் சார். நீங்க ரொம்ப பிசியா இருந்தா மாதிரி தெரிஞ்சிது. அதான் நம்ம விஷயத்த பத்தி நாள¨க்கு பேசிக்கலாம்னு நெனைச்சேன்.’ என்றேன்.

அவர் உரக்க சிரிக்கவே குழுமியிருந்த அனைவரும் எங்களை திரும்பிப் பார்த்தனர். ‘வேல கிடக்குது சார். நம்ம பயலுவளுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம். சொல்லுங்க. போன விஷயம் என்னாச்சி? வீடு கிடைச்சிதா? என்னய்யா தரகரே, சாருக்கு நல்ல வீடா காமிச்சீங்களா?’

தரகர் என்னை கலவரத்துடன் பார்த்தார். நான் சிரித்துக்கொண்டே, ‘ஆமாம் சார். தரகர் நிறைய வீடுகளைக் காட்டினார். அதுல போஸ்டல் காலனியிலருந்த வீடு எனக்கு பிடிச்சிருந்தது. வீட்டு ஒனர் அம்மாவும் ரொம்பவும் மரியாதை தெரிஞ்ச ஆளா தெரிஞ்சாங்க. அட்வான்ஸ் கூட வேணாம்னுதான் சொன்னாங்க. நாந்தான் ஒரு அடையாள அட்வான்சா ரூ.1000/- கொடுத்து முடிச்சிட்டேன். மத்த விஷயங்கள தரகர் சொல்லுவார்னு நினைக்கறேன். என் பொண்ணுக்கு காலைலருந்து ஒன்னும் சாப்பிட குடுக்கலை. அதனால் நான் ஹோட்டலுக்கு போலாம்னு பாக்கறேன். மத்தத நாளைக்கு பேசிக்கலாம் சார்.’ என்றவாறு வாகனத்தில் ஏற இருந்த என்னை தடுத்து நிறுத்திய நாயக்கர் தரகரை பார்த்தார்.

‘யாருய்யா அது போஸ்டல் காலனியில? அருளானந்தர் நகர்ல சொன்ன வீடு என்னாச்சி?’

தரகர் மென்று விழுங்கினார். ‘நாயக்கரய்யா, சாருக்கு அது பிடிக்கலைங்க. போஸ்டல் காலனியில நம்ம ---- வீடுங்கய்யா.’ என்றார்.

தரகர் இன்னார் வீட்டை முடித்துக் கொடுத்தேன் என்று கூறி முடிக்கக்கூட இல்லை. கையிலிருந்த செம்பை தரையில் வீசியெறிந்த நாயக்கர் தரகரின் சட்டயைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ‘ஏண்டா தரகு பயலே.. நான் படிச்சி படிச்சி சொல்லியும் அந்த ---- பய வீட்டை முடிச்சி குடுத்தேன்னு சொல்றதுக்கு ஒனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்?'

நாயக்கருக்கு நிச்சயம் இந்த விஷயம் பிடிக்காது சார் என்று தரகர் சற்று முன்பு கூறியபோது பெரிதாக நினைக்காத நான் தரகர் விஷயத்தை அவரிடம் கூறியவுடன் அவர் ரியாக்ட் செய்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

நாயக்கருடைய செயலை முற்றிலும் எதிர்ப்பாராத நான் சிறிது நேரம் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போய் நின்றுக்கொண்டிருதேன். நல்ல வேளையாய் பசியில் அழுகிற மகளை மடியில் போட்டுக்கொண்டு சமாதானப்படுத்துவதில் மும்முரமாயிருந்த என் மனைவி இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால் நாயக்கரின் அலுவலகத்தில் குழுமியிருந்தவர்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாயக்கரின் கோபம் அவர்களிடையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதிலிருந்து இது அவர்களுக்கு சாதாரண விஷயம்போலும் என்று நினைத்தேன்.

இருப்பினும் நான் செய்த தவறுக்கு தரகர் தண்டிக்கப்படுவதைக் காண சகியாத நான், ‘சார் தரகர் மேல எந்த தப்பும் இல்லை. நாந்தான் வீடு பிடிச்சிருந்ததால அவர் சொல்லியும் நான் கேக்கலை.’ என்றேன்.

நாயக்கர் நான் சொன்னதைக் கேளாதவர்போல் தன் அலுவலகத்தை நோக்கி நடக்கலானார். என்னைப் பார்த்த தரகர் சைகையாலேயே, ‘நீங்க போயிருங்க சார். நான் பார்த்துக்கறேன்.’ என்றவாறு அவர் பிறகு ஓட ஒரு சில விநாடிகள் காத்திருந்த நான் காரிலேறி விடுதிக்கு திரும்பினேன்.

விடுதிக்கு திரும்பிய நானும் என் மனைவியும் நாள் முழுவதும் சுற்றி களைத்துப் போயிருந்ததால் இந்த விஷயத்தைக் குறித்து மேலும் விவாதிக்காமல் இரவு உணவுக்குப் பின் படுக்கைக்குச் சென்றோம்.

அசதியின் காரணமாக காலையில் என் அறையிலிருந்த தொலைப்பேசி ஒலிக்கும் வரை எழவில்லை.

தொலைப்பேசி மணி ஒலி கேட்டதும் பதறியெழுந்த நான் ஒலிவாங்கியை எடுத்து, ‘ஹலோ’ என்றேன்.

‘சார் நான் மெட்றாஸ்லருந்து பேசறேன். எங்க எம்.டி. உங்கக்கிட்ட அவசரமா பேசணுமாம்.’ நாயக்கரை எனக்கு அறிமுகம் செய்த வாடிக்கையாளர்!

சிறிது நேரம் கழித்து, ‘சார் எப்படி இருக்கீங்க? வீடெல்லாம் புடிச்சிட்டீங்க போலருக்கு? நேத்து நாயக்கர் என்கிட்ட ஃபோன்ல சொன்னார்.’ என்றவரிடம் ‘ஆமாம் சார். நாயக்கர் அனுப்பின தரகர் மூலமாத்தான் ஒரே நாள்ல வீடு கிடைச்சிது. உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.’ என்றேன்.

‘அதனாலென்ன சார். இதெல்லாம் நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னால சின்ன விஷயம்.’ என்றவர் சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு, ‘சார் அப்புறம் ஒரு விஷயம்.’ என இழுக்கவே நான் உஷாரானேன். திரும்பி என் மனைவியைப் பார்த்தேன். அவர் எழுந்து படுக்கையில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் ஒலிவாங்கியில், ‘சார் ஒரு நிமிஷம்.’ என்று கூறிவிட்டு என் மனைவியிடம், ‘நீ போய் முதல்ல குளிச்சிட்டு சீக்கிரம் ரெடியாவு. வெளிய போவணும்.’ என்று அவசரப்படுத்தி அறையை விட்டு அனுப்பினேன். இந்த விஷயம் என் மனைவிக்கு தெரிந்தால் ‘அவ்வளவு பிரச்சினைனா அந்த வீடு வேண்டாங்க’ என்று எங்கே கூறிவிடுவார்களோ என்ற அச்சம் எனக்கு!

‘சார்..’ என்று குரல் மறுபுறத்திலிருந்து கேட்கவே.. ‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

‘சார், நேற்று ராத்திரி ரொம்ப நேரம் நாயக்கர் பேசினார். அவருக்கு நீங்க ஃபிக்ஸ் பண்ண வீடு பிடிக்கலைன்னு நினைக்கிறேன். மெட்றாஸ்லருக்கற நமக்கு இந்த குலம், கோத்திரம்லாம் முக்கியமில்லதான் சார். ஆனா ஊர் பக்கம் இன்னமும் அதுதான் பிரதானமாயிருக்கு. இப்பவும் நான் ஊருக்கு போகும்போதெல்லாம் இந்த மாதிரி பிரச்சினைகள சந்திக்க வேண்டிதான் வருது. இது காலங்காலமா கிராமபுறங்களிலும் தஞ்சாவூர் மாதிரி சிறு நகரங்கள்லயும் இருந்து வர்ற பிரச்சினை. இத நீங்களோ நானோ ஒரே நாள்ல தீர்த்து வைக்க முடியாது சார். அதுவுமில்லாம உங்கள மாதிரி மேனேசர்ங்க இத ஒரு பிசினஸ் கோணத்துலருந்து மட்டும் பார்க்கறதுதான் நல்லதுன்னு நினைக்கறேன்.’என்றவரை இடைமறித்தேன்.

‘பிசினஸ் கோணமா? அப்படீன்னா?’

‘சார் நான் சொல்ல வந்தது என்னன்னா, நாயக்கர் தஞ்சாவூர்ல மட்டுமில்ல, சுத்தி இருக்கிற இருபது, இருபத்தஞ்சி கிராமங்கள்லயும் ரொம்பவும் செல்வாக்கு இருக்கறவர். அவரால உங்க பேங்குக்கு நல்லமாதிரியான பார்ட்டிங்களயெல்லாம் கொண்டுவரமுடியும். அதனால ஆரம்பத்திலயே அவர் மனசு கோணாம பார்த்துக்கறது நல்லதுன்னு நினைக்கறேன். அதனாலத்தான் சொல்றேன். மத்தபடி உங்க இஷ்டம்.’

துவக்கத்தில் எனக்கு எரிச்சலாக இருந்தாலும் யோசித்துப் பார்த்தபோது அவர் கூறியதிலும் நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. இருப்பினும் உடனடியாக முடிவெடுக்க முடியாமல், ‘சரி சார். நீங்க சொன்னத யோசிச்சிப் பார்த்து நாயக்கர் கிட்டயும் பேசிட்டு ஒரு முடிவெடுக்கறேன். மாலைக்குள்ள உங்கள கூப்பிடறேன். உங்க அட்வைசுக்கு நன்றிங்க.’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

இணைப்பைத் துண்டிப்பதற்கே காத்திருந்ததுபோல் மீண்டும் தொலைப்பேசி சிணுங்க எடுத்தேன்.

‘சார் இங்க ரிசப்ஷன்லுருந்து பேசறேன்.’

‘என்ன சொல்லுங்க.’ என்றேன்.

‘சார் நாளைலருந்து ஒரு வாரத்துக்கு பெரிய கோயில்ல அரசு நடத்தற சதய விழாவுக்கு மெட்றாஸ்லருந்து அமைச்சர்களும், வி.ஐ.பிசும் வர்றதுனால எங்களுக்கு ரூம்ஸ் தேவைப்படுது சார். நீங்க பகல் ரெண்டு மணிக்குள்ள ரூம் காலிபண்ண வேண்டியிருக்கும். தொந்தரவுக்கு மன்னிக்கணும்.’

சட்டென்று எனக்கு கோபம் வந்தது. ‘என்னங்க இது அக்கிரமம்! அதுக்கெதுக்கு என்னை வெக்கேட் பண்ண சொல்றீங்க?’

தொடரும்..

27 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 44

யார்றா "அது? நடுக்கூடத்துல வச்சி உபசாரம் பண்ணிக்கிட்டிருக்கே..' என்று வீட்டின் பின்புறத்திலிருந்து வந்த ஓசையைக் கேட்டதும் பதறி எழுந்து ஓடிய வீட்டு உரிமையாளரைப் பார்த்து வியந்துபோய் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்க்க, தரகர் கலவரத்துடன் எங்களையே பார்த்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த வீட்டின் உரிமையாளர் நேரே தன் மனைவி இருந்த
அறைக்கு சென்றார். குசுகுசுவென்ற பேச்சு சப்தம் மட்டுமே எங்களுக்கு கேட்டது. நானும் என் மனைவியும் விவரம் புரியாமல் அவர்களிருவரும் இருந்த அறை வாசலையே பார்த்தோம்.

சற்று நேரத்தில் கூடத்திற்கு வந்த உரிமையாளர் என் எதிரில் இருந்த பலகை ஊஞ்சலில் அமர்ந்து என்னைப் பார்த்து அசடு வழிந்தார். ' அது எங்கம்மா சார். தொன்னூறு வயசாயிருச்சி. கண்பார்வை மங்கிட்டாலும் காது மட்டும் ஷார்ப்பா இருக்கு. அதான் நாம பேசிக்கிட்டிருந்தத கேட்டுட்டு யாருன்னு கேட்டாங்க. புதுசா குடித்தனம் வரப்போறவங்கம்மான்னேன். ஜாதி, குலம் கோத்திரமெல்லாம் பார்த்தியாடான்னு கேக்கறாங்க. அதான் என்ன சொல்லலாம்னு என் வீட்ல கேட்டுட்டிருந்தேன்.'

நான் என்ன மறுமொழி கூறுவதென தெரியாமல் தரகரைப் பார்த்தேன். அவர் மேல்கொண்டு எதுவும் பேசவேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தார். உரிமையாளர் அதை பார்த்துவிட்டார். 'என்ன தரகரே, என்ன சொல்றீங்க? சார் கிறீஸ்துவங்கன்னு அம்மா கிட்ட சொல்ல முடியாது. அதான் யோசிக்கறேன்.' என்றார்.

தரகர் உடனே, அதுக்கென்னங்க, சார் என்ன நேரா போயி அம்மாகிட்ட சொல்லவா போறார்? நீங்களா சொன்னாத்தான் தெரியப் போவுது.' என்றார்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. என் மனைவியைப் பார்த்தேன். அவரோ, 'வேண்டாங்க.. நீங்க சும்மா இருங்க.' என்பதுபோல் பார்த்தார்.

அதைப் பொருட்படுத்தாமல் நான் உரிமையாளரைப் பார்த்தேன். 'சாரி சார். உங்களுக்கு வீடு கொடுக்கறதுக்கு சங்கடமாயிருந்தா சொல்லிருங்க. எனக்கு பொய் சொல்லி வீடு பிடிக்கணும்னு இல்ல. நல்லா யோசிச்சி சொல்லுங்க. நான் வரேன்.' என்றவாறு எழுந்து நின்றேன்.

அவரும் எழுந்து நின்று, அதுக்கில்ல சார்..' என்று இழுத்தார். நான் தரகைரை பார்த்தேன். 'உங்களுக்கு சிரமம் இல்லேன்னா.. இந்த ஏரியாவிலேயே வேற வீடு ஏதாவது இருங்க காமிங்க.' என்றேன்.

தரகர் உரிமையாளரைப் பார்த்தார். 'சார் ஏதோ சொல்ல வந்தீங்களே?' என்று இழுத்தார்.

நான் இடைமறித்து, 'விட்டுருங்க சார். நாம வேற வீட்ட பார்த்துக்கலாம்.' என்று கோபத்துடன் கூறிவிட்டு என் மனைவியைப் பார்த்து 'வா போகலாம்.' என்றேன்.

நான் இறங்கிப் போவதைப் பார்த்து தரகரும் வேறு வழியில்லாமல் எங்களுக்கு பின்னால் ஓடி வந்தார். வீட்டு உரிமையாளரும் என் பின்னாலேயே வந்தார். 'சார் தயவுசெய்து தப்பா நினைச்சிக்காதீங்க. எனக்கு எங்கம்மாவ மீறி எதுவும் செய்ய முடியாது. வயசானவங்க இல்லையா?' என்றார்.

சட்டென்று பொங்கி வந்த கோபத்தை அடக்க முடியாமல் அவரை திரும்பிப் பார்த்தேன். 'கண்டிப்பா இதை தப்பாத்தான் எடுக்கப்போறேன் சார். உங்கம்மா வயசானவங்கன்னு சொல்லி உங்க செயலுக்கு நியாயம் கற்ப்பிக்க பாக்காதீங்க. என்னை நீங்க முதமுதலா கேட்ட கேள்வியே என்னுடைய ஜாதிய பத்தித்தானே சார்? நீங்க ஒரு அரசு ஊழியர். உங்க மேலே வேணும்னா நான் அதிகாரபூர்வமா புகார் எழுதி உங்க தலைமை அதிகாரிக்கு அனுப்ப முடியும். அப்படி அனுப்பினா என்ன ஆகும்னு தெரியுமில்ல? I can do that, you want to test me?'

என்னுடைய குரலில் இருந்த கோபம் அவரை வெகுவாக கலவரப்படுத்தியது. 'சார் அப்படியெல்லாம் செஞ்சிராதீங்க. எனக்கு இன்னும் ரெண்டு வருஷ சர்வீஸ்தான் இருக்கு. இந்த நேரத்துல இந்த மாதிரி புகார் வந்தா இதையே காரணமா வச்சி ஒருவேளை வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பிருவாங்க.'

கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் நின்றவரைப் பார்த்தபோதும் அவர்மேல் எனக்கு துளிக்கூட இரக்கம் ஏற்படவில்லை. அரசு துறையில் இத்தனை உயர்ந்த பதவியில் இருக்கும் இவரைப் போன்றவர்களே ஜாதி, மதம் என்ற பிரிவினையில் மக்களைப் பார்க்க துவங்கினால் பாமர மக்கள் என்று மாறப்போகிறார்கள்? இவருக்கு நான் கொடுக்கப்போகும் ஒரே தண்டனை நான் எங்கே புகார் அனுப்பப் போகிறேனோ என்று நினைத்து நினைத்து கலவரப்பட வைப்பதுதான். ஆகவே அவருடைய சால்ஜாப்புக்கு மறுமொழி கூறாமல் நான் வண்டியில் ஏறி அமர என் மனைவியும் அவரைத் தொடர்ந்து தரகரும் ஏறிக்கொண்டனர்.

வண்டி புறப்பட்டு சிறிது நேரம்வரை பேசாமல் இருந்த தரகரைப் பார்த்தேன். 'என்ன தரகரே பேசாம வர்றீங்க? நான் செஞ்சதுல ஏதாச்சும் தப்பு இருக்கா சொல்லுங்க. ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கற இவரே இப்படி செஞ்சா என்னாவறது? நான் எங்க அவர்மேல புகார் பண்ணிருவேனோன்னு தினமும் அவர் பயந்து சாகணும். அதுக்குத்தான் அப்படி ஒரு பொய்ய சொன்னேன்.'

தரகர் வியப்புடன் என்னை திரும்பிப் பார்த்தார். 'அப்படீன்னா நீங்க அவர்மேல புகார் அனுப்ப போறதில்லையா சார்?'

நான் சிரித்தேன். 'கண்டிப்பா இல்லங்க. அவர்மேல புகார் அனுப்பினா அவர் சொன்னா மாதிரி கண்டிப்பா அவர்மேல ஆக்ஷன் எடுப்பாங்க. வேலை போகலைன்னாலும் இதுக்கப்புறம் அவருக்கு எந்த பதவி உயர்வும் கிடைக்காது. அதனால எனக்கென்ன லாபம்? அவருடைய செயலுக்கு ஒரு அடையாள தண்டனை, அவ்வளவுதான். சரி அது போட்டும். இந்த ஏரியாவுல வேற ஏதாச்சும் வீடு இருக்கா? இருந்தா அதையும் பார்த்திட்டு போயிரலாம் இல்லே, அதனாலதான் கேக்கறேன்.'

தரகர் ஏதோ சொல்ல வந்து தயங்குவதைப் போல் தெரிந்தது.

'சொல்லுங்க. ஏதோ சொல்ல வந்தீங்க. என்ன விஷயம், சொல்லுங்க.' என்றேன்.

அவர் சிறிது நேரம் தயங்கிவிட்டு வண்டி ஓட்டுனரை ஒரு முறை பார்த்தார். 'சார் ஒன்னுமில்லை. நாயக்கருக்கு பிடிக்கிமோ பிடிக்காதோன்னுதான் தயங்குறேன். அவர் அந்த ஜாதிக்காரரோட வீட்டை சாருக்கு காண்பிக்காதீங்கன்னு என்கிட்ட கண்டிப்பா சொல்லியிருந்தாக. அதான் யோசிக்கறேன்.'

எனக்கு எரிச்சலாக வந்தது. இருப்பினும் அதை வெளியே காட்டாமல் அவரைப் பார்த்தேன். 'சும்மா தயங்காம சொல்லுங்க. அந்த வீடு எங்கருக்கு? பக்கத்துல இருந்தா நேரா அங்க வண்டிய விடுங்க. வீட்ட பார்ட்த்துட்டு முடிவு பண்ணலாம்.'

அவர் திரும்பி ஓட்டுனரிடம் அந்த வீட்டுக்கு வழி கூற அடுத்த ஒருசில நிமிடங்களில் அந்த வீட்டை அடைந்தோம். வீட்டை வெளியிலிருந்து பார்த்தபோதே எனக்கு மிகவும் பிடித்துப்போனது. என் மனைவியைப் பார்த்தேன். அவருடைய முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவரும் நான் நினைத்ததையே நினைக்கிறார் என்பதை உணர்த்தியது. சுமார் நான்காயிரம் சதுர அடி நிலத்தில் பிரதான வீடு ஒன்றும் அவுட் ஹவுஸ் போல சிறியதாய் கச்சிதமாய் ஒரு வீடும் இருந்தன. அவுட் ஹவுஸ் வீடுதான் காலியாயிருக்கும் என்று நினைத்தேன்.

வீட்டையடைந்ததும் தரகர் முதலில் இறங்கி 'சார் நான் முதல்ல உள்ளார போயி உங்களப்பத்தி சுருக்கமா சொல்லிட்டு உங்கள கூப்பிட்டுகிட்டு போறேன். நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க.' என்றார்.

எனக்கும் அவர் கூறியது சரியென்று படவே ஒரு சிறு புன்னகையுடன் தலையசைத்தேன். அவர் உள்ளே சென்றிருந்த நேரத்தில் வண்டியிலிருந்து இறங்கி அந்த வீட்டை சுற்றிலுமிருந்த வீடுகளைப் பார்த்தேன். காலனி நுழைவாயிலில் போஸ்டல் காலனி என்ற பலகையைப் பார்த்த நினைவு. ஆக, இக்காலனியில் வசிப்பவர்கள் தபால், தந்தி துறையில் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியே வந்த தரகர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் சென்ற காரியம் வெற்றி என்று உணர்த்தியது. வண்டிக்குள் அமர்ந்திருந்த என் மனைவியைப் பார்த்தவர், 'மேடம் இறங்கி வாங்க. உங்களப் பத்தி சொன்னேன். உடனே யோசிக்காம சரின்னு சொல்லிட்டாங்க. சார் வாங்க, வந்து வீட்டைப் பார்த்துட்டு சொல்லுங்க. பிடிச்சிருந்தா அட்வான்ஸ்கூட கொடுத்திரலாம்னு நினைக்கிறேன்.' என்றார்.

நானும் என் மனைவியும் பிரதான வீட்டை நோக்கி நடந்தோம். வீட்டின் வாயிலை அடையும் முன்பே வீட்டினுள் இருந்து நடுத்தர வயதுள்ள பெண்மனி வெளியே வந்து அவுட் ஹவுசை நோக்கி காண்பித்துவிட்டு எங்களுக்கு முன்னர் நடக்க ஆரம்பித்தார். வீட்டை பார்த்த முதல் பார்வையிலேயே எனக்கும் என் மனைவிக்கும் வீடு பிடித்துபோய்விட்டது. எங்கள் இருவருடைய முகத்திலும் தெரிந்த திருப்தியை கண்ட அப்பெண் எங்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தார். 'உங்க ரெண்டு பேருக்கும் வீடு பிடிச்சிருக்குன்னு உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. வாங்க வீட்டுக்குள்ளாற போயி பேசலாம்.'

அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர் கூறிய மாத வாடகை சரியென படவே ஒத்துக்கொண்டோம். 'முன் தொகையா எவ்வளவு கொடுக்கணும்னு சொன்னீங்கன்னா..' என்று நான் இழுக்க அவர் சிரித்துக்கொண்டே, 'பாங்க் மேனேஜர் கிட்ட அதெல்லாம் கேக்க மாட்டேன். அதுவுமில்லாம நீங்க ரெண்டு பேர் மட்டும்தானே. சாதாரணமா இவ்வளவு பெரிய வீட்டுல இந்த ஊர்ல அஞ்சாறு பேர் இருக்கற குடும்பமாத்தான் வருவாங்க. நீங்க டோக்கன் அட்வான்ஸா ரூ.1000/- கொடுங்க போறும். என்னைக்கு வரூவீங்கன்னு சொன்னா வீட்ட கொஞ்சம் சுத்தம் பண்ணி வைக்கறேன்.' என்றார்.

சென்னையில் ஐந்து மாத வாடகையாய் முன்தொகையாய் கொடுத்து பழக்கப்பட்ட எங்களுக்கு இது வியப்பை அளித்தது. சரி என்று உடனே சம்மதித்து அவர் கேட்ட தொகையைக் கொடுத்தேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிபுகுவதாய் கூறிவிட்டு வெளியே வந்தோம். வீட்டையும் வீட்டு உரிமையாளராய் பிடித்துப் போனதால் எங்கள் இருவர் மனதிலும் லேசாய் ஒரு சந்தோஷம். தரகரை பார்த்தேன். அவர் முகத்தில் ஏதோ ஒருவித சங்கடம் தெரிந்ததால், 'என்ன சார் உங்க முகத்தில ஏதோ சங்கடம் தெரியுதே. உங்களுக்கு பிடிக்கலையா?' என்றேன்.

அவர் வண்டிக்குள் ஏறப்போன என்னை தடுத்து நிறுத்தினார். 'சார் ஒரு நிமிஷம், இப்படி வாங்க.'

என் மனைவியை காரில் ஏறி அமர கூறிவிட்டு நான் சற்றே தள்ளி நின்ற தரகரை நெருங்கினேன். 'சொல்லுங்க. என்ன விஷயம்?'

அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, 'சார் நாயக்கர் நான் உங்கள லாட்ஜ்ல பார்க்கறதுக்கு புறப்பட்ட உடனே இந்த ஜாதிக்காரங்க வீட்ட சாருக்கு முடிச்சி குடுத்திராதய்யான்னு சொல்லித்தான் அனுப்பினார்.' என்றார்.

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. இதுக்குத்தானா? என்று நினைத்தேன். பதில் கூறாமல், 'வாங்க.. போய்க்கிட்டே பேசலாம்.' என்றவாறு நாங்கள் வந்த வந்த வாகனத்தை நோக்கி நடந்தேன்.

என் பின்னால் ஓடிவந்த தரகர் வாகனத்தில் ஏறியவுடனேயே ஆரம்பித்தார். 'சார் இதவிட வேறொரு வீடு கொஞ்சம் தள்ளி இருக்கு சார். அதையும் பார்க்கறீங்களா?' என்றார்.

நான் புன்னகையுடன் அவருடைய உள்நோக்கத்தைப் புரிந்துக்கொண்டு, 'அதான் வீடு பிடிச்சிருக்குன்னு அட்வான்சையும் கொடுத்திட்டோமே. அப்புறம் எதுக்கு வேற வீடு. நீங்க பேசாம வாங்க நாயக்கர் சார்கிட்ட நான் பேசிக்கறேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லைன்னு அவர்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்.' என்றேன்.

நான் என்ன பேசுகிறேன் என்று புரியாமல் என்னைப் பார்த்த என் மனைவி, 'என்னங்க சொல்றீங்க? எதுல நம்பிக்கையில்லன்னு சொன்னீங்க? நாம பார்த்த வீட்ல எதுவும் பிரச்சினையாம்மா?' என்றார்.

என் மனைவியின் அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகள் உறக்கம் கலைந்து புரண்டு படுப்பதைப் பார்த்த நான், 'அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டிருக்காதே. பேசாம வா. பாப்பா முளிச்சிக்கிட்டான்னா அப்புறம் அவளை சமாதானப் படுத்துறதுக்குள்ள போறும், போறும்னாயிரும்.' என்றேன்.

வண்டி தஞ்சை நகரத்தை நோக்கி விரைந்தது. நாயக்கர் கூறிய குலத்தவரை தஞ்சை மக்கள் இன்னமும் இழிகுலத்தவராய் கருதி ஒதுக்கி வைத்திருந்த அவலத்தை எண்ணிப் பார்த்து வேதனையடைந்தேன். இத்தனைக்கும் இக்குலத்தை சார்ந்த பலரும் படித்து பட்டம் பெற்று அரசு உத்தியோகம் உள்பட பல துறைகளிலும் முன்னேறியிருந்தனர். நான் சற்று முன் சந்தித்த குடும்பத்திலிருந்தும் மூத்த ஆண்மகன் பொறியாளர் பட்டம் பெற்றதுடன் மேற்படிப்புக்காக அயல் நாடு சென்றுள்ளார் என அப்பெண்மணி கூறியதை நினைத்துப் பார்த்தேன். நல்ல பொருளாதார வசதியுடன் இருந்த அக்குடும்பம் இன்ன ஜாதி, இன்ன குலம் என்று தரகர் கூறியிராவிட்டால் அவர்களுக்கும் அதுவரை நான் சென்று கண்டவர்களுக்கும் எந்தவித வித்தியாசத்தையும், பேச்சிலும் சரி, தோற்றத்திலும் சரி, நான் கண்டிருக்க மாட்டேனே. சொல்லப்போனால் அதுவரை நான் கண்ட வீடுகளைவிடவும் இந்த வீடு நல்ல வசதியுடன், காற்றோட்டமாக இருந்ததுடன் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு நன்றாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது. வீட்டு உரிமையாளரும் தோற்றத்திலும், பேச்சிலும் மற்ற உயர்குலத்தோரை விடவும் உயர்ந்தவர்களாகவே எனக்குத் தெரிந்தது. ஒரேயொரு குறை வீடு தஞ்சையிலிருந்து பதினைந்து கிலோ மீட்டருக்கும் தள்ளியிருந்ததுதான்.

அதற்கு முன் நான் சந்தித்த உயர்குலத்தைச் சார்ந்த அரசு அதிகாரி, மற்றும் அவருடைய மனைவியை ஒப்பிட்டுப் பார்த்தபோது இவர்கள் எத்தனையோ விதத்தில் மேல் என்றே தோன்றியது..

இது என் இரண்டு வருட தஞ்சைவாசத்தின் முதல்நாளே ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்.

மேலும் நாயக்கருக்கு நிச்சயம் இந்த விஷயம் பிடிக்காது சார் என்று தரகர் கூறியபோது பெரிதாக நினைக்காத நான் தரகர் விஷயத்தை அவரிடம் கூறியவுடன் அவர் ரியாக்ட் செய்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

தொடரும்..

26 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 43

அதில் வேடிக்கை என்னவென்றால் என் மத்திய கிளையின் மேலாளருக்கு எதிராக என்னுடைய தலைமையகத்திற்கு கிடைத்த ஒரு புகாரின் உண்மையைக் கண்டுபிடித்து அறிக்கையனுப்புவதற்காகத்தான் என்னை அனுப்பியிருந்தார்கள், ரகசியமாக. என்னுடைய விசாரிப்பின் அறிக்கையை இவர் படித்து பார்க்கும்போது என்னைப் பற்றி இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்தேன்.

இதைப் பற்றி நேரம் வரும்போது கூறுகிறேன்.

நானும் என் மனைவியும் தஞ்சாவூரில் வந்து இறங்கியபோது அதிகாலை 4.00 மணி. சென்னையிலிருந்து புறப்படுவதற்குமுன் என்னுடைய சென்னை கிளையின் வாடிக்கையாளர்களுள் ஒருவருடைய தஞ்சை நண்பர் நாயக்கர் (முழுப்பெயர் வேண்டாம். அவர் காலமாகிவிட்டாலும் அவருடைய வாரிசுகள் இன்று தஞ்சையில் மிகவும் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.) மூலமாக தஞ்சை ரயில்நிலையத்துக்கு அருகிலிருந்த தமிழ்நாடு ஹோட்டலில் அறைக்கு ஏற்பாடு செய்திருந்ததால் ரயிலிலிருந்து இறங்கியவுடனே எந்தவித சிரமுமில்லாமல் எங்களுடைய தஞ்சைவாசம் ஆரம்பித்தது.

மேற்கூறிய நாயக்கர் தஞ்சையில் அரிசி மொத்த வியாபாரியாக இருந்தார். அத்துடன் கோவையிலிருந்த பல மொத்த அரிசி வியாபாரிகளுக்கு தஞ்சை விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து, தஞ்சை நகரத்தையொட்டியிருந்த Rice Millகளில் சுத்தம் செய்து அனுப்பி வைக்கும் கமிஷன் ஏஜென்ட் ஆகவும் இருந்தார்.

நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் பெருநகரவாசிகளுக்கே உரித்தான பந்தா இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தார். நான், குளித்து முடித்து அவரைத் தொலைபேசியில் அழைக்கலாம் என்று நினைத்தபோது அவர் பார்வையாளர் அறையில் வந்து காத்திருப்பதாக என்னுடைய அறைக்கு தொலைப்பேசி வரவே ஆச்சரியத்துடன் அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு சென்றேன்.

என்னுடைய சென்னை கிளை வாடிக்கையாளர் என்னைப் பற்றி என்ன கூறியிருந்தாரோ தெரியவில்லை, என்னைக் கண்டதும் உடனே எழுந்து நின்று கரம் கூப்பி மிகவும் மரியாதையுடன் காலை வணக்கம் சொன்ன விதம் என்னை சங்கடத்திற்குள்ளாக்கியது. என்னுடைய தந்தை வயதிருக்கும் அவருக்கு.

பளபளக்கும் கருத்த மேனி நிறம், வெள்ளை வெளேர் என்ற கதர் சட்டை கதர் வேஷ்டியில் சற்று தூக்கலாகவே தெரிந்தது. மேட்சிங் நிறத்தில் நெற்றியிலிருந்து மேல் தூக்கி வாரப்பட்டிருந்த தலை முடியும், நீண்டு, திரண்டு வளர்ந்திருந்த மீசையும் நெற்றியில் பிரதானமாய் தோன்றிய சந்தணப் பொட்டும் ஒரு கிராமத்து மிராஸ்தார் தோரணத்தை அளித்தாலும் அவருடைய தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத எளிமையும் சேர்ந்து பார்ப்பவர் மனதில் ஒரு கண்ணியமான தோற்றத்தை ஏற்படுத்தியது.

அசப்பில் பார்த்தால் மோட்டார் சுந்தரம் பிள்ளை நடிகர் திலகத்தின் சாயல். என்னையுமறியாமல் இதை நான் அவரிடமே கூறிவிட்டேன்.

நடிகர் திலகத்தின் கனத்த குரலில் உரக்க சிரித்தார். ‘நமக்கும் சூரக்கோட்டைதான் சார்.’ என்றார். பிறகு தொடர்ந்து, ‘உங்கள பத்தி நம்ம நண்பர் நிறைய சொல்லியிருக்கார் சார். உங்களுக்கு உடனடியா குடியிருக்க ஒரு வீடு வேணும், அவ்வளவுதானே சார்? எனக்கு தெரிஞ்ச வீட்டு தரகர் கிட்ட சொல்லியிருக்கேன். ஒரு மணி நேரத்துல வந்துருவான். இன்னைக்கி சாயரட்சைக்குள்ள முடிச்சிரலாம், சார்.’ என்று வார்த்தைக்கு வார்த்தை 'சார்' போட்டது என்னை மேலும் தர்மசங்கடத்திற்குள்ளாகியது.

நடிகர் திலகத்தின் குரல் மாடுலேஷன்கூட கச்சிதமாக அப்படியே இருந்ததுபோல் தோன்றியது எனக்கு. ஒருவேளை பிரமையோ என்றும் நினைத்தேன்.

‘சரி சார். நானும் என் மனைவியும் வந்திருக்கோம். இன்னைக்குள்ள வீடு அமைஞ்சிட்டா நல்லாருக்கும். உங்கள பத்தியும் உங்க நண்பர் என் கிட்ட நிறைய சொல்லியிருக்கார். நீங்கதான் எங்க கிளைக்கு வேண்டிய இடத்தையும் பிடிச்சி தரணும். நீங்க இதே ஊர்ல ரொம்ப வருஷமா இருக்கறதனாலதான் சார் கேக்கறேன். எனக்கும் உங்களவிட்டா எனக்கு வேற யாரும் தெரியாதில்லையா?’ என்றேன்.

‘செஞ்சிரலாம் சார். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பத்து மணிக்கு மேல தரகர அனுப்பிவைக்கறேன். முதல்ல வீட்டை பிடிச்சி சாமானெல்லாம் கொண்டுவந்து செட்டிலாயிருங்க. பிள்ளைங்களுக்கு ஸ்கூல்ல அட்மிஷன் வேணும்னாலும் சொல்லுங்க. எனக்கு ரெண்டு மூனு ஸ்கூல் கரஸ்பான்டன்ட்ஸ் கூட தெரியும்.’

நான் நன்றியுடன் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். ‘எனக்கு ரெண்டு வயசுல ஒரு பொண்ணு மட்டும்தான். அதனால இன்னும் ஒரு வருஷத்துக்கு அந்த கவலை இல்லை.’

‘அப்படீயா சார்.'என்று மீண்டும் உரத்த குரலில் சிரித்தார். 'நான் பார்த்த பாங்க் மேனேசர்ங்கல்லாம் நாப்பது நாப்பத்தஞ்சி வயசு ஆளுங்க. படிக்கற பசங்க இருப்பாங்க. அந்த நினைப்புல கேட்டேன். நீங்க தரகரோட போங்க. வீடும் பிடிச்சி வாடகையும் பிடிச்சிருந்தா தரகர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிறுங்க. வீட்டுக்காரர்கிட்ட பேசி உங்களுக்கு வீடு கிடைக்கறத நான் பார்த்துக்கறேன். இங்க அநேகமா ரெண்டு மூனு ஜாதிகாரங்கதான் வீடு சொந்தமா வச்சிருப்பாங்க. அதுல - - - ஜாதிகாரங்க வீடுக நல்லாருந்தாக்கூட நமக்கு வேணாம். போயிராதீங்க. இன்னொன்னு. நீங்க கிறீஸ்தவங்கன்னு சொன்னதுமே இன்ன ஜாதிதான் நினைச்சுக்கிட்டு வீடு தரமுடியாதுன்னு சொல்வாங்க. நீங்க வேலை செய்யற பாங்கும் இங்க யாருக்கும் தெரியறதுக்கு வாய்ப்பில்லாததனால நீங்களா இதையெல்லாம் வீட்டுக்காரங்க கிட்ட சொல்லா வேணாம். நம்ம தரகர்கிட்ட உங்களபத்தி சொல்லியிருக்கேன். நீங்க போய் வீடு புடிச்சிருக்கான்னு மட்டும் பாருங்க. மத்தத நான் பேசி முடிச்சி தரேன்.’

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கும் இந்த ஜாதி விஷயங்களிலெல்லாம் அத்தனை அக்கறையில்லை. நான் காட்பாடியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் தந்தைக்கு திடீரென சென்னைக்கு மாற்றலாகிவிட்டதால் நான் ஒன்றரையாண்டுகள் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படிக்க நேர்ந்தது. காட்பாடி, வேலூரை சுற்றியிருந்த சுமார் ஐம்பது கிராமங்களில் வசித்த நடுத்தர, மற்றும் ஏழை மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில்தான் முதன் முதலாக ஜாதி என்கின்ற பாகுபாடு பள்ளி பயிலும் மாணவர்கள் மனதிலும் வேரூன்றி நின்றதை பார்க்க முடிந்தது.

அப்போதெல்லாம்கூட நான் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் என்னுடைய இரண்டு வருட தஞ்சைவாசத்தில் கிராம மக்களை ஜாதி எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்துள்ளதென்பதை புரிந்துக் கொண்டேன்.

நான் சந்தித்த சில கசப்பான விஷயங்களை வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

நான் நாயக்கரைப் பார்த்து, ‘சரி சார். நான் வீட்டையெல்லாம் பார்த்துட்டு வந்து உங்களை பார்க்கிறேன்.’ என்று விடைபெற்றேன்.

நாயக்கர் கூறிய தரகர், ஒரு வாடகை காரில் சரியான நேரத்தில் வந்து என்னை அழைத்துச் சென்றார். தரகர்களுக்கே உரித்த பாணியில் அவர் போகும் வழி முழுவதும் தன்னுடைய நேர்மையைப் பற்றி பெருமையாக கூறிக்கொண்டதுடன் தஞ்சையிலுள்ள பெரும்பாலான வங்கி மேலாளர்கள் வீடு வேண்டுமென்றால் இவரைத்தான் தேடி வருவார்கள் என்றும் கூறினார்.

அவருடன் அன்று நாள் முழுவதும் தஞ்சையை வலம் வந்தது இதை எழுதும்போதும் அப்படியே என் கண் முன் விரிகிறது.

சென்னைவாசி போன்ற பெருநகரவாசிகளுக்கே உரித்தான கர்வம் எனக்கும் இருந்தது. சிறு நகர மற்றும் கிராமவாசிகள் என்றால் பட்டிகாடுகள், அதிக படிப்போ நாகரீகமோ இல்லாதவர்கள் என்று.

தஞ்சையில் என்னுடைய முதல் நாள் அனுபவம் என்னுடைய எண்ணத்தை உறுதிபடுத்தவே செய்தது. அது என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தினால் ஏற்பட்ட எண்ணம். அது ஒட்டுமொத்த தஞ்சைவாசிகளைப் பற்றிய எண்ணமாக நீங்கள் கருதலாகாது.

நாயக்கர் ஆரம்பத்திலேயே என்னை எச்சரித்திருந்தாலும் நான் அன்று சந்தித்த வீட்டு உரிமையாளர்கள் அனைவருமே என்னுடைய ஜாதியைப் பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தபோது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முதலில் சந்தித்த இரண்டு வீடுகளில், ‘அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க?’ என்று நான் கோபப்பட்டபோது அவர்கள் தரகரைப் பார்த்து, ‘ஏம்யா, நீராவது இந்த மாதிரி பட்டணத்துக்காரகளுக்கு விலாவாரியா சொல்லி கூட்டிக்கிட்டு வரப்படாது? இந்த மாதிரி ---- ஆளுங்கல்லாம் (அவர்கள் பழித்து சொன்ன ஜாதி பெயரை தவிர்த்திருக்கிறேன்) இருக்கறதுக்குன்னுதான டவுணுக்கு வெளிய மெடிக்கல் காலேசுக்கு பக்கத்துல புதுசு புதுசா காலனிங்க வந்திருக்கில்ல? அங்க கூட்டிக்கிட்டு போம்யா.’ என்று ஏளனத்துடன் கூறியதைக் கேட்டு வேதனையுடன் என் மனைவியைப் பார்த்தேன். ஆனால் ‘இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லீங்க. எங்கூர்லயும் இருக்கறதுதான். இதுக்கெல்லாம் டென்ஷனாயி வந்த இடத்துல சண்டை போடாதீங்க.’ என்றார் என் மனைவி. அவர் கூறியது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி என்பதை தூத்துக்குடியில் பணிபுரிந்த இரண்டாண்டுகளில் அனுபவித்து புரிந்துக்கொண்டேன்!

‘சார், நீங்க இந்த மாதிரி கோபப்பட்டு பலனில்லைங்க. டவுணுக்குள்ள இன்னமும் ----- ஆளுகள தங்க விடமாட்டாங்க. மெடிக்கல் காலேஜ் வந்ததுக்கப்புறம் உங்களமாதிரி பட்டணத்துக்கார டாக்டர், நர்சம்மாங்க, டாக்டருக்கு படிக்கறவங்களுக்கெல்லாம் ஏத்தா மாதிரி புதுசு புதுசா காலனிங்க வந்திருக்கு. ஆனா பஜார்லருந்து பத்து மைலுக்கு மேல இருக்கும். உங்க கிட்ட வண்டி இருக்குங்களா? இருந்தா அங்கேயே போய் பாக்கலாம். வாடகை கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் வீடு நல்லா வசதியா இருக்கும்.’ என்றார் தரகர்.

நான் என் மனைவியைப் பார்த்தேன். அவரும் ‘சரிங்க. உங்ககிட்டதான் ஸ்கூட்டர் இருக்கில்ல? பத்து, பதினஞ்சி மைலுங்கறது பெரிய தூரமில்லையே.’ என ஆமோதிக்க நான் தரகரைப் பார்த்து தலையசைத்தேன்.

‘புதுசு புதுசா’ என்று தரகர் வர்ணித்த காலனியிலிருந்த வீடுகள் ஏறத்தாழ நான் சென்னையில் வசித்துவந்த வீடுகளைப் போலவே இருந்தன. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன். வீட்டு உரிமையாளர் தமிழக அரசின் கூட்டுறவு வங்கியொன்றில் உயர்ந்த பதிவியில் இருந்தார். அவர் அதற்கு முன்பு பல வருடங்கள் சென்னை கிளைகளில் மேலாளராக பணிபுரிந்தவர் என்று அவருடைய மனைவி கூறியதும், ‘அப்பாடா, இவர்கள் நிச்சயம் ஜாதியைப் பற்றி கேட்கமாட்டார்கள்.’ என்று நிம்மதியடைந்தேன். நாங்கள் சென்ற சமயம் பகல் நேரமாதலால் மதிய உணவருந்த வங்கி வாகனத்தில் வந்திருந்த வீட்டு உரிமையாளர் என்னைப் பார்த்ததுமே கேட்ட முதல் கேள்வி இதற்கு முன்பு நான் சந்தித்த வீட்டு உரிமையாளர்கள் கேட்ட கேள்வியேதான், ஆனால் சற்றே பாலிஷாக இருந்தது.

நான் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்தேன். ‘சார் நீங்க மெட்றாஸ்ல ரொம்ப வருஷம் இருந்திக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்க போய் இப்படி..’

நான் அப்படி வெளிப்படையாக பேசியதும் அதிர்ச்சியடைந்து என்ன சொல்வதென்று தெரியாமல் தன் மனைவியையும், தரகரையும் மாறி, மாறி பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன் மனைவியைப் பார்த்து, ‘நீயே பேசி முடிச்சிரு. சாரி சார், எனக்கு அர்ஜண்டா ·பீஸ்ல வேலை இருக்கு.’ என்று கூறிவிட்டு தன் வாகனத்தை நோக்கி நடந்தவரை நிறுத்தி என்னுடைய அடையாள அட்டையை (என்னுடைய வங்கியில் புகைப்படம் மற்றும் என்னுடைய கையொப்பத்துடன் கூடிய ஒரு அடையாள அட்டை எல்லா ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது) நீட்டினேன்.

அதைப் பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் நின்று என் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டார். ‘சார் நீங்களும் ஒரு பேங்க் மானேஜரா? ஐ ஆம் வெரி சார்.. உங்ககிட்ட போயி..’ பிறகு தரகரைப் பார்த்து ‘என்னய்யா தரகரே.. கூட்டிக்கிட்டு வர்றதுக்கு முன்னாலயே ஒரு வார்த்தை சொல்லப்படாது..’ என்று கோபித்துக் கொண்டார்.

வங்கி மேலாளர் என்றால் எந்த ஜாதியானாலும் பரவாயில்லையென்று நினைத்தாரா அல்லது தஞ்சை வங்கி வட்டாரத்தில் தன்னைப்பற்றி இவர் கூறினால் தன் இமேஜ் போய்விடுமே என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. அவர் நடந்துகொண்ட விதத்தை ஈடுகட்டும் விதமாக என்னையும் என் மனைவியையும் தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று காப்பி ('வெல்ல' காப்பி வாய்க்குள் இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்தது!) பலகாரம் கொடுத்து உபசரித்தார்.

‘வந்த இடத்துல நீங்க அப்படி கேட்டதும் நான் சட்டுன்னு பயந்துட்டேங்க. நல்ல வேளை, இவரும் உங்க வேலையே பாக்கறதுனால தப்பிச்சோம்.’ என்று ரகசிய குரலில் பேசிய என் மனைவியைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தேன்.

‘யார்றா அது? நடுக்கூடத்துல வச்சி உபசாரம் பண்ணிக்கிட்டிருக்கே..’ என்று வீட்டின் பின் புறத்திலிருந்து வந்த ஓசையைக் கேட்டதும் பதறி எழுந்து ஓடிய வீட்டு உரிமையாளரைப் பார்த்து வியந்துபோய் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்க்க, தரகர் கலவரத்துடன் எங்களையே பார்த்தார்.

தொடரும்

23 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் 42

‘மிஸ்டர் ஜோசப். நான் காலைல சொன்னதப்பத்தி பெரிசா ஒர்றி பண்ணாதீங்க. உங்களப்பத்தி எனக்கு H.O.ல கிடைச்ச தகவல் அப்படி இருந்திச்சி. அதனாலதான் டீடெய்லா செக் பண்ணனும்னு தோணிச்சி. உங்கள மாட்டி விடணும்னு இல்ல. நவ் ஐ ம் நாட் வொர்றீட் எனிமோர். நாளைக்கே உங்கள் நான் ரிலீவ் பண்ணிடறேன். மத்தத நான் அப்புறமா பார்த்துக்கறேன்.’ என்றவரை சந்தேகக் கண்ணோடு பார்த்தேன்.

ஆனாலும் அவர் கூறியதை மறுத்து பேச என்னால் முடியவில்லை. ‘சரி.’ என்று சொல்லிவிட்டு என் வாகனத்தை முடுக்கி அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். போகும் வழியெல்லாம் இவரை எந்த அளவுக்கு நம்பலாம் என்ற யோசனைதான்.

வீட்டையடைந்ததும் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிய வீடே ஜெகஜோதியாக இருப்பதையும் வீட்டினுள் ஆட்கள் நடமாடுவதையும் பார்த்தேன். ஊரிலிருந்து யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு வாகனத்தை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன்.

என் மாமனாரும் இரு மைத்துனர்களும் ஊரிலிருந்து வந்திருந்தார்கள். என்னுடைய மாற்றத்தை என் மனைவி தொலைப்பேசியில் அறிவித்திருக்க வேண்டும். எனக்கு உதவி செய்யும் எண்ணத்துடன் உடனே புறப்பட்டு வந்துவிட்டார்கள்.

அந்தகாலத்தில் இப்போது இருப்பது போல Packers & Movers என்று யாரும் இருக்கவில்லை. எல்லா தட்டுமுட்டு சாமான்களையும் நாமேதான் மூட்டைக் கட்டி ஏதாவது ஒரு வாகனத்தைப் பிடித்து அனுப்ப வேண்டும்.

நல்லவேளை, என் மாமனார் சமயோசிதமாக அவருடைய நண்பர் வேலை பார்த்த சென்னையில் தலைமையகத்தை கொண்டிருந்த ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் விலாசத்தோடு வந்திருந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் என் மைத்துனர்களின் துணையுடன் எல்லா பொருட்களையும் Pack செய்து தயாராக வைத்தேன்.

முதலில் நானும் என் மனைவியும் தஞ்சைக்கு சென்று தங்குவதற்கு ஒரு வீட்டைப் பிடிக்க வேண்டுமென்றும் அதுவரை என் மைத்துனர்கள் சென்னை வீட்டில் பொருட்களுக்கு பாதுகாப்பாக தங்கியிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தோம். பிறகு வீடு அமைந்ததும் மைத்துனர்கள் பொருட்களை டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் வண்டியில் ஏற்றி அனுப்பவும் ஏற்பாடு செய்திருந்தேன்.

என்னுடைய கிளையிலிருந்து விடுவிக்கப்பட்ட அடுத்த நாளே தஞ்சைக்கு கிளம்பி செல்லவேண்டியதுதான்.

ஒரு நாள் கழித்து என்னுடைய விடுவிப்பு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள என்னுடைய கிளைக்கு சென்றேன். மேலாளர் அறையில் அவரை காணாததால் என்னுடைய உதவி மேலாளரை அணுகி அவர் எங்கே என்று வினவினேன். அவரோ என்னை நிமிர்ந்துக் கூட பாராமல் தனக்கு தெரியாது என்றார். அவர் குரலிலிருந்த அலட்சியம் என்னை எரிச்சலூட்டியது.

பார்க்கப்போனால் விடுவிக்கப்படும் வரை அந்த கிளையின் உண்மையான மேலாளர் நான்தான். அதை என்னுடைய உதவி மேலாளருக்கு உணர்த்தவேண்டும் என்று தீர்மானித்து நேரே என் அறைக்கு சென்று அமர்ந்து அழைப்பு மணியை அடித்தேன். உள்ளே வந்த சிப்பந்தியுடன் உதவி மேலாளரை கூப்பிடச் சொன்னேன்.

சிப்பந்தி சென்று கூறியவுடன் வராமல் தன் இருக்கையிலமர்ந்தவாறே என்னை திரும்பிப் பார்த்தார். நான் அவரைப் பார்க்காமல் தொலைப்பேசியை எடுத்து வெறுமனே ஒரு எண்ணை சுழற்றி இணைப்பு கிடைப்பதற்குமுன் வேண்டுமென்றே வெளியே இருந்த உதவி மேலாளருக்கு கேட்கும் வகையில் உரத்த குரலில் பேச ஆரம்பித்தேன்.

‘சார் நான்தான் டிபிஆர். இன்னைக்கி என்னை ரிலீவ் பண்ண வேண்டிய மேனேஜர் அலுவலகத்துக்கு வரவில்லை. உதவி மேலாளர் எனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாக கூறுகிறார். நான் என்ன செய்யட்டும், கூறுங்கள்.’ என்றேன்.

என்னுடைய குரலைக் கேட்ட உதவி மேலாளர் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். நான் அவர் வந்ததை கவனியாதவன்போல் தொலைப்பேசியில் என் நாடகத்தை தொடர்ந்தேன். ‘என்ன சார்? உதவி மேலாளருக்கு கொடுக்கவா? நீங்களே அவர்கிட்ட கேக்கறீங்களா? சரி சார். இதோ கொடுக்கிறேன்’ என்றவாறு அவரை நோக்கி திரும்பி ஒலிவாங்கியை நீட்டினேன். ‘இந்தாங்க நம்ம H.R.Head லைன்ல இருக்கார். நீங்களே அவர்கிட்ட உங்க மேனேஜர் எங்க போயிருக்கார்னு தெரியலைன்னு சொல்லுங்க.’

அவர் நான் சொல்வதை நம்பி ஒலிவாங்கியை வாங்க மறுத்து, ‘ வேணாம் சார். எனக்கு அவர் எங்க போயிருக்கார்னு தெரியும் சார். இதுக்கு எதுக்கு Head Officeக்கெல்லாம் ஃபோன் பண்ணிக்கிட்டு.. நீங்களே ஏதாச்சும் சொல்லிட்டு வைங்க சார். நான் போன எடத்த சொல்றேன்.’ என்றார்.

பதற்றத்தில் முகம் வெளுத்துபோய் நின்ற அவரைப் பார்க்கவே பாவமாயிருந்தது. ‘உங்களுக்கெல்லாம் இப்படி பண்ணாத்தான் வழிக்கு வருவீங்க’ என்று நினைத்துக்கொண்டு டயல் டோன் கேட்கும் ஒலிவாங்கியில், ‘சாரி சார். மேனேஜரே வந்துட்டாரு. ரிலீவ் பண்றதுல ஏதாச்சும் பிரச்சினையிருந்தா மறுபடியும் கூப்டறேன் சார்.’ என்று பொய்யாய் கூறிவிட்டு தொலைப்பேசியை வைத்தேன்.

உதவி மேலாளரை கோபத்துடன் பார்த்தேன். அதுவும் நடிப்புத்தான். ‘இங்க பாருங்க. எனக்கும் நம்ம மானேஜருக்கும் இடையில நீங்க வந்து நுழைஞ்சி ஆதாயம் பார்க்க முயற்சி பண்ணீங்க.. அது உங்களுக்குத்தான் வினையா முடியும். சொல்லிட்டேன். நீங்க ஆஃபீசரா ஆகி ஒரு வருஷம்தான் ஆயிருக்கு. இந்த வருஷத்தோட உங்க கான்ஃபிடன்ஷியல் ரிப்போர்ட் நான்தான் அனுப்ப வேண்டியிருக்குங்கறதையும் மறந்துராதீங்க. புரிஞ்சிதா? இப்ப சொலுங்க எங்க உங்க மேனேஜர்? என் ரிலீவிங் ஆர்டர் என்னாச்சி?’ என்றேன்.

சிறிது நேரம் தயங்கி நின்றவர், ‘சார் அவர் வேணும்னே வீட்லருந்துக்கிட்டு உடம்பு சரியில்லைன்னு நீங்க வந்தா சொல்ல சொன்னார் சார். அவருக்கு உங்கள எப்படியாவது மாட்டிவிடணும். அதுக்காக ரெண்டு நாளா எல்லாத்தையும் துருவி துருவி பார்த்தார். ஒன்னும் கிடைக்கலை. அதான் வெறுப்புல இப்படியாவது தொந்தரவு கொடுக்கலாம்னு நினைக்கறார் போலருக்குது. அவர் உங்கள மாதிரி இல்ல சார். ரொம்ப மோசமான ஆளு. இவர் கிட்ட நான் எப்படித்தான் வேலை செய்யப்போறேனோன்னு நினைச்சா பயமா இருக்கு சார்.’ என்றார்.

‘டேய் போறுன்டா.. போன மூனு நாளா அந்தாள்கிட்ட குழைஞ்சி, குழைஞ்சி நின்னுட்டு .. இப்ப சும்மா பேருக்கு ஒரு மிரட்டல் விட்டதும் அந்தாளையே குறை சொல்லுறியா?’ என்று நினைத்து வியப்புடன் அவரை பார்த்தேன்.

என்னுடைய பார்வையிலிருந்த வியப்பு அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ‘என்ன சார் அப்படி பாக்கறீங்க? நான் அவர் முன்னால உங்கள அலட்சியப்படுத்துனது உண்மைன்னு நினைச்சீங்களா? அதெல்லாம் வெறும் நடிப்பு சார். அந்தாளுக்கு பயந்துக்கிட்டு அப்படி செஞ்சேன்.’

நான் அவரை பரிதாபத்துடன் பார்த்தேன். ‘சரி அப்படியே இருக்கட்டும். கொஞ்ச நேரத்துக்கு முன்னால நான் அவர் எங்கேன்னு கேட்டப்போ கொஞ்சம்கூட சட்டை பண்ணாமல் அலட்சியமா பேசனீங்களே, அது? அதுவும் அவருக்கு பயந்தா? அவர்தான் இங்க இல்லவே இல்லையே?’

என்னுடைய நேரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார். ஏதோ சாக்கு சொல்ல வந்தவரை ‘போதும்.’ என்பதுபோல் சைகைக் காண்பித்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்தேன்.

‘இங்க பாருங்க. இப்ப நான் போறேன். மாலை நான்கு மணிக்கு வருவேன். அப்போது என்னுடைய ரிலீவிங் சான்றிதழ் எனக்கு கிடைக்கவில்லையென்றால் நான் மீண்டும் H.R. Headடிடம் புகார் செய்வேன் என்று உங்க மேலாளரிடம் தெரிவியுங்கள். புரிகிறதா?’ என்று எச்சரித்துவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினேன்.

என்னுடைய எச்சரிக்கை நான் எதிர்பார்த்த வேலையை செய்திருந்தது. நான் மீண்டும் மாலையில் திரும்பி சென்றபோது மேலாளரே இருக்கையிலிருந்து எழுந்து என்னை ஒரு அகண்ட சிரிப்புடன் வரவேற்றார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னுடைய மாற்றலுக்கான உத்தரவும், விடுவிப்பு சான்றிதழும் ஒரு உறையில் என்னிடம் வந்தன. நான் அதைப் பெற்றுக்கொண்டதும் மேலே பேசிக்கொண்டிருக்க விரும்பாமல் எழுந்து பேருக்கு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வெளியேறி ஹாலில் இருந்த என் உதவி மேலாளர் உட்பட அனைத்து ஊழியர்களிடமும் விடைகூறிக்கொண்டு கிளையை விட்டு வெளியேறினேன்.

அன்றோடு அக்கிளையினுடனான என்னுடைய மேலாளர் பந்தம் விட்டுப்போனது.

அடுத்த நாளே நானும் என் மனைவியும் இரவு நேர ரயிலில் புறப்பட்டு சென்றோம்.

நான் தஞ்சையிலிருந்த நாட்களில் என் பெற்றோரை சந்திக்க சென்னைக்கு செல்லவேண்டியிருந்தாலும் என்னை விடுவித்த மேலாளர் அக்கிளையில் இருந்த வரை நான் அங்கு சென்றதே இல்லை. ஆனால் நான் முந்தைய பதிவில் கூறியிருந்தபடி அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அன்று வேறொரு அலுவல் நிமித்தம் சென்னையில் இருந்ததால் அவரை சந்திக்க நேர்ந்தது. ஆனால் பாவம் அன்று அவர் இருந்த நிலை கண்டு அனுதாபப்படத்தான் என்னால் முடிந்தது.

‘உங்க மேலே அவர் செய்யாத புகாரே இல்ல டிபிஆர். இப்ப பார்த்தீங்களா அவருக்கு நேர்ந்த நிலைமைய.. அப்போ நீங்களா இருந்ததால அவருக்கெதிரா ஒன்னும் சொல்லாம இருந்தீங்க.. உங்க எடத்துல நான் இருந்திருந்தா அவர் கதையே கந்தலாயிருக்கும்.’ என்று ஏளனத்துடன் பேசிய அன்று சென்னை மத்திய கிளை மேலாளராக இருந்த என் நண்பரைப் பார்த்தேன்.

ஒன்றும் சொல்ல தோன்றாமல் வெறுமனே புன்னகைத்தேன். அதில் வேடிக்கை என்னவென்றால் என் மத்திய கிளையின் மேலாளருக்கு எதிராக என்னுடைய தலைமையகத்திற்கு கிடைத்த ஒரு புகாரின் உண்மையைக் கண்டுபிடித்து அறிக்கையனுப்புவதற்காகத்தான் என்னை அனுப்பியிருந்தார்கள், ரகசியமாக. என்னுடைய விசாரிப்பின் அறிக்கையை இவர் படித்து பார்க்கும்போது என்னைப் பற்றி இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்தேன்.

தொடரும்..

22 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 41

நான் சிறிது நேரம் அவரையே பார்த்தேன். இவருடைய ஆணவ பேச்சிற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று யோசித்தேன்.

அவர் என்னை விட நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் சீனியர், வயசிலும் அனுபவத்திலும், என்பதை மறுக்க முடியாதுதான். ஆனாலும் அவர் பேசிய தோரணை என்னை வெறுப்பேற்றியது.

நான் அக்கிளையில் கொடுத்த கடன்களைப் பெற்ற எந்த ஒரு வாடிக்கையாளரும் அதை திருப்பித்தராமல் இருக்கவில்லை. அதாவது, முதலமைச்சரை திறப்புவிழாவிற்கு அழைத்ததன் நிமித்தம் வழங்கிய கடன்களைத் தவிர. அதைப் பற்றி கடந்த முறை என் கிளையில் ஆய்வு நடத்திய என் வட்டார மேலாளரே தன் அறிக்கையில் பெரிதாக ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டார்.

ஆனால் இவரோ என்னிடமிருந்து கடன் பெற்ற எல்லா வாடிக்கையாளர்களையுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதுபோல் பட்டது. இவருக்கு வேண்டுமானால் வாடிக்கையாளர்களுடைய வர்த்தக தளங்களைச் சென்று பார்க்கலாமே. அதை விட்டு விட்டு அவர்களையெல்லாம் இவரை வந்து பார்க்க சொல்வது ஒரு அகங்ககார செயலாகவே பட்டது எனக்கு. எந்த ஒரு வாடிக்கையாளரையும், அவர் எத்தனை சிறியவராக இருந்தாலும், சரியான காரணமில்லாமல் வங்கிக்கு வரவழைத்து தொல்லை செய்யக்கூடாது என்பது நான் கடைப்பிடித்து வந்த நியதி.

ஆகவேதான் அவருடைய இந்த விநோத விருப்பத்திற்கு பதிலொன்றும் கூறாமல் அவரையே பார்த்தேன்.

‘என்ன ஜோசப்? பதிலையே காணோம். அவங்கள இங்க வரச்சொன்னா நான் எங்கே ஏதாவது கேக்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டு உங்க குட்டு வெளிவந்துருமோன்னு பயப்படறீங்களா? சொல்லுங்க.’

எத்தனை அநாகரீகமான, பொறுப்பற்ற பேச்சு? கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அடக்க முயற்சித்து தோற்றுப் போனேன். ‘சார், இந்தமாதிரியான பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கணும்னு எனக்கு தலையெழுத்தில்லை. நீங்க கேட்டா மாதிரி எனக்கு செய்ய இஷ்டமில்லை. என்னுடைய இந்த செயலுக்கு உங்க ரிலீவிங் மேனேஜர் ரிப்போர்ட்ல என்னைப் பற்றி ஏதாவது எழுதணும்னு உங்களுக்கு தோனிச்சின்னா தாராளமா எழுதிக்குங்க. தயவுசெய்து இந்த மாதிரி பேசறத நிறுத்திட்டு சேஃப் ரூம்லருக்கற, தங்க நகைகள், சொத்து மற்றும் பங்கு பத்திரங்கள் மாதிரியானவற்றை உங்களுக்கு சரிபார்க்கணும்னா நான் இன்னைக்கும் நாளைக்கும் இருப்பேன். அந்த நேரத்துல என் முன்னாலயே நீங்க சரிபார்த்துக்கணும். இல்லன்னா நான் பாட்டுக்கு இறங்கி போயிகிட்டே இருப்பேன். என்னை ரிலீவ் பண்றதும் பண்ணாததும் உங்க இஷ்டம்.’

என்னுடைய அசாத்திய கோபத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவருடைய முகமே காட்டிக்கொடுத்தது. என்னுடைய குரல் அறைக்கு வெளியே கேட்டிருக்க வேண்டும். ஹாலில் இருந்த சகல தலைகளும் அறையை நோக்கி திரும்பின. என்னுடைய உதவி மேலாளர் இருக்கையிலிருந்து எழுந்து நின்று எங்கள் இருவரையும் பார்த்தவாறே அறையை நோக்கி வந்தார். நான் வரவேண்டாம் என்பதுபோல் சைகை செய்யவே அவர் திரும்பி சென்று இருக்கையில் அமர்ந்து எங்களையே பார்த்தார். நான் என் பார்வையைத் திருப்பி என் முன் அமர்ந்திருந்தவரை பார்த்தேன்.

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்த அவர், ‘ஓகே. இஃப் யூ டோன்ட் வான்ட் டு டூ வாட் ஐ வான்டட் தட்ஸ் ஃபைன் வித் மி. ஆனா பின்னால வருத்தப்படாதீங்க. அவ்வளவுதான்.’ என்றவாறு எழுந்து நின்றார். ‘வாங்க சேஃப் ரூம்லருக்கற செக்யூரிட்டீசைப் பாக்கலாம்.'

நான் இருக்கையிலிருந்து எழுந்திருக்காமல், ‘நாம போக வேண்டாம் சார். உதவி மேலாளர்கிட்ட சொன்னா போறும். அவரே கொஞ்சம் கொஞ்சமா நம்ம டேபிளுக்கு கொண்டு வருவார்.’ என்றேன்.

சிறிது நேரம் என்ன பதில் சொல்வது என்று யோசித்தவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து அறையையே பார்த்துக்கொண்டிருந்த உதவி மேலாளரை பார்த்து சைகை செய்ய அவரும் உள்ளே வந்து மிகவும் பவ்யமாய் நின்றார். அவர் என்னைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்ததை நான் கண்டுகொள்ளவில்லை.

அன்றைய தியதியில் நான் கொடுத்து, நிலுவையிலிருந்த தங்க நகை கடன்கள் சுமார் ஆயிரத்துக்கு மேலிருந்தன. அதற்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளையெல்லாம் பரிசோதிப்பதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். அதேபோல்தான் சொத்து பத்திரங்களும் மற்றவையும்.

ஒரு கிளையிலிருந்து மாற்றலாகி போகும் மேலாளருக்கும் புதிதாய் பொறுப்பேற்க வந்த மேலாளருக்கும் இடையில் பரஸ்பரம் நம்பிக்கை வேண்டும் என்பதுதான் அடிப்படை நியதி. வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த எல்லா பொருட்களையும் சரிபார்த்துவிட்டுத்தான் என்னால் வங்கிக்கு பொறுப்பேற்கமுடியும் என புது மேலாளர் வாதிட ஆரம்பித்தாலோ அல்லது மாற்றலாகிப் போகும் மேலாளர் தான் விடுவிக்கப்படுவதற்கு முன்பு தன் முன்னாலேயே இவை எல்லாவற்றையும் பரிசோதித்து எந்த பிரச்சினையுமில்லை என்ற அறிக்கை தரப்படவேண்டும் என்று வாதிட்டாலோ பிரச்சினைக்கு முடிவே இராது.

அதுவுமல்லாமல் ஒரு கிளையின் வர்த்தகத்தைப் பொறுத்தே பொறுப்பேற்க கால அவகாசம் நிர்ணயிக்கப்படும். அதற்குள்ளாகவே பொறுப்பேற்க வந்தவர் தன்னால் இயன்றவரை இவற்றையெல்லாம் பரிசோதித்து தன்னை திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டும். அதே போல மாற்றலாகிப் போகிறவர் பொறுப்பேற்க வந்தவரை விசுவசித்து பொறுப்பை ஒப்படைத்துச் செல்லவேண்டும்.

இதில்தான் பரஸ்பர நம்பிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

பொறுப்பேற்க வந்த முதல் நாள்வரை அவரைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயம் நன்றாய்தானிருந்தது. ஆனால் இன்று அவர் நடந்துக்கொண்ட விதம் அவர்மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அமையவே எனக்கும் என்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

மேலும், எனக்கு அதுதான் முதல் கிளை. அதுவரை நான் எந்த கிளையின் பொறுப்பையும் புதிதாய் வந்த மேலாளருக்கு ஒப்படைத்து பழக்கம் இல்லை. ஆனால் இவர் அப்படியல்ல. ஏற்கனவே இரண்டு கிளைகளில் பணியாற்றி மாற்றலானவர்.

ஆகவே அவர் அடகு வைக்கப்பட்ட ஒவ்வொரு நகைகளையும் கல்லில் உரைத்துப் பார்த்து பரிசோதிக்க ஆரம்பித்ததும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன். அவர் என்னை முற்றிலும் பொருட்படுத்தாமல் உதவி மேலாளர் உதவியுடன் தன்னுடைய பரிசோதனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார். இந்த வேகத்தில் சென்றால் கிளையின் முழு பொறுப்பையும் ஏற்றெடுக்க நிச்சயம் பத்து நாளாவது ஆகும் என்று நினைத்தேன்.

இருப்பினும் நான் ஏதாவது சொல்லப்போக மீண்டும் பிரச்சினை வெடிக்குமோ அன்ற அச்சத்தில் வாளாவிருந்தேன்.

அவர் ஒவ்வொரு கணக்கையும் சரிபார்த்து முடித்தவுடன் தன்னுடைய கருத்துக்களை ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்ள ஆரம்பித்தார். நான் அவரிடம், ‘சார், நீங்கள் குறிப்பெடுக்கின்ற குறிப்புகளின் நகல் எனக்கு வேண்டும். ஆகவே ஒரு கார்பன் பேப்பரை உபயோகித்து குறிப்பெடுத்தால் உதவியாயிருக்கும்.’ என்றேன்.

அவர் நான் கூறியதைக் கேட்டும் கேட்காததுபோல் தன் வேலையைத் தொடரவே எனக்கு எரிச்சல் வந்தது. உடனே எழுந்து நின்றேன். ‘சார், என்னுடைய வேண்டுகோளை நீங்கள் அலட்சியம் செய்யும் பட்சத்தில் நான் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் இருவருமே பரிசோதித்து முடித்து எனக்கு தெரிவித்தால் போதும். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வருவேன். நீங்கள் உங்களுடைய அறிக்கையை தந்தால் நல்லது. இல்லையென்றால் நான் நம் H.R.ல் கூறிவிட்டு சென்றுவிடுவேன். ஆனால் ஒன்று, நான் இங்கிருந்து இறங்கி சென்றபிறகு நீங்கள் அறிக்கையில் வில்லங்கமாக எழுதும் ஒவ்வொரு குறிப்பையும் நான் எதிர்ப்பேன்.’ என்று கூறிவிட்டு அவருடைய பதிலை எதிர்பாராமால் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினேன்.

என்னுடைய இந்த நடவடிக்கையை அவர் எதிர்பார்க்கவில்லை. நான் படியிறங்கி என்னுடைய இரு சக்கர வாகனத்தை அடைவதற்குள் என் பின்னாலேயே ஓடி வந்தார். ‘ஜோசப் நில்லுங்க. டோன்ட் கெட் எக்சைட்டட். வி வில் டிஸ்கஸ் அபவுட் திஸ். ப்ளீஸ் கம் பேக்.’ என்றார்.

வங்கி கட்டிடத்தின் கீழ் தளத்திலிருந்த கடைகளின் உரிமையாளர்கள் வெளியே வந்து எங்கள் இருவரையும் பார்ப்பதைக் கண்ட நான் இதை விவகாரமாக ஆக்க விரும்பவில்லை. மறுபேச்சு பேசாமல் அவருடன் திரும்பி சென்றேன்.

நாங்கள் இருவரும் அறைய அடைவதற்கு முன்னரே என்னுடைய உதவி மேலாளர் குறிப்பேட்டில் கார்பனை வைத்து இது வரை குறிப்பெடுத்ததை மீண்டும் நகல் எடுக்க கண்டேன். ‘படவா, அப்படி வா வழிக்கு.’ என்று மனதில் நினைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்து அவர்கள் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

நகல் எடுக்க ஆரம்பித்ததும் அவருடைய குறிப்பெடுக்கும் வேகமும் வெகுவாய் குறைந்தது. அதுமட்டுமல்ல, மொத்தமிருந்த ஆயிரம் கணக்குகளையும் ஒவ்வொன்றாக பரிசோதிப்பதை நிறுத்திவிட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடன் தொகை கொண்ட கணக்குகளில் ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளை மட்டும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அத்தகைய கணக்குகள் அதிகபட்சம் இருநூறு மட்டுமே இருந்ததால் அவருடைய பரிசோதனை அன்றிரவு சுமார் ஒன்பது மணிக்கு முடிந்தது.

எல்லா கணக்குகளையும் பரிசோதித்து முடிந்த பிறகும் ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

அதுவரை பரிசோதித்த பொருட்களையெல்லாம் சேஃப் ரூமில் வைத்துவிட்டு கிளையை விட்டு வெளியேறும்போது இரவு மணி பத்து.

‘மிஸ்டர் ஜோசப். நான் காலைல சொன்னதப்பத்தி பெரிசா ஒர்றி பண்ணாதீங்க. உங்களப்பத்தி எனக்கு H.O.ல கிடைச்ச தகவல் அப்படி இருந்திச்சி. அதனாலதான் டீடெய்லா செக் பண்ணனும்னு தோணிச்சி. உங்கள மாட்டி விடணும்னு இல்ல. நவ் ஐ ஆம் நாட் வொர்றீட் எனிமோர். நாளைக்கே உங்கள் நான் ரிலீவ் பண்ணிடறேன். மத்தத நான் அப்புறமா பார்த்துக்கறேன்.’ என்றவரை சந்தேகக் கண்ணோடு பார்த்தேன்.

தொடரும்

21 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 39

சென்னை கிளையிலிருந்து எனக்கு மாற்றலாகிவிட்டது என்று தெரிந்ததுமே என் வங்கியிலிருந்த பலரும் சந்தோஷப்பட்டார்கள் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் வங்கிக்கு வெளியிலும் அதுபோன்ற ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். அதில் முதல் ஆள் என் மனைவிதான்.

தூத்துக்குடி போன்ற சிறிய ஊரில் சொந்தபந்தங்களின் மத்தியில் வசித்துவிட்டு திடீரென்று சென்னையில் அதுவும் கோடம்பாக்கத்திலிருந்த உயர்மட்ட சென்னைவாசிகள் குடியிருந்த ஒரு காலனியில் இரண்டு ஆண்டுகள் தன்னந்தனியாய் வசிக்க வேண்டி வந்ததை நினைத்து என் மனைவி புலம்பாத நாளேயில்லை.

தூத்துக்குடியில் வசித்தபோது ஒரு சின்ன சந்தோஷத்தையும் தன் வயதொத்த தோழிகளுடன் பகிர்ந்துக் கொண்டு ஜாலியாய் இருந்த என் மனைவி குடியே முழுகினாலும் நமக்கென்ன வந்தது என்பதுபோல் பட்டும் படாமலும் இருந்த சென்னைவாசிகளுடன் அனுசரித்து போக முடியாமல் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போதுள்ளதுபோல் போக்குவரத்து வசதிகளும் துவக்க எண்பதுகளில் இருந்ததில்லையே. ஊருக்கு போகவேண்டுமென்றால் நெல்லை விரைவு வண்டி ஒன்றுதான். அதில் இரண்டோ மூன்றோ பெட்டிகளை தூத்துக்குடிக்கென்று இனைத்திருப்பான். அவற்றை மணியாச்சி ரயலில் ஜங்ஷனில் துண்டித்துவிட்டு எனக்கென்ன வந்தது என்பதுபோல் நெல்லை வண்டி போய்விடும்.

துண்டிக்கப்பட்ட பெட்டிகள் ‘தேமே’ என்று நெல்லை-தூத்துக்குடி சாதா வண்டியை எதிர்நோக்கி குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்கும். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கட்டாந்தரையாய் இருந்த மணியாச்சி நிலையத்தைப் பார்க்கும் போதெல்லாம் கடுப்பாகிவிடும். கருப்பட்டி காப்பின்னு கருப்பா ஒன்ன ஒரு பித்தளை கெட்டில்லருந்து பிடிச்சி குடுப்பாங்க பாருங்க குடிச்சி முடிச்ச அடுத்த நாள் வரைக்கும் அந்த டேஸ்ட் நாக்குலருந்து போகவே போகாது. ‘எய்யா, இங்கல்லாம் ஜீனி காப்பி கிடைக்காதுங்க.’ன்னு வேற விளக்கம் தருவாய்ங்க, என்னமோ ஜீனி காப்பி தப்பான விஷயம் போல. கோதுமை தோசை மாதிரி வெல்லத்த நடுவுல வச்சி ‘போளி’ன்னு ஒன்னு விப்பாய்ங்க. சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே இருக்கும். ‘இது மாதிரியெல்லாம் உங்க மெத்ராஸ்ல கிடைச்சிருமாக்கும்! என்று நக்கலுடன் சொல்வார் என் மனைவி.

சென்னை எழும்பூரில் மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டால் தூத்துக்குடி போய் சேர அடுத்த நாள் காலை பதினோரு மணியாகிவிடும். அதாவது சுமார் 600 கி.மீ தூரத்தை கடக்க 18 மணி நேரம்! ஊர் போய் இறங்கியதும் நம்மை வரவேற்பது குண்டும் குழியுமான சாலைகளும், அதன் இருபுறமும் கடல் மணல் நிறைந்த, தூசிபிடித்த ஒரு டவுண்! ஆகஸ்ட், செப்டம்பர் என்றால் கேட்கவே வேண்டாம். காத்து காலமாம்! ஊர்ல நடக்கறவன் தலையெல்லாம் கடல் மணல்தான்.! ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்பாங்களே அதுமாதிரி தெருவுலருக்கற கடல் மணல் பறந்து பறந்து போர வர்றவங்களையெல்லாம் அபிஷேகம் பண்ணும்.

குண்டும் குழியுமாய் இருந்த சாலைகளில் ஓடி ஓடி பெண்டு விழுந்துபோன சக்கரங்களுடன் இருக்கை என்ற பெயரில் கிழிந்துபோன (‘எலேய், சீட்ல பார்த்து இரி. ஆணியில மாட்டி துணி கிளிஞ்சிரப்போவுது’) ரெஸ்கின் சட்டையுடன் இருந்த மரச்சட்டங்களில் லாவகமாக அமர்ந்து, ஒவ்வொரு முறையும் பள்ளங்களில் லொட லொட சைக்கிள் ரிக்ஷா விழுந்து எழும்போது ரிக்ஷா கூரையில் போய் தலை முட்ட (நல்ல வேளை. இப்போது போல் தலை சொட்டையாயிருந்தால் முட்டி முட்டி ஒரு பள்ளமே விழுந்திருக்கும்!) மாமியார்! வீடு போய் சேர்வதற்குள் ‘சை! ஏன்டா வந்தோம்’னுருக்கும். ஆனால் என் மனைவியின் முகம் மட்டும் ஏக பிரகாசமாய் ஏதோ சொர்க்கலோகத்துக்கு வந்ததுபோலிருக்கும்.

அப்படி இருந்தவருக்கு சென்னைவாசம் முற்றிலும் பிடிக்காமல் போனதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

என்னுடைய தஞ்சை மாற்றம் அவருக்கு சந்தோஷத்தையளிக்க வேறொரு காரணம் தூத்துக்குடிக்கு போய்வரும் பயண நேரம் வெகுவாய் குறைந்து போனதும்தான். தஞ்சையிலிருந்து மதுரைக்கு நாள் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்று பேருந்துகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கும். அதே போல் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கும் நள்ளிரவிலும் பேருந்துகளுக்கு பஞ்சமேயில்லை. தஞ்சையிலிருந்து காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டால் பொழுது சாயும் நேரத்திற்குள் ஊர் போய் சேர்ந்துவிடலாம்.

ஆக, என் மாற்றம் எனக்கும் என் பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்தாலும் என் மனைவியின் சந்தோஷத்தைப் பார்த்து ஆறுதல் அடைந்தேன்.

என் தலைமையலுவலகத்திலிருந்து மாற்றத்திற்கான உத்தரவு வந்ததும் நான் போகிறேன் என்று சந்தோஷப் பட்ட இரண்டாம் ஆள் அந்த வட்ட செயலாளர். ‘என்ன சார், நீங்க சொன்ன ஆளுக்கெல்லாம் லோன் குடுத்துட்டு இப்ப ஒராளும் கட்ட மாட்டேங்கறானே.’ என்று அடிக்கொருதரம் போய் நச்சரிக்க மாட்டேன் அல்லவா! அவருக்கு எப்படித்தான் விஷயம் தெரிந்ததோ கடன் பெற்றோரிடமிருந்து வசூலித்த பணத்தில்! ஒரு மாலையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் பூ, பழம், மிட்டாய் சகிதம் நாலைந்து அடிபொடிகளுடன் வந்து மாலையை அணிவித்து ஒரு சின்ன பிரிவு உபசாரத்தையே நடத்திவிட்டார். கூடியிருந்த வாடிக்கையாளர்களுக்கும் விவரம் தெரிந்து என் கையைப் பிடித்து குலுக்கி ‘வாழ்த்துக்கள்’ என்றபோது அடடா, நாம இங்கருந்து போறது எத்தனை பேருக்கு மகிழ்ச்சி என்று நொந்துபோனேன்.

என்னிடம் கடன் பெற்று இன்று மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் ஒருவரைப் பற்றி எழுதியிருந்தேன். அவர் ஒருத்தர்தான் என்னுடைய திடீர் மாற்றத்தை அறிந்ததும் வருத்தப்பட்டார். ஒருவேளை புதுசா வற்ர மேனேசர் எப்படியிருப்பார்னு தெரியலையே என்றும் இருக்கலாம்.

‘அதெல்லாம் ஒன்னும் கவலைப் படாதீங்க. அவர் வந்ததம் உங்களுக்கு அறிமுகப்படுத்திட்டுதான் போவேன்.’ என்றதும்தான் அவருடைய முகம் மலர்ந்தது. ‘அதாவது, நீங்க இருந்தா என்ன போன எனக்கென்ன சார்? என்ன பத்தி நல்லவிதமா சொல்லிட்டு போனா சரிதான்.’ என்பதுபோலிருந்தது அவர் முகம்.


எனக்கு அடுத்தபடியாக மேலாளராக வருபவர் வந்து என் கிளைக்கு பொறுப்பேற்ற பிறகே நான் புறப்படவேண்டும் என்று உத்தரவு வரவே வேறு வழியின்றி என்னுடைய பயணத் திட்டத்தை தள்ளிபோட வேண்டியிருந்தது.

அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதுவரை பார்த்ததில்லை. நான் முந்தைய பதிவில் கூறியிருந்ததுபோல் அவர் பெரும் செல்வந்தர் குடும்பத்து மருமகன்! என்னைப் போல் வேலை செய்துதான் பிழைக்கவேண்டும் என்ற தேவையில்லாதாவர்.

சென்னை போன்ற பெருநகர் கிளையொன்றில் மேலாளராக பணியாற்றுவது அவருக்கு இதுதான் முதல்.

அவர் சென்னை வந்து சேருவதற்கு முன்பே அவருடைய மாமனார் வீட்டிலிருந்து அவருடைய மேனேஜர் இரண்டு பணியாட்களுடன் வந்து கோடம்பாக்கத்தில் பெரும் செல்வந்தர்கள் வாழும் குடியிருப்பில் (அந்த காலத்தில் கோடம்பாக்கத்தில் எழுப்பப்பட்ட ட்யூப்ளெக்ஸ் வடிவ குடியிருப்பு அது ஒன்றுதான்) மாதம் ரூ.2000/- வாடகைக்கு (நான் குடியிருந்த வீட்டின் வாடகை மாதம் ரூ.750/-!) அமர்த்தி, அன்றே சென்னையிலிருந்த ஒரு Furniture கடையிலிருந்து வீட்டிற்கு தேவையான சகலவித Furnnitureகளையும் வாங்கி போட்டு அமர்க்களப்படுத்திவிட்டு போனார்.

அதையெல்லாம் நேரிடையாக மேற்பார்வை பார்த்த என்னுடைய உதவி மேலாளர் என்னை பார்த்த பார்வையிலிருந்த ஏளனம் இன்னும் என் கண்முன் நிற்கிறது. ‘ஒரு மூனாயிரம் பணத்த போய் என்ன கட்ட சொன்னீங்களே சார். இவர பாருங்க, பிச்ச காசு, அஞ்சாயிரத்தையும் இவரே கட்னாலும் கட்டியிருப்பாரு’ என்பதுபோலிருந்தது அவரது பார்வை.

ஆக, என்னிடமிருந்து கிளையின் பொறுப்பை எடுக்க வந்து இறங்கியதே ஒரு அமர்க்களமாய் நடந்து முடிந்த ஒரு நாடகம் போலிருந்தது.


அவர் பணியில் சேர்ந்த அன்று மாலையே எனக்கும் என் வங்கியிலிருந்த எல்லா ஊழியர்களுக்கும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்த ஒரு பிரபல உணவகத்தில் அட்டகாசமான விருந்தளித்தார். விருந்தின் முடிவில் தன் வீர பராக்கிரமத்தை அவரே விலாவரியாய் எடுத்து கூறி வந்திருந்த எல்லோருக்கும் ஒரு விலையுயர்ந்த ஹீரோ பேனாவை பரிசாக அளித்தார்.

அடுத்த நாள் காலையில் நான் முற்றிலும் எதிர்பாராத ஒன்றையும் அவர் செய்தார். என் முன்னாலேயே அவர் அந்த கப்பல் பார்ட்டி சேட்டை அழைத்து (அவருடைய தொலைப்பேசி எண்ணை அவர் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது!) தன்னை அறிமுகப்படுத்தாமலே பேசத் துவங்கினார். அதாவது, நான் ஏற்கனவே அவருக்கு அறிமுகமானவர்தான் என்பதை எனக்கு காட்டுவதற்காக.

‘சார் நான் பிராஞ்சில ஜாய்ன் பண்ணிட்டேன். இனி நீங்க கவலைப் படவேண்டாம். அந்த ஃபைல அனுப்பறதுதான் என் முதல் வேலை. நான் நாளைக்கே நம்ம அசிஸ்டென்டோட வரேன். அங்கேயே உக்கார்ந்து ப்ரொப்போசல பிரிப்பேர் பண்ணிரலாம். You Don’t worry sir. That is my first job.’

தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு என்னை பார்த்த பார்வையிலேயே ஒரு இறுமாப்பு தெரிந்தது.

‘சரி, நீ வேலைக்கு சேர்ந்த நேரம் சரியில்ல போலிருக்குது. நா என்ன பண்றது?’ என்று நினைத்துக்கொண்டேன்.

‘மிஸ்டர் ஜோசப்.. உங்க கணிப்புல சேட் ஒரு ஃப்ராட் இல்ல?’ என்றார் ஒரு ஏளனப் புன்னகையுடன். உடன் இருந்த என்னுடைய உதவி மேலாளரின் உதடுகளிலும் அதே புன்னகை.

‘அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. அதுவுமில்லாம இனிமே நான் அவரப்பத்தி என்ன நினைக்கிறேங்கறது அவ்வளவு முக்கியமில்லையே.. அதனால நாம அதப்பத்தி எதுவும் பேச வேண்டாம். நீங்க பொறுப்பேற்கறதுக்கு மூனு நாள்னு ஆர்டர்ல போட்டிருந்தது. உங்களுக்கு என்னெல்லாம் பாக்கணும்னு ஒரு லிஸ்ட ப்ரிப்பேர் பண்ணிடறது நல்லதுன்னு நினைக்கிறேன்.எனக்கும் சவுகரியாம இருக்கும்’ என்றேன்.

அவர் அலட்சியத்துடன் சிரித்தார். அதெல்லாம் இருக்கட்டும் ஜோசப். நீங்க இதுவரைக்கும் சாங்ஷன் பண்ண லோன் பார்ட்டீசையெல்லாம் நான் பாக்கணும். எல்லாரையும் கூப்டு நாளைக்கு இங்க வரச்சொல்லுங்க.’

நான் சிறிது நேரம் அவரையே பார்த்தேன். இவருடைய ஆணவ பேச்சிற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று யோசித்தேன்.

தொடரும்.

17 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் 39

ஆனால் அதற்கு முன் என்னுடைய தலைமையகத்திலிருந்து என்னிடம் விளக்கம் கேட்டு வந்த அந்த கடிதம்!

அதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

சாதாரணமாக என்னுடைய தலைமையகத்திலிருந்தும், வட்டார அலுவலகத்திலிருந்தும் வரும் தபால் உறைகளை நான்தான் பிரித்து படிப்பேன். தினமும் இருபது, முப்பது தபால்கள் வரும் என்பதால் மீதமுள்ள தபால் உறைகளை என்னுடைய உதவி மேலாளரே பிரித்து தேவைப்பட்டால் என் பார்வைக்கு அனுப்புவார்.

அன்று என்னுடைய தலைமையகத்திலிருந்து வந்த உறையைப் பிரித்ததும் முதலில் என் பார்வையில் பட்ட கடிதம் என்னை அதிர்ச்சியில் ழ்த்தியது. கடிதத்தின் தியதியைப் பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன்தான் தயாரிக்கப் பட்டிருந்தது. இரண்டே நாட்களுக்குள் வந்து சேர்ந்ததைப் பார்க்கும்போது இது யாரோ திட்டமிட்டு செய்த வேலை என்று தெரிந்தது. அதற்கு நம் கிளையிலிருந்தே யாரோ துணை போயிருக்கிறார்கள். யாராயிருக்கும் என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. எல்லாம் நம் உதவி மேலாளருடைய வேலையாய்த்தான் இருக்கும்.

ஆனாலும் இதைத் தெளிவுபடுத்த என்னிடம் ஒரு ஆதாரமும் இல்லை.

மீண்டும் கடிதத்தைப் பார்த்தேன். அதன் சாராம்சம் இதுதான்.

‘உங்கள் கிளையின் கடந்த மாத அட்வான்ஸ் பேமெண்ட் அறிக்கையின்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உங்களுடைய சட்ட ஆலோசகருக்கும், சொத்து மதிப்பீட்டாளருக்கும் கொடுக்கப் பட்ட ரூ.5000/- இன்னும் வரவு செய்யப்படாமல் இருக்கிறது. அதை வரவு செய்ய முடியாத பட்சத்தில் அதை ஏன் உங்கள் ஊதிய பணத்திலிருந்து வசூலிக்க கூடாது என்று இக்கடிதம் கண்ட இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு பணிக்கப்படுகிறீர்கள். தவறும் பட்சத்தில் இத்தொகை இம்மாத ஊதியத்திலிருந்து கழிக்கப்படும். பொது மேலாளர்.’

நான் என் உதவி மேலாளரை அழைத்து கடிதத்தைக் காண்பித்து அவர் படிப்பதையே பார்த்தேன். ஆனால் அவரோ முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் வாசித்தார். இதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கத்தான் அவர் இப்படி செய்கிறார் என்று எனக்கு தெரிந்தது.

‘என்ன சார்.. திடீர்னு இப்படி வந்திருக்கு? இப்ப என்ன செய்யப் போறீங்க?’ என்று கேட்டவரை வியப்புடன் பார்த்தேன். ‘என்ன செய்யப் போறீங்க?’ அதாவது இவருக்கு அதில் எந்த பங்கும் இல்லை என்பது போல!

சாதாரணமாக வங்கியிலிருந்து முன் தொகையாக எடுக்கும் எந்த தொகையும் அதன் சம்பந்தப் பட்ட வாடிக்கையாளருடைய கணக்கிலிருந்து அடுத்த நாளே வசூலித்துவிட வேண்டும் என்பது நியதி. வாடிக்கையாளருக்கு கணக்கு இல்லாத சூழ்நிலையில் அளிக்கப்படுகின்ற சேவைக்கு தேவையான தொகையை அவரிடமிருந்து முன்கூட்டியே வசூலிக்க வேண்டுமே தவிர வங்கியுடைய ‘முன் தொகை’ கணக்கிலிருந்து எடுக்கக் கூடாதென்பதும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், எடுக்கப்பட்ட தொகையை எவ்வளவு விரைவில் வசூலிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வசூலித்துவிடவேண்டும் என்பதும், அப்படி வசூலிக்கப்படாத நிலை ஏற்பட்டால் கிளை மேலாளர் துவங்கி கிளையிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லோரிடமிருந்தும் சமமாக பிடிக்கப்படவேண்டும் என்பதும் எங்கள் வங்கியின் பொது நியதி.

ஆக, சேட்டிடமிருந்து வசூல் ஆகாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு என் உதவி மேலாளரிடத்திலுமிருந்தும் விளக்கம் கேட்கப்படவேண்டும். அத்துடன் அவரிடமிருந்து சரி பாதியான தொகையும் வசூலிக்கப்படவும் வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் ஒருதலைப் பட்சமாக என்னிடமிருந்து மட்டும் விளக்கம் கேட்டிருப்பதும் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்க முடியாத சூழ்நிலை எழுந்தால் என்னுடைய ஊதியத்திலிருந்து முழுத்தொகையும் பிடிக்கப்படும் என்பதும் சற்று அதிகப்படியான மிரட்டலாகவே எனக்குப் பட்டது.

நான் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்து கேலியுடன் சிரித்தேன். ‘என்ன சார் என்ன செய்யப் போறிங்கன்னு கேக்கறீங்க? இந்த விளக்க கடிதத்தின் பின்னணியில இப்ப நான் உங்க கிட்ட விளக்கம் கேட்டா என்ன பண்ணுவீங்க?’ என்றேன்.

அவர் திடுக்கிட்டு முகம் மாறுவதைப் பார்த்து ரசித்தேன். ‘படவா, எங்கிட்டவே விளையாடறியா? அன்னைக்கி போலி நகையை நீ எடுத்தப்பவே நான் பழியை உம்மேல தூக்கிப் போட்டிருந்தா சரியா இருந்திருக்கும். காப்பாத்தி விட்டதுக்கு என்னையே காட்டி குடுக்கறியா. இரு வச்சிக்கறேன்.’ என்றேன் எனக்குள்.

இதைத்தான் White Collar Mentality என்பார்கள். இதே ஒரு தொழிற்சாலைத் தொழிலாளர்கள் இருவர் இடையில் நடந்திருந்தால் இருவரும் மற்றவர் சட்டையைப் பிடித்து நீயா நானா பார்த்துவிடலாம் என்று அடிதடி சண்டையில் இறங்கிவிடுவார்கள்.

கிரிக்கெட்டும் கால்பந்தாட்டமும் போல் என்றும் சொல்லலாம். கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் நான்கு அல்லது ஆறு ரன்கள் அடித்த மட்டையாளரைப் பார்த்து கூறும் கடுஞ்சொல்கள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரின் வாயிலிருந்து வந்தால் இரு வீரர்களும் மைதானத்திலேயே கட்டிப் புரண்டு சண்டை போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்னைக் காட்டிக் கொடுத்தவர் என் உதவி மேலாளர்தான் என்று எனக்கு நன்றாய் தெரிந்திருந்தும் என்னால் நேரடியாக அவரை ஒன்றும் சொல்ல முடியாது.

இவர் காட்டிக் கொடுத்தார் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.

சாதாரணமாக வங்கியின் எல்லா கிளைகளிலுமிருந்தும் (அப்போது என்னுடைய வங்கிக்கு இரு நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருந்தன) ஒவ்வொரு மாத இறுதியிலும் சமர்ப்பிக்கப்படும் இத்தகைய அறிக்கைகளை பரிசீலித்து ஒரு மாதத்திற்கு மேல் வசூலிக்கப் படாத தொகைகளை பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட கிளை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க குறைந்தது மூன்று மாத காலமாகிவிடும்.

அப்படியிருக்க, கடந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையைப் பரிசீலித்து ஒரே வாரத்திற்குள் விளக்கம் கேட்பது என்றால் யாருடைய உந்துதலால் என்று கண்டு பிடிக்க முடியாதா என்ன?

ஏன் இந்த அவசரம்? சொல்லுகிறேன்.

எனக்கு இக்கிளையிலிருந்து மாற்றல் ஆகிவிட்டது என்று அவருக்கு எப்படியும் தெரிந்திருக்கும். நான் போவதற்குள் இத்தொகையை முழுவதும் என்னிடமிருந்து வசூலிக்காவிட்டால் நான் சென்ற பிறகு வரும் மேலாளர் என்னுடைய உதவி மேலாளரையும் சிக்க வைத்துவிட்டால்? நான் இருக்கும்போதே என்றால் ஒரு வேளை பழியை நானே ஏற்றுக்கொண்டு முழுத்தொகையையும் அடைக்கலாம் அல்லவா?

ஆனால் இவரை அவ்வளவு எளிதில் தப்பிக்க விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டு அவரைப் பார்த்தேன்.

‘என்ன சார்? நான் கேட்டதுக்கு பதிலையே காணோம்?’

அவர் தடுமாறினார். ‘சார் எங்கிட்ட என்ன விளக்கம் கேக்கப் போறீங்க? நான் உங்களுக்கு தெரியாமல் ஒன்னும் செய்யலையே?’

நான் கோபம் வந்ததுபோல் நடித்தேன். ‘என்ன, எங்கிட்ட கேட்டுட்டு செய்தீங்களா? எங்க அன்னைக்கி பிரிப்பேர் பண்ண வவுச்சர கொண்டு வாங்க?’ என்றேன்.

அந்த வவுச்சரை நான் அன்று அவர் சேட்டின் அலுவலகத்துக்குச் சென்று வசூலிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி வந்தாரே அன்றைக்கே எடுத்து பார்த்துவிட்டேன். அவர் சட்ட ஆலோசகருக்கு கொடுக்க வேண்டிய தொகையை நான் விடுப்பில் இருந்த தினத்தன்றுதான் எடுத்திருக்கிறார். மதிப்பீட்டாளருக்கு கொடுக்கப்பட்ட தொகைக்கான வவுச்சரில் மட்டும்தான் நான் கையெழுத்திட்டிருந்தேன். ஒரு கிளையில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் மேலாளர்தான் பொறுப்பு என்று எனக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். இருந்தாலும், அவருடைய செயலுக்கு அவரிடமிருந்தும் நியாயமாக விளக்கம் கேட்கப்படவேண்டும் என்பதும் நியதி.

அதை வைத்துத்தான் அவரை சிறிது மிரட்டிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

அன்றைய தினத்தின் வவுச்சர் கட்டை எடுத்துக்கொண்டு வந்தவர் என்னிடம் காண்பிக்காமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து பரிதாபமாக பார்த்து, ‘நீங்க அன்னைக்கு லீவு சார். நான்தான் கையெழுத்து போட்டிருக்கேன்.’ என்றார்.

‘அதுக்கு உங்க கிட்ட விளக்கம் கேட்கலாம் இல்லையா?’

‘சாரி சார்.’ என்றவரை கூர்ந்து பார்த்தேன். நீங்கதானே ஹெட் ஆஃபீசுக்கு சொல்லி நான் போறதுக்குள்ள என்கிட்ட விளக்கம் கேக்க வச்சீங்கன்னு நேரடியாகவே கேட்டால் என்ன? என்று நினைத்தேன். சற்று நேரத்திற்குப் பிறகு இந்த சில்லரை விஷயத்தை நீட்டி மீண்டும் ஒரு சச்சரவில் மாட்டிக்கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன்.

‘சரி. அது போட்டும். சேட்டோட மானேஜர்கிட்ட அதுக்கப்புறம் இதப்பத்தி பேசினீங்களா?’ என்றேன் அவரைப் பார்த்து.

‘இல்ல சார்?’

‘ஏன்? அது உங்க வேலையில்லேன்னா? சரி.. அவர் கொடுத்த அந்த பத்திர நகல்கள்? அது இன்னும் உங்க கிட்டதான இருக்கு?’

‘இல்ல சார். அத அவரோட மானேஜரே ஒரு நாள் வந்து சண்டை போட்டு வாங்கிக்கிட்டு போய்ட்டார் சார்.’

நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். அடப்பாவி. இதை ஏன் என் கிட்டருந்து மறைக்கணும்? அந்த பத்திரத்தை வச்சி மிரட்டியே அந்த ஆள்கிட்டருந்து வசூல் பண்ணிருக்கலாமே? இப்ப அதுவுமில்லாம எப்படி வசூல் பண்றது?

‘என்னது குடுத்தீட்டீங்களா? எப்படீங்க என் பர்மிஷன் இல்லாம குடுக்கலாம்? சரி, குடுத்தீங்க. ஏன் இதுவரைக்கும் என்கிட்ட சொல்லலை?’

பதில் பேச முடியாமல் வாய் மூடி நின்றவரைப் பார்த்தேன். ஏதோ நடந்திருக்கிறது. இவர் என்னிடமிருந்து மறைக்கிறார்.

‘சார் ஒரு நாள் நீங்க இல்லாத நேரத்துல வந்தார். தகராறு பண்ணிட்டு இங்கருந்தே ஹெட் ஆஃபீசுக்கு போன் பண்ணி நம்ம க்ரெடிட் டிப்பார்ட்மெண்ட சீஃப் கிட்ட புகார் பண்ணார். அவர் உடனே ஃபோன்லயே அவர் கேட்டத குடுத்துறுங்க. பிரச்சினை பண்ண வேண்டாம்னு சொன்னார். அதான் குடுத்தேன். உங்க கிட்ட சொல்ல மறந்து போச்சி சார்.’

நான் அவரையே வியப்புடன் பார்த்தேன். மறந்து போச்சா?

‘சரி, அவர்கிட்ட இந்த பணத்த பத்தி சொன்னீங்களா?’ என்றேன்.

‘இல்ல சார்.’

எனக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. அவரிடம் கூறியிருந்தால் ஒரு வேளை அவரே சேட்டோட மேனேஜர்கிட்ட பேசி வசுல் செய்திருக்கலாம் அல்லாவா? ‘ஏங்க சொல்லலை? சொல்லியிருந்தா ஒருவேளை அவர் உங்களை பத்திரத்தை திருப்பி கொடுக்க சொல்லியிருக்க மாட்டாரில்லே?’

‘அவர் அன்னைக்கி பண்ண கலாட்டாவுல எனக்கு ஒன்னுமே ஓடலை சார். உங்க கிட்ட சொல்லவும் பயமா இருந்துது சார்.’

நான் அவரையே பார்த்தேன். முட்டாள். அப்போ சும்மா இருந்திருக்கலாம் இல்லே? நானே போறதுக்குள்ள இதுக்கும் ஏதாவது வழி பண்ணியிருப்பேனே. பண்றதையும் பண்ணிட்டு என்னை மாட்டிவிடறதுக்கு வழி பண்ணியா? இரு வரேன்.

‘அப்ப ஒன்னு பண்ணுங்க. நான் லீவ்ல இருந்தப்போ முன் தொகையா கொடுத்த ரூ.3000/- நீங்க கட்டிருங்க. மீதியை நான் அவர்கிட்டருந்து வசூல் பண்ண பாக்கறேன். இல்லன்னா நான் போறதுக்குள்ள கட்டிடறேன். என்ன?’ என்றேன் அவரைப் பார்த்து.

அவர் உடனே வாடிப்போன முகத்துடன், ‘நீங்க இப்படி பேசினா எப்படி சார்?’ என்றார்.

‘பின்னே. நீங்கதானே இத ஊதி பெரிசாக்குனது? இல்லன்னா மூனு, நாலு மாசம் கழிச்சிதானே இப்படி ஒரு க்வரி (query) வரும்? சொல்லுங்க, நீங்கதானே இந்த வேலையை செய்தது? ஒத்துக்கிட்டீங்கனா அன்னைக்கி காப்பாத்துன மாதிரியே இதுலருந்தும் காப்பாத்தறேன். இல்லன்னா நீங்கதான் என்னை கேக்காம பத்திரத்தை எடுத்து குடுத்திட்டீங்க அதனால என்னால வாடிக்கையாளர் கிட்டருந்து பணத்த வசூலிக்க முடியலைன்னு விளக்கம் எழுதி போடப் போறேன். என்ன சொல்றீங்க?’

அவர் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் வாடிய முகத்துடன் நின்றார். பிறகு.. ‘சாரி சார். ஏதோ ஒரு வேகத்துல அப்படி செஞ்சிட்டேன். மன்னிச்சிருங்க சார்.’ என்றார். இன்னும் சிறிது நேரம் நான் வதைத்தால் அழுதுவிடுவார் போல தெரிந்தது. இப்போதைக்கு இது போதும் என்று நினைத்து, ‘சரி, இனிமே உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க. எனக்கு மேலிடத்துல யாரும் இல்லங்கற தைரியத்துல விளையாடி பாக்காதீங்க, போங்க.’

அவர் தன் இருக்கைக்கு போனதும் சேட்டிடம் கணக்குப்பிள்ளை வேலைபார்த்த என் உறவுக்காரரை அழைத்து நான் மாற்றப்பட்ட விஷயத்தை சுருக்கமாக தெரிவித்து விட்டு சேட்டிடம் இருந்து வசூலிக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி கூறினேன்.

‘அப்படியாய்யா? உங்கள மாத்திட்டாங்கன்னு கேக்கறதுக்கு ரொம்ப வருத்தமாருக்குய்யா. இந்த பணத்தப் பத்திய கவலைய விட்டுருங்க. அத நீங்க போறதுக்குள்ள எப்படியாவது சேட்டுக்கிட்ட பேசி நான் வாங்கி தந்துடறேன்.’ என்றவர் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அந்த பணத்தை ஒரு ஊழியர் மூலம் கொடுத்தனுப்பினார்.

நானும் அவரை உடனே தொலைப்பேசியில் கூப்பிட்டு நன்றி கூறினேன். பணம் வந்து சேர்ந்த அன்றைய தினமே என்னுடைய தலைமையலுவலகத்திற்கு விளக்கும் கூறி பதிலனுப்பினேன். அதில் என்னுடைய உதவி மேலாளரைக் குறித்து ஒன்றும் எழுதாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு என்னிடம் ஓடிவந்து காலில் விழாத குறையாக நன்றி தெரிவித்தார் என்னுடைய உதவி மேலாளர்.

ஆனால் பாவம், நான் மாற்றலாகிப் போய் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே வேறொரு சில்லரைப் பிரச்சினையில் சிக்கிக்கொண்டு புது மேலாளரால் (அவர் மேலிடத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர்) காட்டிக் கொடுக்கப்பட்டு அவர் செய்த குற்றத்திற்கு சிறிதும் பந்தமில்லாமல் மிக அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டு இப்போதும் அவர் உதவி மேலாளராகவே இருக்கிறார்.

இதில் வேறொரு வேடிக்கை என்னவென்றால் இவரைக் காட்டிக் கொடுத்து அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தந்த மேலாளரும் அதே கிளையில் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு மேலிடத்தில் செல்வாக்கிருந்தும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு அவமானம் தாங்காமல் ராஜிநாமா செய்துவிட்டு போய்விட்டார். ஆனால் அவருடைய மனைவி மிகவும் வசதி படைத்தவர் என்பதால் அவருடைய சொந்த ஊரிலேயே வர்த்தகம் செய்கிறார்.

கெடுவான் கேடு நினைப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்.

தொடரும்

பி.கு.: நான் அலுவல் விஷயமாக வெளியூர் செல்வதால் அடுத்த பதிவு புதன் அல்லது வியாழன் கிழமைதான். காத்திருங்கள் :-))

16 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 38

சரி உங்க ஃப்யூச்சருக்கு ஏதாச்சும் கெடுதல் வந்துதா அதச் சொல்லுங்க சார் என்கிறீர்களா?

வந்தது.. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் என ஓரிரண்டு மாதங்களுக்கு ஒன்றும் நேரவில்லை.

நான் இந்த விஷயத்தையே மறந்துபோயிருந்த சமயத்தில் வந்தது.

அப்போது என்னுடைய வங்கியின் சென்னைக் கிளைகளுள் மேலாளராக இருந்த ஒருவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் என்னை விட மூன்றோ நான்கோ வயதுதான் மூத்தவர். எனக்கு முந்தைய பேட்ச்சில் மேலாளனாரவர். சென்னைக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்தன. அடிக்கடி தொலைப்பேசியிலும் நேரிலும் சந்தித்து பேசிக்கொள்வோம்.

ஒரு நாள் காலை நான் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தபோது அவரிடமிருந்து தொலைப்பேசி வந்தது. பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு அவர், ‘டிபிஆர். நான் போன வாரம் நம்ம ஹெட் ஆஃபீசுக்கு போயிருந்தபோது ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அது உண்மையா இல்லையான்னு தெரியலை. நான் சொன்னேன்னு நீங்க கேக்காதீங்க.. ஆனா இப்பவே நீங்க தலையிடலேன்னா ஆர்டர்ஸ் வந்ததுக்கப்புறம் ஒன்னும் செய்ய முடியாம போனாலும் போயிரும். நம்ம H.R. Headதான் உங்க பழைய அதிகாரியாச்சே. ஃபோன் பண்ணி கேட்டுப் பாருங்க. அவர் நினைச்சா உங்கள காப்பாத்த முடியும்னு நினைக்கிறேன்.’ என்று ஒரே பூடகமாக பேசினார்.

‘என்ன சொல்றீங்க சார்? நீங்க என்ன கேள்விப் பட்டீங்க? தெளிவா சொன்னாத்தானே நான் H.Rல கேக்க முடியும்.’ என்றேன்.

அவர் தயங்கியவாறே, ‘உங்கள் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள இங்கருந்து மாத்தப் போறாங்க டிபிஆர். ஒருவேளை நார்த்துக்கு கூட இருக்கலாம். நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிராதீங்க. அப்புறம் என்பாடு திண்டாட்டமாயிரும்.’ என்று கூறிவிட்டு வைத்துவிட்டார்.

எனக்கு சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் இந்த கிளைக்கு வந்து சரியாய் ஏழு மாதங்கள் கூட முடியவில்லை. பொதுவாக மேலாளராகிவிட்டாலே எந்த நிமிடமும் மாற்றப்படுவது உண்டுதான். ஆனால் சாதாரணமாக இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேலாளர் மாற்றப்படுகிறார் என்றாலே ‘இவரு என்னமோ தில்லுமுல்லு பண்ணிட்டார் போல. அதான் தூக்கிட்டாங்க’ என்று பேச்சாகிவிடும்.

இதில் ஆறேழு மாதத்திற்குள்ளாகவே மாற்றப்பட்டால் கேட்கவே வேண்டாம். அதுவும் முதன்முதலாய் மேலாளராக அமர்த்தப்பட்ட கிளையிலிருந்து!

முதன்முதலாய் மேலாளர் பதவியில் அமர்த்தப்படுபவர் சாதாரணமாக ஒரு கிராமத்தில்தான் அமர்த்தப்படுவார் என்றும் அந்த நியதிக்கு மாறாக பெருநகர் கிளைகளில் ஒன்றில் நான் அமர்த்தப்பட்ட போதே சர்ச்சை கிளம்பியது என்றும் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

அப்படியே ஒரு சிறிய கிளைக்கு நான் பொறுப்பேற்று படிப்படியாய் முன்னேறி இப்படி ஒரு பெருநகர் கிளைக்கு வந்திருக்கலாம். நானா கேட்டேன் பெருநகர் கிளை வேண்டும் என்று?

அவர்களாகவே இதுபோன்ற கிளையில் அமர்த்திவிட்டு ஆறேழு மாதத்திற்குள் மாற்றம் செய்தால் அதுவும் வட இந்திய கிளை ஒன்றிற்கு என்றால் அது நிச்சயம் எனக்குக் கிடைத்த தண்டனையாகவே நான் கருதினேன்.

ஆனால் இதை எப்படி தடுப்பது? அப்போது H.R. Headஆக இருந்தவர் என்னுடைய முதல் அக்கவுண்டன்ட் என்பதை ஏற்கனவே கூறியிருந்தேன். அப்படியிருந்தும் என்னை மாற்றுவதற்கான எண்ணம் இருந்தால் அவரும் ஏன் என்னிடம் இருந்து மறைத்தார்? ஒரு வேளை இந்த மாற்றம் அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? அவரையே கேட்டுப் பார்த்தால் என்ன?

இப்படி என்னை நானே கேட்டுக்கொண்டு குழம்பிப் போனேன். இந்த விஷயத்தை அதிகாரத்தில் இருக்கும் யாரிடமாவது உண்மையா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துக்கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது!

இருப்பினும் காலையிலேயே அவரைக் கூப்பிட்டால் ஒருவேளை அவருடைய வேலையில் மும்முரமாயிருந்தால் என்னிடம் சரியாக பேசுவாரோ மாட்டாரோ என்று நினைத்து என்னுடைய anxietyஐ அடக்கிக்கொண்டு அன்றைய வேலையை கவனிக்கத் தொடங்கினேன். ஆனாலும் மனம் என் முன்னாலிருந்த வேலைகளில் ஒட்டமாட்டேன் என்று அடம் பிடித்தது.

சரி, வருவது வரட்டும் என்று நினைத்துக்கொண்டு அவருடைய பிரத்தியேக தொலைப்பேசி எண்ணை சுழற்றினேன். வெகு நேரம் அடித்தும் யாரும் எடுக்கவில்லை. சரி, சகுணம் சரியில்லை, மாலையில் அழைக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இனைப்பைத் துண்டித்துவிட்டு வேறு வழியில்லாமல் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

மாலை ஐந்து மணியானதும் மீண்டும் அதே எண்ணைச் சுழற்றினேன். அப்போது அதே நிலைதான். ஒருவேளை அவர் வேலைக்கு வரவில்லையோ என்று நினைத்துக்கொண்டு என் தலைமையகத்தின் தொலைப்பேசி ஆப்பரேட்டரை அழைத்து ‘.. சார் அலுவலகத்துக்கு வரவில்லையா’ என்று கேட்டேன். ஆமாம் சார், அவர் இன்றையிலிருந்து ஒரு நான்கு நாள் விடுப்பில் சென்றிருக்கிறார் என்று பதில் வந்தது. ‘வீட்டுக்கு வேணும்னா கூப்பிட்டு பாருங்க டிபிஆர். சார்.’ என்றார் அவர்.

வீட்டுக்கா? அவர் ஏதாவது நினைத்துக்கொண்டால்? என்று என் சிந்தனை ஓடியது. ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு யோசித்தேன். என் உள் மனசு ‘கூப்பிடு’ என்றது. ஒருவேளை நான் தாமதித்து, பிறகு ஏதாவது ஏடாகூடமான உத்தரவு வந்துவிட்டால் ‘ஐயோ தாமதம் செய்யாமல் கேட்டிருந்தால் ஒருவேளை நமக்கும் சாதகமான இடத்துக்கு கிடைத்திருக்குமே’ என்று மனது கிடந்து அடித்துக்கொள்ளுமே என்ற நினைப்பில் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவருடைய வீட்டு எண்ணை சுழற்றினேன்.

அவர்தான் எடுத்தார்.

‘சார். நான்தான் டிபிஆர். உங்கள வீட்ல தொந்தரவு செய்றதுக்கு சாரி சார்.’ என்றேன்.

அவர் லேசாக சிரித்தார். ‘ it is ok. சொல்லுங்க. உங்க மாற்றல் விஷயமா?’ என்றார் நான் கேட்காமலே.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவருக்கு தெரிந்திருந்தும் ஏன் என்னிடம் கூறாமல் இருந்தார்?

அவரே தொடர்ந்தார். ‘டிபிஆர். நான்தான் நம்ம ..... கிளை மேனேஜர் கிட்ட சொல்லி உங்களுக்கு மறைமுகமா விஷயத்தை தெரிவிக்க சொன்னேன். சொன்னாரா?’

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் என்னுடைய கிளையில் அதிகாரியாக இருந்தபோது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவார், செய்வார். அவரே இப்படி வேறொருவர் வழியாக மறைமுகமாக எனக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறார் என்றால் நிச்சயம் என் விஷயத்தில் முடிவெடுத்தது அவருக்கு மேல் இருப்பவராகத்தான் இருக்க முடியும்.

‘கவலைப் படாதீங்க டிபிஆர். நார்த்துக்குத்தான் முதல்ல ப்ரொப்போஸ் பண்ணாங்க. ஆனா நம்ம பிரின்சிப்பால்.. (அதாவது நான் வங்கியில் சேர்ந்தபோது எனக்கு கிளை மேலாளராக இருந்தவர். இப்போது வங்கியின் பயிற்ச்சி கல்லூரி முதல்வராக இருந்தார்.) தலையிட்டதால உங்கள பக்கத்திலேயே போடறதுக்கு சேர்மன் ஒத்துக்கிட்டார். ஆனா அது எங்கன்னு என்னால இப்ப சொல்ல முடியாது. இன்னும் ஒரு வாரத்துல முடிவு பண்ணி ஆர்டர்ஸ் போட்டுருவோம். பொறுமையா இருங்க. எல்லாம் நல்லபடியா முடியும்.’ என்றவர். ‘அப்புறம் டிபிஆர். ஒரு விஷயம்.’ என்றார்.

ஏதோ முக்கியமான விஷயம் என்று சட்டென்று மாறிய அவருடைய குரலே சொன்னது.

‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

‘சேர்மன் உங்க பேர்ல கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கார். நானும் நம்ம பிரின்சிப்பால் சாரும் உங்களபத்தி ரொம்ப நேரம் வாதாட வேண்டியிருந்தது. பார்த்து நடந்துக்குங்க. இந்த சேர்மன் Term முடியறதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கும்னு தெரியுமில்லே. பி கேர்ஃபுல். மறுபடியும் ஏதாவது பிரச்சினையில மாட்டிக்காம பார்த்துக்குங்க.’

எனக்கு சட்டென்று கோபம் வந்தது. எல்லோருமே என் மேலேயே குற்றம் சொல்கிறார்களே என்று எரிச்சல் வந்தது. ‘சார், நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு சேர்மன் சொன்னாரா சார்?’ என்றேன். என்னுடைய குரலில் இருந்த கோபம் அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

‘பார்த்தீங்களா? இந்த கோபம்தான் உங்களுக்கு முதல் எதிரி டிபிஆர். உங்க எண்ணமும் நோக்கமும் சரியா இருந்தா மட்டும் போறாது. அதை செயல் படுத்தற விதமும் சரியா இருக்கணும். உங்க வயசுல எனக்கும் இந்த கோபம்தான் பெரிய எதிரியா இருந்தது. நீங்க இப்ப இருக்கற சூழ்நிலையில இந்த கோபம் உங்களுக்கு வேணாம் டிபிஆர். நிதானமா யோசிச்சி பாருங்க. நானும் நடந்ததையெல்லாம் விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். உங்க எண்ணம், நோக்கம் எல்லாம் சரி. ஆனா இத நீங்க சேர்மன்கிட்டவே பக்குவமா தெரியபடுத்தியிருந்தா அவரே கரெக்டா ஹேண்டில் பண்ணியிருப்பார். உங்களோட அணுகுமுறையினால, அது சரியா தவறான்னு இப்ப தர்க்கம் பண்ணி பிரயோசனமில்லை, சேர்மன் கொண்டு வந்த பார்ட்டி ஒரு ஃப்ராடுங்கறா மாதிரி க்ரெடிட் டிபார்ட்மென்ட்டுல ஒரு எண்ணத்த ஏற்படுத்திருச்சிங்கறதுதான் உண்மை. அதுதான் சேர்மனை ரொம்பவும் பாதிச்சிருச்சின்னு நினைக்கிறேன். எனிவே.. யூ கான்ட் நவ் அன்டூ வாட் ஹேஸ் பீன் டன். லீவ் இட். பொறுமையா இருங்க. நல்லது நடக்கும்.’

இணைப்பை துண்டித்துவிட்டு நெடு நேரம் அவர் கூறியதையே நினைத்துக்கொண்டிருந்தேன். இறுதியில், அவர் கூறியதில் எந்தவித தவறும் இல்லை என்றே பட்டது. என்னுடைய தவறான அணுகுமுறையால், பாராட்டு கிடைத்திருக்க வேண்டிய ஒரு செயல் எனக்கு அவப்பெயரை தேடித் தந்தது!

ஒரு வாரம் கழித்து என்னுடைய மாற்றலுக்கான தகவல் தலைமையகத்திலிருந்து வந்தது..

புதிதாக திறக்கப்படவிருந்த என்னுடைய தஞ்சைக் கிளைக்கு...!

ஆனால் அதற்கு முன் என்னுடைய தலைமையகத்திலிருந்து என்னிடம் விளக்கம் கேட்டு வந்த அந்த கடிதம்!

அதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை..

15 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 37

ஆனால் நாம் நினைப்பதல்லவே நடப்பதும்!

அடுத்த நாள் காலை என்னுடைய தலைமை அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி வந்தபோதுதான் புரிந்தது இந்த உண்மை!

என்னை அழைத்தவர் என்னுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்காவின் தலைவர் (நம் குழப்பல் மன்னன்!).

‘டிபிஆர். அல்லே?’ அவருடைய குரலில் இருந்தே விஷயம் கொஞ்சம் சீரியஸ்தான் என்று புரிந்துக்கொண்டேன்.

வருவது வரட்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ‘அதே சார்.’ என்றேன்.

‘அந்த கப்பல் பார்ட்டி விஷயம் என்னாச்சி டிபிஆர்? ப்ரொப்போசல் பேங்க்ல கொடுத்து பத்துநாளைக்கு மேலாச்சி. டிபிஆர் அத வச்சிக்கிட்டு ஏதாவது ஆராய்ச்சி பண்றாரான்னு கேக்கறார் சேர்மன். என்ன சொல்லட்டும் டிபிஆர்?’

என்ன சொல்வது? நான் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

‘என்னாச்சி டிபிஆர். ஏதாவது ப்ராப்ளமா? என்ன பேசாம இருக்கீங்க? Is the proposal ready or not?’

‘The proposal is not ready sir, there are some problems.’ என்றேன்.

அவருடைய குரலில் கோபம் கொப்பளித்தது. சாதாரணமாக எளிதில் கோபப்படாதவர் அவர் என்பது எனக்கு தெரியும். ‘அதான் என்ன ப்ராப்ளம்னு கேட்டேனே. சொல்லுங்க. என்ன ப்ராப்ளம்?’

‘அவர் ஆஃபர் பண்ண ப்ராப்பர்ட்டியிலதான் சார் ப்ராப்ளம்.’

அவர் மேலும் கோபப்பட்டார். ‘Look TBR. Don’t waste my time. What is the problem in the property?’

நான் வேகமாக ஒன்றுவிடாமல் சொன்னேன். சிறிது நேரம் மறுமுனையிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அருகிலிருந்த வேறு யாரிடமோ பேசுவது கேட்டது. பிறகு, ‘ஓகே டிபிஆர். நான் பிறகு கூப்பிடுகிறேன்.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் சேர்மனுடைய சேம்பரிலிருந்து பேசினார் என்றும் அப்போது நம்முடைய சேட்டும் அங்கே இருந்தார் என்பதும்.

அதாவது, என்னுடைய உதவி மேலாளர் சேட்டுடைய அலுவலகத்துக்குச் சென்று பத்திர விஷயத்தைக் கூறியதும் அன்றிரவே சேட் ரயிலைப் பிடித்து சேர்மனைக் காண சென்றிருக்கிறார். ஏன்? நான் விஷயத்தை என்னுடைய தலைமை அலுவலகத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவிப்பதற்கு முன் சேர்மனிடம் அறிவித்துவிடலாம் என்ற எண்ணத்தில்.

அடுத்த சில நாட்களுக்கு எந்தவித தகவலும் இல்லாமற் போகவே நான் என் உதவி மேலாளரை அழைத்து சொத்து பத்திரங்களை மாற்றுவது குறித்து சேட்டின் மேலாளரிடம் தொலைப்பேசியில் விசாரிக்கக் கூறினேன்.

அவர் இரண்டு முறைக் கூப்பிட்டும் மேலாளரிடமிருந்து சரியான பதில் வரவில்லை.

ஒரு வாரம் சென்றது.

திடீரென்று ஒரு நாள் சேட்டின் மேலாளர் என்னுடைய உதவி மேலாளரை தொலைப்பேசியில் அழைத்து என்ன கூறினாரோ தெரியவில்லை அவர் என்னிடம் பதற்றத்துடன் ஓடி வந்தார்.

நான் என்ன என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

‘சார் அவங்களுக்கு வேற பாங்குலருந்து லோன் கிடைச்சிருச்சாம். நம்ம கிட்ட கொடுத்த பேப்பர்ஸ் எல்லாத்தையும் இன்னைக்கே திருப்பியனுப்ப சொல்றாங்க சார்.’ என்றார்.

‘இது, இது, இதைத்தான் நான் எதிரிபார்த்தேன்.’ என்று மனதுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

‘சரி நல்லாதாப் போச்சு விட்டுத் தள்ளுங்க.’ என்றேன்.

அவர் போகவில்லை. ‘சார் இதுல இன்னொரு பிரச்சினையிருக்கே.’ என்றார்.

‘என்ன பிரச்சினை?’

‘நம்ம வக்கீலுக்கும், வேல்யூவருக்கும் அவங்களோட ஃபீசா அஞ்சாயிரம் அட்வான்ஸ் பேமண்டுலருந்து கொடுத்திருக்கோம் சார். அத இவர்கிட்டருந்து இப்ப எப்படி ரிக்கவர் பண்றது?’

அட ஆமாம். அது என் மண்டையில் உறைக்கவில்லையே? இப்ப என்ன பண்றது? ‘லோனே வேணாம், அப்புறம் எதுக்குய்யா நான் உங்க வக்கீல் ஃபீஸ், எஞ்சினீயர் ஃபீஸ்னு குடுக்கணும்’னு திருப்பி கேட்டா என்ன பண்றது? என்று நினைத்தேன்.

என் உதவி மேலாளரைப் பார்த்தேன். அவர் பயங்கர டென்ஷனில் இருந்தார். ‘நீங்க ஒன்னு பண்ணுங்க. உடனே புறப்பட்டு போய் இந்த விஷயத்தை அவரோட மேனேஜர்கிட்ட பேசி எப்படியாவது இந்த பணத்தை வாங்கப் பாருங்க. ஃபோன்ல பேசுனா சரிவராது. என்ன சொல்றீங்க?’ என்றேன்.

அவருக்கு இந்த யோசனை பிடிக்காவிட்டாலும் என் பேச்சைத் தட்டமுடியாமல் அன்று மாலையே சென்றார். ஆனால் பலனில்லாமல் வெறுங்கையுடன் திரும்பினார். ‘சார் என்னை அவங்க ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணாங்க சார். உங்க மேனேஜருக்கு ஒரு நல்ல லெசன் டீச் பண்ணாம விடமாட்டோம்னு வேற சொன்னாங்க சார்.’ என்றவரை நான் சந்தேகத்துடன் பார்த்தேன். இதை இவரா ஜோடித்து சொல்கிறாரோ என்ற எண்ணத்தில்.

பிறகு சமாளித்துக்கொண்டு ‘சேட் கொடுத்த விண்ணப்பம் மற்றும் பத்திர நகல்களும் உங்க கிட்டவே இருக்கட்டும். அவர் என்றைக்கு பணத்தை கொடுக்கிறாரோ அப்போது திருப்பி அனுப்பலாம்.’ என்று அவரை சமாதானம் செய்து அனுப்பினேன்.

பிறகு என்னுடைய தலைமை அலுவலகத்துக்கு தொலைப்பேசி செய்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரி லைனில் வந்ததும் சேட்டுக்கு கடன் வேண்டாம் என்று என்னுடைய உதவி மேலாளர் கூறியதை தெரிவித்தேன்.

சிறிது நேரம் ஒன்றும் மறுமொழி கூறாமல் இருந்தவர், ‘டிபிஆர். அவருக்கு லோன் வேணாம்னா போகட்டும். ஆனா நீங்க அவர ஹேண்டில் பண்ண முறை கொஞ்சம் கூட சரியில்லைன்னு நம்ம சேர்மன் நினைக்கிறார். அது உங்களோட ஃபியூச்சரை பாதிக்குமா இல்லையான்னு இப்ப என்னால சொல்ல முடியலை. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.’ என்று நான் பதில் கூறுவதற்கு முன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

நான் விக்கித்துப் போய் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.

‘அது உங்களோட ஃபியூச்சரை பாதிக்குமா இல்லையான்னு இப்ப என்னால சொல்ல முடியலை.’ என்ற வார்த்தைகள் என்னையே சுற்றிச் சுற்றி வந்தன.

தொலைப்பேசி அடிக்கவே எடுத்தேன். கணக்குப்பிள்ளை!

‘அய்யா, இங்கன பெரிய களேபரமே நடக்குது.’ என்றார்.

‘களேபரமா? என்னய்யா சொல்றீங்க?’ என்றேன்.

‘ஆமாய்யா. நம்ம முதலாளி உங்கள ஒரு வழியா ஆக்காம விடமாட்டேன்னு கொதிச்சிப் போயிருக்கான்யா. நீங்க கொஞ்ச நாளைக்கு லீவு எடுத்துக்கிட்டு ஊர் பக்கம் போய் வாங்கய்யா.’ என்றார்.

அவருடைய குரலிலிருந்த பதற்றம் என்னையும் ஒரு நிமிடம் தொற்றிக்கொண்டாலும் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு திரும்பினேன். அவருடைய யோசனைப்படி செய்வதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

எனக்கும் இப்படி ஒரு யோசனை கடந்த சில வாரங்களாகவே இருந்தது. ஆனால் என் மனைவியிடம் திடீரென்று ஊருக்கு போய் வரலாம் வா என்றால்? அவளுக்கு நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருக்கும். பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வந்து நேரத்திற்கு வீட்டிற்கு வராத மனுஷனுடன் வீட்டில் தனியாக ஒன்றரை வயது குழந்தையுடன் இரவு பத்துமணி வரை கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு புருஷன் வரும் வரை காத்திருப்பதை விட வேறு கொடுமை ஒரு பெண்ணுக்கு இருக்கமுடியுமா, என்ன?

ஆனாலும் ஊருக்கு போவதற்கும் ஏதாவது காரணம் வேண்டுமே. சும்மா வெறுமனே போய் ‘மாமனார் வீட்டில் ஒரு வாரம், பத்துநாள் இருந்துட்டு வரேம்மா’ என்றால் என் தாயிடம் இருந்தும் திட்டு கிடைக்குமே. அவர்களுக்கு வாரம் ஒருமுறை தன் பேத்தியை வந்து பார்க்காமல் இருக்க முடியாது. ஆக, அது சரிப்பட்டு வராது. என்ன செஞ்சிருவான் சேட், பார்க்கலாம் என்ற அசட்டு தைரியத்தில் ஊருக்கு போகும் யோசனையை தள்ளி வைத்தேன்.

நான் அந்த வயதில் பயங்கரமான எமோஷனல் பேர்வழி. அத்துடன் அசட்டு தைரியம் வேறு. ஏதோ நான்தான் இந்த உலகத்திலேயே நேர்மையானவன் போலவும், என்னுடைய வங்கியை இத்தகைய எத்தர்களிடத்திலிருந்து காப்பாற்றவே மேலாளராக அவதாரம் எடுத்தவன்போலவும் நினைத்துக்கொள்வேன்.

இதுபோன்று இன்னும் பல பெரிய ‘தலை’களை விரோதித்துக்கொண்டு ‘தலைமறை’வாக செல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தபோதும் கூட என்னுடைய மடத்தனத்தை நான் உணர பல வருடங்கள் பிடித்தன.

இப்போது இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது இந்த வயதில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்ந்தால் என்னுடைய அணுகுமுறை நிச்சயம் மாறுபட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்ன சொல்ல வரீங்கன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்கறது தெரியுது. அதாவது ‘குடுக்கறத’ வாங்கிக்கிட்டு ‘செய்யவேண்டியத’ செஞ்சிட்டு போயிருப்பேன்னு சொல்ல வரீங்களான்னு கேக்கறீங்க. அப்படித்தானே.

இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனால் புனைப் பெயரில் தந்தியடிப்பது போன்ற அமெச்சூர் வேலையெல்லாம் செய்திருக்க மாட்டேன்.

சரி உங்க ஃப்யூச்சருக்கு ஏதாச்சும் கெடுதல் வந்துதா? அதச் சொல்லுங்க சார் என்கிறீர்களா?

வந்தது.. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் என ஓரிரண்டு மாதங்களுக்கு ஒன்றும் நேரவில்லை.

நான் இந்த விஷயத்தையே மறந்துபோயிருந்த சமயத்தில் வந்தது.

அது நடந்தபோது எனக்காக வருத்தப்பட்டவர்களை விட ‘வேணும் இவனுக்கு. அப்பவே நான் சொன்னேன், இவன செலக்ட் பண்ணது சரியில்லைன்னு. யார் கேட்டா?’ என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்.

நான் இதை எதிர்பார்த்ததுதான்.. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நேர்ந்தபோதுதான் மனசுக்குள் வலித்தது.. சோர்ந்து போனேன்.

அன்று கிடைத்த அடியிலிருந்து மீண்டும் எழுந்து வர சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தன..

தொடரும்.

14 December 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 36

கார்ட்டூன் படம்

என்னுடைய தொடருக்கு மிகவும் பொருத்தமான கார்ட்டூன்! ஹா,ஹா,ஹா!!!

நன்றி: THE HINDU

என்னுடைய இந்த செயல் இரண்டே நாட்களில் பலன் அளித்தது. ஆனால் அதுவே எனக்கு வேறு வழியில் பிரச்சினையாக அமைந்தது..

நான் புனைப்பெயரில் தந்தி அனுப்பும்போது ஏதோ சாமர்த்தியமாக செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். ஆனால் இப்போது நினைத்துப்பார்த்தாலும் என்னுடைய அந்த செயல் எத்தனை முட்டாள்தனமானது என்று தெரிகிறது. ஒருவேளை அனுபவமின்மைதான் காரணமாயிருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


சரி, இது எத்தனை முட்டாள்தனமானது என்று நான் அடித்த தந்தி வாசகத்தை படித்தால் புரியும்.

‘The person who had taken your premises at ... on lease is trying to mortgage the property for a loan of Rs.20.00 lakhs from a bank in Kodambakkam. Please initiate immediate action.’

From a well-wisher

தந்தி கிடைத்த அன்றைய தினமே சொத்தின் உரிமையாளர் வேறொரு தந்தியை நம்முடைய சேட்டுக்கு அடித்து அதில் நான் அனுப்பிய தந்தியின் வாசகங்களை அதே போல் குறிப்பிட்டு விளக்கம் கேட்டிருக்கிறார்.

அது கிடைக்கப் பெற்ற நம்முடைய சேட்டுக்கு இது யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க பெரிய சி.ஐ.டி மூளை வேண்டுமா என்ன?

வங்கி கடன் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள சொத்தின் விவரங்கள் பத்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து மாறுபட்டவை என்பது சேட், அவருடைய மேலாளர் மற்றும் வங்கியிலுள்ளவர்கள் என ஒரு குறுகிய வட்டத்திலுள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது, இல்லையா?

தானே தன் தலைமீது மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் அளவுக்கு சேட் பைத்தியக்காரர் இல்லை. சேட் தன்னுடைய மேலாளர் மேல் நம்பிக்கை இல்லை என்றால் இவ்வேலையை அவரிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டார். ஆக, என்னுடைய வங்கியிலிருப்பவர்களுள் ஒருவரால் மட்டுமே இதை செய்திருக்க முடியும் என்பது ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அவருக்கு தெரிந்து விட்டிருக்கும்.

சேட்டுக்கு தந்தி கிடைத்த மறுநாளே கணக்குபிள்ளையிடமிருந்து என் வீட்டிற்கு தொலைப்பேசி வந்தது. அவருடைய குரலிலிருந்த பதற்றத்திலிருந்தே விஷயம் விபரீதமாகிவிட்டது என்று நினைத்தேன். ‘எய்யா அந்த வீட்டோட ஓனர் கிட்டருந்து ஒரு தந்தி வந்திருக்குய்யா. அது வந்ததுலருந்து சேட் உங்க மேலதான் சந்தேகப்படராறு. உங்க சேர்மன் கிட்ட விஷயம் போனாலும் போகும்னு நினைக்கறேன். முன் சாக்கிரதையா ஏதாவது செய்யுங்க. நான் சொன்னேன்னு தெரிய வேணாம்.’

நான் கலவரமடைந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘சரிய்யா. இந்த விஷயத்தை எனக்கு சொன்னதுக்கு நன்றி’ என்று
கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

‘யார்ங்க ஃபோன்ல?’ என்று கேட்ட மனைவியிடம் ஒரு பொய்யை சொல்லி சமாளித்தேன்.

நம்முடைய சேட் கைதேர்ந்த எத்தனாயிருக்க வேண்டும் என்று முன்னமே சொன்னேன். அவர் சாதாரண ஜேப்படி திருடனாயிருந்தால் இத்தகைய தந்தி கிடைத்ததுமே வங்கிக்கு வந்து ஒரு பெரிய பிரச்சினை செய்திருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சொத்தின் உரிமையாளரை எப்படி சரிகட்டினாரோ தெரியவில்லை. அவரோ அல்லது வீட்டின் உரிமையாளரோ இது விஷயமாக நான் தந்தியடித்து மூன்று நாட்கள் கழித்தும் என்னை தொடர்பு கொள்ளவேயில்லை. நானும் அதை கண்டுகொள்ளாமல் let us wait and watch என்று நினைத்துக்கொண்டு இருந்துவிட்டேன். நானாக போய் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லவேண்டாமே! அவர் எத்தனாயிருந்தால் நாம் அவனுக்குமேல் ஜித்தன் என்று காட்ட வேண்டாமா?

ஆனால் இது சேர்மனின் செவிக்கு எட்டிவிட்டால் என் கதை கந்தலாகிவிடுமே என்ற பயமும் உள்ளுக்குள் இல்லாமல் இல்லை.

இதற்கிடையில் குறிப்பிட்ட கடன் விண்ணப்ப படிவத்தின் ஒரு நகலையும் சேட் சமர்ப்பித்திருந்த பத்திர நகலையும் என்னுடைய வங்கியின் சார்ட்டர்ட் பொறியாளருக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி சொத்தை மதிப்பீடு செய்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். நான் எதிர்பார்த்தது போலவே அவரும் இரண்டு நாள் கழித்து சொத்தை மதிப்பீடு செய்து அவருடைய அறிக்கையை அனுப்பிவைத்தார். நான் அனுப்பிய பத்திர நகல்களை அவர் கண்டுக்கொள்ளவேயில்லை. ஆனால் அவருடைய அறிக்கையின்படி சொத் மதிப்பு நான் மதிப்பிட்டதைவிட பதினைந்து லட்சம் குறைந்திருந்தது, அதாவது ரூ.35 லட்சம். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்தேன். Blessing in disguise!

(என்னுடைய வங்கி நியதியின்படி ரூ.20 லட்சம் கடன் பெற சொத்தின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கவேண்டும். ஆக, சேட் கூடுதலாக வேறொரு சொத்து கொடுக்க வேண்டியிருக்கும்.)

இந்த விஷயத்தை சேட்டின் மேலாளரிடம் அறிவிக்க வேண்டும். ஆனால் இதில் நான் தலையிடாமல் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து அவருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க வைத்தேன்.

அத்துடன் நில்லாமல் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து கடன் விண்ணப்பம் மற்றும் பத்திர நகல்களைக் கொடுத்து எல்லா படிவங்களையும் பூர்த்தி செய்து சொத்து விவரங்களை பத்திரங்களுடன் சரிபார்த்து கொடுக்குமாறு ஒப்படைத்தேன்.

அடுத்த நாள் மாலையே மற்ற அலுவலக பணிகளை முடித்துவிட்டு அவர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யத் துவங்கியதை நான் என் அறையிலிருந்து கவனித்தேன். அவர் அடுத்த நாள் காலை என்னிடம் வந்து விண்ணப்பத்தை சரிவர பூர்த்தி செய்வதற்கு தேவையான சில முக்கிய விவரங்கள் தேவைப்படுவதாக கூற, ‘நீங்களே அவருடைய அலுவலகத்திற்கு சென்று தேவைப்பட்ட விவரங்களை பெற்று வாருங்களேன்.’ என்றேன். ‘சரி சார்’ என்று தன்னுடைய இருக்கைக்கு செல்ல முயன்றவரை நான் நிறுத்தி, ‘அதற்கு முன்னால நீங்க இன்னொன்றையும் செய்ய வேண்டுமே.’ என்றேன். ‘என்ன சார்?’ என்று கேட்டவரை என் முன்னே அமர்த்தி அவரிடமிருந்த பத்திர நகலை சுட்டிக்காட்டி ‘நம்ம கிளையிலிருக்கற தமிழ் தெரிந்த ஸ்டாஃப் மெம்பரை கிட்ட வச்சிக்கிட்டு பத்திரத்துலருக்கற சொத்து விவரத்தையும் நம்ம விண்ணப்ப படிவத்துல சமர்ப்பித்துள்ள விவரத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்.’ என்றேன்.


நான் சொல்வதின் உள்ளர்த்தம் அவருக்கு விளங்கவில்லை. ஏதோ Routine வேலையைத்தான் நான் சொல்கிறேன் என்ற நினைத்துக்கொண்டு உடனே ஒரு குமாஸ்தாவை அழைத்து அவரிடம் பத்திர நகல்களைக் கொடுத்து வாசிக்க சொல்லி விண்ணப்பத்துடன் ஒப்பிட்டு பார்க்க துவங்கினார். நானும் அவர்கள் செய்வதை என் அறையிலிருந்தே ஒருவித ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்தது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் என்னிடம் பதற்றத்துடன் ஓடி வந்தார். நான் ஒன்றும் அறியாதவன்போல் அவரை பார்த்தேன்.

‘சார் இதுல வித்தியாசம் இருக்கே. எனக்கு தமிழ் படிக்க தெரியாததால என்னால கண்டு பிடிக்க முடியலை சார்.’

நான் ஒன்றும் அறியாதவனைப் போல் பார்த்தேன். ‘ எனக்கும் அதே ப்ராப்ளம்தான். நான் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கில பள்ளியில் படித்தவன். இரண்டாவது மொழியாக ஹிந்தி எடுத்ததால் எனக்கும் தமிழ் சரியாக படிக்க வராது. இல்லையென்றால் நானே இந்த குளறுபடியை கண்டுபிடித்திருப்பேன்.’ என்றேன்.

நான் இப்படி உண்மைக்கு புறம்பாக பேசியதற்கு வேறு காரணமும் உண்டு. ஒன்று: சொத்தின் உரிமையாளருக்கு நான்தான் தந்தி கொடுத்தேன் என்று சேட் நினைத்திருந்தால் என்னுடைய உதவி மேலாளர் அவரை சந்திக்கும்போது என்னால் தமிழ் படிக்க முடியாது என்பதை தெரிவிப்பார். மற்றொன்று: இக்குறைபாடை இன்றுதான் நாங்களே கண்டுபிடித்தோம் என்று இவர் கூறும்போது சேட்டுக்கு வங்கியிலுள்ளவர் மேல் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அது மறைந்துவிடும் என்று நினைத்தேன்.

அன்று மாலையே என்னுடைய உதவி மேலாளர் சேட்டின் அலுவலகம் சென்று நான் கூறியதுபோலவே நடந்துக்கொண்டார். அவர் சென்ற நேரத்தில் சேட் இல்லாததால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டிய விவரங்களை அவருடைய மேலாளரிடம் கேட்டு குறித்துக்கொண்டவர் அவரிடம் கொடுக்கப்பட்ட பத்திர நகல்கள் அடகு வைக்கப்படவேண்டிய சொத்தை சார்ந்ததல்ல என்றும் கூறியிருக்கிறார்.

‘நான் சாதாரணமா இந்த விஷயத்தை அவர் மேனேஜர் கிட்ட சொன்னவுடனே அவர் பயங்கரமா கோபப்பட்டார் சார். அப்படியெல்லாம் இருக்க முடியாது. உங்க மேனேஜர் நடந்துக்கற முறையே சரியில்லை. எங்க முதலாளி பயங்கரமா அப்செட் யிருக்கார். அப்படின்னு என்னென்னமோ சொல்றார் சார்.’ என்று என்னுடைய உதவி மேலாளர் திரும்பி வந்து என்னிடம் கூறியதும் நான் ‘நாம நெனச்சா மாதிரியே அந்தாளு தந்திய நான்தான் கொடுத்தேன் என்று கண்டுபிடிச்சிட்டார் போலருக்குதே’ என்று நொந்துபோனேன்.

‘சரி, நீங்க போங்க. அவர் கோபப்பட்டா நமக்கென்ன. சரியான பத்திரத்தை கொடுத்த பிறகு இந்த விண்ணப்பத்தை மேலிடத்துக்கு அனுப்புவோம்.’ என்று சமாதானம் சொல்லி அவரை அனுப்பினேன்.

சரியோ, தவறோ தந்தி கொடுத்தது கொடுத்ததுதான். விஷயம் விபரீதமாகப் போகாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் நாம் நினைப்பதல்லவே நடப்பதும்!

அடுத்த நாள் காலை என்னுடைய தலைமை அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி வந்தபோதுதான் புரிந்தது இந்த உண்மை!

தொடரும்